காலத்தின் குரல்



  திப்பிலி

சளி, இருமல். இளைப்பு போன்ற போன்றவை, தீராத நோய் என்று சொல்வதற்கில்லை.
எல்லோருக்கும் எல்லா வயதினருக்கும் வரக்கூடியதாகும். 
இதில், சளியை கோக்கும் இயற்கை மருந்தாக திப்பிலி பயன்படுகிறது.
திப்பிலி என்பது அரிய வகை மூலிகை மருந்து வகைகளில் ஒன்றாகும். எல்லா நாட்டு மருந்து கடைகளிலும், எளிதாக கிடைக்கும்.
இது மணமுடைய மெல்லிய தண்டு கொடி வகையை சார்ந்தது.
வெப்பமான பகுதிகளில் வளரும், இயல்புடைய தாவரமாகும்.
 இந்தியாவில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கேரளாவில் அதிகம் வளர்கிறது.
திப்பிலியில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் கொண்டது. இது பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாக பயன்படுகிறது.
கனியும், வேரும் மருந்தாக பயன்படுகின்றன.
நாட்டு மருந்து கடைகளில் அதிகம் கிடைக்கும் திப்பிலி, மூச்சு உறுப்புகளின் நோய்கள், வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள், பித்தநீர்ப்பை நோய்கள், ஆகியவற்றை போக்க பயன்படுத்தப்படுகிறது.


திப்பிலி பொடியை சிறிதளவு எடுத்து, தேனில் கலந்து, இரு வேளை கொடுத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள, தொண்டை கட்டு, கோழை, குரல் கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும். இதை சிறிதளவு எடுத்து, வெந்நீரில் போட்டு, காய்ச்சி வடித்து குடித்தாலும் அனைத்து வியாதிகளும் நீங்கும்.
 தேனுடன் கலந்த பொடி சளி, இருமல், ஆஸ்துமா, விக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும். திப்பிலி கனி, வேர் மற்றும் மிளகு, இஞ்சி ஆகியவை சமஅளவு கலந்த கலவை, குடல்வலி, உப்புசம், இருமல் மற்றும் தொண்டை கரகரப்பு போக்க வல்லது.


மிளகுடன் கலந்த திப்பிலி பொடி, மயக்கம் மற்றும் உணர்வின்மையின் போது உணர்வை தூண்டும் மருந்தாக பயன்படுகிறது.
 குழந்தை பெற்ற பெண்களுக்கு, இளம் சூடான நீரில் திப்பிலி பொடியை கலந்து கொடுப்பதால், ரத்தப்போக்கு மற்றும் காய்ச்சல் குணமாகும். குழந்தைகளின் குடலில் உண்டாகும் புழுக்களை அகற்ற, திப்பிலி பொடி சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
தொடர்ந்து சளித்தொல்லையால் அவதிப்படுவர்கள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், திப்பிலியை பயன்படுத்தினால் உடனே சளி நீங்கும் இதனால், எந்த பக்க விளையும் ஏற்படாது.
 மேலும், சுவாச குழாயில் எற்பட்டுள்ள, நாள் பட்ட சளி அடைப்புகள் நீங்கி சுவாச புத்துணர்வு ஏற்படும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் 1906-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி பிறந்தார். 
சொ. விருத்தாசலம் என்கிற இயற்பெயரை உடைய இவர், சொக்கலிங்கம் பிள்ளை- பர்வதம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். 
அவர் எழுதவந்த காலத்திற்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே உப்புச் சத்தியாகிரக எழுச்சி ஏற்பட்டி ருந்தது. 
அவ்வெழுச்சியைத் தொடர்ந்து தமிழ் இலக்கியத்திலும் புதுஎழுச்சி உண்டாகிற்று. இந்த காலகட்டத்திலேயே "சுதந்திரச் சங்கு', "காந்தி', "மணிக்கொடி', "ஆனந்த விகடன்', "கலைமகள்', "நவசக்தி' முதலிய அரசியல், இலக்கிய சஞ்சிகைகளும், "தினமணி' பத்திரிகையும் வெளிவந்தன. இவ்விதழ்களின் தோற்றத்தால் தமிழிலக்கியத்திலும் உருவத்திலும், உள்ளடக்கிலும் பெருத்த மாறுதல் ஏற்பட்டன.
 இதில் புதுமைப்பித்தனின் இலக்கிய வாழ்வானது, 1933-ஆம் ஆண்டிலிருந்து 1948- ஆம் ஆண்டுவரை சுமார் 15 ஆண்டுகாலங்கள் நீடித்திருந்தது. அதாவது அவரது இலக்கியச் சேவையானது 27-ஆம் வயதில் தொடங்கி 43-ஆம் வயதின் முற்பகுதியில் முடிவுற்றிருக்கிறது.

புதுமைப்பித்தனை பத்திரிகை உலகிற்கு அழைத்துவந்தவர், மகாகவியின் பரமானந்த சீடரான வ.ரா. 1934-ல் 'ஊழியன்' பத்திரிகையில் உதவியாசிரியராக இணைவதற்கு முன்பாகவே தமக்கான இலக்கியக் குறிக்கோளை அவர் வகுத்துக்கொண்டு விட்டார். அவரது முதல் படைப்பான "குலோப்ஜான் காதல்' என்கிற கட்டுரை, டி.எஸ். சொக்கலிங்கத்தின் "காந்தி'யில் அக்டோபர் 18, 1933-ல் வெளியானது. இக்கட்டுரையினைத் தொடர்ந்தாற்போன்று அவரெழுதிய இரண்டு கட்டுரைகளும் "காந்தி'யில் பிரசுரமாயின.
 1934-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சென்னைக்கு குடிபெயர்ந்த புதுமைப்பித்தன் ராய. சொக்கலிங்கத்தின் "ஊழியன்' இதழில் இணைந்து பணியாற்றலாயினார். பொருளாதார முடையால் 1933-ஆம் ஆண்டின் இடையில் நிறுத்தப்பட்டிருந்த இவ்விதழ், ஜூலை 6, 1934-லிருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கிற்று. இவ்விதழில் பணியாற்றிய காலங்களில் "மணிக்கொடி', "காந்தி', "சுதந்திரச் சங்கு' முதலிய இதழ்களிலும் தொடர்ந்து தனது படைப்புகளை அவர் படைத்துவந்தார்.

பிப்ரவரி, 1935-ல் "ஊழிய'னிலிருந்து விலகியபிறகு, டி.எஸ். சொக்கலிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த "தினமணி'யில் 1936-ல் உதவியாசிரியராக இணைந்தார் புதுமைப்பித்தன். 1937-ல் பி.எஸ். ராமையாவின் "மணிக்கொடி' நின்றுபோனபிறகு, புதுமைப்பித்தனின் வேடந்தாங்கலாக விளங்கிற்று "கலைமகள்' இதழ். மிகக் குறைந்த சன்மானமே கிடைத்தபோதிலும், தம் படைப்புக்காக அளிக்கப் பட்ட சுதந்திரத்தை அவர் முக்கியமாக கருதினார். 
"கலைமகள்' வெளியிட்ட "காஞ்சனை' சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில், தமக்கு அளிக்கப்பட்ட படைப்புச் சுதந்திரம் குறித்து புதுமைப்பித்தன் பாராட்டியுள்ளார். அவரின் சாகாவரம் பெற்ற படைப்புகள் பல "கலைமக'ளில்தான் வெளிவந்தன. 
அதேவேளையில், திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து வெளிவந்த "கிராம ஊழியன்', "சிவாஜி' போன்ற சிற்றிதழ்களிலும் சன்மானம் ஏதுமின்றி முழுமனதுடன் எழுதிவந்தார். அவரின் பெரும்பாலான கவிதைகள் இச்சிற்றிதழ்களிலேயே பிரசுரமாயின.

"இரண்டாம் உலகப் போர்' உச்சகட்டத்திலிருந்த காலத்தில், 1943-ல் "தினமணி' ஆசிரியர் குழுவிலிருந்து ஊதிய உயர்வு காரணமாக டி.எஸ். சொக்கலிங்கம் தலைமையில், புதுமைப்பித்தன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்த ரா. வேங்கடராஜுலு, எஸ்.எஸ். மாரிச்சாமி, காசி விசுவநாதன், சிவ சிதம்பரம், ப. ராமஸ்வாமி உள்ளிட்ட ஒரு பகுதியினர் ராஜிநாமா செய்தனர். அப்போது புதுமைப்பித்தனின் வயது 37. 
தம்முடன் வெளியேறிய உதவி ஆசிரியர்களுக்கு உதவும் பொருட்டு, மிகுந்த இடர்ப்பாடுகளுக்கு இடையே, 1944-ல் "தினசரி' எனும் நாளிதழைத் தொடங்கினார் டி.எஸ். சொக்கலிங்கம். பணவலிமை இல்லாததால் "தினசரி' நிர்வாகத்தால் பணியாளர்களுக்கு ஒழுங்காகச் சம்பளம் தர இயலவில்லை. ஏற்கெனவே பற்றாக்குறை வாழ்க்கை நடத்திவந்த புதுமைப்பித்தனுக்கு பொருளாதார நெருக்கடி அதிகரித்தது. "தினசரி' யிலிருந்து அவர் ராஜிநாமா செய்து, "சுதந்திர எழுத்தாளர்' பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டார்.

1945-ல் மிக இளம்வயதில் மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் மறைந்தபோது மிகவும் வேதனையுற்ற நிலையில் "ஓஹோ ! உலகத்தீர் ஓடாதீர்' என்கிற கவிதையை அவரெழுதினார். அதேபோல், இந்தியாவின் அவல நிலை குறித்து மிகவும் மனம் வருந்திய நிலையில், தமது துயரத்தை "இணையற்ற இந்தியா' என்கிற தலைப்பில் ஒரு நையாண்டிப் பாடலாக, கவிஞர் சாலிவாகனனை ஆசிரியராக கொண்டு திருச்சியிலிருந்து வெளிவந்த "கலாமோகினி' எனும் மறுமலர்ச்சி மாத இதழில் எழுதினார்.

வாழ்வை, உண்மையை நேர்நின்று நோக்கவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டதன் விளைவாக, பக்த குசேலா, நாசகாரக் கும்பல், துன்பக்கேணி, மனித யந்திரம், பொன்னகரம், இது மிஷின் யுகம், கலியாணி, வாடாமல்லிகை, கவந்தனும் காமனும், நிசமும் நினைப்பும், செல்லம்மாள், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், மகாமசானம், சுப்பையா பிள்ளையின் காதல்கள், நியாயந்தான், ஆண்மை, ஒருநாள் கழிந்தது, தெரு விளக்கு, நினைவுப் பாதை ஆகிய புதுமைக் கதைகளை அவர் படைத்தார். 

புதுமைப்பித்தனின் கதாபாத்திரங்கள் படைப்பின் மையக் கருத்து, தமிழ் நடை, தமது கதைகளுக்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட விஷயங்கள், நம் வாழ்வின் அடிப்படை நியதிகள் மற்றும் மதிப்பீடுகள் குறித்து அவர் எழுப்பியுள்ள துணிச்சலான வினாக்கள். இவை இலக்கிய சநாதனிகளையும், பழமைப்பித்தர்களையும் எரிச்சலுறச் செய்தன. அவர்கள் புதுமைப்பித்தனை இழித்தும், பழித்தும் பேசினர். ஆனால் எதிர்ப்புகளைக் கண்டு அவர் அஞ்சவில்லை.

 தன்னுடைய கதைகளுக்கு கிடைத்த வரவேற்பைப் பற்றி அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். "தன் பலம் தனக்குத் தெரியாது என்பது வெகுஜன வாக்கு. அதேமாதிரி தன் பலவீனமும், விசித்திரப் பேதங்களும் பிறர் கண்ணுக்குத் தெரிவதுபோல் தனக்குத் தெரியாதென்பதையும் வெகுஜன வாக்காகக் கொள்ள வேண்டும். ஏனென்றால் முந்திய வசனத்தின் உட்கிடை பிந்திய வியாக்கியானம். நல்லதும், சோடையுமாக சுமார் 200 கதைகள் எழுதிவிட்டு, அப்புறம் அவற்றின் தராதரத்தைப் பற்றிக் கவனிப்பது எழுதினவருக்கு ரசமான பொழுதுபோக்கு. என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்துகொண்ட புனைபெயராகும். அது அமெரிக்க விளம்பரத் தன்மை வாய்ந்திருக்கிறது என்பதை இப்போது அறிகிறேன். நான் எடுத்தாளும் விவகாரங்கள் பலர் வெறுப்பது; சிலர் விரும்புவது.

நான் கதை எழுதுகிற சீர் சிறப்பு எல்லாம் இந்த மாதிரிதான் என்று வைத்துக்கொள்ள வேண்டாம். அதாவது நான் எழுதவேண்டியதுதான் பாக்கி. அது நேராகப் பத்திரிகையின் பக்கங்களில்போய் உட்கார்ந்து கொள்வது நிச்சயம் என்று கருதவேண்டாம். 
அப்படி ஒன்றும் இல்லை. ஒரு காலத்தில் என் கதைகளைப் போல பத்திரிகைகளில் நுழைய அனுமதி மறுக்கப் பட்டவை வேறு இருக்கவே முடியாது. நான் இப்பொழுது பிரசுரித்துள்ளவற்றின் அளவுக்கு ஏறக்குறைய சமமான எண்ணிக்கையுள்ள கதைகள், அதை எழுதப்பட்ட காலத்திலிருந்த பத்திரிகைக் காரியாலயங்கள் எல்லாவற்றையும் ஷேத்திர தரிசனம் செய்துவிட்டுத் திரும்பியவையாகும்...'

சமூகத்தின் ஊழல்களைத் தமது முரட்டுக் கிண்டல்களால் எள்ளி நகையாடும் லட்சியக் கலைஞராக திகழ்ந்த புதுமைப்பித்தன் தலைசிறந்த இலக்கிய விமர்சகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். முகஸ்துதிக்காகவோ, தெரிந்தவர், வேண்டியவர் என்பதற்காகவோ, தன்னலம் கருதியோ எவருடைய சிருஷ்டியையும் அவ்வளவு எளிதில் அவர் பாராட்டிவிடமாட்டார். 
நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று குறிப்பிட்டுச் சொல்லுகிற தன்மையை இயல்பாகவே அவர் பெற்றிருந்தார். அந்தக் காலத்தில், அவரது கையால் குட்டுப்பட்ட பிரபல எழுத்தாளர்கள் பலர் உண்டு.

இந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் பலர் தாம் எழுதுகிற நூல்களுக்கு முன்னுரை கேட்டு மூத்த படைப்பாளிகளை நாடுவதுபோல, அந்தக் காலத்தில் கவிஞர்கள் தாம் பாடி முடித்த பிரபந்தங்களுக்குப் பிற கவிஞர்களிடமும் அறிஞர்களிடமும் சாற்றுக் கவிகளும், சிறப்புபாயிரமும் கேட்டுக்கொள்வதுண்டு.

புதுமைப்பித்தனின் நண்பர்களிலொருவரும், தபால் இலாகாவில் பணிபுரிந்து வந்தவருமான சுடலைமுத்து என்பவர், குட்டிப் பிரபந்தமொன்றை இயற்றி எடுத்துக்கொண்டு புதுமைப்பித்தனிடம் வந்து, அதனை வாசித்துக் காட்டி அதற்கு ஒரு சிறப்புப் பாயிரம் வேண்டுமென கேட்டார். கவியாற்றலோ, கற்பனையாற்றலோ இல்லாத அந்தப் பிரபந்தத்தை கேட்ட புதுமைப்பித்தன், சம்பிராதாயமாகக்கூட அதைப் பாராட்டவில்லை. நண்பரும் அதை அப்படியே விடாமல் சிறப்புப் பாயிரம் தந்தாக வேண்டுமென அவரிடம் கேட்க, ஒரு பாடலை எடுத்துவிட்டார் புதுமைப்பித்தன்.

"அஞ்சல் சுடலைமுத்துவின் / ஆலகவி கேட்டவர்கள் / கெஞ்சும் உலர்ந்துபட்ட / நேர்மை என்னே? / நஞ்சு தின்றும்/ பிறந்திறவா வரம் பெற்றான் / பித்தானான் என்றக்கால் / பிறந்திறப்பார் பெற்றி என்ன சொல் !' இந்தப் பாடலின் உட்பொருள் இதுதான். தபால் நிலையத்தில் வேலை பார்க்கும் கவிஞர் சுடலைமுத்தின் ஆலகால விஷம் போன்ற கவிதையைக் கேட்டவர்களின் உலர்ந்து உருக்குலைந்து போகும் நெஞ்சங்களின் நிலைதான் என்ன? 
சிவபெருமான் தேவர்களைக் காப்பதற்காகவா திருப்பாற் கடலிற் பிறந்த விஷத்தை அள்ளிப் பருகினான் என்றா நினைக்கிறீர்கள்? 
இல்லை. நமது கவிஞர் சுடலைமுத்தின் நாராசமான கவிதையைக் கேட்ட கொடுமையைச் சகிக்கமுடியாமல்தான் சிவபெருமான் விஷத்தை அள்ளியுண்டு பிராணத் தியாகம் செய்துகொள்ளப் போனான். ஆனால் அவனோ இறப்பும் பிறப்புமில்லாத இறைவனாகை யால் அவனால் தற்கொலையும் புரிந்துகொள்ள முடியவில்லை.

 எனவே உயிர் போகமாட்டாத இந்தச் சித்ரவதையைப் பொறுக்கமாட்டாமல், சிவ பெருமானுக்குப் பைத்தியமே பிடித்து அவன் பித்தனாகி விட்டான்.

 கர்ண கடூரமான சுடலைமுத்தின் கவிதையைக் கேட்ட காரணத்தால் பிறப்பும் இறப்புமற்ற ஆண்டவனின் நிலையே இத்தனை அலங்கோலத்துக்கு ஆளாகிவிட்டது என்றால், கேவலம் பிறப்பும் இறப்பும் உள்ள சாதாரண மானிடப் பிறவிகளான மக்களின் கதி என்னாகும்? 

அதனை கற்பனைதான் பண்ண முடியுமா? என்பதுதான் இந்தப் பாடலின் சிறப்புரை.

 "தினசரி'யிலிருந்து புதுமைப்பித்தன் விலகிவந்த காலக்கிரமத்தில், "மணிக்கொடி' பி.எஸ். ராமையா, கி.ரா (கி. ராமச்சந்திரன்), முருகதாஸா போன்ற அவரது "மணிக்கொடி' கால எழுத்தாள நண்பர்கள், திரைப்படத்துறையில் ஈடுபட்டு ஓரளவுக்கு வசதியாகப் புகழ் ஏணியில் ஏறிக்கொண்டிருந்தார்கள். நண்பர்களின் அழைப்பிற்கிணங்கவும், பிழைப்பிற்கு வேறு சிறந்த வழி தெரியாததாலும், புதுமைப்பித்தன் திரைத்துறை கலைஞரானார். 
1946-ல் "ஜெமினி'யின் "அவ்வை' படத்திற்கான சில காட்சிகளுக்கு வசனம் எழுதினார். காசு கிடைத்தது. ஆனால் அவரது கலைத்திறனை "ஜெமினி' பயன்படுத்திக் கொள்ள வில்லை. அவரின் வசனங்கள் புறக்கணிக்கப்பட்டன. இருப்பினும் மனம்தளராமல் திரைத்துறையில் காலூன்ற பல முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.

தெலுங்குப் பட முதலாளியொருவர் தமிழ்ப்படம் எடுக்க முன்வந்ததோடு, கதை, வசனம் எழுதும் பொறுப்பை புதுமைப்பித்தனிடம் கொடுத் தார். "காமவல்லி' என்னும் அப்படம் வெளிவந்து, கதை, வசன கர்த்தாவாக புதுமைப்பித்தனின் பெயர் திரையில் மின்னியது. ஆனால் படம் படுதோல்வியடைந்தது. இப்படத்தின் கதாநாயகியான கிருஷ்ணவேணி எனும் தெலுங்கு நடிகை, புதுமைப்பித்தனின் வசனங்களைப் படுகொலை செய்துவிட்டிருந்தார். "கதாநாயகியை ஊமையாகப் படைத்திருந்தால் என் தமிழ் பிழைத்திருக்கும்' என நண்பர்களிடம் வருந்தினாராம் புதுமைப்பித்தன்.

 புதுமைப்பித்தன் திரைத்துறையில் ஈடுபட்டிருந்த காலத்தில் கையில் கொஞ்சம் காசுபுரள ஆரம்பித்ததும், சொந்தப் படம் எடுக்கவேண்டும் என்கிற எண்ணம் அவருள் ஏற்பட்டது. குற்றாலக் குறவஞ்சியை அடிப்படையாகக் கொண்டு, "வசந்தவல்லி' எனும் திரைப்படத்தைத் தயாரிக்கப் போவதாகப் பத்திரிகைகளில் விளம்பரம் வந்தது. கையிலே இருந்த பணம் வெகுவேகமாக கரைய ஆரம்பிக்க, சொந்தப் படமெடுக்க நினைத்த அவரின் கனவு நிஜமாகாமல் பாதியிலேயே கலைந்து போய்விட்டது. 
அதேபோல், "மணிக்கொடி'யை மிஞ்சும் விதத்தில், "சோதனை' எனும் இலக்கிய இதழை நடத்தவும், அதில் பல்வேறு இலக்கியச் சோதனைகளை செய்துபார்க்கவும், அதன்மூலம் தமிழிலக்கியத்தை உலகத்தரத்திற்கு உயர்த்தவும் திட்டமிட்டார். அதுவும் நிராசை யானது. ஒருவேளை புதுமைப்பித்தனின் இவ்விரு கனவுகளும் நிறைவேறியிருந்தால், தமிழலக்கிய உலகத்தில் எத்தனையோ அற்புதங்கள் நடந்திருக்கும்.

1947-ன் பிற்பகுதியில் எம்.கே. தியாகராஜ பாகவதர்- பானுமதி நடித்த "ராஜமுக்தி' படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுவதற்காக புனே நகரத்திற்குச் சென்றார். 
அங்கிருந்த காலத்தில் காசநோய் அவரைத் தொற்றிக்கொள்ள மே 5, 1948-ல் அவர் திருவனந்தபுரத்திற்கு திரும்பினார். பாத்திர சிருஷ்டியிலும், கதைசொல்லும் பாணியிலும் கைதேர்ந்த புதுமைப்பித்தன் தனது அகண்ட மேதாவிலாசத்தை நன்கு புலப்படுத்தக்கூடிய ஒரு நாவலை எழுதாமல் போய்விட்டாரே என்கிற வருத்தம் பல எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் உண்டு. தனது இருபது வருட இலக்கியப் பணியில் ஒரு நாவல் எழுதவேண்டும் என்கிற ஆசையும், ஆர்வமும் அவருக்கு இல்லாமற் போகவில்லை.
 1944-ஆம் வருடம் வரையிலும் நாவல் எழுதுவதற்கான சூழ்நிலை அவருக்கு கிட்டாமலேயே போய்விட்டது. 
வாழ்க்கைத் தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டு சினிமாத்துறையில் புகுந்த பின்னரும் அவருக்கு போதிய கால அவகாசம் கிட்டவில்லை. எனினும், தனது அந்திமக் காலத்தில் "அன்னை இட்ட தீ' என்கிற நாவலை அவர் எழுத முனைந்தார். தேசிய வளமும், சிந்தனையாழமும், அற்புதமான கதாபாத்திரங்களும் நிறைந்த தலைசிறந்த அரசியல் நாவலாக அதனை எழுதி முடிக்கவேண்டுமென்பது அவரது திட்டம். அந்த நாவலின் நூறு பக்கங்களை எழுதி முடிப்பதற்குள்ளாகவே, பல்வேறு வாழ்க்கைத் தொல்லைகள் அவரது கையையும், கருத்தையும், வேறுவகையில் செயலாற்றச் செய்துவிட்டன. அதன்பிறகு அவர் காலமாகும் வரையிலும் அந்த நாவல் எழுதி முடிக்கப் பெறாமல் தொட்டகுறைப் பிறவியாக அபூர்ணமாகவே நின்றுவிட்டது.

திருவனந்தபுரத்தில் புதுமைப்பித்தன் தனது அந்திமக் காலத்தை கழித்து வந்த நாட்களில் அவருக்கு உற்ற துணையாக இருந்தவர் கலாரசிகர் எஸ். சிதம்பரம். சமீபத்தில் காலஞ்சென்ற மூத்த இலக்கியகர்த்தா தி.க.சி.யின் கல்லூரித் தோழரான இவர், "கவிக்குயில்' என்ற பெயரில் இரு இலக்கிய மலர்த் தொகுதிகளைப் பதிப்பித்து வெளியிட்டவர். புதுமைப்பித்தன் அந்திம காலம் குறித்த தன்னுடைய கட்டுரையொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"காசநோய்க்கு இரையாகி மரணப்படுக்கையில் படுத்துக் கிடந்த புதுமைப்பித்தனிடமிருந்து எனக்கு ஒரு குறிப்பு வந்தது. "ஒளி அணைந்து வருகிறது. நீ வந்தால் ஒருவேளை தூண்டிவிடுவாய். கொஞ்ச நேரமாவது வெளிச்சமாக இருக்கும். வா...'’  இந்தக் கடிதம் என் நெஞ்சை என்னவோ செய்தது. அவசரமாக ஓடினேன். 
புதுமைப்பித்தன் படுக்கையில் மூடிப் புதைத்துக்கொண்டு படுத்திருந்தார். என்னைக் கண்டதும், "வாடா.. ராசா! தமிழுலக இலக்கிய மேதை கிடக்கிற கிடையைப் பார்த்தியா?' என்றார். நான் ஒன்றுமே சொல்லாமல் நின்றேன். "எத்தனையோ பேர் செத்தவங்களுக்குக் கோபுரம் கட்டறாங்க பாரு, ஒத்தனாவது சாகிறவனுக்கு ஒத்தாசை பண்ண வாரானுகளா? ராசா.. நீயாவது என் பக்கத்திலே இருக்கீயே ! செய்யணும்கிறதைச் சாகிறதுக்கு முன்னாலேயே செஞ்சுப்புடு' என்றார் அவர். பிறகு இருமல். இருமலால் அவரது உடல் முழுவதும் பஞ்சாகப் பதறியது.

 "ராசா.. நான் செத்துப் போனால் நீ என்ன செய்வே? என்ன செய்யமுடியும்? ஒரு கட்டுரை எழுதுவாய். புதுமைப்பித்தனின் அந்திம நாட்களில் உடனிருந்தவன் நான் என உனக்கு விளம்பரம் செய்துகொள்ளலாம். நான் உயிரோடிருக்கும்போதே உன்னைத் தமிழுலகு அறியவேணும். தெரிய வைக்கணும் என விரும்பினேன். 
சமயம் போதாது. முடிவு நெருங்கிவிட்டது..' பிறகு மீண்டும் இருமல். "மணியார்டர் வந்தால் எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்? நான் இப்போ மணியார்டரைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன். தெரியவில்லையா? சாவைத் தானப்பா மணியார்டரை எதிர் பார்ப்பதுபோல எதிர்பார்த்திருக்கிறேன்' என்றார்.

பின்னர் தனது பாட்டரி லைட்டை என்னிடம் கொடுத்து அதற்குப் பாட்டரி போட்டுக் கொண்டு வரச் சொன்னார். பாட்டரியைத் தூக்கி கையில் கொடுத்துவிட்டு, ‘"எழுத்தாளனுக்கே ஒளி பேரில்தான் ஆசை போலிருக்கு. நான் போகிற பாதையெல்லாம் வெளிச்சமாக்க விரும்பினேன். இப்போ இருட்டிலே நடக்க ஒளியை விரும்புகிறேன்', என்று கூறி பெருமூச்செறிந்தார்...'

ஜூன் 30, 1948-ல் புதுமைப்பித்தன் இயற்கை எய்தினார். அவர் வாழ்ந்த காலம் 42 ஆண்டுகளும், 2 மாதமும், 5 நாட்களும் ஆகும். புதுமைப்பித்தன் பிறந்து 108 ஆண்டுகள் ஆகிவிட்டன; மறைந்து 66 ஆண்டுகளாகின்றன. காலங்கள் பல ஓடி காற்றில் கரைந்திருக்கலாம்; ஆனால் தனது படைப்புகளில் அவர் விட்டுச்சென்றிருக்கிற ஒளி தமிழலக்கியம் உள்ள வரையில் வெளிச்சம் வீசிக்கொண்டிருக்கும்.

நன்றி:இனிய உதயம்
===============================================================================================
 சேம்பங்கீரை

இந்தியாவில் 10 ல் 3 பேர்கள் , மூலநோயால் அவதிப்பட்டு தாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
மூலநோயை பொறுத்தவரை, அலோபதி மருந்துகள், அதிகம் பலன் தருவதில்லை.
 ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனைப் படி அறுவை சிகிச்சை செய்தாலும் மீண்டும் வரக் கூடிய நிலை உள்ளது.
மூல நோய்க்கு ஓமியோபதி மருந்துகள் நல்ல குணத்தை தரும்.குணமானபின்னர்  மீண்டும் வராமலும் தடுக்கும்.
இயற்கையாக கிடைக்கும், மூலிகை மருந்துகள், மூலத்தை கட்டுப்படுத்துகின்றன.
இதில், சேப்பங்கீரை,கருணைக் கிழங்கு லேகியம் ,கடுக்காய் லேகியம் போன்றவை மூலநோயை குணப்படுத்தும் தன்மை உள்ளது.
இதில் சே ப்பங்க்கீரை  மூல நோயை கட்டுப்படுத்தும், அரிய மூலிகையாக பயன்படுகிறது.
சேப்பங்கிழங்கு இந்தியா முழுவதும் மருந்திற்காகவும், உணவிற்காகவும் பயிரிடப்படுகிறது. சேப்பங்கிழங்கில் இருந்து உற்பத்தியாகும் கீரையும் உணவுக்கு பயன்படுகிறது.
பொதுவாக நாம், கிழங்கை உபயோகப்படுத்தும் அளவிற்கு கீரையை பயன்படுத்துவதில்லை.
சேப்பங்கிழங்கின் இளந்தண்டுகளும், உணவாக சமைக்கப்படுகிறது. இதில், இளந்தளிரே உண்பதற்கு ஏற்றதாகும். சமைக்கும் போது, சிறிதளவு சோடா உப்பு சேர்க்க வேண்டும். தண்டுகளை சமைக்கும் போது, சிறிது புளி, எலுமிச்சை சாறு சேர்த்து சமைக்கவேண்டும். இதனால் காரல் தன்மை நீங்கும்.

சேம்பில் வைட்டமின், புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்துகள் உள்ளன. மேலும் கால்சியம், ஆக்ஸாலிக் அமிலம், மணிச்சத்து, இரும்புச்சத்துகளும் உள்ளன. உயிர்சத்துக்களில் வைட்டமின் ஏ, சி12 தையாமின், ரிபோப்ளோவின், நிக்கோடினிக் அமிலம் ஆகியவை உள்ளன.
மூ ல நோய்க்கு மட்டுமல்ல.காயங்களை ஆற்றும் தன்மையுடைய
சேம்பங்கீரை சிறந்த மூலிகையாகவும் செயல்படுகிறது.
இது பலவித நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. இந்த இலையில் சாற்றை வெட்டுக்காயங்களில் பூசினால், விரைவில் காயங்கள் ஆறும். தசைநார்கள் வேகமாக வளரும்.
 இலையின் சாற்றினை ரத்தம் சொட்டும் காயங்களின் மீது பூசினால் ரத்தம் வடிவது நிற்கும். மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலிக்கு இதன் சாற்றைக் கொடுத்தால் வலி நீங்கி நிவாரணம் கிடைக்கும்.
கீரையையும், தண்டையும், வேகவைத்த நீரில், நெய் கலந்து கொடுக்க, வயிற்றுவலி குணமாகும்.
காதுவலி, காதில் சீல் வடிதல், போன்றவற்றிக்கு, கீரை சாற்றினை, இரண்டொரு துளி விடலாம்.
இதனால் வலி நீங்கும். குளவி, வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில், இக்கீரையின் சாற்றைப் பூசினால், நஞ்சு இறங்கி வேதனை நீங்கும்.


 சேம்புக்கீரையுடன் புளி சேர்த்து சமைத்து உண்ண வெளித்தள்ளிய மூலமும், ரத்தக்கடுப்பும் நீங்கும்.
இந்த கீரையை சமையலில் சேர்த்துக்கொள்ள, மேக சாந்தி குணமடையும். மேலும் மூலவாய்வு, மூலச்சூடு, ரத்த மூலம், மூளை மூலம் இவைகள் நீங்கும். ஆண்மை குறை உள்ளவர்கள், சேப்பங்கீரை இலைச்சாற்றை உண்டு வந்தால், உயிரணுக்கள் அதிகரித்து அக்குறை நீங்கும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?