இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 19 மார்ச், 2016

பாரத் மாதா பச்சாக்கள்,,,?

காலை எழுந்தவுடன் நீங்கள்  'பாரத் மாதாக்கி ஜெ " என்று மூன்று முறை பக்கத்து வீட்டுக்காரருக்கு கேட்கும் படி சொல்லித்தொலையுங்கள் .

இல்லாவிட்டால் 'காபி தா"என்று உங்கள் மனைவியிடம் சொல்ல நாக்கு இருக்காது.
இந்திய பாரத மாதா பக்தர்களால் நாக்கு அறுக்கப்பட்டிருக்கலாம்.
உங்கள் டூத் பேஸ்டில் உப்பு,கரி இல்லாவிட்டால் ஒடி வருவதை விட பாரத மாதா பக்தர்கள் வேகம் அதிகம்.

நம் தமிழ் நாட்டில் உள்ள அம்மா பக்தர்களிடம் பேசும் போது எப்படி நாமும் அம்மா என்று மனசாட்சிக்கு விரோதமாக சொல்லித்தொலைக்க வேண்டியிருக்கிறதோ அதை விட பாரத் மாதா பக்தர்களிடம் அதக கவனமாக இருக்க வேண்டும் .

காரணம் ஆட்டுக்கறியை சமைத்தவரையே மாட்டுக்கறி சமைத்ததாக கூறி கோமாதா வழியே சிவலோகம் போக வைத்த கூட்டம் இது.

ஆளும் இந்து இந்திய பிரதமர் மோடியின் 100% ஆதரவு பெற்ற காவிக்கும்பல் இது.

சரி இந்த பாரதமாதா,பாரதமாதா என்கிறார்களே அவர் யார் என்று உங்களுக்கு ஒரு அநியாயமான சந்தேகம் வந்திருக்கலாம்.

பொதுவாகவே ஒவ்வொருவரும் தங்கள் நாட்டை  தாய் திரு நாடு என்றுதான் சொல்லுகிறார்கள் .உலகம் முழுக்க இதுதான் பழக்கம்.யாரும் தந்தை திரு நாடு என்று சொல்லுவதில்லை.நோர்வேயோ,பின்லாந்தோ தான் தந்தை நாடு என்பதாக கேள்வி.

அப்படி விடுதலை போராட்டம் குமுறி எழுந்து நடந்து கொண்டிருந்த போது "தாய் நாட்டை பரங்கியர் கையில் இருந்து காப்பாற்ற குரல்கள் ஒழித்த போது "நம் பாரத தேசம்,தாய் நாடு விடுதலை பெற வேண்டும் என்ற கூப்பாடுகள் எழுப்பப் பட்டன.[சிலர் இதை கோஷம் என்பார்கள்.]

அப்போதுதான் அப்போதிருந்த மோடி போன்றோரின் காவி முன்னோர்கள் இடைச்செருகலாக பாரத நாட்டையும் ,தாய் நாட்டியும் இணைத்து பாரத மாதாக்கு ஜே வை உண்டாக்கி அதையே தேசத்தின் விடுதலை குரலாக ஒழிக்க வைத்தார்கள்.அதற்கு மாற்றாக  மற்றொரு வார்த்தையும்" வந்தே மாதரம்" என்று எழுப்பப்பட்டன.
பாரத மாதாகீ ஜே மற்றும் வந்தே மாதரம் என்பது பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தில் அனைவரையும் ஒற்றுமைப்படுத்த பயன்படவில்லை; 

மாறாக நாட்டு மக்கள் இந்துக்கள்,முஸ்லீம்கள்,கிருத்துவர்கள் ஒன்றுபடுவதை தடுத்து சிறுபான்மையினரை பிளவு படுத்தவே பயன்பட்டது என்று வரலாற்று நிபுணர்கள் கருத்தாக் உள்ளது. 

வரலாற்று நிபுணர்கள் எரிக் ஹாப்ஸ்வம் உள்ளிட்ட பல வரலாற்றியல் அறிஞர்கள், வரலாற்று ரீதியாக இந்த கோஷம் எதனால் வந்தது என்றும் அதனால் இதுவரை என்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்தும் ஆதாரத்துடன் கருத்துக்களை கூறியுள்ளனர். 
அவர்கள் கூறியுள்ளதாவது:பாரத மாதா என்பதும் வந்தே மாதரம் என்பதும் மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தின. 

1875ல் வங்கக் கவிஞர் பக்கிம்சந்திர சட்டர்ஜி வந்தே மாதரம் என்ற பாடலை எழுதினார். அந்த பாடல் பெண் இந்து தெய்வம் துர்க்காவைப் போற்றி இந்திய நாட்டை அந்த துர்க்கையுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டதாகும்.

இந்திய நாட்டை பாரத மாதா என்றும் அவளின் குழந்தைகள் அவளின் துயர்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்ற வேதனையை வெளிப்படுத்தியும் அந்நியருக்கு எதிராக விழிப்படைந்து கிளர்ந்தெழ வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. 

இந்திய நாட்டின் தேசிய உணர்வை இந்து மத உணர்வுடன் அதனடிப்படையிலான தேசியமாக சுருக்கி பார்த்தது. இதனால் இயல்பாக அனைத்து சிறுபான்மையினரையும் இந்த கோஷமானது ஒருங்கிணைக்க முடியவில்லை. 

பாரத மாதா என்பதே மதவாத அடிப்படையை கொண்டிருந்ததால் 1937ல் தேசிய கீதத்தை எழுதிய மகாகவி ரவீந்திரநாத் தாகூர், அன்றைய மேற்கு வங்க காங்கிரஸ் தலைவருக்கு மத அடிப்படையை கொண்டுள்ளதால் வந்தே மாதரத்தை தேசிய கீதமாக கொள்ள முடியாது என்று கடிதம் எழுதினார். 

வந்தே மாதரத்தின் அடிப்படை பெண் தெய்வமான துர்க்கையைப் போற்றிப் புகழ்வதாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

சாவர்க்கர்
இதனால் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்தமதத்தினர் இதை ஏற்றுக் கொள்வதில்லை. 

இதனால் தாகூரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு வந்தே மாதரத்திலுள்ள மத அடிப்படையிலான கருத்துக்களை காங்கிரஸ் நீக்கியது.

ஆர்எஸ்எஸ் தலைவர் வினாய் சாவர்க்கர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. 

அவர்கள் இந்திய தேசத்தை இந்து தெய்வத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவே விரும்பினர். 

1923ல் இந்துத்துவா கோட்பாடு உருவாக்கப்பட்டது. 

சாவர்க்கர் தனது இந்துத்துவ தேசியம் குறித்த நூலில் தேசியத்தை மதத்தின் அடையாளமாகவே உருவாக்கினார். 

`இந்திய நிலமானது புனிதமானது, அதில் இந்துக்களுக்கு மட்டுமே இடமுண்டு.
அதனால் இந்துஸ்தான் ஆகிறது. மற்ற நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் மத்திய கிழக்கு பகுதியிலிருந்து குடியேறியவர்களுமான கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இந்திய நாட்டினர் அல்ல. 

எனவே இந்துஸ்தான் என்பது புனிதமான தெய்வத்தின் மகள் ஆகும்‘ என்று அவர் எழுதினார். இதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பக்கிம் சந்திராவின் பாரத மாதா அடையாளத்தை பெரிதாக்கினர். 

ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் பாரத மாதா தேசிய கொடியை அல்ல, காவிக் கொடியை ஏந்திய பதாகைகளுடன்தான் தொடங்குவர். 

அது இன்று வரை தொடர்கிறது. 

எனவே பாரத மாதாகீ ஜே என்பதும் வந்தே மாதரம் என்பதும் இந்துத்துவா சிந்தாந்தத்தின் அடித்தளமாகும். 

இதற்கும் இந்திய தேசத்துக்கும் ,தேச பக்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

விடுதலை பெற்ற பின்னர்  காங்கிரசு ஆட்சிக்கு வந்ததால் அடங்கிக்கிடந்த ஆர்.எஸ்.எஸ்,காவிக் கும்பல் தற்பொது அவர்களின் அரசியல் வடிவான பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் தூங்கிக்கொண்டிருந்த பாரத மாதாவை குரல் எழுப்பி விழிக்க வைக்கிறார்கள்.

இவர்கள் கோட்டம் முந்தைய வாஜ்பேய் பாஜக ஆட்சியில் இவ்வளவு இல்லை.மோடி வந்தவுடன் இப்படி காவிக்கொடியுடன் துள்ளுகிறார்கள்.இரண்டு காரணங்கள்தான் அதற்கு.
1.வாஜ்பேய் மித காவிக்காரர்.அத்துடன் அவர் அரசு  சிறும்பான்மை அரசு.அவர் ஆட்சி செய்ய  பக்கபலமாக நின்றவர்கள் திமுக உட்பட்ட மதச்சார்பற்ற கட்சியினர்.அவர்களை மீறி காவிக்கும்பலால் ஒன்றும் செய்ய இயலவில்லை.அடக்கி வாசித்தது.

2.மோடி காவியிலேயே ஊறி அதையே தனது நிறமாக்கிக்கொண்டவர்.இந்திய மக்கள் கொடுத்த அசுர பெரும்பான்மை.

 சில நாட்களுக்கு முன்னர் பாரத மாதாகீ ஜே என்று கூக்குரல்  போட மறுத்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் மஜ்லீஸ் இ இத்தாத் முஸ்லீமான் என்ற கட்சியைச் சேர்ந்த வரிஸ் பதான் என்ற எம்எல்ஏ வை இடை நீக்கம் செய்துள்ளனர் .

இதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பேர் வழிகள் பாரத் மாதாக்கி  ஜே என்று கோஷம் போட மறுப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இங்குள்ள முஸ்லீம்கள்,கிருத்தவர்களை பாபர் கால வந்தேறிகள் என்று சொல்லும் காவிகள் ராமர் காலத்தில் கைபர் கனவாய் வழியே ஆப்கானிஸ்தான்,பாரசீகம் போன்றவற்றில் இருந்து சற்று முன்னதாக வந்தேறியவர்கள்தானே.

உண்மையான பாரத் மாதா பச்சாக்கள் திராவிடர்கள்தானே.வரலாறு காவிகளுக்கு மட்டுமல்ல.மற்றவர்களுக்கும்தெரியும்.வெறும் ராமாயானமும்,மகாபாரதமும் மட்டுமே இந்திய வரலாறு கிடையாதுங்க.

"சங்கறுப்பது எம் குலம் ,சங்கனாருக்கு ஏது குலம்' என்ற நக்கீரர் நாட்டில் நாக்கறுக்க ஒரு கூட்டமா?

======================================================================================
இன்று,
மார்ச்-19.
             இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் மறைவு (1998)
  • இந்தியாவும் வங்கதேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன(1972)
  • நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது(1861)
  • புளூட்டோவின் ஒளிப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்டது(1915)
  • சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது(1932)
  • அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது(2002)
======================================================================================
இ.எம்.எஸ். எனும் மாமேதை
-மு.அன்பரசன்

இந்திய நாட்டின் மகத்தான மார்க்சிய சிந்தனையாளர், புகழ்பெற்ற அறிஞர், கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிறுவகத் தலைவர்களில் ஒருவரான இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் 
1909 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதியன்று பரமேஸ்வரன் நம்பூதிரிபாட் - விஷ்ணுதத் அந்தர்ஜனம் தம்பதியின் புதல்வராகப் பிறந்தார்.
இ.எம்.எஸ் அவர்களது குடும்பம் ஒரு நிலப்பிரபுத்துவ குடும்பமாகும். 
1920 ஆம் ஆண்டு வரை பிராமணக் குடும்பத்தின் சம்பிரதாயங்கள்படி தான் இ.எம்.எஸ் தாயார் அவரை வளர்த்தார்.
1920 - ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் பிறருடன் சேர்ந்து பழகவும் பொது நிகழ்ச்சிகளுக்கு போகவும் அவர் ஆரம்பித்தார். பல்வேறு தரப்பு மக்களுடன் தொடர்பு கொண்டார். அப்போது தான் அவர் ஒரு விஷயத்தை நன்கு கவனித்தார்.
அன்றைய நிலப்பிரபுத்துவ அமைப்புமுறையில் குத்தகை விவசாயிகள் அந்த முறைக்கு எதிராக கடுமையான அதிருப்தி கொண்டிருப்பதை அவர் கண்டார்.அந்த சமயத்தில் தான் இளம் நம்பூதிரிகள் பலரை சேர்த்து நம்பூதிரி நல உரிமைச் சங்கம் என்ற சங்கத்தை உருவாக்கினார். சங்கத்தின் வளர்ச்சிக்காக படிப்படியாக ஆங்கிலம் கற்றுக் கொண்டார். 
பகுத்தறிவு வாதங்களை கேட்பது, தினசரி செய்தித்தாள்கள் படிப்பது, சமூக சீர்திருத்தம் குறித்து படிப்பது போன்றவற்றிற்கு இ.எம்.எஸ் கற்றுக் கொண்ட ஆங்கிலம் மிகவும் உதவியாக இருந்தது.
1927ஆம் ஆண்டில் அவருக்கு 18 வயது நடக்கும் போது அவர் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பாலக்கோடு விக்டோரியா உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். 
அங்கு அவர் சிறந்த மாணவர் என்ற முறையில் பள்ளியில் இரண்டாம் பரிசு பெற்றார்.படிப்பில் ஆர்வமாக இருந்த நேரத்திலேயே நம்பூதிரி நல உரிமைச் சங்கத்தின் செயல்பாடுகளிலும் பத்திரிகை நடத்துவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார். 
பல அரசியல் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் தான் பகத்சிங் மற்றும் அவர்களது தோழர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பேரணி நடந்தது. 
இதில் இ.எம்.எஸ்சும் கலந்து கொண்டார்.1932 ஆம் ஆண்டு இரண்டாவது சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கியது.
இந்த சமயத்தில் தான் இ.எம்.எஸ் தன் படிப்பைக் கைவிட்டு போராட்டத்தில் குதிப்பது என்று முடிவு செய்தார். போராட்டத்தில் ஈடுபட்ட இ.எம்.எஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு சில நாட்களிலே இ.எம்.எஸ் கண்ணூர் சிறைக்கு மாற்றப் பட்டார். அந்த சிறையில் தான் புரட்சி வீரர் பகத்சிங்கின் சக தோழர்களான கமல்நாத் திவாரி, கிரண் சந்திரதாஸ் மற்றும் புரட்சியாளர் ஆச்சாரியா, சக்ரவர்த்தி போன்றோர் இருந்தனர்.
 தோழர் இ.எம்.எஸ்சுக்கு சிறை வாழ்க்கையின் போது தான் இளம் கம்யூனிஸ்ட் தலைவர் அமீர் ஹைதர்கானுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. அதுவே தோழர் இ.எம்.எஸ்.ஐ கம்யூனிஸ்ட் ஆக மாற்றியது.20 மாதம் சிறை வாசத்திற்கு பிறகு இ.எம்.எஸ் விடுதலையான பல மாதங்களுக்குப் பிறகு ஆர்யா அந்தர்ஜனத்துடன் திருமணம் நடந்தது.
இந்த குடும்ப வாழ்க்கை அவர்களுக்கு இரண்டு மகன்களையும் இரண்டு மகள்களையும் அளித்தது.சிறை வாழ்க்கை மற்றும் பல களப்பணிகள் ஆற்றிய அனுபவத்தின் அடிப்படையில் இ.எம்.எஸ் ஒரு உறுதியான முடிவை எடுத்தார். 
குடும்பத்தில் தனக்குள்ள பங்கை விற்று அதை கட்சிக்குக் கொடுப்பது என்று முடிவு செய்தார். இந்த முடிவை அவரது மாமியாரும் மைத்துனரும் கடுமையாக எதிர்த்தனர். ஆனாலும் அவரது மனைவி இ.எம்.எஸ் சுக்கு உறுதுணையாக இருந்தார். 
தோழர் எடுத்த முடிவின் படியே தனது சொத்துக்களை கட்சிக்கு கொடுத்தார்.1950 ஆம் ஆண்டுகளில் தோழர் இ.எம்.எஸ் மத்தியக் குழுவிற்கு பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் கட்சியின் அன்றாடப் பணிகளை அவர் கவனிக்க வேண்டும் என்றும் முடிவு செய்தது.
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் இ.எம்.எஸ் போட்டியிட்டார்.
நான்கு முனை போட்டியில் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் இ.எம்.எஸ் தோல்வி அடைந்தார்.இரண்டாவது பொது தேர்தல் 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது. 
இதில் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு கேரளாவில் உள்ள நீலேஸ்வரம் சட்டமன்றத் தொகுதியில் இ.எம்.எஸ்சை தனது வேட்பாளராக நிறுத்தியது. இந்த தேர்தல் தான் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் ஒருபெரும் திருப்புமுனை ஆகும். அப்போதுமொத்தமிருந்த 126 தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்அதை ஆதரித்த சுயேச்சை வேட்பாளர்கள் 64 இடங்களில் பெற்றி பெற்றனர்.
 இந்த வெற்றியானது கேரளாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் முற்போக்கான சிந்தனை கொண்ட மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.ஒரு நியமன உறுப்பினருடன் 65 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து இ.எம்.எஸ்சை சட்டமன்ற கட்சித் தலைவர் ஆக தேர்வு செய்தனர்.
இஎம்எஸ் தலைமையில் புதிய அரசாங்கம் ஏப்ரல் 5ஆம் தேதி பதவியேற்றது. அன்றைய தினம் மாலையில் திருவனந்தபுரத்தில் ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது. 
இ.எம்.எஸ் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை விளக்கி பேசினார்.தோழர் இ.எம்.எஸ் தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற ஒரு வார காலத்திற்குள் கேரள கம்யூனிஸ்ட் அமைச்சரவையானது ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. 
நில உடைமையாளர்கள் அந்த நிலத்தில் பயிர் செய்யும் குத்தகையாளரைவெளியேற்ற முடியாதபடி அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சட்டமன்றத்தில் பல வரலாற்று சிறப்பு மிக்க மசோதாக்களை நிறைவேற்றியது.
முற்போக்கான கல்வி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் சட்டமாக நிறைவேற்றியது. 
தொழிற்சங்க தகராறில் காவல் துறை தலையிடாது என்று பிரகடனம் செய்தது. எவர் ஒருவரையும் கம்யூனிஸ்ட் என்று கூறி அரசாங்க வேலையை மறுக்கும் மிக மோசமான போக்கிற்கு இந்த அரசாங்கம் ஒரு முடிவு கட்டியது. நீண்ட கால அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இப்படி எண்ணற்ற செயல்களை இ.எம்.எஸ் தலைமையிலான அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் செய்து முடித்தது. 
1959 ஆம் ஆண்டு மத்தியில் உள்ள நேரு அரசாங்கம் அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவை தவறான முறையில் பயன்படுத்தி கேரள அரசங்கத்தை கவிழ்த்தது. 1960 ஆம் ஆண்டு கேரளாவில் இடைத்தேர்தல் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக காங்கிரஸ், முஸ்லீம் லீக், கிறிஸ்துவ திருச்சபை மற்றும் நாயர் சர்வீஸ் சொசைட்டி ஆகியவை போட்டியிட்டன.
கம்யூனிஸ்ட் கட்சி இந்த தேர்தலில் தோற்றாலும் 1957 ஆம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் போது அதனுடைய வாக்கு விகிதம் அதிகரித்தது. இ.எம்.எஸ் கேரளா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஏராளமான பொது கூட்டங்களில் மக்களை சந்தித்து இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். 
தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 42 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது.இந்த கேரள தேர்தல் முடிவுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்திய அளவில் மட்டுமல்ல ஒரு சர்வதேச அளவில் பெரும் செல்வாக்கை தேடிக் கொடுத்தது.
அது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பலமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே எனும் உண்மையை உலகிற்கு உணர்த்தியது.
ஆயினும், மத்திய காங்கிரஸ் அரசாங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு தரக் கூடாது என்று உறுதியாக இருந்தது. எனவே யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தை சொல்லி சட்டமன்றத்தை கலைத்தது.
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகியவை பங்கு பெற்றன. 
இந்த அணிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தது.தோழர் இ.எம்.எஸ் இரண்டாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அரசாங்கம் ஐந்து ஆண்டுகாலம் நிறைவு செய்து நல்லாட்சியை மக்களுக்கு வழங்கியது. 1978ஆம் ஆண்டு ஐலந்தரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இந்த பொறுப்பில் 1992 ஆம் ஆண்டு வரை இருந்தார்.
இந்த 14 ஆண்டுகளில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தஸ்தும் செல்வாக்கும் மிகப்பெருமளவு அதிகரித்தது. 
குறிப்பாக இந்த 14 ஆண்டுகளில் இந்திய நாடு பல பிரச்சனைகளைக் கண்டது.பஞ்சாப் பிரச்சனை, அசாம் பிரச்சனை, பாபர் மசூதி இடிக்கப்பட்டது, மொழிப்பிரச்சனை, மத்திய, மாநில உறவுகள், அந்நிய மூலதன ஊடுருவல், நதி நீர் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு மார்க்சிய நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இ.எம்.எஸ் கட்சிக்கு வழிகாட்டினார். 
இப்பிரச்சனைகள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் எழுதினார்.1992 ஆம் ஆண்டில் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 14 வது மாநாட்டில் அவரது உடல்நிலை காரணமாக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.
அவரை தொடர்ந்து ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பொதுச் செயலாளர் ஆனார். அவர் இ.எம்.எஸ்சின் சேவையை பாராட்டிப்பேசினார். 14 ஆண்டுகள் கட்சிக்கு தலைமை தாங்கி நடத்தியதை பெருமையாக சுட்டிக் காட்டினார். இந்த மாநாட்டிற்கு பிறகு இ.எம்.எஸ் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்திலேயே தங்கி விட்டார்.
அவர் சொந்த ஊருக்கு திரும்பிய உடன் மிகப்பெரும் பகுதி நேரத்தை எழுதுவதற்கே அர்ப்பணித்தார். இடையிடையே அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்திய குழு கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டார்.அத்துடன் தேசாபிமானிக்கு தினமும் கட்டுரை எழுதினார். 

அதே போன்று சிந்தா வார இதழ் மற்றும் பிரண்ட் லைன் ஏட்டிற்கும் கட்டுரைகள் எழுதி வந்தார்.

1997 ஆம் ஆண்டிற்கு பிறகு இ.எம்.எஸ்ஸின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது.1998ஆம் ஆண்டு மார்ச் -19ஆம் தேதியன்று தேசாபிமானிக்காக கட்டுரை தயார் செய்து கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு மூச்சடைப்பு ஏற்பட்டு மிகுந்த உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தார்.

தோழர் இ.எம்.எஸ் தனது கடைசி மூச்சு வரை உழைக்கும் மக்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். 
தோழர் இ.எம்.எஸ் தனது பொது வாழ்க்கையில், மாநிலத்தின் முதல்வராக, கட்சியின் பொதுச் செயலாளராக, எழுத்தாளராக பல்வேறு பணிகளை மக்களுக்காக செய்து மகத்தான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவராக வாழ்ந்து மறைந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. 
=========================================================================================