இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 15 மே, 2017

இயற்கை ஆரோக்கிய பாதை.

‘தேடுவதிலும் புரிந்துகொள்வதில் உள்ள மகிழ்ச்சியே இயற்கையின் சிறந்த பரிசு’
                                                                                                - ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களை கொண்டு உருவானது இயற்கை. இந்த பஞ்சபூதங்கள் இல்லாமல் நாம் உயிர் வாழ்வது சாத்தியமில்லை. 

இந்த பஞ்சபூதங்கள் தனிமனித ஆரோக்கியத்திலும் அதீத செல்வாக்கு செலுத்துகிறது.

பஞ்சபூதங்களும் நம் உடலும்எலும்பு, தசை, நகம், முடி போன்றவை நிலமாகவும், ரத்தம், நிணநீர், சிறுநீர், வேர்வை போன்றவை நீராகவும், பார்வைத்திறன், செரிமானத்துக்கு உதவும் அமிலங்கள் போன்றவை நெருப்பாகவும், சுவாசம் காற்றாகவும், மடலிடைக் குழிவாக ஆகாயமும் நம் உடலில் அமைந்திருக்கிறது. 

இயற்கையின் அமைதி குலைவே இயற்கையின் சீற்றத்துக்குக் காரணம். 

இதேபோல் நாம் இயற்கை விதிகளை மீறும்போது நமக்கு நோய் உண்டாகிறது.இயற்கை தன்னைத்தானே மீட்டெடுக்கும் தன்மை கொண்டது. 

அதேபோல் நம் உடம்பும் இயற்கையாக குணமடையும் தன்மை உள்ளதால் நாம் இயற்கை உணவு, உண்ணா நோன்பு போன்ற முறைகளை கைகொண்டு இயற்கை விதிகளை பின்பற்றி வந்தால் நம் உடலும், மனமும் ஆரோக்கியம் பெறும்.

இயற்கை மனதை அமைதிப்படுத்துவதற்கு மட்டுமில்லாமல் பலவகை நோய்களையும் குணப்படுத்தவல்லது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் சமீபத்தில் வெளிவந்த பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வு.


 மரங்களிடையே வாழும் மக்களுக்கு சாதாரண அறையில் வாழும் மக்களை விட நோய் பாதிக்கும் தன்மை குறைவாக உள்ளதாகவும், அவர்களுக்கு குறைவான வலி நிவாரண மாத்திரைகள் செலவிடுவதாகவும், மருத்துவமனைகளில் சென்று அடையும் தன்மை குறைவதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
இதேபோல் ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இயற்கை சுற்றுச்சூழலில் ஓட்டம் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களே, அடுக்குமாடி கட்டிடங்களில் உடற்பயிற்சி செய்பவரைக் காட்டிலும், அதிக மகிழ்ச்சியாகவும், குறைந்தளவு கோபப்படுபவராகவும், மன அழுத்தம் குறைவாக உள்ளவராகவும் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

இயற்கையான சூழலில் இருத்தல்அழகிய, பச்சை பசுமையுடன் காணப்படும் சுற்றுச்சுழலில் நாம் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும்பொழுது நமக்கு புத்துணர்ச்சி தரும் தூய்மையான ஆக்ஸிஜன் சுவாசிக்க கிடைக்கிறது. 

இதனால் நம் ரத்த ஓட்டமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். ஆனால், நாம் இவ்வாறு செய்யாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம்.

அவ்வப்போது இவ்வாறு இயற்கை சூழலில் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பேசிக்கொண்டே செல்லும் நடைபயிற்சி மிகவும் ஆரோக்கியம் அளிக்கக்கூடிய ஒன்று. உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் அவர்களிடையே புது பிணைப்பும் அளவற்ற மகிழ்ச்சியும் ஏற்படும்.


தொல்லை தரும் தொழில்நுட்பக் கருவிகள் இன்றைய காலகட்டத்தில் கணினி, இணையதளம், கைபேசிகள், தொலைக்காட்சி இவையின்றி நம்மால் வாழ முடியவில்லை.

நம் மூளையும் இவையின்றி இயங்கத் தயங்குகிறது. இது ஒருவகையான நோய் போலத்தான்! 
இளைஞர்களிடையே அதிகம் பாதித்துக் கொண்டிருந்த இத்தகைய தொழில்நுட்பம், இப்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்கும் ஒன்றாக மாறிவருகிறது.
தொழில்நுட்பம் மற்றும் திரைகள் சூழ்ந்த உலகில் நாம் இன்று வாழ்ந்து வருவதால் நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்கள் நிறைவற்றதாக மாறுகிறது. 

மேலும், இயற்கை விதிகளை மீறுவதால் நம் உடலில் தேவையற்ற கழிவுகள் சேர்ந்து நோய்கள் உண்டாக முக்கிய காரணமாக அமைகிறது. 

நாம் இயற்கையோடு இணைந்து வாழும்போது நம் மனித உடலில் நோய்கள் அண்டாமல் காத்துக் கொள்ளலாம்.மற்றவர்கள் உலகின் எந்தப் பக்கம் இருந்தாலும் நம் அருகில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தரும் பல வசதிகளை கொண்ட (மெசேஜ், இ-மெயில், அழைப்பு, வீடியோ அழைப்பு)கைபேசியினால், நம் அருகில் இருப்பவர்களிடம் இருந்து விலகி இருக்கிறோம். 

இந்தத் தொழில்நுட்பத்தின் சொகுசு வாழ்க்கையினால் நாம் சோம்பேறித்தனம் மற்றும் தனிமையை நோக்கி செல்கிறோம்.

இன்றைய வாழ்க்கைக்கு இந்தத் தொழில்நுட்ப கருவிகள் அவசியமானது என்றாலும், இந்தத் தொழில்நுட்ப கருவிகள் காரணமாக ஏற்படும் பாதிப்பு களைக் குறைக்க நாம் முயற்சி எடுக்க வேண்டும். இதற்கு நல்ல தீர்வு நாம் எவ்வாறு எத்தனை முறை, எப்படி இயற்கையோடு இணைந்து வாழ்கிறோம் என்பதே ஆகும்.


இத்தகைய சாதனங்களிடம் நாம் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு, இயற்கையோடு அதிக நேரம் செலுத்தி நாம் நோய்களின்றி வாழலாம். 
மக்களிடையே இந்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரியது.  மக்களிடம் தெரியும் மாற்றம்பழங்காலத்தில் மக்கள் பச்சை காய்கறிகளையும், பழங்களையுமே உட்கொண்டிருந்தனர். 

நாளடைவில் அது மாறி நாம் நம் நாகரிக வளர்ச்சியாக எண்ணி, அயல்நாட்டு உணவுகளான பீட்சா, பர்கர், பிரெட் போன்றவையினை உட்கொள்கிறோம்.

 அதுவே நம் உடலில் நோயினையும், அழிவினையும் தரவல்லது.

சிலர் இதை உணர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையினைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணி பச்சை காய்கறிகளையும், பலவகை பழச்சாறுகளையும் தங்கள் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். 


பாக்ெகட் செய்யப்பட்ட பாலை விட்டுவிட்டு, இயற்கையான மாட்டின் பாலையே விரும்புகின்றனர். 
மக்கள் இயற்கை உணவுகளைத் தேடிச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்பதற்கான உதாரணமாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.

ஆமாம்... இயற்கை இறைவன் அளித்த வரப்பிரசாதம். அதனால்தான் நம் மக்கள் அனைவரும் இயற்கையை ரசித்து நேரத்தை கழித்து மன அழுத்தத்தைக் குறைக்க விரும்புவது அதிகரித்து வருகிறது. 

இயற்கைக்குத் திரும்பும் பாதையே ஆரோக்கியமான, அழகான பாதையும் கூட!
                                                                                                                                 டாக்டர் வெங்கடேஸ்வரன்
நன்றி:"குங்குமம் டாக்டர்" ,
===========================================================================================
ன்று,
மே-15.
  •  குடும்ப தினம்
  • பராகுவே விடுதலை தினம்(1811)
  • மாஸ்கோவில் சுரங்க ரயில் சேவை ஆரம்பமானது(1935)
  • டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது(1978)
=============================================================================================