இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 23 மார்ச், 2016

"கிங்" கும் "கிங் மேக்கர்"களும்.

நடிகர் விஜய்காந்தின் தேமுதிக  மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தவுடன் வைகோ போன்றவர்களும் சில ஊடகங்களும் தமிழக அரசியலே முக்கிய கட்டத்தை அடைந்து விட்டதாகவும்,ம.ந.கூ வாக இருந்து வைகோவால் கேநகூ ஆக்கப்பட்ட கேப்டன் நலக் கூட்டணி ஆட்சியைப் பிடித்து விஜயகாந்த் முதல்வராகி விட்டது போலவும் ஒரு படத்தை மக்களுக்கு தருகிறார்கள்.
'"நீங்கள் கிங்காக இருங்கள்.நாங்கள் கிங் மேக்கர்களாக இருக்கிறோம் என்று வைகோ சொன்னார்.என் பின்னே இருந்து வைகோ இயக்குவார் " என்கிறார் தமிழகத்தின் புதிய கிங் மாண்பு மிகு விஜயகாந்த் அவர்கள்.

'அதிமுக வென்று  போகட்டும்.ஆனால் திமுக வெற்றிப் பெறவேக் கூடாது."இது வைகோ கூறிய கொள்கைப் பிரகடனம்.இதுதான் ம.ந.கூ ட்டணியின் குறிக்கோளும் கூட .இதனால்தான் இவர்களை "அதிமுகவின் பி"டீம் என்று கூறிவந்தார்கள்.

இதற்கும் "திமுகவை தோற்கடிக்கும் கட்சிக்கே வாக்களியுங்கள் "என்று அரசியல் மாமேதை சகுனியின் கலிகால வடிவம் சோ  சொன்னதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
இரண்டுமே ஜெயலலிதா வெற்றி பெற்று மீண்டும் முதல்வாராக வேண்டும் என்பததைத்தானே சுட்டுகிறது.

ஜெயலலிதா வெல்வதன் மூலம் திராவிட ஆட்சி ஒழிக்கப்படும்.கட்சி பெயரில் மட்டும் திராவிடம் வைத்துள்ள பார்ப்பனிய தலைமை ஆட்சி தக்க வைக்கப்படும்.பகுத்தறிவு இயக்கம் இத்துடன் எழ முடியா நிலைக்கு தள்ளப்படும் என்பதுதான் சோ ஆசை.

வைகோ வின் அரசியல் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது மட்டும்தான்.
அதை அவர் பல்வேடமிட்டு ,பலவிதமா சொன்னாலும் அந்த திமுக எதிர்ப்பு என்ற கொண்டையை மட்டும்
அவரால் மறைக்க முடியவில்லை.

அதே போல் திமுக எதிர்ப்பாளர்களால் உருவானதுதான் மக்கள் நலக் கூட்டணி.இதை அதிமுகவின் "பி"டீம் என்று பலர் கூறுவதை உண்மை என்றே தான் கூற வேண்டும்.
ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வந்ததில் இருந்து மார்சிஸ்ட் கட்சி ஜெயலலிதாவுக்கு ஆதரவான கொள்கை முடிவுகளையே எடுத்து வருகிறது.
முத்தரசு தா.பாண்டியனால் மகேந்திரனுக்கு எதிராக கொம்பு சீவி பினாமியாக களத்தில் விடப்பட்டவர்.தா.பாண்டியன் தான் அவரையும் இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் வழி நடத்துபவர்.

தா.பாண்டியன் தனது ஜெயலலிதா ஆதரவை திமுக கூட்டணியில் இருக்கும் போதே காண்பித்தவர்.
அவரது ஜெயலலிதா ஆதரவால் அவர் மகனுக்கு விதிகளை மீறி பல்கலைக்கழக பதிவாளர் பதவி சன்மானமாக வழங்கப்பட்டது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும்,பால்,மின்,பேருந்து கட்டணங்களை பலமடங்கு கூட்டியதற்கு வழக்கமான கம்யூனிஸ்ட கட்சிகள் போல் எதிர்ப்பை பதிவு செய்யாமல்"கருணாநிதி தனது தவறான ஆட்சியால் இது போன்ற அத்தியாவசிய ,தேவை யான விலை கூட்டலை செய்யாததால் மக்கள் அவதி அடைவதை தடுக்க ஜெயலலிதா இந்த விலைகளை கூட்டியுள்ளார்.இதன் மூலம் நிர்வாகத்திலும்,ஆட்சி செய்வதிலும் திறமையானவர் என்பதை காட்டியுள்ளார்".என்று விலை உயர்வுக்கு சப்பைக்கட்டு கட்டியவர் தான் இந்த தா.பா.
திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தாலும் அவரை அமைச்சர் பதவியை கூட்டணிகளுக்கு திமுக தரவில்லை நாம் ஆட்சியை பிடித்தால் தலித் முதல்வர் என்றே ஆசை காட்டி வைகோவினால் அழைத்து வரப்பட்டார்.
மனிதநேய மக்கள் கட்சி முதலில் இவர்களுடன் இருந்தாலும் எப்போதும் வெற்றி பெறும் கூட்டணியில் இருந்து பாளை அனுபவித்த அவர்களுக்கு இந்த கூட்டணி ஆண்டிகள் மடம் என்று அனுபவித்ததால் மெதுவாக இடத்தை காலி செய்து திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.ம.ந.கூட்டணியில் இருந்ததால் ம.நே.ம.கட்சியில் பிளவு வந்ததுதான் மிச்சம்.
நடிகர் விஜயகாந்த் கட்சித்தலைவரானாலும் இன்னமும் நடித்துக்கொண்டிருப்பவர்தான் என்பதை இந்த தேர்தல் காண்பித்து விட்டது.
 இது திமுகவுடன்,
100 தொகுதிகள் ஆட்சியில் பங்காக துணை முதல்வர்,இரு அமைச்சர்கள் [உள்ளாட்சித்துறை,கல்வித்துறை]வரும் உள்ளாட்சித்தேர்தலில் மதுரை உட்பட  மூன்று மேயர்கள்
உள்ளாட்சி தொகுதிகளில் பாதி.தேர்தல் சீலாவுக்கு 100 கோடிகள்.

இது பாஜக வுடன் 
150 தொகுதிகள் 100 கோடிகள் அது போக தொகுதிக்கு ஒரு கோடி வேட்பாளர்களுக்கு முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் என்ற அறிவிப்பு.
மனித நேயக் கூட்டணி 
முதல்வர் வேட்பாளர் 150 தொகுதிகள்.இவர்களிடம் கொடிகளை வேண்டுமானால் கேட்கலாம்.கோடிகளை கேட்பது ?அதனால் இவர்கள்தான் அடிக்கடி சீசன் டிக்கெட்டில் கோயம்பேடு சென்று வந்தார்கள்.
 விஜயகாந்தின் இந்த அலட்டல்களை ஆரம்பித்து வைத்தவர் கலைஞர்  கருணாநிதிதான்.
அவர் இவரை கூட்டணிக்கு அழைத்ததும்  தமிழக அரசியலில் பரபர தொற்றிக்கொண்டது.கலைஞரே  அழைத்தார் என்றால் இவரிடம் ஏதோ இருக்கிறது என்று பாஜக மத்திய மைச்சர்கள்,வைகோ அணியினர் இவரை கையைப்பிடித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தனர்.
அவ்வளவுதான் எப்போதும் தன்னிலை மறந்திருப்பவருக்கு அதிக "கிங் "காகும் மயக்கம்.
மூன்று அணியையும் அவர்,பிரேமலதா,சதீஷ் ஆகிய மூவரும் சுற்ற விட்டனர்.
ஊடகங்கள் விஜயகாந்த் புகழை அளவுக்கு அதிகமாகப் பாட பிரேமலதா சொல்லியபடி தான் கிங் மேக்கர் அல்ல கிங் என்று தனித்துப்போட்டியை மிகத் தெளிவாக சொல்லிவிட்டார்.

திமுக பழம் நழுவி பாலில் விழ வில்லையே என்று விலகி விட்டது.பாஜக இவரைப்போன்ற குழப்பவாதியை வைத்து தேர்தலை சந்திப்பதைவிட பச்சமுத்துவை வைத்தே பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாகி விட்டது.
மனிதநேயக் கூட்டணி ?

விஜயகாந்த்தை தலைவராக ஏற்க முடியாது,அவரிடம் பிச்சை எதுக்கு நிலையில் நாங்கள் இல்லை என்ரூ கொதித்தார் தா.பா.எங்கள் மநகூட்டணி விமானம் டேக் ஃஆப் ஆகிவிட்டது என்று வைகோ தனது முதல்வர் கனவுடன்  கூறினார் 

இப்போது நடுத்தெரு நாராயணன் ஆனார் விஜயகாந்த்.அவரிடம் லெட்டர்பேடு கட்சித்தலைவர்கள்  கூட யாரும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை.

 அவர்கட்சியில் பணம் கட்டியவர்கள் எல்லோரும் தனியே நிற்கும் தற்கொலைக்கு மறுப்பு தெரிவித்து தங்கள் பணத்தை திருப்பி கேட்டு கட்சி அலுவலகத்துக்கு கூட்டமாக வர தேமுதிக கட்சி தலைமை அலுவலகம் 7 நாட்கள் பூட்டப்பட்டது.
முதலில் உசுப்பேத்தி விட்ட கலைஞரே இப்போதும் விஜய்காந்துக்கு உதவினார்.

திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும், பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்ற குண்டை தூக்கி போட்டார் கலைஞர். 

கலைஞருடன் விஜய்காந்தா ?ஜெயலலிதாவிடம் யார் வசை வாங்குவது என்ற அதிர்ச்சியில் யூடேர்ன் அடித்த மநகூ, சரிபாதிக்கும் மேலான இடங்களை தந்து விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்துவிட்டது. 
அத்துடன் விட்டால் பராவாயில்லை. இனி கூட்டணியின் பெயர் கேபடன் விஜய்காந்த் அணி  என்றழைக்கப்படும் என்றுஎதையும் ஆழ்ந்து யோசித்தப்பின்னரே வாய் மூலம் கூறும்  ராஜகுரு வைகோ அறிவித்தார்.

மார்க் ஸ் ,லெனின் என்று கொள்கைகள் உள்ள இடதுசாரிகள் கொண்ட இந்த அணி
 மாற்றத்துக்கான அணி என்று நம்பி ஓட்டுபோட இருந்த சிலரையும் வைகோவின் பேச்சு தெறித்து ஓட வைத்துவிட்டது. 

இது மாற்று அல்ல .வழக்கமான பத்தோடு ஒன்று என வைகோ அவர்களே கட்சிசாரா நடுநிலையார்களுக்கு,மக்களுக்கு  புரிய வைத்துவிட்டார்கள்... 

கூட்டணி சேர்த்து வெற்றி காண்பது ஒருவகை.சிலரை கூட்டணி சேரவிட்டு வெற்றி காண்பது மறுவகை.அதைதான் கலைஞர் செய்துள்ளார். ஆக வைகோ கூறியதைப்போல் கலைஞர் தோற்கவில்லை.அவர் ராஜ தந்திரம் வென்று விட்டது.பாலில் பழம் விழுந்து விட்டது.
உண்மைதான்.
ஆனால் விஜய்காந்தை பழம் என்ற அவர் பால் என்று திமுகவை  பெயர் சொல்லி குறிப்பிடவில்லையே?

தன்னை கிங் என்று எண்ணியவர்களும்,அதிமுக எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்கு போய் சேர்ந்து 
வென்று விடக் கூடாது என்று திட்டமிட்ட கிங் மேக்கர்களும் கடைசியில் காதலில் தோற்ற கிங்காங்குகளாக மாறி விட்டனர்.

வைகோ அறிவிப்பால் ம.ந.கூ,பெயர் கேநகூ வானதால் மார்க் சிஸ்ட் ச.ம.உ.பாலபாரதி தனது முகனூலில் "நல்லதோர் வீணை செய்தே.../"என்று மட்டும் பதிவிட்டு மனவருத்தத்தை காட்டியுள்ளார்.

மற்றொரு இடதுசாரி தலைவரும்,எழுத்தாளரும் தனது பதிவில்" இனம்தெரியா மனக்கவலை அரிக்கிறது.

திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைக் கட்சியினரோ தங்களை தலித் முதல்வர் ஆசையை முதலில் காட்டி பின்னர் வென்ற பிறகு முதல்வர் தேர்வு என்று சொல்லி விட்டு விஜயகாந்த் வந்தவுடன் 124 இடங்களையும் கொடுத்து முதல்வர் நாற்காலியையும் கொடுத்து விட்டனர்.
ஆனால் ஆட்சியில் ம.ந.கூட்டணியினருக்கு பங்கு ,அமைச்சர் பதவி என்று ஒப்பந்தத்தில் ஒரு இடத்தில் கூட பேசாமல் கையெழுத்தை வாங்கி விட்டனர் என்று குற்றப் பத்திரிக்கை வாசிக்கிறார்கள்.
அமைச்சரவை பங்கு என்ற ஆசையைக்காட்டிதான் திருமாவை தி.மு.க கூட்டணியில் இருந்து பிரித்து வந்தார்கள்.

இப்போது விஜயகாந்து கட்சிக்கு -124,வைகோ கட்சிக்கு 40,திருமாவளவன் கட்சிக்கு -35,இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சேர்த்து -35.என்ற அளவில் நாற்காலிகள் ஒதுக்கப் பட்டுள்ளது.இதில் இன்றைய வைகோ கட்சி,விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை விட அமைப்பும்,வாக்கு வங்கியும் அதிகம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இரண்டுக்குமே சேர்த்து 35 தானா என்ற கேள்வி இடதுசாரிகள் மனதில் எழுந்துள்ளது.

இதை இருவரும் 17அரை என்றா பிரித்துக்கொள்வார்கள்?இந்த 17 அரை கொடுத்து ம.ந.கூ வில் ஏழரையை வைகோ கொண்டுவந்துள்ளார்.

என்னவோ போங்கள், ,.விஜயகாந்து வந்ததால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஒன்றும் உண்டாகி விடவில்லை.ஜெயலலிதாவை ஆட்சியை விட்டு ஓடவைப்பேன் என்று விஜயகாந்து சொல்லுவது உண்மையிலேயே என்றால் அவர் இப்படி ஜெயலலிதா எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்கும் வேலையை செய்திருக்க மாட்டார்.ஜெயாவுக்கு ஈடு கொடுக்கும் திமுகவில் சேர்ந்தால் இவரின் வாக்கு சதம் 3ம் சேர்ந்து அதிமுகவை ஆட்டிப்பார்த்திருக்கும்.

ஆனால் இப்படி வைகோ ,பிரேமலதா பேச்சியினால் ஜெயலலிதா உளவுத்துறை மூலம் போட்ட திட்டத்தை சரியாக நிறைவேற்றி ஜெயலலிதாவுக்கு ஒரு வாய்ப்பை மீட்டுக் கொடுத்துள்ளார் விஜயகாந்து.

கேநகூட்டணி ஒப்பந்த விழாவில் கம்யூனிஸ்ட் [என்று கூறிக்கொள்ளும்]தலைவர் ஒருவர் குளம் ,ஏரி ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களான திமுக,அதிமுகவை முதலில் விசாரணை செய்யும் முதல்வராக் கேப்டன் விஜய்காந்து இருப்பார் என்றார்.

கோயம்பேட்டில் திருமண மண்டபம் ஆக்கிரமித்திருந்த இடத்தை பாலம் கட்ட எடுத்ததால்தானே கருணாநிதியை இன்றும் திட்டிவருகிறார் விஜயகாந்து.
ஜெயலலிதா ஆட்சியில் விஜயகாந்து பொறியியல் கல்லூரியில் அரசு நீர்நிலை குளம் இடம் வளைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சியர் கண்டறிந்து அகற்றியதால் தானே சட்டமன்றத்தில் நாக்கை துருத்தி சண்டை போட வேண்டிய நிலைக்கு அவர்களின் இன்றைய புரட்சி[கலைஞர்]விஜயகாந்த்  வந்தார்.

ஆக்கிரமிப்புகளைப்பற்றி நன்கு அறிந்தவர்தான் விஜயகாந்து.


பாஜக கூட ஜெயலலிதாவின் காய் நகர்த்தலில்தான் விஜயகாந்துடன் பேச்சு வார்த்தையில் பேரம் பேசியதாக தெரிகிறது.இனி தனது பணியை சிறப்பாக செய்து விட்டதற்காக சில தொகுதிகளை பெற்று அதிமுக அணியில் பாஜக அடைக்கலம் புகுந்து விடும்.

பணபலம்,அதிகார பலம்,தேர்தல் ஆணையம் என்று இந்த முறையும் ஜெயலலிதா பலமான கூட்டணியை அமைத்துக்கொண்டுள்ளார்.

ஜெயலலிதாவை வீழ்த்த கூட்டணி அமைப்பதில் தவறி விட்டாலும்  பெரும்பாலான தொண்டர்கள் விஜயகாந்து கூட்டணியை விரும்ப வில்லை.தனித்து அதிக இடங்களில் நின்றாலே வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை,.நமக்கு நாமே ஸ்டாலின் மக்கள் சந்திப்பு பயணம் தாக்கம் இவற்றை சரியாக திமுகவினர் பயன்படுத்திக்கொண்டு தேர்தலில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தாலே  ஜெயலலிதாவை வீழ்த்தி விடலாம்.
தமிழக தேர்தல் களத்தில் தற்போது இருக்கும் ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் கருணாநிதி ,ஜெயலலிதா ,அன்புமணி,விஜயகாந்து,சைமன்.

இதுவரை இப்படி ஐந்து முதல்வர் வேட்பாளர்களை தமிழ் நாடு சந்தித்தது இல்லை.
ஆனால் இந்த ஐந்து முதல்வர்களையும் தாண்டி ஒருவர் அறிவிக்கப்படாத அமைதி [சைலண்ட்]முதல்வர் வேட்பாளராக உள்ளார்.

அவர் சார்பு வாக்குகளும் கருணாநிதிக்கு விழ வாய்ப்புகள் உள்ளது.
அது மு.க.ஸ்டாலின்.

நமக்கு நாமே சந்திப்பில் அவரை முதல்வராக எண்ணியே 11 லட்சம் மனுக்கள் குவிந்துள்ளன என்பதே அதற்கு அத்தாட்சி.
======================================================================================
பிரபல மனநல மருத்துவர் "ருத்தரன்" . முகநூல் பக்கம்:
". மக்கள் நலம் என்பது விஜயகாந்த் முதல்வராவதெனில் நான் கம்யூனிஸ்டாக இருப்பதில் வெட்கப்படுகிறேண். அட்டை வாங்காது வாழ்முறை கம்யூனிஸ்டாக வாழும் எனக்கு இருக்கும் அருவெறுப்பு தோழர்களுக்கு இல்லையெனில், அவர்களின் அட்டைகள் சற்றே தடிமனான வெற்று காகிதம் மட்டுமே. மார்க்ஸ் படத்துடன் விஜயகாந்த் படத்தையும் சிவப்புப் பின்னணியில் பார்க்கப்போகும் இழிநிலை என் வாழ்வின் துயர்நிலை."
======================================================================================
இன்று,
மார்ச்-24.

  • சர்வதேச காசநோய் தினம்

  • கிரீஸ் குடியரசு நாடானது (1923)
  • இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த தினம்(1776)
  • தமிழ் திரைப்பட பிரபல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் பிறந்த தினம்(1923)
  • கர்நாடக இசைப்பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் இறந்த தினம்(1988)


=======================================================================================
இந்தப்படை போதுமா?

பாகிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது (45). 
டாக்டராக இருக்கிறார். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். 


இவர்கள் மூலம் மொத்தம் 35 குழந்தைகள் உள்ளனர். 

அவர்களில் 21 மகள்கள் 14 மகன்கள் உள்ளனர். இவருக்கு கடந்த வாரம் தான் 2–வது மற்றும் 3–வது மனைவிகள் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்தன. 

"இவ்வளவு பெரிய குடும்பத்தை ,குழந்தைகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?"-என்று கேட்டால்.

"அதற்குள் இப்படி கேட்டால் எப்படி தல.நம்மோட லட்சியம் 100 குழந்தைகளை பெற்று சாதனை படிப்பதுதான்.அதற்காத்தான்  உழைத்து [?]வருகிறேன்."-என்று பதில் சொல்கிறார் ஜான் முகமது.
========================================================================================