இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 29 நவம்பர், 2015

கலைவாணர் ...,கலைவாணர் பிறந்த தினம்

நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்.
டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.

நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்
திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு இவன் என் நாடக கம்பெனி ஆள் என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.
அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.
என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நாடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .
என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்
என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி
நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.
அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் .
” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு
ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டு தான் இறந்து போனார்
                                                                                                                                - பூ.கொ.சரவணன்,
அது 1925-ம் ஆண்டு. அப்போது கிருஷ்ணனுக்கு 17 வயது. அவரது தந்தை சுடலைமுத்து ஒரு நாள் கிருஷ்ணனை அழைத்துக்கொண்டு நாடக கம்பெனியிலேயே சேர்த்துவிட்டுவிட்டார். புதிதாகச் சேர்ந்த பையன்களுக்குப் பாட்டு சொல்லிக்கொடுப்பார் டி.கே. சண்முகம். சங்கரதாஸ் சுவாமிகளின் ‘மூல மந்திர மோன நற் பொருளே’ எனத் தொடங்கும் பாடலை அவர் சொல்லிக்கொடுத்தார். சிறிது நேரம் ஓடியது. தண்ணீர் அருந்த சண்முகம் எழுந்து போனார். பிறகு வந்து பார்த்தபோது கனத்த சாரீரம் அமைந்த பையன் ஒருவன் புதிதாக வந்து சேர்ந்திருந்தவர்களுக்கு அந்தப் பாடலைத் தொடர்ந்து சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தான். டி.கே.சண்முகம் திகைத்து நின்றார்.
“இந்தப் பாட்டு உனக்கு எப்படித் தெரியும்?”
“நாகர்கோவிலில் உங்கள் நாடகம் நடந்தபோது அங்கே நான் சோடா விற்கிற வேலை செய்துகொண்டே கவனித்துவந்தேன். பாடல்கள் அத்துப்படி ஆகிவிட்டன!”
“சபாஷ், மகிழ்ச்சி. நீயே இவர்களுக்குக் கற்றுக்கொடு!” என்று சொல்லிவிட்டு சண்முகம் நகர்ந்தார். நாடகக் குழுவில் மாணவனாகச் சேர்ந்த முதல் நாளே கிருஷ்ணன் நாடக வாத்தியார் ஆகிவிட்டார்.
டங்கனை அசத்திய இளைஞர்
அமெரிக்கரான எல்லிஸ் ஆர்.டங்கன் தமிழ் அறியாதவர். அவர் இயக்கவிருந்த ‘சதி லீலாவதி’ படத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. படத்தில் நடிக்கிற அனைவரும் ஆஜர். நகைச்சுவை நடிகராக எம்.எஸ். முருகேசன். நகைச்சுவைக் காட்சியில் நடிக்கும் பலருள் ஒருவராக என்.எஸ். கிருஷ்ணன்.
நகைச்சுவைக் காட்சி குறித்தும் விவாதம் வந்தது. கிருஷ்ணனுக்கும் இதுதான் முதல் பட வாய்ப்பு. புதிதாக வந்த அதிர்ஷ்டம் என்று எல்லோரும் அடக்க ஒடுக்கமாக நடந்துகொண்டிருந்த வேளையில் என்.எஸ். கிருஷ்ணனால் அப்படிச் சும்மாயிருக்க முடியவில்லை. அப்படி இருக்கக்கூடியவரா அவர்? எனவே, ஏதோ சொல்ல எழுந்தார். மற்ற நாடக நடிகர்கள் குறுக்கிட்டார்கள். அவர்கள் சொன்னார்கள்: “கிருஷ்ணா, நீ பேசாமல் இரு. காமெடி பற்றிப் பேசத்தான் முருகேசன் இருக்கிறாரே! நீ எதற்கு முந்திரிக் கொட்டைபோல?”
கிருஷ்ணன் மறுத்தார்: “நகைச்சுவைக் காட்சி பற்றி எனக்குப் பட்டதை நான் சொல்லுவேன்!” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
எல்லிஸ் ஆர். டங்கன் இதனைக் கவனித்தார். கிருஷ்ணனைக் காட்டி, “அவர் என்ன சொல்கிறார்?” என்று கேட்டார். “அவரைப் பேச விடுங்கள்!” என்றார்.
கிருஷ்ணன் கம்பீரமாக எழுந்து தன் கருத்தை வெளியிட்டார்.
“நகைச்சுவைக் காட்சியென்றால் அதை நான்தான் வடிவமைப்பேன்!” டங்கனுக்கு முகம் மலர்ந்தது. கிருஷ்ணனின் துணிவைக் கண்ட டங்கனுக்கு அவர் மீது நம்பிக்கை பிறந்தது. மகிழ்ச்சியோடு டங்கன் இப்படிச் சொன்னார்:
“கிருஷ்ணன் நடிக்கும் நகைச்சுவைக் காட்சிகளை அவர் விருப்பம்போல, அவர் சொல்கிறபடியே எடுப்போம்!”
ஆமாம்! கலைவாணர், தனது முதல் படத்திலேயே வாதாடி, போராடி, ஒரு தனித்த உரிமையையே பெற்றார். அதுதான் இன்றைக்கு ‘தனி டிராக்’என்று அழைக்கப்படும் நகைச்சுவைப் பகுதியின் தொடக்கம். இந்தத் தனித்த உரிமைதான் என்.எஸ்.கிருஷ்ணன் என்ற அந்த அற்புதக் கலைஞன் ‘கலைவாணர்’ என்றாவதற்கு ஆதார சுருதியாக அமைந்துபோனது.
எதிரிக்கும் உதவும் மனம்
தனது கலைக்குக் காணிக்கையாகக் கிடைத்த பொருளையெல்லாம் இல்லாதவர்க்கு ஈவதையே வாழ்நாள் பழக்கமாக்கிக்கொண்ட இந்தச் சாதனைக் கலைஞனின் வாழ்விலும் பெரும் சோதனை வந்தது.
சி.என். லட்சுமிகாந்தன் என்பவர் நடத்திவந்த ‘இந்துநேசன்’ எனும் பத்திரிகையில் சினிமா பிரபலங்களையும், பணக்காரத் தொழிலதிபர்களையும் பற்றிக் கடுமையாக எழுதிவந்தார். இதனால் லட்சுமிகாந்தனுக்கு நிறைய பகைமை வளர்ந்தது. அதேநேரம் பிரபலங்கள் பலரும் தங்களைப் பற்றி அவர் எழுதிவிடுவாரோ என்று பயந்து நடுங்கினார்கள். கலைவாணர் மட்டும் இந்த விஷயத்திலும் மாறுபட்டவராகவே இருந்தார்.
லட்சுமிகாந்தன் குறித்து அவருக்குக் கலக்கமில்லை. “ஏதோ நம்மைப் பற்றியெல்லாம் எழுதி ஒருவன் பிழைப்பு நடத்துகிறான். பாவம், பிழைத்துப்போகட்டுமே” என்று தனது காதல் மனைவி மதுரத்திடம் சொல்லுவார். அதுமட்டுமல்ல “அவன் திருந்துவதாக இருந்தால் வேறு தொழில் செய்ய நாமெல்லாரும் அவனுக்குப் பண உதவிகூடச் செய்யலாம்” என்றார். அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்ட கலைவாணர்மீது, அந்த லட்சுமிகாந்தன் திடீரெனக் கொலை செய்யப்பட்டபோது பெரும் பழி விழுந்தது.
அன்றைக்குப் புகழின் உச்சத்தில் இருந்த கலைவாணர்மீதும், எம்.கே. தியாகராஜ பாகவதர் மீதும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் கைதானார்கள். 
நீண்டதொரு அத்தியாயம்போல நடந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தமான கிருஷ்ணன் - மதுரம் தம்பதி கடனாளியானார்கள். கலைவாணரின் நாடக சபா இரண்டாக உடைந்தது. மதுரத்தின் தலைமையில் இயங்கிய சபாவுக்கு கலைவாணரின் தோழர் எஸ்.வி. சகஸ்ரநாமம் தோள்கொடுத்தார்.
அப்பீல் செய்யப்பட்டது. மதுரம் கடன் கேட்டு அலைய நேர்ந்தது. தந்தை பெரியார் இவர்கள் விடுதலைக்காகக் குரல்கொடுத்தார். 

கிருஷ்ணன், பாகவதர் விடுதலை முயற்சி கமிட்டி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது. இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில் லண்டன் பிரிவி கவுன்சிலில் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. பாகவதர் உற்சாகமிழந்த நிலையில் இருந்தார். கலைவாணரோ சிறை அனுபவத்தை மேடைகளில் பெருமையோடு சொல்லத் தொடங்கினார்.
பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட அவர் காந்தியையும் நேசித்தவர். பொதுவுடைமைத் தலைவர் ஜீவானந்தம் அவருக்குத் தோழர். உடுமலையார் பாடல்களின் வழியேயும், தனது தனித்த நகைச்சுவைக் காட்சிகளின் வழியேயும் இன்றுவரையில் அன்றைய முன்னணி இயக்கங்களின் நல்ல கூறுகளையெல்லாம் கலையாக்கி மக்களை மகிழச் செய்த அவர் ஒருநாள் மதுரத்திடம் இப்படிச் சொன்னார்: “ஐம்பது வயதில் நான் இறந்துவிட ஆசைப்படுகிறேன் மதுரம்...” மதுரம் பதறிப்போனார்.
“தன் கலையில் வறட்சி ஏற்பட்ட பின் அந்தக் கலைஞன் வாழ்வதைப் போன்ற அவலம் இந்த உலகில் வேறில்லை மதுரம்” என்றார் கலைவாணர். ஆனால் அப்படிப் பட்ட வறட்சியை சந்திக்கும் முன்பே மறைந்துவிட்டார்.
                                                                                                                            -சோழ. நாகராஜன்
========================================================================================