புலிவேடதாரிகள்

 இது மீள் பதிவு.

தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளவர்கள் .
அவலநிலை ஆட்சியாளர்களுக்கு புரியவில்லையா?

                                         
செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவிக்கும் சிறைக்கைதிகள்தான் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் சிக்கியுள்ளவர்கள். சிறைவாசம் அனுபவித்த 26 பேரில்இ பல ஆண்டுகளின் பின்னர் 19 பேரை குற்றமற்றவர்கள் என முடிவுசெய்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையாகவும், நாலு பேருக்கு மரண தண்டனையாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட இளம் தாய் நளினி கருணை மனுவின் அடிப்படையில் ஆயுட்தண்டனைக் கைதியாக மாற்றப்பட்டார். தூக்குத் தண்டனைக் கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியவர்கள், தமது மரண தண்டனையை விலக்கக்கோரி இந்திய ஜனாதிபதிக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னர் கருணை மனுக்களை விண்ணப்பித்திருந்தார்கள். தற்போதுள்ள இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் குறித்த மனுக்களை நிராகரித்துள்ளார். இதனையடுத்து குறித்த மூவரையும் தூக்கிலிடத் தமிழக ஆளுநரின் உத்தரவு எதிர்பார்க்கப்படுவதாக தமிழக காவல்துறைத் தரப்பு தெரிவித்துள்ளது. ஆளுநரின் உத்தரவு கிடைக்கப்பெற்று ஒரு வார காலத்திற்குள் குறித்த மூன்று பேரும் தூக்கிலிடப்படுவார்கள் என்று கூறுகிறார்கள் சிறை அதிகாரிகள். இந்திய நடுவன் அரசின் பூரண ஆசியுடன் நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் போரின் போது 40,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பலர் சொல்லொனாத் துயரை அனுபவிக்க நேர்ந்தது. உலகத்திற்கு அகிம்சையைக் கற்றுக்கொடுத்த காந்தி வாழ்ந்த இந்திய தேசம், கருணையற்ற முறையில் நடந்து கொள்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது இந்திய தேசம் தமிழினத்தின் மீதே தனது வக்கிரத்தை காட்ட முயலுகிறது என்பதைக் காட்டுகிறது. இளமை கரைந்து, வசந்தம் தொலைந்து சிறைக் கம்பிகளுக்குப் பின், மரணத்தின் நிழலில் காலம் கடந்தேனும் ஒரு வசந்தம் தோன்றாதா என்ற ஏக்கத்துடன் தவித்திருக்கும் இந்த இளம் தமிழர்கள் மீதான அரசியல் படிந்த கொடிய தீர்ப்புக்களும், கருணை மனுக்கள் நிராகரிப்பும் இந்தியா குறித்த தமிழர்களின் அபிப்பிராயங்களில், மேலும் சந்தேகங்களையே தோற்றுவித்துள்ளன.
ஈழத்தமிழர் அழிவைக் கண்டு கொதித்தெழுந்து அவர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தருவேன் என்று சவால் விட்டுச் செயற்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலையிட்டால் மூன்று பேரையும் காப்பாற்றலாம். சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்று பாராமுகமாக ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருந்துவிட்டால் மூன்று பேரை தமிழினம் இழப்பது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழினத்திற்கே தலைகுனிவையே இது ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை. இதனை மனதில் வைத்தாவது தமிழக முதல்வர் செயற்படுவார் என்று உலகத்தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஏன் இந்தத் திடீர் முடிவு?
1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. ஒரிசா ஆந்திரா வழியாக அவர் சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத சிறிபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக இறுதி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான் விடுதலைப்புலிகளைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும் பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மே 21-ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப்புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என இந்திய புலனாய்வுத்துறை அறிவித்தது. ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே விடுதலைப்புலிகள்தான் இந்தப் படுகொலையை செய்தார்கள் என அறிவித்தார்கள் இந்திய உயர் அதிகாரிகள். அரசியல் ஆதிக்கம் இல்லாமல் சட்டத்தை மதிக்கும் எந்தவொரு நிகழ்வையும் பார்ப்போமேயானால் ஒரு கொலைகாரனையும் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முன்னர் ஒருபோதும் குற்றவாளி என்ற பதத்தை பாவிக்கக்கூடாது. மாறாக அந்த நபரை குற்றம் சாட்டப்பட்டவர் என்றே அழைக்க வேண்டும். ஆனால் குற்ற விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே புலிகள்தான் குற்றவாளிகள் என்று அறிவித்த பின்னர் விசாரணை குழுவை நியமித்து குற்றவாளிகளை இனம்காணுவதென்பது இந்த விசாரணை குழு வெறுமனே அரசியல் காரணங்களுக்காகவே நியமிக்கப்பட்ட குழுவாகவேதான் பார்க்கவேண்டும். காரணம் ஏற்கனவே புலிகள்தான் கொலைகாரர்கள் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த விசாரணைக் குழுவினர் புலிகள்தான் கொலைகாரர்கள் என்ற கண்ணோட்டத்துடனேதான் விசாரணையை தொடங்கும். ஆகவே விசாரணையின் முடிவில் எப்படியாவது புலிகள்தான் இதைச் செய்தார்கள் என்று குற்றம்சாட்டுவதற்கு தேவையான ஆதாரங்களை திரட்டத்தான் இந்த குழு உதவுமே தவிர�� உண்மையான கொலைகாரர்களை கண்டுபிடிக்க ஒரு பொழுதும் முனையாது.
1993-ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள் 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள் 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத்துறையின் இந்த விசாரணைகள் அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில்தான் நடந்தது. ஏறத்தாள 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளவர்கள் மீது எதற்காக இப்படியான திடீர் முடிவை இந்திய ஜனாதிபதி எடுத்தார் என்பது வெறும் அரசியல் காரணங்களுக்காகவேதான் என்று கூறுகிறார்கள் சட்ட ஆய்வாளர்கள். தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய அடுத்த கணமே குறித்த கருணை மனுவை நிராகரித்துள்ளார் இந்திய ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் ஆதரவுடன் இடம்பெற்ற தமிழின படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவேன் என்று அறைகூவல் விட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்திய நடுவன் அரசிற்கும் தொடர்ந்தும் தனது அழுத்தங்களை பிரயோகிக்கிறார் ஜெயலலிதா. இவைகள் அனைத்தையும் மழுங்கடிக்க ஏதேனும் ஒரு துருப்புச்சீட்டு இந்திய நடுவன் அரசிற்கு உடனடியாகவே தேவைப்பட்டது. அத்துடன் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் இவ்வேளையில் குறித்த கருணை மனு நிராகரிப்பானது முக்கியத்துவம் பெறுகிறது. சோனியா காந்தி அரவர்கள் உலகத்தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பவில்லையெனில் சோனியா காந்தி இல்லாத சமயத்தில் செய்தால் சோனியா காந்தி மீது பழி வராது என்று இந்திய நடுவன் அரசும் ஜனாதிபதி அவர்களும் கருதி உள்ளார்கள் போலும். எது என்னவாக இருப்பினும் குறித்த திடீர் முடிவானது இந்திய நடுவன் அரசின் திட்டமிட்ட செயலாகவேதான் கருதப்படுகிறது.
மானிடத் தர்மத்திற்கே முரணானது:
கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கருவியாயகவேதான் மரண தண்டனையைப் பார்க்க முடியும். அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகிய வாழ்வுரிமைக்கு எதிரானது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் கருத்தின்படி "மரண தண்டனை அடிப்படை மனித உரிமைக்கு எதிரானதென்பதால் மரண தண்டனையானது அரசுகள் மேற்கொள்கின்ற படுகொலை என்றே கருதப்பட வேண்டும". மிகவும் தெட்டத்தெளிவாக இக்கருத்தை உலக அரங்கில் கூறி வருகிறது குறித்த மன்னிப்புச் சபை.
ஐக்கிய நாடுகள் சபை கூட மரணதண்டனையைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டுமென உலக நாடுகளின் அரசுகளைக் கோரி வருகிறது. உலக நாடுகள் 193-இல் இன்று மரணதண்டனை முற்றாக ஒழிக்கப்பட்டோ அல்லது நடைமுறைப்படுத்தப் படாமலோ இருப்பதென்பதும்இ 58 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது. சர்வாதிகார நாடுகளும் பல இஸ்லாமிய மதத்தைத் தழுவும் நாடுகளுமே மரண தண்டனையை நடைமுறையில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உயிர் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் இரக்கம் காட்டுவதை இந்திய அரசியல் சட்டத்தின் கடமையாகச் (பிரிவு 15எ) சொல்லப்பட்டுள்ளது.
அரசியல் அவதானிகளின் கருத்தின்படி ராஜீவ் கொலை வழக்கில் மூன்று தளங்களில் குறித்த குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். அரசியல் மயப்பட்ட நிலையில் இவ் வழக்கு நடைபெற்றமை இவ் வழக்கில் இவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்தது. இது இவர்களுக்கான நீதி மறுக்கப்பட்ட முதலாவது தளம் ஆகும். தடா சட்டத்தின் கீழ் இவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டமை இரண்டாவது தளமாகும். இதேவளை 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு - ஒரு ஆயுட்தண்டனைக் காலத்துக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துவிட்ட இவர்களுக்கு - இவ்வளவு காலம் தாழ்த்தி மரணதண்டனையினை உறுதி செய்துள்ளது நீதி மறுக்கப்படும் மூன்றாவது தளம் ஆகும்.
காலம் தாழ்த்தி மரண தண்டனையினை நடைமுறைப்படுத்துவது மனித உயிரினை இழிமைப்படுத்தும் செயலெனவும் நீண்ட சிறைப்படுத்தலின் பின்னர் ஒருவரைத் தூக்கிலிடுவது அருவருக்கத்தக்க செயலெனவும் பிரித்தானிய பிரிவி கௌன்ஸில் 1993-இல் தீர்ப்பளித்தது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-இன் கீழ் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முடிவின் அடிப்படையில் தமிழக ஆளுனராலும் மரணதண்டனையினை ரத்துச் செய்வதற்கான பரிந்துரையினை வழங்க முடியும். உலகத்தமிழர்களின் உணர்வுகளையும்இ உரிமைக்குரலையும் பிரதிபலித்து நிற்கும் தமிழக முதலமைச்சர் இவ்விடயத்தில் தலையிட்டு மரணதண்டனையினை ரத்துச் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என பல தமிழக அரசியல் கட்சிகள் வேண்டுகோள்களை விடுத்துள்ளன. பல தரப்பினர் தங்களால் இயன்ற வகையில் போராட்டங்களையும் நடத்திவருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய ஏகாதிபத்திய சட்ட மரபுகளை பின்பற்றும் நாடுகளின் சட்ட யாப்பின்படி குறித்த ஒரு தீர்ப்புக்கு ஒத்ததாக பிறிதொரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமேயானால் குறித்த தீர்ப்பின்படி இத்தீர்ப்பையும் மாற்ற முடியும். அவ்வகையில் ஏற்கனவே 1974-ஆம் ஆண்டு கவிஞர் கலியப்பெருமாள் வழக்கில் கேரளாவை சேர்ந்த பாலன் என்பவருக்கு அந்த மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் காரணமாக மன்னிப்பு வழங்கபட்டது. இதை உதாரணமாக வைத்து குறித்த மூன்று பேரையும் காப்பாற்ற முடியும்.
தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள மூன்று தமிழர்களின் அவலக்குரலையாவது ஆட்சியாளர்கள் செவிமடுப்பார்களா என்பதே இப்போது எழும் கேள்வி. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தமிழக அரசு பரிந்துரை செய்தால் ஆளுநரினால் இறுதி முடிவு எடுக்கப்படும். இதன் மூலமாக மூன்று தமிழ் இளைஞர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும். மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமென்கிற குரலுக்கு பக்கத் துணையாக இருக்கும் காந்தி பிறந்த தேசம் மரண தண்டனைக்கே உயிர் வடிவம் கொடுத்தால் மாபெரும் தவறை இந்திய தேசம் செய்கிறது என்றே அர்த்தப்படும். வரலாற்றுத் தவறுகளை செய்யாமல் மானிடத் தர்மத்தின் பக்கம் இந்தியா தொடர்ந்தும் இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் இவ்வுலகில் வாழும் பல கோடி மக்களின் நம்பிக்கையை இந்தியா பொய்ப்பிக்காது என்று நம்புவோமாக.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்:
nithiskumaaran@yahoo.com
அனலை நிதிஸ் ச. குமாரன்
நன்றி:செய்தி இனைய தளம்
ஈழத்தமிழர்களின் நலவாழ்வுக்கு பாடுபடும் அல்லது அவ்வாறு சொல்லிக்கொள்ளும் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இம்மூவரின் தூக்குத்தண்டணைக்கு எதிராக எவ்வளவோ வேண்டுகோள்கள் விடப்பட்டும் சிறு தீர்மானம் கூட நிறைவேற்ற வில்லையே.100வது நாள் விழா கொண்டாடும் அவருக்கு இதற்கு நேரம் கிடைக்கவில்லையா.கருணாநிதி போல் தனிப்பட்ட முறையில் ஒரு அறிக்கை கூடவா வெளியிட முடியவில்லை.
சீமான்,பழ.நெடுமாறன் போன்ற ஜெயலலிதா ஆதரவாளர்கள் அவ்ரை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வைக்க முடியவில்லையா? ஏன்வாய் மூடி மடந்தைகளாக இருக்கின்றனர். தூக்குக்கான ஆணையும் சிறைக்கு அனுப்பப்பட்டு விட்டதே?
இவர்களின் [தினமலர் கூறுவது போல்]புலி வேசம் என்ன ஆயிற்று? ஜெயலலிதா ஆதரவு முன் கரைந்து நிர்வாண மாகி விட்டார்களா/எந்த சத்த்மும் இல்லையே இதே இடத்தில் கருணாநிதி இருந்த போது இந்த இருவர் வந்த வரத்து இப்போது என்ன ஆயிற்று? மூவரும் செய்யா குர்றத்திற்கு மரணத்தை அனுபவிக்கத்தான்  வேண்டுமா?
________________________________________________________________________________________________
நண்பர்களும் 40 திருடர்களும்,

கமல், பிரபு, கிரேஸி மோகன் இந்த மூவர் கூட்டணியில் உருவாகியது 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.'.பெயரைப்போன்றே வசூலிக்கவும் செய்தது.
 இம் மூவர் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறது.
இப்படத்தை செய்யாறு ரவி இயக்க, சிவாஜி புரடெக்ஷன்ஸ் தயாரிக்க முன்வந்துள்ளது. படத்திற்கு 'நண்பர்களும் 40 திருடர்களும்' என பெயரிட்டு இருக்கிறார்கள்.     
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இப்படம் துவங்க இருக்கிறது. எப்போதுமே ஒரு படத்திற்கு இன்னொரு படத்திற்கும் இடையே நீண்ட இடைவெளி விடமாட்டார் கமல்.
'தசாவதாரம்' வெளியீட்டிற்கு நீண்ட நாட்கள் ஆனதால், அதற்குப் பிறகு சீக்கிரம் ஒரு படத்தை முடித்து வெளியிட வேண்டும் என்று படபடவென படப்பிடிப்பை நடத்தி வெளியிட்ட படம் 'உன்னைப்போல் ஒருவன்'.
தற்போது 'விஸ்வரூபம்' படம் நீண்ட நாட்களாக துவங்காமல் இருந்தது, இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஆகையால் 'விஸ்வரூபம்' வெளியாகி மூன்று மாத கால இடைவெளியில் அடுத்த படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கிறாராம் கமல்.
அதற்கு அவர் தேர்ந்தெடுத்த கதைதான் 'நண்பர்களும் 40 திருடர்களும்'. 'விஸ்வரூபம்' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே இப்படத்தின் மொத்த கதை மற்றும் திரைக்கதைக்காக பணியாற்றி வருகிறார்கள் படக்குழுவினர்.
               
                                                        

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?