இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 11 நவம்பர், 2015

வேற்று கிரகங்களில் மனிதன்?
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தீராத தாகத்துடன் விடை தேடிக் கொண்டிருக்கும் கேள்விகள்...  ‘இந்தப் பிரபஞ்சத்தில் பூமியைப் போல வேறு கிரகங்கள் இருக்கிறதா? 
இல்லையா? 
அப்படி இருந்தால் அவற்றில் மனிதன் உள்ளிட்ட ஜீவராசிகள் உள்ளனவா?’ 
என்பது தான்.
பிரபஞ்சத்தில் பூமியைப் போல் ஏராளமான கோள்கள் இருப்பது விண்வெளி வல்லுனர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கோள்களில் மனிதனைப் போன்றோ அல்லது மனிதனைவிட அறிவில் பன்மடங்கு திறம் வாய்ந்த உயிரினங்களோ ஏதேனும் உண்டா எனும் கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. 
ஆனால் அண்மையில் நிகழ்ந்த ‘KIC 8462852’  எனும் ஒரு நட்சத்திரத்தின் கண்டுபிடிப்பு, ‘வேற்று கிரகவாசிகள் அந்த நட்சத்திரத்தின் அருகில் இருக்கக் கூடுமோ’ என்ற சந்தேகத்தை விண்வெளி வல்லுனர்களிடையே உருவாக்கியுள்ளது.

‘KIC 8462852’  நட்சத்திரம் பூமியிலிருந்து சுமார் 1481 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. விண்வெளி அறிவியல் அகராதியில் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இன்று ஒரு சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் நாம் இந்த நட்சத்திரத்தைப் பார்த்தால், 1481 ஒளிஆண்டுகளுக்கு முன் அந்த நட்சத்திரத்திலிருந்து புறப்பட்ட ஒளியைத்தான் நம்மால் பார்க்க முடியும். 

ஒளியானது ஒரு நொடிக்கு சுமார் மூன்று லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கும். ஒரு நாளில் 86400 வினாடிகள் உள்ளன. ஒரு வருடத்தில் 365 நாட்கள் உள்ளன. இவ்வாறு 1481 ஆண்டு காலம் பயணித்த ஒளி, எத்தனை தூரத்தைக் கடந்திருக்கும்!  
KIC 8462852 நட்சத்திரம் பூமியிலிருந்து அவ்வளவு தொலைவில் உள்ளது. KIC என்பது Kepler Input Catalog என்பதன் சுருக்கமே! 
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பூமியைப் போல் வேறு கிரகங்கள் உள்ளனவா என அறியும் முயற்சிக்கு பல சோதனைகளைச் செய்து வருகிறது. 
அந்த சோதனைகளில் ஒன்றுதான் நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி. 2009ம் ஆண்டு மார்ச் 7 அன்று ஏவப்பட்ட இது, விண்ணில் இருந்தபடியே பல நட்சத்திரங்களையும் அவற்றைச் சுற்றிவரும் கோள்களையும் கண்காணித்து வருகிறது. 
2012ம் ஆண்டு தொடங்கி,  இத்தொலைநோக்கியின் மூலம் இதுவரை சுமார் 1,013 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
Kepler  தொலைநோக்கி இதைத் தவிர இன்னும் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை கவனித்துவருகிறது. 
இத்தொலைநோக்கி மூலம் தரவிறக்கப்பட்ட தகவல்களையும் நட்சத்திரங்களிலிருந்து உள்வாங்கிய நிறமாலை கதிர்களையும் கொண்டு வானியல் வல்லுனர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர். 

இதன் மூலம் கண்டறியப்படும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு பெயர்ப் பட்டியல் தரப்படுகிறது. 
இந்தப் பட்டியலே ‘Kepler Input Catalog’ எனப்படும். நாம் முன்பு குறிப்பிட்ட ‘KIC 8462852’  நட்சத்திரமும் இதில் ஒன்று. இந்த நட்சத்திரத்தை ஆய்வுசெய்து வரும் வல்லுனர்கள் இதன் நிறமாலை கதிர்களை ஆய்வு செய்தபோது மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாகினர். 

காரணம், ஆய்வு முடிவுகளின்படி இந்த நட்சத்திரத்தைச் சுற்றிலும் வேற்று கிரக வாசிகளால் கட்டப்பட்டது போன்ற தோற்றமளிக்கும் மிகப்பெரிய கட்டுமான அமைப்பு இருக்கிறதாம். 

இது யூகம்தான் என்றாலும் அதற்கு ஆதாரமும் இருக்கிறது. 
இந்தப் பிரபஞ்சத்தில் மனிதனைவிட சிந்தனையிலும் அறிவியல் ஆற்றலிலும் விஞ்சிய உயிரினங்கள் வேறு கிரகங்களில் இருக்கக்கூடுமானால் அவர்கள் என்னவெல்லாம் சாதித்து இருப்பார்கள். தங்கள் தேவைகளுக்கான ஆற்றல் சக்திகளை எவ்வாறெல்லாம் பயன்படுத்துவார்கள் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற பல முன்னோடி அறிவியல் அறிஞர்கள் கணித்துக் கூறியுள்ளனர். அதன்படி, முதலில் கோள்களில் உள்ள இயற்கை வளங்களைத் தங்கள் தேவைகளுக்காக உபயோகிப்பர். 
இன்று நாம் நம் உலகில் மின்சாரம், எரிபொருள் முதலிய எல்லா ஆற்றல் தேவைகளுக்கும் பெரும்பாலும் இயற்கை வளங்களைச் சார்ந்தே இருக்கிறோம். 
எல்லா இயற்கை வளங்களும் தீர்ந்த பிறகு, அந்தக் கோள் மண்டலத்தில் உள்ள நட்சத்திரத்தின் சக்தியை - அதாவது சூரியசக்தியை மட்டுமே உபயோகிக்க முடியும். சூரிய சக்தியின் அளவும் குறையத் தொடங்கும்போது, கோளைவிட்டு நட்சத்திரத்தின் அருகில் சென்றால் மட்டுமே அதன் சக்தியைப் பெறமுடியும்.

அறிவாற்றலில் சிறந்து விளங்கும் வேற்றுக்கிரக வாசிகள், இதற்காக பெரிய கட்டுமானங்களை நட்சத்திரத்தைச் சுற்றி எழுப்புவர். சூரியத்தகடுகள் போன்ற இந்த கட்டுமானங்களைக்கொண்டு அந்த நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் அனைத்து ஒளி மற்றும் வெப்ப சக்தியை உறிஞ்சி தங்கள்  தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வர். 
இவ்வாறு செய்வதனால் தொலைவிலிருந்து பார்க்கும்போது அந்த நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஒளியானது பெரும்பாலும் கட்டுமானங்களால் மறைக்கப்படும். இது ஒரு யூகமே. இக்கட்டுமானங்களை எவ்வாறு உருவாக்க முடியும் என்று Freeman John Dyson என்னும் அறிவியல் வல்லுனர் மிகவும் விளக்கமாக விவரித்துள்ளார். 
விவரித்ததோடு மட்டுமல்லாமல் அக்கட்டுமானங்களுக்கு ‘Dyson Sphere’ என்று பெயரும் வைத்தார். ‘KIC 8462852’ நட்சத்திரத்தை ஆய்வுசெய்த வல்லுனர்கள், அதன் நிறமாலை செயற்கையாக உருவாக்கிய கட்டுமானங்களைப்போன்ற அமைப்புகளால் மிகுந்த அளவு தடை செய்யப்படுகிறதோ என்று சந்தேகம் கொண்டுள்ளனர்.

இது உண்மை எனில், அக்கட்டுமானங்கள் Dyson Sphere போன்ற ஒரு அமைப்பாக இருக்கக்கூடும் என்றும், இதன் மூலம் அந்த நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஏதாவது ஒரு கோளில் அறிவில் முன்னேறிய வேற்று கிரக வாசிகள் இருக்கக்கூடும் என்றும் வாதம் செய்து கொண்டிருக்கின்றனர். 
சில வல்லுனர்கள், இந்த நட்சத்திரத்தின் நிறமாலை தடைபடுவதற்கு மிகப்பெரிய புழுதிப்படலங்கள் கூட காரணமாயிருக்கலாம் என்று கூறுகின்றனர். 
எது எப்படி இருப்பினும், நம் எல்லோருக்கும் நம் வாழ்நாளில் வேற்றுகிரகவாசிகளைப் பற்றிய உண்மை தெரியவேண்டும் என்ற ஆவல் உள்ளது என்பது உண்மையே. 
அதற்கு இத்தகைய அறிவியல் ஆய்வுகள் நிச்சயம் உறுதுணையாக இருக்கும்! 
                                                                                                                                    -கௌதம்  விஜய்,
- ----------