ஏகப்பட்ட சந்தேகங்களைக் குவிக்கும்

  சொத்து குவிப்பு  மறு விசாரணை.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள ஜெயா-சசி கும்பல், தமது சொந்த வழக்குரைஞர்களை நம்புவதைவிட, அரசு வழக்குரைஞர் பவானி சிங்கை நம்பித்தான் மேல்முறையீட்டு வழக்கை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
 கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் நடந்துவரும் மேல்முறையீட்டு விசாரணையில் நீதிபதி குமாரசாமி கேட்கும் கேள்விகளுக்கு அரசு வக்கீல் பவானி சிங் வாயைத் திறக்க மறுப்பதைக் காணும் எவரும் எளிதாக இம்முடிவுக்கு வரமுடியும்.
 ஆனாலும், கர்நாடகா உயர்நீதி மன்ற ‘நீதியரசர்களின்’ அறிவுக்கு இந்த எளிய உண்மை புலப்படவில்லை. “ஜெயா, சசி உள்ளிட்ட நால்வரும் பெங்களூரு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விசாரணையில் பவானி சிங் அரசு வக்கீலாகத் தொடருவதை ரத்து செய்து, அவருக்குப் பதிலாக வேறொருவரை நியமிக்கும்படி கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரி தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ள கர்நாடகா உயர்நீதி மன்றம், சட்டத்தின் பொந்துகளுக்குள் புகுந்துகொண்டு பவானி சிங் அரசு வக்கீலாகத் தொடருவதற்கு மட்டுமல்ல, எதிரிகளுக்குச் சாதகமாக நடந்துகொள்ளும் அவரின் கபடத்தனங்களுக்கும் நல்லாசி வழங்கிவிட்டது.
"அரசு வக்கீல்" பவானி சிங்.
குற்றவாளிகளான ஜெயா – சசி கும்பலின் கைக்கூலியாக நடந்து கொள்ளும் “அரசு வக்கீல்” பவானி சிங்.
கிரிமினல் வழக்குகள் ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்திற்கு மாற்றப்படும்பொழுது, எந்த மாநிலத்திற்கு மாற்றம் செயப்படுகிறதோ அந்த மாநில அரசுதான் அரசு வக்கீலை நியமனம் செய வேண்டும் என வரையறுக்கிறது, குற்றவியல் நடைமுறைச் சட்டம்.
 ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கை நடத்திவரும் தமிழக அரசின் இலஞ்ச ஒழிப்புத் துறை இச்சட்டத்திற்கு விரோதமாக, ஜெயா-சசி கும்பல் தமக்குப் பிணை வழங்கக் கோரி கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தபொழுது, அவ்வழக்கில் ஆஜராவதற்கு பவானி சிங்கிற்கு அனுமதி அளித்தது. இந்தச் சட்டவிரோத அனுமதி உத்தரவைக் காட்டியே, சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு எதிராக ஜெயா-சசி கும்பல் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகிவருவதையும் நியாயப்படுத்தி வருகிறார், பவானி சிங்.
இப்படிச் சட்டவிரோதமான முறையில் பவானி சிங் மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராவதை எதிர்த்துதான் அன்பழகன் ஐந்து முறை அடுத்தடுத்து கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தார்.
அன்பழகனின் ஐந்து மனுக்களும் கர்நாடகா உயர்நீதி மன்றத்தின் வெவ்வேறு அமர்வுகளால் விசாரிக்கப்பட்டாலும், கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி வகேலா அமர்வு தவிர, பிற அமர்வுகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு, தமது மனம் போன போக்கில் உத்தரவுகளைப் பிறப்பித்து அன்பழகனின் மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளன.
அன்பழகனின் மனு, நீதிபதி அப்துல் நசீர் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது கர்நாடகா அரசின் தலைமை வக்கீல் ரவிவர்ம குமார், “பவானி சிங் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று பலமான புகார்கள் வந்துள்ளன.
அரசு தரப்பில் யார் ஆஜராக வேண்டும் என்பதில் முடிவெடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்து, மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜராகி வருவது சட்டவிரோதமானது என்பதை உறுதிப்படுத்தினார்.
 எனினும், அப்துல் நசீர் அமர்வு பவானி சிங் ஆஜராவதைத் தடைசெய்ய மறுத்துவிட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக நீதிபதி ஆனந்தபைராய ரெட்டி என்ற மற்றொரு அமர்வு பவானி சிங்கிற்கு ஆதரவாக அளித்த உத்தரவை எதிர்த்து அன்பழகன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் டி.எச்.வகேலா மற்றும் அசோக் பி.இஞ்சகேரி ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தபொழுது, “குற்றவியல் நடைமுறைச் சட்டம் 24(1)-ன்படி தமிழக அரசின் அனுமதியுடன் பவானி சிங் ஆஜராகிவருவது சட்டப்படி தவறானது.
 உச்சநீதி மன்றம் பவானி சிங்கை நியமனம் செய்து பிறப்பித்த உத்தரவு, கீழ் நீதிமன்றத்துக்கு மட்டும்தான். 
கர்நாடகா அரசு இந்த வழக்கில் வழக்குரைஞரை நியமிக்காதபோது, பவானி சிங் ஆஜராகி இருப்பது சட்டத்திற்குப் புறம்பானது” என்ற கருத்துக்களை தலைமை நீதிபதி டி.எச்.வகேலா முன்வைத்தார்.
கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி.
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி.
“மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 19 நாட்களாக நடைபெற்று வருகிறது.  உச்சநீதி மன்றம் மூன்று மாதங்களுக்குள் வழக்கை முடிக்கச் சொல்லியிருக்கிறது.
 இந்த நிலையில் அரசு வக்கீல் பிரச்சினையை எழுப்புவது சரியல்ல” என பவானி சிங்கின் வழக்குரைஞர் வாதிட்டபொழுது, “அதற்காகச் சட்டவிதிகளை மீறிச் செயல்பட முடியுமா?” எனக் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி வகேலா அமர்வு, “பவானி சிங்கை நீக்குவதால் எழக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அறிக்கையாக அளிக்குமாறு” அன்பழகன், பவானி சிங், கர்நாடக அரசு ஆகிய முத்தரப்பிடமும் கோரியது. இந்த விசாரணையின்பொழுதே பவானி சிங்கிற்குப் பதிலாக அரசு மூத்த சிறப்பு வழக்குரைஞர் நாராயண ரெட்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்தை கர்நாடக அரசு முன்வைத்தது.
இந்த நிலையில்தான் ஆட்சேபணை மனுவொன்றைத் திடீரென தாக்கல் செய்தார், பவானி சிங்கின் வழக்குரைஞர். 
அதில், “தலைமை நீதிபதி வகேலாதான், 23.9.2013 அன்று அளித்த உத்தரவில் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த விசாரணையிலிருந்து அரசு வக்கீல் பவானி சிங்கை நீக்கினார்.  எனவே, அவர் விசாரித்தால் உரிய நியாயம் கிடைக்காது” எனக் குறிப்பிட்டிருந்ததால், வகேலா அமர்வு அன்பழகனின் மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொண்டது.
வகேலா அமர்வு விசாரணையைத் தொடங்கியபொழுதே அவர் மீது ஆட்சேபணை தெரிவிக்காத பவானி சிங் தரப்பு, வகேலா அமர்வு தீர்ப்பு வழங்கத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் ஆட்சேபணையை  எழுப்பியிருப்பதே சந்தேகத்திற்குரியதுதான்.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கிலிருந்து பவானி சிங் நீக்கப்படுவதால், அவருக்குத் தனிப்பட்ட நட்டம் எதுவும் ஏற்படப் போவதில்லை. 
ஆனால், ஜெயா தரப்புக்கு பவானி சிங்கை இழப்பது என்பது தலையில் இடி இறங்குவதற்குச் சமமானது.
 ஏனென்றால், சிறப்பு நீதிமன்றத்தில் தனக்கு எதிராக பவானி சிங்தான் வாதிட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் வரை சென்று வாதாடி, நீதிமன்ற வரலாற்றில் ஒரு‘புரட்சியை’ ஏற்படுத்தியவர் ஜெயா!
கர்நாடக உயர்நீதி தன்ற தலைமை நீதிபதி வகேலா.
மேல்முறையீட்டு வழக்கில் அரசு வக்கீலாக பவானி சிங் ஆஜராகி வருவதை கேள்விக்குள்ளாக்கிய கர்நாடக உயர்நீதி தன்ற தலைமை நீதிபதி வகேலா.
ஜெயாவின் இந்த நம்பிக்கைக்கு உரியவராகத்தான் அன்று முதல் இன்றுவரை நடந்துவருகிறார் பவானி சிங்.  சொத்துக்குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த போது இறுதிகட்ட வாதத்தைத் தொடங்காமல் வழக்கை இழுத்தடிக்க நானாவிதமான முட்டுக்கட்டைகளையும் போட்ட வர்தான் பவானி சிங்.
 இதனால் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான அவர் மீது அபராதமும் விதித்தார், சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா. அவ்வழக்கில் பவானி சிங் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டதே முறைகேடானது, சட்டத்திற்குப் புறம்பானது என்பது அன்பழகன் தரப்பால் நிரூபிக்கப்பட்டு, கர்நாடகா உயர்நீதி மன்றத்தால் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து உச்சநீதி மன்றம் சென்ற ஜெயா-சசி கும்பலுக்கு ஆதரவாக, பவானி  சிங் பதவி நீக்கப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டது நீதிபதிகள் சவுகான்-பாப்டே அமர்வு.
இதே நீதிபதிகள்தான் சிதம்பரம் நடராசர் கோவில் நிர்வாகத்தைத் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதை ரத்து செய்தும், சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிரான வழக்கிலும் பார்ப்பனக் கும்பலுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தவர்கள் என்பதைச் சொத்துக்குவிப்பு வழக்கோடு இணைத்துப் பார்த்தால்தான் பவானி சிங்கிற்கு ஆதரவாகப் பெறப்பட்ட தீர்ப்பு சட்டப்படியானது அல்ல, அது இன்னொரு பார்ப்பன மனுநீதி என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயா-சசி கும்பல் கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்த வழக்கில், குற்றவாளிகளுக்குப் பிணை வழங்குவதை எதிர்ப்பதாக முதலில் கூறிய பவானி சிங், பின்னர் தீர்ப்பு வழங்கும் நேரத்தில் பிணை வழங்கலாம் என பல்டி அடித்தார். 
இதற்காக, அப்பிணை மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகராவால் பவானி சிங் நீதிமன்றத்திலேயே கண்டிக்கப்பட்டார்
. “தனக்குச் சம்பளம் போதவில்லை என்ற காரணத்தை முன்வைத்து பவானி சிங் பதவி விலகல் கடிதம் அளித்துவிட்டதாகவும், எனினும், அவரைக் குற்றவாளிகள் தரப்பு வழக்குரைஞர்கள் சந்தித்து சமாதானப்படுத்தியதாகவும்” சில நாட்களுக்கு முன் இந்து நாளிதழ் செய்தியொன்றை வெளியிட்டது. 
அரசு வக்கீலும் குற்றவாளிகள் தரப்பும் எந்தளவிற்கு கூடிக்குலாவி வருகிறார்கள் என்பதை இந்தச் செய்தி அம்பலப்படுத்திக் காட்டியது.
உச்சநீதி மன்ற நீதிபதி (ஓய்வு) பி.எஸ்.சௌஹான்
அரசு வக்கீலாக முறைகேடாக நியமிக்கப்பட்ட பவானி சிங்கின் நியமனத்தை உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்ற நீதிபதி (ஓய்வு) பி.எஸ்.சௌஹான் (கோப்புப்படம்)
வழக்கு தொடர்பாக நீதிபதி குமாரசாமி கேட்கும் கேள்விகளுக்குப் பதிலை அளிக்க முன்வராமல் வழக்கையே சீர்குலைக்கும் சதித்தனங்களில் இறங்கியிருக்கிறார், பவானி சிங். 
அக்கேள்விகளுக்கு அன்பழகன் தரப்பு வழக்குரைஞர்கள்தான் உரிய பதிலை அளித்து வருகின்றனர். வழக்கின் நடைமுறை இவ்வாறிருக்க, கர்நாடகா உயர்நீதி மன்றமோ, “மேல்முறையீட்டு வழக்கில் தன்னை மூன்றாவது நபராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்; அரசு வக்கீலுக்கு உதவியாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்” எனக் கோரி அன்பழகன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து, “மூன்றாவது தரப்பின் உதவி சிறப்பு நீதிமன்றத்தோடு முடிந்துவிட்டது” என்ற கேலிக்கூத்தான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
பவானி சிங் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சட்டப்படியான தீர்ப்பை அளித்தவர் என்பதைத் தாண்டி நீதிபதி வகேலா மீது சந்தேகம் கொள்வதற்கு எந்த அடிப்படையும் கிடையாது.
ஆனால், பவானி சிங் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகிவருவது சட்டத்திற்குப் புறம்பானது என்பது மட்டுமல்ல, அவர் அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்து வருகிறார் என்பதற்காக சிறப்பு நீதிமன்றத்தாலும் உயர்நீதி மன்றத்தாலும் கண்டிக்கப்பட்டிருக்கிறார்; அவரின் இக்களவாணித்தனத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
சட்டப்படியான தீர்ப்பை எழுதிய வகேலா விசாரணையிலிருந்து விலகிக்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்படுகிறார். ஆனால், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுடன் கூடிக்குலாவி வரும் பவானி சிங் அரசு வக்கீலாகத் தொடருவதை, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலுள்ள 24(8) என்ற பிரிவை வலிந்து மேற்கோள் காட்டி அனுமதித்திருக்கிறது நீதிபதிகள் என்.குமார் மற்றும் ஏ.வீரண்ணா அமர்வு. பவானி சிங்கின் ஒவ்வொரு நடவடிக்கையும் மேல்முறையீட்டு வழக்கைச் சீர்குலைக்கும் விதத்தில் இருந்துவரும் நிலையில், “மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருப்பதால் அதனைப் பாதிக்கும் எந்தவிதமான முடிவையும் எடுக்க முடியாது” என நகைக்கத்தக்க உத்தரவை பிறப்பித்துள்ளனர் அந்நீதிபதிகள்.
கடந்த டிசம்பரில் ஜெயாவின் பிணை காலத்தை நீட்டித்துத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தத்து, இந்த வழக்கை 90 நாட்களுக்குள் முடித்துக் கொடுக்கும்படி தன்னிச்சையான முறையில் ஒரு கட்டப்பஞ்சாயத்து ஏற்பாடைச் செய்து அறிவித்தார்.
ஆனால், இந்த 90 நாள் கெடு உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் உத்தரவாக வெளியிடப்படவில்லை என்பதால், அதன் சட்டபூர்வ தகுதியே கேள்விக்குரியது.
ஆனால், பவானி சிங் அரசு வக்கீலாக ஆஜராகிவருவதைத் தடை செய்ய மறுத்துவிட்ட கர்நாடக உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகள் இந்த வழக்கை 90 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென்ற உச்சநீதி மன்றத்தின் கட்டப்பஞ்சாயத்தை, மீறமுடியாத மதக்கட்டளை போலச் சித்தரிக்கின்றனர்.
உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து.
சொத்துக்குவிப்பு வழக்கை 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற வாய்வழி உத்தரவின் மூலம் கட்டப் பஞ்சாயத்து செய்துவைத்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து.
சிறப்பு நீதிமன்றத்தில் பவானி சிங் நியமிக்கப்பட்டதே வல்லுறவுக்கு இணையான ஒரு முறைகேடு. பிறகு வல்லுறவு செய்த குற்றவாளிக்கே பெண்ணை திருமணம் செய்து வைப்பதைப் போல, விசாரணை நீதிமன்றத்தில் அவர்தான் அரசு வழக்குரைஞர் என்பதால் உயர்நீதி மன்றத்திலும் அவரே நீடிக்கிறார்.
 இந்த அநியாயத்தை கேள்வி கேட்டால், “90 நாட்களில் பிள்ளையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்” (உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்) என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருப்பதால், பவானி சிங்தான் புருசன் என்பதை இந்தக் கட்டத்தில் கேள்விக்குள்ளாக்க முடியாது என்று கூறி விட்டது கர்நாடக உயர்நீதி மன்ற அமர்வு.
 பின்னர் எப்போது கேட்பது?
 உச்சநீதி மன்ற உத்தரவுப்படி முதலில் பிள்ளையைப் பெற வேண்டுமாம். திருமணம் செல்லுமா, செல்லாதா என்பதை அப்புறம் முடிவு செய்வார்களாம். இந்த உவமானம் நகைச்சுவையோ, மிகையோ அல்ல; நடந்துகொண்டிருப்பதுதான்.
கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்திருக்கிறார், அன்பழகன். “இந்த மனுவையும், ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கையும் படித்துப் பார்த்த பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலும்” எனக் கூறி விசாரணையை மார்ச் 9-ம் தேதிக்குத் தள்ளிவைத்திருக்கிறது நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால்-பி.சி.கோஸ் அமர்வு.
ஆனால், பெங்களூரு உயர்நீதி மன்ற விசாரணைக்கு இவர்கள் இடைக்காலத் தடை ஏதும் விதிக்கவில்லை. பவானி சிங் பெங்களூரு உயர்நீதி மன்றத்தில் அரசு வக்கீலாக ஆஜராகிக் கொண்டிருப்பார், உச்சநீதி மன்ற நீதிபதிகள் தமது சௌகரியப்படி விசாரணையை நடத்துவார்கள் என்பதைவிட கேலிக்கூத்தான நீதி பரிபாலன முறை வேறு இருக்க முடியுமா? 
 ஊழலுக்கு எதிராக உதார்விட்டு வரும் உச்ச, உயர்நீதி மன்ற நீதிபதிகள் பிரம்மஸ்ரீ கிரிமினல்கள் விடயத்தில் சட்டப்படி அல்லாமல், மனுதர்மப்படிதான் நடந்துகொள்வார்கள் என்பதற்கு இது இன்னுமொரு உதாரணமாகும்.

                                                                                                                             - செல்வம்,
நன்றி:வினவு.   
===============================================================================================
இன்று.
18 மார்ச்
  • மங்கோலியாவில் ஆண்கள் மற்றும் படைவீரர்கள் தினம்
  • அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1850)
  • அல்ஜீரியா விடுதலை போர் முடிவுக்கு வந்தது(1962)
  • வணிக உரிமைகள் வழங்கும் உடன்பாட்டில் ஹவாய், அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது(1874)
---------------------------------------------------------------------------------------------------------------


 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?