இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 2 ஜூன், 2017

'ஊழல் தீ ' விபத்து..................

சென்னை தியாகராய நகரில் புதனன்று அதிகாலை தீவிபத்துக்குள்ளான பிரபல சென்னை சில்க்ஸ் கட்டடம் வியாழனன்று அதிகாலை இடிந்து விழுந்துவிட்டது. 

இது போன்ற தீ விபத்துக்கள் ஏற்படும்போது சம்பந்தப்பட்ட கட்டடத்திற்கு அனுமதியளித்தது யார், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை என்ற விவாதங்கள் எழும். தற்போதும் அந்த விவாதம் தொடங்கியுள்ளது. 


விதிமுறைகளை மீறி அந்த கட்டடம் கட்டப்பட்டிருந்தால் கண்டிப்பாக சட்ட ப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும்.விபத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் அந்த நிறுவனம் தரைத்தளம் மற்றும் 4 மாடிகள் கட்டுவதற்கே அனுமதி கோரியதாகவும், ஆனால் 8 மாடிகளைக் கட்டிக்கொண்ட தாகவும் கூறியிருக்கிறார்.


அனுமதியில்லாமல் கட்டப்பட்ட 3 தளங்களை இடிக்க சிஎம்டிஏ நோட்டீஸ் அனுப்பி இடிக்கத் துவங்கியவுடன் உரிமையாளர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்றுதடையாணை பெற்றுவிட்டதால் நடவடி க்கையை தொடரமுடியவில்லை எனக்கூறி அரசின் பொறுப்பிலிருந்து நழுவப் பார்க்கிறார் அமைச்சர். 

3 மாடி கூடுதலாக கட்ட எத்தனை மாதங்கள் ஆகியிருக்கும்! 
அதுவரை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் எங்கே சென்றிருந்தார்கள்?

சென்னையில் விதிமீறல் கட்டடங்களை முறைப்படுத்த தமிழ்நாடு நகரமைப்பு சட்டத்தில் 113-சி பிரிவு சேர்க்கப்பட்டது. 

2007 ஜூலைக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களுக்குவிதிவிலக்கு அளிக்கலாம் என்று அதில் தெரி விக்கப்பட்டிருந்தது. தி.நகரின் பெரும்பாலான கட்டடங்கள் 113-சி விதிவிலக்கு பெறக்கூட தகுதியற்றவை.

வழக்குகள் காரணமாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இருப்பதாக அரசு சொல்லிக்கொண்டாலும் நீதிமன்றத் தடையை விலக்கவும், வழக்கை விரைந்து முடிக்கவும் முயலவில்லை. 
சில ஆண்டுகளுக்கு முன்பு இதே திநகர் ரங்கநாதன் தெருவில் பிரபல சரவணா ஸ்டோர் கட்டடத்தில் தீப் பிடித்ததில் இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர். 

அப்போதேஉறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறியதால் இன்று ரங்கநாதன் தெருவும் தெற்கு உஸ்மான் சாலையும் அபாயகரமான பகுதிகளாகியுள்ளன.இப்படிப்பட்ட நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக வாடிக்கையாளர்களோ ஊழியர் களோ வெளியேற போதுமான வழிகளில்லை. பல வணிக வளாக கட்டடங்களில் போதுமான காற்றோட்டமும் இல்லை.

வாடிக்கையாளர்கள் மிகுதியாக வரக்கூடிய பகல் நேரங்களில் விபத்து நிகழுமேயானால் உயிரிழப்புகள் உள்பட பெரும் சேதங்கள் ஏற்படக்கூடும். 

எனவே வழக்குகளை விரைந்து முடிக்க மாநில அரசு நடவடிக்கை எடுப்பதோடு பாதுகாப்பான கட்டடங்களையும் உறுதிப்படுத்தவேண்டும். 
காரணம் இது மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்ட பிரச்சனை. எனவே இந்த விபத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு உரிய ஏற்பாடுகளை துவங்கவேண்டும். விதிமீறல் காரணமாக ஏற்படும் விளைவுகளை நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்கவேண்டும்.


 சிஎம்டிஏ அதிகாரிகளும் அவ்வப்போது கண்காணிப்பை தீவிரப்படுத்தவேண்டும். 
மிக முக்கியமாக, விதி மீறல்களின் பின்னணியில் இருக்கக்கூடிய அனைத்து மட்டத்திலுமான ஊழல் எரிக்கப் பட்டாக வேண்டும்.
============================================================================================

"மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாடுகள் விற்பனை தடைச்சட்டம், கேரளாவை கடுமையாக பாதிக்கும்; பால் உற்பத்தியும் பாதிக்கும். கேரளாவில் ஓராண்டில் 2.52 லட்சம் டன் மாட்டு இறைச்சி விற்பனை ஆகிறது; மொத்தம் 6,552 கோடிரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. ஐந்து லட்சம் பேர் இந்த தொழிலில் உள்ளனர். 15 லட்சம் கன்றுக்குட்டிகள் ஆண்டுதோறும் கேரளாவுக்கு வருகின்றன. 

கேரள மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம், அவர்களது உணவுப் பழக்கம்; 'அதையும் விடமாட்டோம்' என சிலர் தீர்மானம் எடுத்து செயல்படுகின்றனர். 'மாட்டு சந்தைகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு தான் இந்த சட்டம்' என கூறப்பட்டாலும், இறைச்சியை தடை செய்வது தான் அதன் நோக்கம்.'கோமாதா' என சொல்பவர்கள் வீட்டில், பசுக்கள் வளர்க்கப்படுகின்றனவா; அப்படி வளர்த்தால் கடைசி வரை பராமரிக்கிறார்களா? "இந்தியாவிலேயே கேரளாவில் உள்ளவர்கள்தான் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள். அதற்கு மாட்டிறைச்சி உண்பதும், ஒரு காரணம். ஒரு வருடத்தில் கேரளாவிற்கு 15 லட்சம் கால்நடைகள் வருகின்றன. 2.5 லட்சம் டன் மாட்டிறைச்சி கேரளாவில் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவு கேரளாவிற்கு கடும் பாதிப்பை ஏற் படுத்தும்.எனவே மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக கேரளத்தில் புதிய சட்டம் இயற்றுவோம். இதுபற்றி ஆலோசித்து வருகிறோம்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவருடன் கலந்து பேசி, விரைவில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டவும் தீர்மானித்துள்ளோம். இப்பிரச்சனையில் கேரள உயர்நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ வழக்கு தாக்கல் செய்வது பற்றியும் ஆலோசித்து வருகிறோம்.விரைவில் திருவனந்தபுரத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்டவும், முடிவு செய்துள்ளோம்."
                                                                                                                         கேரள முதல்வர் பினராயி விஜயன்
============================================================================================
 இன்று

  • வடகொரியா குழந்தைகள் தினம்
  • மார்க்கோனி தான் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்(1896)
  • முதல் முறையாக இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டிய விழா தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பானது(1953)
  • பூட்டானில் முதல்முறையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது(1999)
===============================================================================================
கவி  இரங்கல்.
கவிக்கோ அப்துல்ரகுமான் உடல் நலக்குறைவால் அதிகாலை காலமானார். 
1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி பிறந்த கவிக்கோ, வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். 
எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். 
அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். 
தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். 
அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
===================================================================================='