இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 7 நவம்பர், 2015

கொலை முயற்சியின் ......50 ஆண்டு நினைவு.!உலகறிய நடந்த ஒன்றை நடக்கவேயில்லை என்று மறுப்பதிலும், நடக்காத ஒன்றை - நடந்ததற்கு நானே சான்று என்று வாதிடுவதிலும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார வகை யறாக்களுக்கு இணையானவர்களைத் தேடுதல் கடினம். அண்மைக் காலங் களில் தொலைக்காட்சி விவாதங்களில் இப்படி பொய்யும் புரட்டுமாக எதை யாவது சொல்வதையும், அதை மறுத்துப் பேசுவதற்கான வாய்ப்பை கத்திக் கத்தி மறுப்பதுமாக விவாதத்தை முடித்துவிடுவதையும் மக்கள் பார்த்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.
கோட்சேவைத் தியாகி என்பார்கள். சாவர்க்கருக்கு நாடாளுமன்றத்தில் படம் வைப்பார்கள். 
ஆனால் காந்தியாரைத் திட்டமிட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். என்பதை எப்போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்; அது வேறு அமைப்பு என்பார்கள். 
இந்து மகா சபா என்று எடுத்துச் சொன்னா லும், அதே அமைப்பைச் சேர்ந்த மண்ணுருண்டை மாளவியாவுக்கு பாரத ரத்னா கொடுப்பார்கள்.
நாடு முழுக்க இவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டங்களையும், பயங்கரவாத செயல்களையும், தனிநபர் படுகொலை முயற்சிகளையும் ஆதாரத்துடன் எடுத்துச் சொன்னாலும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அம்பேத்கருக்கு விஷம் வைத்துக் கொல்லச் சொன்ன கூட்டம் அம்பேத்கர் எங்களைப் பாராட்டினார் என்று புளுகும். 
அம்பேத்கரின் படத்தைக் கூசாமல் போட்டுக் கொண்டு அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடி தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவைத் தேடும். காந்தியாரைக் கொன்றுவிட்டு, அவர் ஆர்.எஸ். எஸ்.சைப் பற்றி வானளாவப் புகழ்ந் தார் அன்று அண்டப் புளுகை அவிழ்த்துவிடும்.
 தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோதே எம்.ஜி.ஆரை டில்லியில் அடிக்கப் பாயும். ஆனால், அதே காலகடட்த்தில் அ.தி.மு.க.வி லிருந்தே ஒரு கும்பலைப் பிடித்து, அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளராக இருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது தாக்குதல் நடத்தும்.
காமராஜரைக் கொல்ல அவர் வீட்டுக்குத் தீ வைத்துவிட்டு, அவர் படத்தைப் போட்டுக் கொண்டே தென்மாவட்டங்களில் ஆதரவு தேடும்.
 ஆனால், பச்சைத் தமிழர் காமராஜரைப் பட்டப் பகலில் கொல்லத் துணிந்த கும்பல் அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்று நம் கண்களை மூடச் சொல்லும். இது ஏதோ 'ச்சும்மா' சொல்லப்படும் குற்றச்சாட்டல்ல. இது அவர்களின் வழமை.
அதற்கு அண்மையில் ஓர் எடுத்துக்காட்டு - மக்கள் தொலைக் காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சி. சகிப்பின்மை தொடர்பான அவ் விவாதத்தில் பசுவதைக்குத் தடை வேண்டும் என்ற பெயரில் காம ராஜரைக் கொல்ல நடந்த சதியைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார் த.மு.மு. க.வைச் சேர்ந்த பேராசிரியர் ஹாஜா கனி. அப்படியொன்று நடக்கவே யில்லை என்று ஒரே அடியாக மறுத்திருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் சமூக ஆர்வலர் நாரா யணன் என்பவர். (அதென்ன முன்னாள் சமூக ஆர்வலர்? ஒன்று மில்லை... முதலில் சமூக ஆர்வலர், கல்வியாளர், பொருளாதார ஆய்வாளர் என்று களமிறக்கப்பட்ட இந்துத்துவாக் களில் பலர் அடுத்தடுத்து நேரடியாக பா.ஜ.க என்றே தங்களை வெளிப்படுத்திக் கொண்டுவிட்டனர். அப்படி ஒரு முன்னாள் தான் திரு.நாராயணன்) 
பசுவதைக்கு எதிர்ப்பு என்ற பெயரில் நாட்டையே உலுக்கும் அளவில் நடந்த வன்முறை அது; அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்றெல்லாம் சொல்லியும் கேட்கவில்லை. அப்படியில்லவே இல்லை என்று தொலைக்காட்சி விவாதத்திலேயே சவால் வேறு விட்டுள்ளார் அவர்.
என்ன தைரியத்தில்? அடுத்த முறை இவருடனேயே விவாதிக்கும் வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியாது. அப்போது எந்த தலைப்பு வரும் என்றும் தெரியாது. அப்படியே வந்தாலும் இதே தொலைக்காட்சியில் அந்த வாய்ப்பு இருக்குமா என்பது தெரியாது. அப்போது ஆதாரங்களுடன் பேசப் புகுந்தாலும் தொகுப்பாளர் அனுமதிப்பாரா என்று தெரியாது. அப்புறம் என்ன? சவடால் பேசலாம்; சவால் விடலாம்... யாருக்கு நினைவிருக்கப் போகிறது என்கிற தெனாவெட்டு. ஆனால், நாம் நினைவு கூருவோம். மீண்டும் மீண்டும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம். 
அதுவும் சுதந்திர இந்தியாவின் தலைநகரில் முதன் முதலில் நடைபெற்ற அந்த மிகப்பெரிய வன் முறையை, வரலாற்றில் என்றைக்கும் மறைக்க முடியாத அந்த வெறியாட் டத்தை நாம் எடுத்துச் சொல்வோம். இந்து மதவாதிகளின் கூட்டம் எப்படிப்பட்டது என்பதை உலகமே பார்த்து காறி உமிழ்ந்த நிகழ்வல்லவா அது. இந்திய நாட்டின் ஸ்திரத் தன்மை என்றெல்லாம் பேசு பவர்கள் நேரு மறைந்து, அடுத்து லால் பகதூர் சாஸ்திரியும் மறைந்து இந்திரா ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில் திட்டமிட்டு நடத்திய கலகம். 1857-ஆம் ஆண்டு நடந்த கலகத்தைப் போல நடத்தப்பட வேண்டும் என்று அன்றைய ஜனசங்கத்தின் நாடாளுமன்ற உறுப் பினரால் அறைகூவல் விடப்பட்டு நடத் தப்பட்ட கலவரம். 
இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த குல்சாரிலால் நந்தா பதவி விலக வேண்டிய அவசியத்தை ஏற்படுத்திய பிரச்சினை. இப்படி ஒன்றைத் தான் சர்வ சாதாரணமாக நடக்கவே யில்லை என்று அடித்துச் சொல்கிறார்கள். சவால் விடுகிறார்கள்.
பசுவதைக்கு எதிராக சட்டம் கொண்டு வரக் கோரி உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் பூரி சங்கராச்சாரி என்று அறிவித்து, நாடாளுமன்றத்தைத் தாக்க ஆள் சேர்த்தனர். ஆர்.எஸ்.எஸ்.சின் பசுமாட்டுப் பாதுகாப்புப் பிரிவாக தொடங் கப்பட்ட சர்வதலியா கோ ரக்ஷா மகா அபியான் சமிதி சார்பில் அழைப்பு விடுக் கப்பட்டது. 
 1966 ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு நாடு முழுக்க இருந்து ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டம் என்று சொல்லியிருந்த கூட்டம் நாடாளு மன்றத்தைத் தாக்க விரைந்தது. 
ஆனால் அவர்களின் முக்கியமான இலக்கு பெருந்தலைவர் காமராசர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து கல்வி நீரோ டையை எளிய மக்களுக்கும் பாய்ச்சியவர்;
சமதர்மப் பாதையில் இந்தியா செல்ல வேண்டும் என்று சொன்னவர்; அவரைத் தான் கொல்லத் திட்டமிட்டார்கள்; அத னால்தான் கொல்லத் திட்டமிட்டார்கள். பசுவதைத் தடைக்கு எதிராக இருந்த நேரு போய்ச்சேர்ந்துவிட்டார். மிச்சம் இருப்பது இவர் தான். இவரும் விரைவில் காணாமல் போய்விடுவார் என்று ஆர்.எஸ்.எஸ்.சின் ஆர்கனைசர் இதழ் வெளிப்படையாகவே படம் வரைந்து மிரட்டியது. 
புதுதில்லி நகர வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான நிர்வாணச் சாமியார்களோடு சேர்ந்துகொண்டு ஒட்டு மொத்த இந்துத்துவாவும் நிர்வாண வெறியாட்டம் போட்டது. சாலைகளில் வன்முறையை நிகழ்த்தியபடி விரைந்த கும்பல் காமராசர் வீட்டின் மீது கல்வீசத் தொடங்கியது. 
அவர் இருக்கும் அறை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்த நிமிடங்களில் காமராசர் இருந்த வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. மிகுந்த கவனத்தோடு காமராசர் அங்கி ருந்து வெளியேறி எம்.பி.க்கள் குடி யிருப்புப் பக்கம் சென்று தப்பினார்.
உலகம் முழுக்க இருந்த பத்திரிகைகள் இந்த நிகழ்வுகளையெல்லாம் பதிவு செய்து, இந்துத்துவாவின் கோர முகத்தை அம்பலப்படுத்தின. இது யாரோ சிலரால் நடத்தப்பட்டது என்றெல்லாம் கூட இவர் களால் கழன்று சென்றுவிட முடியாது என்பதற்கு அடுக் கடுக்கான ஆதாரங்கள் உள்ளன. 
கலவரம் நடப்பதற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியவர்கள் அனைவரும் ஆர்.எஸ். எஸ்.சின் விஷ வித்துகளான ஜனசங்கம், விஷ்வஹிந்து பரிசத், கோரக்சா சமிதி, அகில பாரதிய சாதுக்கள் சங்கம் மற்றும் நேரடியாக ஆர்.எஸ்.எஸ்,சையும் சேர்ந்த வர்கள்.

காமராசர் மீதான இந்தக் கொலை முயற்சியைக் கண்டு வெகுண்ட தந்தை பெரியார் கடும் எச்சரிக்கை விடுத்தார். மக்களிடம் இந்தச் சதியை எடுத் துரைத்தார். காமராசரைக் கொல்ல முயன்ற கூட்டத்தைத் தோலு ரிக்கும் விதமாக, மக்களின் ஆதரவோடு, பொது மக்களிடம் துண்டேந்தி வசூல் செய்த நிதியைக் கொண்டு காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் என்ற தலைப்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொகுத்த நூலை வெளியிட்டார்.
ஏராளமான தகவல்களுடன், காமராஜர் மீதான கொலைக்கான பின்புலம், நடந்த சதி, கலவரம், பசுவதை எதிர்ப்பு என்ற பெயரில் இவர்கள் நிகழ்த்திய கொடுமைகள் என்று அத்தனையும் அடங்கிய அரிய தொகுப்பு நூல் அது. 
நாம் வெளி யிட்ட இந்த நூல் மட்டுமல்ல... வரலாற்றில் நம்கண் முன் நடந்து உலகெங்கும் பதிவுசெய்யப்பட்ட ஒன்றைத் தான் போகிற போக்கில் நடக்கவேயில்லை என்று மறைத்துப் பார்க்கிறார்கள்.
யாருக்கு கல்வி சென்று சேர்ந்து விடக் கூடாது என்று ஆரியர்கள் தடுத்தார்களோ, அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியைக் கொண்டு சேர்த்தவர் காமராஜர் என்ற கோபம் எப்போதும் உண்டு அவாளுக்கு! இந்தக் கருப்புக் காக்கையை கல்லால் அடித்து விரட்டுங்கள் என்று குல்லூகப் பட்டர் ராஜாஜி கூவி, 8 மாதங்களில் நிகழ்ந்த வன்முறை தான் காமராஜரைக் கொல்லும் முயற்சியாக அரங்கேறியது - ராஜாஜி சொன்னது போலவே கல்லால் அடிப்பதில் தொடங்கி!
இந்த வரலாற்றுச் செய்தி களையெல்லாம் மறைத்துத் தான் காமராஜர் படத்தையும் பெயரையும் பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.

ஒருக் காலும் இந்த வன்முறைக் கூட்டத்தை வளர விடக் கூடாது என்று நாம் உறுதி எடுத்துக் கொள்ளவேண்டி யது அவசியம். 

வேரோடு கெல்லி எறிய உறுதி பூண வேண்டியது அவசியம். அதுவும் இன்றைய நாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதும், இதை எடுத்துச் சொல்ல வேண்டியதும் மிக மிக அவசியம். 

ஏனெனில், சுதந்திர இந்தியாவின் இருண்ட திங்கள் (Black Monday) என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்தக் கொடூர வன்முறையும், கொலை முயற்சியும் 1966 நவம்பர் 7ஆம் நாள் நடந்து இன்றோடு 50 ஆண்டுகளா கிறது. இன்றைக்கும் பசுவதை எதிர்ப்பு நடந்து கொண்டிருக்கும் இதே விதமான வன்முறைகள் நம்மால் முடித்து வைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நினைவூட் டும் நாளே - இந்நாள்!
                                                                                                                                         -  சமா. இளவரசன்.
நன்றி:விடுதலை.                                            
==============================================================================================
                      உலக நாயகன் 61 வது பிறந்த நாள் வாழ்த்துகள்!