நடிகர்கள்,,,,,


கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற சட்டப் பேரவை தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடிகர், நடிகையர் சார்பில் விரைவில் பேரணி நடைபெறும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
சரத்குமார் தலைமையில் நடிகர் சங்க நிர்வாகிகள் ராதாரவி, மனோரமா,சத்யராஜ், மயில்சாமி, குயிலி, கே.ஆர். செல்வராஜ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியது:
மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம்.
இலங்கை மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், கச்சத் தீவை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்காக முதல்வருக்கு நடிகர் சங்கம் சார்பில் நன்றியைத் தெரிவித்தோம்.
இந்தத் தீர்மானங்களை நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்ற வலியுறுத்தி நடிகர், நடிகையர் பேரணியாக சென்று தமிழக ஆளுநரிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
நடிகர், நடிகைகளிடம் கலந்து ஆலோசித்த பிறகு இதற்கான தேதி அறிவிக்கப்படும். இது குறித்தும் முதல்வரிடம் தெரிவித்தோம்.
கடந்த திமுக ஆட்சியில் வீடு கட்டிக் கொள்வதற்காக பையனூரில் இடம் ஒதுக்கப்பட்டது. நடிகர் சங்கத்தில் உள்ள முதியவர்கள் வீடு கட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். பையனூர் தொலைவில் இருப்பதால் நல்ல இடம் ஒதுக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
பாராட்டு விழா: மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த இருப்பதாக முதல்வரிடம் தெரிவித்தோம். துறைவாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தவிருப்பதால் பாராட்டு விழா வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனாலும், அவருக்கு பாராட்டு விழா நடத்த நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்றார் சரத்குமார்.
அய்யாவிடம் ஜால்ரா தட்டிய நட்சத்திர காக்காக் கூட்டம் இப்போது அம்மாவிடம் வந்துள்ளது.
இந்தக் கூட்டத்திடம் முதல்வர் ஜெயலலிதா மிகக்கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
இப்போதுள்ள தூரத்தையே கடைபிடிக்க வேண்டும்.
இவர்கள் கருணாநிதியை பாராட்டாத,பாராட்டா?
அப்பா,பெரியப்பா,அய்யா,முத்தமிழ் அறிஞர்,அவர் வசனத்தினால்தான் நடிக்கவே வந்தேன், என அவரை பாராட்டியே குழி தோண்டி புதைத்தவர்கள்.
இவர்களின் பாராட்டும் ,போராட்டமும் திரையிலும்,பத்திரிகைகளிலும் வந்து விளம்பரம் தேட மட்டுமே.
சிறிது நேரத்திலேயே ”எங்களை மிரட்டி வரக் கூறினார்கள்”என ஒருவர் பேசுவார்.இன்னுமொருவர் எழுந்து நின்று கைத்தட்டுவார். பின் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது அல்லது இறைவா நண்பனிடம் இருந்து என்னைக் காப்பாற்று என பஞ்ச் டயலாக் பேசுவார்கள்.
ஜெயலலிதா இவர்களைத் தீண்டாமல் ஒதுக்கி வைப்பதே நல்லது.
இல்லையெனில் புகழ்ந்தே தங்கள் காரியங்களை சாதித்து விட்டு,அடுத்த மேடையை தங்கள் நடிப்பைக்காட்ட தேர்ந்தேடுத்து சென்று விடுவார்கள்.

=================================================================================== # 2ஜி-தி.மு.க, மட்டுமா-?எல்லோரையும் விசாரியுங்க,,,  







ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழுவின் அறிக்கையை, இதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி நேற்று தாக்கல் செய்ய முயன்றார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோர், இந்த அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.,நேற்று, அறிக்கையை சுற்றுக்குவிட ஆதரவு தெரிவித்ததோடு, மேலும் பலரை விசாரிக்க வேண்டும் என கூறியதால், திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்தி வந்தது. பிரதமர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோரை விமர்சித்து, முரளி மனோகர் ஜோஷி அறிக்கை தயார் செய்து இருந்தார். இந்த குழுவின் அறிக்கை விவரம், கடந்த ஏப்ரலில் பத்திரிகைகளில் வெளியானதால், ஏப்ரல் 28ம் தேதி நடந்த பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழுவில் ரகளை ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒட்டு மொத்தமாக, முரளி மனோகர் ஜோஷி தயார் செய்த அறிக்கையை புறக்கணித்தன.

எனினும் ஜோஷி, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த அறிக்கையை சபாநாயகர் மீரா குமாருக்கு அனுப்பினார். பொதுக்கணக்கு குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்காத இந்த அறிக்கையை, சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டார். 
இருப்பினும், பொதுக்கணக்கு குழுவின் தலைவராக முரளி மனோகர் ஜோஷியே நீடிப்பதற்கு அனுமதியளித்தார்.இந்நிலையில், புதிய பொதுக்கணக்கு குழுவின் கூட்டம், நேற்று கூடி விவாதித்தது. இந்த கூட்டத்தில், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த அறிக்கையை முரளி மனோகர் ஜோஷி சமர்ப்பித்தார்.

"பார்லிமென்ட் கூட்டுக்குழுவும் இந்த விஷயத்தை கையாண்டு வருவதால், தற்போதைக்கு ஜோஷி இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த ஏப்ரல் 28ல், காங்கிரஸ் உறுப்பினர்கள் முறை தவறி நடந்து கொண்டதாக, சபாநாயகரிடம் எப்படி நீங்கள் அறிக்கை அளிக்கலாம்' என, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதாகரன், சஞ்சய் நிருபம், கிரிஜா வியாஸ் , கே.எஸ்.ராவ் போன்றோரும் குரல் எழுப்பினர்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்கள், "பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவின் அறிக்கையை பரிசீலனைக்காக சுற்றுக்கு விடலாம்' என, கருத்து தெரிவித்தனர். கடந்த கூட்டத்தில் ஜோஷி அறிக்கை தாக்கல் செய்வதை எதிர்த்த தி.மு.க., இந்த முறை, அறிக்கையை சுற்றுக்கு விட ஒப்புக்கொண்டது.

தி.மு.க., உறுப்பினர் ஆதிசங்கர் இதை ஆமோதித்தார். அவர் குரல் எழுப்புகையில்," 2ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக இதில் தொடர்புடையை மேலும் பல சாட்சிகளை விசாரிக்க வேண்டும்' என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் சதிஷ் சந்திர மிஸ்ராவும், "அறிக்கையை படித்துப் பார்த்து விட்டு, அதன் பின் உறுப்பினர்கள் கருத்து சொல்ல வேண்டும்' என, ஜோஷிக்கு ஆதரவாக செயல்பட்டார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா சம்பந்தப்பட்டுள்ளார். இது குறித்த அறிக்கையை காங்கிரஸ் எதிர்த்த போதும், தி.மு.க., ஆதரித்துள்ளது, கூட்டணியில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சர் பரூக் அப்துல்லா இது குறித்து குறிப்பிடுகையில், "பார்லிமென்ட் கூட்டு குழு ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரித்து வரும் நிலையில், பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவின் அறிக்கை தேவையில்லாத ஒன்று' என்றார்.

ஒவ்வொரு முறையும் அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது, பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அரசியல் மற்றும் சட்டத்துறை நிபுணர்களை கலந்து ஆலோசித்து, தன் முடிவை ஜோஷி தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
$  ஆமாம். விசாரணை என்றால் எல்லோரையும் விசாரிக்க வேண்டும்.
2ஜி விசாரணை தி.மு.க,வை மட்டுமே சுற்றி வருகிறது.மத்தியில் இதற்கு வேறு ஒருவருக்குமே தொடர்பு கிடையாதா?
ஏன் ஆ.ராசா,கனிமொழி, சரத்குமார் இவர்கள் வட்டத்துடனே சி.பி.ஐ. தனது விசாரணையைக் குறுக்கிக் கொண்டது.எனக்கு ஒன்றும் தெரியாது பிரதமருக்கு ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றி தகவல்கள் தெரிவித்தேதான் எல்லாம் நடந்துள்ளது என விசாரணையில் கூறியுள்ளாரே அதைப் பற்றி ஏன் சி.பி.ஐ, விசாரிக்கவே இல்லை? 
 பிரதமர் முதலில் எதிர்ப்புதெரிவித்ததாகவும், பின்னர் மேலே இருந்து அறிவுரை வந்ததின் காரணமாக ஒத்துக்கொண்டார் என்றும் செய்திகள் வந்ததே அதைப்பற்றி-மேலே என்றால் எங்கிருந்து?அலைக்கற்றைகள் உருவாகும் பிரபஞ்சத்தில் வைகுண்டத்தில் ,சிவலோகத்தில் இருந்தா?அல்லது அவரது மேலிடம் என்றால் அந்த மேலிடம் யார்? என ஆராய வேண்டாமா?
இதை எல்லாம் ஏன் சொல்லுகிறோம் என்றால் “தேனை எடுத்துக் கொண்டு ஒடிவிட்டவனை விட்டு-விட்டு கையை நக்கிக்கொண்டிருந்தவனை பிடித்து சாத்துவது போல் “ஆகி விடக்கூடாது.
இது நமது பாரம் பரியமான ,நியாயத்தின் பாதுகாவலர்களான சி.பி.ஐ,க்கு அவப்பெயரைதந்துவிடக்கூடாது என்ற  நல்ல எண்ணம்தான் காரணம்.மேலும் எதுவும் தெரியாத நம் பிரதமரின் ”அய்யா பரிசுத்தம்”பெயரும் கெட்டு விடக்கூடாது.அன்னை சோனியா,தம்பி ராகுல் பெயரும் கெட்டுவிடக்கூடாது.அது ரொம்ப முக்கியம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?