இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 29 நவம்பர், 2015

நுாற்றாண்டு .காணும் சார்பியல் ....!நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டின் முன்வைத்த உலகப் பிரபலமான, 'பொது சார்பியல் கொள்கை', இந்த வாரம் நுாற்றாண்டு காண்கிறது. 
நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய இதே நவம்பர் இறுதி வாரத்தில் ஒரு நாள், ஐரோப்பாவே போரின் பிடியில் சிக்கியிருந்த நேரத்தில், இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின், தன், பொது சார்பியல் கொள்கையை விளக்கும் அந்த சமன்பாட்டை எழுதினார்.
'தியரி ஆப் ஜெனரல் ரிலேட்டிவிட்டி' என்ற அந்த கொள்கை, நாம் இந்த வெளி, காலம், பருப்பொருள் மற்றும் பேரண்டம் ஆகியவற்றை பார்க்கும் விதத்தையும், சிந்திக்கும் விதத்தையும் அடியோடு மாற்றிவிட்டது. 
மனித குலத்தைப் பற்றியும், பூமியைப் பற்றியும், இந்த பேரண்டத்தில் அதன் இடம் பற்றியும் நாம் சிந்திக்கும் விதத்தை, அவரது கொள்கை புரட்டிப்போட்டது.
பெருவெடிப்பு (Big Bang), கருந்துளைகள் (Black Holes), காலவெளிக் குழிவு (Warped spacetime), பரவெளிகள் (Wormholes), கால இயந்திரங்கள் (Timemachines), அவ்வளவு ஏன் நாம் பயன்படுத்தும் ஜி.பி.எஸ்., (GPS) சாதனங்கள் என்று எல்லாமே ஐன்ஸ்டினின் அற்புதமான சார்பியல் கொள்கையை சார்ந்தே இயங்குகின்றன. 
தனக்கு முன்பு இருந்த விஞ்ஞானிகளின் கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்தை முன்வைத்தார் ஐன்ஸ்டின். காலம் வேறு, வெளி வேறு அல்ல என்றும், இரண்டுமே ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை தான் என்றும் தன் சமன்பாடுகள் மூலம் ஆணித்தரமாக சொன்னார் ஐன்ஸ்டின்.
காலமும் வெளியும் நமது வாழ்க்கையையே நடத்தினாலும், நாம் அவற்றின் இயல்புகளை சிந்திக்க ஆரம்பித்தால் குழம்பி விடுகிறோம். ஏனெனில், காலம் மற்றும் வெளியின் ஊடாக, நம் வாழ்க்கை பயணித்தாலும், நம்மால் அவற்றை பார்க்க முடிவதில்லை.
ஆனால், ஐன்ஸ்டின் அவற்றை தன் கொள்கையின் அடிப்படையிலான, 'சிந்தனைச் சோதனைகள்' மூலமாகவும், கணித சமன்பாடுகளின் ஆதாரத்தோடும் இயற்பியல் உலகினருக்கு விளக்கினார்.

புவி ஈர்ப்பு விசையை அடையாளம் கண்டு சொன்ன ஐசக் நியூட்டனின் காலத்திலிருந்தே, காலம் என்பது ஒரு நதி போல, சீரான வேகத்தில், பேரண்டவெளியில் ஓடிக் கொண்டிருக்கக் கூடியது என்று தான் விஞ்ஞானிகள் கருதினர். 
ஆனால் ஐன்ஸ்டினோ, காலமும் வெளியும் பிரிக்கவே முடியாதவை என்றும், நான்கு பரிமாணங்களைக் கொண்ட ஒரு பருப்பொருளைத் தான் நாம் காலவெளியாக அனுபவிக்கிறோம் என்றும் நிரூபித்தார். அதுமட்டுமல்ல; 'காலவெளி என்பது வெற்றிடமோ, ஏதுமில்லாததோ அல்ல; அது ஒரு பருப்பொருள்' என்று அழுத்தமாக அவர் நிரூபித்தார்.

அதேபோல, காலவெளி அசையாத ஜடப்பொருள் அல்ல என்றும், இந்த பேரண்டத்தில் இயங்கும் தன்மையுள்ள ஒன்று என்றும் அவர் விளக்கினார்.ஐன்ஸ்டினின் கொள்கைப்படி நாம் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பினால், பூமியில் இருப்பவரை விட, அவருக்கு வயதாகும் வேகம் மாறுபடும்! 
காலம் எப்படி செல்கிறது என்பது, ஒருவர் ஒரு பெரும் பருப்பொருளுக்கு எத்தனை அருகாமையில் இருக்கிறார் என்பதைப் பொருத்து மாறுபடும் என்பது, ஐன்ஸ்டினின் வாதம்.
இதன்படி, நீங்கள் தரைத் தளத்திலும், உங்கள் நண்பர், 150வது மாடியிலும் இருக்கிறார் என்றால், உங்கள் இருவருக்கும் காலத்தின் போக்கு சற்று மாறுபடும். 
இயற்பியல் மற்றும் விண்வெளித் துறையினருக்கு பேரண்டத்தை துல்லியமாக புரிந்து கொள்வதில் இந்தக் கருத்து மிகவும் உதவிகரமானதாக கருதப்படுகிறது. 

பொது சார்பியல் கொள்கை விளக்கும் தன்மைகள் பேரண்டத்தில் இல்லாவிட்டால், நாமெல்லோரும் திக்குத் தெரியாமல் அலைய வேண்டியிருக்கும்.
இன்று மொபைல்பேசி உட்பட பல சாதனங்களில், 'குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்' என்று அழைக்கப்படும், 'ஜி.பி.எஸ்.,' தொழில்நுட்பம் இருக்கிறது. 
இது பூமியில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை, துல்லியமாக வரைபடத்தில் குறித்துக் காட்டக் கூடியது. 
இது துல்லியமாக இயங்க, பொது சார்பியல் கொள்கை அவசியம். அது துல்லியமாக இயங்குவதற்கு முக்கிய காரணம், கால இடைவெளியை அது கணக்கிலெடுத்துக் கொள்வது தான்.
பூமியிலிருக்கும் நமக்கு, விண்வெளியில் பல நுாறு கி.மீ., உயரத்திலிருக்கும் செயற்கைக்கோள்கள் சமிக்ஞைகளை அனுப்புவதும் பெறுவதுமாக இருக்கின்றன. 
நமக்கும், செயற்கைக்கோளுக்கும் காலம் போகும் வேகத்தில் வித்தியாசம் இருப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளா விட்டால், ஜி.பி.எஸ்.,சின் துல்லியம் போய்விடும். 
எந்த அளவுக்கு துல்லியம் கெடும் தெரியுமா! 
நாள் ஒன்றுக்கு, 45 மைக்ரோ வினாடிகள்! 
இது பெரிய வித்தியாசமில்லை என்று பலர் நினைக்கலாம். 
ஆனால், ஜி.பி.எஸ்., சமிக்ஞை அனுப்பிய பின், ஒரு வாரம் கழித்து செயற்கைக்கோளிலிருந்து பதில் சமிக்ஞை வருவதாக வைத்துக் கொள்வோம். 
அப்போது, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து, 5,000 மீட்டர் தள்ளியிருப்பதாக தான், உங்கள் ஜி.பி.எஸ்., சாதனம் காட்டும்! 
தன் கொள்கை மிகச் சரியானது என்று, அது சோதிக்கப்படுவதற்கு முன்பே முழுமையாக நம்பினார் ஐன்ஸ்டின். 
நாள்பட அவரது கொள்கை துல்லியமானது என்பது நிரூபணமாகி வருகிறது.நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள், பிற கிரகங்களை கடந்து பூமிக்கு வருகையில் சற்றே வளைந்தே வருகின்றன. அதிக ஈர்ப்பு சக்தி உள்ள இடங்களில் காலம் மெதுவாகவே போகிறது. 
ஐன்ஸ்டினின் இதுபோன்ற நிரூபணங்கள், அவர் காலத்தை வென்ற மேதை என்பதையே காட்டுகின்றன.
தனது கொள்கை முழுமையானதல்ல என்பதை ஐன்ஸ்டினே ஒப்புக்கொள்வார். 
உலகமே அந்த கொள்கையின் நுாற்றாண்டினை கொண்டாடும் இந்த வேளையில், அவரது கொள்கைகள் குறித்த பல கேள்வி களுக்கு இன்னும் பதில்கள் இல்லை. 
அவர் உயிரோடிருந்தால், அந்த கேள்விகளுக்கு விடை காண்பதில் இந்நேரம் மெய்மறந்திருப்பார்.
====================================================================================
இன்று,
நவம்பர்-29.
  • கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம்(1908)
  • தாமஸ் ஆல்வா எடிசன், போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதல் தடவையாக காட்சிப்படுத்தினர்(1877)
  • பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா முடிவெடுத்தது(1947)

  
   

ஏங்கல்ஸ் பிறந்த நாள்.
மார்க்சியம் நிலை பெறுகிறது என்றால் அதனை தோற்றுவித்தவர்களில் மார்க்சுக்கு அடுத்து ஏங்கெல்ஸ் பிரதானமானவர்.
வர்த்தகத்தில் பெரும் பணமீட்டிய பருத்தி ஆலை உரிமையாளர் ஒருவரின் மகன் அரச படைகளால் தேடப்படுவதை அறிந்த தாய் பதைபதைதுப் போகிறார். “நான் நாளாந்த செய்திப் பத்திரிகையை எடுத்த போது எனது மகன் தேடப்படுவதைத் தெரிந்துகொண்டேன். கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் நான் எவ்வளவு வேதனையடைந்திருப்பேன் என்று” என்று அந்தத் தாய் மகனுக்கு எழுதிய கடிதத்தை இன்று உலகில் பலரும் படித்துவிட்டார்கள். பஞ்சு ஆலை உற்பத்தித் தொழிற்சாலைகள் 19ம் நூற்றாண்டின் பெரும் வருவாயை ஈட்டும் வர்த்தகம். ஜேர்மனியிலும் இங்கிலாந்திலும் ஆலைகளைக் விரிவுபடுத்தியிருந்த செல்வந்தர், தனது மகனையும் வியாபாரத்தில் ஈடுபடுத்த விரும்பினார்.
மகனிற்கோ வியாபாரத்தில் நாட்டம் வரவில்லை. சமூகக் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுந்தார். அதற்கான அரசியல் தத்துவங்களைக் கற்க ஆரம்பித்தார். அவர் 17 வயதாகவிருக்கும் போது ஹேகல் என்பவரின் தத்துவம் சமூகத்தின் வளர்ச்சியை விபரிப்பதாக பல இளைஞர்களால் கருதப்பட்டது. ஜேர்மனியில் ஹேகலிய இளைஞர்கள் சமூகத்தில் கலகம் விளைவித்தனர். அவர்களோடு பருத்தி ஆலைச் செல்வந்தரின் மகனும் இணைந்துகொண்டார்.
இன்றைய உலகம் மின்சாரம் இல்லமல் இயங்கமுடியாது என்றால், அந்த இளைஞனின் சிந்தனை இல்லாமலிருந்தால் உலகம் இன்னும் நூற்றுக்கணக்கான வருடங்கள் பின் நோக்கிச் சென்றிருக்கும். துறை சார்ந்த கல்வி, பொருளியல், தத்துவம், விஞ்ஞானம், போன்றவை மட்டுமல்ல உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டங்களும் அவரின் நிழல் படாமல் கடந்து செல்ல முடியாது. தான் வாழ்ந்த போது உலகில் அறியப்படாமலிருந்த அந்த மனிதன் தான் ஏங்கல்ஸ்.
ஏங்கெல்ஸ் 28.11. 1820 ஜேர்மனியில் பிறந்தார்.
வியாபரத்தில் ஏங்கல்சிற்கு ஈடுபாட்டை ஏற்படுத்த முனைந்த அவரது பெற்றோர்கள் அவரை இங்கிலாந்திற்கு பயணமாகக் கோரினர். ஏங்கல்ஸ் இற்கு 22 வயதாகும் போது அவரது தந்தை பங்குதாரராகவிருந்த நூல் நெய்யும் ஆலையில் வேலை செய்வதற்காக இங்கிலாந்திலுள்ள மன்செஸ்டர் என்ற இடத்திற்கு ஏங்கெல்ஸ் அனுப்பப்படுகிறர்.
விக்ரோரியா மில் என்று அழைக்கப்பட்ட அந்த ஆலை இன்று இன்று மூடப்பட்டுவிட்டது. பெரும்பாலான பகுதிகள் புனரமைக்கப்பட்டு வியாபார நிறுவனங்களுக்கான அலுவலகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. மன்செஸ்டர் செல்லும் வழியில் ஏங்கெல்ஸ் கார்ல் மார்க்சைச் சந்திக்கிறார். அப்போது கார்ல் மார்க்ஸ் ஜேர்மனிய ஊடகம் ஒன்றின் ஆசிரியராகப் பணி புரிகிறார்.
கார்ல் மார்க்ஸ் ஹேகலின் தத்துவத்தின் பிற்போக்கான பகுதிகளோடு முரண்பட்டிருந்த வேளையில் இருவருக்கும் இடையேயான கருத்து உடன்பாடு ஏற்படவில்லை. மன்செஸ்ரரில் மேரி பேர்ன்ஸ் என்ற பெண்ணை சந்திக்கும் ஏங்கல்ஸ் அவரோரு 20 வருட காலம் வாழ்க்கை நடத்துகிறார்.
மன்செஸ்டரில் தொழிலாளர் குடியிருப்புக்களின் அவலத்தைக் காண்கிறார். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், சேரிகளில் வாழ்ந்த தொழிலாளர்களின் அவலங்கள் தொடர்பாகவும், குழந்தைத் தொழிலாளிகள் தொடர்பாகவும் ஏங்கெல்ஸ் எழுத ஆரம்பிக்கிறார். தனது ஆக்கங்களைக் கார்ல் மார்க்சின் ஊடகத்திற்கு அனுப்பி வைக்கிறார்.
24 மொழிகளைக் கற்றிருந்த ஏங்கெல்ஸ் இன் கட்டுரைகள் ஆங்கில ஊடகங்களிலும் பிரசுரமாகின்றன.
கார்ல் மார்க்சின் ஊடகம் ஜேர்மனியில் தடைசெய்யப்பட்டதும், அவர் பாரிஸ் நகரிற்குச் செல்கிறார். 1814 ஆம் ஆண்டில் ஏங்கெல்ஸ் ஜேர்மனிக்குச் செல்லும் வழியில் கார்ல் மார்க்சை பாரிசில் சந்திக்கிறார். இப்போது ஏங்கெல்ஸ் ஹெகலியன் அல்ல. மார்க்சின் கருத்துக்களோடு ஒன்று படுகிறார்.
அதன் பின்னான காலப்பகுதி முழுவதுமே ஏங்கெல்ஸ் கார்ல் மார்க்சுடன் இணைந்து பின்னாளில் உலகை மாற்றும் புரட்சிகரத் தத்துவங்களை எழுதினார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இணைந்து எழுதினர்.
ஒரு தனிமனிதனால் இவ்வளவு ஆய்வுகளையும் தத்துவங்களையும் எழுதி முடிக்க இயலுமா என மார்க்சின் தத்துவங்கள் வியப்பை ஏற்படுத்தின என்றால் அவற்றின் ஒவ்வொரு உருவாக்கத்திலும் ஏங்கெல்சின் பங்களிப்பு இருந்தது. கார்ல் மார்க்சின் வாழ்க்கைச் செலவைக் கவனித்துக்கொள்வதற்காக ஏங்கெல்ஸ் தொடர்ச்சியாக அவரது தந்தையின் ஆலையில் வேலை பார்த்தார்.
1883 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் மரணித்த பின்னர், அவரது எழுத்துக்களைத் தொகுப்பதிலேயே ஏங்கல்சின் வாழ்க்கையின் பெரும்பகுதி செலவானது. ஏங்கெல்ஸ் குடும்பம் தனிச்சொத்து அரசு என்ற பிரபலம் மிக்கி நூலை எழுதினார். ஏங்கெல்சின் நூல் பல்கலைக் கழகங்களில் அவரின் மரணத்தின் பின்னர் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியது. துறைசார் கல்வியில் மனிதவியல் என்ற கற்கை நெறி புகுத்தப்பட்டது.
ஏங்கெல்சின் நூலின் ஆய்வு தவறானது எனவும் வேறு ஆய்வு முறைகளை முன்வைக்கிறோம் என்றும் முதலாளித்துவ தத்துவ ஆசிரியர்கள் கூறினர்.ஏறக்குறைய அரை நூற்றாண்டு ஆய்வுகளின் பின்னர் மனித குலத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய ஏங்கெல்சின் கருத்துக்கள் சரியானவை என கல்விச் சமூகம் ஏற்றுக்கொண்டது.
ஏங்கெல்சும் மார்க்சும் முன்வைத்த கருத்துக்கள் மக்களைப் பற்றிக்கொண்டு தீயாகப் பரவின. முதலாளித்துவ அதிகார மையங்கள் இவர்களின் எழுத்துக்களைக் கண்டு அஞ்சின.
மார்க்சினதும் ஏங்கல்சினதும் மரணத்தின் பின்னர் மார்க்சியம் சோவியத் ரஷ்யாவில் உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவியது. உழைக்கும் மக்களுக்கான ஜனநயகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திற்று. தேசிய இனங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமை சோவியத் ஆட்சியில் வழங்கப்பட்டது. சீனாவில் மார்க்சியத்தின் நடைமுறை புதிய ஜனநாயக முறைமையை உருவாக்கிற்று. உலகின் எந்த மூலையில் மக்கள் சார்ந்த போராட்டங்கள் நடந்தாலும் மார்க்சியத்தை நிராகரித்து வெற்றிபெற முடியாது என்பதை மக்கள் உணர்ந்துகொண்டனர்.
=====================================================================================
ஏன் தந்தி டி .வி,போன்ற  [அதிமுக ஜால்ரா] ஊடகங்களில் திமுகவினர் பங்கேற்க கூடாது ?  
                                                                                                            -முகனூலில்  அந்தோணி பரிமளம்.
1) திமுக சார்பாக பேச ஒருவரை அழைத்து விட்டு திமுகவிற்கு எதிராக பேச நடுநிலையாளர்கள் போர்வையில் மூன்று அதிமுக ஜால்ராக்களை பேச வைக்கின்றனர் அந்த திருட்டு ஊடகங்கள்.
2) அது மட்டுமன்றி நான்காவதாக ஒரு ஜால்ரா தொலைதொடர்பில் பேசுகிறான்
3) திமுக சார்பாக பேசுபவரை ஒரே நேரத்தில் பலரும் கேள்வி கேட்டு அவரை பேச விடாமல் தடுக்கின்றனர்.
4) அதிமுகவிற்கு எதிரான ஆதாரங்களை திமுக சார்ப்பில் எடுத்து வைக்க முனையும் போது பாதியிலேயே பேசவிடாமல் தடுக்கிறார்கள்.
5) நிகழ்ச்சி நடுவரே மிகச்சிறந்த அதிமுக ஜால்ராவாக இருந்து பொய்யான தகவலை தருகிறார்.
இந்த சூழலில் நிகழ்ச்சியை பார்க்கும் பொதுமக்களுக்கு திமுக மீது தவறான எண்ணம் ஏற்படாதா ?
யாருமே கலந்துக்கொள்ளவில்லை என்றால் திமுக சார்பில் கருத்து சொல்ல ஆள் இல்லையென நினைத்து பொதுமக்களே நிகழ்ச்சியை பார்ப்பதை தவிர்த்து விடுவர்.
ஜெயா டிவி மாதிரி தானே பேசிகிட்டு திரிய வேண்டியதுதான்.

=====================================================================================