இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 10 மே, 2016

சொன்னதை செய்யாததும்,

சொல்லாததை செய்ததும்!

'நான் ஒரு வாக்குறுதியை அளிக்கும் முன்பு நூறு முறையல்ல ஆயிரம் முறை யோசித்துதான் அளிப்பேன். 
நான் அளித்த வாக்குறுதிகளை எப்பாடு பட்டாவது நிறைவேற்றுவேன்" என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா கூறினார். 
2016 சட்டசபை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜெயலலிதா, பல்வேறு இலவச திட்டங்களையும் வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளார். 
இந்த வாக்குறுதிகள், இதில் கூறப்பட்ட திட்டங்கள் பலவற்றை நிறைவேற்ற முடியாது என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர். 
கடந்த 2011ம் ஆண்டு அதிமுக அரசு வாக்குறுதிகள், சட்டசபையில் ஜெயலலிதா வெளியிட்ட 110 அறிவிப்பு ஆகியவற்றை நிறைவேற்றவில்லை என்றும் எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

ஆனால் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக ஜெயலலிதா மேடைக்கு,மேடை சொல்லி  வருகிறார். 

ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைக்குனிவில் இருந்து தமிழகத்தை மீட்போம்' என்று கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். 
ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இப்போது இரண்டு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. 
ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டாரா? 
காற்றில் பறக்கவிட்டவை எவை? 
எவை பார்க்கலாம். 

நிறைவேறாத 2011 தேர்தல் அறிக்கை 2011 தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க சொன்ன அறிவிப்புகளில் நிறைவேறாமல் இருப்பவை: 
•சென்னை டு கன்னியாகுமரி வரை கடலோரச் சாலை திட்டம். 
•தென் தமிழகத்தில் ‘ஏரோ பார்க்' 
• ஆன்லைன் டிரேடிங் தடுக்கப்படும்.
 •வீடில்லா ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்ட மூன்று சென்ட் இடம். 
•10 ஆடை அலங்காரப் பூங்காக்கள் (Apparel Parks). 
•திருப்பூர் சாயக் கழிவுகளைச் சுத்திகரிக்க விஞ்ஞான முறையில் கழிவு அகற்றும் நிலையம். 
•மின்னணு ஆளுமையின் கீழ் போலீஸ் ஸ்டேஷன்கள். 
• நீதிமன்றங்களில் தமிழ்மொழி. 
• தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை.
 •மொபைல் மின்னணு ஆளுமைத் திட்டம். 
•தடையில்லா மின்சாரத்துக்கு சிறப்புத் திட்டம். 
•இலவச டிடிஹெச் சேவைகள் விரைவாக வழங்க நடவடிக்கை. 
•வீடுகளில் திருட்டு, கொள்ளைகளைத் தடுக்க இளைஞர் சிறப்புப் படைகள். 
•பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க மாணவர் சிறப்புப் படை.
 •மீனவர் பாதுகாப்புப் படை.
 •விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். 
•முதல் தகவல் அறிக்கையை உடனடியாக பதிவுசெய்தல்.
 •சிங்கப்பூரில் உள்ளதுபோல சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். 

தண்ணீரில் எழுதப்பட்ட 110 விதி அறிவிப்புகள்! 

•2,160 கோடி ரூபாய்ச் செலவில் 311 ஏக்கரில் சென்னை திருமழிசையில் துணைகோள் நகரம். 
•மதுரை விமான நிலையத்துக்கு அருகில் 586.86 ஏக்கரில் ஒருங்கிணைந்த துணைகோள் நகரம். •‘இயற்கைச் சூழலில் கடல்வாழ் விலங்குகள் மற்றும் தாவரங்களை உயிருடன் காட்சிப்படுத்தப் படுவதோடு சுறாக்கள், கடல் வண்ண மீன்கள், கடற்புல், கடற்பாசி போன்ற உயிரினங்களோடு மாமல்லபுரத்தில் ரூ.250 கோடியில் உலகத்தரம் வாய்ந்த ‘கடற்காட்சியம்.' 
•தமிழகத்தின் தென்பகுதி நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம். 
• நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படும். 
100 கோடிகளில் தமிழ்த்தாய் சிலை.

காணாமல் போன பட்ஜெட் அறிவிப்புகள்! 

ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஐந்து பட்ஜெட்டுகளில் நிறைய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் பல அறிவிப்புகள் காற்றோடு போய்விட்டது. 
•சென்னை டி.பி.ஐ வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா. 
• 4,800 கோடி ரூபாயில் 800 மெகாவாட் உடன்குடி விரிவுத் திட்டம், 9,600 கோடி ரூபாயில் 1,600 மெகாவாட் உப்பூர் அனல் மின்திட்டம், 3,600 கோடி ரூபாயில் எண்ணூர் அனல் மின் இயந்திரத்துக்குப் பதிலாக 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் இயந்திரம் நிறுவும் திட்டம். 
•ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க, நடுக்கடலில் மீன் பதப்படுத்தும் தாய்க் கப்பல். 
•ரூ.250 கோடியில் மாமல்லபுரத்தில் உலகத் தரத்திலான கடல்வாழ் உயிரினக் காட்சியகம். 
• முட்டுக்காடு டு புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் விரிவான சுற்றுலாத் திட்டம். 
•சென்னை மாநகரத்தில் 271.68 கோடி ரூபாய் செலவில் நான்கு பெரிய மேம்பாலங்கள்
. • மதுரை நகரத்தில் உள்ள காளவாசலிலும், கோரிப்பாளையத்திலும் 130 கோடி ரூபாய் செலவில் இரண்டு மேம்பாலங்கள். 
•பேருந்துகளில் ஜி.பி.எஸ் வசதி
 • 3,833.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டு எடுப்பதற்கான பெரும் திட்டம். 
• சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தற்போதுள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை 4.20 டி.எம்.சி அளவுக்கு உயர்த்தும் 1,851 கோடி ரூபாயில் திட்டம். 
•பழைய வண்ணாரப்பேட்டை ஏரியாவில் போஜராஜன் நகரில் சுரங்கப்பாதை. 
•தேர்வாய் கண்டிகை, திருகண்டலம், ராமஞ்சேரி ஆகிய இடங்களில் தலா ஒரு டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள்.
 •சாயப்பட்டறைகள் பிரச்னைக்குத் தீர்வு காண ரூ.700 கோடி மதிப்பில் பொதுச் சுத்திகரிப்பு நிலையம். •சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உயர்மட்ட நடைபாதை பாலம்.

 தொலைநோக்குத் திட்டம் 2023 அறிவிப்புகள்! 

•விஷன் 2023' என்ற தொலைநோக்குத் திட்டம் 2023 அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா. 
அதில் சொன்ன அறிவிப்புகள் பலவும் பொய்யாகிப் போனது என்பதுதான் உண்மை.
 •தமிழகத்தல் அடுத்த 11 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்; குடிசையில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும்; தனி நபர் வருமானம் 6 மடங்கு உயர்த்தப்படும்; ஏற்றத் தாழ்வற்ற வறுமையற்ற சமுதாயத்தை அமைப்போம்.
•உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பான சாலைகள், உலகத்தரம் வாய்ந்த நகரங்கள், தங்குத் தடையற்ற மின்சாரம் ஆகியவற்றைக் கிடைக்கச் செய்வது எமது லட்சியம்' - ‘விஷன் 2023' ஆவணத்தில் அறிவித்தார் ஜெயலலிதா.
 •ரூ.15 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் எனச் சொல்லியிருந்தார் ஜெயலலிதா. அதன்படி இதுவரை ரூ.4.09 லட்சம் கோடி செலவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ.4 ஆயிரம் கோடிகூட ஒதுக்கவில்லை.
 •செங்கல்பட்டு - தூத்துக்குடி, தூத்துக்குடி - கோவை, கோவை - செங்கல்பட்டு இடையே ரூ.24 ஆயிரம் கோடி செலவில் முக்கோண 6 வழி மற்றும் 8 வழிச் சாலைகள் அமைக்கப்படும். •ரூ.1.34 லட்சம் கோடியில் 16 பெரிய சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 
•ரூ.1.88 லட்சம் கோடியில் மத்திய அரசுடன் இணைந்து ரயில் பாதை மேம்பாடு. 
•ரூ.25 ஆயிரம் கோடியில் விமான நிலைய விரிவாக்கத் திட்டம். •ரூ.1,60,985 கோடியில் தொழில் துறை திட்டங்கள். 
•ரூ.25,000 கோடியில் குடிசைகளில் வாழும் மக்களுக்குப் புதிய வீடுகள். 

கடந்த 5 ஆண்டுகளில் பல திட்டங்களை அறிவித்த ஜெயலலிதா, அவற்றை திறம்பட செயல்படுத்தியிருந்தாலே இப்போது புதிதாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டியில்லை. அவர் செய்த சாதனைகளுக்காகவே வாக்குகள் விழுந்திருக்கும். ஆனால் மீண்டும் சாத்தியமே இல்லாத பல வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா 

=====================================================================================

இன்று,
மே-11.
  •  சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்(1897)
    இந்திய தேசிய தொழில்நுட்ப தினம்
  • சியாம் நாடு, தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1949)
  • இஸ்ரேல், ஐநாவில் இணைந்தது(1949)
ராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கையில், ஜடாதரர் -- காமாட்சி தம்பதிக்கு மகனாக பிறந்தவர், வேங்கட சுப்பிரமணியன்.
காந்தியடிகள் வழிநின்று சமுதாய பணி ஆற்றினார்; குடிப்பழக்கம், சிறார் திருமணம், பெண்ணடிமை, தேவதாசி முறை ஆகியவை ஒழிய பாடுபட்டார். 
பல பத்திரிகைகள், ஆங்கில செய்திதாள்கள் நடத்தினார். 
மெல்ல ஆன்மிகம் பக்கம் திரும்பினார். 
திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமத்தில் தவம் செய்தார், அரவிந்தர் ஆசிரமத்தில், 25 ஆண்டுகள் மவுன விரதம் இருந்தார்! 
தமிழ் உலகிற்கு, 260க்கும் மேற்பட்ட நுால்களை தந்தார்.
திருக்குறளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'பாரத சக்தி' எனும் காப்பியம் படைத்தார்! 
கடந்த, 1990 மார்ச் 7ம் தேதி இறந்தார்.கவியோகி சுத்தானந்த பாரதியார் என்றழைக்கப்பட்ட வேங்கட சுப்பிரமணியன் பிறந்த தினம் இன்று!
=====================================================================================

நமது   வேட்பாளர்கள்  மறு பக்கம் .


2016 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 997 பேர்களின் வாக்கு மூலத்தை  ஆய்வு செய்ததில், 283 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது எனவும், 553 பேர் கோடீஸ்வரர்கள் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 997 வேட்பாளர்களை ஆய்வு செய்ததில் 283 வேட்பாளர்கள் மீது வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. 

157 வேட்பாளர்கள் மீது கடும் குற்ற வழக்குகள் உள்ளன. 
தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரவிச்சந்திரன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. திருவொற்றியூர் தி.மு.க., வேட்பாளர் கே.பி.சி.சாமி மீது ஒரு குற்றவியல் வழக்கும், விளவங்கோடு தொகுதி பா.ம.க., வேட்பாளர் அரிகரன் மீது ஒரு குற்றவழக்கும் உள்ளன. 

அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் 221 வேட்பாளர்களில் 36 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 

தி.மு.க., சார்பில் போட்டியிடும் 170 வேட்பாளர்களில் 40 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 37 வேட்பாளர்களில் 8 பேர் மீதும், 
பா.ஜ., வேட்பாளர்கள் 15 பேர் மீதும். 
தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18 பேர் மீதும் குற்றவழக்குகள் உள்ளன. 
வருமான வரி தொடர்பான விவரங்களை தராதவர்களின் எண்ணிக்கை 224 ஆகும் . 
இந்த  997 வேட்பாளர்களில் 553 பேர் கோடீஸ்வரர்கள்.
       இந்த வைகோவை நம்பிய பாவத்தை  கடைசியில் இப்படி கோயில்,கோயிலா அலைந்து சரிக்கட்ட  வேண்டியது வந்துட்டே!