இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 20 மார்ச், 2016

அணுமின் நிலைய மிரட்டல்கள்

குஜராத் மாநிலத்தில் உள்ள காக்ரபார் அணு மின் உற்பத்தி நிலையத்தில் கணநீர் கசிவு ஏற்பட்டிருப்பது மீண்டும் நாட்டிலுள்ள அணுசக்தி நிலையங்கள் தொடர்பான பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை மீது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

வெளிவந்திருக்கும் தகவல்களிலிருந்து, 2016 மார்ச் 11 அன்று காக்ரபாரில் கண நீர் மிதமாக அதிக அளவில் கசிந்திருக்கிறது. 
இதனை அடுத்து மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டு, அணு எரிசக்தி முறைப்படுத்தும் வாரிய விஞ்ஞானிகள் வரவழைக்கப் பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. அவர்கள், விபத்தின் ஆழமான தன்மை குறித்தும் மற்றும் மின்சக்தி நிலையத்தில் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவது குறித்தும் ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார்கள். 

புகுஷிமாவில் அணுசக்தி பேரிடர் ஏற்பட்ட ஐந்தாம் ஆண்டை உலகம் அனுசரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், காக்ரபார் நிகழ்வு, இந்தியாவில் இயங்கும் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு குறித்து ஒரு நினைவூட்டலை ஏற்படுத்தி இருக்கிறது.

மிகப்பழைய அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்துத்தான் பிரச்சனை எழுந்திருப்பதாகக் கூறுவதற்கில்லை, புதிதாக அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையங்களும் கூட பாதிக்கப்பட்டிருக்கின்றன. 

கூடங்குளம் அணுமின் நிலையங்கள் பிரிவு 1 மற்றும் பிரிவு 2 ஆகியவை இதற்கு சமீபத்திய உதாரணங்களாகும்.

கூடங்குளம் பாதுகாப்பானதா?
கூடங்குளம் பிரிவு 1 மிகவும் நீண்ட நெடிய காலதாமதத்திற்குப்பின் 2014 டிசம்பரின் இறுதியில் இயங்கத் துவங்கியது. பல தடவை தடங்கல் ஏற்பட்டு, சரிசெய்வதற்காக மூடப்பட்டு வந்திருக்கிறது. இவை அனைத்திற்குப் பிறகும்கூட, இம் மின் உற்பத்தி நிலையத்தில், 2015 ஏப்ரலுக்கும் 2016 ஜனவரிக்கும் இடையே, அதனுடைய கொள்ளளவில் 20 சதவீத அளவிற்கும் குறைவாகவே மின் உற்பத்தி நடந்திருக்கிறது. 

இதன்பொருள், இது முழுமையாக இயங்கத் தொடங்கிய பின்னரும் இதில் மின் உற்பத்தி 20 சதவீதம் மட்டுமே என்பதாகும்.

கூடங்குளம் பிரிவு 2, அதன் காலக்கெடு பலமுறை ஒத்திவைக்கப்பட்டும் இன்னமும் இயங்கத் தொடங்கவில்லை. இந்த இரு பிரிவுகளின் செலவுமதிப்பு  22 ஆயிரத்து 462 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 

இந்த மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்குக் காரணங்கள், ரஷ்ய நிறுவனம் அளித்த தரமற்ற சில கருவிகளே காரணம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு கூடங்குளத்தில் இந்நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அப்பகுதி மக்களால் எழுப்பப்பட்ட அச்சங்கள் முற்றிலும் நியாயமானது என்றே தோன்றுகிறது. 

கூடங்குளம் அணுமின் நிலையங்கள் தொடர்பான பாதுகாப்பு காரணிகள் மட்டுமல்லாது, அணுமின் நிலையத்தின் நிலைத்து நீடிக்கவல்லதிறன், இதனை நிர்மாணிப்பதற்காக ஆகியுள்ள அதீதமான செலவு, நீண்ட கால தாமதங்கள், அனுமதித்த காலத்திற்குப் பின்னும் தொடரும் தாமதங்கள் ஆகியவையும் கவலைகொள்ளத்தக்க பிரச்சனைகளாகும். 

அணுசக்தி தொடர்பாக நாட்டிலுள்ள நிறுவனங்கள் என்பவை அணு எரிசக்தித் துறை.
, அணு எரிசக்தி ஆணையம் அணுசக்தி மின்உற்பத்தி கழகம்ஆகியவைகளாகும். 

இவற்றின் வெளிப்படைத்தன்மை மற்றும் சுயேச்சையான ஒழுங்குமுறைகளின் லட்சணங்கள் என்ன என்பது அனைவரும் அறிந்ததே.

அணு எரிசக்தி முறைப்படுத்தும் வாரியம், அணு எரிசக்தித் துறையின் கீழ் இயங்குகிறது. ஒரு சுயேச்சையான அணுசக்தி பாதுகாப்பு ஒழுங்காற்று முகமை அமைப்பதற்கான முயற்சிகள் உருப்பெறவில்லை. சென்ற மக்களவையில் இது தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படவில்லை. 

இதுதொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவானது, ஒழுங்காற்று முகமையின் சுயாட்சி மற்றும் சுயாட்சித்தன்மையை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் சில பொருத்தமான பரிந்துரைகளை அளித்திருந்தன. 
ஆனால், இந்த அரசாங்கம் அவற்றை இணைத்துக்கொண்டு இந்தச் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற விருப்பம் எதுவும் காட்டவில்லை. 

அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவுகள்இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்திற்குப் பின், அரசாங்கம் மிகப் பெரிய அளவில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகளிலிருந்து அணு மின் உற்பத்தி சாதனங்களை இறக்குமதி செய்வதற்கான காரியங்களிலேயே இறங்கி இருக்கிறது. 

ஜைதாப்பூர், மித்தி விர்தி மற்றும் கொவ்வாடா ஆகிய அணுசக்தி பூங்காக்கள் ஒவ்வொன்றும் தலா ஆறு அணு உலைகள் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இவை அனைத்தும் அபரிமிதமான கட்டணத்தில் இறக்குமதி செய்யப்படவிருக்கின்றன. இதன் காரணமாக இவற்றால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணமும் மக்களால் வாங்கமுடியாத அளவிற்கும், தாங்கமுடியாத அளவிற்கும் நிர்ணயிக்கப்படும். 

நாடாளுமன்ற அணுவிபத்துப் பொறுப்புச் சட்டத்தை அரித்துவீழ்த்தக்கூடிய விதத்திலேயே மோடி அரசாங்கம், அணு உலைகளை இறக்குமதி செய்ய வசதிகளைச் செய்து தந்திருக்கிறது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அணு உலைகள் போதுமான அளவிற்குப் பாதுகாப்பு தர நிர்ணயம் செய்யப்பட்டவை அல்ல என்பது மட்டுமல்ல, ஒருவேலை இவற்றால் அணு விபத்துக்கள் நிகழுமாயின் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் சேதங்களுக்கும் இழப்பீடோ, அவர்களுக்கு மீளவும் மறுவாழ்வு அளிக்கப்படும் என்றோ, மக்களுக்கு எந்தவித உத்தரவாதத்தையும் அளித்திடாமல் இருப்பதற்கான வேலைகளிலும் இந்த அரசாங்கம் இறங்கி இருக்கிறது. 

காக்ரபார் அணு உலைக் கசிவு, நாட்டில் புதிய அணுத் திட்டம் எதனையும் மேற்கொள்வதற்கான வேலைகளை நிறுத்தி வைப்பதற்கு அரசாங்கத்தைத் தள்ளியிருக்கிறது. 

அணு உலைகளை இறக்குமதி செய்யும் மிக தீங்கு பயக்கும் கொள்கை மற்றும் அந்நிய அணுசக்தி நிறுவனங்களுக்கு வசதி செய்து தருவதற்காக நம் நாட்டின் அணுசக்தி பொறுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான அரசின் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும். 

நாட்டிலுள்ள அணுசக்தி நிலையங்கள் அனைத்தும் ஓர் ஒருங்கிணைந்த பாதுகாப்பு தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஒரு சுயேச்சை யான அணுசக்தி ஒழுங்காற்று முகமை அமைக்கப்பட வேண்டும். இவையின்றி அணுசக்தி மின்நிலையங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த முறையில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திட முடியாது.
========================================================================================
இன்று,
மார்ச்-20.
  • சிட்டுக்குருவி தினம்
  • டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்கப்பட்டது(1602)
  • சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது(1948)
  • பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை அடைந்தது(1956)
சிட்டுக்குருவி
சிட்டுக் குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை. இந்தியாவில் இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும்.

சிட்டுக் குருவிகள் உருவத்தில் சிறியவையாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 24 செ.மீ. நீளமுள்ளவை. பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். கூம்பு வடிவ அலகுகளைப் பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை. ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்.

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குருவி இனங்கள் உள்ளன. இவை எங்கும் காணப்படுபவை. சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன. 
இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். 
இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கின்றன.

சிட்டுக் குருவிகள் அனைத்துண்ணிகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். சில வகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும். *சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆண், பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன. பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

சுற்றுச் சூழல் மாற்றங்களால் நாம் ஏற்படுத்தும் பல இழப்புகளில் மரங்களும் பறவைகளும் உலகெங்கும் அழிந்தும், குறைந்தும் வருவதால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு உலகம் வெப்பமயமாகி இயற்கைப் பேரழிவுகள் நேர்கின்றன. தற்போது பல நகர்ப்புறங்களில் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டன. அலைபேசியில் இருந்து வெளிவரும் (நுண்ணலைகள்) மின்காந்த அலைகளின் தாக்கம் இந்த குருவியினத்தின் இனபெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதனால் இவற்றால் தங்களின் இனத்தை பெருக்க இயலவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வேண்டி வருகிறார்கள். எனவே மார்ச் 20-ம் தேதியை உலக ஊர்க்குருவிகள் தினமாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர். இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் அஞ்சல் தலைகள் வெளியிட்டுப் பெருமைப் படுத்தியுள்ளன.
========================================================================================

இண்டியானா ஜோன்ஸ்

இண்டியானா ஜோன்ஸ் திரைப்பட வரிசையின் அடுத்த பாகத்தை உருவாக்க இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்கும், ஹாரிசன் ஃபோர்டும் மீண்டும் இணைவதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது  இண்டியானா ஜோன்ஸ் பட வரிசையில் வெளியாகும் ஐந்தாவது படமாகும். 
இதற்கு முந்தைய இண்டியானா ஜோன்ஸ் படம், கிங்டம் ஆஃப் கிரிஸ்டல் ஸ்கல் என்ற பெயரில் 2008ஆம் ஆண்டில் வெளியானது.
முதலாவது இண்டியானா ஜோன்ஸ் திரைப்படம் ரெய்டர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க் என்ற பெயரில் 1981ல் வெளியானது.
ஹாரிசன் போர்ட் 
முதலாவது படத்தில் அகழ்வாராய்ச்சியாளரான ஜோன்ஸ் ஆர்க் ஆஃப் தி கான்வென்ட் என்ற புனிதப் பெட்டி நாஜிக்களின் கையில் கிடைத்துவிடாமல் செய்ய போராடுவார்.
இதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த டெம்பிள் ஆஃப் டூம் என்ற பெயரில் அடுத்த படம் வெளியானது.
இதற்கு அடுத்த படம், 1989ல் இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த லாஸ்ட் க்ருஸேட் படம் வெளியானது.
இப்போது இந்தப் புதிய இன்டியானா ஜோன்ஸ் வரிசை ஐந்தாவது படத்திலும் நடிக்கும்   ஹாரிசன் போர்டிற்கு தற்போது வயது 77.
சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட விமான விபத்தில் தலையில் ஹாரிசன்  சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்.
சினிமா வரலாற்றில் இண்டியானா ஜோன்ஸ் "தங்கள் தயாரிப்பு படங்களிலேயே ஒரு மகத்தான சாதனை நாயகன்" என வால்ட் டிஸ்னியின் தலைவர் ஆலன் ஹார்ன் தெரிவித்திருக்கிறார்.
முந்தைய இண்டியானா ஜோன்ஸ் நான்கு படங்களும் சேர்ந்து இதுவரை உலகம் முழுவதும் 2 பில்லியன் டாலர்களைச் சம்பாதித்தித்து கொடுத்திருக்கின்றன.
ஜேம்ஸ்பாண்ட படங்களைப் போன்றே இந்த இண்டியானா ஜோன்ஸ் வீர சாகச படங்களும் அமைந்துள்ளது.ஹௌவ்  பாய் ரகத்தை சேர்ந்தவை  இண்டியானா ஜோன்ஸ் படங்கள்.
ஐந்தாவது  இண்டியானா ஜோன்ஸ் படம் 2019 ஜூலை மாதம் வெளியாகும் என்று டிஸ்னி அறிவித்துள்ளது .