இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 14 மார்ச், 2016

5,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு எப்படி வந்தது?தமிழ்நாடு மின் வாரியம், சொந்த மின் நிலையங்கள்; மத்திய மின் நிலையங்கள்; தனியார் மின் நிலையங்களில் இருந்து, குறுகிய கால மற்றும் நீண்ட கால மின் கொள்முதல் மூலம், மின் தேவையை பூர்த்தி செய்கிறது.

மின் வாரியம், மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு முடிவு செய்த உடன், 'டெண்டர்' விடவும், விலை நிர்ணயம் செய்யவும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். 

மின் சட்டம், 62வது பிரிவின் கீழ் ஆணையம்,மின்சாரம் வாங்க அனுமதி வழங்கும்.
 ஆனால், தமிழ்நாடு மின் வாரியம், ஆணையத்தின் அனுமதி பெறாமல், 2011 முதல், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து வருகிறது.

குறிப்பாக, 2012ல், தனியார் நிறுவனங்களிடம், குறுகிய காலத்திற்கு, 1,200 மெகாவாட் மின் கொள்முதல் செய்ய, மின்வாரியம் முடிவு செய்தது. 

அப்போது, மின்வாரியம், மத்திய மின் நிலையங்களில், ஒரு யூனிட் மின் உற்பத்தி செலவு, மூன்று ரூபாய்க்கு கீழ் இருந்தது.

மின் வாரிய டெண்டரில் பங்கேற்ற தமிழக நிறுவனங்கள், ஒரு யூனிட், 5.15 ரூபாய்க்கு வழங்க விலைப்புள்ளி வழங்கின. இந்த விலை அதிகம் என கூறிய  மின்வாரியம், அந்த டெண்டரை ரத்து செய்தது, பின் மறு டெண்டர் கோரியது. 

அதில்,பழைய விலையை விட, ஒரு யூனிட், 5.50 ரூபாய் என்ற அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கியது
தற்கொலை பாதையில் மின் வாரியம் 
இவ்வாறு, குறுகிய கால ஒப்பந்தத்தில் மட்டும், வேண்டுமென்றே 5.15 விலையை விட்டு 5.50க்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதால், வாரியத்திற்கு, 5,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள காயன்குளத்தில், என்.டி.பி.சி., நிறுவனத்திற்கு, எரிவாயு மின் நிலையம் உள்ளது. தமிழ்நாடு மின்வாரியம், ஆணையத்தின் அனுமதி இல்லாமல்,2014 லோக்சபா தேர்தலுக்காக, அந்த மின் நிலையத்தில் இருந்து, ஓராண்டிற்கு, மிக அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது. 
இதனால், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது. 

தற்போது, மின்வாரியம், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதற்கு, தனியாரிடம் இருந்து, ஆட்சியாளர்கள் ஆணைக்கிணங்க குறைந்த விலை ஒப்பந்தப் புள்ளிகளை தள்ளி விட்டு அதிக கமிசன் கொடுத்த  தனியார்களிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது தான் உண்மையான  காரணம்.


மின் கட்டணத்தை இருமுறை கூட்டியும் மின்வாரியம் கடனில் தத்தளிக்க காரணம் இதுதான்.

மின் சட்டத்தின் கீழ், மின் வாரியம், தன் அனைத்து விவரங்களையும், பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். 

இதற்காக, மின் வாரியம், தன் மொத்த வருவாய்தேவை அறிக்கை, கட்டண நிர்ணய மனு ஆகியற்றை ஆண்டுதோறும், நவ., மாதத்திற்குள், ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். 
இந்த அறிக்கையில், வாரியத்தின் வருவாய், செலவு, மின் கொள்முதல் உள்ளிட்ட அனைத்து விவரங்களும்இடம்பெற்று இருக்கும். 
நவம்பர் மாதத்திற்குள், அறிக்கை தரவில்லை என்றால், 'டிசம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, ஆணையம், மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

அவ்வாறு தரவில்லை எனில், மின் வாரிய அதிகாரிகளை, ஆணைய அலுவலகத்தில் உள்ள நீதிமன்ற அறைக்கு அழைத்து, விசாரணை நடத்தலாம். 
இந்த அறிக்கையை சமர்ப்பித்தால், முறைகேடுகள் தெரியவரும் என்பதால், தமிழ்நாடு மின் வாரியம், வருவாய், தேவை அறிக்கையை சமர்ப்பிப்பது கிடையாது. 

மின் வாரியம், மின் உபகரணங்கள் கொள்முதல் செய்யும்போது, குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் பங்கேற்கும் வகையில், டெண்டர் கோருகிறது. 

அந்த நிறுவனங்களிடம் இருந்து, சந்தை விலையை விட, அதிக விலை கொடுத்து, தரமற்ற உபகரணங்களை வாங்கி வருகிறது.

இதனால், மின் வாரியத்திற்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன், மின் சாதனங்களிலும், அடிக்கடி பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்படுகிறது. 
தனியாருக்கு மக்கள்  வரிப்பணத்தை தாரைவார்த்து அதிக விலையில் அதிகளவு மின்சாரத்தை வாங்கி விட்டு தங்களுக்கு கிடைக்க கூடிய கமிசனை தாராளமாகப் பெற்றுக்கொண்டு தமிழகம் மின் மிகை மாநிலம் என்று வாய் கூசாமல் சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கிறார்.

 முந்தைய நான்காண்டு ஆட்சிக்காலத்தில் அனல்,புனல்,காற்றாலை,சூரிய மின்சக்தி என்று ஒரு மின்  நிலையத்தை கூட துவக்காமல் எப்படித்தான் இப்படி மனசாட்சிக்கு விரோதமாக110 லேயே  ஆட்சி செய்ய முடிகிறதோ?செய்தார்களோ??

                                                                                                                                     -நாகல்சாமி
                                                                                                         
 மின் வாரிய ஆணைய முன்னாள் உறுப்பினர்
========================================================================================

======================================================================================
இன்று,
மார்ச்-14.
காரல் மார்க்ஸ் 
உலக பண முதலைகள் ,தொழிலாளர் உழைப்பை உறிஞ்சு கொழுக்கும் முதலாளிகளின் கனவுகளில் இன்றும் வந்து பயமுறுத்துபவர் மாமேதை காரல்மார்க்ஸ் தான்.
அவர் தந்த உலகை புரட்டிப் போட்டும் பொருளாதார,அரசியல் கொள்கைதான் கம்யுனிசம்.
இன்றுவரை முதலாளித்துவவாதிகளால் பெரிதும் அவதூறு செய்யப்பட்டவர் மார்க்ஸ்.
 எனினும் மார்க்சின் செல்வாக்கை அவர்களால் அழிக்க இயலவில்லை. குறிப்பாக 2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிகளுக்கு பின்னர் மார்க்சின் செல்வாக்கு உயர்ந்தவண்ணம் உள்ளது. பொதுவுடமை எதிரிகளுக்கு இது புரியாத புதிர்! 
ஆனால் இதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. இந்த பூவுலகில் சுரண்டல் இருக்கும்வரை மார்க்ஸ் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.
“மார்க்ஸ் மீண்டும் எழுகிறார்” இது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் சமீபத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. “மார்க்ஸ் கூறியது இன்றும் பொருந்துமா?” எனும் தலைப்பில் பல மேற்கத்திய ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. 
எல்லாவற்றிற்கும் மேலாக 2015ஆம் ஆண்டின் இறுதியில் மக்களிடையே நடந்த வாக்கெடுப்பு ஒரு மகத்தான முடிவை முன்வைத்தது.
உலகம் எங்கும் உள்ள புத்தக வெளியீட்டாளர்கள், நூலகர்கள், புத்தக விற்பனையாளர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு நிபுணர் குழு மக்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கிய 200 நூல்களை தேர்ந்தெடுத்தது. இந்த நூல்களுக்கு காலவரையறை இல்லை. சில நூல்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இந்த 200 நூல்களை வடிகட்டி 20 சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த இருபது நூல்களும் மக்களிடையே வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. 
உலக வரலாற்றில் மிகவும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திய நூல்கள் குறித்து வாக்களிக்குமாறு வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த இருபது நூல்களில் கம்யூனிஸ்ட் அறிக்கையும் ஒன்று. சிறந்த 20 நூல்களின் பட்டியலில் மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் படைப்பான கம்யூனிஸ்ட் அறிக்கை இடம் பெற்றது என்பதே மார்க்சின் செல்வாக்கு குறையவில்லை என்பதை நிரூபிக்கும் சான்று ஆகும். 
அதைவிட முக்கியம் வாக்கெடுப்பின் முடிவுகள்! 
உலக வரலாற்றில் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திய நூல்களின் பட்டியலில் கம்யூனிஸ்ட் அறிக்கை இரண்டாவது இடத்தை பெற்றது.
முதல் இடத்தை டார்வினின் “உயிரினங்களின் தோற்றம்” எனும் நூல் பெற்றது. 
ஷேக்ஸ்பியரின் முழுத்தொகுப்பு(1534ம் ஆண்டு), பிளேட்டோவின் குடியரசு(கி.மு.300), மாக்கியவிவ்லியின் தி பிரின்ஸ் (1532), இமானுவேல் காண்டின் பரிசுத்த காரணத்தின் விமர்சனம்(1781), ஆதம் ஸ்மித்தின் தேசங்களின் செல்வம்(1776) போன்ற பல முக்கிய நூல்கள் பின்னுக்குச் சென்றன. 
இந்த நூல்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு முந்தையவை! 
அது மட்டுமல்ல; மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் ஆகியோரால் பெரிதும் போற்றப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தின் பொருள்(1922), ஸ்டீபன் ஹாக்கிங்கின் நேரத்தின் சுருக்கமான வரலாறு(1988), ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 (1948) ஆகிய தற்கால படைப்புகளையும் பின்னுக்கு தள்ளி கம்யூனிஸ்ட் அறிக்கை இரண்டாவது இடத்தை வென்றது. 
கம்யூனிஸ்ட் அறிக்கை ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்கான கீழ்கண்ட விளக்கம் அளிக்கப்பட்டது:“இது வெறும் அறிக்கை மட்டுமல்ல; உலகப் புரட்சிகர இயக்கத்தின் மீது மகத்தான தாக்கத்தை விளைவித்த சித்தாந்த கோட்பாடு மற்றும் நடைமுறை வழிகாட்டி. 
அது ஒரு வரலாற்றுப் பெட்டகம். பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய அரிய ஆய்வு ஆவணம்; உலக அரசியல் எத்திசையில் செல்லும் என்பதை கூறிய தீர்க்கதரிசனம்”பொதுவுடமையின் எதிரிகள் என்னதான் முயன்றாலும் மார்க்சின் செல்வாக்கை அல்லது ஏங்கெல்சுடன் இணைந்து அவர் உருவாக்கிய கோட்பாடுகளின் தாக்கத்தை மறைக்க முடியாது என்பதையே இந்நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன.
மார்க்சியம் கல்லறைக்கு சென்றுவிட்டது என்று கொக்கரித்தவர்களின் ஆணவத்திற்கு சரியான பதிலடியாக மார்க்சின் செல்வாக்கு இன்றும் ஆளுமை செலுத்துகிறது. 
“மார்க்சியம் வெல்லும்; ஏனெனில் அது அறிவியல் அடைப்படையில் உருவான உண்மை” என்றார் லெனின். இக்கூற்று இன்றைக்கும் பொருந்தும்.
“தத்துவவாதிகள் உலகைப் பற்றி பலவாறு வியாக்கியானம் செய்துள்ளனர். ஆனால், முக்கியமானது என்னவெனில் இந்த உலகை மாற்றுவதுதான்” என்று கூறினார் மார்க்ஸ். நடைமுறைப்பணியின் முக்கியத்துவம் குறித்து இவ்வளவு கூர்மையாக எவரும் கூறமுடியாது. 
மார்க்ஸ் நாற்காலி தத்துவவாதி அல்ல. அவர் வெறும் சித்தாந்தவாதியாக மட்டும் இருக்கவில்லை. தனது படைப்புகள் அனைத்தும் நடைமுறைப்பணிக்காகவே என்பதில் உறுதியாக இருந்தார். புரட்சிகர இயக்கங்களின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்தார். அதில் பங்கேற்றார்; வழிகாட்டினார்.1868ஆம் ஆண்டு செப்டம்பர் 28இல் முதல் அகிலம் என போற்றப்படும் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு உருவானது.
அடுத்த 8 ஆண்டுகள் 1872 வரை இந்த அமைப்பின் உயிர்நாடியாக இதயத்துடிப்பாக மார்க்ஸ் செயல்பட்டார். முதல் அகிலத்தின் தீர்மானங்கள் வரைவதிலிருந்து, அறைகூவல்கள் உருவாக்குவதிலிருந்து உலகம் முழுவதும் உள்ள இயக்க அமைப்புகளுடன் கடிதப் போக்குவரத்து வரை மார்க்ஸ் முழுவதுமாக ஈடுபட்டார். முதல் அகிலம் உருவான பிறகுதான் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உட்பட உலகம் எங்கும் புரட்சிகர இயக்கங்கள் உத்வேகம் பெற்றன. 
அவற்றின் மகத்தான ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் மார்க்சும் ஏங்கெல்சும் திகழ்ந்தனர். “காலம் கனிவதற்கு முன்பே புரட்சியில் ஈடுபட வேண்டாம்” என பாரீஸ் தொழிலாளர்களை மார்க்ஸ் எச்சரித்தார். ஆனால், 1870இல் பாரீஸ் கம்யூன் புரட்சி வெடித்த பொழுது புரட்சியாளர்கள் பக்கம் முழுவதுமாக நின்றார். அவர்களை ஆதரிக்குமாறு உலகம் எங்கும் உள்ள புரட்சியாளர்களை வற்புறுத்தினார். 
லண்டனில் பாரீஸ் புரட்சிக்கு ஆதரவாக இயக்கம் நடத்தினார்.பாரீஸ் புரட்சி நசுக்கப்பட்ட பிறகு ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டனர். 
பலர் லண்டனில் தஞ்சம் புகுந்தனர். 
இங்கிலாந்து அரசாங்கமும் அவர்களை துன்புறுத்தியது.
அப்போராளிகளை காக்கவேண்டியது நமது வர்க்க கடமை என மார்க்ஸ் வலியுறுத்தினார். மார்க்சின் முன்முயற்சி காரணமாக உலகம் எங்கும் நிதி உதவி திரட்டப்பட்டது. 
முதல் அகிலம் மூலமாக பாரீஸ் போராளிகளுக்கு உதவி செய்யப்பட்டது. இந்த உதவி மட்டும் இல்லையெனில் பாரீஸ் போராளிகள் பசியால் மடியும் அவல நிலை உருவாகியிருக்கும்.முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுமுறை பொதுவுடமைப் போராளிகளுக்கு இன்றும் ஒரு கூர்மையான ஆயுதமாகப் பயன்படும் வல்லமை கொண்டது. 
நிதிமூலதனம் புதிய வடிவமாக உருவாகியிருக்கும் இத்தருணத்தில் மார்க்சிய ஆய்வுமுறையை இக்காலகட்டத்திற்கு பொருத்துவது மிக அவசியம் ஆகிறது. 
விவசாயமும் தொழில் உற்பத்தியும் ஒரே சமயத்தில் உள்ள இந்தியா போன்ற சமூகத்தில் நிதிமூலதனமும் நவீனதாராளமயமும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை உள்வாங்கிக்கொள்ள மார்க்சியமே சிறந்த வழிகாட்டியாக இருக்க இயலும்.
 மார்க்சின் புகழ் நீடூழி வாழட்டும் 
======================================================================================