ஸ்டாலின்.....,!

நாளை எனும் பெருங்கனவு...,!

எந்தக் கட்சிக்கும் இல்லாத விசித்திரமான நிலை தி.மு.க.வுக்கு இருக்கிறது. தேர்தலை ஒட்டி எழுதப்படும் கட்டுரைகள், எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் ஆகியவற்றில் ஒவ்வொரு கட்சிக்கும் அடையாளமாக ஒரு முகம் இருக்கும். 
தி.மு.க.வுக்கு மட்டும் இரண்டு முகங்கள்: தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

தந்தையையும் மகனையும் ஒப்பிட்டு, இருவரையும் ஒருவருக்கொருவர் எதிரெதிராக நிறுத்தும் இந்த வேலையை ஊடகங்கள் ஏதோ ஒரு வகையில் செய்துவருகின்றன. தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, எந்தச் சமயத்திலும் தி.மு.க.வையும் அதன் தலைமையையும் சங்கடப்படுத்தக்கூடிய விஷயம் இது. ஆனால், இவர்கள் தந்தை - மகனாக இருப்பதால்தான் இப்படிப் பேசவும் முடிகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். 

வேறு எந்த இருவரை வைத்து இப்படிப் பேசப்பட்டாலும் கட்சி பிளவுபட்டிருக்கும். ராஜாஜி - காமராஜர், கருணாநிதி - எம்.ஜி.ஆர்., கருணாநிதி - வைகோ எனப் பல்வேறு ஆளுமை மோதல்களும் கடைசியில் பிளவில்தான் முடிந்தது. ஆனால், கருணாநிதி - ஸ்டாலின் விஷயம் ஆளுமை மோதல் அல்ல. 
எனவே, இது பிளவுக்கு வித்திடாது. 

ஆனால், இதன் பாதிப்பு கட்சிக்கு இருக்கும்.
திருப்பங்கள் கொண்ட கதை
இந்த நிலை உருவானதில் கருணாநிதிக்கு முக்கியப் பங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. “வாரிசை நியமிக்க இது ஒன்றும் சங்கர மடம் அல்ல” என தி.மு.க. தலைவர் திரும்பத் திரும்பச் சொன்னாலும், அவர் ஸ்டாலினுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் வெளிப்படையானது. 

கட்சியில் வலுவான பல ஆளுமைகள் - கருணாநிதியின் சமகாலத்தவர்களும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் - இருந்தபோதிலும் அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஸ்டாலின் முன்னேறியதற்குக் காரணம், அவரது திறமை மட்டும்தான் என்று சொன்னால், தீவிர தி.மு.க. ஆதரவாளர்களேகூட அதை ஏற்க மாட்டார்கள். 

மூத்த தலைவர்கள் ஒதுங்க, இளைய தலைமுறையினர் ஸ்டாலின் பின்னால் அணிதிரள, தலைவரின் தளபதியாக ஸ்டாலின் எழுச்சி பெற்றது கட்சிக்குள் பல திகைப்புகளையும் வியப்புகளையும் ஏற்படுத்திய திருப்பங்கள் கொண்ட நீண்ட கதை.

தலைவரின் மகன் என்பது ஸ்டாலினின் நுழைவுச் சீட்டு. அதிகாரத்தின் கோட்டைகளைத் திறக்கும் முத்திரை மோதிரம். ஆனால், இந்த மோதிரம் மட்டுமே ஸ்டாலினின் வளர்ச்சிக்குக் காரணம் இல்லை. கிட்டத்தட்ட 35 ஆண்டுக் காலம் கடுமையான உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். 

தி.மு.க.வில் எத்தனையோ பேச்சாளர்கள், பிரச்சார பீரங்கிகள் இருந்தாலும் இளைஞர் ஸ்டாலினின் சுற்றுப் பயணங்கள் கட்சிக்குள் ஏற்படுத்திய தாக்கம் தனித்துத் தெரிந்தது என்பதை மறுக்க முடியாது. தலைவரின் வாரிசு என்னும் அந்தஸ்து இங்கும் அவருக்குச் சாதகமாக நின்றது என்றாலும், கட்சியின் வாரிசு என்னும் மாலை தன்னைத் தேடி வரட்டும் என்று ஸ்டாலின் அமைதியாக உட்கார்ந்துவிடவில்லை.
கவனிக்க வைத்த செயல்பாடுகள்
தீவிர அரசியலில் இறங்கிய பிறகு, முதல் 10 ஆண்டுகள் எதிர்க் கட்சியில் இருக்க வேண்டிய நிலையில் ஸ்டாலின் படிப்படியாகத் தன் நிலையை உயர்த்திக்கொண்டார். 

மக்களின் மனதில் தன்னைப் பற்றிய நல்ல பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். 

நா.பார்த்தசாரதியின் புகழ்பெற்ற ‘குறிஞ்சி மலர்’ நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடரில் சொக்கத் தங்கமாகச் சித்தரிக்கப்பட்ட லட்சியவாத நாயகனின் பாத்திரத்தை ஏற்று நடித்தார்.

எம்.ஜி.ஆர். இறந்த பிறகு நடந்த தேர்தலில், ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராக அவர் செயல்பட்ட விதம் தொகுதியின் அனைத்துத் தரப்பு வாக்காளர்களையும் கவர்ந்தது. 

1991-ல் தி.மு.க. படுதோல்வி அடைந்ததில் ஸ்டாலினும் தோற்றுப்போனார். 

ஆனால், 1996-ல் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அடுத்த ஆண்டில் சென்னை நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராகவும் மேயராகவும் அவர் செயல்பட்ட விதம் அவருக்கு மேலும் பேர் வாங்கித் தந்தது.

 2006-ல் தி.மு.க. மீண்டும் பதவியைப் பிடித்தபோது ஸ்டாலின் உள்துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் செயல்பட்டார்.
குடும்ப சவால்
காலத்துக்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதில் ஸ்டாலின் கட்சியில் முன்னணியில் இருக்கிறார். தகவல் தொழில்நுட்பத்தை சரியாக வரித்துக்கொண்ட தமிழக அரசியல்வாதிகளில் ஒருவர் அவர். பல ஆண்டுகள் பெரிய பொறுப்புகளை வகித்தபோதும் பெரிய ஊழல் குற்றச்சாட்டு எதுவும் அவர் மீது இல்லை.

கட்சித் தலைவராகவோ முதல்வராகவோ ஆவதற்கான தகுதியையும் ஆதரவையும் ஏற்படுத்திக்கொள்வதில் ஸ்டாலின் எந்தக் குறையும் வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கட்சிக்குள்ளும் தி.மு.க.வின் விசுவாச வாக்காளர்கள் மத்தியிலும் பொதுமக்களிடத்திலும் அவருக்குச் செல்வாக்கு இருக்கிறது. 

என்றாலும் ஒரு தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் இன்னமும் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஆற்றல்கள் பல உள்ளன.

தேர்தலின் போக்குகள் இன்னமும் தெளிவாக உருப்பெறாத நிலையில், ஸ்டாலினை முன்னிறுத்துவதன் மூலம் தி.மு.க. ஒருபடி முன்னால் நிற்க முடியும் என்பதே பலரது கணிப்பு.

தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்குவதற்கு முன்பே ஸ்டாலின் தமிழகம் முழுவதையும் சுற்றிவந்துவிட்டார். பெரிய பொதுக்கூட்டங்களை அதிகம் சாராமல், சின்னச் சின்னக் கூட்டங்களில் பேசினார். தொண்டர்களையும் மக்களையும் நேரடியாகச் சந்தித்துப் பேசி, அவர்களுடன் இயல்பாகப் புழங்கி, அவர்கள் மொழியில் உரையாடினார். 

அவருக்குக் கிடைத்த வரவேற்பு வெற்றிக்கான வாக்குகளாக மாறுமா என்பது வேறு விஷயம். ஆனால், ஆட்சி அமைக்க விரும்பும் ஒரு கட்சியின் முக்கியத் தலைவர் மக்களை நேரடியாகச் சந்தித்து உரையாடுவது ஜனநாயக அமைப்பில் முக்கியமானது.

அரசியல் சாணக்கியர்

முதல்வர் வேட்பாளர் என்று கட்சி ஸ்டாலினை அறிவிக்குமா என்பது சந்தேகம்தான். 
அதை வெளியில் ஆதரித்தாலும் மிக மூத்த தலைவர்கள் முழு மகிழ்ச்சியோடு ஏற்பார்களா என்பது கேள்விதான். 

ஆனால், அப்படி அறிவிப்பதற்கான காலம் கனிந்துவிட்டது என்று மக்களே சொல்லக்கூடிய அளவுக்கு ஸ்டாலின் தயாராகிவிட்டார். 

கருணாநிதி கட்சியின் கேள்விக்கு அப்பாற்பட்ட தலைவராக இருந்தாலும், கட்சியின் முகமாக ஸ்டாலின் மாறிக்கொண்டிருக்கிறார்.

பல களம் கண்ட கருணாநிதிக்கு இவை அனைத்தும் தெரியும். ஸ்டாலினை இந்த அளவுக்கு வளர அனுமதித்த அவருக்கு, அதன் தர்க்கரீதியான நீட்சி என்னவென்பது தெரியாமல் இருக்காது. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் உறவு உட்பட எங்கிருந்தெல்லாம் எந்த வகையான எதிர்வினைகள் வரும் என்றும் அவருக்குத் தெரியும். 

காட்சி ஊடகங்களால் மக்களின் உளவியல் வடிவமைக்கப்படும் இன்றைய யுகத்தில், எதிர்வினைகள் எப்படி ஊதிப் பெருக்கப்படும் என்பதும் தெரியும். அரசியலில் சாணக்கியராகக் கருதப்படும் அவர் ஸ்டாலின் விஷயத்தில் முடிவெடுக்கத் தயங்கும் நிலையில் இருப்பதாகவே தோன்றுகிறது.
குழப்பமான இந்தச் சூழலில் ஸ்டாலின் என்ன செய்வார்? 

அவர், தான் செய்ய வேண்டியதையெல்லாம் செய்துவிட்டார். 

தேர்தலில் கட்சி வெற்றிபெறுவதற்குத் தன் கடுமையான உழைப்பையும் செலுத்திவருகிறார். வருங்கால முதல்வர் என்ற பட்டத்தை நெடுங்காலமாகச் சுமந்துகொண்டிருக்கும் அவர் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. முதல்வர் நாற்காலிக் கனவு அவருக்கு இருக்கும் என்றால், அது குறித்த முடிவு அவர் கையில் இல்லை. 

ஆனால், பொதுவெளியில் அவருக்கான தகுதி கனிந்திருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஸ்டாலின், மாற்றத்துக்காகக் காத்திருக்கப்போகிறாரா அல்லது மாற்றத்தை நிகழ்த்தும் முனைப்பில் செயலாற்றப்போகிறாரா?
                                                                                                                                                                                                 -அரவிந்தன்

நன்றி:தமிழ் இந்து.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?