எய்ட்ஸ் வியாபாரம்!

suran

'ஃபயர் இன் த பிளட்' டைலன் மோகன் கிரேயின் ஆவணப்படம், ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் மருந்தை லாப நோக்கத்துக்காக மட்டுமே விற்பனை செய்த மேற்கத்திய மருந்து நிறுவனங்களின் தீய நோக்கத்தைத் துகிலுரித்தது.
இந்த ஆவணப்படத்தைப் பார்த்தவர்களால் மருந்து நிறுவனங்கள் மேல் ஆத்திரப்படாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மருந்து நிறுவனங்கள் மனித உயிரைப் பொருட்டாக நினைக்காமல், வெறும் லாப நோக்கத்தை அதுவும், அதீத லாபத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதை இப்படம் விவரிக்கிறது. இந்த ஆவணப்படம் தற்போது, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா உள்பட உலகின் முக்கிய நாடாளுமன்றங்களில் திரையிடப்படவுள்ளது.
லாபமே பிரதானம்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பாதித்தவர்கள் அதிகம். மேற்கத்திய மருந்து நிறுவனங்கள் எய்ட்ஸுக்கான மருந்துகளை விநியோகித்துக் கொண்டிருந்தன. ஆனால், அந்நிறுவனங்களின் கருதுகோள் “நீ ஏழையா, எச்ஐவி பாதிப்பு இருக்கிறதா, அப்படியானால் நீ சாவதைத் தவிர வேறு வழியில்லை” என்பதாக இருந்தது.
மலிவான விலையில் எச்ஐவிக்கான மருந்தை விற்பனை செய்ய முடியும் என்றபோதும் மேற்கத்திய மருந்து நிறுவனங்கள் அதைச் செய்யவில்லை.
இந்தியாவின் கருணை
ஆப்பிரிக்காவில் நடக்கும் அவலம் இந்தியர் ஒருவரின் கவனத்துக்கு வந்தது. அவர் சிப்லா பார்மசூடிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் யூசுப் ஹமீத். ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ்/எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்றடுக்கு சிகிச்சை மருந்துகளை ஆண்டுக்கு 350 அமெரிக்க டாலர்( சுமார் ரூ.22,000) மதிப்பில் விற்பனை செய்தார்.
ஆனால் இதே மருந்துகளை மேற்கத்திய மருந்து நிறுவனங்கள் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் முதல் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை விலை வைத்து விற்பனை செய்து வந்தன (சுமார் ரூ.6.26 லட்சம் முதல் ரூ. 9.40 லட்சம் வரை).
இந்திய நிறுவனம் இதில் களமிறங்கிய பிறகே, மேற்கத்திய நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தது வெளியுலகுக்குத் தெரிய வந்தது. சிப்லா லாபத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. மனித உயிரை அந்நிறுவனம் மதித்தது.
இந்த விவரங்களை ‘ஃபயர் இன் த பிளட்‘ சித்திரிக்கிறது. உலகளாவிய மருந்து நிறுவனங்களின் தீய நோக்கத்தைத் துகிலுரிக்கும் இப்படம் மருந்து, ஏகபோகம், வன்மம் என்ற துணைத் தலைப்புடன் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற டெஸ்மாண்ட் டுட்டு, சிப்லா மருந்து நிறுவனம், அதன் தலைவர் ஓய்.கே. ஹமீத் ஆகியோரைச் சுற்றி இந்த ஆவணப்படம் தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறது.
சிறப்புத் திரையிடல்
இப்படம் பல்வேறு அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படம் வெளியான பிறகு மனித உரிமைப் போராளிகளின் போராட்டங்கள் அதிகரித்தன. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆவணப்படத்தை பார்க்கவுள்ளனர் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இப்படத்தை வரும் ஆண்டு தொடக்கத்தில் திரையிடுவது தொடர்பாக விவாதம் நடந்து வருகிறது. இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இப்படத்தைத் திரையிட்டுக் காட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், உலக சுகாதார அமைப்பு உள்பட சில அரசு அமைப்புகளும் சிறப்புத் திரையிடலுக்காக வேண்டுகோள் விடுத்துள்ளன என டைலான் மோகன் கிரே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்த ஆவணப்படத்தை யூ டியூப்பில் 3 மாதங்களுக்கு இலவசமாகப் பார்க்க முடியும். பின்லாந்து, நார்வே, போலந்து, ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட உள்ளது. மேலும் ஏராளமான மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த ஆவணப்படத்தைத் திரையிட்டுக் காட்டுவதற்கான முயற்சியில் சில சமூக நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என கிரே கூறினார்.
 நன்றி:இந்து 
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?