இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 1 நவம்பர், 2015

வீட்டருகே தீர்வு.

நம் வீட்டருகே சாதரணமாக கிடைக்கும் பல பொருட்கள் ,தாவரங்கள் நம் சர்ம பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.
செயற்கையான வாசனைத் திரவியங்கள், வேதியல் பொருட்களைப் போல் அல்லாமல் இவற்றில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை .

வெள்ளரிக்காய்


வெள்ளரி விதை, வெள்ளரிப் பிஞ்சு ஆகியவற்றைச் சருமத்தின் மீது பூசிக்கொள்ளச் சிகப்பழகு பெறுவதுடன் பட்டுப் போன்ற மென்மையும் தரும்.
 இதன் மருத்துவக் குணம் தீப்புண், வெயில் ஆகியவற்றால் ஏற்படும் சரும எரிச்சலைக் குளிரவைக்கும். 
இதன் சாறு உடலைக் குளிரவைப்பதுடன் சருமத்தை அழகுபடுத்தும். சருமத்துக்கு இதமானது என்பதுடன் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். வெப்பக் காற்றுப்பட்டு வறண்டுபோகும் சருமத்தைக் குளிர்விப்பதால்தான், விஷயம் அறிந்த பெண்கள் வெள்ளரி சோப்பைப் பயன்படுத்துகின்றனர்.

கற்றாழை


ஆரோக்கியம், புத்துணர்ச்சி ஆகியவற்றுடன் முதுமையைத் தடுக்கும் ஆற்றலும்கொண்டது கற்றாழை. சருமப் பிரச்னைகளுக்காகவே கற்றாழை பெரும்பாலும் பயன்படுகிறது. 
தோல் அலர்ஜி, அக்கி, அம்மை, அரிப்பு, வெட்டு, சிராய்ப்பு, தீக்காயம் ஆகியவற்றுக்குச் சிறந்த மருந்து கற்றாழை.
கற்றாழையின் தண்டில் சிறப்பான கூட்டுப் பொருட்கள் இருக்கின்றன. இதில் உள்ள வீக்க எதிர்ப்புச் சத்துக்கள் வலியைக் குறைப்பதுடன், தீப்புண், எரிச்சல் மற்றும் அரிப்பைக் குறைக்கின்றன. 
மிக முக்கியமாக இதில் உள்ள முதுமை எதிர்ப்பிகள் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதுடன், சருமத்துக்குப் பட்டுப் போன்ற மென்மை, ஈரத் தன்மை, பாதுகாப்பு, புத்துணர்ச்சி ஆகியவற்றையும் தருகின்றன. கற்றாழை ஜெல் உயிரணுக்கள் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதுடன் சேதமடைந்த சருமத்தையும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருகிறது. 
இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் குளிர்ச்சியைத் தருகிறது.

வல்லாரை

வல்லாரையிலும் முதுமை எதிர்ப்பிகள் அதிகம் இருப்பதால் காஸ்மெடிக்ஸ் தயாரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. 
சீழ்ப்புரை, குழந்தை பிறந்த பிறகு வயிறு சுருங்குவதால் ஏற்படும் கோடுகளையும் தீர்க்கவல்லது. எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை நீக்கிச் சருமத்தைச் சுத்தப்படுத்தி மிருதுவாக வைத்திருக்கும்.

துளசி

ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த மருந்து துளசி. 
குறிப்பாக முகப்பரு, முதுமை, பேன், பொடுகு, பூச்சிக் கடி ஆகியவற்றுக்குச் சிறந்த நிவாரணி. கொசுவை விரட்டும் தன்மை இருப்பதால் கொசு விரட்டிகளில் இது பயன்படுத்துகிறது.

மஞ்சள்

ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன், சருமத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டி, ஆரோக்கியத்துடன் இயற்கையாக ஒளிரவைக்கும். 
வீக்கம், பாக்டீரியா மற்றும் முதுமை எதிர்ப்பிகள் இருப்பதால் முகப்பரு, தடிப்பு, கருந்திட்டுகள் மற்றும் சரும நோய்களுக்கான சிறந்த மருந்தாகும். உலர் சருமத்தை மென்மையாக்கிச் சருமம் விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கிறது.

சந்தனம்

ஆயுர்வேத மருத்துவத்தில் சந்தனத்தின் பயன்பாடு மிக அதிகம். 
அரிப்பு, சிராய்ப்பு, வறட்சி, சொறி, முகப்பரு உள்ளிட்ட பெரும்பாலான சருமப் பிரசினைகளுக்குத் தீர்வாகும். 
வெளிப்புறப் பயன்பாட்டில் எண்ணெய்யாகவும், பேஸ்டாகவும், லோஷனாகவும், சோப்பாகவும் பயன்படுத்தலாம். கடுமையான வெயிலில்கூட உடலைச் சில்லெனக் குளிர்விக்கும்.

வாழைப்பழம்.
எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம் தான் வாழைப்பழம்.இதின் பழத்தை தின்று விட்டு தோலை இனி வீசி எறிய வேண்டாம்.அதை நம் தோல் மீது தடவி வந்தால் தோலுக்கான ஊட்டச்சத்து கிடைக்கும்.
அதுமட்டுமின்றி வாழைப் பழத்தோலை தண்ணீரில் துண்டுகளாக்கிப்போட்டால் தண்ணீரை வாசஹிப்பழத் தோல்கள் நன்னீராக சுத்தமாக சுத்திகரித்து கிருமிகளை அகற்றி விடுவதாக கண்டு பிடித்துள்ளார்கள்.


பல் வலியை சரிசெய்யது, வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது காட்டு ஏலக்காய், வயிற்று கோளாறுகளை நீக்கி, பித்தத்தை சமன்படுத்தும், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்கவல்லது காட்டு ஏலக்காய். 
ஏலத்தின் வகையை சேர்ந்தது காட்டு ஏலம். 
இது உள் உறுப்புகளை தூண்டக்கூடிய மருந்தாகிறது. வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் வலி குறையும். 
வயிறு உப்புசம் சரியாகும். ரத்த ஓட்டம் சீராகும். 

ஏலக்காயை விட பெரியதான காட்டு ஏலக்காய் கருப்பு நிறத்தில் இருக்கும். இதை உடைத்தால்  கிடைக்கும் விதைகள் ஏல அரிசி என்று அழைக்கப்படுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.காட்டு ஏலத்தை பயன்படுத்தி பல் வலிக்கான மருந்து தயாரிக்கலாம். 
கால் ஸ்பூன் காட்டு ஏல அரிசி, 3 லவங்கம் ஆகியவற்றை பொடித்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். 
இதை வடிக்கட்டி, வாய் கொப்பளிப்பதன் மூலம் துர்நாற்றம் போகும். 

ஈறுகளில் ஏற்படும் வீக்கம் குறையும். பல் வலி சரியாகும். 
பல் சம்பந்தமான நோய்கள் சரியாகும். இதில் தேன் சேர்த்து சளி, இருமலுக்கான உள் மருந்தாக பயன்படுத்தலாம். 
இது வயிற்று வலியை போக்கும். வயிற்று புண்களை ஆற்றும். காட்டு ஏலமானது வலி, வீக்கத்தை குறைக்கும் தன்மையை கொண்டது. 
பூஞ்சை காளான்களை போக்கும், நுண்நோய் கிருமிகளை அழிக்கும். வயிற்றில் புண் ஏற்படுவதால், வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். 

காட்டு ஏல அரிசியை பயன்படுத்தி உயர் ரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். காட்டு ஏல அரிசி கால் ஸ்பூன், 4 லவங்கம், ஒரு துண்டு லவங்க பட்டை, அரை ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டுடன் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிக்கவும். இது இதயம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. 
ரத்த அழுத்தம், கொழுப்பு சத்து குறையும். 
ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாது. 
சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டு இல்லாமல் எடுத்துக்கொள்ளலாம். 

இது வயிற்று கோளாறை சரி செய்கிறது. ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதயத்தை ஒழுங்காக செயல்பட வைக்கிறது.  
காட்டு ஏலத்தை பயன்படுத்தி பித்தத்தை சமன்படுத்தி ஈரலுக்கு பலம் தரும் மருந்து தயாரிக்கலாம். 
அரை ஸ்பூன் ஏல அரிசி, அரை ஸ்பூன் சீரகம் ஆகியவற்றில் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம். 
இதனால் தலை சுற்றல், வாந்தி, குமட்டல், பித்தத்தால் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும். காட்டு ஏல அரிசி நாளமில்லா சுரபிகளை தூண்டக்கூடியது. 
பித்த சமனியாக செயல்படுகிறது. 
ஏல அரிசியை வாயில் போட்டு மெல்லுவதால் துர்நாற்றம் போகும்.
                                                                                                                                    -நன்றி:தினகரன்.
===================================================================================
 இன்று,
நவம்பர்-01.
  • கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் ( 1956)
  • அல்ஜீரியா தேசிய தினம்
  • இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன(1956)
  • மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது(1973)
  • நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திர பிரதேச மாநிலமாக்கப்பட்டது(1956)


தமிழ் திரைப்பட உலகின் 

முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்

 நினைவு தினம்.

எளிமையான குடு்ம்பத்தில் பிறந்து தனது கந்தர்வ கானக் குரலால் தமிழகத்தை 40 களில் கட்டிப்போட்டவர். இசையுலகின் பொக்கிஷமாக திகழ்ந்த அவர் மறைந்த தினம் இன்று. 

தங்க நிற உடல் கந்தர்வ குரல் ஆழமான பார்வை இதுதான் எம்.கே.தியாகராஜபாகவதர். நாடக உலகில் இருந்து திரையுலகம் வந்த பாகவதர் தன் குரலால் ஒட்டுமொத்த மக்களைக் கட்டிப்போட்டவர். அவரது ஹரிதாஸ் திரைப்படம் 3 தீபாவளியை கடந்து ஓடியதே அவரது புகழுக்கு சாட்சி.

திரையுலகில் புகழின் உச்சியை தொட்ட பாகவதர், வழக்கு ஒன்றில் சிக்கி அதிலிருந்த மீள முடியாமல் உடல் கெட்டு மனம் கெட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தம் இறுதிநாளில் சர்க்கரை நோயின் தாக்கத்தால் கண்பார்வை பறிபோனது. அதற்கு மேல் சென்னையில் இருக்க முடியாமல் தன் சொந்த ஊருக்கு திரும்பி அங்குள்ள தனது குலதெய்வம் கோவிலில் தங்கி வாழ்ந்தார்.

இந்த நிலையில் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் இறுதிவாரத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நவம்பர் 1 ஆம் தேதி தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார் ஏழிசை மன்னர் பாகவதர். காலம் அவரது நினைவை சிதைத்தாலும் அவரது புகழை சிதைக்க முடியவில்லை. அவரைப்போல் திரையுலகில் புகழின் உச்சத்தை தொட்டவர்கள் எவரும் இல்லை.

புகழின் உச்சத்தில் இருந்தபோது, தென்மாவட்டம் ஒன்றிற்கு ரயில் ஏற வந்த பாகவதரை மக்கள் அடையாளங்கண்டுகொள்ள, அவரை தரிசிக்க வந்த கூட்டத்தால் பாகவதர் 4 மணிநேரம் தாமதமாக சென்றதாக சொல்வார்கள். தனது காருக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த அவரது கையை தொட்டு முத்தமிட சாரிசாரியாக மக்கள் திரண்டுவந்ததை ஆச்சர்யம் பொங்க சொல்வார்கள் அக்காலத்தில்.

தங்கத்தட்டில் உணவருந்திய அந்த ஏந்தல், இறுதிக்காலத்தில் அன்றாட உணவிற்கே அவதிப்பட்டதாக சொல்வார்கள். அந்த வகையில் அவரது வாழ்வு பலருக்கு பாடம்.

                                                                                                                                                                                       -சி.ஆனந்தகுமார்இவன் தந்தை என்நோற்றான் ?

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தையை 7வயது சிறுவன் கடந்த ஒரு வருடமாக பராமரித்து வருவது அனைவரையும் உருகச் செய்துள்ளது.
உலகில் மகனைத்தான் தந்தையர் கவனித்து வருவர். ஆனால், இதற்கு மாறாக, சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குயிஸ்ஹூ மாகாணத்தில், கடந்த ஒரு வருடமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தையை ஒவு யாகலின் என்ற 7 வயது சிறுவன் பராமரித்து வருகிறான். 
ஒவு டோங்மிங் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு இரண்டு மாடி கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்தார். இதில் தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அவர் பக்கவாத நோயால் முடங்கினார். இவருக்கு சிகிச்சை அளித்ததில், சேமித்து வைத்திருந்த பணம் அனைத்தும் செலவானது. இதற்கு மேலும் செலவு செய்ய பணம் இல்லாததால், டோங்மிங்கின் மனைவி, கணவரையும் மகனை விட்டு பிரிந்து சென்றார். 

அன்று முதல் யாகாலின் தான், தனது தந்தையை பராமரித்து வருகிறான். காலை 6 மணிக்கு விழிக்கும் அச்சிறுவன், பள்ளி செல்வதற்கு முன் உணவு தயார் செய்து, அதனை தனது தந்தைக்கு ஊட்டி விடுவான். பள்ளி சென்று திரும்பியதும், மதிய உணவை தயார் செய்து ஊட்டி விடுவான்.
அதன் பின்னர் குப்பை சேகரித்து அதனை பணமாக மாற்றி தனதுகுடும்பத்தின் தேவைக்கும் தந்தை மருத்துவ சிகிச்சைக்கும் செலவு செய்வான்.தனது தந்தையை கவனிக்க வேண்டியுள்ளதாலும், மருந்து போட வேண்டியிருப்பதாலும், யாகாலின் மற்ற சிறுவர்களை போல் விளையாட செல்ல மாட்டான்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட டோங்மிங் முதலில் தற்கொலை செய்ய நினைத்தாலும், தனது மகனின் அன்பை பார்த்தும், தான் இல்லாமல் மகன் வாழ முடியாது என்பதை அறிந்ததும், தனது முடிவை மாற்றிக்கொண்டு வலியை பொறுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். 

=====================================================================================