இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 4 மார்ச், 2016

ஸ்டாலினை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்!


சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் தமிழகத்தின் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தனது பேச்சின் இடையே, 
“ஸ்டாலின் என்ற பெயர் எனக்குப் பிடிக்காது; ஏனென்றால் நான் ஒரு ஜனநாயகவாதி” 
என்று குறிப்பிட்டார். 
இடம், பொருள், ஏவல் கருதி அங்கே அவருக்கு பதில் சொல்ல முடியவில்லை.
அவரது கூற்றின் பொருள், ஸ்டாலின் ஒரு அராஜகவாதி என்பதாகும்; ஸ்டாலின் ஜனநாயகம் அற்றவர் என்பதாகும்.
நேற்று முன் தினம்(மார்ச் 3) மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசியுள்ள பிரதமர் மோடி, சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலின் இருந்த போது சர்வாதிகார ஆட்சி நடந்தது என்றும், அவரது ஆட்சியில் யாரும் விமர்சிக்கவோ, கருத்துக் கூறவோ முடியாது என்றும், தற்போது தனது ஆட்சியில் தன்னை விமர்சிக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
உண்மையில் ஸ்டாலின் யார்?
ஜோசப் வி ஸ்டாலின். 
பாசிசத்தின் கோரப் பிடியிலிருந்து இந்த உலகத்தையே பாதுகாத்த மாவீரன். 
ஹிட்லருக்கு எதிரான போர் முனையில் ஒவ்வொரு தருணத்திலும் தனது தோழர்களுடனும், போரில் ஹிட்லருக்கு எதிராக தன்னோடு கைகோர்த்த கூட்டாளிகளுடனும் விவாதித்து விவாதித்து, ஒத்த கருத்தை உருவாக்கி உருவாக்கி அந்த கருத்தின் அடிப்படையில் - அந்த முடிவின் அடிப்படையில் - மிகுந்த ஜனநாயகப் பூர்வமாக அந்த மாபெரும் தேசபக்தப் போருக்கு தலைமையேற்ற மாமேதை ஸ்டாலின்.
“ ஸ்டாலின் சகாப்தம்” என்ற தலைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் அன்னா லூயி ஸ்ட்ராங் என்பவர் ஒரு நூலை எழுதினார். 
அந்த நூலில் ஸ்டாலினைப் பற்றி பளிச்சென்று ஒரு வரியில் வெளிப்படுத்துகிறார். 
“ஸ்டாலின், ஒரு கமிட்டி மனிதர்” என்பதுதான் அது.
இதன் பொருள் என்ன?
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான ஸ்டாலின், அதற்கு முன்பு பல்வேறு மட்டங்களில் செயலாளராக இருந்த போதிலும் சரி, பொதுச் செயலாளராக பணியாற்றிய போதிலும் சரி, செஞ்சேனையின் தலைமைத் தளபதியாக பணியாற்றிய போதிலும் சரி... எந்தவொரு முடிவையும் சம்பந்தப்பட்ட கமிட்டியின் முடிவாகவே மேற்கொள்ள அவர் தீவிர முயற்சி செய்வார். 
கட்சிக் கமிட்டி கூடும்போது எந்தவொரு குறிப்பிட்ட பிரச்சனையிலும் அவர் தனது கருத்தை ஒரு போதும் முன்வைப்பதில்லை;
மாறாக அந்தப் பிரச்சனை குறித்து கமிட்டி உறுப்பினர்களை பல சுற்று விவாதிக்கவிட்டு, மீண்டும் மீண்டும் கருத்துக்களைப் பேசவிட்டு, அதற்குப் பின்னர் இப்படிச் செய்தால் சரியாக இருக்கும் என்று தான் என்ன கருதினாரோ அந்த கருத்து பொதுக்கருத்தாக எட்டப்படும் வரை காத்திருந்து, அதற்குப் பின்னரே கமிட்டியின் பொது முடிவாக அதை மாற்றுவார்.
1917ம் ஆண்டில், மகத்தான சோவியத் புரட்சி நடப்பதற்கு முன்பு, அதைத் திட்டமிட்டு நடத்தும் நோக்கத்துடன் போல்ஷ்விக் கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழு தேர்வு செய்யப்பட்டது. ஏழு பேர் கொண்ட அந்தக் குழுவில் லெனின், ஸ்டாலின், ஜினோவியெவ், காமனெவ், டிராட்ஸ்கி, ஷோகோலின்கவ் மற்றும் புப்நவ் ஆகியோர் இடம்பெற்றனர். 
ஏழு பேருமே மாமேதைகள்தான்.புரட்சிக்குப் பிறகு, 1922ம் ஆண்டு கட்சியின் மத்தியக்குழுவால் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் 1953ம் ஆண்டு மார்ச் 4ந்தேதி அவர் மரணமடையும் வரையில், பொதுச் செயலாளராக பணியாற்றினார்.
இந்தக் காலக்கட்டத்தில் சோவியத் ஒன்றியத்தை இந்த உலகின் பிரம்மாண்டமான சக்தியாக மாற்றியதில், வளர்த்தெடுத்ததில், அதன் மூலம் ஒட்டுமொத்த உலகிற்கே ஒரு பொன்னுலகத்தை முன்னுதாரணமாக படைத்துக் காட்டியதில் ஸ்டாலின் ஆற்றிய பங்கு எவராலும் மறைக்க முடியாதது; மறுக்க முடியாதது. 
ஆனால் இந்த மகத்தான பணியில் ஒவ்வொரு முடிவையும் அவர் சம்பந்தப்பட்ட கமிட்டியைக் கூட்டித்தான் மேற்கொண்டிருக்கிறார். 
கமிட்டி என்ன முடிவு செய்ததோ அதைத்தான் அமல்படுத்தியிருக்கிறார். அதை அமல்படுத்துவதற்காக பொதுச் செயலாளர் என்ற முறையில் என்ன முயற்சிகளை, என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதையே அவர் தனது இறுதி மூச்சு வரை மேற்கொண்டிருக்கிறார்.அதனால்தான் சோவியத் ஒன்றியத்தின் செயல்பாடுகளைப் பற்றி அமெரிக்கப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்த பத்திரிகையாளர் அன்னா லூயி ஸ்ட்ராங், ஸ்டாலினைப் பற்றி ஒரே வரியில் “அவர் ஒரு கமிட்டி மனிதர்” என்றார்.
 இந்த கமிட்டி மனிதர், சோவியத் ஒன்றியத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த பூவுலகையும் பாசிச ஹிட்லரிடமிருந்து காப்பதற்காக நடத்திய மாபெரும் தேசபக்தப் போரையும் இதேபோன்றுதான் எதிர்கொண்டார்.
1940களில், நாஜி ஜெர்மனியின் தலைவர் அடால்ப் ஹிட்லர், வெறிகொண்டு உலக நாடுகளையெல்லாம் அழித்தொழித்து தனது காலடியின்கீழ் போட்டு மிதித்துக் கொண்டிருந்த சமயம், இரண்டாம் உலக யுத்தம் தீவிரமடைந்து கொண்டிருந்த சமயம், ஒவ்வொன்றாகக் கைப்பற்றி கடைசியில் சோவியத் ஒன்றியத்தை வீழ்த்தாமல் இந்த உலகை அடிமையாக்க முடியாது என்ற நோக்கத்துடன் படையெடுத்த தருணம்... 
அதற்கு முன்பு அமெரிக்காவையும் பிரிட்டனையும் வீழ்த்தாமல் உலக சாம்ராஜ்யத்தை கட்டமைக்க முடியாது என்று கங்கணம் கட்டி வெறித்தனமாகத் தாக்குதல் தொடுத்த தருணம்... காலத்தின் கட்டாயம்... எதிரெதிர் துருவங்களாக இருந்த அமெரிக்காவும் சோவியத்தும், பிரிட்டனும் சோவியத்தும் ஒருவருக்கொருவர் கைகோர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 
சற்றும் தயங்காமல் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டுடனும் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுடனும் கரம் கோர்த்தார் ஸ்டாலின்.அதற்குப் பிறகு 1941ம் ஆண்டு முதல் 1945ல் போர் முடியும் வரை இந்த இரண்டு நாடுகளின் தலைவர்களுடனும் நேரில் இரண்டு முறை விவாதித்திருக்கிறார் ஸ்டாலின்.
ஏராளமான கடிதப் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் அவர்களது ஆலோசனையை கேட்டுக் கேட்டு, அவர்களோடு விவாதித்து விவாதித்து, சோவியத் கட்சிக் கமிட்டியின் கருத்துக்களை அவர்களிடம் முன்வைத்து, அவர்களது மாற்றுக் கருத்துக்களையும் கேட்டு... முற்றிலும் ஜனநாயகப் பூர்வமாக ஒரு போரை தலைமையேற்று நடத்திய தளபதி இவ்வுலகில் இருந்தார் என்றால் அவர் ஸ்டாலின் மட்டுமே. 
பாசிசத்திற்கு எதிரான யுத்தமுனையிலும் கூட தனது கமிட்டியிடம், தனது கூட்டாளி நாடுகளின் தலைவர்களிடம் மிகுந்த ஜனநாயகத்தையும் அதே நேரத்தில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவருக்கே உரிய உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியவர் ஸ்டாலின். 
பாசிசத்திற்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் சோவியத் ஒன்றியம் நடத்திய அந்த மகத்தான தேசபக்த யுத்தத்தை இந்த உலகறியும்.
இன்றைக்கும் ஹிட்லரைப் போன்ற பாசிச சக்திகள் தலைதூக்குகின்றன. உலகின் நிலைமை மோசமடைந்துகொண்டிருக்கிறது.அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அந்த தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான உட்கட்சித் தேர்தல் அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சிக்குள் நடைபெற்று வருகிறது. 
இதில் அமெரிக்க அரசியல் தலைவர்கள் அனைவரும் அதிர்ச்சியடையும் விதத்தில், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக தொழில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து முன்னேறி வருகிறார்; அவர் உட்கட்சித் தேர்தல்களில் வெற்றிபெற்று வேட்பாளராகிவிடுவாரோ என்ற அச்சம் அந்த கட்சியின் தலைவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமெரிக்காவின் தலைவர்களிடமும் ஏற்பட்டிருக்கிறது.
டொனால்டு ட்ரம்ப்பைப் பார்த்து இவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள்?
ஏனென்றால், பெரும் கோடீஸ்வரரான டொனால்டு ட்ரம்ப், துவக்கம் முதலே தன்னை பாசிச சிந்தனைகளுடன் நெருங்கிய நபராகவே முன்னிலைப்படுத்தி வருகிறார். 
இனவெறியோடு பேசி வருகிறார். ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் அனைவரையும் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவேன் என்று கொக்கரிக்கிறார். அமெரிக்கப் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்கிறார். 
அவரது பேச்சு முழுவதும் ஒரு காலத்தில் ஹிட்லர் பேசியதைப் போல இருக்கிறது; இந்தியாவில் கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நரேந்திர மோடி பேசியதைப் போல இருக்கிறது. 
இந்தப் பேச்சில் அமெரிக்க மக்களின் ஒரு பகுதியினர் மயங்கிக் கிடக்கிறார்கள்.
பொருளாதார நெருக்கடியின் துயரத்தில் சிக்கியிருக்கும் மக்கள், அதிலிருந்து மீட்க யாராவது வரமாட்டார்களா என்று ஏங்குவார்கள். அந்த வாய்ப்பைத்தான் 1930களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார பெரு மந்தத்தைத் தொடர்ந்த காலகட்டத்தில் ஹிட்லர் பயன்படுத்தினார்.
அந்த வாய்ப்பைத் தான் கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தியாவில் நரேந்திர மோடி பயன்படுத்தினார். அந்த வாய்ப்பை தற்போது அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் பயன்படுத்த முயற்சிக்கிறார். அமெரிக்கப் பொருளாதாரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகின் பொருளாதார நிலைமை முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பின் விஷச் சூழலில் சிக்கி வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கிறது. 
ஒரு புறம், இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பெருவாரியான உழைக்கும் மக்களைப் பாதுகாக்க பல்வேறு வகைப்பட்ட இடதுசாரி இயக்கங்கள் கோடிக்கணக்கான மக்களைத் திரட்டி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. 
மறுபுறம், இந்த நெருக்கடியில் பெருவாரியான லாபத்தை இழந்துள்ள உலகப் பெரு முதலாளிகள், கார்ப்பரேட்டுகள் தங்களின் நலனைப் பாதுகாத்துக் கொள்ள வலதுசாரி பிற்போக்கு அரசியல் இயக்கங்களை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். 
இந்த இரண்டுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.
இந்த மோதலின் உச்சமாகவே வலதுசாரி பிற்போக்கு சக்திகள் தங்களை பாசிச சக்திகளாக வரித்துக் கொள்கின்றன. எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவரையும் ஒழிப்பது என்ற தீவிரமான நிலைபாட்டிற்குச் செல்கின்றன. இன்றைக்கு இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது அதுதான். 
எனவே, அனைத்து முற்போக்கு, இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட்டு, பாசிச சக்திகளை தலையெடுக்கவிடாமல் வீழ்த்த வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. அதைச் செய்வதற்கு ஸ்டாலின் என்றென்றும் உத்வேகம் அளிக்கிறார்.
                                                                                                                                -எஸ்.பி.ராஜேந்திரன்
நன்றி:தீக்கதிர்.
=========================================================================================================================
இன்று,
மார்ச்-05.

  • ஈரான் தேசிய மரம் நடுதினம்
  • இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமலுக்கு வந்தது(1964)
  • ஐரோப்பாவின் முதல் விமானமான குலோஸ்டர் மெட்டர் பறக்க விடப்பட்டது(1943)
  • பிரிட்டன் பர்மா மீது போர் தொடுத்தது(1824)
=========================================================================================
இரண்டாவது ஆஸ்கர் விருது, வாங்கிய "தூத்துக்குடி"க்காரர்.
கடந்த மாதம் 28-ந்தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தூத்துக்குடியை சேர்ந்த காட்டலாங்கோ லியோன் என்பவருக்கும் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. 

காட்டலாங்கோ லியோன்
அறிவியல், தொழில் நுட்ப பிரிவில், காட்டலாங்கோ லியோனுக்கும், அவரது குழுவினருக்கும் கூட்டாக ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. 

விருது விழாவில் அவர் ‘அனைவருக்கும் நன்றி’ என்று  தமிழில் கூறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
ஆஸ்கார் விருது வாங்கிய காட்டலாங்கோ லியோன் என்ற மேலைய வாசனைப்  பெயர் வைத்திருப்பவர் தமிழில்பேசுவதா?அந்த வியப்புதான் பார்வையாளர்களுக்கு.

காட்டலோங்கோ லியோன் சொந்த ஊர் நம் தூத்துக்குடி.

20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்தாலும் அழகாக தமிழ் பேசும் லியோன், அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் மிகவும் அவசியம். எனவே, தன் மகள் தமிழ் பேச, எழுத ஊக்குவிப்பதாகக் கூறினார். 
லாஸ் ஏஞெல்ஸில் ஒரு பள்ளியில் தமிழாசிரியராகவும் அவர் பணியாற்றுகிறார் என்பது அவரின் தாய் மொழிக்காதலை சொல்லுகிறது."அடுத்த தலை முறை தமிழை விட்டு விலகி செல்வதை நம்மால் முடிந்த அளவு தடுக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய அவரின் வேண்டுகோளாக இருக்கிறது.
தூத்துக்குடியில் லூர்து- ராஜம் மரிய சிங்கம் என்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர், ஆசிரியை தம்பதியரின் மகனாக பிறந்த இவர், கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் பி.இ. பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்கா சென்று அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டம் பெற்றார். அதில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துறையில் நிபுணத்துவம் பெற்றார்.

 லியோனுக்கு ரூபா என்ற மனைவி, சுருதி என்ற மகள் உள்ளனர். 

இவர்கள் அனைவரும் தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கல்வர் நகரில் வசித்து வருகிறார்கள்.

தற்போது சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க் நிறுவனத்தில் பணியாற்றி வரும் காட்டலோங்கோ லியோன் மற்றும் அவரது குழுவினர் ‘இட்வியூ’  (itview)  என்ற மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த மென் பொருள், திரைப்படத்தை முப்பரிமான வடிவில் பகுதி பகுதியாக அலசி ஆராய்வதற்கும் தேவையான காட்சிகளை புகுத்தவும்,திருத்தவும் உதவுவதாகும்.

ஆஸ்கார் விருது பெற்றது பற்றி லியோன் கூறுகையில்  ““எங்கள் பணிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இந்த விருது. இது மகிழ்ச்சியை தருகிறது. 'இட்வியூ' என நாங்கள்மென்பொருள்  உருவாக்கி இருப்பது எங்கள் கம்பெனிக்கு வெளியே நிறைய பேருக்கு தெரியாது.   எனது சகாக்கள் ராபர்ட் ராய், சாம் ரிச்சர்ட்ஸ் ஆகியோரும் இந்த மென்பொருள் உருவாக்கத்துக்கு  பங்களிப்பு செய்திருப்பது பெருமிதம் தருகிறது. அறிவியல் தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கார் விருது, குறிப்பிட்ட ஒரு படத்துக்கு உரித்தானது அல்ல. எல்லா படங்களுக்கும், ஸ்டூடியோக்களுக்கும் இந்த தொழில் நுட்பம் பயன்படும்.ஜுராசிக் பார்க் திரைப்படம் பார்த்ததே என்னை இது போன்ற கிராபிக்ஸ் துறை சார்ந்த மென்பொருள் உருவாக்கத்துக்கு தள்ளியது.”  என்றார்.
ஹாலிவுட் திரையுலகின்பெரிய மதிப்பு மிக்க விருதான  ஆஸ்கர் விருதினை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாழ்நாள் சாதனை பிரிவுக்காக தமிழர் ஒருவர் வென்றுள்ளார்.ஆஸ்கர் விருதினை பெற்ற இரண்டாவது தமிழர் லியோன்.

இவருக்கு முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வென்ற முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். 

தற்போது, காட்டலாங்கோ லியோன், ஆஸ்கர் வென்ற இரண்டாவது தமிழர் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளார்.
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 28-ம் தேதி (பிப்.28) நடைபெற்றது. அதற்கு முன்னதாக பிப்ரவரி 13-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் லியோனுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
'அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனை' (Scientific and Technical Achievements) பிரிவில் காட்டலாங்கோ லியோன் 2016-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். சாம் ரிச்சர்ட்ஸ், ராபர்ட் ஜே ஆகியோருடன் லியோன் விருதை கூட்டாக பெற்றுள்ளார்.
 லியார்னாடோ டி கேப்ரியோவுக்கு விருது கிடைத்ததைப் பற்றிப பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும்போது தமிழ் நாட்டில்  தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த காட்டலாங்கோ லியோன் என்பவர் பெருமைக்குரிய அகாடமி விருதைப் பெற்றது தாமதமாகவேநமக்கு தெரிய வந்துள்ளது.காரணம் அவரது பெயர் காட்டலாங்கோ லியோன் .ஐரோப்பிய பெயர் போன்றத்தன்மைதான்.

விருது பெற்ற லியோன் பேசுகையில்  "நான், மனைவி ரூபா மற்றும் மகள் ஸ்ருதிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அளித்து வந்த தொடர் அன்பும் ஆதரவும் எனக்கு ஊக்கமளித்தன. இந்த விருதினை எனது பெற்றோருக்கு நான் சமர்ப்பிக்கிறேன். இந்த விருது நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை எனக்கு உணர்த்துகிறது. அனைவருக்கும் நன்றி" என்று ஆங்கிலத்தில் நன்றி ஏற்புரை கூறி முடிக்கும்போது "எல்லாருக்கும் நன்றி" என தமிழில் பேசினார். அதுதான் அவரை தமிழர் என இனங்காட்டியது.

தனக்கு ஆஸ்கர்  கிடைப்பதற்கு வழிகாட்டியவர்களை  நினைவு கூர்ந்த லியோன், "எனது உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திலகவதி, தொழிலதிபர் வரதராஜன், எனது நண்பர் நடராஜன் ஆகியோரை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன். நான் அப்ளைடு இன்ஜினியரிங் படிக்க வேண்டும் எனத் தூண்டியதே என் ஆசிரியர் திலகவதி தான்"என்றார்.
"தொழில்நுட்ப ரீதியாக   தமிழ் சினிமா, ஹாலிவுட் படங்களுக்கு இணையாக போட்டிபோட முடியவில்லை.ஆனாலும் தற்பொதைய தமிழ் சினிமாக்கள்  கதைகரு,  சொல்லும் களம் ரீதியாக தமிழ் சினிமாக்கள்  நன்றாகவே இருக்கின்றன. நிறைய புதுமுக நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் உருவாகி வருகின்றனர். தமிழ் சினிமா இப்போது இருப்பது போலவே இருந்தாலே நன்றாக  இருக்கும்" என்றார் கட்டலாங்கோ .