தண்ணீர் தனியார்மயம்.:உலக வங்கி ஆணை

உலக வங்கி – சர்வதேச நாணய நிதியம்: பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களின் தரகர்கள்
தாகத்துக்குத் தண்ணீர் கேட்டால், மோர் கொடுத்து உபசரிக்கும் பண்பாட்டைக் கொண்டது நமது தமிழகம், ஆனால், இப்பொழுதோ, தாகத்துக்குத் தண்ணீர் கேட்கும் முன்பாக, பாக்கெட் தண்ணீர் வாங்கும் அளவிற்கு சட்டைப் பையில் காசு இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ள வேண்டிய பண்பாடு நம் மீது திணிக்கப்படுகிறது.
நிலத்தடி நீரை உறிஞ்சி பாக்கெட்டுகளில், கேன்களில் தண்ணீரை அடைத்து விற்பது என்ற வரம்போடு இந்த தண்ணீர் வியாபாரம் நின்றுவிடவில்லை.
1985-ஆம் ஆண்டு வாக்கில் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 750 ஆக இருந்ததாகவும், 1995-இல் இந்த எண்ணிக்கை 65,000 கிராமங்களாக அதிகரித்து விட்டதாகவும் அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளது. கிராமத்து உழைக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில்தான், இந்தியாவெங்கும் தண்ணீர் வியாபாரம் சூடு பிடித்து நடக்கத் தொடங்கியது.
குடிநீர் பிரச்சினைக்கு வறட்சி, மழையின்மை, நிலத்தடி நீர் வறண்டு போவது எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும், இந்தக் காரணங்களால் தண்ணீர் வியாபாரம் சிறிதளவுகூடப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியாவில் நடந்து வரும் தண்ணீர் வியாபாரத்தின் ஓராண்டு மதிப்பு மட்டும் 10,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரை உறிஞ்சி பாக்கெட்டுகளில், கேன்களில் தண்ணீரை அடைத்து விற்பது என்ற வரம்போடு இந்த தண்ணீர் வியாபாரம் நின்றுவிடவில்லை. சமூகத்தின் சொத்தாகப் பாவிக்கப்படும் ஆறுகள், ஏரிகளைத் தனியாருக்கு குத்தகைக்கு விடுவது; விவசாயத்திற்குத் தேவையான நீர்ப்பாசனத்தைத் தனியார்மயமாக்குவது; அரசாங்கம் வழங்கி வரும் குடிநீர் சேவையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது எனத் தண்ணீர் வியாபாரம் ‘வளர்ச்சி’ அடைந்து வருகிறது.
இந்த அபாயகரமான வளர்ச்சிப் போக்கை, இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் அனைத்திலும் விரைவுபடுத்துவதற்காகவே, “காட்ஸ்” என்ற பெயரில் பொது ஒப்பந்தம் ஒன்றை (சேவைகளில் வர்த்தகம் குறித்த பொது ஒப்பந்தம் – General Agreement on Trade in Services) உருவாக்குவது குறித்து உலக வர்த்தகக் கழகத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
உலகம் நாற்புறமும் நீரால் சூழப்பட்டிருந்தாலும், பூமி பந்தில் கிடைக்கும் மொத்த நீரில், 25% நீரைத்தான் மனிதன் குடிப்பதற்கும், தனது பிற தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த 2.5 சதவீத நன்னீரிலும், 68.9 சதவீத நீர், பனியாக உறைந்து கிடக்கிறது. இந்த உறைபனி போக, எஞ்சியுள்ள நன்னீர் ஆதாரங்களை ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தின் மூலம் கைப்பற்றுவதுதான் ஏகாதிபத்திய நிறுவனங்களின் நோக்கம். ஏனென்றால், எதிர்வரும் 2025-ஆம் ஆண்டில், உலக மக்களின் தண்ணீர் தேவை, தற்பொழுது இருப்பதைவிட, 56 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், ஏகாதிபத்திய நிறுவனங்கள் பெட்ரோல் வியாபாரத்தில் சம்பாதிக்கும் இலாபத்தில், 40 சதவீத இலாபத்தை, மிகவும் எளிதாக தண்ணீர் வியாபாரத்தின் மூலம் சம்பாதித்து விட முடியும் என்றும் கூறப்படுகிறது. ஏகாதிபத்திய நிறுவனங்களின் இந்த இலாப நோக்கம் ஒருபுறமிருக்க, நன்னீர் ஆதாரங்களைக் கைப்பற்றுவதன் மூலம், ஏழை நாடுகளின் மீது தொடுக்கப்படும் மறுகாலனியாதிக்க தாக்குதலை, அந்நிறுவனங்களால் இன்னும் மிகக் கொடூரமாக நடத்த முடியும் என்பதையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். காட்ஸ் ஒப்பந்தத்தின் மூலம் தண்ணீர் என்பது மறுகாலனியாதிக்கத்தின் புதிய ஆயுதமாக ஏகாதிபத்தியங்களுக்குப் பயன்படும்.
அடித்தளம் போட்ட உலக வங்கி
அரசாங்கமும், பன்னாட்டு நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, ஆறுகளையும், குடிநீர் வழங்குவதையும் தனியார்மயமாக்குவது இன்று வெளிப்படையாகவே தெரிகிறது.
”காட்ஸ்” ஒப்பந்தத்தின் மூலம் உலகு தழுவிய அளவில் நடைமுறைக்கு வரவுள்ள இந்தத் திருப்பணிக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்ததே உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் தான். இந்த இரு நிறுவனங்களும், கடந்த இருபது ஆண்டுகளாக, மிகவும் கமுக்கமாகப் பல்வேறு நாடுகளில் தண்ணீரைத் தனியார்மயப்படுத்த முயன்ற விவரங்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளன.
வளரும் நாடுகளில் காணப்படும் ஏழ்மையை ஒழிப்பதற்காகக் கடன் கொடுக்கும் வள்ளல்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் இந்த நிறுவனங்கள், தண்ணீர் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் 10 பன்னாட்டு நிறுவனங்களின் தரகனாகவே செயல்பட்டு வந்துள்ளன; கடன் வாங்கும் ஏழை நாடுகளின் நீர் ஆதாரங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்வதற்காகவே ஐந்துவிதமான பொறிகளை உருவாக்கி, நடைமுறைப்படுத்தி வருகின்றன.
கடன் மற்றும் அங்கீகார முத்திரை
ஏழை நாடுகளின் குடிநீர் திட்டங்களுக்கும், கழிவுநீர் சுத்தப்படுத்தும் திட்டங்களுக்கும் உலக வங்கி கடன் கொடுக்கும் பொழுது, அத்திட்டங்களில் தனியாரும் பங்கு பெற அனுமதிக்க வேண்டும் என நிபந்தனை விதிப்பதன் மூலமே இந்தச்சேவைகளை உலக வங்கி தனியார்மயப்படுத்தி விடுகிறது.
குடிநீர் திட்டங்களுக்குச் செலவிடப்படும் மூலதனத்தை முழுமையாகத் திரும்ப எடுக்க வேண்டும் எனக் கோரும் உலக வங்கி, அதற்கு, ‘தண்ணீரைச் சந்தை விலைக்கு விற்க வேண்டும்’ என்றும் ‘சந்தை விலையைக் கொடுத்துத் தண்ணீரை விலைக்கு வாங்கும் அளவிற்கு நுகர்வோரின் வருவாயை அதிகரிக்க வேண்டும்’ என்றும் நிபந்தனைகளை விதிக்கிறது.
தற்பொழுது 530 கோடி அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட 86 குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் உலக வங்கியின் மேற்பார்வையின் கீழ் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. உலக வங்கி ஏழை நாடுகளுக்கு வழங்கும் ஏழ்மை குறைப்பு ஆதாரக் கடன் திட்டங்களில், மூன்றில் இரண்டு கடன்களில் தண்ணீர் தனியார்மயம் நிபந்தனையாக விதிக்கப்படுகிறது. உலக வங்கி மூலம் குடிநீர் அல்லாத திட்டங்களுக்கு வழங்கப்படும் கடன்களில், தண்ணீர் தனியார்மயம் ஒரு நிபந்தனையாகவோ அல்லது கொள்கை அறிவுரையாகவோ ஏழை நாடுகளின் மீது திணிக்கப்படுகிறது.
அரசாங்கம் வழங்கி வரும் குடிநீர் சேவையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது எனத் தண்ணீர் வியாபாரம் ‘வளர்ச்சி’ அடைந்து வருகிறது.
”தண்ணீரை இலவசமாகப் பொது மக்களுக்கு வழங்கக் கூடாது; குடிநீர் வழங்குவது சேவை அல்ல; அதை வியாபாரமாகப் பார்க்க வேண்டும்” என்ற மனோ நிலையை ஏழை நாடுகளில் ஏற்படுத்துவதன் மூலம், பன்னாட்டு தண்ணீர் வியாபார நிறுவனங்கள் ஏழை நாடுகளில் மூலதனம் போடுவதற்கு ஏற்ற சூழலை, உலகவங்கி உருவாக்கிக் கொடுக்கிறது. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளில் நுழைவதற்கு முன்பாகவே, அந்நாட்டு அரசாங்கத்தையே தண்ணீர் கட்டணத்தை உயர்த்தச் செய்வதன் மூலம், பன்னாட்டு நிறுவனங்களின் தண்ணீர் கட்டண கொள்ளையை நியாயப்படுத்தி விட முயலுகிறது.
சர்வதேச நாணய நிதியம் 2000-ஆம் ஆண்டில் வழங்கிய 40 கடன்களில், 12 கடன்கள் தண்ணீரைத் தனியார்மயமாக்க வேண்டும் அல்லது தண்ணீர் திட்டத்திற்குச் செலவாகும் மூலதனத்திற்கு ஏற்ப தண்ணீர்க் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற நிபந்தனைகளோடுதான் வழங்கப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்வாங்கும் ஏழை நாடுகள், அந்நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் முத்திரையொன்றைப் (Seal of Approval) பெற வேண்டும். அந்நிறுவனம் கடன் கொடுக்கும் பொழுது விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதைப் பொருத்துதான், இந்த ஒப்புதல் முத்திரையை அந்நிறுவனம் ஏழை நாடுகளுக்கு வழங்கும். இந்த ஒப்புதல் முத்திரையைப் பெற முடியாத ஏழை நாடுகள், பிற ஏகாதிபத்திய நிறுவனங்களிடமிருந்தோ, ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்தோ எவ்விதக் கடனோ, உதவியோ, மூலதனமோ, தொழில்நுட்ப உதவியோ பெற முடியாது. இந்த அதிகாரத்தைக் காட்டியே தண்ணீரைத் தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு ஏழை நாடுகளைச் சம்மதிக்க வைத்துவிடுகிறது, சர்வதேசநாணய நிதியம்.
சர்வதேச நிதிக்கழகம் மற்றும் பலதரப்பு முதலீட்டுகாப்புறுதி குழுமம்
ஏழை நாடுகளின் மின்சாரம், தொலைபேசி, குடிநீர் வழங்குதல் போன்ற அடிக்கட்டுமானத் துறைகளில் மூலதனம் போட விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள அமைப்புதான் சர்வதேச நிதிக் கழகம்.
ஏழை நாடுகளின் குடிநீர் வழங்கும் திட்டங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் போடும் மூலதனத்திற்கு ஏற்படும் அரசியல் ரீதியான இடர்ப்பாடுகளுக்கு எதிராகக் காப்புறுதி அளிப்பதுதான் பல்தரப்பு முதலீட்டு காப்புறுதி குழுமத்தின் நோக்கம்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இண்டர்நேஷனல் வாட்டர் சர்வீசஸ் – பி.வி என்ற நிறுவனம், ஈக்வடார் நாட்டின் குடிநீர் திட்டமொன்றில் 1.8 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருக்கிறது. உள்நாட்டுக் கலகம், போர், ஒப்பந்தத்தை மீறுதல் போன்ற அரசியல் காரணங்களால் இம்மூலதனம் பறிமுதல் செய்யப்படுவதில் இருந்து முதன்முதலாக பல்தரப்பு முதலீட்டு காப்புறுதி கழகத்தால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஏழை நாடுகளின் மின்சாரம், தொலைபேசித் துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் மூலதனம் போடுவதைப் போலவே, தண்ணீர் வியாபாரத்திலும் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்காகவே, இந்த இரண்டு நிறுவனங்களையும் தனது துணை அமைப்புகளாக உலக வங்கி இயக்கி வருகிறது. மேலும், ஏழை நாடுகளின் குடிநீர் திட்டங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் மூலதனம் போடுவதற்கு வசதியாக, அத்திட்டங்களை இலாபம் தரும் திட்டம், இலாபம் தராத திட்டம் என இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றும் கோருகிறது.
சட்டம், கண்காணிப்பு மற்றும் துறைசார்ந்த சீர்திருத்தங்கள்
பன்னாட்டு தண்ணீர் வியாபார நிறுவனங்கள் ஏழை நாடுகளில் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி எளிதாக மூலதனம் போடுவதற்கும், தங்களுக்குக் கிடைக்கும் இலாபத்தை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக எடுத்துச் செல்லுவதற்கும் வசதியாக சுங்கவரிகளை நீக்குவது தொடங்கி சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப ஏழை நாடுகளின் பணத்தின் மதிப்பைத் தீர்மானிப்பது உள்ளிட்டு பல சீர்திருத்தங்களை உலக வங்கி கோருகிறது. ‘ஒருங்கிணைந்த சட்டகம்’ என உலக வங்கி – சர்வதேச நாணய நிதியம் – உலக வர்த்தகக் கழகம் என்ற சூலாயுதத்தால் அழைக்கப்படும் இச்சீர்திருத்தங்களின் கீழ்,
  1. நீர் ஆதாரங்களின் மீதான உரிமை மற்றும் நீர் ஆதாரங்களைக் குத்தகைக்கு விடுவது தொடர்பாக வரையறுத்தல்;
  2. பொது மக்களுக்குக் குடிநீர் வழங்கும் அரசுத்துறை நிறுவனங்களையும் தனியார் தண்ணீர் வியாபார நிறுவனங்களையும் சமமாக நடத்துவது தொடர்பாக சட்டம் மற்றும் கண்காணிப்பு முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல்,
  3. தண்ணீர் வழங்குதலைக் கண்காணிக்க அரசின் தலையீடின்றி சுதந்திரமாகச் செயல்படக்கூடிய கமிட்டியை அமைத்தல்;
  4. முதலீட்டிற்கு ஏற்றபடியும்; விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடியும் கட்டண விகிதங்களை மாற்றியமைத்தல்;
  5. கிராமங்களுக்குக் குடிநீர் மற்றும் பாசன வசதிகள் செய்து கொடுப்பதை அரசின், பஞ்சாயத்துக்களின் பொறுப்பில் இருந்து கழட்டிவிடுவதோடு, அச்சேவைகளை வியாபார நோக்கில் தனியாரிடம் ஒப்படைத்தல்;
  6. குடிநீர் வழங்கல் சேவையை இலாபம் தருவது, இலாபம் தராதது எனப் பிரித்தல்
    என்ற ஆறு நிபந்தனைகள் ஏழை நாடுகளின் மீது விதிக்கப்படுகின்றன.
அறிவு வங்கி (Knowledge Bank)
ஏழை நாடுகள் பற்றிப் பல தகவல்களைத் திரட்டி வைத்துக்கொண்டு, அந்நாடுகளுக்கு ஆலோசனை வழங்குவது என்ற பெயரில், அந்நாடுகளின் எல்லா துறைகளிலும் சந்தை பொருளாதாரத்தைப் புகுத்திவிடும் அறிவு வங்கியாகவும் உலக வங்கி செயல்படுகிறது. பொது மக்களுக்குக் குடிநீர் வழங்குவதை அரசின் பொறுப்பாகக் கருதும் ஏழை நாடுகளின் அரசாங்கங்களுக்கு ‘இலவசக் குடிநீர் என்பது அபாயகரமானது’ எனப் ‘புரிய’ வைப்பதுதான் இந்த அறிவு வங்கியின் முக்கிய நோக்கம். குடிநீர்க் கட்டணங்களை உயர்த்தக் கோரி ஏழை நாடுகளை நிர்பந்திப்பது மூலம், குடிநீர் வழங்குவதை வியாபாரமாக்குவது; குடிநீர் திட்டங்களில் போடப்படும் மூலதனத்தை முழுமையாகத் திருப்பி எடுக்கும் வகையில் கட்டண விகிதங்களை மாற்றியமைப்பதன் மூலம் குடிநீர் வழங்குவதைத் தனியார்மயமாக்குவது என்ற அடிப்படையில் உலக வங்கி ஏழை நாடுகளை மூளைச் சலவை செய்கிறது. இந்த வேலையை மிகத் திறம்படச் செய்வதற்காக, ஒரு கூட்டணியை, வலைப் பின்னலையே உலக வங்கி உருவாக்கி வைத்திருக்கிறது.
 கூட்டணி வலைப் பின்னல்:
ஏழை நாட்டு மக்களையும், அரசுகளையும் தண்ணீரை ஒரு பண்டமாக, வியாபாரப் பொருளாக கருத்து ரீதியாக ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தகக் கழகம், பன்னாட்டு தண்ணீர் வியாபார நிறுவனங்கள், ஐ.நா. மன்றத்தைச் சேர்ந்த அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து பல்வேறு சர்வதேச அமைப்புகளை நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகளுள், ‘உலக நீர் கவுன்சிலும்’, ‘உலக நீர் கூட்டணியும்’ முக்கியமானவை. கருத்தரங்குகள், மாநாடுகள், செயல் விளக்கக் கூட்டங்கள், சிறு வெளியீடுகள் எனப் பல வடிவங்களில் தண்ணீரைத் தனியார்மயமாக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்யும் இந்த அமைப்புகள், இதன் மூலம் ஏழ்மையையும், குடிநீர் பற்றாக் குறையையும் ஒழிக்க முடியும் எனப் பொது மக்களை மூளைச் சலவை செய்கின்றன. பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் தொழில்நுட்பத்தையும், மேலாண்மை திறமைகளையும் குடிநீர் வழங்குதலில் பயன்படுத்தும் பொழுது, ஏழை மக்கள் கூடப் பலன் அடைய முடியும் என்ற தேன் தடவிய அண்டப் புளுகை, இந்த கூட்டணி அமைப்புகள் அவிழ்த்து விடுகின்றன.
நாஃப்டா (NAFTA)வின் கள்ளக் குழந்தை “காட்ஸ்”
அமெரிக்கா தனது தலைமையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (நாஃப்டா – North American FreeTrade Agreement) என்ற பெயரில் பிராந்திய பொருளாதார வளையம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. தண்ணீரைத் தனியார்மயமாக்க நாஃப்டாவில் என்னென்ன விதிகள் உருவாக்கப்பட்டதோ, அதே விதிகளை அடிப்படையாகக் கொண்டுதான் உலக வர்த்தகக் கழகமும் தண்ணீர் வர்த்தகம் குறித்த விதிகளை உருவாக்கியிருக்கிறது.
உலக வர்த்தகக் கழகம் தண்ணீரை இயற்கையின் கொடையாகவோ, சமூகச் சொத்தாகவோ பார்ப்பதில்லை. மாறாக, உ.வ.க. தண்ணீரை வியாபாரப் பண்டமாகப் பார்க்கிறது. உவ.க. உருவானதற்கு அடிப்படையாக இருந்த காட் விதிகள், ‘கடல் நீரைத் தவிர, பிற இயற்கையான தண்ணீர் அனைத்தும் வியாபாரப் பண்டம் தான்’ எனக் குறிப்பிடுகிறது. உவ.க., தண்ணீரை அடிப்படையான மனித உரிமையாகப் பார்ப்பதில்லை; “நீர் என்பது மனிதனின் தேவைகளுள் ஒன்று என்றும்; மற்ற தேவைகளைப் போலவே, அதனையும் வியாபாரத்தின் மூலம் பூர்த்தி செய்துகொள்ள முடியும்” என்றும் கூறுகிறது.
உலக வர்த்தகக் கழக விதிகளின்படி தண்ணீர் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தின் மீது எந்தவொரு நாடும் தடையோ, கட்டுப்பாடுகளையோ விதிக்கக்கூடாது.
உவ.க.வில் உறுப்பினராக உள்ள ஒருநாடு, சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைக் காரணமாகக் காட்டி தண்ணீர் ஏற்றுமதியைத் தடை செய்தால், அந்நடவடிக்கை வர்த்தகக் காப்பு நடவடிக்கையாகக் கருதப்பட்டு, உவ.க.வில் அந்நாட்டின் மீது வழக்குத் தொடர முடியும். தண்ணீர் வர்த்தகம், நீர் ஆதாரங்களையே மாசுபடுத்துவதாக, அழிப்பதாக இருந்தாலும்கூட, தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதை எந்தவொரு நாடும் தடை செய்யக்கூடாது என உ.வ.க. கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மேலும், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்தையும் காட்டி, தண்ணீர் வியாபாரத்தைத் தடை செய்யக்கூடாது என உவ.க.வில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
‘நாஃப்டா’ விதிகளின்படி உள்நாட்டு நிறுவனங்களுக்கும், அந்நிய நிறுவனங்களுக்கும் இடையே எவ்விதப்பாகுபாடோ, பாரபட்சமோ காட்டக் கூடாது; அவ்வாறு இருந்தால், அந்நிய நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து நட்ட ஈடுகோரலாம்.
தண்ணீர் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள அந்நிய நிறுவனங்களின் மீது வர்த்தகத் தடையோ / கட்டுப்பாடுகளோ விதிக்கக் கூடாது. அவ்வாறு தடை விதித்தால் எதிர்கால இலாபம் கருதி வழக்குத் தொடர்ந்து நட்டஈடு கோரலாம்.
இந்த விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள “காட்ஸ்”, தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபடும் அந்நிய நிறுவனங்களை உ.வ.க. உறுப்பு நாடுகள் தேசிய நிறுவனங்களைப் போல நடத்த வேண்டும் என்கிறது. மேலும், உள்நாட்டு நிறுவனங்களுக்குத் தரப்படும் சலுகை, மானியம் அனைத்தும் அந்நிய நிறுவனங்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதோடு, குடிமகன்களுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தரப் படவேண்டும் எனக் கோருகிறது.
உ.வ.க. உறுப்பு நாடுகள், தண்ணீர் வியாபாரத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்க முயன்றாலோ தர நிர்ணயம் செய்ய முயன்றாலோ, அந்தக் கட்டுப் பாடுகள் குறைந்தபட்ச சுமைகளைக் கொண்டிருக்க வேண்டும்; சர்வதேச அளவுகளின்படி, குறைந்தபட்ச கட்டுப்பாடுகள்தான் விதிக்க வேண்டும் என்கிறது “காட்ஸ்”.
தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து நடைப்பெற்ற போராட்டங்கள்
அதாவது, ஒரு நாடு, தனது தேவைக்கு ஏற்றபடி சட்டம் கொண்டு வர முடியாது; பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்தைப் பாதிக்காதவாறு தான் சட்டம், கட்டுப்பாடுகள், தர நிர்ணயம் இருக்க வேண்டும். மேலும், சட்டம் / கட்டுப்பாடுகள் கொண்டுவர எண்ணும் நாடுகள், இக்கட்டுப்பாடுகள் குறைந்தபட்ச சுமையைத்தான் கொண்டிருக்கும்; பன்னாட்டு நிறுவனங்களுக்கு இக்கட்டுப் பாடுகளால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என உலக வர்த்தகக் கழகத்தின் முன் நிரூபிக்க வேண்டும். இதற்கும் மேலாக, உ.வ.க. உறுப்பு நாடுகள் இயற்றும் சட்டங்கள் / கட்டுப்பாடுகளை ரத்து செய்யும் ”வீட்டோ” அதிகாரம் ”காட்ஸ்” ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட வேண்டும் எனக்கோரி, இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஒரு இரகசிய அறிக்கை, உ.வ.க.வால் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
உவ.க.வில் உறுப்பினராக உள்ள ஏழை நாடுகள், உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைகளை மீறிச் செயல்பட முடியாத பொறியில் சிக்கிக் கொண்டுள்ளன. ஏனென்றால், உ.வ.க., வெறும் சர்வதேச வர்த்தக அமைப்பாக உருவாக்கப்படவில்லை. சட்டம் இயற்றவும் அதை மீறும் ஏழை நாடுகளைத் தண்டிக்கும் அதிகாரமும் கொண்ட “உலக அரசாக” உருவாக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தனியார்மயம்: மறுகாலனியாதிக்கத்தின் கோர வடிவம்
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்பதை உள்நாட்டு அரசாங்கம் முதல் ஐ.நா. மன்றம் முடிய, ஆளும் கும்பல் அனைவரும் ஒரு கொள்கையாகவே அறிவித்திருக்கிறார்கள். ஆனால், குடிநீர் வழங்கும் சேவையை வியாபார நோக்கில் தனியார்மயமாக்கினால், தற்பொழுது கிடைக்கும் ‘சுகாதாரமற்ற’ குடிநீர் கூடக் கிடைக்காமல் போய்விடும். ஏற்கெனவே குடிநீர் விநியோகம் தனியார்மயமாக்கப்பட்ட சில நாடுகளின் அனுபவங்களைப் பார்த்தே இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
தென் ஆப்பிரிக்க நாட்டில், வெள்ளை நிறவெறி ஆட்சியை வீழ்த்திவிட்டுப் பதவிக்கு வந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு கட்சி, 1997-ஆம் ஆண்டு தண்ணீரைத் தனியார்மயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்நாட்டின் குடிநீர் விநியோகம் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களான விவாண்டி மற்றும் சூயஸிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின், செல்ஃபோன்களில் பயன்படுத்தப்படும் “ஃப்ரீபெய்ட் அட்டையைப் போல, தண்ணீரைப் பெற முன்பணம் கட்டும் ‘ப்ரீ-பெய்ட்” கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நாடு முழுவதும் ஏறத்தாழ 1 கோடி குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் ஏழை, நடுத்தர மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதே குதிரைக் கொம்பானது. இதன்விளைவாக, தண்ணீர் தனியார்மயமான ஆறே மாதத்தில் அந்நாட்டில் காலரா நோய் பரவியது.
பொது மக்களுக்குக் குடிநீர் வழங்குவதைத் தடுத்து நிறுத்திவிட்ட தண்ணீர் நிறுவனங்கள், ”ஒரு மாதத்தில் ஐந்து முறை குளித்தால் போதும்; ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் கக்கூஸ்க்கு தண்ணீர் ஊற்றுங்கள்” எனத் தண்ணீர் சிக்கனம் பற்றிப் பொதுமக்களுக்குப் போதித்தது.
தென் அமெரிக்க கண்டத்திலுள்ள பொலிவியா நாட்டைச் சேர்ந்த கொச்ச பம்பா நகருக்கு குடிநீர் வழங்குவதை பெக்டெல் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைத்தது, அந்நாட்டு அரசு. 1999-ஆம் ஆண்டு இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடனேயே, கொச்ச பம்பா நகர மக்கள் தன்னுடைய அனுமதியின்றி மழை நீரைக் கூடச் சேகரிக்கக் கூடாது எனக் கட்டளையிட்டது, பெக்டெல். இதன் விளைவாக, மாதமொன்றுக்கு வெறும் 4,500 ரூபாய் சம்பாதிக்கும் குடும்பம், குடி தண்ணீருக்காக மாதாமாதம் 900 ரூபாய் செலவழிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இந்தக் கொள்ளைக்கு எதிராகவும் தண்ணீர் உரிமையைப் பாதுகாக்கவும் அந்நகர மக்கள் பெக்டெல்லை எதிர்த்துப் போராடத் தொடங்கினர். பெக்டெல்லைப் பாதுகாக்க அந்நகரில் இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. எனினும், பெக்டெலுக்கு எதிராக பொலிவியா எங்கும் நடந்த போராட்டங்களின் விளைவாக, பெக்டெலுக்கு வழங்கப்பட்ட வியாபார உரிமை ரத்து செய்யப்பட்டது.
ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த 9 நாடுகளில் 1998-ஆம் ஆண்டு குடிநீர் வழங்கும் சேவை தனியார்மயமாக்கப்பட்டது. தண்ணீர் கட்டண உயர்வால், அந்நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் குளங்களிலும், குட்டைகளிலும் தேங்கிக் கிடக்கும் நீரைக் குடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதையடுத்து இந்நாடுகளில் பரவிய காலரா நோய்க்கு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; 25,000 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஆசிய கண்டத்தைச் சேர்ந்த பிலிப்பைன்சு நாட்டிலும் தண்ணீர் தனியார்மயமான பிறகு, தண்ணீர் கட்டணம் 4 முதல் 10 மடங்கு வரை உயர்ந்தது. பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காததால் காலரா நோய் பரவியது.
எனவே, தண்ணீர் தனியார்மயம் என்பது மறுகாலனியாதிக்கத்தின் கோர வடிவம். உணவு இல்லாமல் கூட பல நாட்கள் வாழ்ந்துவிட முடியும்; ஆனால், தண்ணீர் இல்லாமல், மனிதன் ஓரிரு நாட்கள் கூட வாழ முடியாது. எனவே, நாம் உயிர் வாழ வேண்டும் என்றாலே, இத்தனியார்மயத்தை எதிர்த்துப் போராடியே தீரவேண்டும்.
  • ரஹீம்
    புதிய ஜனநாயகம், ஜூலை 2005.நன்றி:வினவு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?