இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 20 மார்ச், 2017

இந்திய வேகம் ?

உலகின் அனைத்து நாடுகளும், அதிவேக இணைய இணைப்பினைக் கொடுக்கத் தயாராகி வருகையில், இந்தியாவில் இணைய சேவை நிறுவனங்களைக் கண்காணித்து வரும், 'ட்ராய்' அமைப்பு, அண்மையில் மிக மோசமான முடிவினை எடுத்துள்ளது. 

விநாடிக்கு 512 கிலோ பிட் வேக இணைப்பினை “பிராட்பேண்ட் இணைப்பின் வேகமாக” அறிவித்துள்ளது. 

மிகச் சிறிய தென் கொரியா நாட்டில், அந்நாட்டு குடிமக்களுக்கு 29 mbps இணைய வேகமே சராசரி வேகமாக உள்ளது. 
இது நார்வே நாட்டில் 21.3 mbps; 
செக் குடியரசில் 17.8 mbps. 
இந்தியாவில் சராசரி இணைய வேகம் 2.5 mbps. 

இது இலங்கை , தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளில் உள்ள சராசரி வேகத்தைக் காட்டிலும் குறைவாகும். 
இது கம்பி வழி இணைய இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்துவோருக்கு பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 

இந்தியாவில், சென்ற ஜூன் மாதக் கணக்குப்படி, 1.73 கோடி பேர் கம்பிவழி இணைய இணைப்பினையும், 14.19 கோடி பேர் மொபைல் வழி இணைப்பினையும் கொண்டிருந்தனர். 
இந்திய இணைய பயனாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாகவும், ஒவ்வொரு சேவையும் ஒரு வேகத்தைத் தருவதாகவும் குற்றம் சாட்டியதனால், ட்ராய், இது குறித்த கொள்கை முடிவெடுக்க முன்வந்தது. 

இணைய சேவை நிறுவனங்களிடம் இருந்து பலவகை தகவல்களை எழுத்து மூலமாகப் பெற்றது. 
ஏர்டெல் நிறுவனம் 4.06 கோடி சந்தாதாரர்களையும், வோடபோன் 3.22 கோடி, ஐடியா செல்லுலர் 2.72 கோடி, பி.எஸ்.என்.எல். 2.06 கோடி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 1.43 கோடி என இணையப் பயனாளர்களை அந்த தேதியில் கொண்டிருந்தன. 

கம்பி வழி இணையப் பயனாளர்களாக, பி.எஸ்.என்.எல். 98.8 லட்சம், பார்தி ஏர்டெல் 18.2 லட்சம், எம்.டி.என்.எல். 11 லட்சம், ஏ.சி.டி. 10 லட்சம் பேர்களைக் கொண்டிருந்தன.

குறைந்த பட்சமாகத் தரப்பட வேண்டிய இணைய இணைப்பு வேகம் குறித்து, பலவகை நிலைகளில் சந்திப்புகளை ஏற்படுத்தி, கலந்து ஆய்வு செய்த பின்னர், ட்ராய் இந்த முடிவினை எடுத்து, இந்திய இணையப் பயன்பாட்டைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

“தனி ஒரு சந்தாதாரருக்கு, குறைந்த பட்சம் 512kbps வேகத்தில் தரவிறக்க வேகத்தைக் கொடுத்தால் அது 'பிராட்பேண்ட்' எனக் கருதப்படும்” என அறிவித்துள்ளது. 

ஆசிய பசிபிக் நாடுகளிலேயே, இந்தியாவில் தான், குடிமக்கள் பெறும் இணைய சராசரி வேகம் மிகக் குறைவாக உள்ளது. 

இந்நிலையில், 512 kbps வேகத்தினை, உத்தரவாதத்துடன் தரப்படும் குறைந்த பட்ச வேகமாக இருக்க வேண்டும் என ட்ராய் அறிவித்துள்ளது, இந்திய இணையத்தின் சராசரி வேகத்தினை, இந்த அறிவிப்பு, இன்னும் குறைக்கும். 

இதனால், அதிவேக இணைய இணைப்பினை இலக்காகக் கொண்டு இயங்கும் இணைய சேவை நிறுவனங்களின் செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படலாம்.

சென்ற ஆண்டில், பிராட்பேண்ட் இணைய இணைப்பில் தரப்பட வேண்டிய, குறைந்த பட்ச வேகத்தினை நிர்ணயம் செய்வதற்கான, கருத்துகளை வரவேற்று, ட்ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், இது குறித்து கருத்து வெளியிட்டனர். ட்ராய் அமைப்பிற்கு 
அஞ்சல்களை அனுப்பினர். 
மற்ற நாடுகளில் உள்ளதைப் போல இங்கும் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், இணைய சேவை நிறுவனங்கள் தரும் குறைந்த பட்ச வேகம் மெகா பிட்ஸ் கணக்கில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். 

ஆனால், ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் சிஸ்டமா கம்யூனிகேஷன் ஆகிய இணைய சேவை நிறுவனங்கள், 512 kbps அளவிலான வேகத்தை, குறைந்த பட்ச வேகமாக நிர்ணயம் செய்தால், அந்நிறுவனங்கள் பெருத்த அளவில் இழப்பினைச் சந்திக்க வேண்டியதிருக்கும் எனவும், வாடிக்கையாளர்கள், அதனைத் தங்களுக்குச் சாதகமான ஓர் அம்சமாக எடுத்துக் கொண்டு இணையத்தைப் பயன்படுத்துவார்கள் என்று கருத்து தெரிவித்திருந்தன. 

மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பும், தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பும் (Cellular Operators Association of India and Association of Unified Telecom Service Providers of India) 512 kbps வேகம் என்பது, இந்தியாவில் தேவைக்கு அதிகமானது என ட்ராய் அமைப்பிடம் தொடர்ந்து கூறி வந்தன. 

இதற்கும் குறைவான வேகத்தையே அடிப்படை வேகமாக நிர்ணயம் செய்திடக் கேட்டுக் கொண்டன.
நல்ல வேளையாக, இவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, குறைந்த பட்ச இணைய வேகத்தினை 512 kbps அளவிற்கும் குறைவாக நிர்ணயம் செய்திடவில்லை என்ற அளவில் நாம் மனத் திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான். 

இந்தியா போன்றதொரு வளரும் நாட்டில், 1 mbps வேகம் அடிப்படையானதாக வேண்டும் என்பது அனைவரின் கணிப்பாகும். ஆனால், ட்ராய் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றமே. 

தொலை தொடர்பு நிறுவனங்கள், பல்வேறு நடவடிக்கைகளின் மூலம், அடிப்படை வேகம் 512 kbps க்கு மேல் நிர்ணயம் செய்திடாமல் பார்த்துக் கொண்டு, தங்கள் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர். 
ஒரு சில இணைய சேவை நிறுவனங்கள், தாங்கள் வழங்கும் டேட்டா அளவினைப் பயன்படுத்திய (post-FUP) பின்னர், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இணைய வேகத்தினை, 300 kbps ஆக வைத்துள்ளனர். 
இவற்றின் வாடிக்கையாளர்கள் இனி தங்களுக்கு 512 kbps வேகத்தில் தொடர்ந்து இணைப்பு கிடைக்கும் என மகிழ்ச்சி அடையலாம்.

இருப்பினும், 512 kbps என ட்ராய் நிர்ணயம் செய்தது, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டிற்கு மிகவும் குறைவான வேகம் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். 

பக்கத்து நாடுகளைப் போல, இன்னும் கூடுதலான வேகத்தில் இணைய இணைப்பின் குறைந்த பட்ச இணைய இணைப்பு வேகம் இருக்க வேண்டும் என்பதனை ட்ராய் விரைவில் ஏற்றுக் கொண்டு, தற்போது அறிவிக்கப்பட்டதனை உயர்த்தும் என எதிர்பார்ப்போம்.
                                                                                                                                       உதவி:தினமலர்.
========================================================================================
ன்று,

மார்ச்-20.

  • சிட்டுக்குருவி தினம்

  • டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்கப்பட்டது(1602)

  • சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது(1948)

 2010ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக் குருவிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பறவைகள் நல ஆர்வலர்களும் சிட்டுக் குருவி இனத்தைக் காக்க சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். 

கடந்த சில ஆணடுகளாக நாட்டில் சிட்டுக்குருவி இனம் விரைவாக அழிந்து வருகிறது. பெங்களூர், சென்னை போன்ற இடங்களில் மிகவும் விரைவாக சிட்டுக் குருவிகள் அழிந்து வருது தெரிய வந்துள்ளது.
=========================================================================================