இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

‘இரும்பு மனிதன் ஸ்டாலின்!’

இரண்டாம் உலகப்போர். உலக நாடுகள் இருகூறாக பிரிந்து நின்று யுத்தம் செய்தன. 1,561 நாட்கள் நடந்த இப்போரில் இரண்டு கோடி மக்கள் செத்துமடிந்தனர். 
40 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான சொத்துக்கள் நாசமடைந்தன. 
இந்த இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும், வில்லனும் ஒருவனே. அவன்தான் ஹிட்லர்.ஹிட்லர் என்றொரு முரடன்முதல் உலகப் போரின் போது ஜெர்மன் நாட்டு ராணுவத்தில் சாதாரண ராணுவ வீரனாக சேர்ந்தான் ஹிட்லர். 
படிப்படியாக உயர்ந்து இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியானான். 
ஹிட்லரின் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது.வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889ஆம் ஆண்டு, ஏப்ரல் 20ஆம் தேதி ஹிட்லர் பிறந்தான். 
நமது ஜவஹர்லால் நேருவை விட வயதில் ஏழு மாதங்கள் மூத்தவன். பிறந்தது முதல் நோஞ்சானாகவே இருப்பான். படிக்கும் காலத்திலிருந்தே போர் பற்றிய நூல்களையும், கதைகளையும் மிகவும் ஆர்வமாய் படிப்பான். பின்னர் முரடனாக மாறினான். 
சக மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் அடிக்கடி சண்டை போடுவான்.தனது பதினேழாவது வயதில் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றான். அதற்காக கொடுக்கப்பட்ட சான்றிதழை வரும் வழியிலேயே, நண்பர்களோடு சேர்ந்து மது அருந்திவிட்டு, சுக்கு நூறாய் கிழித்துப்போட்டான். 
ஓவியம் வரைவதில் ஹிட்லர் கெட்டிக்காரன். இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தினான். மாடல் அழகிகளை வைத்து வரைந்த படங்கள் உயர்ந்த விலைக்கு விற்பனையானது. இதன்மூலம் சொந்தமாக ஒரு ‘ஓவியக்கூடம்’ அமைத்தான். 
காதலித்தான். 
காதல் தோல்வியால் ராணுவத்தில் சேர்ந்தான்.
1918ல் முதல் உலகக் போரில் ஜெர்மன் தோல்வியுற்றது. இந்த தோல்விக்கு ஜனநாயகவாதிகளும், யூதர்களுமே காரணம் என ஹிட்லர் நினைத்தான். 
உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனம் எனவும்,உலகம் முழுமையும் ஜெர்மானிய ஆதிக்கத்தின்கீழ் வரவேண்டும் எனவும் ஹிட்லர் கனவு கண்டான்.ஹிட்லர் பேச்சுவன்மைமிக்கவன். ‘தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி’ என்ற பெயரில் இயங்கிய அரசியல் கட்சியில் இணைந்தான். தனது பேச்சு வன்மையால் அக்கட்சியின் தலைவராக உயர்ந்தான். 
ஜெர்மன் அரசுக்கு எதிராக கலகம் செய்தான். இதனால் ஐந்து ஆண்டுகள் சிறைக்குள் அடைக்கப்பட்டான். 
சிறைச்சாலையில் ‘எனது போராட்டம்’ என்ற தனது சுயசரிதையை எழுதினான் ஹிட்லர்.

1928இல் ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோற்றுப்போனது. பின்னர் தனது கட்சியின் பெயரை ‘நாஜி கட்சி’ என பெயர் மாற்றம் செய்தான். 
அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தான். இடைவிடாத ராஜதந்திரத்தாலும், தனது பிரச்சாரத்தாலும் மக்களை கிளர்ச்சியுறச் செய்தான். மக்களை கலகக்காரர்களாக மாற்றினான். 
இதனால் ஜெர்மன் நாடாளுமன்றக் கட்டிடம் கொளுத்தப்பட்டது.
ஹிட்லரின் போராட்டத்திற்கு முன் ஈடுகொடுக்க முடியாத ஜெர்மன் ஜனாதிபதி, 1933 ஜனவரியில் ஹிட்லரை அழைத்து பிரதமராக்கினார். 
இந்நிலையில், ஜனாதிபதி மரணத்தை தழுவினார். 
இதனால் ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிய ஹிட்லர், ஜெர்மனியின் சர்வாதிகாரியானான். இதன்மூலம் ஜெர்மன் நாடாளுமன்றத்தை கலைத்தான். 
ராணுவ இலாகாவையும், ராணுவ தளபதியையும் தானே எடுத்துக் கொண்டான். அரசியல் கட்சிகள் அனைத்தையும் தடை செய்தான். எதிரிகள் அனைவரையும் சிறையில் தள்ளினான். இனி ஜெர்மனியில் ‘ஜனநாயகம்’ என்ற சொல்லுக்கே இடமில்லை என்றான். 
யூதர்களை பூண்டோடு ஒழிக்க வேண்டுமென்று கொக்கரித்தான். 
ஒருபாவமும் அறியாத யூதர்களை கைது செய்து, சிறையில் அடைத்து, கொடுமையாக சித்ரவதை செய்தான். யூதர்களை இருட்டறையில் அடைத்து, விஷப் புகையை இவர்கள் மீது செலுத்தி கொன்று குவித்தான். 
இக்கால கட்டத்தில், இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியுடன் ஹிட்லர் நட்பு கொண்டான்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. 
இரண்டாம் உலகப்போரில் பல நாடுகளை வென்ற ஹிட்லர், 1941 ஜூன் 22ஆம்தேதி ரஷ்யா மீது படையெடுத்தான். 
‘இரும்பு மனிதன்’ ஸ்டாலின் தலைமையில் ரஷ்ய மக்கள் ஆவேசம் கொண்டனர். ஹிட்லருக்கு சரியான பதிலடி தர வேண்டுமென ஸ்டாலின் முடிவு செய்தார். 
1941 ஜூன் மாதம் தொடங்கி, 1943 ஜனவரி வரை ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் யுத்தம் நடந்தது.
1941 ஜூன் 22ஆம்தேதி அதிகாலை நேரம், ஜெர்மன் விமானங்கள் சாரிசாரியாகப் பறந்து ரஷ்ய நகரங்கள் மீது குண்டுவீசின. 
ஆயிரம் மைல் நீளமுள்ள எல்லையைக் கடந்து ரஷ்யாவுக்குள் ஜெர்மன் படை புகுந்தது. 
என்றைக்காவது ஓரு நாள் ரஷ்யா மீது ஜெர்மானிய படை தாக்கும் என ஸ்டாலின் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்தார். 
ஆனால் இவ்வளவு பெரிய படைகளுடன் ஹிட்லர் ரஷ்யாவை தாக்குவான் என ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை.
தரைப்படை, கடற்படை, விமானப்படை என மூன்றிலும் ஜெர்மானியப் படையை விட ரஷ்யா வலுப்பெற்றிருந்தது. 
இருப்பினும், ரஷ்ய விமானங்கள் மிகப் பழமையானவையாக இருந்தன. ஆயுதங்களும் பெரும்பாலும் உபயோக மற்றவையாக இருந்தன. 
நவீன விமானங்களைக் கொண்டு ஜெர்மன் ரஷ்யாவை தாக்கியது. இதனால், ஜெர்மன் நடத்திய தாக்குதல்களால் ரஷ்யா திணறியது.
ரஷ்யாவின் போக்குவரத்து பாதைகளை ஜெர்மன் ராணுவம் துண்டித்துவிட்டு முன்னேறி போர் தொடுத்தது.
 இக்காலக்கட்டத்தில் ரஷ்யா சுமார் ஐந்தாயிரம் போர் விமானங்களை இழந்தது. நாள் ஒன்றுக்கு ஐம்பது மைல்கள் ஜெர்மன் படைகள் ரஷ்யாவுக்குள் முன்னேறி வந்து கொண்டேயிருந்தது. 
ஜெர்மன் படைகளுக்கு ரஷ்யா பதிலடி கொடுத்தாலும், ஏராளமான வீரர்களை ரஷ்யா போரில் இழக்க வேண்டியிருந்தது.
1941 செப்டம்பர் 8ஆம்தேதி, ரஷ்யாவின் மிக முக்கிய நகரமான லெனின் கிராடை ஜெர்மன் படைகள் முற்றுகையிட்டன. 
ஜெர்மனியின் மற்றொரு படை மாஸ்கோவுக்கு இருநூற்று ஐம்பது மைல் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. 
ஏறத்தாழ ரஷ்ய நாட்டின் சரிபாதி பகுதியை ஹிட்லர் படைகள் கைப்பற்றி இருந்தன. 
எனினும் ரஷ்யாவின் எல்லை ஆயிரம் மைல்களுக்கு மேலாக விரிந்து இருந்த காரணத்தால், கைப்பற்றிய பகுதிகளில் ஜெர்மன் படைகள் வேரூன்ற முடியவில்லை.
ரஷ்ய புரட்சி நாளான நவம்பர் 7ஆம்தேதிக்குள் மாஸ்கோவை கைப்பற்றி விட வேண்டும் என ஹிட்லர் திட்டம் போட்டிருந்தான். 
அக்டோபர் 14ஆம்தேதி ஜெர்மன் படைகள் மாஸ்கோவை நெருங்கிவிட்டன. இன்னும் ஐம்பது மைல் தூரத்தில் மாஸ்கோவை நெருங்கிவிடலாம். விரைவில் மாஸ்கோ வீழ்ந்துவிடும் என ஹிட்லர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். 
உலகம் முழுவதும் இதையே எண்ணியிருந்தது.

மாஸ்கோவிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள். 
நகரமே காலியாகிக் கொண்டிருந்தது. 
ஊரைவிட்டு பத்திரமாக மக்கள் வெளியேற வேண்டும் என ஸ்டாலின் அமைச்சர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். 
ஆனால் ‘இரும்பு மனிதன் ஸ்டாலின்’ மட்டும் மாஸ்கோவை விட்டு வெளியேறாமல் தன் மாளிகையிலேயே தங்கியிருந்து, போரில் வெற்றிபெறுவதற்கான வியூகங்களை வகுத்துக் கொண்டிருந்தார். ரஷ்ய வீரர்களின் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் ஜெர்மன் வீரர்கள் திணறி தடுமாறினார்கள். 
ஆயிரக்கணக்கான ஜெர்மன் வீரர்கள் ரஷ்யாவின் உறை பனியில் செத்துமடிந்தார்கள். ஜெர்மன் படைகளை ரஷ்ய வீரர்கள் விரட்டி விரட்டி தாக்கினார்கள். 

மாஸ்கோவுக்கு இருபது மைல் தூரம் வரை முன்னேறிய ஜெர்மன் படையினர் உயிர் தப்பினால் போதும் என பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடினர். 

ரஷ்ய வீரர்கள் ஜெர்மன் படைகளை ஓட ஓட விரட்டியடித்தார்கள். 

பதுங்கு குழியில் தனது காதலியுடன் மறைந்திருந்த ஹிட்லர் தனது எதிர்காலமே மறைந்து போனதால் தற்கொலை செய்து கொண்டான்.

இவ்வாறு, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரிடமிருந்து ரஷ்யாவை மட்டுமல்ல உலக நாடுகளையே தோழர்  ஸ்டாலின் பாதுகாத்தார்.
                                                                                                                                  - நாகைமாலி
======================================================================================
ன்று,
ஏப்ரல்-04.
  • செனிகல் குடியரசு தினம்
  • தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்(1855)
  • உலக வர்த்தக மையம் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது(1973)
  • மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது(1975)
  • ========================================================================================
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855-ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். 
இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். 
இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
1876-ம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
1877-ல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார், 
பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880-ல் எம்.ஏ. பட்டம் பெற்றார். 
அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வி துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.

மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885-ல் டாக்டர் ஹார்வி துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். 
இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்பட வகித்தார். 1878-ல் தாயாரையும், 1886-ல் தந்தையையும் இழந்தார். இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.

திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன.

ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணியம் இவரால் 1891-ம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர். இத்தொடர்பே மனோன்ணியத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.

கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894-ம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.

மனோன்மணியத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் கலைஞர் கருணாநிதியால்  தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970-ல் அறிவிக்கப்பட்டது.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தனது 42-வது வயதில் 1897 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.