இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 30 நவம்பர், 2016

வயதைக் குறைக்கும்

ஆரோக்கியத்தைக் கூட்டும்,  

உணவுத் திட்டம் !வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க தென் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் வால்டர் லாங்கோ குழு, விரதத்தை ஒத்த பத்திய முறையைத் தொகுத்துள்ளனர்.
 அதன் படி, நான்கு நாட்களுக்கு குறைந்த கலோரி உணவை உட்கொண்டால் அடிவயிற்று பகுதியின் கொழுப்பையும் முதுகுத்தண்டு மற்றும் மரபுவழி அணுக்களையும் அதிகப்படுத்தியதாகக் கண்டுபிடித்தனர். 
இந்தப் பத்தியத்தை ‘விரைவு வளர்சிதைமாற்ற உணவு திட்டம்’ அல்லது சுருக்கமாக ‘எஃப்.எம்.டி’ (Fast Metabolism Diet - FMD ) என்று அழைக்கப்படுகிறது. முதல் கட்டமாக இந்தச் சோதனை நொதி வகை (yeast) உயிர்களில் நடத்தப்பட்டது. அடுத்தக் கட்டமாக எலிகளிலும் கடைசியாக மனிதர்களிடத்தும் நடத்தப்படுகிறது. இவ்வுணவு திட்டத்தால் அணு அளவில் ஏற்படும் உயிரியல் மாற்றங்களைக் காண நொதி வகை உயிரினங்கள் உதவின. குறைந்த நாட்களே வாழும் எலிகளோ, பத்தியத்தால் உண்டாகும் வாழ்நாள் பயன்களைப் பதிவு செய்ய உதவின. 
மனிதருக்கும் இது உகந்தது என்று முதல் கட்ட சோதனையில் தெரிய வந்தது.

நடுவயது முதல் மாதம் இரு முறை எஃப்.எம்.டி உணவு முறையைப் பின்பற்றியவர்களின் வாழ்நாள் அதிகரித்தது; 
புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு குறைந்தது; 
நோய்த் தடுப்பு மண்டலத்தின் செயல்திறனை அதிகரித்தது; 
எலும்புகளின் தனிம அடர்த்தி(bone mineral density) குறைபாடு கட்டுக்குள் வந்தது; 
புரிதல் திறன் அதிகரித்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

முதற்கட்டமாக மனிதர்கள் மேல் நடத்தப்பட்டச் சோதனையில், 19 நபர்கள் பங்கு கொண்டனர். 
ஒரே மாதிரியான திட்ட உணவை மாதம் ஒரு முறை ஐந்து நாட்களுக்கு கொடுத்த போது சர்க்கரை வியாதி, இதய நோய்கள், முதுமைக் குறியீடுகள் மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்தன; 
பக்க விளைவுகளும் இல்லை என்று லாங்கோ கூறுகிறார்.

கடுமையான விரதம் இருப்பது சிரமம். 
உடலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது. 
ஆதலால் கடுமையான விரதத்தால் உண்டாகும் நன்மைகளை உடலில் விளைவிக்க இந்தப் புதிய உணவு அட்டவணையை வகுத்துள்ளோம்” என்று லாங்கோவும் யு.எஸ்.சி டேவிஸ் கல்லூரியின் முதுமையியல்(biogerontology) பேராசிரியர் எட்னா எம்.ஜோன்ஸ்ஸும் கூறினார்.

எஃப்.எம்.டி திட்ட உணவில் ஒருவர் உட்கொள்ளும் சராசரி கலோரி அளவு 34-54 சதவிகிதம் குறைக்கப்பட்டது. இந்த உணவில் குறிப்பிட்ட அளவில் புரதச் சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நுண்ணூட்டப் பொருள் ஆகியவை அடங்கி இருந்தன. 
இதனால் ஐ.ஜி.எஃப்-1 எனும் அகச்சுரப்பு நீர்(hormone) அளவு குறைந்தது. வளர்வதற்கும் முதிர்வடைதலுக்கும் இந்த சுரப்பி உதவுகிறது. இதனால் புற்றுநோய் உருவாவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

எஃப்.எம்.டி திட்ட உணவு ஐ.ஜி.எஃப்.பி.பி எனும் அகச்சுரப்பி அளவையும் குறைக்கிறது. இதன் விளைவாக முதுமைக் குறியீடுகள் குறைந்தன. சர்க்கரை நோய், இதய நோய்களையும் குறைத்தன. 
குளூக்கோஸ், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் சி எனும் புரதம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தியது. உணவு உட்கொள்ளாத போது புற்றுநோய் அணுக்களைப் பட்டினிப் போட்டு நோய்த்தடுப்பு அணுக்கள் மற்றும் பிற அணுக்களை வேதியல் மருந்தின் நச்சுத்தன்மையில் இருந்து காக்க முடியும் என்று லாங்கோ முன்பே ஒரு சோதனையில் காட்டியிருக்கிறார். “இந்த திட்டஉணவு முறையால் உடல் முதிர்வடைவதைத் தாமதப்படுத்தவும் முதுகு தண்டு அணுக்களை மீளாக்கவும் முடியும்.” என்று லாங்கோ கூறினார். 
===================================================================
ன்று,
டிசம்பர்-01.

 • உலக எய்ட்ஸ் தினம்
 • மியான்மர் தேசிய தினம்
 • நாகாலாந்து, இந்தியாவின் 16வது மாநிலமானது(1963)
 • இந்தியாவில் எல்லைக் காவல்படை அமைக்கப்பட்டது(1965)
 • ====================================================================
செவ்வாய், 29 நவம்பர், 2016

மோடி நண்பர்கள் முன்பே பணத்தை மாற்றிவிட்டனர்

யாதின் ஒசா குஜராத்தின் பி.ஜே.பி முன்னாள் எம்.எல்.ஏ. இவர் மோடியின் பணத்தை மதிப்பிழக்கச் செய்த நடவடிக்கை பற்றிய தகவல் முன்கூட்டியே பி.ஜே.பியின் அபிமான தொழிலதிபர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி பிரதமர் மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.
இவர் ஒரு காலத்தில் மோடியுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியவர். பா.ஜ.க தலைவர் அமித் ஷா அரசியல் வாழ்வைத் துவங்கி வைத்தவர். அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள கடிதம் பலரால் பகிரப்பட்டு மிக விரைவில் பலரையும் சென்றடைந்துள்ளது.
yatin-oza
யாதின் ஓசா
ஒசா, மோடி குஜராத் முதல்வராயிருந்தபோது அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக கிச்சன் காபினெட்டில் இருந்தவர். இவர் முதன்முதலாக சபர்மதி தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அமித் ஷாவை தனது தேர்தல் முகவராக (election Agent) நியமித்திருந்தார். 1997 தேர்தலில் அமித் ஷா வேட்பாளராக தேர்வாவதற்கு உதவியுள்ளார். சமீபத்தில் பா.ஜ.கவில் ஓரங்கட்டப்பட்டதால் அதிருப்தியில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
இக்கடிதத்திற்கு முன்னதாக ஒசா கெஜ்ரிவாலுக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் பீகார் தேர்தலையொட்டி அமித் ஷாவிற்கும் அக்பருதீன் ஓவாய்சிக்கும் நடந்த திரைமறைவு பேரத்தை அம்பலப்படுத்தியிருந்தார். அவர்களுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது தானும் உடனிருந்ததாக கூறினார். பீகார் தேர்தலின் போது அக்பருதீன் ஓவாய்சி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு சமூகத்தில் மதவாத பிளவை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டு அமித் ஷாவினால் எழுதிக் கொடுக்கப்பட்டது என்ற உண்மையை வெளியிட்டிருந்தார்.
***
பிரதமர் மோடிக்கு பணத்தை மதிப்பிழக்கச் செய்த நடவடிக்கை தொடர்பாக எழுதிய கடிதம்:
பெறுநர்:
ஸ்ரீ நரேந்திர மோடி
மதிப்பிற்குரிய இந்தியப் பிரதமர்
7, லோக் கல்யாண் மார்க்,
நியூ டெல்லி
ன்புள்ள நரேந்திரபாய்,
இந்தக் கடிதம் கிடைக்கும் வேளையில் சிறப்பான உடல் நலத்துடனும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நவம்பர் 8, 2016 அன்று ரூபாய் நோட்டுகள் குறித்து நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவமுள்ள தீரச்செயலுக்காக என் இதயத்திலிருந்து உங்களை வாழ்த்தினேன். துரதிருஷ்டவசமாக என் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் சொன்ன செய்தி இது: நவம்பர் 8 நண்பகல் 12 மணியளவில் அகமதாபாத் நகரத்தின் பெரிய தொழிலதிபரின் மனைவி அங்கிருந்த முன்னணி நகைக்கடைக்கு வந்து முன்பே பதிவு செய்து வைத்திருந்த 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வாங்கினார். அவர் வரும்போது தங்கம் பெட்டியில் தயாராக இருந்தது. இரண்டு நிமிடங்களில் பணம் செலுத்தப்பட்டு வியாபாரம் முடிந்தது. அவர் அந்த கடைக்கு முன்பே பதிவு செய்திருந்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கத்தான் எதேச்சையாகக் கடைக்கு வந்தார். அவர் ஒரு மிகவும் பிரபலமான மருத்துவர்.
amit-shah-modiஉங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி ஒரு காலத்தில் உங்கள் கிச்சன் காபினெட்டில் இருந்திருக்கிறேன். அந்த வகையில் நாட்டின் 50 சதவீதக் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் உங்களுக்கு நெருக்கமான அன்பான அந்த தொழிலதிபர்களுக்கு உங்களது ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்த தகவல் நீங்கள் அறிவிப்பதற்கு முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு உடனே பொறி தட்டியது. இதைப் பற்றியே ஒரு நாள் முழுவதும் சிந்தித்து, விசாராணைகள் நடத்திய பிறகு எனக்குக் கிடைத்த விவரங்கள் அதிர்ச்சியளிக்கக் கூடியவை. இந்த வெகுஜன நோக்கிலான நடவடிக்கையின் மூலமாக இந்த நாட்டு மக்களை நீங்கள் முட்டாள்களாக்கி விட்டீர்கள்.
உண்மையில், தேச நலனுக்காக என்று சொல்லி நீங்கள் எடுத்த நடவடிக்கை உங்களுக்கு நெருக்கமானவர்களையும் அன்புக்குரியவர்களையும், உங்கள் கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் மேலும் பணக்காரர்களாக்குவதற்காகத்தான்.
அமித் ஷாவிற்கு நெருக்கமான கூட்டாளிகள் நவம்பர் 8 இரவு முதல் பணப் பரிவர்த்தனை வர்த்தகங்களில் ஈடுபட்டார்கள் என்பதை தெளிவாகவும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையிலும் நிரூபிப்பதற்கான வீடியோ பதிவு என்னிடம் உள்ளது. அவர்களின் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் முன்னால் 37 சதவீதக் கழிவுடன் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காக ஒரு பெரிய வரிசை இருக்கிறது. தனது அடையாளத்தை வெளிக்காட்டாமல் குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய்களை எடுத்துச் சென்றால் அங்கிருக்கும் ஊழியர்கள் அதை எண்ணி 63 லட்சம் செல்லத்தக்க ரூபாய்களைக் கொண்ட ஒரு பையைக் கொடுப்பார்கள்.
இந்த வீடியோவை வெளியிட்டு விடலாம். ஆனால் நீங்கள் அமித் ஷாவின் சகாக்களை விட்டுவிட்டு வரிசையில் இருப்பவர்களைத் தண்டிப்பீர்கள். ஆயினும் நான் அந்த வீடியோவை இரண்டு அல்லது மூன்று மூத்த ஊடகவியலாளர்களுக்குக் காட்டிவிட்டு உங்களுக்கு தகவல் அனுப்புவேன். ஒன்றுக்கு இரண்டு முறை அந்த வீடியோவைச் சோதித்து விட்டு நான் சொல்வது உண்மைதானா என்று அவர்களிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
கூட்டுறவு வங்கிகளில் பெரிய அளவில் நடைபெற்றுள்ள முறைகேடுகளையும், சட்டவிரோதச் செயல்களையும் பற்றி விவரம் அறிந்த பின்தான் நேற்று நீங்கள் அவ்வங்கிகளின் மீது தடைவிதித்தீர்கள் என்று உங்களை அறிந்த யாரும் நம்பமாட்டார்கள்.
உங்களுடைய எதிரி கூட உங்களின் செயல்திறனையும், திறமையையும், புத்திசாலித்தனத்தையும் மதிக்கிறார்கள். அந்த முக்கியாமான அம்சத்தினைக் குறித்து நீங்கள் யோசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள் என்பது மட்டும் நிச்சயம். நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கையின் முழு வரைபடத்தையும் மனதில் கொள்ளாமல் நீங்கள் ஒரு செயலில் இறங்க மாட்டீர்கள் என்று உங்களை நன்கு அறிந்த எனக்குத் தெரியும். ஒரு நடவடிக்கையினால் விளையப்போகும் அனைத்து சாதக பாதகங்களும் உங்கள் சிந்தையில் பிரகாசமாக இருக்கும்.
நான் மிகுந்த மரியாதையுடன் சொல்லவிரும்புவது என்னவென்றால், கூட்டுறவு வங்கிகளின் முறைகேடுகள் அனுமதியுடந்தான் நடந்திருக்கின்றன. 
ஏனெனில், குஜராத்தில் உள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் பா.ஜ.க ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நவம்பர் 8 இரவு 9 மணியிலிருந்து நவம்பர் 9 அதிகாலை 5 மணி வரை இந்த வங்கிகள் ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்களுக்கு குறைந்த மதிப்புடைய நோட்டுகளை மாற்றிக் கொடுத்திருக்கின்றன. நவம்பர் 8 அன்று நாட்டிலுள்ள எல்லா வங்கிகளிலும் துல்லியமாக எவ்வளவு மதிப்புடைய ரொக்கம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி மூலமாகக் கேட்டிருக்கிறீர்கள். அந்த விவரங்களை வைத்து நான் சொன்னது உண்மைதானா என்று நீங்களே உறுதிசெய்து கொள்ளுங்கள். நான் சொன்னது தவறு என்று நிரூபிக்கப்பட்டால், நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பேன் என உறுதியளிக்கிறேன்.
சுறாமீன்களும் திமிங்கிலங்களும் தப்பித்து விட்டன, உங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு முன்பே உங்களது நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டு விட்டது என்று இந்திய மக்களிடையே நிலவும் சந்தேகங்களைப் போக்குவதற்கு, நீங்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருப்பதாக அறிவித்தவர்களைப் பற்றி இந்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிட வேண்டும். ஃபோர்ச்சூன் 300 பட்டியலில் இருக்கும் 300 தொழில் நிறுவனங்களின் எந்தவொரு சேர்மனோ, நிர்வாக இயக்குனரோ அல்லது இயக்குனரோ இப்படி அறிவித்திருக்க மாட்டார்கள் என்று உறுதியாக எனக்குத் தெரியும். 

அப்படி அறிவிக்க வில்லையென்றால் என்னுடைய குற்றச்சாட்டுகள் உண்மை என்றுதான் பொருள்.
4000 ரூபாய்களுக்காக அல்லது சிறு தொகைகளை வங்கியில் போடுவதற்காக பசியிடனும், தாகத்துடனும் வரிசையில் நிற்கும் மக்களைப் பார்த்தேன். ஒரு மெர்சிடிஸ், பிஎம்டபுள்யூ, அவுடி, வோல்வொ, போர்ஷா அல்லது ரேஞ்ச் ரோவர் காரையோ அல்லது அதன் உரிமையாளரையோ வங்கிகளுக்கு வெளியிலிருந்த வரிசையில் பார்க்கவில்லை. ஏ.டி.ம் அல்லது வங்கி முன் வரிசையில் நிற்பவர்கள்தான் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள், மேற்கூறிய கார்களின் உரிமையாளர்களிடம் அது இல்லை என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம்.
final vogafon revised Slider
அமித் ஷாவிற்கு நெருக்கமான கூட்டாளிகள் நவம்பர் 8 இரவு முதல் பணப் பரிவர்த்தனை வர்த்தகங்களில் ஈடுபட்டார்கள் என்பதை தெளிவாகவும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையிலும் நிரூபிப்பதற்கான வீடியோ பதிவு என்னிடம் உள்ளது.
ஃபோர்ச்சூன் பட்டியலிலுள்ள 300 நிறுவன அதிபர்களைத் தவிர, ரியல் எஸ்டேட் நடத்துபவர்கள், காண்டிராக்டர்கள், குறிப்பாக அராசாங்கத்திடம் காண்டிராக்ட் பெற்றவர்கள், சுரங்க உரிமையாளர்கள், குறிப்பாக இரும்புத் தாது எடுக்கும் நிறுவன உரிமையாளர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் எவ்வளவு பணம் வங்கிகளில் செலுத்தியிருக்கின்றனர் என்று இந்த நாட்டு மக்கள் அறிய ஆவலாயிருக்கின்றனர். மேற்கூறியவர்களைப் பற்றிய விவரங்கள் இந்த நாட்டு மக்களுக்குத் தெரியவில்லையென்றால், 50 சதவீதம் கருப்புப் பணத்தினை பதுக்கி வைத்திருக்கும் 10-12 தொழிலதிபர்கள் முன்னரே உங்களின் நடவடிக்கை குறித்து உங்களிடமிருந்து தகவல் பெற்று ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்கிற குற்றச்சாட்டு உண்மையாகிவிடும்.
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலங்களை உங்களிடம் பெற்றுக் கொண்டு 7000 பேருக்குக் கூட வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் இருக்கும் இந்த 10-12 நிறுவனங்களை நடத்தும் தொழிலதிபர்கள் வங்கிகளில் எவ்வளவு தொகை செலுத்தியிருகின்றனர் என்று வங்கி வரிசைகளில் சிறு தொகைகளுக்காகக் காத்திருக்கும் வழியறியா ஏழைகள் தெரிந்துகொள்ள ஆர்வமாயிருப்பார்கள். 300 முதல் 400 கோடி வரை செலுத்தியவர்களின் விவரங்களையும், அந்தத் தொகைகள் அவர்களின் வருமான வரித் தாக்கல் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கணக்குடனோ அல்லது தெரிந்த மூலாதரங்கள் வழியே வந்த வருமான அளவுடனோ ஒத்துப்போகவில்லையெனில், வருமானவரித் துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரங்கள் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டால் அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். 
நவம்பர் 8 இரவு எட்டு மணிக்கு முன் யார் எவ்வளவு தங்கம், வைரத்தை வாங்கியிருக்கிறார்கள் என்று விசாரணை நடத்த வேண்டுமென்றும் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உச்சாணிக் கொம்பில் இருக்கும் வெகு சிலர் பெருமளவு தங்கத்தையும் வைரத்தையும் அந்த நேரத்தில் வாங்க வேண்டிய தேவையைப் பற்றி மக்கள் சிந்தித்துப் பார்க்க உதவும்.
உங்களின் நடவடிக்கை நாட்டின் நலனுக்காகவா அல்லது நேரடியாக உங்களுக்கும், உங்கள் நேசத்துக்குரியவர்களுக்கும் உங்களின் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்மை செய்வதற்காகவா என்று இந்த நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மேற்குறிப்பிட்டுள்ள விவரங்களை அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தயைகூர்ந்து, கருணை உள்ளத்துடன் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
                                                                                                                         தங்களிடம் உண்மையான,
                                                                                                                                  (
ஒப்பம்) யாதின் ஓசா
______________________________
– தமிழாக்கம்: விஜயசங்கர் ராமச்சந்திரன்.
நன்றி:வினவு.
=======================================================================================
ன்று,
நவம்பர்-30.

 • ஸ்காட்லாந்து தேசிய தினம்
 • இந்திய விண்ணலை அறிவியலாளர் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1858)
 • பார்போடஸ் விடுதலை தினம்(1966)
 • வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது(1995)
 • ========================================================================================
பிரதமர் மோடி விளம்பரத்திற்காக செலவிட்ட தொகை மட்டும் 1100 கோடி ரூபாய் .

ரம்வீர் சிங் என்பவர் தகவல் அறியும் உரிமை மூலம் விண்ணபித்தததற்க்கு பதிலளித்துள்ள தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை "கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் 2016 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மோடி தோன்றும் விளம்பரங்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகை 1100 கோடி ரூபாய் "என்று தெரிவித்தள்ளது.
இந்த தொகை டிவி, ரேடியோ, சினிமா, இணையதளம், SMS, என்று பல்வேறு பிரிவில் செலவிடப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
இதில் அதிகப்படியாக 200 கோடி ரூபாய் ஒளிபரப்புத்துறையில் செலவிடப் பட்டுள்ளது. 
SMS விளம்பர்ரதிற்கு என்று மொத்தமாக 17 கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது.
இந்த விளம்பரங்களுக்கான மொத்த தொகையை நாள் கணக்கில் பிரித்து கணக்கிட்டால், ஆட்சிக்கு வந்ததில் இருந்து மோடியின் விளம்பரத்திற்கான ஒரு நாள் செலவு 1.4 கோடி ரூபாயாகும்.
"விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது"என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.
====================================================================================================


திங்கள், 28 நவம்பர், 2016

மோடியை நம்பும் அப்பாவிகள் கவனிக்க...

1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற முடிவினை யாருக்கும் தெரிவிக்காமல் மிக ரகசியமாய் பிரதமர் மோடி எடுத்ததாகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு கூட தெரிவிக்காமல் முடிவெடுத்ததாகவும் அவரின் ஆதரவாளர்கள் புளங்காகிதம் அடைகிறார்கள்.

அறிவிப்பு வெளியிடுவதற்கு முதல் நாள் பாரதிய ஜனதா கட்சி தனது பணத்தை கத்தை கத்தையாக வங்கிக்கு சென்று செலுத்தியது, அறிவிப்பு வெளியிடுவதற்கு முதல் வாரம் மோடியின் கட்சியினர் நிலங்களாக வாங்கி குவித்தது, அம்பானிக்கும், அதானிக்கும் அரசின் முடிவு தெரியும் என அக்கட்சி எம்.எல்.ஏ ஒருவரே கூறியது சமூக வலைத்தளங்களில் மிகவும் அழுத்தமாக உலவியது.
இப்படி அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருந்தாலும், இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மையல்ல; மோடி மீதான அவதூறு தான் இது… என்று நம்புகிற அப்பாவிகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அரசு வெளியிட்ட நிர்வாக ஆணையே, அரசின் இம்முடிவு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.
நவம்பர் 8ம் தேதி வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பு பின்வருமாறு தொடங்குகிறது:
‘‘Whereas, the Central Board of Directors of the Reserve Bank of India (hereinafter referred to as the Board) has recommended that bank notes of denominations of the existing series of the value of five hundred rupees and one thousand rupees (hereinafter referred to as specified bank notes)
- அதாவது ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுமத்தின் பரிந்துரையின் பேரில்... என்று அந்த அறிவிப்பு தொடங்குகிறது... 

இந்த அறிவிப்பு சொல்கிற முக்கியமான விஷயம் என்னவென்றால் 1. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 பிரிவு 26(2) ன் படி இயக்குநர்கள் குழுமம், மைய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யலாம்; அந்த முடிவினை மைய அரசாங்கம் செயல்படுத்தலாம். 2. எனவே இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுமத்தின் பரிந்துரையான 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவிக்கிறது.

இந்த நடைமுறை சரியானது தான். 
அதில் தவறு ஒன்றும் இல்லை. 

ஆனால், இயக்குநர்கள் குழுமத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? 
யார் யார் இருக்கிறார்கள்? என்பதுதான் முக்கியம். 
ரிசர்வ் வங்கி சட்டப்பிரிவு 8ன் கீழ் இயக்குநர்கள் குழு அமைக்கப்படுகிறது. 
 இப்பிரிவின் படி 21 நபர்களை கொண்டது தான் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுமம். 
இந்த 21 பேரில் 4 நபர்கள் தனியார் துறையை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிறது அந்த சட்டப்பிரிவு. 
4 நபர்கள் யார்? 
என்று இயக்குநர்கள் பட்டியலை ஆராயும் பொழுது நமக்கு பெருத்த ஆச்சரியம்.

1. டாக்டர்.நாச்சிகேட்.எம்.மோர் – இவர் 1987 முதல் 2007 வரை ஐ.சி.ஐ.சி.ஐ யில் நிர்வாக இயக்குநராக இருந்துள்ளார். 2007 முதல் 2011 வரை ஐசிஐசிஐ பவுண்டேசனின் நிறுவன தலைவராக பணியாற்றியுள்ளார். விப்ரோ, கேர் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். தற்பொழுது பில்கேட்ஸ் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசனின் இந்திய இயக்குநராக இருக்கிறார்.

2. நடராஜன் சந்திரசேகரன் – டாடா கன்சல்டன்சியின் சி.இ.ஒ.வாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்து வருகிறார். NASSCOMன் தலைவராக பணியாற்றி யுள்ளார். இந்திய – அமெரிக்க சி.இ.ஒ அமைப்பின் உறுப்பினர். சர்வதேச சாப்ட்வேர் மற்றும் வர்த்தகத் துறையில் 28 வருட அனுபவம் உள்ளவர்.

3. பாரத் நோரோடம் டோஷி – மஹிந்த்ரா & மஹிந்த்ரா குழுமத்தின் நிர்வாக இயக்குநராக, தலைவராக பணியாற்றியுள்ளார். மும்பை சேம்பர் ஆப் காமர்ஸ்சின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கார்ப்பரேட்டுகளோடு ஒட்டி உறவாடும் இந்த இயக்குநர்களும், மோடியும் மட்டும் சேர்ந்து யாருக்கும் சொல்லாமல் பரம ரகசியமாய் முடிவினை எடுத்துள் ளார்கள்.

அதுவும் 130 கோடி மக்களுக்காக, தேசத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே!

                                                                                                                                - அ.கோவிந்தராஜன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

 தேசபக்தர்’களின் கவனத்துக்கு...இன்று எனக்கு விடுப்பு என்பதால் இன்று ஒருநாள் Cashless transaction ஐ (பணமில்லா பரிமாற்றம்) முயன்று பார்க்கலாம் என முடிவு செய்தேன்.தெருவில் அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணிகாலையிலேயே கீரைக்கட்டுகளை சுமந்து வந்த குரல்கேட்டதும் கீரை வாங்கலாம் என முடிவெடுத்தேன். கூப்பிட்டு விலை கேட்டதும் ஒரு கட்டு பத்து ரூபாய் என்றார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரிடம் Card swiping machine (கிரடிட் கார்டு மூலம் பணத்தை தனது கணக்கில் வரவு வைத்துக் கொள்ளும் இயந்திரம்) இல்லை. Pay tm வசதியை கூடவே வைத்திருக்கவேண்டும் என்ற பொருளாதார அறிவு இல்லை. 
எனவே அவரை அனுப்பிவிட்டேன்.அதே கீரை பக்கத்து தெருவில் உள்ள Reliance fresh (ரிலையன்ஸ் பிரெஷ்) கடையில் உள்ளது. பாட்டி கொண்டு வந்த அளவுக்கு Fresh ஆக (புத்தம் புதிதாக) இல்லாவிடிலும் ஓரளவுக்கு சுமாராகவே இருந்தது. ஒரு கட்டு 20 ரூபாய் என்றனர். அவர்களிடம் Card payment (கிரடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி) வசதி இருந்தது.

ஆனால் 20 ரூபாய்க்கு Card தேய்க்கமாட்டோம். குறைந்தது 200 ரூபாய்க்கு வாங்கினால் தான் ஊயசன வாங்குவோம் என்றனர். இது என்னடா சோதனை என்று அங்கிருந்து திரும்பினேன்.வரும் வழியில் டீ குடிக்கலாம் என்றால், டீக்கடைக்காரரிடமும் ஊயசன வசதி இல்லை.
மணி 9 ஆனதும் ஒரு பெண்மணி நடத்தும் இட்லி கடைக்கு சென்றேன். ஐந்து இட்லி ஒரு வடை 30 ரூபாய் என்றார்.
ஆனால் அவரிடமும் Card வசதி இல்லை.Doveton Cafe என்றொரு பெரிய ஓட்டல் உள்ளது. அவர்களிடம் சென்றால் நீங்கள் குறைந்தது 150 ரூபாய்க்குசாப்பிட்டால் தான் Card வாங்குவோம் என்றனர்.சரி தோசை மாவு வாங்கி வீட்டுக்கு போய் தோசை சுடலாம் என்று அந்த கடைக்கு போனால் மாவு பாக்கெட்15 ரூபாய் தான்.

ஆனால் அவரிடம் Card வசதி இல்லை.ஒரு மணி நேரமாக வெயிலில் நடந்து சென்றது களைப்பாக இருந்ததால் ஒரு பெட்டி கடையில் பன்னீர் சோடா குடிக்கலாம் என்று போனால் அவரிடமும் Card வசதி இல்லை.மிகுந்த பசி தான். 
இருந்தாலும் எல்லையில் ராணுவ வீரர்கள் கஷ்டப்படும்போது ஒரு நாள் சாப்பிடாவிட்டால் என்ன, அதுவுமில்லாமல் பிரதமரே சாப்பிடாமல் தான் இருக்கிறாராம்.
நாம் சாப்பிடலாமா என்று மனதில் நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.வீட்டுக்கு வந்ததும் என் மகள் பிஸ்கெட் வேண்டுமென கேட்டாள். அவளை கடைக்கு கூட்டிப்போய் என்னிட முள்ள 50 ரூபாய்த் தாளை கொடுத்து என் Cashless சங்கல்பத்தை முடித்துக்கொண்டேன்..!
முழுதாக மூன்று மணி நேரம் கூட என்னால் என் விரதத்தை காப்பாற்ற முடியவில்லை. எனது சங்கல்பம் முக்கியமானது தான். 
ஆனால் எல்லாவற்றையும் விட என் குழந்தை எனக்கு முக்கியமானவள்..!

                                                                                                                                      - குறிஞ்சி நாதன்
------------------------------------------------------------------------------------------------------------------------
மோடி கி ஆப்பு சர்க்கார்

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஆப்புகள்

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பிறகு பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக பொது மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் நாள் கணக்காக நின்று சிரமப்படுவதாகவும் உயிரிழப்பதாகவும் மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆகவே இதை உரிய முறையில் பரிசீலித்த மத்திய அமைச்சரவை, பொது மக்களின் சிரமங்களை போக்குவதற்காக போர்க்கால நடவடிக்கையில் புதிய ‘ஆப்புகளை’, ‘ஆண்ட்ராய்ட் செயலிகளை’ உருவாக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. அதனை அறிமுகப்படுத்தி பிரதமர் மூடி உணர்ச்சிகரமாக பேசினார்,
ஆப்பு கி கியூ நகி கே

வங்கிகளில், ஏடிஎம்களில் நாள் கணக்காக நீண்ட வரிசையில் நின்று பணம் இல்லையென திரும்பி வருவதை தவிர்க்கவே இந்த ஆப்பு.. இந்த ஆப்பில் உங்கள் பெயர், வங்கி/ஏடிஎம், வங்கிக் கணக்கு, எடுக்க வேண்டிய தொகை ஆகியவற்றை பதிவு செய்தால் சில நிமிடங்களில் நீங்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் வங்கி/ஏடிஎம்க்கு சென்று பணம் பெறலாம் என்ற தகவல் வரும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் சென்று பணம் எடுத்துக்கொள்ளலாம். வரிசையில் நின்று செத்து சுண்ணாம்பாக வேண்டியதில்லை.
இந்த ஆப்பு பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது. நாட்டில் 93 சதவீத மக்கள் இதன் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். இது பற்றி ஏர்வாடி ஏகாம்பரம் நமது செய்தியாளரிடம் கூறுகையில், ஆமாம் சார், இந்த ஆப்பில் நான் 5000 ரூபாய் எடுப்பதற்காக பதிவு செய்தேன். எனக்கு உடனே வங்கியில் இருந்து 5 வருடம், 5 மாதங்கள், 5 மணி நேரம் கழித்து வங்கியில் வந்து பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று தகவல் வந்தது. இப்ப நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். 5 வருசம் லைனில் நிக்க வேண்டிய அவசியம் இல்ல பாருங்க’’ என்றார்.

ஆப்பு கி மரண் கே

மக்களின் உயிர்மீது இந்த அரசிற்கு மிகுந்த அக்கறை உள்ளது. வாரக்கணக்காக வங்கி வரிசையில் நிற்பவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அவர் குடும்பத்தார் அறிந்து கொள்ள முடியாமல் பரிதவிக்கிறார்கள்.
எனவே வங்கியில் பணம் எடுக்கச் சென்றவர் நிலைபற்றி எளிதில் அறிந்து கொள்ளவே இந்த ஆப்பு என கண்ணீர் மல்க பிரதமர் இந்த ஆப்பை அறிமுகப்படுத்தினார். இந்த ஆப்பில், வங்கிக்குச் சென்ற உங்கள் உறவினர் புகைப்படத்தை அப்லோடு செய்தால் உடனே அவர் எந்த வங்கி/ஏடிஎம்-ல் இருந்து எத்தனை கிலோமீட்டர் தொலைவில் நிற்கிறார் என்பதை காட்டிக் கொடுக்கும். இறந்திருந் தால் எந்த ஆஸ்பத்திரியின் சவக்கிடங்கில் கிடத்தப்பட்டுள்ளார் என்பதையும் தெரிவிக்கும். இந்த ஆப்பையும் 93 சதவீத பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்தோடு பயன்படுத்தி வருகிறார்கள் எனத் தெரியவருகிறது.
இது பற்றி சேத்துப்பட்டு காத்தமுத்து கூறும் போது, எங்க அப்பாவுக்கு 73 வயசுங்க. பேங்குல பணம் எடுக்க 10 நாளைக்கு முன்னாடி போனாருங்க. இன்னும் திரும்பி வரலைங்க. எங்க இருக்காருன்னு எங்களால கண்டுபுடிக்க முடியலைங்க. என் பிரண்டு சொல்லித்தான் இந்த ஆப்புல அப்பா போட்டோ போட்டேனுங்க. உடனே எங்க அப்பா டேஷ் பக்தி வீதியில் இருக்கிற பாரத மாதா பேங்க் முன்னாடி நிக்கற வரிசையில 3456 வது ஆளா நிக்கறாருன்னு காட்டிக்கொடுத்துடுச்சுங்க. இப்ப நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோமுங்க’’ என்றார்.

ஆப்பு கி எக்சேஞ்ச் கே

கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு போலி புரோக்கர்கள், மோசடிப் பேர்வழிகளை நம்பி அதிகம் கமிஷன் கொடுத்து பொதுமக்கள் ஏமாறுவதாக மத்திய அரசிற்கு புகார்கள் வருவதால் யார் யாரிடம் எந்தெந்த நிறுவனங்களிடம் எவ்வளவு கமிஷன் கொடுத்து கறுப்புப் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்பது போன்ற தகவல்களை பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்வதற்காகவே இந்த ஆப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் சைருண் ஜெட்லி தெரிவித்தார்.
இந்த ஆப்பை பயன்படுத்தி கோயம்புத்தூர் பஜனைலால் சேட்டிடம் 35 சதவீதம் கமிஷன் கொடுத்து பொண்ணு கல்யாணத்திற்காக வைத்திருந்த 10 லட்சம் ரூபாயை வெள்ளையாக்கிக் கொண்டதாக வெள்ளானப்பட்டை வெள்ளைச்சாமி தெரிவித்தார். இதனால் தங்கள் குடும்பமே டேஷ்பக்தி குடும்பமாக மாறிவிட்டதாக பெருமையாக பேசினார். இதுபோல பல ஆப்புகள் மத்திய அரசின் கைவசம் உள்ளதாகவும் தக்க நேரத்தில் பொதுமக்களிடம் சொருகப்படும் என்றும் மத்திய அமைச்சர் வெங்காய பாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

                                                                                                                                             - மு.ஆனந்தன்
======================================================================================

முதுகு வலியைத் தடுக்க...'

வெளிப்பக்கம் காணப்படும் உடல் பகுதி களில் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாமல் நம்மால் 
பார்க்கமுடியாத ஒரு முக்கியப் பகுதி முதுகு. தடித்த சருமம், பரந்து விரிந்த தசைகள், நீண்ட தசை
 நாண்கள், பலதரப்பட்ட எலும்புகள், மூளைத்தண்டுவட நரம்புகள் என்று பல கலவையால் ஆன கூட்டுக் 
குடும்பம் இது. கழுத்து, தோள்பட்டை எலும்பு, மேல் முதுகு, மத்திய முதுகு, கீழ் முதுகு என்று பல 
பகுதிகளைக் கொண்டது இது.
பெரும்பாலும் மேல் முதுகில் ஏற்படும் பிரச்சினை தசை சுளுக்கு 
காரணமாகவே இருக்கும். விபத்தின் மூலம் முதுகெலும்பு களில்
 அடிபடுதல், தோள்பட்டை வலி, விலாஎலும்பு முறிவு, ரத்தம் கட்டுதல், 
விலா குருத்தெலும்பு வீக்கம் போன்ற பிரச் சினைகளும் வரலாம். 
மேல் முதுகில் வலி உண்டாகி இருமலும் இருந்து இவை இரண்டு
 வாரங்களுக்கு மேல் நீடித்தால்,  அது காச நோயாக இருக்கலாம்.
மேல் முதுகெலும்பு களில் பலமாக அடிபட்டு அவை நொறுங்கிப்
 போனாலோ, அங்கு செல்லும் முதுகுத் தண்டுவட நரம்புகள் 
பாதிக்கப்பட்டாலோ, அடிபட்ட உடல் பகுதிக்குக் கீழ் உள்ள பகுதிகள் 
எல்லாமே செயலிழந்து விடும். அந்த இடங்களில் உணர்ச்சி 
இல்லாமல் போகும். 
இந்த பாதிப்பு களை சரி செய்வது மிகவும் சிரமம்.
கீழ் முதுகு மார்பு முள்ளெலும்புத் தொடருக்கும் இடுப்பெலும்புக்
 கட்டுக்கும்  இடையில் உள்ள பகுதியைக்
 கீழ் முதுகு என்கிறோம். இதில் ஐந்து கீழ் முதுகு முள் ளெலும்புகள் ஒன்றோடொன்றாக கோர்க்கப் 
பட்டு, சற்று முன்புறமாக வளைந்துள்ளன. மேல் முதுகு சற்றே பின்பக்கமாக வளைந் துள்ளதைச் சரி
 செய்யவே இந்த எலும்புகள் முன்பக்கமாக வளைந்துள்ளன.
முதுகெலும்பிலேயே அதிக அசைவு உள்ள பகுதி கீழ் முதுகுதான். முன்பக்கம் குனிவது, பின்னால்
 சாய்வது, வலப்பக்கம் இடப்பக்கம் என உடலைச் சுழற்றுவது. இப்படிப் பல அசைவுகளை நம்மால் எளிதாக
 செய்ய முடிவதற்கு முக்கியக் காரணம் இங்குள்ள எலும்புகள்தான். சர்க்கஸ், நாட்டியம், மலை ஏறுதல், 
டென்னிஸ் போன்ற விளையாட்டு என பலவற்றுக்கும் இவை தருகின்ற அசைவுகள்தான் மூல காரணம். 
மேலும், உடல் எடை அதிகமாக இருந்தால் அதையும் இந்த எலும்புகள்தான் தாங்க வேண்டும்.

கீழ் முதுகு வலிக்குப் பல காரணங்கள் இருப்பதால் முதுகு எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன்,
 ரத்தப் பரிசோதனைகள் செய்து காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். ஜவ்வு 
வீங்குவது அல்லது விலகுவது காரணமாக ஆரம்பத்தில் ஏற்படுகிற கீழ் முதுகு வலியானது வலி 
நிவாரணிகள், 3 வாரம் முழுமையாக ஓய்வு எடுப்பது, இடுப்பில் பெல்ட் அணிவது, பிசி யோதெரபி மற்றும்
 ட்ராக்ஷன் சிகிச்சையில்  குணமாக அதிக வாய்ப்புகள் உள்ளன. சில ருக்கு முதுகு தண்டுவடத்தில்
 ஸ்டீராய்டு ஊசி போட்டும் இதைக் குணப்படுத்துவதுண்டு.

1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக் கூடாது. முதுகை நேராக நிமிர்த்தி உட்கார்ந்து வேலைசெய்ய
 வேண்டும்; கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும்.நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது கீழ் 
முதுகுக்கு சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம்.
2. சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, 
மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் செய்வது 
முதுகு வலி வராமல் தடுக்கும்.
3. காற்றடைத்த  பானங்கள், குளிர் பானங்கள், மென்பானங்கள், கோக் 
கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் 
பாஸ்போரிக் அமிலத்தைச் சேர்ப்பார்கள். இது கால்சியம்
 சத்து குடலில் உறிஞ்சப் படுவதைத் தடுக்கும். இதனால் இளமையிலேயே எலும்புகள் வலுவிழந்து விடும்.
 எனவே, இவற்றை அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.
4. மேல் முதுகில் வலி ஏற்பட்டால் ஐஸ் ஒத்தடம் கொடுத்து, மூச்சுப்பயிற்சிகளைச் செய்தால் போதும். 
வெந்நீர் ஒத்தடம் கொடுப் பது, சுளுக்கு எடுப்பது, பேண்டேஜ் கட்டுவது, கண்ட கண்ட களிம்புளைப் 
போட்டு தேய்ப் பதை எல்லாம் செய்தால் பாதிப்பு அதிகமாகி வலியும் கடுமையாகிவிடும்.
5. முதுகில் வலி உள்ளவர்கள் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கக் கூடாது. இவர்கள் கட்டாந்தரையில்
 தான் படுக்க வேண்டும்; கட்டை பெஞ்சில்தான் படுக்க வேண்டும் என்பதில்லை. சரியான மெத்தையில் 
பக்க வாட்டில், சற்று குப்புறப் படுத்துக்கொள்ளலாம்.
6. பலமாகத் தும்மக்கூடாது. மலம் கழிக்கும் போது அதிகமாக முக்கக்கூடாது. மலச்சிக்கல் இல்லாமல்
 பார்த்துக்கொள்ள வேண்டும்.
7. அதிக எடையைத் தூக்கக்கூடாது. அப்படியே தூக்கவேண்டியது இருந்தால் எடையைத் 
தூக்கும்போது இடுப்பை வளைத் துத் தூக்காமல், முழங்காலை மடக்கித் தூக்க வேண்டும். சுமையை
 மார்பில் தாங்கிக் கொள்வது இன்னும் நல்லது.
8. உடலை அதிகமாக விரியச் செய்தல், வளைத்தல் கூடாது. திடீரெனத் திரும்புதல் கூடாது.
9. குனிந்து தரையைச் சுத்தம் செய்வ தற்குப் பதிலாக நீளமான துடைப்பத்தைக் கொண்டு 
நின்றுகொண்டே சுத்தம் செய்வது நல்லது.
10.இந்தியக் கழிப்பறைக்குப் பதிலாக மேற் கத்தியக் கழிப்பறையைப் பயன்படுத்தினால் நல்லது.
11. ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியக் கூடாது.
12. அருகில் உள்ள இடங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்வதைவிட நடந்தே செல்லுங்கள்.

13. நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் போது நிமிர்ந்து உட்கார்ந்து ஸ்டியரிங் அருகில் அமர்ந்து ஓட்ட
 வேண்டும்.
14. ஏற்கனவே முதுகு வலி உள்ளவர்கள் பஸ்ஸில் பயணம் செய்யும்போது பஸ்ஸின் நடுவிலுள்ள
 இருக்கையில் உட்கார்ந்து கொள்வது நல்லது.
15. பருமனைத் தவிர்க்க வேண்டும்.
16. புகை, மது, போதை மாத்திரைகள் கூடாது.
17. மன அழுத்தம் தவிருங்கள்.
=====================================================================================
ன்று,
நவம்பர்-29.
 • "கலைவாணர்"  என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம்(1908)

 • தாமஸ் ஆல்வா எடிசன், போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதல் தடவையாக காட்சிப்படுத்தினர்(1877)

 • பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா முடிவெடுத்தது(1947)
 • கவிஞர் அ. மருதகாசி மறைந்த  நாள் (1989)

கவிஞர் அ. மருதகாசி.

மரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்திய மகத்தான பாடலாசிரியர் மருதகாசி. பாடலாசிரியர்களின் வரலாற்றில், கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்களை எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழுக்கும் உரியவர்.
÷திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடு என்ற கிராமத்தில், 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் அய்யம்பெருமாள், தாயார் மிளகாயி அம்மாள்.
உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார். அருணாசல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் எழுதும் தூண்டுதல் பெற்று சிறுவயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் கைவரப் பெற்றார்.
கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் "தேவி நாடக சபை'யின் நாடகங்களுக்கும் மு.கருணாநிதி எழுதிய "மந்திரிகுமாரி' நாடகத்துக்கும் பாடல்கள் எழுதினார்.
கவிஞர் கா.மு.ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றியதுடன், அந்நாடகங்களுக்கு இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான ராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார்.
÷தலைசிறந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் "மாடர்ன் தியேட்டர்ஸ்' படத்துக்காக ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தபோது அவர் முன்னால் திருச்சி லோகநாதன், மருதகாசியின் நாடகப் பாடலைப் பாடிக் காட்டினார். அருகிலிருந்த இயக்குநர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசியின் பாடலின் உட்கருத்தால் கவரப்பட்டு உடனே அவரை அழைத்து முதல் வாய்ப்பை வழங்கினார்.
÷1949-இல் வெளிவந்த "மாயாவதி' படத்தின் மூலம் திரைப்பாடலாசிரியராக அறிமுகமானார் மருதகாசி. ""பெண் எனும் மாயப் பேயாம்... பொய் மாதரை என் மனம் நாடுமோ'' (மாயாவதி) என்று தொடங்கும் பாடல்தான் மருதகாசியின் முதல் பாடல்.
அந்தப் படத்தில் தொடங்கி சுமார் இருநூற்று ஐம்பது படங்களுக்கு மேல் பாடல்களை எழுதிக்குவித்தார். இவர் எழுதிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரத்தையும் தாண்டும்.
÷மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி. உடுமலை நாராயண கவிக்கு மெட்டுக்கு எழுதுவது சிரமமாக இருந்ததால், இந்திப் பாடல்களின் தமிழ்மொழி மாற்றத்துக்கு மருதகாசியை சிபாரிசு செய்தார். பின்னர், மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராகவும் ஆனார்.
÷ஒருசில தமிழ்ச் சொற்களுடன் மிகுதியும் சம்ஸ்கிருதமும், சாஸ்திரியமுமாக பழைய கீர்த்தனைகளை அடியொற்றி உருவாகி வந்த திரையிசைப் பாடல்களில் இடம்பெற்ற பாகவதத் தமிழ், படிப்படியாகப் பாமரத் தமிழுக்கு முற்றிலும் தொனி மாறிய காலகட்டத்தில் பாடல் எழுத வந்தவர் மருதகாசி.
திரைப்பாடல்களுக்கு இலக்கிய ரசிகர்களுக்கான சாளரத்தைத் திறந்து வைத்து, இசைத் தன்மையுடன் பொதுத் தன்மைக்கும் பாடல்களை நகர்த்திய முன்னோடிப் பாடலாசிரியர்களுள் தனிச் சிறப்புப் பெற்றவர் இவர் என்று சொல்லவேண்டும்.
÷""நீலவண்ண கண்ணா வாடா'' என்று மங்கையர் திலகம் படத்தில் இவர் எழுதிய பாடல் குழந்தைகளுக்கான தமிழ்த் திரைப்படங்களில் தீட்டப்பட்ட பாடல்களுக்கெல்லாம் மகுடம் எனக் கூறலாம். குழந்தைகளுக்கான திரைப்பாடல்களை அதிகம் எழுதியவரும் இவராகத்தான் இருக்கும்.
÷"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா', "சமரசம் உலாவும் இடமே', "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே', "ஏர் முனைக்கு நேர்முனை எதுவுமே இல்லை', "மணப்பாறை மாடுகட்டி', "ஆனாக்க அந்த மடம்', "வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே', "காவியமா? நெஞ்சின் ஓவியமா?' - முதலிய இவர் எழுதிய திரைப்பாடல்கள் நெஞ்சை விட்டு என்றும் அகலாதவை.
÷இவர், 1940-இல் தனகோடி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆறு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.
÷கவிஞர் வாலி வாய்ப்புத் தேடிய காலத்தில், "நல்லவன் வாழ்வான்' படத்துக்காக "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்ற பாடலை எழுதினார்.
இயற்கைத் தடைகளால் அந்தப் பாடலின் ஒலிப்பதிவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதுப்பாடலாசிரியர் வாலி எழுதியதால், சகுனம் சரியில்லை; எனவே, பழம்பெரும் பாடலாசிரியர் மருதகாசியை வைத்து எழுத முடிவெடுத்தனர். மாற்றுப் பாடல் எழுத வந்த மருதகாசி, முதலில் வாலி எழுதிய பாடலைக்கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்தார்.
""புதுக்கவிஞர் வாலி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். இதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டாராம். வளர்ந்து வரும் கவிஞரான தன்னைத் தாய்போல் ஆதரித்த மருதகாசியின் சககவி நேசத்தை மனம் நெகிழ்ந்து கவிஞர் வாலி தனது "நானும் இந்த நூற்றாண்டும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல்கள் எழுதியுள்ளார்.
÷1960-களிலிருந்து கண்ணதாசனுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டதால், மருதகாசி பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
ஒருசில படங்களைத் தயாரித்து பண நஷ்டத்துக்கும், மனக் கஷ்டத்துக்கும் ஆளானார். அதனால் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றவர், எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார். கே.எஸ்.ஜி., தேவர் படங்களுக்கு மட்டும் பாடல்கள் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
÷தேவர் பிலிம்ஸின் "விவசாயி' படத்தின் அத்தனை பாடல்களையும் இவரைக் கொண்டு எழுத வைத்தவர் எம்.ஜி.ஆர். "கடவுளென்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி', "இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை' போன்ற "விவசாயி' திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் கருத்துச் செறிவும், சமுதாயக் கண்ணோட்டமும் உடையதாகப் பாராட்டப்படுபவை. தேவர் பிலிம்ஸ் படங்களில் மருதகாசிக்கு நிச்சயமாக ஒரு பாடல் இருக்கும்.
÷டி.எம்.செüந்தரராஜனை சினிமாவுக்குக் கொண்டுவந்த பெருமை மருதகாசியையே சேரும்.
"திரைக்கவித் திலகம்' என்னும் பட்டம் பெற்றவர் மருதகாசி. மருதகாசியின் திரையிசைப் பாடல்களையும் புத்தகங்களையும் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. தமிழ்த் திரையிசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்த மருதகாசி, 29.11.1989-இல் காலமானார்.
மருதகாசியின்  பாடல்கள் சில 
0 சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா… (நீலமலைத் திருடன்)

0 ஆளை ஆளைப் பார்க்கிறார் (ரத்தக்கண்ணீர்)

0 சமரசம் உலாவும் இடமே (ரம்பையின் காதல்)

0 சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு (ராஜா ராணி)

0 கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த (தூக்குத்தூக்கி)

0 ஆனாக்க அந்த மடம்… (ஆயிரம் ரூபாய்)

0 கோடி கோடி இன்பம் பெறவே (ஆட வந்த தெய்வம்)

0 ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே (பிள்ளைக்கனியமுது)

0 கடவுள் என்னும் முதலாளி (விவசாயி)

0 வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே (மல்லிகா)

0 முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல (உத்தமபுத்திரன்)

0 காவியமா? நெஞ்சின் ஓவியமா? (பாவை விளக்கு)
                                                                                                                                                                       தகவல் உதவி:ஆர். கனகராஜ்
=====================================================================================


ஞாயிறு, 27 நவம்பர், 2016

அடுத்த நூறு கோடி பேர்

 சில நாடுகளில் தான் நூறு கோடிக்கு மேல் மக்கள் வாழ்கிறார்கள். 
உலகில் உள்ள மக்களை இணைப்பதுதான் நோக்கமென்றால், அங்கு சென்று தான் நம் பணியைத் தொடங்க வேண்டும்” என்ற இலக்குடன் செயல்படும் கூகுள், இந்தியாவை இலக்காகக் கொண்டு பல திட்டங்களைத் தந்து வருகிறது. 
இதற்கென தன் நிறுவனச் செயல்பாடுகளின் தன்மையையே மாற்றிக் கொண்டுள்ளது. 
இணையம் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை அமெரிக்க நாட்டைக் காட்டிலும் அதிகமாக 35 கோடி என்ற இலக்கினை எட்டி பல மாதங்கள் கடந்துவிட்டன. இன்று நாள் தோறும் 15 ஆயிரம் இந்தியர்கள் புதியதாக இணையத்தில் இணைகிறார்கள். “
இணையத்தில் இணைக்கப்பட வேண்டிய அடுத்த நூறு கோடி பேர்” என்ற கூகுள் நிறுவனத்தின் இலக்கிற்கு இந்தியா சிறப்பாகத் தன் பங்கினை அளிக்கும் என கூகுள் உணர்ந்துள்ளது. 
மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்திய இணையத்தில் இந்த நிலை இல்லை. ஸ்மார்ட் போன்கள் மக்களின் வாங்கும் சக்திக்கு உள்ளாக அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கியவுடன் தான், இந்த திடீர் உயர்வு தொடங்கியது. உலகில் இணையப் பயனாளர்களை அதிகம் கொண்டுள்ள சீனா, கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குத் தடை விதித்தவுடன், கூகுள் தன் முழுக் கவனத்தையும் இந்தியா பக்கம் திருப்பி செயல்படத் தொடங்கியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் ராஜன் ஆனந்தன் அனைத்து வழிகளிலும் இணையத் தொடர்பினை இந்தியாவில் வழங்குவதில் பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறார்.
இணைய தொடர்பினைப் பொறுத்தவரை, இந்தியா தனக்கே உரித்தான பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. மிகக் குறைந்த வேகத்தில் இணைய இணைப்பு, பல மொழிகளைப் பயன்படுத்தும் மக்கள், மிகவும் மலிவான மொபைல் போன்களையே விரும்பும் பயனாளர்கள் என்ற பல கூறுகளை கூகுள் சந்தித்ததால், அதற்கேற்ப தன் இணையத் திட்டங்களை வகுத்துச் செயல்படுகிறது. இணையத்தை இந்தியர்களுக்குக் கொண்டு செல்வதில் என்ன தடைகள் உள்ளன என்று ஆய்வு செய்து அறிந்து, அவற்றை நீக்குவதில் கூகுள் வெற்றி பெற்று வருகிறது. அவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிடலாம்.
1. 2018 ஆம் ஆண்டுக்குள், 400 இந்திய ரயில் நிலையங்களில் இலவச இணைய வை பி இணைப்பு. நாள் ஒன்றுக்கு இந்த ரயில் நிலையங்களில் வந்து செல்வோர் 30 கோடி. இதுவரை 58 நிலையங்களில் இந்த பணி நிறைவு பெற்று, நாள் தோறும் 35 லட்சம் மக்கள் இணைய இணைப்பினை இலவசமாகப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
2. கூகுள் தரும் யு ட்யூப், தேடல் சாதனம் மற்றும் மேப் என அனைத்தையும் இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் பெறக் கூடிய வசதி. குறித்து வைக்கப்பட்டுள்ள தேடலில் கண்ட பக்கங்களைப் படிக்கும் வசதி.
3. மொபைல் போன்களைப் பெண்கள் பயன்படுத்தக் கூடாது என்று சமூகத் தடைவிதிக்கும் கிராமங்கள் கொண்ட இந்தியாவில், 3 லட்சம் கிராமங்களை கூகுள் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இணையம் பயன்படுத்துவது குறித்த பயிற்சியை அளித்து வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் பத்தில் ஒரு பெண் தான் இணையத்தைப் பயன்படுத்தி வருகிறார். இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரில் 35% பயனாளர்களே பெண்கள் ஆவார்கள். “இன்டர்நெட் சாதி” (“Internet Saathi” இங்கு 'சாதி' என்ற சொல் நண்பர் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது) என்னும் திட்டம் ஒன்றை வடிவமைத்து இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 10 லட்சம் பெண்கள் பயிற்சி பெற்று, இணையத்தைத் தங்கள் வேளாண் பணிகளுக்காகவும், குடும்ப நலம் குறித்த தகவல்களுக்காகவும், தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்து அறியவும் பயன்படுத்தி வருகின்றனர்.
4. கூகுள் அசிஸ்டன்ட் என்னும் செயலி தற்போது ஆங்கிலத்துடன், இந்தி மொழியையும் புரிந்து செயல்படுகிறது. இது மற்ற மொழிகளுக்கும் விரிவாக்கப்படும். கூகுள் தரும் கீ போர்ட் தற்போது 11 இந்திய மொழிகளைக் கையாள்கிறது. 
5. மிகக் குறைவான வேகத்தில் இணைய இணைப்பு கிடைக்கிறதா? Search Lite என்னும் கூகுள் தந்த புதிய செயலி மூலம் இணையப் பக்கங்கள் வேகமாக போன்களை வந்தடைகின்றன. 
6. பல வணிக நிறுவனங்கள் இணையம் வழி வர்த்தகத்தை நடத்துவது இல்லை. 2020 ஆம் ஆண்டுக்குள், கூகுள் 2 கோடி சிறிய வணிக நிறுவனங்களுக்கு இணையத்தைப் பயன்படுத்த இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறது. இவர்கள் இத்தகைய வணிகம் மேற்கொள்வோரில் 40% ஆவார்கள். இவர்களுக்கான இணையப் பக்கத்தை இலவசமாக இயக்க இடம் தருகிறது. 
கூகுள் இந்த முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வது தன் விளம்பர வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவே என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். கூகுள் நிறுவனத்தின் முதன்மை வர்த்தகம், 'விளம்பரம் வழி வருமானம்' என்றாலும், அந்த வகையிலும் அது நமக்கு உதவியாகவே உள்ளது. நம் விருப்பங்களைத் தெரிந்து நமக்கான விளம்பரங்களைக் காட்டி, நம் தேடல் நேரத்தைக் குறைக்கிறது. மேலே தரப்பட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள கோடிக்கணக்கில் நிதி தேவைப்படும். தன் வருமானத்திலிருந்துதான் கூகுள் இதனைச் செலவழிக்கிறது. இது நம் நலனைப் பாதுகாக்கிறது. “கூகுள் நாம் தரும் தகவல்களை எடுத்துக் கொள்கிறது. அஞ்சல்களைப் பார்க்கிறது” என்று கவலைப்படுபவர்கள், தங்கள் கூகுள் அக்கவுண்ட்டிற்குப் பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தித் தகவல்கள் திருடு போகாமல் பாதுகாக்கலாம்.

                                                                                                                                         நன்றி:தினமலர்.
 =============================================================================================
ன்று,
நவம்பர்-28.
 • பனாமா, ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து கொலம்பியாவுடன் இணைந்தது(1821)
 • நியூசிலாந்தில் பெண்கள் முதல்முறையாக வாக்களித்தனர்(1893)
 • அல்பேனியா விடுதலை தினம்(1912)
 • நாசா, செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது(1964)
===================================================================================