இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 23 நவம்பர், 2015

"டீடாக்ஸ்" சிகிச்சை !‘வாரத்தின் ஏழு நாட்களும் ஒரு நாளின் 24 மணி நேரமும்’ என்பதைச் சொல்லும் இந்த குறியீடு வேறு எதற்குப்  பொருந்துகிறதோ இல்லையோ, நம் உடலுக்கு அப்படியே பொருந்தும். 
அந்த அளவு நமக்குத் தெரிந்தும், தெரியாமலும் ஓய்வே  இல்லாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறது உடல். வாகனங்களுக்குக் கூட சர்வீஸ் என்ற   தேவைப்படும்போது, 
நம் உடலுக்கு அது எந்த அளவு அவசியம் என்று கேள்வி எழுப்புகிறது .
‘‘நோய்கள் அகலவும், ஆரோக்கியம் மேம்படவும், அதிக புத்துணர்வோடு செயல்படவும் டீடாக்ஸிஃபிகேஷன்  (Detoxification) அவசியம். 
‘கம்ப்யூட்டர் ஸ்லோவா இருக்கா? தேவையில்லாத ஃபைலை டெலிட் பண்ணுங்க. வைரஸ்  இருக்கலாம்... க்ளீன் பண்ணுங்க’ என்ற அட்வைஸை கம்ப்யூட்டர்வாசிகள் கேள்விப்பட்டிருப்பார்கள். 
அதேபோல, நம் உடலில்  உணவு, தண்ணீர், காற்று என பல வழிகளில் நச்சுகள் தினந்தோறும் சேர்ந்துகொண்டிருக்கிறது. 

உடலைச் சுத்தம் செய்ய தினந்தோறும் குளிக்கிறோம். 

உடலின் உள்ளுறுப்புகளையோ சுத்தம் செய்வதில்லை. அதற்காகத்தான்  இந்த டீடாக்ஸ்.மற்ற மருத்துவங்களில் அதிகபட்சமாக பேதி மருந்து கொடுக்கும் அளவுதான் டீடாக் ஸிஃபிகேஷன் உண்டு.  முழுமையான க்ளென்ஸிங் முறை இந்திய மருத்துவமான ஆயுர்வேதத்தில் உண்டு. சித்த மருத்துவத்தில் வேறு முறையில்  செய்வார்கள்.

‘‘நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதிலும் கெடுப்பதிலும் உணவுக்குப் பெரும் பங்கு உண்டு. அதனால்தான் பெரும்பாலான  பிரச்னைகள் வயிற்றில் ஆரம்பிக்கிறது என்று சொல்வார்கள். ஃபாஸ்ட் ஃபுட், அசைவம், சாலையோர மற்றும் கலப்பட உணவுகள்,  பூச்சிக்கொல்லி காய்கறிகள் என பலவழிகளில் நம் உடலில் நச்சுகள் சேர்கின்றன. உணவுப்பொருட்கள் முழுமையாக  வெளியேறாமல் உடலில் தங்கிவிடுவதாலும் உடலில் நச்சுத்தன்மை சேரும். 

இதை Internal toxin என்போம். இந்த விஷக்கழிவுகளால் சோரியாஸிஸ், எக்ஸீமா போன்ற சரும நோய்கள்,  ஆர்த்ரைட்டிஸ் குறைபாடுகள், மூட்டு வலி, காய்ச்சல் போன்ற பல பிரச்னைகள் வரும். இந்த நச்சுகளை ஆயுர்வேதத்தில்  பஞ்சகர்மா சிகிச்சையின் மூலம் அகற்ற முடியும்.

 கேரளா சென்று  பிரபலங்கள் செய்துகொள்ளும்ஆயுர்வேத சிகிச்சை,  புத்துணர்வு சிகிச்சைதான்  இந்த பஞ்சகர்மா. 
 அந்த வகையில் இதை ‘நட்சத்திர சிகிச்சை’ என்றும் சொல்லலாம். 

உடல்நலக் குறைபாடுகளுக்கு இன்றைய அவசர வாழ்வில் தற்காலிகத் தீர்வையே தேடிக் கொள்கிறோம். உதாரணத்துக்கு  மூட்டுவலி வந்தால் வலிநிவாரணிகள் எடுத்துக் கொள்வோம். இதன்மூலம் மூட்டு வலி மூளைக்குத் தெரியாது. 

வலி  குறைந்துவிட்டது என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோம். ஆனால், நோயை உண்டாக்கும் அடிப்படைக் காரணியான  நச்சுகளை அகற்றிவிட்டால் வலி நிவாரணி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
உடல்நல குறைவானவர்கள் மட்டும்தான் டீடாக்ஸ் செய்துகொள்ள வேண்டும் என்று இல்லை. சிலர் சோர்வாகவே இருப்பார்கள்.  சிலருக்கு எனர்ஜியே இருக்காது. உடல் வலி இருக்கும், வெறுப்பு உணர்வு தோன்றும்... இவை எல்லாம் கூட உடலில் நச்சுகள்  சேர்ந்திருக்கின்றன என்பதற்கான அலாரம்தான். பஞ்சகர்மா சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு உடலுக்கு புதிய எனர்ஜி  கிடைக்கும், நன்றாகப் பசிக்கும், செரிமானமாகும், உடலில் வாயு சேராது. 
இவற்றோடு நோய் எதிர்ப்பு சக்தி கூடும்’.

‘‘ஐந்துவகை சிகிச்சை கொண்டதுதான் பஞ்சகர்மா. முதலில் சில மூலிகைப் பொருட்களின் மூலம் கஷாயம் செய்து கொடுத்து  வாந்தி எடுக்க வைக்கும் முறை. இதை வமனம் என்பார்கள். ஆஸ்துமா, இரைப்பு, சளிப் பிரச்னை உள்ளவர்களுக்கு நல்லது.  இரண்டாவது விரேசனம் என்ற பேதிமருந்து கொடுத்து மலம் கழிக்க வைக்கும் முறை. 

பித்தம் தொடர்பான நோய்களுக்கு  கொடுக்கும் சிகிச்சை இது. 

மூன்றாவது அனுவாசன பஸ்தி. மருந்துகள் மற்றும் மூலிகை எண்ணெய்கள் மூலம் எனிமா கொடுத்து மலக்குடலைச் சுத்தம்  செய்யும் முறை இது. நான்காவது ஆஸ்தாபன வஸ்தி. இது கஷாயம் மூலம் எனிமா கொடுக்கும் முறை. முதுகுவலி,  கழுத்துவலி, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இந்த இரண்டு சிகிச்சைகளையும் கலந்து கொடுப்பார்கள். 

 ஐந்தாவது நஸ்யம் என்ற மூக்கில் சொட்டு மருந்து விடும் முறை. சைனஸ், மைக்ரேன் தலைவலி, ஃப்ரோஸன் ஷோல்டர்  போன்ற பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும். 

நஸ்யம் முறைக்குப் பதிலாக ரத்த மோக்ஷனம் என்ற முறையையும் சிலர் செய்வார்கள். உடலில் இருக்கும் அசுத்த ரத்தத்தை  அகற்ற Leech என்ற அட்டைப் பூச்சியை விட்டு கடிக்க வைக்கும் முறை இது. அன்னப்பறவை பாலை மட்டும்உறிஞ்சும் என்று  சொல்வதைப் போல இந்த அட்டைப்பூச்சி கெட்ட ரத்தத்தை மட்டுமே உறிஞ்சிவிடும். இதை லீச் தெரபி’ என்றும் சொல்வார்கள்.  

இதை 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நம்மவர்கள் எப்படி கண்டுபிடித்தார்களோ தெரியாது. 
இந்த சிகிச்சையை ஒரு  விஞ்ஞான விந்தை என்றே சொல்லலாம். 
இதற்கான கட்டணங்கள் தனிப்பட்ட ஒருவரின் உடல்நிலையைப் பொருத்து மாறும்’.
 ‘‘உடலின் உள்ளுறுப்புகளுக்கு ஒரு  நாளாவது ஓய்வு கொடுக்க வேண்டும். அதனால், வாரம் ஒருமுறை விரதம் இருப்பது நல்லது. சிலர் சாதம் மட்டும் சாப்பிடாமல்,  மற்ற எல்லா உணவுகளையும் சாப்பிடுவார்கள். இதனால் உடலில் கழிவுகள் வெளியேறாது. வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி  விரதம் இருக்க வேண்டும். நார்ச்சத்து கொண்ட பழங்களை உண்பது டீடாக்ஸுக்கு உதவும். 

நன்றாக மூச்சுப்பயிற்சி செய்வது கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும். காலையில் பல் துலக்கும் முன் நல்லெண்ணெயில்  ஆயில் புல்லிங் செய்வதும் நல்ல டீடாக்ஸ் முறை. வாயில் நல்லெண்ணெயை மூன்று நிமிடங்களுக்கு வைத்துக் கொண்டு  கொப்புளிக்க வேண்டும். 

இதன்மூலம் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் ஒழிவதோடு அசிடிட்டி, சொத்தை போன்ற பிரச்னைகளும்  வருவது தடுக்கப்படுவதோடு, சருமமும் பளபளப்பாகும். ஆயில் புல்லிங் முடித்த பிறகு தவறாமல் நாக்கை வழிக்க வேண்டும். 
 இதன்மூலம் உணவின் சுவை முழுமையாக நமக்குத் தெரியும். 

இவற்றைத் தவிர்த்து தினமும் ஏதாவது ஒரு காய்கறி சூப் அரை டம்ளர் சாப்பிடலாம். இவை உடலின் உள்ளுறுப்புகளை சுத்தம்  செய்யும். உடலில் சேர்ந்திருக்கும் மெட்டல் டாக்ஸினை அகற்ற கொத்தமல்லி ஜூஸ், சிறுநீரகக் கற்களை அகற்ற வாழைத்தண்டு  ஜூஸ், நுரையீரல் சளியை அகற்ற துளசி ஜூஸ், வயிற்றில் இருக்கும் கழிவுகளை அகற்ற இஞ்சி ஜூஸ், கல்லீரலை  சுத்தப்படுத்த வெங்காய ஜூஸ் சாப்பிடலாம். 

வாரம் ஒருமுறை திரிபலா ஜூஸ் சாப்பிட்டால் குடல் சுத்தமாகும். 

பொதுவாக உடல் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டது. நாம் செய்ய வேண்டியது உடலின் செல்ஃப்  ஹீலிங்குக்கு சப்போர்ட் செய்ய வேண்டியது மட்டுமே. உணவு சரியாக சாப்பிடாமல் மருந்து மட்டுமே சாப்பிடுவதால் எந்த  பயனும் இல்லை என்பதையும் மறக்கக் கூடாது’’ 

ஆங்கில மருத்துவம் ?

மாற்று மருத்துவங்களில் சொல்கிற டீடாக்ஸ்  முறையை அலோபதி மருத்துவம் ஏற்றுக் கொள்வதில்லை. 

மதுப்பழக்கத்தில் இருந்து ஒருவரை வெளிக்கொண்டு வர செய்யும் Alcoholic detox சிகிச்சையை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதிலும்கூட மதுவால் சேர்ந்திருக்கும்  நச்சுகளை அகற்ற முடியாது. மதுப்பழக்கத்தில் இருந்து ஒருவர் வெளிவர விரும்பும்போது, அவரது உடல் அவருக்கு  ஒத்துழைக்காது. அந்த இக்கட்டான நேரத்தில் அவரது உடலின் எதிர்விளைவுகளை சமாளித்து அவரை அந்தப் பழக்கத்தில் இருந்து  விடுவிக்க உதவி செய்கிதது. அவ்வளவுதான்.  

காரணம், திடீரென்று குடிப்பழக்கத்தை நிறுத்தினால் நீண்ட நாட்களாக மதுவால் அடங்கிப் போயிருந்த அட்ரினலின் ஹார்மோன்  கட்டுப்பாடில்லாமல் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் புயல் அடித்தது போன்ற அவதிக்கு ஆளாவார்கள். கைகள், கால்கள் நடுங்கும்,  ரத்த அழுத்தம் அதிகமாகும், அதிகமாக வியர்க்கும், பேச்சு குழறும், பதற்றமாக இருப்பார்கள், கோபப்படுவார்கள், வலிப்பும்  ஏற்படலாம். இந்த இக்கட்டான நேரத்தை சமாளிக்க முடியாமல்தான் திருந்த நினைக்கிறவர்கள் கூட மீண்டும் குடிக்க  ஆரம்பித்துவிடுகிறார்கள். இதேபோல மூளையில் ஏற்படும் தயாமின் சத்துக் குறைபாட்டால் மனப் பிறழ்வு ஏற்படும் வாய்ப்பு  உண்டு. ரத்தக்குழாய் வெடித்தால் உயிரிழப்பும் உண்டாகலாம். 

அதனால், மதுவுக்கு அடிமையானவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட பொது மருத்துவரையோ, இரைப்பை மற்றும்  குடலியல் சிகிச்சை சிறப்பு மருத்துவரையோ அணுகுவது நல்லது. மருத்துவமனையில் சேர்ந்து 3 முதல் 4 நாட்கள் வரை  தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் மதுவை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் நச்சுத்தன்மை  பாதிக்காமல் அந்தப் பழக்கத்தில் இருந்து மீண்டுவர முடியும்!’’
                                                                                                                                     - ஞானதேசிகன்,
   
நன்றி ;குங்குமம் டாக்டர்                                                                                                                                  ============================================================================================
ஜாலிலோ ஜிம்கானா?


கர்நாடகா கவர்னர் வஜுபாய் வாலாவுக்கு, மசாஜ் செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கு, மாதந்தோறும் 72,750 ரூபாய் வழங்கப்படுகிறது. 
மசாஜ் செய்வதற்கு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்க, மாதம், ஒரு லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, குஜராத்தைச் சேர்ந்த வஜுபாய் வாலா, 76, கவர்னராக உள்ளார். '
இங்குள்ள, கவர்னர் மாளிகை யில் எவ்வளவு ஊழியர்கள் உள்ளனர்? 
அவர்களின் பணிகள் என்னென்ன? 
எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது?' 
என, ஹலசூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர், ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டிருந்தார். 
கவர்னரின் செயலர் கல்பனா தகவல் கொடுக்க மறுத்ததால், நரசிம்மமூர்த்தி, கர்நாடகா தகவல் கமிஷனிடம் புகார் செய்தார். 
கல்பனாவுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்த கமிஷன், உடனடியாக தகவலளிக்க உத்தரவிட்டது. அபராதத்தை செலுத்திய பின், அவர் கொடுத்த பதிலில், பல பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளது.
*கவர்னர் மாளிகையில், 161 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்; அவர்களுக்கு மாதந்தோறும், 30 லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
[ஒரு மணு போட்டால் பதிலே தராத,வராத அலுவலகத்திற்கு 161 ஊழியர்கள் குறைவுதான்]
*கவர்னருக்கு மசாஜ் செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கு, மாதந்தோறும், தலா14,550 ரூபாய் வீதம், மொத்தம், 72,750 ரூபாய் வழங்கப்படுகிறது. 
மசாஜ் செய்வதற்கான, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்க, ஒரு லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது.
[செவ்வாய் கிரகத்தில் உள்ள விசேட எண்ணை  கலந்து செய்வதால் அவ்வளவு பணம் ஆகிறதாம்?]
*கவர்னரின் உடல்நலத்தை கவனிக்க, ஒரு டாக்டர், மூன்று நர்ஸ்கள், ஒரு பார்மாசிஸ்ட் ஆகியோர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

*கவர்னர் மாளிகை சமையல் அறையில் உள்ள ஊழியர்களுக்காக, மாதந்தோறும், 2.94 லட்சம் ரூபாயும், ஏழு சலவை தொழிலாளர்களுக்கு, 1.01 லட்சம் ரூபாயும் ஊதியம் வழங்கப்படுகிறது.
[மாதம் ஒரு லட் சம் ரூபாய்க்கு ஆளுனர் அழுக்கு ஆகிறாரா?]

*முந்தைய காலத்தில் பாத்திரங்களை பயன்படுத்தும்போது, 'ஈயம்' பூசுவது வழக்கம். அந்த பணியை கவர்னர் மாளிகையில் செய்வதற்கு, எட்டு ஊழியர்களுக்கு, மாதந்தோறும், 1.16 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது '
[ஆளுனர் மாளிகைக்கே மாத,மாதம் ஈயம் பூசுவார்களோ ? ]

*கவர்னர் மாளிகை நுழைவாயிலில் இருந்து பத்திரிகைகள், கடிதங்கள் ஆகியவற்றை சேகரித்து, கவர்னர் அலுவலகத்தில் சேர்க்கும் ஊழியருக்கு, மாதந்தோறும், 21 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
[காலை ஒரு மணி நேரம் வேலை .அதற்கு 21000?நமக்கு கிடைக்க வழி இருக்கா?]
ஆக மக்கள் வரிப்பணம் கட்டமைப்புக்கு செலவிடாமல் ஜாலிலோ ஜிம்கானாவுக்கு ஆளுனர் செலவிடுகிறார்.எப்படியோ அவராவது மக்கள் பணத்தில் மஞ்சள் குளித்து சுகமாக இருக்கட்டும்.

======================================================================================

======================================================================================
======================================================================================சிரிய அகதி ஒருவர் தன்னிலை கண்டு மன வேதனையின் உச்சத்தில் தன் குழந்தையின் 
முன்னே அழும் காட்சி!