அயோத்தீ .....25 ஆண்டுகளும்

  ஒரு அகழ்வாராய்ச்சி முடிவுகளும்,


அயோத்தி ராமஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இடத்தில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு, தன் அறிக்கையை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்துள்ளது. 
இவ்வறிக்கை ராமஜென்ம பூமியைப் பற்றி மட்டுமல்ல, இந்திய வரலாற்றுக்கே சிறந்த செய்திகளை அளித்துள்ளது.

இங்கு பூமியை அகழ்வதற்கு முன்பாக நவீன ரேடர் கருவிகளைக் கொண்டு பூமிக்கடியில் ஏதாவது கட்டடங்கள் புதைந்து கிடக்கின்றனவா என்று ஆய்ந்து பார்த்துள்ளனர். இந்த ஆய்வில் சில தூண்களின் பகுதிகளும், கட்டடப் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. 
ரேடார் கருவியினால் காணப்பட்டவை உண்மையானவை தானா என்றும் மேலும் ஏதாவது உள்ளதா எனவும் பார்க்கத்தான் அகழாய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கைதான் இப்பொழுது சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இவ்வறிக்கையின் சுருக்கம் வருமாறு.


பாபர் மசூதிப் பகுதியில் மிகவும் ஆழமான பகுதியில் எவ்வளவு காலம் மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என அறிய இயற்கையான பகுதி உள்ள வரையில் ஆழ்ந்து பார்த்துள்ளனர். 
அதன்படி இங்கு 3,000 ஆண்டுகளாக மனிதன் தொடர்ந்து வாழ்ந்துள்ளான் எனக் குறிக்கும் தடயங்கள் கிடைத்துள்ளன.
‘கார்பன் 12’ எனப்படும் விஞ்ஞான முறையில், கிடைத்த பொருட்களின் காலம் கணக்கிடப் பட்டுள்ளது. அக்கால மனிதன் பயன்படுத்திய பானை ஓடுகள், சுடுமண் பாவைகள், மணிகள் முதலியன கிடைத்துள்ளன. 
சுடுமண் பாவைகளில் தாய் முலை தழுவிய சேய்களின் உருவங்கள் உள்ளன.
இவற்றில் முக்கியமாக குறிப்பிடத்தகுந்தது ஒரு மோதிரமாகும். இதில் அசோகன் காலத்து பிராம்மி எழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. 
இங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு மக்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றனர் என்னும் உண்மை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ayodhya-kushan-age-artifactsஇதையடுத்து சுங்கர் என்னும் அரச வமிசத்தவர்கள் ஆண்ட காலத் தடயங்கள் கிடைத்துள்ளன. அக்காலத்தில் வழங்கிய சுடுமண் பாவைகள், விலங்குகளின் உருவங்கள், பானை ஓடுகள் முதலியன கிடைத்துள்ளன. 
சுமார் இருநூறு ஆண்டுகள் சுங்கர் காலச் சான்றுகள் கிடைக்கின்றன.
சுங்கர் காலத்துக்குப்பின் இங்கு குஷானர் காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. 
300 ஆண்டுகள் இப்பண்பாடு நிலவிய சான்றுகள் இங்கு உள்ளன. அதாவது கிறிஸ்தவ சகாப்தம் தொடங்கி, முதல் மூன்று நூற்றாண்டுகள் இங்கு இந்தப் பண்பாடு நிலவியது. இதை மூன்றாவது காலகட்டம் என்று கூறலாம்.
இதில் பெரிய செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவரின் அடிப்பகுதி ஒன்றும் கிடைத்துள்ளது. 
ஏழு அடுக்குகள் வரை இச்சுவரின் செங்கல் வரிசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய கட்டடப் பகுதியாகும்.

ayodhya-comwall
இதையடுத்து குப்தர் காலச் சின்னங்கள் இங்கு தொடர்ந்து கிடைக்கின்றன. இவை சுமார் 300 ஆண்டுகள் அதாவது கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை வழங்கிய பொருட்கள் ஆகும்.
 இங்கு கிடைத்தவற்றில் சந்திரகுப்த அரசன் வெளியிட்ட செப்புக்காசு ஒன்று உள்ளது. இதில் ‘ஸ்ரீ சந்திர’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
குப்தர்களுக்குப் பின் ஆண்ட ராஜபுத்திரர்கள் காலம் வரை அடுத்த கட்டம் எனலாம். 
சுமார் 400 ஆண்டுகள் வரை நிலவிய, அதாவது கி.பி. 600 முதல் கி.பி. 1000 வரையில் மக்கள் வாழ்ந்த பகுதிகளும் கிடைத்துள்ளன.
இக்காலத்தைச் சார்ந்த வட்ட வடிவமான ஒரு கட்டடம் இங்கு கிடைத்துள்ளது. 
இது ஒரு கோயிலின் வடிவமாகவே  காணப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. செங்கற்களால் கட்டப்பட்ட சுவரில் வடபுறத்தில் அபிஷேக நீர் வழிந்தோட கோயில்களில் அமைக்கப் படும் பிரனாளம் என்னும் பகுதியும் தெளிவாக அடையாளம் காணப் பட்டுள்ளது.
இது ஒரு மாபெரும் கட்டடமாக மண்டபம் போல் காணப்படுகிறது. இரு அங்கணமாக  எழுப்பப்பட்டுள்ளது. 
முன்பிருந்த கட்டடத்தின் மேலேயே இந்தக் கட்டடமும் எழுப்பப்பட்டுள்ளது. இக்கட்டடம் வெகு காலம் பயன்பாட்டில் இருந்துள்ளது. இது 150 அடி நீளமும் 100 அடி அகலமுமாக கட்டப்பட்டுள்ளது.
இப்பெரும் கட்டடத்தின் மேல் தான் பிற்காலத்தில் பாபர் மசூதி எழுப்பப் பட்டிருக்கிறது. பாபர் மசூதியின் நேர் கீழே தான் தெற்கு வடக்காகவும்,  கிழக்கு மேற்காகவும் இப்பெரும் கட்டடச் சுவர்கள் காணப்படுகின்றன. 
இம்மண்டபப் பகுதியில் சீராக அமைக்கப்பட்ட ஐம்பது தூண்களின் அடிப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ayodhya-pillar-with-vishnu-imageஇவை செங்கல் தூண்களைப் பாவி திமிசு அடித்தும் அதன் மேல் மணற்கற்களை அடுக்கியும் அமைக்கப்பட்டுள்ளன.
 இத்தூண்கள் எந்த அமைப்பில் இக்கட்டடம் இருந்தது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. இக்கட்டடச் சுவர்களின் பகுதிகள் 150 அடி நீளத்திற்கு இன்னமும் எஞ்சியுள்ளன.
இக்கட்டடத்தின் நேர்மையத்தின் மேல்தான் பாபர் மசூதியை எழுப்பியுள்ளனர். இதன் கிழக்கில் செங்கல் பாவிய தரையில் வட்ட வடிவில் குடையப்பட்டுள்ளது. இங்கு ஏதோ முக்கியமான பொருள் பொருத்தி வைத்திருந்தனர் என ஊகிக்கமுடிகிறது. 
இங்கு பல மண் விளக்குகளும் கிடைத்துள்ளன. இவ்விளக்குகள் இக்கட்டடம் புழக்கத்தில் இருந்த காலத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. 
 இதன் மேல்தான் பாபர் மசூதியைக் கட்டியுள்ளார்.
பாபர் மசூதி கட்டிய காலத்தில் இருந்து செலிடான் என்ற வகை பீங்கான் பானை ஓடுகளும், மேல் புறத்தே பீங்கான் போன்ற வழவழப்பான மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன.
 இந்த நிலையில் மனித உடல்களைப் புதைத்ததால் எஞ்சியிருக்கும் மனித எலும்புகளும் கிடைக்கின்றன.
பாபர் மசூதி கட்டியபிறகு இங்கு ஜனநடமாட்டம் குறைந்து போன தடயங்கள் உள்ளன. இந்த அகழாய்வில் பல நிலைகளிலும் கிடைத்த கரித்துண்டுகளைக் கொண்டு கார்பன் 14 என்னும் விஞ்ஞான முறையில் காலத்தைக் கணித்துள்ளனர். 
மூவாயிரம் ஆண்டுகளுக்கும்  முன்பிருந்து, அதாவது கிறிஸ்தவ சகாப்தத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே அயோத்தியில் மக்கள் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது இதனால் நிரூபணமாகிறது.
பிற்கால கரித்துண்டுகள் அங்கு தொடர்ந்து வரலாற்றுக் காலங்களில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை திட்டவட்டமாகக் காட்டியுள்ளன. தொடக்க காலத்தைச் சேர்ந்த கட்டடங்கள் எதற்காக பயன்பட்டன எனக்கூற இயலாது.
ayodha-evidence-gallery

ayodhya-collapse-of-the-structure-11-300x206ஆனால் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தொடர்ந்து பாபர் மசூதி கட்டப்படும் வரை புழக்கத்தில் இருந்த பகுதி பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்கான கட்டிடம் என்பது தெளிவாகிறது. 

வட இந்திய கோயில்களின் அமைப்புடைய பகுதியும் இதில் அடங்கும். 
இப்பெரும் கட்டடப் பகுதியில் காணப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களின் அடிப்பகுதிகளும், வாயில் நிலைகளும், சிற்பங்களும், அதில் காணப்படும் அபிஷேக நீர் வழியும் பிரனாளமும், மண்விளக்குகளும் கோயில் வழிபாட்டை நினைவு கூர்கின்றன. 
இவை பாபர் மசூதியின் நேர் கீழே காணப்படுகின்றன.
 இக்கட்டத்தின் மேல் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதும் வெளிப்படை. இதுதான் மத்திய தொல்லியல் துறை அளித்துள்ள அறிக்கையாகும்.
இந்த அகழாய்வு முற்றிலும் உயர்நீதிமன்ற அதிகாரியின் நேர்முகப் பார்வையில் நடைபெற்ற ஒன்றாகும். மேலும் இருதரப்பு பிரதிநிதிகளும் அகழாய்வின்போது உடன் இருந்துள்ளனர். இங்கு கிடைத்த பொருள்களைப் பற்றியோ, அன்றி பாபர் மசூதியின் கீழே கட்டடம் இருந்துள்ளது என்பதைப் பற்றியோ இனி ஐயம் எதுவும் இருக்க முடியாது.
Art Gallery 165டாக்டர் ஆர்.நாகசாமி (1930-)
தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர்.  தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், கரூர், கொற்கை போன்ற இடங்களில் விரிவான அகழ்வாராய்ச்சிகள் நடத்தியவர்.  தமிழகத்தின் முக்கியமான அருங்காட்சியகங்களை உருவாக்கி, வடிவமைத்தவர்.  பிரபல லண்டன் நடராஜர் சிலை வழக்கில் இந்திய அரசு சார்பாக வாதாடி பத்தூர் நடராஜர் திருவுருவத்தை மீட்டு வந்தவர்.  வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி, கலை, இலக்கியம், சமயம், கோயில் ஆகமங்கள் ஆகிய பல துறைகளிலும் புலமை கொண்டவர். இவற்றின் அணுகுமுறைகளை இணைத்து ஆய்வுகள் செய்தவர்.
=========================================================================================
ன்று,

டிசம்பர்-06.


  • அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது(1865)

  • உலகில் முதல் முறையாக லண்டனில் வாடகை வாகன சேவை துவங்கியது(1897)

  • பின்லாந்து விடுதலை தினம்(1917)

  • இந்திய அரசியலமைப்பை இயற்றிய பி.ஆர்.அம்பேத்கார் இறந்த தினம்(1956)
==========================================================================================

மத நல்லிணக்கம் இடிப்பு -
25 ஆண்டுகள் நிறைவு.
1. நூற்றாண்டுப் புகைச்சல்
பாபரின் ஆணைப்படி அயோத்தியின் கவர்னர் மீர் பகியால் 1528-ல் பாபர் மசூதி கட்டப்பட்டதாக அங்கு பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. அதற்கு அடுத்த ஆண்டே அங்கு இந்து - முஸ்லிம் உரசல்கள் தொடங்கின. ஒருவகையில் இது பல நூற்றாண்டுப் புகைச்சல்!
               

2. வேலி வைத்த பிரிட்டிஷ் அரசு
பிரிட்டிஷ் நிர்வாக அதிகாரிகள் 1859-ல் மசூதியின் உள்ளே முஸ்லிம்கள் வழிபாடு நடத்தவும் வெளியே இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதித்தனர். இரண்டு பகுதிகளுக்கும் இடையே வேலி அமைத்தனர்.
3. அனுமதி மறுத்தது நீதிமன்றம்
ராமருக்குக் கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று மஹந்த் ரகுபீர் தாஸ் என்பவர் தொடுத்த வழக்கை 1885-ல் தள்ளுபடிசெய்தது பைஸாபாத் மாவட்ட நீதிமன்றம்.
4. மூடப்பட்டது பள்ளிவாசல்
1949 டிசம்பர் 22-ல் பாபர் மசூதியின் உள்ளே ராமர் சிலைகள் வைக்கப்பட்டன. அதற்கு அடுத்த நாளே இதையே காரணமாக்கி, மாவட்ட நீதிபதி கே.கே.நாயர் அந்த இடத்தைச் சர்ச்சைக்குரியதாக அறிவித்துப் பள்ளிவாசலை மூடச் சொல்லி உத்தரவிட்டார்.
5. சிலை வழிபாட்டுக்கு அனுமதியில்லை
1950, ஜனவரி 18-ல் கோபால் சிங் விஷாரத் என்பவர் ராமர் சிலைகளை வழிபட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
6. ராமருக்குக் கோயில்?
சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டப்போவதாக விஸ்வ இந்து பரிஷத் 1984-ல் அறிவித்தது.
7. இந்துக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் நீதிபதி
1986-ல் பூட்டிக் கிடந்த இடத்தைத் திறந்துவிட வேண்டும், அங்கு வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற இந்துக்களின் கோரிக்கையை மாவட்ட நீதிபதி ஏற்றுக்கொண்டார். அதற்கு எதிர்வினையாக, முஸ்லிம்கள், பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவைத் தொடங்கினார்கள்.
8. தேர்தல் அஸ்திரம்
சர்ச்சைக்குரிய அந்த இடத்துக்கு அருகே ராமர் கோயில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் 1989-ல் அடிக்கல் நாட்டியது. அந்த ஆண்டு நடந்த உ.பி. தேர்தலில் பாஜக பாபர் மசூதி பிரச்சினையைக் கையிலெடுக்கிறது.
9. தொடங்கியது ரத யாத்திரை
1990 செப்டம்பரில் பாஜக தலைவர் எல்.கே.அத்வானி நாடு தழுவிய அளவில் ரத யாத்திரையை மீண்டும் தொடங்கினார்.
10. ஒத்திகை
1990-ல் மசூதியின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டன. அப்போதைய பிரதமர் சந்திரசேகர் மேற்கொண்ட சமரச முயற்சிகள் தோல்வியடைந்தன.
11. கையில் வந்தது அதிகாரம்
1991-ல் உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது. பாபர் மசூதி விவகாரம் கொதிநிலையை அடைந்தது.
12. தகர்ந்தது மத நல்லிணக்கம்
பாஜக, விஸ்வ இந்து பரிஷத், சிவசேனா எனப் பல அமைப்புகள் பாபர் மசூதி விவகாரத்தில் ஒன்றுசேர்ந்தன. 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதையொட்டி நடந்த கலவரங்களில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

13. விசாரணைக் குழு
மசூதி இடிப்பு தொடர்பாக விசாரிக்க 1992 டிசம்பர் 16-ல் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.லிபர்ஹான் தலைமையிலான ஆணையத்தை அமைத்தது நரசிம்ம ராவ் அரசு.
14. தடைபட்டது குற்ற வழக்கு
மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை லக்னோ நகர சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தன்னைக் கலந்தாலோசிக்காமல் உத்தர பிரதேச மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பாணையைச் செல்லாது என்று 2001 பிப்ரவரி 12-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்தது.
15. தூண்டிவிட்டால் குற்றம் இல்லை?
2001 மே 4-ல், உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு, இந்த வழக்கு விசாரணையிலிருந்து அத்வானி மற்றும் அவருடன் சேர்ந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 21 பேரை விலக்கி, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதான விசாரணையை மட்டும் தொடரலாம் என்றது.
16. கிடப்பில் போடப்பட்ட விசாரணை
2001 ஜூன் 16-ல், உயர் நீதிமன்றத்தைக் கலந்தாலோசித்து விசாரணைக்கான ஆணையைப் பிறப்பிக்கும்படி, உத்தர பிரதேச அரசை சிபிஐ கேட்டுக்கொண்டது. ஒன்றே கால் ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, மாநில அரசு இதை 2002 செப்டம்பர் 28-ல் நிராகரித்தது. 2010 மே 22-ல் இந்த உத்தரவுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மறுபரிசீலனை கோரும் மனு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 9 ஆண்டுகள் விசாரிக்கப்படாமலேயே இருந்து, பின்னர் நிராகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ நீண்ட காலத் தாமதத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவைப் பரிசீலிக்க உச்ச நீதிமன்றமும் கணிசமான காலத்தை எடுத்துக்கொண்டது.
17. தீவிரவாதத் தாக்குதல்
2003 ஆகஸ்ட்டில், சர்ச்சைக்குரிய இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

18. நீதிமன்ற இழுபறி
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அங்கு கூடியிருந்தவர்களைத் தூண்டிவிடும் வகையில் எல்.கே.அத்வானி பேசியதற்காகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து 2003 செப்.19-ல் அவரை ரேபரேலி தனி நீதிமன்றம் விடுவித்தது. அப்போது அவர் துணை பிரதமர். அத்வானியை விடுவித்து ரேபரேலி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, 2005 ஜூலை 6-ல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரத்துசெய்தார்.
19. திட்டமிட்டு நடந்த செயல்
எம்.எஸ்.லிபர்ஹான் குழு, 16 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்தம் 399 அமர்வுகளுக்குப் பின்னர், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 1,029 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஜூன் 30, 2009-ல் அளித்தது. அவ்வறிக்கையின்படி, பாபர் மசூதி இடிக்கப்பட்டது தன்னிச்சையானது அல்ல, திட்டமிடப்பட்டதே என்று தெளிவானது. வாஜ்பாய், அத்வானி, சுதர்ஸன், கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 68 பேர் குற்றவாளிகள் எனவும் அந்தக் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியது.
20. மூவருக்கும் ஒரு பங்கு
சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு உரிமையுள்ளது என்று 60 ஆண்டுகள் நடந்த வழக்கில் 2010, செப்டம்பர் 30-ல் இடத்தை மூன்றாகப் பிரித்து முஸ்லிம்கள், இந்துக்கள், நிர்மோகி அகாரா ஆகிய மூன்று பிரிவினருக்கும் ஒவ்வொரு பகுதியைப் பிரித்து வழங்க உத்தரவிட்டது அலகாபாத் உயர் நீதிமன்றம். முன்பு, மசூதியாக இருந்த பகுதி இந்துக்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
21. தீர்ப்புக்குத் தடை
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் செய்த மேல்முறையீட்டின்படி 2010-ம் ஆண்டின் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதித்து 2011-ல் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
22. தொடரும் சர்ச்சை
2015, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்து நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தைத் தொடங்கியது. டிசம்பர் மாதத்தில், இரண்டு டிரக்குகளில் செங்கல் ஏற்றப்பட்ட வாகனம் அங்கு சென்றது. ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகியான மகந்த் நிருத்திய கோபால் தாஸ், ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறினார். ஆனால், அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தர பிரதேச அரசு, கல் ஏற்றப்பட்ட வாகனங்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் நுழைவதற்கு அனுமதிக்கவில்லை.
23. அத்வானியின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி
2017 மார்ச் 6-ல் நீதிபதிகள் பி.சி.கோஷ், நாரிமன் அடங்கிய அமர்வுக்கு முன்பு பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அத்வானிக்கு எதிரான வழக்கைக் கைவிடக் கூடாது, தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, இந்த வழக்கு வேகம் எடுத்துள்ளது. அத்வானி குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு மீண்டும் விரைவுபடுத்தப்பட்டதால் அதோடு அத்வானியின் அரசியல் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
24. பேச்சுவார்த்தையில் முடித்துக்கொள்ளுங்கள்...
2017 மார்ச் 21, பாபர் மசூதி விவகாரம் தரப்பினர்களிடையே எளிதில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடிய ஒரு விஷயம். எனவே, நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தையின் மூலமாக சமரசத் தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம். ஆகஸ்ட் 11 அன்று கூடிய உச்ச நீதிமன்ற அமர்வு, விசாரணையை 2017, டிசம்பர் 5-க்குத் தள்ளிவைத்தது.
25. இரண்டு ஆண்டுகளுக்குள் முடியுமா?
2017, ஏப்ரல் 19-ல் பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “அறிவிப்பாணை குறைபாட்டைச் சரிசெய்ய மாநில அரசு தவறிவிட்டது, அதை எதிர்த்து சிபிஐயும் வழக்காடவில்லை” என்பதைச் சுட்டிக்காட்டியது. அத்வானி மற்றும் ஏழு பேர் மீதான வழக்கை ரேபரேலியிலிருந்து லக்னோ நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதோடு, இரண்டாண்டு காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் இறுதிக்கெடு விதித்துள்ளது.
                                                                                                                                                                   - தொகுப்பு: செல்வ புவியரசன்
ன்றி:தமிழ் இந்து 
          பாஜக,அதிமுகவினருக்கும்  இடதுசாரிகளுக்கும் உள்ள நிர்வாக வித்தியாசம் இதுதான்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?