இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 14 நவம்பர், 2016

முதலில் செய்தது ஆளவந்தான்?


கமல்ஹாசன்

நிச்சயம் கமல்ஹாசன் ஓர் விளங்க முடியாத படைப்பாளி தான்.  
அவரின் படங்கள் ரிலீஸாகும் நேரங்களில், அப்படங்களை முதலில் புரிந்துகொள்வது கடினம் தான். ரிலீஸாகும் போது ரசிக்காத, ரசிகன், பலவருடங்களுக்குப் பின்பே, கொண்டாட ஆரம்பிக்கிறான். 
தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் ஒரு சோதனை முயற்சியை மேற்கொள்பவர் கமல். அடுத்தடுத்துப் படங்கள் தோல்வியடைந்தாலும் சரி, தன்னை நடிகனாக ரசிகன் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் சரி, தன்னுடைய சோதனை முயற்சியை கைவிடாமல் மேற்கொண்டவர்.  அதில் கவனிக்க வேண்டிய படம் “ஆளவந்தான்”. 
இப்படம் சிலர் சிலாகித்திருக்கலாம். பலர் திட்டியும் இருக்கலாம். 
ஏன், கமலின் மீது கோவப்பட்டிருக்கலாம். ஆனாலும் ஆளவந்தான் நிச்சயம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். அந்த பொக்கிஷம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் ஆகிவிட்டன. 
குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன தவறுகளின் விளைவு, குழந்தைகளை எப்படி பாதிக்கும் என்ற ஒன்லைனுடன் மாறுபட்ட திரைக்கதையை கொண்ட படம் ஆளவந்தான். I am a Hero, I am a villain என்ற டயலாக்கை 15 வருடத்திற்கு முன்னரே நிகழ்த்திக்காட்டியவர் கமல். 
இரண்டு கமலில் ஒருவர் கமேண்டோ, மற்றொருவர் சைக்கோ. 
1984ல் தான் எழுதிய “தாயம்”  என்ற கதையை மையமாக கொண்டு தான், இப்படத்தின் திரைக்கதை உருவாக்கினார் கமல்ஹாசன். படத்தை தாணு தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருப்பார். படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் மூன்றுமே கமல் தான்.  
14 நவம்பர் 2001ல் 178 நிமிடங்களுக்கு வெளியானது ஆளவந்தான். 2
0கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், இந்தியில் இப்படம் உருவானது.  
நாயகியாக ரவீணா டாண்டன் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் மனிஷா கொய்ராலா நடித்தார்கள். 
“சிலந்திகள் பெண்கள், ஆண்கள் பூச்சிகள்” என்பதில் தொடங்கி, ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களில் ஸ்கோர் செய்திருப்பார் கமல். 
ஆசியாவிலேயே, முதன்முறையாக மோஷன் கிராஃபிக்ஸ் கேமிராவை  பயன்படுத்தியது ஆளவந்தான் (2001) திரைப்படத்தில் தான். லைவ் சவுண்ட், மாறுபட்ட திரைக்கதை என்று ஒவ்வொரு காட்சிகளிலும் வித்தியாசம் மட்டுமே நீங்கள் உணரமுடிந்திருக்கும். 
தவிர, இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், இரண்டு கமலும் சண்டைப்போடுவதை கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில், அன்றைய காலத்திலேயே எடுத்து மிரட்டியிருப்பார்கள். 
“நான் உனக்காக, செஞ்ச தியாகம் என் தப்பு, Zooவுல இருக்குற மிருகம் மாதிரி நான் அனுபவிக்கிற தனிமை, என் தப்பு? 
பூ விழாம தலை விழுந்திருந்தா? யோசிச்சிப்பாரு தப்பெல்லாம் உன் தப்பாயிருக்கும், நான் கம்பிக்கு அந்தப் பக்கம், நீ இந்தப் பக்கம்” என்ற காட்சியில் கேமிரா, கம்பிக்கு அந்தப் பக்கத்திலிருந்து, இந்தப் பக்கத்திற்கு நகரும் காட்சி ஒன்றே படத்தின் ஒளிப்பதிவுக்கு சான்று. 
சிறு வயதில் யார் எந்தப் பக்கம் செல்லவேண்டும் என்று,  நந்துவும், விஜய்யும் நாணயம் சுண்டி முடிவெடுப்பார்கள். அதில் பூ விழுந்தால் கடவுள், தலை விழுந்தால் மிருகம் என்பதையே குறியீடாக சொல்லியிருப்பார் கமல்ஹாசன். 
நம்முடைய முடிவு நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதை அச்சாரம் பிசகாமல் சொல்லியிருப்பார் கமல்.  
ஊர்களிலும் சரி, பெரு நகரங்களும் சரி ஒரு படம் தியேட்டரில் ரிலீஸாகிறதென்றால், அருகிலிருக்கும் திரையரங்குகளில் அந்தப் படத்தை வாங்கி திரையிடக்கூடாது என்பது எழுதா ஒப்பந்தமாகியிருந்த நேரம். 
அந்த நேரத்தில் ஒரு படம் அதிக நாட்கள் ஓடி சாதனை செய்வதை விட, அதிக திரையரங்குகளில் வெளியிட்டு அதிக வசூலை எடுத்துவிட வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்தியதே கமல்தான். 
அருகருகில் இருக்கும் அனைத்துத் திரையரங்கிலும் ஒரே படம் வெளியாகலாம் என்ற முறையை கொண்டுவந்தவர். 
அதன்படி முதன்முறையாக ஆளவந்தான் 610 பிரிண்ட் போடப்பட்டது. இந்திய திரையுலகிலேயே அதிகப் பிரெண்ட் போடப்பட்டது இப்படத்திற்கு தான். 
2000ல் தீபாவளிக்கு வெளியான தெனாலி படத்திற்கு கிடைத்த வரவேற்பு, 2001 தீபவளிக்கு வெளியான ஆளவந்தான் படத்திற்கு கிடைக்கவில்லை. 
அந்த நேரத்தில் மக்கள் இப்படத்தை ரசிக்கவில்லை. படத்திற்காக ரிலீஸ் செய்யப்பட்ட போஸ்டரில் கமல் நிர்வாணமாக அமர்ந்திருக்கும் படங்களை ரசிகர்கள் ரசிக்கவில்லை என்பதே உண்மை.  
இப்படம் 2001ல் ரிலீஸாகாமல், 2016 தீபாவளிக்கு ரிலீஸாகியிருந்தால்? 
 நிச்சயம் பேசப்பட்டிருக்கும், ஹிட் கொடுத்திருக்கும். கொடிக்கும், காஷ்மோராவிற்கும் பலத்த போட்டியாக ஆளவந்தான் வந்திருக்கும். 
                                                                                                             நன்றி:விகடன்