இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 15 மார்ச், 2016

கவுரவக் காதல்கள்.

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தமிழ் நாட்டில் நடக்கும் ஒரு கொலை ஒட்டு மொத்த மக்களையும் பாதிக்க வைத்து விடுகிறது.

இன்றைய காலக் கட்டத்தில் வேற்று சாதியினர் காதல் திருமணங்கள் ,அதனால் ஏற்படும் கொலை அதிகமாக அதிர்வலைகளை உண்டாக்கி விடுகின்றன.

இதற்கு முன்னர் இது போன்ற கொலைகள் நடக்க வில்லையா?
காத்தவராயன் காலத்திற்கு முன்னிருந்தே நடந்துதான் வருகிறது.
தாழ்த்தப்பட்ட[எனக் கூறப்படும்] இனத்துடன் மேல் [எனக் கூறிகொள்ளும்]இனத்தினர் காதலில் இக்கொலைகள் அதிகமாக நடக்கிறது.

ஆனால் இது போன்ற காதல்கள் நடக்காமலா இருக்கிறது?
இரு பெற்றொர்கள் சம்மதத்துடன் ஊரழைத்து திருமணங்கள் நடத்தப்பட்டவைகளும் அதிகம்.இது போன்ற காதல் திருமணங்கள் தகவல் தொழில் நுட்ப ஊழியர் வட்டாரத்தில்  இது போன்ற திருமணங்கள் அதிகம் நடந்து உள்ளது.
ஓடிப்போய் திருமணம் செய்து பின் இரு தரப்பு பெற்றோருடன் சமரசமாகி வாழ்க்கை நடத்துபவர்கள் இருக்கிறார்கள்.

ஒரே சாதியில் காதலித்து படுகொலையில் முடிந்தவைகளும் இருக்கிறது.
இது போன்ற கொலைகளில் நாம் வளர்த்த பெண்ணை இன்று வந்தவன் தட்டிக்கொண்டு போவதா என்ற கோபம்தான் முதலில்,சாதி வேறுபாடு பின்னர்தான் என்கின்றனர் மன நல ஆய்வாளர்கள்.
பெற்றொருக்கு முதலில் எற்படும் கோபத்தை சிலர் சாதிக்குள் இணைத்து சாதிப் பிரச்னையாக்குவது தான் இங்கு நடக்கிறது என்கிறார்கள்.

செய்திகளை நாமும் கூர்ந்து படித்தால் அது உண்மை என்று ஒப்புக்கொள்ளும் நிலைதான்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கொலை செய்யப்பட்டு உள்ள நிலையில் அதற்கென்றே உள்ள சாதி பிழைப்புக் கூட்டம் அதை சாதி பிரச்னையாக்கி சாலை மறியல்,பிணத்தை நடவடிக்கை எடுக்கும் வரை எடுக்க மாட்டோம் என்று அரசியல் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

இவர்கள் காதல் செய்து பெற்றோரை மதிக்காமல் ஓடி  விடுவதால் உண்டாகும் கொலைக்கு அரசாங்கம் லட் சக்கணக்கில் நிவாரணம்,அரசு வேலை என்று அக்கொலை சாதிக்கலவரத்தை உண்டாக்கிவிடாமல் இருக்க கட்டப்பஞ்சாயத்து செய்ய வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் 2014ம் ஆண்டில் நடைபெற்ற கொலைகள் 33,981 என்று பதிவாகியுள்ளது.
இதில் 7% சாதி மோதல்களால் உண்டானவையாம்.

8.75கொலைகள் பல்வேறு விரோதத்தால் நடந்தவைகள்.

8.1% சொத்து தகராறில் நடந்தவைகள்.

7.4%காதல்,கள்ளக்காதல்கள்,மற்றும் கவுரவக் கொலைகளாம்.அப்படி நடந்த மொத்தக்கொலைகள்  2531 என தேசிய புள்ளை விபரங்கள் கூறுகின்றன.

இந்த வகை கவுரவக்  கொலைகள் 2012 ம் ஆண்டு 7.4% ஆகவும்,
2013 ம் ஆண்டு 7.1 %ஆகவும் இருந்துள்ளது.

இந்திய மாநிலங்களில் பல்வேறு தளங்களில் தமிழ் நாடு பின் தங்கி இருந்தாலும் இந்த காதல்,கள்ளக் காதல் கொலைகளில் இரண்டாவது மோசமான மாநிலமாக இடம் பெற்றுள்ளது.

1.உத்திர பிரதேசம்  -353 கொலைகள்.

2.தமிழ் நாடு           -351 கொலைகள்.[இன்னும் மூன்று நடந்திருந்தால் நாம்தான் முதலிடம்]

3.மகராஷ்டிரா          -332.

4.பீகார்                    -245.

5.ம.பிரதேசம்          -210.

இக் கவுரக் கொலைகளை நிறுத்த முடியாதா?நிச்சயம் முடியும்.காதலிப்போர் தங்கள் பெற்றோரிடம் தங்கள் காதலின் வலிமையை கூறி முழுசம்மதத்தையும் பெற்று திருமணம் முடிப்பதும்,ஒரு வேலையையும் பார்க்காத நிலையில் வருமானமே இல்லா நிலையில் திருமணம் செய்து கொண்டு கணவரின் வீட்டில் இருந்து கொண்டு மற்றதரப்பின் கண் முன்னே அடிக்கடி நடமாடுவது தான் இது போன்ற கொலைகளில் அடிப்படையாக பல கொலைகளில் உள்ளது.
இது போன்ற கொலைகளில் ஈடுபடுபவர்கள் காதலர்களின் ரத்த சம்பந்தமானவர்களே.சில இடங்களில் மட்டும் கொலை வெறியை தூண்டுபவர்கள் சாதி அமைப்பினர்கள்.
 அதை தவிர்க்க வேலை வாய்ப்பை உண்டாக்கிய பின்னர் திருமணம் செய்து கொண்டு சாதி எதிர்ப்புள்ளவர்கள் வேறு ஊர்களில் பாதுகாப்புடன் வாழ்வதே 90% இக்கொலைகளை முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்பதுதான் மனநல ஆய்வர்களின் கருத்து.

காலம் எத்தகைய மனக்காயங்களுக்கும் மருந்தாக அமைந்து விடும்.இது போன்ற காதல் திருமணங்களுக்கும் காலப் போக்கில் அங்கீகாரம் கிடைத்து விடும்.
அதற்கு முன்னர் சாதகப் பொருத்தம் பார்க்காமல் வரும் காதலை சாதிப் பொருத்தம் பார்த்து ஆரம்பியுங்கள்.
இன்றைய பொழுது திருமணத்திற்கு சாதகப்போருத்தமும் காதலுக்கு சாதி பொருத்தமும் தேவைப்படுகிறது.
======================================================================================
இன்று,
மார்ச்-15.

  • உலக நுகர்வோர் தினம்
  • தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது(1961)
  • முதலாவது இணைய டொமைன் பெயர் பதியப்பட்டது(1985)
  • சூரிய குடும்பத்தில் அதிவேகமான பொருளான 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது(2004)

 நுகர்வோர் தினம்.
இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 டிசம்பர் 24ல் சட்டமாக இயற்றப்பட்டது. 
நுகர்வோர் தக்க நிவாரணம் பெற இச்சட்டம் நமக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.

இச்சட்டம் மூலம் பெறப்பட்ட
உரிமைகள்
* நுகர்வோர் உரிமை பாதுகாப்பு
* நுகர்வோர் அறிந்து கொள்ளும் உரிமை
* குறைகள் கேட்பதற்கான உரிமை
* தேர்ந்தெடுக்கும் உரிமை
* குறைகளை முறையிடுவதற்கான உரிமை
* நுகர்வோர் கல்வி உரிமை
* நுகர்வோர் சட்டம், நுகர்வோருக்கு தன் இழப்பிற்கு நிவாரணம் மற்றும் இழப்பு தொகை பெற பெரிதும் உதவுகிறது.
* உணவு பொருளில் கலப்படம் செய்தல், வங்கி மற்றும் தபால் சேவை குறைபாடு, கள்ளச்சந்தை, திரையரங்குகளில் அதிக விலைக்கு விற்கப்படும் டிக்கெட் மற்றும் மின் விசிறி, குளிர்சாதன இயக்கத்தில் உள்ள
குறைபாடு, அரசு பஸ்களில் பயணத்தில் ஏற்படும்
குறைபாடுகள், டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பயணிகள் மேல் உள்ள அலட்சிய போக்கு, டவுன் பஸ், விரைவு பஸ், சொகுசு பஸ் என அதிக கட்டணம் வசூலிக்கும் போக்குவரத்து நிர்வாக குறைபாடு.
மற்றும் மின் வாரிய சேவை குறைபாடு, பழுந்தடைந்த மீட்டர், அதிகளவு காட்டும் மீட்டர், மின் இணைப்பு தாமதம், முன்னறிவிப்பு இன்றி மின் தடை, பழுதான மின் கம்பியால் மரணம், காப்பீட்டு கழகத்தில் உரிய நேரத்தில் இழப்பீடு பெற முடியாமை, ரயில் பயணச் சேவை குறைபாடு,
மருத்துவமனைகளில் நோயாளிக்கு ஏற்படும் சேவை
குறைபாடு, அதிக கட்டணம் வசூலித்தல், நகர் மற்றும் கிராம நிர்வாகங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர்
குறைபாடு, பொது விநியோகத்திட்ட குறைபாடுபோன்ற குறைபாடுகளை களைந்து இழப்பீடு பெற
நாம் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்களை அணுகலாம்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை அரசு இயற்றினாலும், நுகர்வோர் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். சட்ட விரோத செயல்களை அனுமதிக்க இடமளிக்கக்கூடாது. 
பொருள் வாங்கியதில் இழப்பு, சேவை குறைபாடு போன்றவற்றை தக்க அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மக்களின் விழிப்புணர்வு மிகமிக அவசியம். அரசாங்கம், மாணவர்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்த, நுகர்வோர் குழுக்களை பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

1. மாவட்ட குறைதீர் மன்றம்: இதன் தலைவர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி. வணிகம் மற்றும் கல்வியியலில் தேர்ந்த ஒரு உறுப்பினரும், சமூக சேவையில் தேர்ந்த ஒரு பெண் உறுப்பினரும் குறை கேட்பர். இழப்பீட்டு தொகை ரூ.20 லட்சம் வரை பெற, இந்நீதிமன்றத்தை அணுகலாம்.

2. மாநில குறைதீர் மன்றம்: இதன் தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி. ஒரு உறுப்பினர் பொருளாதாரம் போன்ற துறையில் தேர்ந்தவராகவும், சமூக சேவையில் தேர்ந்த ஒரு பெண் உறுப்பினரும் குறைகேட்பர்.
இழப்பீட்டு தொகை ரூ.ஒரு கோடி வரை பெற, இந்நீதிமன்றத்தை அணுகலாம்.

3. தேசிய குறைதீர் மன்றம்: இதன் தலைவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி. நான்கு உறுப்பினர்கள், அதில் ஒரு பெண் உறுப்பினரும் குறைகேட்பர். இழப்பீடு தொகை ரூ.ஒரு கோடிக்கு மேல் பெற, இந்நீதிமன்றத்தை அணுகலாம்.

நுகர்வோர் நீதிமன்றங்களில் தீர்ப்புகளை மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் வழங்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது. 2002ம் ஆண்டு வரை நீதிமன்ற கட்டணம் ஏதுமின்றி வழக்கு நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டது. 2002 ம் ஆண்டு திருத்த சட்டத்தில் கட்டணம் ரூ.100 முதல் ரூ.500 வரை இழப்பீடு தொகைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீதிமன்ற ஆணைகளால் திருப்தி அடையாத நுகர்வோர் 30 நாட்களுக்குள் அடுத்த நீதிமன்றத்தை அணுகலாம். நுகர்வோர் விழிப்புடன் இருந்து தாம் ஏமாற்றப்படுவதை தடுத்து கொள்ள வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வலியுறுத்துகிறது.

======================================================================================
இதில்தான் தமிழகம் இரண்டாவது இடம்.