இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வியாழன், 12 நவம்பர், 2015

தூக்கம் இல்லாட்டா துக்கம்.தூக்கம் என்பது நல்வாழ்வுக்கான அருமருந்தாகவே இருந்தது. 
நம் முன்னோர், ஆரோக்கியத்தையும் தூக்கத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை.

தொடர்ந்து ஒருவர், ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதால், மன அழுத்தம், சிந்திக்கும் திறன் குறைதல், எதிலும் கவனம் செலுத்த முடியாதது, ஞாபக சக்தியை இழத்தல், உடல் எடை அதிகரித்தல் போன்ற மனம், உடல் நலம் ரீதியிலான இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள், வீடு, அலுவலக பயணம், மன அழுத்தம், வேலைப்பளு, கோபம், சோர்வு போன்ற கழிவுகள், மூளையில் தேங்குகின்றன. 

அவற்றை சுத்தம் செய்யும் வேலையைத் தான், தூக்கம் செய்கிறது. தினசரி செய்ய வேண்டிய செயல்களில் தூக்கமும் ஒன்று. 

மூளையிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு, தொடர்ந்து சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன. இச்செயலுக்கு, ஓய்வு தேவை. ஒய்வு இருந்தால் தான், மறுநாள் வேலைகளை செய்ய முடியும். இல்லாவிடில், செயல்திறன் குறைந்துவிடும். 

எனவே கட்டாயம், எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.
ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் இருந்தால், அவரது நோய் எதிர்ப்பு சக்தி 
அதிகரிக்கிறது. 

சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறைகிறது. தூக்கம் நன்றாக இருந்தால், பல வேலைகளை சிறப்பாக செய்வதற்கான சூழலை உடலும், மனமும் உருவாக்கிக் கொள்கிறது.

தூக்கம் ஒரு சிறந்த சோர்வு நீக்கி படுத்தவுடன் ஒருவருக்கு தூக்கம் வருவது வரம். 

எல்லாருக்கும் அது எளிதில் கிடைப்பதில்லை. 

தூங்க நினைத்தும் தூங்காதவர்கள் ஒரு வகை என்றால், பல வேலைகளை காரணம் காட்டி தூங்காதவர்கள் மற்றொரு வகை. 

இவர்களுக்கு, வாழ்நாளில் பல பிரச்னைகள் காத்திருக்கின்றன.

தலைவலி, வயிற்று வலி, நெஞ்சு வலி போன்றவை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இருந்தால், மருத்துவர்களிடம் செல்கிறோம். 

ஆனால், ஒரு வாரம் தூக்கம் இல்லாமல் இருந்தால், அலட்சியம் செய்கிறோம். 
தூக்கமின்மை, அலட்சியம் செய்யக்கூடிய விஷயம் அல்ல. 

ஆரம்ப கட்டத்திலேயே கவனித்து சரி செய்து கொண்டால், அதனால் வரும் பல நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

                                                                                                                                                                                                     -ர. சபரீசன் 
======================================================================================
'டயபடிக் நெப்ரோபதி' ?

சிறுநீரகத்தில் உள்ள நுண் ரத்தக் குழாய் அடைபட்டு, 'நெப்ரான்' என்ற சிறுநீரகத்தில்உள்ள நுண்பகுதியை பாதித்து விடுகிறது. 
இது நீரிழிவால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு. ஆங்கிலத்தில், 'டயபடிக் நெப்ரோபதி' என்பர். கவனிக்காமல் விட்டால், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, ரத்தத்தில் யூரியா, கிரியாட்டின், பொட்டாசியம் ஆகியவற்றின் அளவு உயர்ந்து, மூச்சு முட்டல், படபடப்பு ஏற்படும். பின், 'டயாலிசிஸ்' (ரத்த சுத்திகரிப்பு) செய்ய வேண்டிய நிலையும் வரும்.

பரம்பரை காரணமாகவும் வரும். பொதுவாக, ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை காரணமாகவே 'டயபடிக் நெப்ரோபதி' வருகிறது. நீரிழிவு நோய் தாக்கி, 10, 15 ஆண்டுகள் கழித்து, 'டயபடிக் நெப்ரோபதி' வரலாம். 

'டயபடிக் நெப்ரோபதி'யை பொறுத்தவரை சோகம் என்னவென்றால், இறுதிக்கட்ட நிலை வரை அறிகுறிகள் தென்படாமல் போகலாம். நாள்பட்ட நீரிழிவு நோயாளிகள், சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்து, அறிந்து கொள்ள முடியும். சில நோயாளிகளுக்கு, சிறுநீரில் புரதச்சத்து வெளியேறி கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

'யூரின் மைக்ரோ ஆல்புமின்' பரிசோதனை செய்தால், ஆரம்ப நிலையிலேயே நீரிழிவால் ஏற்படக் கூடிய சிறுநீரக பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அல்லது சாதாரண சிறுநீர் பரிசோதனை மற்றும், 'அல்ட்ரா சவுண்ட்' பரிசோதனைகளில், 'டயபடிக் நெப்ரோபதி' உள்ளதை கண்டறியலாம். 

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இவ்விரண்டையும் 
கட்டுக்குள் வைப்பதன் மூலம், 'டயபடிக் நெப்ரோபதி' வராமல் தடுக்கலாம். அதோடு, மருத்துவர் பரிந்துரையில்லாமல், சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இப்படி கவனமாக இருந்தாலும், 'டயபடிக் நெப்ரோபதி'யை தடுக்கலாம். 

உடல் எடை அதிகமானால், சர்க்கரை நோய் வரும். மூன்று வேளையும் அரிசி சாப்பிடுவது 
ஆபத்து. இதனால் தொப்பை, உடல் பருமன் போன்றவை அதிகமாகின்றன. மேலும், 'கொலஸ்ட்ரால்' அதிகமுள்ள உணவை குறைத்து, அதற்கு மாற்றாக, நிறைய காய்கறிகள் - பழங்கள் நார்ச்சத்துள்ள உணவுகள் உண்பது நல்லது.

'டயபடிக் நெப்ரோபதி' தாக்கினால், அடுத்து, 'டயபடிக் ரெட்டினோபதி'யும் வரும் வாய்ப்பு அதிகம். அதனால், இந்த நோய் தாக்கினால், நோயாளிகள் கட்டாயம், கண் மருத்துவரை அணுகி, பரிசோதித்துக் கொள்வது நல்லது. 

கட்டாயம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெறுவது நல்லது. அதோடு, கண் மருத்துவரை அணுகி, 'டயபடிக் ரெட்டினோபதி' வரும் அபாயம் உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.


ஆரம்ப கட்டம் என்றால், குணப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இறுதிக்கட்டம் என்றால், ரத்தத்தில் கிரியாட்டின் அளவு அதிகமாகி விடும். அதை சமன் செய்வது கடினம். 

இறுதிக்கட்டத்தை பொறுத்தவரை, சிகிச்சை முறைகள் குறைவு. இதற்கு, 'டயாலிசிஸ்' எனப்படும் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை போன்றவை மட்டுமே உள்ளன.


                                                                                                                                                                              - கே.ஆர். விஜய் சக்ரவர்த்தி,
=======================================================================================
இன்று ,
நவம்பர்-12.
  • ஆஸ்திரியா குடியரசானது(1918)
  • அஜர்பைஜான், அரசியலமைப்பு தினம்
  • இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ் லீ அறிவித்தார்(1990)
  • சூடான், துனீசியா ஆகிய நாடுகள் ஐ.நா.,வில் இணைந்தன(1956)
  • ஜெனீவா, ஐ.நா.,வில் இணைந்தது(1968)


=======================================================================================