இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 28 அக்டோபர், 2015

ஆன்லைனில் ஆபத்து[ மருந்து ] விற்பனை
 மருந்துகளையும் ஆன்லைனில் விற்பதற்கு அனுமதியளிக்க முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. விரைவில் ஆன்லைன் மருந்துக்கடைகள் முளைக்க இருக்கின்றன. ஆனால், ‘‘இது தேசத்தை ஆபத்தில் தள்ளிவிடும். மக்களின் உயிரோடு விளையாடும் முயற்சி இது’’ என்று எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
‘‘இந்தியாவில் 7.25 லட்சம் மருந்துக்கடைகள் இருக்கின்றன. 75 ஆயிரம் மொத்த விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். 
ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் நடக்கிறது. இந்த வணிகத்தை மொத்தமாக பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதற்காகவே  ஆன்லைன் பார்மசிகளை அனுமதிக்கப் பார்க்கிறது மத்திய அரசு...’’ என்பது மருந்து வணிகர் சங்கங்களின் குற்றச்சாட்டு. 
அரசின் முடிவைக் கண்டித்து கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் எனக் களமிறங்கியிருக்கின்றன அந்த அமைப்புகள்.


‘‘எலெக்ட்ரானிக் பொருட்கள், ஆடைகளை ஆன்லைனில் விற்பதற்கும், மருந்துப் பொருட்களை விற்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. 
மருந்து வணிகம் மிகவும் கட்டுக்கோப்பானது. விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மாத்திரைக்கும் ஒரு நீண்ட வரலாறை மருந்தகங்கள் பராமரிக்கின்றன. குறிப்பிட்ட நாளில் விற்ற ஒரு மாத்திரையில் பிரச்னை இருப்பதாகக் கருதினால், அதைத் தயாரித்த கம்பெனி, தயாரித்து பேக் செய்யப்பட்ட நாள், அதன் டிஸ்ட்ரிபியூட்டர், மருந்தகத்திற்கு வந்த நாள், விற்ற நாள், வாங்கிய நபர் உள்பட அத்தனை தகவல்களையும் சில நிமிடங்களில் எடுத்து விடலாம்.  மருந்தில் பல வகைகள் உண்டு.

 ‘ஓவர் த கவுன்ட்டர்’ பிரிவில் வரும் மருந்துகளை பெட்டிக்கடைகளில் கூட வைத்து விற்கிறார்கள். சில மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே தர வேண்டும். சைக்கியாட்ரிக் நோய்களுக்கான மாத்திரைகளில் போதை தரக்கூடிய சில ரசாயனங்கள் உண்டு. 
மருத்துவரின் சீட்டு இருந்தால் மட்டுமே அந்த மாத்திரைகளை விற்க வேண்டும். தவறாகக் கொடுத்து விட்டாலோ, காலாவதியான மாத்திரைகளைத் தந்து விட்டாலோ பல விளைவுகள் ஏற்படும்.

இவ்வளவு பொறுப்புகள் நிறைந்த மருந்து விற்பனையை ஆன்லைனில் கொண்டு வருவது நிச்சயம் எதிர்பாராத பாதிப்புகளை உருவாக்கிவிடும். இதில் இரண்டு விதமான பாதிப்புகள் உண்டு. 
ஒன்று மக்களுக்கானது, மற்றொன்று மருந்து வணிகர்களுக்கானது. 
‘மருத்துவர் தரும் மருந்துச் சீட்டை ஸ்கேன் செய்து ஆர்டர் செய்தால், ஆன்லைன் பார்மசி மருந்தை வீட்டுக்கே அனுப்பும்’ என்கிறார்கள்.

மருத்துவர்கள் எழுதும் மருந்துச்சீட்டை பழக்கப்பட்ட நபர்களால் மட்டுமே படித்துப் புரிந்துகொள்ள முடியும். அடுத்த தெருவில் இருக்கும் மருந்தகங்களுக்குச் சென்றாலே, நன்கு விசாரித்தபிறகுதான் ‘இந்த மருந்து’ என்று முடிவு செய்வார்கள். 
ஆன்லைனில் அனுப்பும் மருந்துச்சீட்டை ஆன்லைன் பார்மசியில் இருப்பவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்பது முதல் நடைமுறைச் சிக்கல்.

பெரும்பாலான மக்களுக்கு மருந்தைப் பற்றி எதுவும் தெரியாது. மருத்துவர்கள் எழுதும் மருந்தை பார்மசியில் உள்ளவர்கள் சரியாகத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் வாங்கிச் சாப்பிடுபவர்களே அதிகம்.

ஒருவேளை மருந்து ஒவ்வாமை ஏற்படுத்தினாலோ, காலாவதி ஆகியிருந்தாலோ, தவறாகத் தந்துவிட்டாலோ உடனடியாக சம்பந்தப்பட்ட மருந்தகத்துக்கு வந்து கேட்பார்கள். ஆன்லைன் பார்மசியில் அதற்கான வாய்ப்பு இல்லை. 
ஆன்லைன் பார்மசியின் அலுவலகம் இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பொறுப்பேற்கச் செய்வது எளிதில்லை.

ஏற்கனவே ஆன்லைன் வணிகத்தில் ஏகப்பட்ட மோசடிகள் நடக்கின்றன. மொபைல் போன் வாங்க பணம் கட்டினால் செங்கல் வருகிறது. தவறு செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு நம்மிடம் தொழில்நுட்பமும் இல்லை. 
கட்டுப்பாடாக விற்கப்பட வேண்டிய போதை தரும் மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகள் எல்லாம் சர்வசாதாரணமாக ஆன்லைனில் விற்கப்படலாம். அறைக்குள் இருந்தபடியே மாத்திரை வாங்கும் வாய்ப்பு கலாசாரச் சீரழிவை
உருவாக்கலாம்.

அமெரிக்கா, பிரிட்டன், பல்கேரியா ஆகிய நாடுகளில் ஆன்லைன் பார்மசிகள் உள்ளன. அங்கெல்லாம் மிகப்பெரிய ஆன்லைன் டேட்டாபேஸ் இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனியாக நம்பர் தந்திருக்கிறார்கள்.

தவிர, டாக்டர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருந்தாளுனர்கள் அனைவரையும் ஆன்லைனில் இணைத்து ஒரு டேட்டா லிங்க் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். 
மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வந்தால் அவரைப் பற்றிய டேட்டா, அவர் வாங்குகிற மருந்து, வாங்குகிற மருந்தகம், பார்த்த மருத்துவர் வரை அனைத்தும் ஆன்லைனில் பதிவாகிவிடும்.

இத்தனை ஏற்பாடுகள் இருந்தும் கூட அங்கு ஏராளமான பிரச்னைகள் நடக்கின்றன. அமெரிக்காவில் 360 ஆன்லைன் பார்மசிகளை அரசு அங்கீகரித்திருக்கிறது. ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி பார்மசிகள் ஆன்லைனில் இருக்கின்றன. 
வயாக்ராவில் இருந்து, கருக்கலைப்பு மருந்துகள் வரை அனைத்தும் விற்கின்றன.

இந்தியாவில் இப்போதுதான் 10 சதவீதம் பேர் இணையத்தை உபயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ‘டிஜிட்டல் இந்தியா’ என்கிற குரலே இப்போதுதான் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. மருத்துவமனைகள், மருத்துவர்கள் சார்ந்த முழுமையான கணக்கெடுப்புகள் எதுவும் அரசிடம் இல்லை. 
ஆன்லைன் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமையும் நமக்கு இல்லை. இப்படியான சூழலில் ஆன்லைன் பார்மசிகளை அனுமதிப்பது பெரும் பாதகத்தை உருவாக்கும்.

ஆன்லைன் வணிகத்தில் உணவுப்பொருட்களை சேர்த்ததால் ஏற்பட்ட விளைவுகளை இன்றைக்கும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். தொழிலுக்குத் தொடர்பில்லாத பெரு முதலாளிகள் உள்ளே நுழைந்து கோலோச்சத் தொடங்கிவிடுவார்கள். 
ஒரு கட்டத்தில் மருந்துக் கடைகளே இல்லாமல் போய்விடும். 
அவசரகால தேவைக்கான மருந்துக்குக்கூட ஆன்லைன் பார்மசிகளை நாட வேண்டியிருக்கும். கிராமப்புற, அடித்தட்டு மக்களுக்கான மருத்துவத் தேவைகள் நிறைவேறாமல் போய் விடும் அபாயம் உள்ளது’’ என்கிறார் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் செயலாளர் எஸ்.எஸ்.செல்வம்.

‘‘இந்தியாவில் 8 லட்சம் பேர் நேரடியாக பார்மசி தொழிலைச் சார்ந்திருக்கிறார்கள். சுமார் 40 லட்சம் பேர் இந்தத் துறையில் பணியாற்றுகிறார்கள். அவர்களை நம்பி ஒன்றரைக் கோடிப் பேர் இருக்கிறார்கள். வேலைவாய்ப்புகளை உருவாக்கி வாழ்வளிக்க வேண்டிய அரசு இத்தனை பேரின் வாழ்வாதாரத்தைப் பிடுங்கி சாலையில் நிறுத்தப் பார்க்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். 
அரசின் முடிவை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்துவோம்...” என்கிறார் அவர். இந்திய மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கமும் அரசின் முடிவை எதிர்க்கிறது.

‘‘டிரக்ஸ் அண்ட் காஸ்மெடிக்ஸ் சட்டம், மேஜிக் ரெமெடி அண்ட் அப்ஜெக்‌ஷனபிள் அட்வர்டைஸ்மென்ட் ஆக்ட் ஆகிய சட்டங்கள் மருந்து வணிகத்தை கட்டுப்பாடாகவும், தவறில்லாமலும் நடத்த வழிவகை செய்கின்றன. 
இந்த இரண்டு சட்டங்களுக்கும் முரணானது அரசின் முடிவு. ‘
ஷெட்யூல்டு டிரக்ஸ்’ எனப்படும் மிகக் கவனமாகக் கையாளவேண்டிய மருந்துகள் பல இருக்கின்றன.

அவற்றை ஆன்லைனில் விற்பது பெரும் ஆபத்தில் முடியும். தனி நபர்களின் நலனைக் கருதி அரசு முடிவெடுக்கக்கூடாது. ஒட்டுமொத்த மக்களின் உயிர் பிரச்னை இது. 
மிகவும் கவனமாகவும், அக்கறையோடும் நடந்து கொள்ள வேண்டும்...
நடந்து கொள்ளுமா அரசு..?

கட்டுப்பாடாக விற்கப்பட வேண்டிய போதை தரும் மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகள் எல்லாம் சர்வசாதாரணமாக ஆன்லைனில் விற்கப்படலாம்.
                                                                                                                 -வெ.நீலகண்டன்
நன்றி:குங்குமம்.
---                                                    
===================================================================================
இன்று,
அக்டோபர்-29.
  • துருக்கி குடியரசு தினம்(1923)
  • தங்கனிக்கா மற்றும் சன்சிபார் ஆகியவை இணைந்து தான்சானியா குடியரசு உருவானது(1964)
  • கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம், முதல் முறையாக தொடராக வெளிவர ஆரம்பித்தது(1950)

  • சுவிட்சர்லாந்தில் 16 நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைக்க தீர்மானித்தனர்(1863)
நேபாள நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக- நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) சார்பில் போட்டியிட்ட வித்யா தேவி பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அவர், நேபாள நாட்டின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நேபாளத்தில், 2008-ஆம் ஆண்டு மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்டு, மக்களாட்சி நிறுவப்பட்டது. ராம்பரண் யாதவ் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
இந்நிலையில் அண்மையில் நேபாளத்துக்கான புதிய அரசியல் சாசனம் பிரகடனப் படுத்தப்பட்டது. நேபாளம் ‘மதச்சார்பற்ற’ நாடு என அறிவிக்கப்பட்டது. 
புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சர்மா ஒலி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆவார். 
அதைத்தொடர்ந்து, புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழான முதலாவது குடியரசுத் தலைவர் தேர்தல் புதனன்று நடைபெற்றது.

நேபாள காங்கிரஸ் கட்சியின் குல் பகதூர் குருங், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) துணைத் தலைவரான வித்யா தேவி பண்டாரி, நேபாள உழைப்பாளர் மற்றும் விவசாயிகள் கட்சி சார்பில் நாராயண் மகாஜன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) சார்பில் போட்டியிட்ட வித்யாதேவி பண்டாரி வெற்றிபெற்றார். 
மொத்தம் பதிவான 549 வாக்குகளில் வித்யாதேவி பண்டாரி 327 வாக்குகளைப் பெற்று குடியரசுத் தலைவர் ஆனார். 
அவருக்கு அடுத்தபடியாக வந்த நேபாள காங்கிரஸ் கட்சியின் குருங் 214 வாக்குகள் பெற்றார்.
குடியரசுத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட வித்யாதேவி பண் டாரி, நேபாளத்தில் இப்பதவிக்கு வந்த முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார்.

 நவ., 13ல் உலகம் அழியுமா?
பூமிக்கு  வரும் ஆபத்து
விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு மர்மப் பொருள், பூமியை நோக்கி அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இது, நவ., 13ம் தேதி இலங்கைக்கு அருகே விழப் போகிறதாம். இதனால் உலகம் அழியும் என்ற பீதி மீண்டும் கிளம்பியுள்ளது.

விண்வெளியில் இருந்து அடையாளம் தெரியாத 'டபிள்யு.டி.1190எப்' என பெயரிடப்பட்ட ஒரு மர்மப் பொருள் பூமியின் மேற்பரப்பை நோக்கி பறந்து வருவதாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 7 அடி நீளமுள்ள வளையும்தன்மையுடைய அந்த பொருள் விண்வெளியில் உள்ளகுப்பை, விண்கற்கள் அல்லது அப்பல்லோ விண்கலத்தின் ஒரு பாகமாக கூட இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். 

வழக்கமாக விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் பொருட்கள் வரும்வழியிலேயே எரிந்து சாம்பலாகி விடும். ஆனால், இந்த பொருள் எரியாமல் நேரடியாக பூமியின் மேற்பரப்பில் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மர்ம பொருளை 2013ல் கேட்டலினா ஸ்கை சர்வே மூலம் முதன் முதலில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 
இதன் பின் விஞ்ஞானிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது, வரும் நவ., 13ம் தேதி காலை 11.45 மணிக்கு இந்தியப்பெருங்கடலில் இலங்கையின் தென் பகுதியில் 65 கி.மீ., தொலைவில் கடலில் விழும் என கணிக்கப்பட்டுள்ளது. இது சிறிய அளவே இருப்பதால் பாதிப்பு அரிதாகத் தான் இருக்கும். உலகம் அழிய வாய்ப்பு இல்லை. பூமி மூன்று பங்கு கடலால் சூழப்பட்டுள்ளதால், கடலில் எங்கு விழுந்தாலும் பாதிப்பு ஒன்றுமில்லை.


ஏன் கடினம்:விண்வெளியில் சுற்றி வரும் இம்மாதிரியான மர்மப் பொருட்கள் பற்றிய முழுமையான விவரத்தை கண்டறிவது மிகவும் கடினம்.இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம்(நாசா) வெளியிட்டுள்ள அறிக்கையில்,'விண்வெளியில் நுாற்றுக்கணக்கான செயற்கைக் கோள்கள், விண்கலன்கள் ஏவப்பட்டு சுற்றி வருகின்றன. 

இதில், காலாவதியான செயற்கைக்கோள்கள் செயல்பாட்டிலுள்ள செயற்கைக்கோள்களுடன் மோதுதல் உள்ளிட்ட காரணங்களால் விண்வெளி குப்பைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இவை மணிக்கு 28,100 கி.மீ., வேகத்தில் சுற்றி வருகின்றன. அதுவும் 5 லட்சம் பொருட்கள் இந்த மாதிரி விண்வெளியில் உள்ளன. 

செயற்கைக்கோள்கள் ஒன்றோடொன்று மோதுவதை தடுப்பது கடினமான பணியாக உள்ளது. தற்போது விண்வெளி குப்பைகளை சுத்தம் செய்யும் திட்டத்தை தொடங்க உள்ளோம்' என, குறிப்பிட்டுள்ளது.

===================================================================================
மீண்டும் நன்றிகள்!


'சுரன் "பக்கம் வந்து சென்றவர்கள் எண்ணிக்கை 6,00,000 ஆறு லட்சத்தை தாண்டியுள்ளது.


வந்தவர்கள் எல்லோரும் முழுக்கப் படித்தார்கள் என்றோ சுரன் இடுகைகள்  அவர்கள்  மனம் கவர்ந்ததென்றொ தெரியாது.

படித்தவைகளில் பாதித்தவைகள்,கவர்ந்தவைகளையே "சுரன்"பக்கங்களில் தந்துள்ளேன்.
அது மற்றவர்களையும் கவரும்,கவர வேண்டும் என்பது கட்டாயமில்லையே. 


எனினும் வந்து சென்றதற்காக மீண்டும் இதய நன்றிகள்!!

===================================================================================
மக்கள் கவிஞர் வரிசையில் இந்தத் தலைமுறைக் கவிஞர்களில் பவள விழா கொண்டாடிய கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களும் மிக முக்கியமானவர்.
அவர்தம் சமுதாய அக்கறை எப்படிப்பட்டது?
இதோ ஒரு அற்புதமான பேனா நர்த்தனம்!
கவிக்கோ கவிதைகள் என்ற நூல் ஓர் அருமையான கவிதைத் தொகுப்பு - அதில் 10.10.1987 இல் எழுதிய பாருக்குள்ளே நல்ல நாடு என்ற தலைப்பில், ஓர் கவிதை:
                          "அவர்களைச் சிறையில் சந்தித்தேன்.
என்ன குற்றம் செய்தீர்கள்?
என்று கேட்டேன்.
ஒவ்வொருவராகச் சொன்னார்கள்:

எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு
ஒருவன் ஓடினான். திருடன், திருடன்
என்று கத்தினேன். அமைதிக்குப்
பங்கம் விளைவித்ததாக என்னைக்
கைது செய்துவிட்டார்கள்!
என் வருமானத்தைக் கேட்டார்கள்
நான் வேலையில்லாப் பட்டதாரி, என்றேன்.
வருமானத்தை மறைத்ததாக வழக்குப்
போட்டுவிட்டார்கள்.
நான் கரிமூட்டை தூக்கும் கூலி,
கூலியாகக் கிடைத்த ரூபாய் நோட்டு
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது. கறுப்புப்
பணம் வைத்திருந்ததாகக் கைது செய்துவிட்டார்கள்.
என் வயலுக்கு வரப்பெடுத்துக் கொண்டிருந்தேன்
பிரிவினைவாதி என்று பிடித்துக்கொண்டு வந்து
விட்டார்கள்.
அதிகாரி லஞ்சம் வாங்கினான்; தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்
செய்யவிடாமல் தடுத்ததாகத் தண்டித்துவிட்டார்கள்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படச்
சுவரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு
செய்ததாக அழைத்துக்கொண்டு வந்து
விட்டார்கள்
ஊழல் பேர்வழிகளை நாடு கடத்தவேண்டும்
என்று எழுதினேன், கடத்தல்காரன் என்று
கைது செய்துவிட்டார்கள்.
நான் பத்திரிகை ஆசிரியன். தலையங்கத்தில்
உண்மையை எழுதினேன், நாட்டின்
ஸ்திரத் தன்மையைக் குலைத்ததாகக்
கொண்டு வந்துவிட்டார்கள்.
சுதந்திர தின விழாவில் ஜன கண மன பாடிக்
கொண்டிருந்தார்கள். நான் பசியால் சுருண்டு
படுத்துக்கொண்டிருந்தேன். எழுந்து நிற்க
முடியவில்லை. தேசிய கீதத்தை அவமதித்ததாகச்
சிறையில் அடைத்துவிட்டார்கள்.
அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தச்
சொன்னான் கண்ணன் என்று யாரோ கதா
காலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
என் பெயர் கண்ணன். பயங்கரவாதி என்று
என்னைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.
நான் வெளியே வந்தேன்
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும்
இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது.."
======================================================================================