ஆண்ட்ராய்ட் - 6.0 எம்.

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் புதிய பதிப்பு வெளியிடப்படும்போதெல்லாம் எதிர்பார்ப்பும், அதன் புதிய வசதிகளை அறிந்து கொள்ளும் ஆர்வமும் பயனாளர்களிடையே அதிகரிக்கிறது.
சென்ற ஆண்டில் வெளியான ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பதிப்பு இன்னும் பெரும்பாலான மக்களை சென்றடையாத நிலையில் அடுத்த பதிப்பு குறித்த அறிவிப்பை கூகுளின் ஆண்ட்ராய்ட் மேம்படுத்தல் பிரிவு வெளியிட்டுள்ளது.
தற்போது ஆண்ட்ராய்ட் 6.0 எம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 
ஆங்கில எழுத்து வரிசையில் தொடர்ந்து திண்பண்டங்களின் பெயர்களை ஒவ்வொரு பதிப்பிற்கும் சூட்டி வரும் கூகுள், அடுத்த பதிப்பிற்கு எம் எழுத்தில் தொடங்கும்படியான பெயரை சூட்ட வேண்டும். 
அப்பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.தற்போது அப்பதிப்பில் செய்யப்படவுள்ள புதிய மாற்றங்கள், மேம்படுத்தல்கள் பற்றிய அறிவிப்பை கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் துணைத் தலைவர் டேவிட் புர்க் வெளியிட்டார்.“ஆண்ட்ராய்ட் - எம் மேலும் ஸ்மார்ட்டாகவும், பயனரைக் கவரும் விதத்திலும் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதில் மேம்படுத்தப்பட்டு வரும் புதிய வசதிகள் பற்றியும் அவர் விளக்கிக் கூறினார்.
புதிய வசதிகள்ஆண்ட்ராய்டு எம் இயங்குதளத்தில் அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் முறை அதிகளவில் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், குறிப்பிட்ட செயலியை தங்களுக்கு ஏற்றவாறு பயனர் பயன்படுத்த முடியும்.
அனுமதியின்றி எந்தச் செயலியும் பயனர் விபரங்களை எடுத்துக் கொள்ள முடியாதபடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.செயலிகளை எளிதாக ஹோம் ஸ்கீரினிலிருந்தபடியே அன் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
ஐ-போன்களில் இருக்கும் டச் ஐடி போன்று இப்பதிப்பில் கைரேகை ஸ்கேனர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இது பயனருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும். பாஸ்வேர்ட் லாக் வசதிக்கு மாற்றாக இந்த வசதி நல்ல பயனளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி பயனரின் அனுமதியின்றி செயலிகளை பயன்படுத்த முடியாத வகையில் தடை செய்யலாம்.
கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு பே என்ற பணப்பரிவர்த்தனை முறையானது பயனருக்கு என்எஃப்சி மூலம் பணம் செலுத்தும் வசதியை அளிக்கிறது.ஆண்ட்ராய்டு போன்களின் பேட்டரி நேரத்தை அதிகரிக்கும் வகையில் டோஸ் என்ற தனித்துவமான வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேட்டரி திறன் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு எம் இயங்குதளத்தில் யுஎஸ்பி டைப் சி என்ற புதிய வகை சார்ஜிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் உங்களது கருவியை சார்ஜ் செய்ய வேண்டுமா அல்லது மற்ற கருவிகளுக்கு சார்ஜ் செய்ய வேண்டுமா என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
குரோம் டேப் என்ற ஒரு வசதி சேர்க்கப்பட்டுள்ளது. 
எந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் அதில் காட்டப்படும் இணைப்பை கிளிக் செய்யும்போது அந்த அப்ளிகேஷன் விண்டோவிலேயே குரோம் பிரௌசர் திறக்கும்படியாக வசதி செய்யப்பட்டுள்ளது. 
அப்படி வழங்கப்படும் இணைப்பு சரியானதுதானா என்று பரிசோதித்துப் பிறகு திறக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. இது கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த வசதி ஆன்-லைன் மூலம் படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மின்னஞ்சல், வாட்ஸ் அப் போன்றவற்றை பயன்படுத்தும்போது கூகுள் நவ் எனப்படும் குரல் வழி உள்ளீட்டு வசதியைப் பயன்படுத்தி தகவல்களைத் தேடிப் பெறலாம்.
மேலும், இவ்வசதியின் மூலம் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரடி பதிவுகளை இடுவதும் எளிதாக்கப்பட்டுள்ளது.
மொபைல் டேட்டாவை பிற ஃபோன்கள் மற்றும் லேப்டாப்புக்கு ஒய்-பீ மூலம் பகிரும் வசதியான டீத்தரிங் வசதி தற்போதுள்ள 2.4 கிகா ஹெர்ட்ஸ் அளவிலிருந்து இருமடங்காக சுமார் 5 கிகாஹெர்ட்ஸ் அளவில் சிக்னல்களை வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. 
போனை மாற்றும்போதோ ஏதேனும் காரணங்களுக்காகவோ அனைத்து தகவல்கள் மற்றும் அப்ளிகேஷன்களை பேக்கப் செய்ய வேண்டியிருந்தால் சிரமப்பட வேண்டியதில்லை.
 ஒரே கிளிக்கில் அனைத்தையும் எளிதாக பேக்கப் செய்யும் வசதி இதில் உள்ளது.
கூகுள் டிரைவிற்கு தானியங்கியாக பேக்கப் செய்து கொள்ளும்படியாக ஆட்டோ பேக்கப் வசதியும் கூடுதலாக தரப்பட்டுள்ளது.
படிக்கும் டெக்ஸ்ட்டின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்வு செய்வது தற்போது சற்றே கடினமானதாக உள்ளது. 
புதிய பதிப்பில் எளிதாக வார்த்தைகளை தேர்வு செய்யவும், தேர்வு செய்யப்பட்ட வாக்கியத்தை காப்பி, கட், பேஸ்ட் செய்ய அதற்கான பட்டன்கள் காட்டும்படியாக இவ்வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
 ஒரு அப்ளிகேஷனிலிருந்து மற்றொரு அப்ளிகேஷனிற்கு கொண்டு சென்று பேஸ்ட் செய்வதும் எளிதாகியுள்ளது.
வால்யூம் கண்ட்ரோலரில் சிறு மாற்றம் செய்யப்பட்டு போனின் ஒலி, இசை ஒலி, அலாரம் ஒலி ஆகியவை தனித்தனியாக மாற்றியமைத்துக் கொள்ளும் வகையில் எளிதாக்கப்பட்டுள்ளது.

-எம். கண்ணன், என். ராஜேந்திரன்
========================================================================
இன்று,
ஜூன்-03.
  • திமுக தலைவர் கருணாநிதி 
  • பிறந்த தினம்(1924)
  • நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது(1965)

  • மொண்டெனேகுரோ நாடு, செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது(2006)
  • அறிவியலாளர் வில்லியம் ஹார்வி இறந்த தினம்(1657)
========================================================================

தனியார்மயக்  கோரம்



கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கான மத்திய, மாநில அரசுகளின் ஒதுக்கீடு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகிறது. 
தவிர்க்க முடியாத இந்தத் துறைகளின் சேவைகளுக்கு மக்கள் முற்றாக தனியார் துறையையே சார்ந் திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
முக்கியமான இந்த துறைகளில் தனியார்மயத் தின் கோர விளைவுகள் அன்றாட வாழ்வில் வெளிப்பட்டு வருகிறது. கல்வி என்பது குறிப்பாக உயர் கல்வி என்பது காசு உள்ளவர்களுக்கு மட்டுமே என்ற நிலை உருவாக்கப்படுகிறது.
அதேபோன்று மருத்துவ சேவைக்கும் மக்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளை அணுக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இந்த மருத்துவமனைகள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களை கவர்ந்திழுக் கின்றன. குறைந்தபட்ச தொழில்நெறிகளைக் கூட இந்த மருத்துவமனைகள் பின்பற்றுவதில்லை.
 நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது என்ற நிலையிலிருந்து மாறி அவர்களைக் கொள்ளையடிக்க ஏமாற்று வித்தைகளில் ஈடுபடும் போக்கு அதிகரித்துள்ளது.
 சென்னை அமுதாவின் மரணம் தனியார் மருத்துவமனைகளின் லாப வெறிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். உடல் எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரிடம் மருத்துவர்கள் கூற அதை நம்பி அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் தனது உயிரை இழந்துள்ளார்.
ஏமாற்றி பணம் பறிப்பது மட்டுமல்லஎந்த அளவுக்கு நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிப்பதில் இன்றைய தனியார் மருத்துவமனை கள் அலட்சியமாக நடந்து கொள்கின்றன என்பதன் சாட்சியமாகவும் அமுதாவின் மரணம் அமைந்துள்ளது. 
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத் தைச் சேர்ந்த சாரதா என்ற பெண்ணும் மரண மடைந்துள்ளார். 
நெல்லையில் ஒரு மருத்துவமனையில் இவருக்கு உடல் பருமனைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவரது குடும்பத்தினர் எட்டு லட்சத்திற்கும் மேல்செலவழித்துள்ளனர். 

எனினும் மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சை காரணமாக சாரதா உயிரிழந்துள்ளார்.
மருத்துவத்தொழிலை மக்கள் புனிதமாக கருதுகின்றனர். சில மருத்துவர்கள் உண்மையில் இந்தப் பணியை உயிர்காக்கும் உயரிய நோக்கத்தோடு செய்து வருகின்றனர் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. 
ஆனால் தனியார்மய உலகம் அனைத்தையும் ஈவிரக்கமற்றதாக மாற்றிவருவதன் வெளிப்பாடுதான் அமுதா, சாரதா போன்ற பெண்களின் மரணமாகும்.இது ஒருபுறமிருக்க அழகு என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்கள் மோசடித்தனமானவை.
 உடல் மெலிய, கருப்பு நிறம் மாற, பருக்கள் மாற, நீண்ட கூந்தல் வளர, மொட்டைத் தலையில் முடி வளர என செய்யப்படும் பல்வேறு விளம்பரங்கள் மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவதாகவே உள்ளன.
சில மருத்துவமனைகள் கொள்ளைக் கூடாரங்களாக மாற்றப்பட்டுவருவது குறித்தோ, விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றவது குறித்தோ அரசிடம் எவ்விதக் கண்காணிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. 

மோசடி விளம்பரங்களைத் தடுக்கவும், லாப வெறி மருத்துவமனைகளைக் கண்காணிக்கவும் பொருத்தமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
 மக்கள் உயிரோடும், உணர்வோடும் விளையாட யாரையும் அனுமதிக்கக்கூடாது.
========================================================================

நூடுல்ஸாகும் பச்சன்.

பன்னாட்டு நிறுவனமான, 'நெஸ்லே இந்தியா'வின் பிரபல தயாரிப்பான, 'மேகி நுாடுல்ஸ்'சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக அலுமினியம் கலந்து உள்ளது என, டில்லி உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.நெஸ்லே வுக்கு இது போன்ற முறைகேடுகள் புதிதல்ல.
முன்பு எடை குறைவாகவே பாக்கெட்டுகளில் தனது தயாரிப்புகளை விற்றது கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டது.

மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும், அந்த உணவு பண்டம், சாப்பிட பாதுகாப்பற்றது எனவும், டில்லி ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன. 
இதையடுத்து, பல மாநிலங்களில் மேகி நுாடுல்ஸ் உணவு பாக்கெட்டுகள், கடைகளில் ஷோகேஸ்களில் இருந்து இறக்கப்படுகின்றன.பீகாரில், 'மேகி' நுாடுல்ஸ்சை வாங்கி சாப்பிட்ட வழக்கறிஞர் ஒருவருக்கு உடல் நலமில்லாமல் போனதை அடுத்து, மேகி நுாடுல்ஸ்சை தயாரிக்கும், 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்தின் அதிகாரிகள் இருவர், அதன் விளம்பர படத்தில் நடித்த, நடிகர்கள்  அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா மீது வழக்கு பதிவு செய்ய, பீகார் மாநிலத்தின், முசாபர்பூர் மாவட்ட கோர்ட், போலீசுக்கு நேற்று உத்தரவிட்டது.
மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி, தேவைப்பட்டால், இந்த ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேகி நுாடுல்ஸ் உணவு பண்டத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக, எம்.எஸ்.ஜி., எனப்படும், 'மோனோ சோடியம் குளுடமேட்' என்ற ரசாயனம் இருந்தது, உ.பி.,யில் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம், அதன் விளம்பர படங்களில் நடித்த பாலிவுட் நட்சத்திரங்கள் மூவர் மீது எந்த நேரமும் நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கப்படும் நிலையில், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது, 
தங்களை நம்பும் ரசிகர்கள்,மக்களை கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு நடித்து ஏமாற்றும் இந்த நடிகர்கள் ,நடிகைகளை கண்டிப்பாக ,கடுமையாக தண்டித்தாலே இது போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பன்னாட்டு தயாரிப்புகளை கட்டுப்படுத்த முடியும்.
அமிதாப்பும் ,தீட்சித்தும் ஓராண்டு இந்த கேடு கெட்ட நூடுல்ஸை சாப்பிட உத்திரவிட வேண்டும் .
========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?