லெனின்

சோசலிசத்தின் தன்னிகரில்லா சிற்பி

                                                                                                                                                                                 - அ.அன்வர் உசேன்
சோசலிச சோவியத் யூனியனின் மாபெரும் சிற்பி தோழர் லெனின் நினைவு நாள் ஜனவரி 21. சோவியத் புரட்சியின் நூற்றாண்டில் அதனை உருவாக்குவதற்கு மிகப்பெரிய பங்கினை வகித்த லெனின் அவர்களின் வாழ்வும் பணியும் ஒவ்வொரு பொதுவுடமைப் போராளிக்கும் உத்வேகத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
சோவியத் புரட்சி 1917ம் ஆண்டு வென்றது. தோழர் லெனின் 1924ம் ஆண்டு மறைந்தார். ரஷ்யாவில் சோசலிசத்தைக் கட்டமைத்திட லெனினுக்கு கிடைத்த அவகாசம் வெறும் 7 ஆண்டுகள் மட்டுமே! 
இந்த குறுகிய காலத்தில் தனது அபரிமிதமான உழைப்பையும் ஆற்றலையும் படைப்பாக்கத்திறனையும் லெனின் பயன்படுத்தினார் எனில் மிகை அல்ல! 

சுரண்டல் ஒழிப்பு; இரண்டாம் உலகப்போர் வெற்றி; வல்லரசாக சோவியத் யூனியனின் பரிணமிப்பு; இவை அனைத்துக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டது 1917 முதல் 1924 வரை. இதற்கு காரணம் தோழர் லெனினின் அசாத்திய தொலைநோக்கும் அயராத இமாலய உழைப்பும்தான்!
கருத்துப் போராட்டம்
சோவியத் புரட்சி அறிவிக்கப்பட்டவுடன் சோசலிச அரசு சார்பாக இரண்டு ஆணைகளை லெனின் வெளியிட்டார். ஒன்று சமாதானம் பற்றியது. 
இன்னொன்று நிலச்சீர்திருத்தம் குறித்து.முதல் உலகப்போரில் சிக்கியிருந்த ரஷ்யாவை அப்போரிலிருந்து விலகிட ‘சமாதானம்’ பற்றிய ஆணை வழிவகுத்தது. நிலம் பற்றிய ஆணையின் மூலம், நிலப்பிரபுக்கள் மற்றும் சர்ச்சுகள் வசம் இருந்த நிலக்குவியல்கள் உடனடியாக பறிக்கப்பட்டு அரசின் கீழ் கொண்டுவரப்பட்டன. 
சில மாதங்களுக்குப் பிறகு பெரிய தொழில்களும் அரசின் கட்டுப்பட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. இப்படி உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் அரசின் கீழ், அதாவது உழைக்கும் மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.
எனினும் புரட்சியை வழிநடத்துவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. டிராட்ஸ்கி போன்றவர்கள் ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெறாது என வாதிட்டனர். போல்ஷ்விக் கட்சிக்குள்ளே குழப்பங்களை உருவாக்கினர். மற்றொரு புறத்தில் மென்ஷ்விக்குகளும் இடது சீர்குலைவுவாதிகளான சமூக- புரட்சியாளர்களும் எதிர் பிரச்சாரம் செய்தனர். 
புரட்சியின் ஆரம்பகட்ட பணிகளை அமல்படுத்தும் மிகமுக்கியமான பணிகளுக்கு இடையே டிராட்ஸ்கி போன்றவர்களுக்கு எதிரான கருத்துப் பிரச்சாரத்தையும் லெனின் வலுவாக நடத்தினார்.

உள்நாட்டு யுத்தம் திணிப்பு
ரஷ்யப் புரட்சி சில நாட்களுக்குக் கூட நிலைக்காது என முதலாளித்துவ நாடுகள் கணக்குப் போட்டன. ரஷ்யாவை ஜெர்மனியின் இராணுவம் தகர்த்துவிடும் என எண்ணினர். 
ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. எனவே 1918ம் ஆண்டு பல முதலாளித்துவ நாடுகள் ஒன்று சேர்ந்து ரஷ்யா மீது உள்நாட்டுப் போரைத் திணித்தன. உள்நாட்டில் தமது சொத்துக்களை இழந்த முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் அவர்களுடன் கூட்டு சேர்ந்தனர்.
சுமார் 3 ஆண்டுகள் புதிய சோசலிச அரசை இடைவிடாமல் சீர்குலைக்க முயன்றனர்.‘‘ரஷ்யாவில் சோசலிசத்தை ஒழித்துக் கட்ட 14 நாடுகள் ஒன்று சேர்ந்துள்ளோம்’’ என்றார் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். 
‘‘போல்ஷ்விக் எனும் கைக்குழந்தையை அதன் பிறப்பிலேயே குரல்வளையை நெரிப்பதுதான் எங்கள் இலக்கு’’ என ஆணவத்துடன் கொக்கரித்தார் சர்ச்சில். 
பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் முதலிய நாடுகள் அடங்கிய இந்த நீசக் கூட்டணியின் தலைவன் அமெரிக்கா என்பதைச் சொல்லத்தேவை இல்லை.
இந்த உள்நாட்டுப் போரை வெல்லாமல் சோசலிசத்திற்கு எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்தார் லெனின். ‘‘அனைத்தும் போர் முனைகளுக்கு! 
அனைத்தும் வெற்றிக்கு’’ எனும் முழக்கத்தை லெனின் முன்வைத்தார். 
லெனின் பெரிய போர் வல்லுநர் அல்ல!
 ஆனால் சோவியத் செஞ்சேனைக்கு அபாரமான போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். செஞ்சேனை அமைப்புகளுக்கு நேரடியாக சென்றார். அங்கு வீரர்களுடன் விவாதித்தார். அவர்களின் கருத்துகளை கேட்டு அறிந்தார். செஞ்சேனையின் வலிமையை வெளிக்கொணர்ந்தார். நம்பிக்கை ஊட்டினார்.லெனின், உலக தொழிலாளர்களிடம் உதவி கேட்டார்.
தம் நாடுகளின் அரசாங்கங்களை போரிலிருந்து விலகிட நிர்ப்பந்தம் தருமாறு வேண்டினார். ரஷ்யாவில் சோசலிசம் என்பது அனைத்து உழைக்கும் மக்களின் சோசலிசத்திற்கு முன்னோடி என்பதைச் சுட்டிக்காட்டினார். இது மிகப்பெரிய பிரதிபலிப்பை உருவாக்கியது. 
பல முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்களின் போராட்டம் வெடித்தது. ‘‘ரஷ்யா மீது கை வைக்காதே’’ எனும் முழக்கம் முன்னுக்கு வந்தது.பிரான்சின் ஒரு மகத்தான பெண் கம்யூனிஸ்ட் போராளி குறித்து இங்கு குறிப்பிடுவது அவசியம்.
 ஜென்னி லெபார்போ எனும் இவர் ரஷ்யா வந்து பிரான்ஸ் வீரர்களிடம் ‘‘ரஷ்யாவுடன் போரிடக் கூடாது’’ என பிரச்சாரம் செய்தார்.
இதன் காரணமாக பல பிரான்ஸ் வீரர்கள் தமது நாட்டுக்கு திரும்பும் நோக்கத்துடன் கலகம் செய்தனர். இதனால் கோபமுற்ற பிரான்ஸ் இராணுவ அதிகாரிகள் ஜென்னி லெபார்போவை சுட்டுக்கொன்றனர். இதைப்போல ஹங்கேரி, போலந்து, ருமேனியா, ஜெர்மனி, பல்கேரியா, சீனா போன்ற பல நாடுகளிலிருந்து கம்யூனிஸ்டுகள் ரஷ்யா வந்து சோசலிசத்தைப் பாதுகாக்க தம்மை செஞ்சேனையுடன் இணைத்து கொண்டனர். 
இந்த மகத்தான சர்வதேச உணர்வு, உள்நாட்டுப் போரில் ரஷ்யாவின் வெற்றிக்கு ஒரு முக்கியமானக் காரணம் என்பதை லெனின் ஆழமாகப் பதிவு செய்தார்.






புதிய பொருளாதாரக் கொள்கை

லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியின் வழிகாட்டுதலில் சோவியத் செஞ்சேனை, எதிரிப்படைகளை தோற்கடித்தது. 

எனினும் இந்த மூன்று ஆண்டு உள்நாட்டு யுத்தம் கடுமையான விளைவுகளைத் தோற்றுவித்தது. 1920ம் ஆண்டில் ரஷ்யாவின் தொழில் உற்பத்தி 80ரூ வீழ்ச்சி அடைந்தது; 
எஃகு உற்பத்தி 95ரூ சரிந்தது; விவசாய உற்பத்தி 50ரூ குறைந்தது. 

இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாக பாதித்தது. 
இந்த சூழ்நிலையில் மாற்றம் கொண்டுவரவில்லையெனில் சோசலிசம் ஆபத்திற்குஉள்ளாகும் என்பதை லெனின் உணர்ந்தார்.இந்த நிலையை மாற்றிட என்ன செய்ய வேண்டும் என்பதை லெனின் ஆழமாகச் சிந்தித்தார்.
போல்ஷ்விக் கட்சியின் ஊழியர்கள் மட்டுமல்லாது உழைக்கும் மக்களிடமும் கலந்து பேசினார். முக்கியமாக விவசாயிகளிடம் கருத்துப் பரிமாற்றம் நடத்தினார். பல கிராமங்களுக்கு நேரில் சென்றார். கிராமப்புற வாழ்வு நிலை குறித்து நேரில் விவரங்கள் சேகரித்தார். 
பல சாதாரண விவசாயிகளை தனது அலுவலகத்திற்கு வரவழைத்துப் பேசினார். இந்த விவரங்களை முழுமையாக ஆய்வு செய்த லெனின் ‘‘புதிய பொருளாதாரக் கொள்கை’’ என்பதை உருவாக்கினார். இதனை கட்சி மற்றும் அரசாங்க அமைப்புகளில் விவாதத்திற்கு முன்வைத்தார். பின்னர் இது அமல்படுத்தப்பட்டது.விவசாயிகளிடமிருந்து உபரி உற்பத்தி பெறுவது நிறுத்தப்பட்டது. 
குறைந்த பட்ச வரி செலுத்திவிட்டு தமது உற்பத்தியை வெளிச்சந்தையில் விற்கும் உரிமை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இது விவசாய உற்பத்தி பலமடங்கு உயர வழிவகை செய்தது. தொழில்துறையில் சிறு தொழில்கள் தனியார் நடத்திட அனுமதி வழங்கப்பட்டது. அதன் மூலம் தொழில் உற்பத்தியும் பெருகியது. ‘அனைத்தும் அரசுமயம்’ என்பதிலிருந்து இது சிறு பின்வாங்கல்தான்! 
ஆனால், இந்த பின்வாங்கல் இல்லாமல் ரஷ்யாவின் உற்பத்தி சக்திகள் வளர்வது சாத்தியமல்ல என்பதை தோழர் லெனின் தமது ஆய்வுகள் மூலம் உணர்ந்திருந்தார். இதனை சோவியத் மக்கள் ஏற்றுக் கொண்டனர். சோசலிசம் முன்னேற இது தீர்மானகரமான பங்கினை வகித்தது எனில் மிகைஅல்ல!
மூன்றாம் அகிலம்
ரஷ்யப் புரட்சி உலகம் முழுவதும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. 
பல தேசங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொழிலாளர் இயக்கங்களும் வீறு கொண்டு எழுந்தன.
 இந்த இயக்கங்களை ஒருங்கிணைக்கவும் சரியான கோட்பாட்டு அடிப்படைகளை உருவாக்கிடவும் உலக கம்யூனிஸ்ட் அமைப்பு தேவை என லெனின் கருதினார். இதற்காக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் கூட்டம் 1919ம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவில் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. (முதல் அகிலம் காரல் மார்க்ஸ் காலத்தில் செயல் பட்டது. இரண்டாவது அகிலம் கம்யூனிஸ்ட் கருத்துகளை நீர்த்து போகச் செய்யும் விதத்தில் செயல்பட்டதால் மூன்றாவது அகிலம் உருவாக்க லெனின் முடிவு செய்தார்.)

உலகம் முழுவதும் புரட்சி இயக்கங்களை முன்னெடுத்துச் செல்ல மூன்றாவது அகிலம் பயன்பட்டது.
குறிப்பாக காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா உட்பட பல நாடுகளில் செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அகிலத்தின் வழிகாட்டுதல்கள் பயன்பட்டன. உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னேற்றத்திற்கு சோவியத் ரஷ்யா உதவியது. அதே நேரத்தில் சோவியத் புரட்சிக்கு உறுதுணையாக உலக கம்யூனிஸ்ட் இயக்கம் நின்றது. இந்த இரண்டு பணிகளையும் அகிலம் செய்தது எனில் மிகை அல்ல. இந்த அகிலத்தின் உயிர்நாடியாக லெனின் செயல்பட்டார். 
உள்நாட்டில் நிலவிய கடுமையான சுமைகளுக்கு இடையேயும் லெனின் இந்த அமைப்பை உருவாக்கியது அசாதாரண பணியாகும்.
சோசலிச சோவியத் ஒன்றியம் உருவாக்கம்
ரஷ்ய தேசிய இனம் பல நூற்றாண்டுகளாக இதர தேசிய இனங்களை அடக்கி வந்தது. ஆனால், லெனின் தலைமையிலான போல்ஷ்விக் இயக்கம் ரஷ்ய தேசிய இனத்தின் அடக்குமுறையை கடுமையாக எதிர்த்தது. 
அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என வலுவாக குரல் கொடுத்தது போல்ஷ்விக் கட்சி. தேசிய இனக் கொள்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றார் லெனின். ‘நமது தேசிய இனக்கொள்கைகள் இந்தியா மற்றும் கிழக்கு நாடுகளின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று கணித்தார் லெனின்.
ரஷ்யா மற்றும் பல தேசிய இனங்களின் இடையே ‘சம உரிமை’ அடிப்படையில் ஒத்துழைப்பும் பொருளாதார இணக்கமும் உருவாக்கிட லெனின் உழைத்தார். 
லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியின் சரியான அணுகுமுறை காரணமாக 1922ம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘சோசலிச சோவியத் குடியரசுகளின் ஒன்றியம்’ உருவானது. 
இதில் ரஷ்யா, உக்ரைன், பைலோரஷ்யா, அர்மீனியா, அஜெர்பைஜான் போன்ற குடியரசுகள் இணைந்தன. பின்னர் ஏனைய குடியரசுகள் சேர்ந்தன.
உடல் நிலை காரணமாக லெனின் இக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. எனினும் இந்த மகத்தான நிகழ்வின் சிற்பி லெனின்தான். கடும் பணிச்சுமை காரணமாக 1922ம் ஆண்டு லெனின் நோய்வாய்ப்பட்டார். எனினும் அவரது கடுமையான பணி நிற்கவே இல்லை. 
1923ம் ஆண்டு இறுதியில் அவருக்கு பாரிச வாயு நோய் திரும்பத்திரும்பத் தாக்கியது. வலது கையும் காலும் செயல் இழந்தன. 
ஆனால் சில நாட்களிலேயே இடதுகையில் எழுத கற்றுக்கொண்டார். 
எழுத்துப் பணியை தொடர்ந்தார். 

மருத்துவர்களின் எந்தக் கட்டுப்பாடும் அவரைத் தடுக்க முடியவில்லை. மரணம் தன்னை வேகமாக நெருங்குவதை உணர்ந்தார் லெனின். போல்ஷ்விக் கட்சியின் 13வது மாநாடு 1924ம் ஆண்டு ஜனவரி 16 முதல் 18ம் தேதிவரை நடந்தது. 
அந்த மாநாட்டுக்கு தனது குறிப்புகளை அனுப்பிவைத்தார்.
19ம் தேதி மாநாடு குறித்து பிராவ்தா இதழில் வந்த செய்திகளை லெனினுக்கு அவரது மனைவி குரூப்ஸ்காயா படித்துக் காட்டினார். 
ஜனவரி 21ம் தேதி மாலை 6.50 மணிக்கு, இந்த மனிதகுலத்தின் மகத்தான புரட்சித் தலைவர் மாமேதை லெனின் அவர்களின் உயிர் பிரிந்தது..
லெனின் உருவாக்கிய சோசலிச சோவியத் யூனியன் உலகில் மகத்தான மாற்றங்களை விளைவித்தது. சோசலிசத்தின் தேவை இன்றளவும் குறையாமல் உள்ளது என்பதை உலக நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன. 
அந்த இலக்கை அடைய தோழர் லெனின் பணி நமக்கு விடிவெள்ளியாய் வழிகாட்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?