இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வியாழன், 7 செப்டம்பர், 2017

"பிக்பாஸ் வீடா"கி வீணான தமிழ்நாடு?

"தற்போது எடப்பாடி அரசுக்கு பெரும் பான்மை இல்லை என்பது தெளிவு, இருந்தும் மத்திய பாஜக அரசும், பிரதமரும் ஆளுநரைப் பயன்படுத்தி விளையாடு கின்றனர்.
 தங்கள்கைகளில் அடங்கிக் கிடக்கும் ஒன்றுபட்ட அதிமுகமூலம் தங்களது அரசியல் எதிர் காலத்தை உறுதிப்படுத்த பா.ஜ.க இந்த கபட நாடகத்தை ஆடுகிறது."

 விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் எனும் ஷோ கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
அதில் சில நடிகர், நடிகைகள் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான டாஸ்க் (பணிகள்) அனைத்தும் வீட்டுக்கு வெளியே இருக்கும் பிக் பாஸால் அளிக்கப்படும். 


அதை அவர்கள் தவறாமல் செய்ய வேண்டும். அதற்காக அவர்களுக்கு ஒருகணிசமாக தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீட்டில் அவர்களை ஆட வைப்பர்.
ஓட வைப்பர். 
குளிக்க வைப்பர். 
களவாட வைப்பர்.
பேய் நடமாடுவது போல் நடிக்க வைப்பர். 
இத்தனையும் அவர்கள் செய்தே ஆக வேண்டும். 
காரணம் அதற்கான ஒப்பந்தத்தில் அவர்கள் கையொப்பம் இட்டுள்ளனர். அவர்கள் அழுவர். சிரிப்பர்.
சில நேரங்களில் கோபப்படுவர். புறம் கூறுவர். எல்லாம் நடக்கும். இவை அனைத்தும் ஒரு கேம்( விளையாட்டு) என்றுஅடிக்கடி வாரம் இரண்டு நாட்கள் மட்டும் வெளியிலிருந்து ஒருங்கிணைக்கும் நடிகர் கமல்ஹாசன் நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பார். 

இதில் சிலர் வெளியேற்றப்படுவர். சிலர் புதிதாக குடியேற்றப்படுவர். இந்த வீட்டில் நடக்கும் அனைத்தையும் ஆட்டிவைப்பவர் பிக் பாஸ். அவர் கட்டளைப்படியே அனைத்தும் நடக்க வேண்டும். இந்த விளையாட்டில் நடிகர், நடிகைகள் சம்பளம் பெறுகின்றனர். 
தொலைக்காட்சி நிறுவனமோ பல நூறு கோடி ரூபாய் லாபம் அடைகிறது. 
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தா இந்த கட்டுரை என்று எண்ண வேண்டாம். தமிழகத்தில் நடைபெறும்அரசியல் நிகழ்வுகள் இந்த விளையாட்டை போலவே நடைபெறுகின்றன. 

பிக் பாஸாக மிகச் சிறந்த நடிகர்நாட்டின் பிரதமர் மோடி இதை நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதை விபரம் அறிந்த அனைவரும் ஒப்புக்கொள்வர்.
தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது அதிமுகவுடன் உறவு கொள்ளபா.ஜ.க. துடித்தது. ஆனால்அன்றைய முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாஒத்துக் கொள்ளவில்லை. 

பா.ஜ.க தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியைத் தவிர வேறு எங்கும்வெற்றி பெற முடியவில்லை. சட்டமன்றத் தேர்தலிலும்பா.ஜ.க. முயற்சித்தது. 
அதிலும் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை என்ற இலக்கோடு போட்டியிட்டஅதி.மு.க., பா.ஜ.கவோடு கூட்டணி வைக்க முன்வரவில்லை. தேர்தலின்போது தமிழகத்தில் மோடியின்பிரச்சாரத்தை எதிர்கொண்ட ஜெயலலிதா மோடியா? 
இந்த லேடியா? 
என்ற பிரபலமான கேள்வியைமக்கள் முன் வைத்தார். அதில் லேடி வென்றார்.
மோடி தோல்வியடைந்தார்.
ஒரு இடத்தில் கூட பா.ஜ.கவெற்றி பெறவில்லை. 

அதிமுகவுக்கு எதிராக தமிழகபா.ஜ.கதலைவர் கடுமையான விமர்சனங்களை செய்து கொண்டே இருந்தார். இறுதியாக விரக்தியடைந்த பா.ஜ.க ‘கழகங்கள் இல்லா தமிழகம்’ என்ற கோஷத்தை முன்னிறுத்தி தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. 
மத்திய மோடி அரசாங்கத்தின் பல திட்டங்களை ஏற்க ஜெயலலிதா மறுத்தார். அவை தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமானது என்றுபகிரங்கமாக அறிவித்தார். 
அதனடிப்படையில் உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம்,ஜி.எஸ்.டி.,நீட் தேர்வு திட்டம் ஆகியவை ஜெயலலிதாவால் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் தான் ஜெயலலிதா 2016 செப்டம்பர் 22 இல் திடீரெனமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


2016 டிசம்பர் 5இல் ஜெயலலிதா மரணம் அடைந்தார். ஓ.பன்னீர் செல்வம் இரவோடு,இரவாக முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
மரியாதை செலுத்த வந்த பிரதமர் மோடி பன்னீர் செல்வத்திற்கும், சசிகலாவுக்கும் ஆறுதல் கூறிச் சென்றார். பின்னர் தான் 2016 டிசம்பர்21இல் பன்னீர் செல்வத்தின் நண்பர் சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு, முதலமைச்சர் பன்னீர் செல்வம் அமர்ந்திருக்கும் போதே அவரது அறைக்கு அடுத்த அறையில் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் அலுவலகம் மற்றும் வீடுகளில் ரெய்டுஎன ரெய்டு படலம் துவங்கியது. 


ரெய்டுகளின் நோக்கம்தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தை மிரட்டி பணியவைக்கவே என்று அரசியல் நோக்கர்கள் கருதினர். காரணம் சேகர் ரெட்டி பன்னீர் செல்வத்தின் பினாமி என்ற கருத்து பரவலாக இருந்தது. பின்னர் காட்சிகளில் மாற்றம். 

திடீரென பன்னீர் செல்வம் உட்பட அதிமுக தலைவர்கள் வற்புறுத்திய காட்சிகளையும், அதை ஏற்று சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பேற்றதையும் ஊடகங்கள் மூலம் கண்டோம்.
பின்னர் திடீரென 2017 பிப்ரவரி 5ல் சசிகலா சட்டமன்ற குழு தலைவராக தேர்வு, 2017 பிப்ரவரி 7இல் ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா, சசிகலாவை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை என நாடகங்கள் வேகமாக நடைபெற்றன.

 இந்நிலையில் பன்னீர் செல்வம் திடீரென செல்வி ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று தியானம் நாடகத்தை நடத்தி, தர்ம யுத்தத்தை துவங்குவதாக அறிவித்தார். ஆளுநர் வித்யாசாகர் ராவ் காணாமல் போய்விட்டார். 


சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்து தலைவராக்கப்பட்ட சசிகலாவை முதலமைச்சர் பதவிப் பரிமாணம் செய்து வைக்க வராமல் அவர் தில்லிக்கும், மும்பைக்கும் பறந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருகிறது. பிப்ரவிரி 14 இல் சசிகலா4 ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்படுகிறார்.

பிப்ரவரி 15 இல் டி.டி.வி.தினகரன் துணை பொதுச் செயலாளர் என்று அறிவித்துவிட்டே சசிகலா சிறை செல்கிறார். பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டதும், கூவத்தூர் கூத்து மற்றும் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் போது நடைபெற்ற நிகழ்வுகளும் அனைவரும் அறிந்ததே. பின்னர்ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

 தினகரன் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். எடப்பாடி பழனிசாமி உட்பட அனைத்து அமைச்சர்களும் தினகரனுக்காக வாக்குச் சேகரித்தனர். வாக்காளருக்கு பணம் வழங்குவது உச்சக்கட்டத்தை அடைந்தது. பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். தேர்தல் ஆணையத்தில் இரண்டு கோஷ்டிகளும் இரட்டை இலைச் சின்னத்தை கோரின. தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது. 

தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தல் ஆணையம் தேர்தல் முறைகேடுகளைக் காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்தது.
இதற்கு முன்னர் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அவரது கூட்டாளிகள் வீடுகள், அவரது தந்தை வீடுபோன்ற இடங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. தேர்தல் ரத்து செய்யப்பட்ட பின்னர் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று கூறிஅவர் ஏப்ரல் 25 இல் தில்லி போலீசாரால் கைதுசெய்யப்பட்டு, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

ஆனால் அவர் எந்த அதிகாரிக்கு லஞ்சம்கொடுக்க முயன்றார் என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. இதில் வினோதமான விஷயம் பல்வேறு ரெய்டுகள் மத்திய அரசின் துறைஅதிகாரிகளால் நடத்தப்பட்டு பலரிடம் பல நூறு கோடிரூபாயை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டும், பலர் கைது செய்யப்பட்டும், இதுவரை எந்த வழக்கும்வெளிச்சத்துக்கு வரவில்லை.

எனவே இந்த ரெய்டுகளும், கைதுகளும் மிரட்டிப் பணிய வைக்கவே என்றநியாயமான சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. 
இந்நிலையில் திடீரென்று எடப்பாடி அணி தினகரனிடம் இருந்து பிரிகிறது. அவரை ஒதுக்கி வைக்க மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தால் தான் என்ற சந்தேகம் வலுவானது. அடிக்கடி மோடியை எடப்பாடியும்,அவரது அமைச்சர்களும் பன்னீர் செல்வமும் சந்திக்கின்றனர். 


அவையெல்லாம் தமிழக நலனுக்கு என்று கூறப்பட்டது. ஆனால் ஜெயலலிதா எதிர்த்து வந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம், ஜி.எஸ்.டி வரிகள் போன்றுநீட் தேர்வும் தமிழகத்தில் நுழைந்து தமிழக மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. 
அமைச்சர்கள் அனைவரும் தங்களை காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தார்களே ஒழிய தமிழக மக்களின் நலன்களை காப்பதில் எந்தஅக்கறையும் காட்டவில்லை.

இந்நிலையில் தான் பா.ஜ.க தரப்பில் பன்னீர் அணியும், எடப்பாடி அணியும்இணைவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அதற்கான அழுத்தம் பா.ஜ.க தரப்பிலிருந்து வருகிறது.
அதற்கு மத்திய அரசு அமைச்சர்களும், ஏன் பிரதமர் மோடியும் கூட தங்களது பங்களிப்பை செய்தனர்.மடியில் கனத்துடன் வலம் வரும் இரண்டு அணிகளும்மத்திய அரசின் கிடுக்கிப் பிடியில் சிக்கியிருந்ததால் தர்ம யுத்தம் முடிவுக்கு வந்தது. 

இரண்டு அணிகளும்இணைய, அன்றே மும்பையிலிருந்து பறந்து வந்தஆளுநர் பன்னீர் செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததோடு பன்னீர், எடப்பாடி ஜோடியை கையைப் பிடித்து இணைத்து வைக்கும் கடமையை செய்தார். உடனடியாக மோடி இருவருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கிறார்.
இதுநாள் வரை சின்னம்மாவாக இருந்தவரும், துணை பொதுச் செயலாளராக போற்றப்பட்டவரும் ஓரம் கட்டப்பட்டனர். இவை அனைத்தும் தில்லியிலிருந்து வழி நடத்திய பிக்பாஸ் கட்டளைப்படியே நடந்து முடிந்தது. பின்னர் தினகரன் அணியைச் சார்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரைச் சந்தித்து தாங்கள் எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தனித்தனியாக எழுத்து மூலம் தெரிவித்தனர். 

எந்த பதிலும் கூறாத ஆளுநர்மும்பைக்கு பறந்து விட்டார். சில நாட்கள் தலைமறைவு. திரும்பியே வரவில்லை. இதற்கிடையில் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர்கள் தில்லி பயணம்.அங்கு மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு.

பலதடவை நடைபெற்ற சந்திப்புகள் எல்லாம் தமிழகபிரச்சனைக்காக என்று கூறப்பட்டாலும், அவைகள் அனைத்தும் தில்லி கட்டளைப்படியே நடைபெற்றுள்ளன. தினகரன் அணியின் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூர் பாணியில் புதுவை சொகுசு விடுதியில் உள்ளனர். 

இம்மாதம் 28இல் எடப்பாடியால் கூட்டப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 30 பேர் வரையிலும்கலந்து கொள்ளவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. ஆளுநர் திடீரென திரும்பி வருகிறார். 
அனைத்துஎதிர்க்கட்சிகளும் சட்டமன்றத்தைக் கூட்டி எடப்பாடி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோருகின்றன. அவரோ முதலில் மவுனம் காக்கிறார். 

இடதுசாரி கட்சிகள், விசிக தலைவர்கள் சந்தித்த போது அவரது பதில் விசித்திரமானது. இதுஅவர்களது கட்சி பிரச்சனை.
இதில் நான் தலையிடமுடியாது. அவர்கள் கட்சிக்குள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அவரது பதில். அடுத்த நாள் அதை ஒத்த பதிலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது உள்கட்சி விவகாரம், மத்திய அரசோ, ஆளுநரோ தலையிட முடியாது வேண்டுமென்றால் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரட்டும், ஆளுநரைப் பார்க்க அவசியமில்லை. சட்டப் பேரவைத் தலைவரைத் தான் பார்க்க வேண்டும். 


இதுஅறியாமையால் கூறிய பதிலல்ல. நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டமன்றம் கூடுகிற போது தான் கொண்டு வர இயலும். ஆளுநரால் முடித்து வைக்கப்பட்ட சட்டமன்றத்தை பேரவைத் தலைவர் கூட்ட இயலாது. ஆளுநர் தான் கூட்ட இயலும். அதற்கு இன்னும் 5 மாதங்கள் அவகாசம் எடுக்கலாம். அதற்குள் குதிரைவர்த்தகம் தடையின்றி நடத்தப்படும். 
அதற்கே அவர்அவகாசம் கேட்கிறார்.

இதுபோன்ற சூழல்களில் சட்டமன்றத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது ஆளும் அரசின் கடமைஎன்றும், அதற்கே ஆளுநர் உத்தரவிட வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றத்தால் கோவா விவகாரத்திலும், உத்தரகண்ட் விவகாரத்திலும், ஜார்க்கண்ட் விவகாரத்திலும், கர்நாடகா விவகாரத்திலும் தெளிவான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 
நூர்முகம்மது


எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இதற்கான தெளிவான வழிகட்டுதலை ஏற்கெனவே வழங்கியிருந்தது. மேலும் எடப்பாடி அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வாக்களித்த 19 பேர் தான் ஆதரவை விலக்கி கொண்டவர்கள். 
தற்போது எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது தெளிவு, இருந்தும் மத்திய பாஜக அரசும், பிரதமரும் ஆளுநரைப் பயன்படுத்தி விளையாடுகின்றனர்.

தங்கள்கைகளில் அடங்கிக் கிடக்கும் ஒன்று பட்ட அதிமுகமூலம் தங்களது அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்த பா.ஜ.க இந்த கபட நாடகத்தை ஆடுகிறது. 
எனவே தான் தமிழகத்தில் நடைபெறும் பிக்பாஸ் விளையாட்டில் தில்லி பிக்பாஸ் அனைத்தையும் தீர்மானிக்கிறார். 

தமிழக அதிமுக அரசும், அமைச்சர்களும் அந்த பிக் பாஸின் கட்டளைப்படியே ஒவ்வொன்றையும் செய்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேயர்களின் வாக்குகள் தான் கடைசி தேர்வை செய்கிறது என்று அறிவித்துள்ளனர். 

இங்கு தமிழக மக்கள் தான் இந்தநாடகத்தின் மூலம் துரோகம் இழைக்கும் பிக் பாஸையும், அவர்கள் கட்டளைப்படி நடக்கும் அடிமைகளையும் களையெடுக்க வேண்டும்.
  நன்றி;தீக்கதிர்,                                                                                                                          எஸ்.நூர்முகம்மது
======================================================================================
ன்று,
செப்டம்பர்-07.


  • கிரான் கொலம்பியா குடியரசு உருவானது(1821)

  • பிரேசில் விடுதலை தினம் (1822)

  • நடிகர் மம்முட்டி பிறந்ததினம் (1951)

  • கூகுள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1998)
=======================================================================================
மம்மூட்டி
 கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் என்ற ஊரில், இஸ்மாயில் - பாத்திமா தம்பதிக்கு மகனாக, 1951 செப்., 7ல்  மம்முட்டி பிறந்தார். 
இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் 

கொச்சியிலுள்ள மகாராஜாஸ் கல்லுாரியில் பட்டப்படிப்பும், எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லுாரியில் சட்டமும் பயின்றார். 
1971ல், கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய, அனுபவங்கள் பாலிச்சகள் என்ற படத்தில் அறிமுகமானார். 

மலையாள முன்னணி நடிகராக திகழ்ந்த இவர், 300 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.மூன்று முறை, தேசிய விருது பெற்ற நடிகர். 

மலையாளம் தவிர, ஹிந்தி, தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 
 உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பின் அதிக விருதுகளாக பத்மஸ்ரீ விருது ,நான்கு மாநில விருதுகள் மற்றும் எட்டு, 'பிலிம்பேர்' விருதுகள் பெற்று உள்ளார். 

கைரளி, பீபிள் மற்றும் வீ, 'டிவி'க்கள் நடத்தும் மலையாள தகவல் தொடர்புகளின் தலைவர் பொறுப்பிலும் இருக்கிறார்.

கேரள அரசின் அக்‍ஷயா' திட்ட நல்லெண்ண துாதுவராக இயங்கி  வருகிறார். 
=======================================================================================
🤥"பெரியார், அம்பேத்கார் கொள்கைகள் இந்த காலத்திற்கு ஏற்கத்தக்கதல்ல"
முக்காலம் உணர்ந்த இக்கால அரசியல் ஞானி dr . கிட்னஸாமி.
🤔"ரொம்பத்தான் முத்திடுத்து.இந்துத்துவாதான் இக்காலத்துவானு புலம்ப ஆரம்பிக்கிறதுக்குள்ள நீட் ல டாக்டரான நம்மவா கிட்டே காட்டிடுங்கோ"