பழிவாங்கப்படும்

                                                                                                            
 பணியாளர்கள்
 
 
                                                                                                                    -எழில்.இளங்கோவன்
 
“வலியோர் சிலர் எளியோர்தமை வதையேமிகு புரிகுவதா”
என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் பாடல் வரிகளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது அதிமுக ஜெயா  அரசின் பழியுணர்வும், மக்கள் நலப்பணியாளர் களின் அவல நிலையும்.பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள், திராவிட முன்னேற்றக் கழக அரசினால்.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு 8.11.2011 அன்று, ஒரே நாளில் 13,000 மக்கள் நலப்பணி யாளர்களின் வேலையைப் பறித்து வீட்டிற்கு அனுப்பிவிட்டது.
suran
ஓர் அரசுக்குத் தன் குடிமக்களின் அடிப்படைத் தேவையான உணவு, உறை விடம், வேலை ஆகிய மூன்றையும் செய்து தர வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.
இதற்கு மாறாக 13,000 குடும்பங்கள் பரிதவிக்கும் அளவுக்கு, மக்கள் நலப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தது அ.தி.மு.க. அரசு.
இந்தப் பணிநீக்க அரசாணையை ஏற்காத பணியாளர் சங்கங்கள், தமிழக அரசின் அரசாணைக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி னார்கள்.
வழக்கை ஏற்று விசாரித்த நீதிமன்றம், 23.1.2012ஆம் நாள், தமிழக அரசின் மக்கள்நலப் பணியாளர் பணிநீக்க ஆணையை நீக்கி, மீண்டும் அவர்களுக்குப் பணி வழங்க ஆணை பிறப்பித்தது.
இவ்வாணையை ஏற்க மறுத்து அ.தி.மு.க. அரசு உயர்நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்ததன் விளைவாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் அளித்த தீர்ப்பில், தமிழக அரசின் பணிநீக்க ஆணை செல்லும் என்றும், ஐந்து மாத ஊதியத்தை மட்டும் மக்கள் நலப் பணியாளர்களுக்குக் கொடுத்து விடவும் தீர்ப்பு வழங்கியது.
உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப்பணி யாளர்கள் முன்னேற்ற சங்கம், திண்டுக்கல் மக்கள் நலப் பணியாளர் சங்கம் இணைந்து மேல்முறையீடு செய்த வழக்கின் தீர்ப்பை அதிரடியாக வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
சீர்காழியில் நூதன போராட்டம் நடத்திய மக்கள் நலப்பணியாளர்கள் கைது
சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பை ரத்து செய்வதுடன், மக்கள் நலப் பணியாளர்களின் மேல் முறையீட்டு மனுவை அவர்களின் புதிய மனுவாக விசாரித்து 6 மாதங்களுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர்.தவே, தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கி யுள்ளார்கள்.
இதில் குறிக்கத்தக்க செய்தி என்னவென்றால், வழக்கு விசாரணை முடியும்வரை, தமிழக அரசு வாய்தா போன்ற இழுத்தடிப்புகளைச் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இவ்வழக்கில் பணியாளர் சங்கம் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா, மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கப்பட்டது அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் செயல், இதற்கு அரசியல் காரணம் உள்ளது என்று தம் வாதத்தின் போது கூறியிருக்கிறார்.
தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் துவேதி இதை மறுத்தாலும், உண்மை அதுதான் என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறதே!
இப்பணியாளர்களை முதல் முதலாகப் பணியில் அமர்த்தியவர் கலைஞர். ஏற்றுக்கொள்ள முடியுமா இதை?
கலைஞரால் நியமனம் செய்யப்பட்ட இப்பணியாளர்கள் அரசுப் பணியாளர் களே இல்லை.
அவர்கள் வெறும் ஒப்பந்தப் பணியாளர்கள்தாம். ஆகவே அவர்களைப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்பது தமிழக அரசின் வாதம்.
உண்மை வேறுவிதமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சியின் போது, மக்கள் நலப்பணியாளர்கள் பணிக்கான விளம்பரம் முறையாகச் செய்தித்தாள் களில் வெளியிடப்பட்டது. அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் முறையாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் இப்பணியாளர்கள்.
அப்படியிருந்தும் ஒப்பந்தப் பணியாளர்கள் என்று சொல்லி 2011ஆம் ஆண்டுமுதல் 13,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பக் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது அ.தி.மு.க. அரசு என்றால், இது கலைஞரைப் பழிவாங்கு வதாக நினைத்துக் கொண்டு மக்களைப் பழிவாங்கும் செயல் இல்லாமல் வேறென்ன!
அண்மையில் உலக சிக்கன நாள் கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, தமிழக வரி வருவாய் 89 கோடி ரூபாயில் 44 கோடி சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஒதுக்குவதாகப் பேசியிருக்கிறார்.
தமிழகத்தின் மொத்த ஒதுக்கீட்டில் இது 50 விழுக்காடு.
மக்கள் நலப்பணியாளர்களின் பணி என்ன? அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதும், அது குறித்து மக்களுக்கு விளங்கச் சொல்லி, அவைகளை ஒட்டிய பணிகளைச் செய்வதும்தான் மக்கள் நலப் பணி.
இவர்களுக்கு மட்டும் என்ன சமூகப் பாதுகாப்பு இல்லையா? அல்லது கலைஞரால் பணி பெற்றவர்கள் என்பதனால் சமூகப் பாதுகாப்புக் கொடுக்கக் கூடாதா?
தமிழக அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில், மக்கள் நலப்பணியாளர் களுக்கு நிவாரணத் தொகை யாக ரூபாய் 34 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
இவையெல்லாம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போக்குவரத்துச் செலவுகளுடன் ஒப்பிட்டால் குறைவுதான்.
தாம்பரத் திற்கு அண்மை யில் உள்ள ஒரகடம் என்ற ஊரில் நிகழ்ச்சி ஒன்றுக்குக் கலந்து கொள்ள வந்த ஜெயலலிதா, சென்னையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குக் காரில் வருகிறார். அங்கிருந்து ஒரகடத் திற்கு அதே காரில் சென்றால் அதிகபட்சம் ஒருமணி நேரம்தான் ஆகும்.
அப்படிச் செய்யாமல் ஜெயலலிதா, மீனம்பாக்கத்தில் இருந்து அந்த ஒரு மணி நேரப் பயணத்தை ஹெலிகாப்டரில் சென்று வந்திருக்கிறார்.
ஒரகடத்தில் ஹெலிகாப்டர் இறங்க, ‘ஹெலிபேட்’ அமைத்தது உள்பட இது போன்ற பயணச் செலவுகள் கணக்கில் அடங்கா விளம்பரப் பதாகைகள், நாளிதழ்கள் உள்பட வண்ண வண்ண விளம்பரங்கள் என்று அவருக்காக அரசு செலவிடும் தொகையோடு ஒப்பிட்டால், மக்கள் நலப்பணியாளர்கள் பெறும் ஊதியம் கூட மிகவும் குறைவானதுதான்.
கலைஞர் ஆட்சியில் தொடங்கப் பட்ட அல்லது கொண்டுவரப்பட்ட எந்த ஒரு திட்டத்தையும், அது மக்கள் நலம் பயக்கும் திட்டமாக இருந்தாலும் கூட, அதனை நிறைவேற்றாமல் ஒதுக்கித் தள்ளும் வேலையைத் தானே அ.தி.மு.க. அரசு செய்து கொண்டு இருக்கிறது.
அப்படித்தான் தி.மு.க. ஆட்சியில் கலைஞரால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலப்பணியாளர் வேலைத்திட்டத்தையும் முடக்க முயல்கிறது இந்த அரசு.
ஆனாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜெயா  அ.தி.மு.க. அரசின் பழியுணர்ச்சிக்குத் தடையாய் அமைந்து விட்டது
பழி உணர்வும் பகை உணர்வும் ஒரு நாளும் வெல்வதில்லை!அது போல் தான் ஜெயலலிதா தான் தமிழத்திற்கு முதல்வர் என்பதை மறந்து அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பழி வாங்குவதும் . 
---------------------------------------------------------------------------------------------------------------------------
பாதாம், வால்நட்
 
போன்ற கொட்டைகளை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் புற்று நோயால் இறக்க நேரிடும் ஆபத்தைக் கணிசமாகக் குறைப்பதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
எவ்வளவுக்கெவ்வளவு கொட்டைகளை சாப்பிடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் நாம் வாழலாம் என்று "நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகை"யில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.
 
அமெரிக்காவில் 30 ஆண்டு காலகட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வந்துள்ளன.
தினமும் ஒரு கையளவு கொட்டைகளை சாப்பிடுவதால், எந்த ஒரு காரணத்தாலும் இறப்பதை 20 சதவீதம் என்ற அளவில் குறைக்கிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.
கொட்டைகளை உண்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சராசரியாக சற்று கூடுதலாக உடல் நலன் குறித்து அக்கறையுடன் இருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அவர்கள் அதிகம் புகைப்பதில்லை, கூடுதலாக உடற்பயிற்சி செய்யக்கூடியர்களாக இருக்கிறார்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள் --- இவையெல்லாம் இந்த ஆய்வு முடிவுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
பிடித்த தொழில் ?
----------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருமுறை அக்பர் பீர்பாலிடம், ""நமது நாட்டில் மக்கள் அதிகமாக மேற்கொண்டிருக்கும் தொழில் எது?'' என்று கேட்டார்.
""வைத்தியத் தொழில்தான்,'' என்றார் பீர்பால்.
""என்ன விளையாடுகிறாயா? போதுமான மருத்துவர்கள் இல்லாததால், மக்கள் நோயால் வருந்திக் கொண்டிருப்பதாக அபுல் பசல் கூறினாரே. அப்படியிருக்க, நம் நாட்டில் மக்கள் அதிகமாக மேற்கொண்டிருக்கும் தொழில் வைத்தியத் தொழில் என்று கூறுகிறாயே, இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?'' என்றார் அக்பர்.
""நிச்சயம் நிரூபிக்கிறேன்,'' என்ற பீர்பால் மறுநாள் கையில் ஒரு பெரிய கட்டு போட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

வழியில் ஒருவர் பீர்பாலிடம், ""கையில் என்ன கட்டு?'' என்று கேட்டார்.
""வழுக்கி விழுந்து விட்டேன். பலமான காயம் ஏற்பட்டு கை வீங்கி விட்டது,'' என்றார் பீர்பால்.
""உடனே அந்த மனிதர் அதற்கு ஒரு வைத்தியம் சொல்லி, உடனடியாக அந்த வைத்தியத்தைச் செய்து கொள்ள வேண்டுமென்றும், தாமதப்படுத்தினால் கையையே இழக்க நேரிடும்,'' என்றார்.
இவ்வாறு போகிற வழியெல்லாம் பார்க் கிறவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக வைத்தியம் சொன்னனர். ஒருவாறு அரண்மனைக்குப் போய்ச் சேருவதற்குள் முப்பத்து ஆறு விதமான வைத்தியங்கள் சொல்லி விட்டனர்.
அக்பர் பீர்பாலின் கட்டைப் பார்த்து, என்னவென்று கேட்க, பீர்பால் அவரிடமும் வழுக்கி விழுந்து விட்டதாகவும், கை வீங்கி விட்டது என்றும் கூறி வழியில் பார்த்தவர்கள் சொல்லிய வைத்திய முறைகளையெல்லாம் சொன்னார்.
""அவர்கள் கிடக்கிறார்கள் முட்டாள்கள். அவர்கள் பேச்சைக் கேட்காதே! நான் ஓர் அற்புதமான வைத்தியம் சொல்லுகிறேன். அதை செய்து பார். பட்டென்று வீக்கம் ஒரு நொடியில் போய்விடும்,'' என்றார்.
அதைக் கேட்ட பீர்பால் சிரித்தார்.
""பீர்பால் நான் என்ன சொல்லி விட்டேன். நீ எதற்காக சிரிக்கிறாய்?'' என்று சற்று கோபமாக கேட்டார் அக்பர்.
""அரசே மன்னிக்க வேண்டும். எல்லாருக்கும் பிடித்தமான தொழில் எது என்று நேற்று என்னிடம் கேட்டீர்களே... அதற்கு பதில் இதுதான்,'' என்றார் பீர்பால்.
 
நன்றி:தினமலர் சிறுவர் மலர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
இணையத்தில் வீடியோ பதிவுகளை வெளியிடுவதற்கான முன்னணி வலைத்தளமான யூடியுப், அதன் முதலாவது வருடார்ந்த இசை விருது விழாவை அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடத்தியுள்ளது.
ராப்பிசை உலகின் பிரபலக் கலைஞர் (Rapper) எமினெம் இந்த ஆண்டுக்கான சிறந்த கலைஞருக்கான யூடியுப் விருதை வென்றுள்ளார்.
 
மாக்ல்மோர் மற்றும் ரயன் லூவெஸ் ஆகிய கலைஞர்களும் விருதுவென்றுள்ளனர்.
அமெரிக்கப் பாடகியான லேடி காகாவும் இலங்கை வம்சாவளிப் பெண்ணான பிரபல ஆங்கில-இசைப் பாடகி மாயாவும் (மாதங்கி அருள்பிரகாஸம்) விருதுவிழா மேடையில் இசை-நடன நிகழ்ச்சி நடத்தினர்.
இந்த விருதுவிழா இணையத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான யூடியுப் இணையதளம் புதிய இசை வெளியீடுகளின் முன்னணி சந்தையாக மாறிவிட்டதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
புதிய இசை ஆல்பங்களை வெளியிடுவதில் வானொலிச் சேவைகளையும் எம்டிவியையும் விஞ்சி யூடியுப் பிரபலம் பெற்றுவருகிறது  குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
அருந்ததி ராய்

அருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார்.
கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும் வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தந்தைக்கும் பிறந்தார். தனது சிறுவயதில் கேரளாவில் உள்ள ஆய்மணம் என்ற சிற்றூரில் வளர்ந்தார். கோட்டயத்திலும் நீலகிரியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் டில்லி பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை படிப்பில் சேர்ந்தார்.

அங்கு தனது முதல் கணவரைச் சந்தித்தார். பின் தங்கள் படிப்பை விடுத்து இருவரும் வெளியேறினர். தன் முதல் கணவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் அவர் பிரதீப் கிரிஷன் என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து சில படங்களை எடுத்தனர். இப்படங்களுக்கு அருந்ததி திரைக்கதை எழுதியது குறிப்படத்தக்கது.
அவற்றில் சில In Which Annie Gives It Those Ones and Electric Moon.
 அருந்ததி ராய் தனது பள்ளி பருவத்திலிருந்தே தானாகச் சிந்திப்பவர்.
இந்தியப் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம் (நவ.24- 1961)

இதற்கு அவர் படித்த பள்ளியின் கட்டற்ற படிப்புமுறை காரணமாகத் திகழ்ந்தது. இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் , குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமேரிக்காவின் வெளியுறவு கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். இவ்வாறே இவரது குரல் சமுதாயத்தின் மறுபக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த குரல் பலமுறை எழுத்து வடிவமாக இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. தன் எழுத்து மக்களைச் சென்றடைவதை உணர்ந்த அருந்ததி ராய் நாவல்கள், அரசியல் கட்டுரைகள் , விமர்சனங்களைப் என பல விதமான படைப்புகளை படைத்து வருகிறார்.

இவரது படைப்புகளின் தன்மை பல நேரம் எதனையும் கருப்பு வெள்ளையென்று பிரித்து அடையாளம் காட்டாது. மனிதர்கள், நாடுகள், கொள்கைகள் என்று அனைத்திலும் உள்ள தீமை மற்றும் நன்மையை உணர்ச்சி நிலையிலிருந்து விலகி படைப்பதால் இவரது படைப்புகள் உலகில் பல பத்திரிக்கைகளில் இடம் பெற்றுவருகின்றன.

1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார்.

மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?