இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 15 அக்டோபர், 2016

பருவ நிலை மாற்றத்தால் பலியாகும் மனிதம்.

2030-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பருவநிலை மாற்றத்தால் உலகளவில் 2 லட்சத்து 50 ஆயிரமும், காற்று மாசுபாட்டால் 70 லட்சம் மக்களும் உயிரிழக்க நேரிடும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவரும் சர்வதேச மருத்துவ இதழான லேன்செட் (LANCET) எச்சரித்துள்ளது.

 இந்தியாவைப் பொறுத்தவரை 2050-ம் ஆண்டில் பருவநிலை மாற்றத்தால் 1 லட்சத்து 30 ஆயிரமும், காற்று மாசுபாட்டால் 15 லட்சத்து 90 ஆயிரம் மக்களும் இறக்கக்கூடும் என்றும் கவலை தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டின் முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குநரும், மருத்துவருமான எஸ்.இளங்கோவிடம் இந்த பருவநிலைமாற்ற பாதிப்புகள் பற்றியும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் பேசினோம்...

பருவநிலை மாற்றத்துக்கு என்ன காரணம்?
‘‘உலகளவில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் 50 சதவிகிதம் இந்தியாவில் ஏற்படும் அபாயம் இருப்பதாக லேன்செட் கூறியிருக்கிறது. இந்த பருவநிலை மாற்றம் கடந்த 50 ஆண்டுகளில்தான் பெருமளவில் மாறி இருக்கிறது. அதற்கு நாம் இயற்கையைக் கையாண்ட மோசமான அணுகுமுறைகளே காரணம். இதை சர்வதேச பருவநிலை மாற்றத்திற்கான ஆராய்ச்சி நிறுவனமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து
மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்திருக்கிறது. 
19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பூமியின் சராசரி வெப்பநிலை மாற்றம் 0.8 சென்டிகிரேடிலிருந்து 1 டிகிரி வரை அதிகரித்துள்ளது. 21 -ம் நூற்றாண்டில் புவி வெப்பமானது 1.4 லிருந்து 5.8 சென்டிகிரேடு வரை உயரும் என்றும் சர்வதேச பருவநிலை மாற்றத்திற்கான ஆராய்ச்சி நிறுவனத்தின் 3-வது அறிக்கை கூறியிருக்கிறது.’’

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்...‘‘இந்தியாவில் தற்போது குளோரோ புளூரோ கார்பன் வாயுவை அதிகமாக வெளியிடும் குளிர்சாதன கருவிகளின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மேலும் பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களின் புகை மற்றும் காடுகளில் காட்டுத்தீயால் ஏற்படும் புகையால் ஓசோன் மண்டலம் பாதிக்கப்படுகிறது. இந்த ஓசோன் மண்டலம்தான் சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்
களின் பாதிப்புகளிலிருந்து பூமியிலுள்ள உயிர்களைப் பாதுகாக்கிறது என்பதை நாம் அறிவோம்.

இத்துடன் கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, குளோரோ புளூரோ கார்பன் போன்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அதிகரிப்பாலும் ஓசோன் மண்டலத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் குறைவாக உள்ள காற்றையே நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். பூமியின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டிருப்பதற்குப் பின்னாலும் இந்த கிரீன் ஹவுஸ் வாயுக்கள் காரணமாக இருக்கின்றன.’’
வெப்பம் அதிகரிப்பதன் எதிரொலியாக என்னென்ன பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம்?

‘‘கிரீன் ஹவுஸ் வாயுக்கள் காற்று மண்டலத்தில் அதிகரிப்பதால் ஓசோன் மண்டலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு, சூரிய வெப்பம் நேரடியாக பூமியைத் தாக்குகிறது. இதன் காரணமாக பூமியின் வெப்ப அளவும், வெப்ப அழுத்தமும் அதிகரிக்கிறது. வெப்ப அழுத்தத்தால் கடந்த ஆண்டு மட்டும் ஆந்திரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் 500 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். அடுத்து வரும் ஆண்டுகளில் வெப்ப அழுத்தத்தால் வருடத்துக்கு 5 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் இருக்கிறது.

பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பதால் நிலத்தடி நீ்ர் குறைந்து, வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. நீர்த்தட்டுப்பாட்டால் மனிதனது சருமத்தில் வறட்சி, உடலில் நீர் இழப்பு மற்றும் முக்கியமான தாதுப்பொருட்களின் அளவு குறைகிறது.

வெப்பம் அதிகரிப்பதால் நோய்களைப் பரப்பக்கூடிய, விவசாயப் பயிர்களை அழிக்கக்கூடிய பூச்சிகளின் இனப்பெருக்கம் துரிதமடைந்து அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, மூளைக்காய்ச்சல் மற்றும் புதிய வரவான ஜிகா வைரஸ்களின் பாதிப்புகள் அதிகரித்ததன் பின்னணியில் புவி வெப்பம் அதிகரிப்பதும் அடங்கி இருக்கிறது. 

குறிப்பாக, இந்தப் பருவநிலை மாற்றத்தால் கர்ப்பிணிகள், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தை கள் மற்றும் முதியவர்கள் அதிகளவு பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.’’உலக சுகாதார நிறுவனம் என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது ?‘‘சர்வதேச அரங்கில் மக்கள் நல்வாழ்வு குறித்து ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்குவது, பரவக்கூடிய நோய்கள் பற்றி எச்சரிக்கை செய்வது, சுற்றுப்புறச் சூழலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அதனால் ஏற்படக்கூடிய புதிய நோய்கள், நோய்க்கிருமிகளின் நிலைப்பாடு போன்றவற்றை ஆய்வு செய்து உலகளவில் அனைத்து நாடுகளுக்கான அறிக்கை வெளியிடுவது போன்ற பணிகளை உலக சுகாதார அமைப்பு மேற்கொள்கிறது.
பருவநிலை மாற்றங்கள் சமூக, பொருளாதார மற்றும் சுகாதார அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளையும் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது.

மேலும், சுற்றுச்சூழல் மாற்றத்தையும், விளைவுகளையும் கண்காணிக்கும் உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழுவினை ஒவ்வொரு மாநிலங்களிலும் ஏற்படுத்த வேண்டுமென்று 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. தேசிய, மாநில, மாவட்ட அளவில் இதற்கான போதிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத்தில் மட்டும் இதுபோன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வல்லுநர் குழு சுற்றுச்சூழல் மாற்றம், வெப்பநிலை மாற்றம், நிலம், நீர், காற்று மாசுபாடு, தொற்று நோய்கள் மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்னைகளை கண்காணித்து, அதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ரஷ்யா, பின்லாந்து, அயர்லாந்து, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் 20 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த வல்லுநர் குழுவை அமைத்துவிட்டனர்.

 அந்த நாடுகளில் பனிப்பாறை உருகுவது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடற்சீற்றம், சுனாமி போன்றவற்றின் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகளை அளவிடும் அளவுக்கு இந்த குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆகவே இந்தியாவில் பருவநிலை மாற்ற பாதிப்புகளை வரும்முன் தடுப்பதற்கு அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுநர்குழு கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். மேலும் இயற்கைச் சமநிலை சீர்கெடாமல் தடுத்து, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.’’இயற்கை சமநிலை பாதிப்புகள் பற்றி...

‘‘பூமியின் இயற்கை சமநிலை மனித நடவடிக்கைகளால் பல வழிகளில் பாதிப்புக்கு உள்ளாகிறது. இந்தியாவில் தென்மாநிலங்களான தமிழ்நாடு,
ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவில் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது. ஆற்றுப்படுகைகளில் மணல்திருட்டு நடைபெறுகிறது.

கல்குவாரிகளால் மலைகள், பாறைகள் மற்றும் குன்றுகள் போன்ற இயற்கை வளங்கள் தகர்க்கப்படுகின்றன. காட்டு மரங்களை அழிப்பது, காடுகளை அழித்து வீடுகள் கட்டி நகர்மயமாக்குவது அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் நிலம், நீர், காற்று மாசுபாடுகள் அதிகரிக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற பல மனித நடவடிக்கைகளால் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகிறது. பூமியிலுள்ள இயற்கை வளங்களை அழித்து மேற்கொள்ளப்படும் மனித நடவடிக்கைகளால், பூமியின் இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு, பருவநிலைகளில் சீரற்ற மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் பூமியின் வெப்பநிலை, மழைப்பொழிவு, கடல்நீர் மட்டம் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுகிறது.

வெப்பநிலை அதிகரிப்பதால் பனிப்பிரதேசங்களில் பனிக்கட்டிகள் உருகி கடல்நீர் மட்டம் உயர்கிறது. வெப்பமான பகுதிகளில் வெப்பம் மேலும் அதிகரி–்த்து, வெப்ப அழுத்தம் அதிகரிப்பதால் மக்களின் உயிருக்கு பல வழிகளில் பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக மழைப்பொழிவினால் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் உயிர்க்கும், உடமைக்கும் பாதிப்புகள் ஏற்படுகிறது.’’

அரசு தரப்பில் இன்னும் செய்ய வேண்டியவை என்னென்ன ?‘‘மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது, நோய்களற்ற, சுகாதாரமான வாழ்க்கையை உருவாக்குவது, தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது போன்றவை அரசின் பணி. மக்களுக்கு சுகாதாரமான மற்றும் போதுமான குடிநீர் வழங்க வேண்டியது அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கடமை. ஆனால் இன்று பெருநகரங்களில் குடிநீர் வணிகமயமாகிவிட்டது.

காற்று மாசுபாடுகளால் சுவாசக் கோளாறுகள் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் அதிகரிக்கிறது. காற்றும் நீரும் உலக உயிர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது. குடிநீர் வணிகமாகிவிட்டதைப் போல இன்னும் 20 ஆண்டுகளுக்குள் சுத்தமான காற்றை காற்று அடைத்த பைகளில் காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஏழை செல்வந்தர்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் எதி்ர்காலத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டு சுகாதாரம் கேள்விக்குறியாகிவிடும். அரசு இந்த விஷயங்களை எல்லாம் உடனடியாகக் கவனிக்க வேண்டும்.’’

இந்தியாவில் பருவநிலை மாற்ற பாதிப்புகளை வரும்முன் தடுப்பதற்கு அனைத்து மாநிலங்களிலும் உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுநர்குழு கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். மேலும் இயற்கைச் சமநிலை சீர்கெடாமல் தடுத்து, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

குடிநீர் வணிகமாகிவிட்டதைப் போல இன்னும் 20ஆண்டுகளுக்குள் சுத்தமான காற்றை காற்றடைத்த பைகளில் காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அபாயம் இருக்கிறது.
- க.கதிரவன்
நன்றி:தினகரன்.
====================================================================================
ன்று,
அக்டோபர்-15.


  • இந்திய இளைஞர் எழுச்சி தினம்


  • சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்


  • இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினம்(1931)
====================================================================================