செல்லாக் காசான இந்திய நிலை,


suran


இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன பயணத்தை மேற்கொண்டு அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி பல் பொருளாதார ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளார்.
இவற்றில் செய்மதித் தகவல் தொழில்நுட்பம், வீதி அமைப்புக்கள் போன்ற உட்கட்டுமானப் பணிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் முக்கியமானவையாகும். எதிர்வரும் செப்ரெம்பர் மாதமளவில் இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் செய்மதி மயப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதாவது சீனாவின் அனுசரணையுடன் இலங்கையின் செய்மதி வானில் செயற்பட ஆரம்பிக்கும். அதன் தரைத் தொடர்பு மையமாக சீனாவால் அமைக்கப்படும் "லோட்டஸ்' தொலைத் தொடர்புக் கோபுரம் விளங்கும் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

அதேவேளையில் ஜனாதிபதியின் சீனப் பயணம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு சீனாவுக்கும் இலங்கைக்குமிடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தங்கள் எந்தவொரு நாட்டுக்கும் பாதகமாக அமையாது எனவும் இலங்கைக்கு இந்தியாவும் சீனாவும் சம அளவிலான நட்பு நாடுகள் எனவும் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் பாதுகாப்பு தரப்பிலிருந்தும் எந்தவொரு நாட்டுக்கும் எதிராகப் பிறிதொரு நாடு இலங்கையின் தரை, கடல், வான் பரப்புக்களைப் பாவிக்க அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன இலங்கை உறவுகள் தொடர்பாக இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ எந்தவொரு கருத்தும் வெளியிடாத நிலையில் வெளிவிவகார அமைச்சாலும் பாதுகாப்புத் தரப்பாலும் இப்படியான அறிக்கைகள் விடப்படுவது தொடர்பாகச் சில கேள்விகள் எழத்தான் செய்யும்.

அவற்றுக்கான பதிலை உண்மைகளின் அடிப்படையிலும் இலங்கையின் நகர்வுகளின் அடிப்படையிலும் தேடப் போனால் அது இந்தியாவுக்கு சாதகமற்ற ஒரு நிலைப்பாட்டையே வெளிப்படுத்தக்கூடும்.

குறிப்பாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலைப்பாட்டைப் பலவீனப்படுத்துவதற்கான ஏற்பாடுகள், இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் என்ற பேரில் மேற்கொள்ளப்படுவதாகவே ஒரு தோற்றப்பாடு வெளிப்படுகிறது.

அதாவது சீனாவின் முத்துமாலைத் திட்டம் தென்னாசியாவில் பலம் பெற இலங்கை ஒரு கேந்திர நிலையமாக மாறக்கூடிய சாத்தியங்கள் இருப்பது தென்படுகின்றது.


இந்தியா இதை நன்றாகவே புரிந்து வைத்துள்ளது. ஆனால் இந்தியாவின் விட்டுக் கொடுத்து அணைக்கும் ராஜதந்திரம் தொடர்ந்து இலங்கையைப் பொறுத்த வரையில் தோல்வியே கண்டு வந்துள்ளது.
இலங்கைக்கு இந்தியாவும், சீனாவும் சம அளவிலான நண்பர்கள் எனக் கூறிக் கொண்டே இலங்கை இந்திய ராஜதந்திரத்துக்கு ஒரு பெரும் தோல்வியைப் பரிசாகக் கொடுத்துள் ளது. அண்மையில் இடம்பெற்ற மஹிந்த ராஜபக்­வின் சீன பயணமும்  அங்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் இந்தியாவுக்குக் கிடைத்த பெரும் தோல்வி என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

அன்றிலிருந்து இன்று வரை இந்தியா இலங்கையை தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை அடிப்படையாக வைத்தே கையாண்டு வந்தது. அந்த விடயத்தில் இந்திராகாந்தி தமிழர் தரப்பைப் பலப்படுத்துவதன் மூலம் இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் இலங்கையைப் பணிய வைக்கும் தந்திரத்தைக் கையாண்டார்.

அதேபாணியில் ஆரம்பித்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை, இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்திய பின்பு புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைவது என்ற பேரில் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தும் வகையில் செயற்பட ஆரம்பித்தார். அதன் பயன் இந்திய அமைதிப் படை இலங்கையை விட்டு அவமானத்துடன் வெளியேற வேண்டிய நிலை எழுந்தது.
அதையடுத்து இந்தியா-இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் ஒரு தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக வெளியே காட்டிக் கொண்டு விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான சகல விதமான உதவிகளையும் இந்தியா மறைமுகமாக மேற்கொண்டு வந்தது.

குறிப்பாக இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே பேச்சுகள் இடம்பெற்ற காலப்பகுதியில் நோர்வேயூடாக பேச்சுகளின் ஒவ்வொரு நகர்விலும் இந்தியாவின் தலையீடு இருந்தது.

2006 ஆம் ஆண்டு மஹிந்த அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இறுதி கட்டப் போர் ஆரம்பித்த பின்பு இந்தியா பகிரங்கமாகவே ஆயுத உதவி, ஆயுதப் பயிற்சி, புலனாய்வுத் தகவல்கள், தொழில்நுட்ப உதவி எனப் பல்வேறு வழிகளிலும் இலங்கைக்கு உதவி செய்தது.

அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் விடுதலைப் புலிகளின் பலத்தைச் சிதைப்பதில் முனைப்புக் காட்டின. அவை, என்றுமே விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் தீர்மானிக்கும் சக்தியாகப் போராட்ட அமைப்புக்கள் தீர்மானிக்கும் சக்தியாகப் பலம் பெறுவதை விரும்புவதில்லை.

மாறாகத் தமக்கு அடிபணிய மறுக்கும் நாட்டு அரசுகளை தொல்லை கொடுத்து ஆட்டம் காணுமளவுக்கு விடுதலை அமைப்புக்கள் இருந்தால் போதும் என்பதே  எதிர்பார்ப்பாகும்.

ஆனால் விடுதலைப் புலிகளோ தமக்கென ஒரு பிரதேசத்தில் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கி முப்படைகளையும் கொண்டு ஒரு தனிநாட்டுக்கான அத்திபாரத்தை அமைத்திருந்தனர். எனவே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு அமெரிக்காவும் பெரும் உதவிகளைச் செய்தது.
ஆனால் அமெரிக்கா விடுதலைப் புலிகளை முழுமையாக அழிக்க விரும்பவில்லை. ஏனெனில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டால் இலங்கை தங்களிடம் வரவேண்டிய தேவை குறைந்துவிடும்.

எனவேதான் அமெரிக்கா போரின் இறுதிக் கட்டத்தின்போது போர் நிறுத்தம் ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அது இந்தியாவின் ஆலோசனை காரணமாகச் சாத்தியமற்றுப் போய்விட்டது.

இந்தியாவோ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இலங்கை அரசுக்குத் தீவிர ஆலோசனை வழங்கியது. அதுவே இந்தியாவின் ராஜதந்திரத் தோல்வியாகவும் அமைந்துவிட்டது.

தட்டிக் கேட்க ஆளில்லாத நிலையில் இலங்கை தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை மேலும் மேலும் ஆழப்படுத்தி வருகிறது. அதுமட்டுமன்றி இந்தியாவின் ஆலோசனைகளைப் பொருட்படுத்தாத நிலையும் உருவாகிவிட்டது.

ஆனால் தொடர்ந்தும் தோல்வியடைந்து வரும் இலங்கை தொடர்பான தனது ராஜதந்திரத்தை இந்தியா இன்னும் மாற்றவுமில்லை, மாற்றுவதற்கான அறிகுறிகளும் இல்லை. இலங்கையோ இந்தியாவைக் கணக்கிலெடுக்காத ஒரு போக்கையே தொடர்ந்து பின்பற்றி வருகின்றது.

1 அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. இதை ஓர் உள்நாட்டு விவகாரம் எனப் புறந்தள்ளிவிட முடியாது. இது இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
அந்த ஒப்பந்தம் இன்னும் இரத்துச் செய்யப்படாத நிலையிலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. வடக்கு, கிழக்கு பிரிப்பு, வாழ்வின் எழுச்சி சட்டம், பொது நிர்வாக பொலிஸ் ஆணைக்குழு என்பவற்றின் மூலம் 13 ஆவது திருத்தத்தின் பல பகுதிகள் செயலிழந்து போயுள்ளன.


மேலும் அரசினால் வழங்கப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்களும் பறிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இம்முறை மீறல்கள் தொடர்பாக இந்தியா மெளனம் சாதித்து வருகிறது.

இந்த நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியா தனது கண்டனத்தைக் கூடத் தெரிவிக்கவில்லை. அதாவது விட்டுக் கொடுப்பே ஒரே மார்க்கமாக இந்தியா செயற்பட்டு வருகிறது.

கச்சதீவை இந்தியா மீளப் பெற வேண்டும் என தமிழக  சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது இலங்கைக் கடற்படையினர் கச்சதீவைச் சுற்றித் தங்கள் போர்க் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளனர். அதாவது கச்சதீவு விவகாரத்தில் தாங்கள் இந்தியாவிடம் சண்டை செய்யத்தயார் என்ற செய்தியை இலங்கை சொல்லாமலே சொல்லி விட்டது.

இலங்கை - இந்தியக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்படுவது, அடித்து நொருக்கப்படுவது, மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்படுவது, கைது செய்யப்படுவது என்பன தொடர்பாகவும் இந்திய மத்திய அரசு பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. தமிழக மீனவர்களின் போராட்டங்களைக் கூடப் பெரிதுபடுத்துவதில்லை.

ஒட்டு மொத்தத்தில் இந்திய ராஜதந்திரம் இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களையும் இந்திய மீனவர்களையும் பலி கொடுத்து இலங்கை இந்திய நல்லுறவைப் பாதுகாக்க முயல்கிறது. இவற்றுக்கு இந்தியா பெற்றுக் கொள்ளும் விளைவு அவமதிப்புகளும் பின்னடைவுகளும் தான்.
suran
இலங்கையுடனான நட்புறவைப் பேணாவிடில் இலங்கை இந்தியாவின் கையை விட்டுப் போய் முற்றுமுழுதாகச் சீனாவின் பக்கம் விழுந்து விடுமென இந்தியக் கொள்கை வகுப்பாளர்களால் காரணம் கூறப்படுகிறது.

ஆனால் இந்தியா எப்படி நடந்து கொண்டாலும் இலங்கை சீனா பக்கம் சாய்வது தவிர்க்க முடியாதது என்பதை அண்மைய சம்பவங்கள் தெளிவாகவே காட்டுகின்றன. அதுமட்டுமன்றி இந்தியாவின் பாதுகாப்புக்கு மட்டுமன்றி இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதிக்கும் சவால் விடுக்குமளவுக்கு இலங்கையில் சீனாவின் நிலை பலம் பெற்று வருகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், தென்பகுதி நெடுஞ்சாலைகள் என எங்கும் சீனாவின் பிரசன்னம் பலம் பெற்று வருகிறது. செப்ரெம்பரில் இயங்கவுள்ள இலங்கையின் செய்மதித் தளம் தாமரைத் தடாகம் தகவல் தொடர்புக் கோபுரம் என்பவற்றின் மூலம் முழு இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் சீனாவால் அவதானிக்க முடியும்.

அது மட்டுமன்றி இந்தியாவின் ஒவ்வொரு பாதுகாப்புத் தொடர்பான நகர்வுகளையும் கண்காணிக்க முடியும். இதை இந்தியா தடுத்து நிறுத்தவோ கண்டிக்கவோ முடியாது.  ஒரு நாடு தனது செய்மதிக் கட்டமைப்பை உருவாக்குவது அதன் உள்நாட்டு விவகாரம். இந்திய ராஜதந்திரத்துக்குக் கிடைத்த ஒரு மாபெரும் தோல்வி இதுவாகும்.

இந்தியா தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் இலங்கை அரசை திருப்திப்படுத்த முடியும் என நம்புகிறது.
ஆனால் சிங்கள ஆட்சியாளர்களும் பேரினவாத சக்திகளும் இந்தியாவுக்கு எதிரான மனப்போக்கையும் சீனாவுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டையும் உருவாக்குவதில் தீவிர அக்கறை காட்டி வருகின்றனர்.

இப்படியான நிலையில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டாலும் இலங்கையை இந்தியாவின் உண்மையான நண்பனாகத் தக்கவைக்க முடியாது. இதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் எப்போது ஏற்றுக் கொள்கின்றனரோ அன்று தான் இலங்கையின் பக்கம் சார்வதை அவர்களால் நிறுத்த முடியும்.

தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தி இலங்கை அரசை வலுப்படுத்தும் ராஜதந்திரம் இந்திய அரசுக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கடந்த கால வரலாறு.

எப்படியிருப்பினும் இந்தியாவின் தோல்வியடைந்த ராஜதந்திரம் மேலும் மேலும் தென்னாசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை மேலோங்கவே வைக்கும். எதிர்காலத்தில் அதற்கான மையமாக இலங்கை விளங்கப் போவதும் தவிர்க்க முடியாததாகும்.
suran
எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டாலும் இலங்கையை இந்தியாவின் உண்மையான நண்பனாகத் தக்கவைக்க முடியாது. 
இதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் எப்போது ஏற்றுக் கொள்கின்றனரோ அன்று தான் இலங்கையின் பக்கம் சார்வதை அவர்களால் நிறுத்த முடியும்.
நன்றி :உதயன் .
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
செல்பேசி :"    கதிர்வீச்சு,

செல்போன் டவர்களுக்கு மட்டும்தான் கதிர்வீச்சு உள்ளதா? செல்போனை சட்டைப்பையிலும் இடுப்புக்கு அருகிலும் வைத்துக் கொண்டு செல்பவர்களுக்கு எச்சரிக்கையை அளிக்கிறார்கள் வல்லுநர்கள்.
அது, செல்போனில் இருந்தும் வெளிப்படும் கதிர்வீச்சு, மனிதனையும் பாதிக்கும் என்பதுதான்.
இந்தக் கதிர்வீச்சை எப்படி அளக்கிறார்கள்? இதனை “எஸ்.ஏ.ஆர். வேல்யூ” என்கிறார்கள். இப்படிச் சொன்னதும், ஏதோ இது செல்போனின் விலை மதிப்பு என்று நினைக்காதீர்கள்.
“ஸ்பெசிபிக் அப்சர்ப்ஷன் ரேட்” என்பதன் சுருக்கமே “எஸ்.ஏ.ஆர்.” என்பது. அதாவது ஒரு செல்போன் தொடர்பில் இருக்கும் போது, அதில் இருந்து வெளியாகும் “எலக்ட்ரோ மேக்னடிக்” அலைகள் அல்லது ரேடியோ கதிர்கள் உடலுக்குள் ஊடுருவும் அளவை நிர்ணயிப்பதே “எஸ்.ஏ.ஆர்”.
இது செல்போனில் இருந்து வெளியாகும் சக்தியை அல்லது கதிர்வீச்சை உடல் உட்கிரகிக்கும் அளவைக் குறிப்பது.
இது நாம் பயன்படுத்தும் செல்பேசியின் “வாட்ஸ் பெர் கிலோ கிராம்” என்பதை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்படுகிறது. “எஸ்.ஏ.ஆர். வேல்யூ” குறைந்திருந்தால், உங்கள் செல்பேசி மிகவும் பாதுகாப்பானது.
குறைந்த அளவு கதிர்களே செல்போனில் இருந்து வெளியேற்றப்பட்டு அது உடலுக்குள் ஊடுருவுகிறது என்பதைக் குறிக்கிறது.
ஒவ்வொரு செல்போனும் செல்பேசி டவர்களுடன் இணைக்கப்படும்போது, அதில் இருந்து ரேடியா கதிர்கள் வெளியாகின்றன. இந்தக் கதிர்கள் உடலில் உள்ள திசுக்களால் ஈர்க்கப்படுகின்றன.
இது எந்த அளவில் இருக்கிறது என்பதைக் குறிக்கும் எஸ்.ஏ.ஆர். வேல்யூவை வெளிநாடுகளில் உள்ள பல முன்னணி செல்போன் நிறுவனங்கள், செல்பேசியின் விவரப் பக்கத்தில் உண்மையாகவே குறிப்பிடுகின்றன.
செல்பேசி நிறுவன இணைய தளங்களில் அது பற்றிய விவரத்தில் ஒவ்வொரு செல்பேசிகளின் எஸ்.ஏ.ஆர். மதிப்பும் தவறாமல் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை வைத்து பாதுகாப்பான செல்பேசிகளைத் தெரிவுசெய்து நாம் வாங்கமுடியும்.
இந்தியாவில் இந்த “எஸ்.ஏ.ஆர்” இன் அதிகபட்ச மதிப்பு 1.60 வாட்ஸ் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் தயாராகும் செல்பேசிகளில் எஸ்ஏஆர் மதிப்பு பற்றிய விவரம் இல்லாததாலும், அது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததாலும், உடலுக்குத் தீமை பயக்காத, பாதுகாப்பான செல்பேசிகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இதுவரை கிடைக்காமலே இருந்தது.
செல்பேசி என்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் பிரபலமாகத் தொடங்கியது. அதனால் இதன் மூலம் அடையும் பாதிப்புகளைக் கண்கூடாக இன்னும் காணவில்லை.
ஆனால், ஓர் எச்சரிக்கையாக, செல்பேசிகளில் இருந்து வெளியாகும் அதிகப்படியான கதிர்வீச்சுக்களால், அதனைப் பயன்படுத்தும் மனிதர்களுக்கு சாதாரண சரும நோய் முதல், புற்றுநோய் வரை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செல்பேசிகளின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தும் அளவுக்கு இதன் பாதிப்புகள் குறித்து தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வால், இந்தியாவிலும் குறைந்த எஸ்.ஏ.ஆர். மதிப்பைக் கொண்ட செல்பேசிகளின் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
செல்பேசிகளை விற்கும்போது, அதில் தவறாமல் “எஸ்.ஏ.ஆர். மதிப்பு” தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட உள்ளது.
வரும் செப்டம்பர் 1ம் திகதி முதல் அனைத்து செல்பேசிகளின் எஸ்.ஏ.ஆர். மதிப்பும் வெளிப்படையாகத் தெரியும்படி பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
செல்போனை வாங்கச் செல்லும்போது அதிகப்படியான பயன்பாடு, சேமிக்கும் திறன், புதிய மொடல், விலை குறைவு என்று பல்வேறு விடயங்களைப் பார்த்துப் பார்த்து வாங்கும் நாம், இனி எஸ்.ஏ.ஆர். மதிப்பையும் பார்த்து, உடலுக்குத் தீமை பயக்காத செல்பேசிகளைத் தேர்வு செய்து வாங்க வேண்டும்.

நன்றி :லங்காஸ்ரீ

-------------------------------------------------------------------------------------------------------------------------------------





suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?