இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

அச்சடிக்கும் திறன்

இப்போது தனியார்,பொதுத்தொழிற்சாலைகள் ,10பேர்களுக்கு மேல் பணியாற்றும் வியாரை நிறுவனங்கள் வங்கியில் இ.சி.எஸ். மூலமே மாதமாதம் சம்பளத்தை ஊழியர்கள் கணக்கில் போடுகின்றனர்.அவர்களும் ,அரசு ஊழியர்கள்,ஓய்வூதியர்கள் அனைவரும்  வங்கி வாசல்களில் காலை முதலே தவம் கிடக்கின்றனர்.
 ' 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு ஈடுகட்டும் அளவுக்குப் புதிய தாள்கள் அச்சடிப்பது சாத்தியமில்லை. ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான நான்கு அச்சடிக்கும் மையங்களிலும் நிலவரம் அவ்வளவு எளிதாக இல்லை' என்கின்றன வங்கி ஊழியர் சங்கங்கள். 
மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் அதிர்ச்சியில் இருந்து சிறு வணிகர்கள் இன்னமும் மீளவில்லை. சில்லறை வர்த்தகம் அடியோடு முடங்கிவிட்டது. 

ஸ்வைப் இயந்திரம் வைத்திருக்கும் மளிகைக் கடைகளில் மட்டுமே மக்கள் கூட்டம் திரள்கிறது. 
இதனை சரிக்கட்டுவதற்காக புதிய 500 ரூபாய் தாள்கள் தமிழகத்தில் விநியோகம் செய்யப்பட்டாலும், முழுமையான புழக்கத்துக்குள் அவை வரவில்லை. 
இன்று காலை முதல் அரசு ஊழியர்களும் வங்கி வாசல்களில் கால்கடுக்க நிற்கின்றனர். பெரும்பாலான ஏ.டி.எம்கள் இயங்காததால், பென்சன்தாரர்கள் சொல்ல முடியாத கவலையில் ஆழ்ந்துள்ளனர். " தற்போது மக்களுக்குத் தேவையான ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆறு மாதம் காலம் தேவைப்படும். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், தேவையான அளவு அச்சடித்து முடிக்க 2017-ம் ஆண்டு ஏப்ரல் வரையில் தேவைப்படும். 
பிரதமரும் ரிசர்வ் வங்கியும் சொல்வது போல 50 நாட்களில் ரூபாய் தட்டுப்பாடு தீர்வதற்கான வாய்ப்பு இல்லை" என ஆதங்கத்தோடு பேசினார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன்.
 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு நான்கு மையங்கள் செயல்படுகின்றன.
 இதற்காக, 1995-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி 'ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட்' என்ற ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இது ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான துணை நிறுவனம் ஆகும். நாட்டில் உள்ள தேவைக்கும் விநியோகத்துக்குமான இடைவெளியைக் குறைக்கும் வகையில் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்காக இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது.
 கம்பெனிகள் சட்டப்படி தனியார் கம்பெனியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
பெங்களூருவில் இதன் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. 
மைசூரு மற்றும் மேற்குவங்க மாநிலம், சல்போனியில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகங்களை நிர்வகிக்கிறது. இந்த இரண்டு அச்சகங்களும், ஒரு நாளைக்கு இரண்டு ஷிப்ட் அடிப்படையில் வருடத்துக்கு ரூபாய் தாள்களாக 1,600 கோடி அச்சடிக்கும் திறன் வாய்ந்தவை.
இதுதவிர, மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள தேவாஸ் ஆகிய இடங்களில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் இரண்டு அச்சகங்கள் செயல்படுகின்றன. 

இந்த இரண்டும் செக்யூரிட்டி பிரிண்ட்டிங் அண்ட் மின்ட்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மூலமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. 
நிதி அமைச்சகத்தின் சமீபத்திய வருடாந்திர அறிக்கையின்படி, இந்த இரண்டு அச்சகங்களும் மொத்த ரூபாய் தாள்களின் தேவையில் 40 சதவீதம் வரையில் அச்சடிக்கும் தகுதி வாய்ந்தவை. 
மைசூருவிலும் சல்போனியிலும் உள்ள இரண்டு அச்சகங்கள் 60 சதவீதம் வரை ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் திறன் வாய்ந்தவை. 
ஆக, நான்கு அச்சகங்களும் இணைந்து மொத்தமாக இரண்டு ஷிப்டுகளிலும் பணிபுரிந்தால் வருடத்துக்கு 2,666 கோடி ரூபாய் அளவுக்கு அச்சடிக்க முடியும்.
இதையே எல்லாம் விட மோடிக்கு நல்ல ஆலோசனை இப்போது அவ்வளவாக தொழில் இல்லாமல் சிவகாசியில் அச்சகங்கள் முடங்கித்தான் உள்ளது.அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அரசு மோசமாக அச்சிட்ட 500 ரூபாய்த்தாள் போன்றில்லாமல் அழகாக அச்சிட்டு ஒரே நாளில் பணத்தட்டுப்பாட்டை ஒழித்து விடுவார்கள்.
மோடி ஆலோசிப்பாரா?
=======================================================================================
ன்று,
டிசம்பர்-02.
  • லாவோஸ் தேசிய தினம்
  •  சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு செயல்பட துவங்கியது(1970)
  • அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய், உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடானது(1971)
  • ========================================================================================
இது தானா தேசியம்? 

பொதுவாகவே தேசியம் என்னும் வார்த்தையை அர்த்தமற்றது என்றும், மோசக் கருத்துக் கொண்டது என்றும், அதில் பணக்காரத் தன்மை பிரதிபலிப்பதோடு, அது பணக்காரத் தன்மையை ஆதரிப்பதற்கென்று கற்பிக்கப்பட்டதென்றும் பல தடவை கூறி வந்திருக்கிறோம். 

நாம் மாத்திரமல்லாமல் பல மேல்நாட்டு அறிஞர்களும் தேசியத்தின் தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஜான்சன் என்கின்ற ஒரு மேதாவி “தேசியம் (தேசாபிமானம்) என்பது வடிகட்டின அயோக்கியத்தனம்” என்று அதாவது “பிழைப்புக்கு வழியில்லாதவர்களின் கடைசியான இழி பிழைப்புக்கு மார்க்கமானது” என்று கூறி இருக்கிறார். 

இந்த அபிப்பிராயம் முதல் முதல் தேசியம், தேசாபிமானம் என்கின்ற வார்த்தைகள் எங்கு உண்டானதோ, அங்கு ஏற்பட்ட அபிப்ராயமே தவிர இந்தியாவில் “தேசிய விரோதிகள்” “தேசத் துரோகிகள்” “சர்க்கார் குலாம்கள்” என்று “தேசாபிமானி”களால் கருதப்படுகின்றவர்களால் சொல்லப்பட்டதல்ல. இது எப்படியோ இருக்கட்டும் என்று வைத்துக் கொள்ளுவோம். 

இன்று இந்திய தேசியவாதிகள், தேசாபிமானிகள் தேசியத்துக்கும், தேசாபிமானத்துக்கும் பத்திரிகை நடத்தும் பத்திராதிபர்கள், தேசாபிமானத்தில் வயிறு வளர்க்கும் பிறவி வாழ்க்கை தேச பக்தர்கள் என்பவர்களைப் பற்றிச் சற்று கவனிப்போம். இன்று இந்தியாவில் இந்திய சட்டசபைக்குத் தேர்தல்கள் நடக்கின்றன. இது ஒரு அரசியல் விஷயம். 

இந்திய சட்டசபை அரசியல் மூலம் ஜாதீய சம்மந்தமான மனித சமூக வாழ்வு சீர்திருத்த சம்பந்தமான அதாவது ஜாதி, மத, பழக்க வழக்க சம்பந்தமாக ஒரு காரியமும் செய்ய முடியாது. முடியும் என்றாலும் தேசியவாதிகள், தேசாபிமானிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்கள் இது விஷயங் களை சட்ட சபைகளில் பேசவோ, சட்டம் செய்யவோ ஒப்புக் கொள்ளுவதில்லை. ஒப்புக் கொள்வதானாலும் தேசமெல்லாம் ஒரே அபிப்பிராயமாய் அந்தந்த மத ஜாதிக்காரர்கள் எல்லோரும் ஒப்புக் கொள்ளத்தக்கதாய் இருக்க வேண்டும் என்கின்றதான ஆகாத நிபந்தனைகளையெல்லாம் சொல்லுகின்றவர்கள். 

இந்திய தேசாபிமானம் என்பதே இன்று இந்த தேசப் பணக்காரர்களுடைய சௌகரியங்களைக் குறிப்பாய்க் கொண்டதும், பணக்காரர்கள் பண வருவாய் முறையை சிறிதும் மாற்ற முடியாததும், பணக்காரர்களுக்குப் பணம் பெருகிக் கொண்டு, வளர்ந்து கொண்டு போவதைத் தடுக்க முடியாததும், தேச செல்வம் எல்லாம் ஒருவன் கைக்கே போவதானாலும் ஆட்சேபிக்க முடியாததுமான கொள்கைதான் (தேசாபிமானத்தில்) இருந்து வருகிறதே தவிர, தேசம் தேச மக்களுக்குப் பொது தேசத்தின் செல்வம், விளைபொருள், வர்த்தகம், போக்குவரத்து தொழிற்சாலை ஆகியவைகளின் பலன்கள் இந்த தேசத்து எல்லா மக்களுக்கும் பொது என்று சொல்லக்கூடிய காரியங்கள் தேசாபிமானத்தில் இல்லவும் இல்லை. அதை அதில் சேர்த்துக் கொள்ள மகாத்மாக்கள் என்பவர்கள் முதல் எந்த தேச பக்தர்களும் சம்மதிப்பதும் இல்லை. 

இப்படிப்பட்ட யோக்கியதையுள்ள நபர்கள் தாங்கள் சேர்ந்துள்ள ஸ்தாபனத்தையும், தாங்கள் சொல்லும் கொள்கைகளையும், தேசாபிமானம் என்று சொல்லிக்கொண்டு இருப்பதாலேயே தங்களை தேசாபிமானிகள் என்றும், தங்களோடு சேராதவர்கள் எல்லாம் தேசாபிமானிகள் அல்ல என்றும், தேசத் துரோகிகள் என்றும், தங்கள் ஸ்தாபனம்தான் குதிரைக்கு சமானமானது என்றும், மற்றவை கழுதைக்குச் சமானமானது என்றும் சொல்லுகிறார்கள். 

இதனாலேயே தேசாபிமானம் என்பது வடிகட்டிய அயோக்கியதனம் என்றும் அதில் வாழ்கின்றவர்கள் உலகிலுள்ள பிழைப்புகளில் எல்லாம் மிக இழிவான பிழைப்பில் பிழைக்கின்றவர் களாவார்கள் என்றும் சொன்ன சொல்லைப் பொன்னே போல் போற்றி பொன் எழுத்தில் எழுதி சொன்னவரை பொன்னே போல் வாழ்த்த வேண்டாமா என்று கேட்கின்றோம். 

இன்று சிறப்பாக இந்த நாட்டில் தன்னை ஒருவன் தேசாபிமானி என்று சொல்லிக் கொண்டாலோ, அல்லது அந்த ஸ்தாபனத்தில் சேர்ந்து கொண்டாலோ, அல்லது வேறு வழியில்லாமல் அதன் பயனாய் வாழ்வை நடத்த ஆரம்பித்து விட்டாலோ, அவன் எவ்வளவு அயோக்கியனாய், இழி பிறப்பாய், ஒழுக்கங் கெட்டவனாய் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் மேடை ஏறவும், வாயில் வந்ததைப் பேசவும், மனதில் நினைத்ததை எழுதவும், பொய் பித்தலாட்டம் போக்கிரித்தனங்கள் செய்யவும் யோக்கியதைகள் ஏற்பட்டு விடுவது என்றால் இப்படிப்பட்ட தேசாபிமானத்தையும், தேசியத்தையும், தேச பக்தியையும் வெட்டிப் புதைக்க வேண்டாமா என்று கேட்கின்றோம். 

அதற்காக உயிர் போகுமளவும் பாடுபட்டு அதற்காக உயிர் விட நேரிடுவதைப் பெரியதொரு கிடைத்தற்கரியதொரு காரியம் என்று கருத வேண்டாமா? என்று கேட்கின்றோம்.

                                                                                                                                 -தந்தை பெரியார்                                                                                                                                     9.9.1934ல் எழுதியது
====================================================================================
கவிஞர் இன்குலாப் மரணம்
"மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா"
 பாடல் ஒலிக்காத போராட்டக் களங்களும், கருத்தரங்களும் இல்லை என்று சொல்லிவிடலாம். அப்படி, ஒடுக்கப்பட்ட, தலித் மக்களின் போராட்டங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த குரல் இன்று அமைதியானது. கவிஞர் இன்குலாப் உடல் நலக்குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.
பிறப்பால் இஸ்லாமியராக பிறந்தாலும், தனது மத அடையாளங்களை துறந்து மக்களுக்கான போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டவர் இன்குலாப். 
சாகுல் அமீது என்ற தனது இயற்பெயரை இன்குலாப் என்று விடுதலையின் சின்னமாக மாற்றிக் கொண்டவர்.
தமிழ் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர் என பன்முகம் கொண்ட இன்குலாப், பொதுவுடைமைச் சிந்தனையால் கவரப்பட்டவர். 
அவருடைய படைப்புகள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானது. தராசு இதழில் தொடராக வந்து பின்னர் புத்தகமான துப்பாக்கிகள் பூவாலிகள் என்ற புத்தகம் மிக முக்கியமான படைப்பு. 
சங்க கால ஔவையை பற்றி நமக்குள்ள பல்வேறு மூடநம்பிக்கைகளை உடைத்து ஒரு உண்மையான தமிழ் ஔவை பெண்மணியை நமக்கு நாடகமாக ஆக்கிக் கொடுத்தவர்.
கீழக்கரை ஊரில் பிறந்த இன்குலாப், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியிலும், பின்னர், மதுரைத் தியாகராயர் கல்லூரியிலும் தமிழ் படித்தவர். சென்னையில் புதுக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்தவர். அவருடைய இலக்கிய பணிகளுக்காக சிற்பி இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். இவருடைய 'நாங்க மனுஷங்கடா', கண்மணி ராஜம், மீட்சி, சூரியனை சுமப்பவர்கள் போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------