"காசு" கொடு கடவுளைக் கொண்டாடு?

கோவையில் ஈஷா யோகாமையம் சார்பில்அமைக்கப்பட்டிருக்கும் ஆதியோகி சிலை முன்பு மகாசிவராத்திரி விழா என்ற பெயரில் ஜக்கி வாசுதேவின் கமர்ஷியல் சிவராத்திரி படுஜோராக நடைபெற்றது. 

கோவையில் பிப்ரவரி 13 அன்றுஇரவு மகாசிவராத்திரி என்கிற பெயரில் ஈஷா யோகா மையத்தின் சார்பில்வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் மிகப் பிரம்மாண்டமாக விழா ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்தவர்களும் இந்தவிழாவில் பங்கெடுத்தனர். 
தமிழக ஆளுநர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இவ்விழாவில் பங்கெடுத்தனர்.
ஈஷா மையத்தின் சார்பில் நிறுவப்பட்ட ஆதியோகி சிலைக்கு முன்பாக சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் சிவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
இளம்பெண்களை சந்நியாசிகளாக
 கட்டாயப்படுத்தி மாற்றும்
இவன் மகளுக்கு மட்டும் 50கோடிகள் செலவில் திருமணம்.


இதில் சுமார் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதற்கு தகுந்தாற்போல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு விழாவிற்கு வந்தவர்கள் அமர வைக்கப்பட்டனர். 
குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் பயிற்சிமையங்களில் கட்டணங்கள் வசூலித்து தனித்தனி வாகனங்கள் மூலம்விழாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.ஆதியோகி சிலைக்கு வெகு தொலைவில் அமைக்கப்பட்ட தடுப்பில் அமர்வதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்பட்டது. 

மேலும் முன்னேசெல்ல செல்ல கட்டணம் எகிறிக் கொண்டே செல்லும் வகையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படிஆதியோகி சிலை முன்பு, ஐக்கியின் பின்னால் அமர்வதற்கு ரூ.2 லட்சம் வரை வசூலிக்கப்பட்டிருக்கிறது.சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துகிறோம் என்கிற பெயரில் விழா மேடைகளை சுற்றி கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. 
இந்தக் கடைகள் அமைப்பதற்காக குழந்தைசாமி கவுண்டர் என்பவரது 5 ஏக்கர் விவசாய நிலம் முழுவதுமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதுகுறித்து அவர் கூறுகையில், சென்ற ஆண்டு பிரதமர் மோடி வருகை புரிந்ததையொட்டி இங்கு கடை அமைப்பதற்கான என்னுடைய விவசாய நிலத்தை கேட்டனர். இதற்காக ஊர் பெரியவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்என்னிடம் பேசினர். 
நானும் சரி எனஒப்புக்கொண்டு அவர்களுக்கு என் னுடைய நிலத்தை கொடுத்தேன். அப்போது, நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தேன். இவர்கள் கேட்ட காரணத்திற்காக அறுவடை காலத்திற்கு ஒருவார காலத்திற்கு முன்பாகவே அறுவடை செய்து விட்டு நிலத்தை அவர்களிடம் கொடுத்தேன். 
இந்த வருடமும் விழா நடத்துவதற்கான நிலம் வேண்டும் என்று என்னிடம்கேட்டனர். இதனால் அறுவடைக்கு நாட்களுக்கு முன்னரே அறுவடையை மேற்கொள்ள வேண்டியதாகிற்று. 
இந்த இடத்திற்காக வாடகை ஏதும் தரவில்லை என்றார். 


அதேநேரம், இந்த ஐந்து ஏக்கரில்நுழைவு வாயில் முதல் மேடையின் அருகே வரை சுமார் 600க்கும் மேற்பட்ட கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தன. 

இதில்நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அதாவது பார்வையாளர் கட்டணமாக ரூ.500 கொடுத்து அமர்ந்திருப்பவர்கள் அருகில் கடை அமைக்கஒரு நாளைக்கு ரூ 8 ஆயிரம் வாடகை.இதே போல் ஆதியோகி சிலை அருகே அதாவது விஐபி பகுதி நெருங்க நெருங்க வாடகைக் கட்டணமும் கூடும். 
இப்படி ரூ.8 ஆயிரம் முதல்ரூ.1 லட்சம் வரை வாடகை வசூலிக்கப்பட்டதாக அங்கு கடை அமைத்தவர்கள் தெரிவித்தனர். 

இந்த கடைகளிலும் ஆர்.எஸ்.எஸ், பாஜக, இந்துமுன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்களுக்கே முன்னுரிமையாம். மேலும், விழா மேடை மற்றும் பார்வையாளர்கள் அமர்ந்த இடங்களை சுற்றிலும் சுமார் 10க்கும்மேற்பட்ட இடங்களில் அன்னதானம்வழங்குவதற்காக நன்கொடை பெறப்படும் என குடில் அமைத்து நன்கொடை வசூலும் நடைபெற்றது. 
இந்த விழாவில் இடையிடையே வடமாநிலங்களைச் சேர்ந்த பிரபல பாடகர்கள் மட்டும் தங்களது இசை கச்சேரியை நடத்தினர். 
இதில் வடமாநிலத்திலிருந்து வந்திருந்த இளைஞர்கள் மெய்மறந்து ஆடிக்கொண்டிருந்தனர்.
தமிழ்,தமிழிசைக்கு வேலையே இல்லாமல்  காணாமல் போயிற்று.

இரவு 11.45 மணியளவில் மீண்டும் விழா மேடைக்கு வந்த ஜக்கி, விழாவிற்கு வந்திருந்தவர்களை ஒருநிலைக்கு கொண்டு வருவதற்காக ஓம் நமச்சிவாய என்ற முழக்கத்தை சுமார் அரை மணி நேரம் மெல்லிய இசையோடு பாடிக்கொண்டே இருந்தார். 
கிட்டத்தட்ட விழாவில் கலந்து கொண்டவர்கள் அந்த மனநிலைக்கு வந்தவுடன், உடுக்கைசத்தம் வேகமாக ஒலித்து ஓம் நமச்சிவாய என்ற முழக்கத்தை இன்னும் வேகமாக கூறிக்கொண்டே சென் றார். ஒரே வார்த்தையை திரும்பத் திரும்பக் கூற வைத்து விழாவிற்கு வந்தவர்கள் மெய்மறந்த நிலைக்குசெல்லும்போது அவர்கள் சிவனுக்குஅடிபணிந்து விட்டதாக ஜக்கி மேடையில் பேச துவங்கினார். 

மேலும் நிகழ்ச்சியின் போது பேசிய ஜக்கி வாசுதேவ், தனது கமர்ஷியல் வியாபாரத்தை கடவுளோடு இணைத்து விற்பனைக்கான விளம்பரத்தை செய்தார். ‘’மகாசிவராத்தியன்று ஈஷா யோகா மையத்தில் அமைந்திருக்கும் ஆதியோகிசிலை முன்பு இரவில் விழித்திருந்தால், 365 நாட்களும் யோகாபயிற்சியில் ஈடுபடுவோருக்கு சமமான பலன், மகாசிவராத்திரியன்று ஓரே நாளில் கிடைத்து விடும்’’ எனஓரே போடாக போட்டார். 
அதற்குமுன்னால் அமர்ந்திருந்த அமைச்சர்செல்லூர்ராஜூ முதல் எஸ்.பி.வேலுமணி, ஆளுநர் வரை கோவில் மாடுகள் போல் தலையசைத்தனர்.
சன்னியாசினிகளாக்கப்படும் பிஞ்சுகள்


ஆதியோகி வளாகத்தை வலம்வரும் ஆதியோகி பிரதட்சிணம் என்னும் முறை குறித்தும் அறிவிக்கப்பட்டது. 
ஒரு ஆண்டிற்குள் ஒருவர் 1, 3, 7, 21 அல்லது 112 என்றஅளவில் சுற்றி வந்தால், நோய்களில்இருந்து விடுதலை பெறலாம். தடைகள் அகலுதல் போன்ற பல்வேறு பயன்களும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான பூஜை பரிகார கட்டணம் அப்போது அறிவிக்கப்படவில்லை. அதே போல் 2017ல்மோடியால் ஆதியோகி சிலை திறக்கப்பட்ட போது 1 லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சங்கள் கொண்டமாலை ஆதியோகி சிலையில் மாலையாக அணிவிக்கப்பட்டிருந்தது. 
அந்த மாலையில் இருந்த ருத்ராட்சங்கள் அங்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என அறிவித்து அதற்கு ஒருபுறம் பக்தர்களைஅணிவகுத்து நிற்க வைத்துக் கொண்டிருந்தனர். 
இந்த மகாசிவராத்திரிக்கு அடுத்த பிராண்ட் அம்பாசிடர் போன்று அவ்வப்போது துணை குடியரசுத்தலைவர் இந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த காட்சிகள் எல்சிடி ஸ்கிரீனில் ஒளிபரப்பப்பட்டது.

மகாசிவராத்திரி விழாவை ஒளிபரப்பும் ஊடகங்களுக்கு பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது ஊடகவியலாளர்கள் எந்த வீடியோக்களையும் எடுக்கக் கூடாது.
எல்லாவற்றையும் ஈஷா யோகாமையமே எடுத்து நேரடியாக சேனல்களுக்கு வழங்கி விடுவார்கள். அதாவது செய்தி ஊடக தலைமையில் பேசி இந்த “ஏற்பாடுகள்’’ செய்யப் பட்டிருக்கிறது. 
கோவையில் இருக்கும் ஊடகவியலாளர்கள் சிவராத்திரிவிழாவிற்கு வரவிரும்பினால் வரலாம் என்ற அளவில் ஏற்பாடுகள் இருந்தன. 
அதே நேரம் அச்சு ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு தனித்தனியாக வாகன ஏற்பாடும்செய்யப்பட்டிருந்தது. 

குடும்பத்தினருக்கும் தனியாக வாகன ஏற்பாடு ஈஷா யோகா மையத்தில் இருந்து செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆனந்த விகடன் உட்பட்ட சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது
மேலும், இந்த விழாவில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து நாட்டுநலப்பணி திட்டத்தில் உள்ள மாணவர்களை அழைத்து வந்து ஈஷா மையத்தின் தொண்டர்களாக மாற்றிவைத்திருந்தனர்.
பாதரச லிங்க குளத்தில் குளித்ததால்
 பாவம் போகும்.போக்க (குளிக்க)1000 ரூபாய் மட்டும்.

பாதரசம் உடலுக்கு கேடு விளைவிக்கும் என மத்திய அரசு
விற்பனைக்கு கட்டுப்பாடு கொண்டுவந்துள்ளது.


ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டுஇங்கு நடைபெற்ற மகாசிவராத்திரியின் போது சுற்றுச்சூழலை பாதிக்கும்வகையில் ஒலி மாசு ஏற்படுத்தப் பட்டது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. 

அதுகுறித்தவழக்கு தற்போதும் நிலுவையில் இருக்கிறது. ஆனால் நீதிமன்றத்தையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல் மிகப் பிரம்மாண்டமான அளவில் ஒலி, ஒளி ஏற்பாடுகள், மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே கடந்தாண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பசுமை தீர்ப்பாயத்தில் அளித்திருந்த மனுவில் “ஈஷா யோகா மையத்தில்மகாசிவராத்திரி விழா நடைபெற்ற2017 பிப்ரவரி 24 ஆம் தேதியன்று8 இடங்களில் ஒலி அளவு கணக்கிடப் பட்டது.

 ஈஷா அமைந்துள்ள பகுதிவரையறுக்கப்படாததால், அங்குகுடியிருப்பு பகுதிக்கு வரையறுக்கப்பட்ட ஒலியின் அளவை கருத்தில் கொள்ளலாம்.
 குடியிருப்பு பகுதியில்ஒலியின் அளவு பகல் நேரத்தில் 55 டெசிபலும், இரவு நேரத்தில் 45 டெசிபலும் இருக்க வேண்டும்.மகாசிவராத்திரி விழா இரவில்கொண்டாடப்பட்டதால் அங்கு 55 டெசிபல் அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால், மஹாசிவராத்திரி நிகழ்வு நடைபெற்றபோது 8 இடங்களில் எடுக்கப்பட்ட அளவுகளும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தது. 

ஒலி மாசு சட்டத்தில் உள்ள விதிகளை காவல்துறையினர் தான் அமல்படுத்த வேண்டும். எனவே, இதுகுறித்து கோவை காவல் கண்காணிப்பாளருக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் கடந்தஏப்ரல் 7 ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளது’’ என்று தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், ஆட்சியர்கள் கைகட்டி ஜக்கி வாசுதேவ்விற்கு பாதுகாப்பு அளித்து, மகாசிவராத்திரி ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். 

எல்லா அத்துமீறல்களும் ஒருங்கே மகாசிவராத்திரி என்ற பெயரில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. சட்டமும் நீதியும் அங்கே சந்தி சிரித்தது.
 இந்த போலி சாமியார் ஜக்கி பற்றி பல குற்றசாட்டுகள்,புகார்கள் வந்த போதும் பிரதமர்,ஆளுநர்,முதல்வர் என ஆள்வோர்கள் இவரை ஆதரிப்பதால் அதிகாரிகளால் இவன் போன்ற போலிகள்,கடவுள் பெயரை சொல்லி கல்லா கட்டும் அயோக்கியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.எடுப்பதுமில்லை.
அதுவரை இவனைப் போன்ற நித்தியானந்தா,பாபா ராமதேவ் போன்றோர் ஆட்டத்தை வேறு வழியின்றி சகிக்க வேண்டியுள்ளது.
மிஸ்ட் கால் மூலம் நதிகளை இணைப்பதாக இவன் கிளம்பினான் ஆனால் இப்போது அதைப்பற்றி வாயை திறப்பதே இல்லை.
இன்னுமா இந்த ஊர் இவனை நம்புகிறது.? 
                                                                                                                                                                               தீக்கதிரில்   ஆ.ஜீவானந்தம்
=====================================================================================
ன்று,
பிப்ரவரி-15.


  • செர்பியா தேசிய தினம்
  • அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் நகரம் அமைக்கப்பட்டது(1764)
  • ரஷ்யாவில் அதிபர் பதவி ஏற்படுத்தப்பட்டது(1994)
  • யூட்யூப்  ஆரம்பிக்கப்பட்டது(2005)
======================================================================================
முகநூல் அறிவோம்.

இன்றைய உலகின் டிஜிட்டல் சமூக சதுக்கமாக பேஸ்புக் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாகவும், மற்றவர்கள் அனைத்து வயது நிலைகளிலும் உள்ளனர். 
கம்ப்யூட்டர் பயனாளர்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தளமாக facebook.com இடம் பிடித்துள்ளது. இன்னொரு பக்கத்தில், பேஸ்புக், இந்த உலகின் மிக உயர்ந்த தொழில் நுட்ப திறன் கொண்ட வல்லுநர்களை இழுக்கும் காந்தமாகவும் மாறி வருகிறது. 

ஒவ்வொரு பயனாளரும் தங்களுக்கேற்ற வகையில் மாற்றி அமைத்துப் பயன்படுத்த வழி தருவதிலும், நகாசு வேலைகளை அமைத்துக் கொள்ள அனுமதி அளிப்பதிலும், தனிப்பட்ட முறையில் இயங்கும் செயலிகளைக் கொண்டிருப்பதிலும், ஒரு தனித்துவம் மிக்க பொறியியல் அறிவின் அடையாளமாக பேஸ்புக் வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. 

பேஸ்புக் இணைய தளத்தில், அதன் பயனாளர்கள் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அவை அனைத்தும் அவர்களுக்குத் தெரியுமா என்றால், இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டும். இப்படிக் கூறுகையில், பேஸ்புக் இணைய தளத்துடன் இணைந்து செயலாற்றக் கூடிய தர்ட் பார்ட்டி செயலிகளை இங்கு குறிப்பிடவில்லை. அல்லது பிரவுசர் வழியாக இணைந்து செயலாற்றும் செயலிகளை இங்கு பட்டியலிடவில்லை. 


தெரியாத செயல்பாடுகள் என்று சொல்லப்படுவது, பேஸ்புக் இணையதளத்திலேயே அமைந்து, அனைவரும் இயக்கும் வகையில் தரப்படும் செயல்பாடுகள் தாம். இவற்றைத்தாம் பெரும்பாலானவர்கள் அறியாமல் இருக்கின்றனர். அவற்றை இங்கு ஆய்வு செய்து பார்க்கலாம். தெரிந்த பின்னர், பயன்படுத்தி மகிழ்ச்சி அடைந்து பேஸ்புக் சூப்பர் ஸ்டாராக மாறலாம்.
நீங்கள் அறியாத உங்களின் செய்திப் பெட்டி (Hidden Message Box) உங்களுக்கு பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஒன்றும் அதற்கான தளமும் உள்ளதா? 

அதில் நீங்கள் விரும்பும் தகவல்களைப் பதிவு செய்கிறீர்கள். போட்டோக்களைப் பதிந்துவைத்து அழகு பார்க்கிறீர்கள். 
ஓரமாக அரட்டைக் கட்டத்தில் (Chat Box) நண்பர்கள் தென்பட்டால், அவர்களுடன் அரட்டை அடிக்கிறீர்கள். போட்டோ, பைல்களை அனுப்புகிறீர்கள். சில வேளைகளில், உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அனுப்பும் மெசேஜ்களை, உங்கள் மெசேஜ் பெட்டி திறந்து படிக்கிறீர்கள். இந்த வசதியை அனைவரும் பயன்படுத்துவதில்லை.
 இருப்பினும், இது தவிர, இன்னும் இரு மறைத்துவைக்கப்பட்ட உங்களுக்கான மெசேஜ் பாக்ஸ் இருப்பது தெரியுமா? 
இந்த செய்திப் பெட்டியைப் பெற, உங்கள் பக்கத்தில், மேலாக உள்ள "messages" என்னும் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். அல்லது இடது பக்கமாக "messages" என்னும் லிங்க்கின் மீது கிளிக் செய்திடுங்கள். இந்த இன்பாக்ஸைத் திறக்கும் போது, மாறா நிலையில், இதன் "Recent" டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். இதன் வலது பக்கத்தில் "Message Request" என்ற டேப் இருக்கும். இதனைக் கிளிக் செய்தால், "See filtered requests” என்ற லிங்க் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், உங்கள் நண்பர்களிடமிருந்தும், நீங்கள் அறியாத யார் யாரிடமிருந்தோ பல செய்திகள் இருக்கும். இவர்களுக்கு மறுமொழி அளிக்கலாம். 
அல்லது அப்படியே விட்டுவிடலாம். அல்லது நீக்கிவிடலாம். முதலில், இது போன்ற அறியாதவர்களிடமிருந்து வரும் செய்திகளைப் படிக்கும் இன்பாக்ஸ் திறப்பதற்கு, 2012ல், ஒரு டாலர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர், இது உயர்த்தப்பட்டு, 100 டாலர் (மார்க் உட்பட அனைவருக்கும்) வரை சென்றது. பின்னர், இது இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சில வேளைகளில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் பேஜில், வேறு யாரோ ஒருவர் நுழைந்து பார்க்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. உங்கள் பாஸ்வேர்டைத் தெரிந்த ஒருவர் அல்லது நீங்கள் உங்கள் நண்பர் வீட்டில் பேஸ்புக் பார்த்துவிட்டு, கணக்கை மூடாமல் வந்த பக்கத்தைப் பார்த்த ஒருவர் என அது யார் வேண்டுமானாலும் இருக்கலாம். 

அவரை நீங்கள் யாரெனத் தெரிந்து கொள்ள வேண்டுமா? முதலில் உங்கள் settings page (https://www.facebook.com/settings?tab=account) செல்லவும். அங்கே, Security போல்டரில், "Where You're Logged In" என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு, நீங்கள் பேஸ்புக் தளத்தை அணுகிய விபரங்கள் அனைத்தும் காட்டப்படும். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் எனப் பிரிக்கப்பட்டு இந்த பட்டியல் இருக்கும். 
இதில் நீங்கள் பயன்படுத்தாத சாதனம், பிரவுசர் மற்றும் நாள் இருப்பின், அதன் அருகே உள்ள End All Activity என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில் பேஸ்புக் பார்த்துவிட்டு அதிலிருந்து முறையாக முடித்து வைத்து வெளியேறாமல் இருந்தால், அதுவும் காட்டப்படும். அதனை இங்கிருந்து முடித்துவிடலாம்.

கம்ப்யூட்டர் வழியாக நட்பு தொடர்புகளில், நாம் நம் உணர்வுகளைத் தெரிவிக்க, அதற்கென அமைந்த சிறிய படங்களை இணைப்பது வழக்கமாக உள்ளது. 

இவற்றை எமோட்டிகான் (emotion+icon) என அழைக்கிறோம். பேஸ்புக்கில், பல எமோட்டிகான்கள் உள்ளன. ஆனால், அவை நாம் எளிதாக அறியும் வகையில் இல்லை. நாம் பொதுவாகப் பயன்படுத்துவது :)/ :D/ ^_^ ஆகியவற்றையே. ஆனால், இன்னும் சில உள்ளன. அவை: (y) = வெற்றி எனப்படும் 'தம்ப்ஸ் அப்” அடையாளம். (^^^) =பெரிய வெள்ளை ஷார்க் மீன், :|] = ரோபோ என அழைக்கப்படும் இயந்திர மனிதன், <(") = பெங்குவின் பறவை. 
இவற்றை நீங்கள் வால் போஸ்ட், சேட், நம் கமெண்ட் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். இவற்றை டைப் செய்தவுடனேயே, அவை அந்த சிறிய ஐகானாக மாறும். எடுத்துக் காட்டாக, பெங்குவின் பறவைக்கானதை டைப் செய்தால், உடனே அது சிறிய பெங்குவின் பறவையாக மாறும். 
(உடனே பேஸ்புக்கில் டைப் செய்து பாருங்கள்.)

பேஸ்புக் மெசஞ்சர் விண்டோவை நீங்கள் திறந்தால், அதில் சிறிய கியர் ஐகான், வலது மேல்புறம் இருப்பதனைப் பார்க்கலாம். இதில் தட்டினால், அதில் "Add Files...", என்று ஓர் ஆப்ஷன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், உடனே கம்ப்யூட்டரிலிருந்து பைலைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம். இந்த ஆப்ஷன் சேட் விண்டோவிலும் கிடைக்கும். 

இதனைப் பெறுபவர், இதில் காட்டப்படும் லிங்க்கில் கிளிக் செய்து பைலைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் நாம் காணும், அல்லது அமைக்கும் ஆங்கில வாக்கியங்கள் அனைத்தும் தலைகீழாக இருந்தால் எப்படி இருக்கும்? 

இந்த கற்பனைக்கான விடையை, பேஸ்புக் தளத்தினை வடிவமைத்தவர்கள், ஓர் ”ஈஸ்டர் எக்” ஆக அமைத்துள்ளனர். இதனைக் காண்பதற்கு, பேஸ்புக்கில் உங்கள் அக்கவுண்ட் தளத்தில் மொழி அமைப்பினை மாற்றி அமைக்க வேண்டும். 
உங்கள் தளத்தில், General Account Settings > Language எனச் செல்லவும். அங்கு ஏற்கனவே English (US) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால் கிடைக்கும் பட்டியலில், English upside down என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்துவிட்டால், உங்கள் பக்கத்தில் உள்ள ஆங்கில சொற்கள் அனைத்தும் தலைகீழாகத் தெரியும். 
ஒன்றை கவனத்தில் கொள்ளவும். இதனை எளிதாகப் படிக்க முடியாமல் எரிச்சல் அடைவோம். மாற்றிவிட்ட பின்னர், மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கையில், மெனுக்களில் உள்ள சொற்கள் அனைத்தும் தலைகீழாகத் தெரியும். 
கவனமாக அதனைக் கண்டு, மீண்டும் English US என்பதைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். இல்லையேல், நீங்கள் கம்ப்யூட்டர் முன்னால் தலைகீழாக சிரசாசனம் செய்து பேஸ்புக் தளத்தினைப் படிக்க வேண்டும். 

பேஸ்புக் தளத்தில் நம் கருத்துகளைப் பதிவிடுகிறோம். சில படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வெளியிடுகிறோம். சில வேளைகளில், மிகப் பெரிய உரைக்கோவை ஒன்றை பதிவிட விரும்பினால், பேஸ்புக், அதற்கான சிறிய வலைமனை ஒன்றை அமைக்க வசதி தருகிறது. இதற்கு எச்.டி.எம்.எல். தெரிந்திருக்க வேண்டியதில்லை. 

facebook.com/notes என்னும் முகவரி உள்ள பக்கத்திற்குச் செல்லுங்கள். இங்கு உங்களுடன் நட்பாயிருப்பவர்களின் குறிப்புகள் இருக்கும். 
இதில் உங்களுடையதையும் இணைக்க விரும்பினால், மேல் வலது மூலையில் உள்ள "+ Write a Note" என்பதில் கிளிக் செய்திடவும். உடன் புதிய வலைமனைப் பக்கம் ஒன்று கிடைக்கும். இதன் மேலாக, படத்தை வைக்க இடம் உண்டு. 
அடுத்து, உங்கள் கருத்து குறித்த தலைப்பினை அமைக்கலாம். அடுத்து உங்கள் கருத்தை விளக்கும் டெக்ஸ்ட்டை ஒட்டலாம். அல்லது எழுதலாம். ஒரே முயற்சியில் நீங்கள் விரும்பியதை எல்லாம், எழுதி அமைக்க முடியவில்லை என்றால், இயன்றதை எழுதி, சேவ் செய்து, பின்னர் வெளியிடலாம்.

உங்களுடைய பேஸ்புக் இணைய நட்பு குறித்து அறிய www.facebook.com/us என்ற முகவரியை டைப் செய்து காட்டப்படும் தளத்தினைப் பாருங்கள். 

உங்கள் அனைத்து நண்பர்களின் புகைப்படங்கள், நீங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் என அனைத்து நடவடிக்கைகளின் அடையாளம் கிடைக்கும். 

சில வேளைகளில், பேஸ்புக்கில் நம் நண்பர்கள், முக்கியமான இணைய தளங்களை நாம் பார்க்க வேண்டும் என்பதற்காக, அதன் லிங்க் அனுப்பி வைப்பார்கள். 


நமக்கு அப்போது நேரம் இல்லாததால், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவைப்போம். ஆனால், லிங்க்கினை சேவ் செய்திட மாட்டோம். இது போல “அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்ற விஷயங்களை, சேவ் செய்து வைத்துப் பின்னால் பார்க்க, பேஸ்புக் வழி அமைத்துத் தருகிறது. இந்த டூலின் பெயர் "Save for Later". 
எந்தப் பதிவினையாவது சேவ் செய்திட வேண்டும் என்றால், அந்தப் பதிவின் மேல் வலது முனையில் உள்ள சின்ன அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில் Save "[name of story]" என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். 

இது, உங்களுடைய சேவ் செய்யப்பட்ட போல்டருக்கு இந்த பதிவினை அனுப்பி சேவ் செய்திடும். "saved" என்ற பெயரில் ரிப்பன் ஒன்று காட்டப்படும். முதல் முதலாக ஏதேனும் ஒரு பதிவினை சேவ் செய்த பின்னரே இந்த போல்டர் உருவாக்கப்படும். 
பின்னர் அடுத்தடுத்து சேவ் செய்திடுகையில், அவை இங்கு வைக்கப்படும். அதில் கிளிக் செய்தால், அனைத்து சேவ் செய்யப்பட்டவைகளையும் பார்க்கலாம். 

நீங்கள் பேஸ்புக் தளத்தில் மேற்கொண்ட அனைத்து செயல்பாடுகளையும், அதாவது “அனைத்தும்” மொத்தமாக பார்க்க விருப்பமா? 

பேஸ்புக் அதற்கான வழியினைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு போஸ்டிங், படம், விடியோ, தகவல், நண்பர்களுடன் அரட்டை என “அனைத்தும்” பெறலாம். உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தில் Settings > General என்று செல்லவும். 
அங்கு "Download a copy of your Facebook data" என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், அங்கு தரப்படும் வழிகளைப் பின்பற்றவும். நீங்கள் மேற்கொண்ட அனைத்தும் காட்டப்படும். 
நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டினை நீக்க முடிவு செய்தால், உங்கள் பேஸ்புக் நாட்களை காப்பி எடுத்து வைக்க இந்த டூல் உதவுகிறது. 

பேஸ்புக்கில் உள்ள அனைவரும் ஒரு நாள் மரணத்தைச் சந்திக்கத்தான் போகிறோம். 

அப்படியானால், நான் இத்தனை நாள் பதிவு செய்து, வளர்த்து ஆளாக்கிய என் பேஸ்புக் தளம் என்னாவது? 
பேஸ்புக் மட்டுமல்ல.
 இது அனைத்து சமூக வலைத் தளங்களுக்கும் பொருந்தும். நீங்கள் மட்டுமல்ல, பேஸ்புக்கில் உள்ள உங்கள் நண்பர்களும் மரணத்தைத் தழுவுவார்கள். பேஸ்புக் இதற்காகவே, உங்கள் மரணத்திற்குப் பின், சட்ட ரீதியாக, உங்கள் தளப் பக்கத்தினை ஏற்றுக் கொள்ளும் வாரிசை நியமிக்க வழி செய்துள்ளது. பேஸ்புக் இதனை a legacy contact என அழைக்கிறது. பேஸ்புக்கில் உங்கள் நண்பராய் உள்ள ஒருவரை இதற்கென நியமிக்கலாம். 
அது உங்கள் மகன் / மகள் / மனைவியாகக் கூட இருக்கலாம். இதற்கு to Settings > Security > Legacy Contact என்று சென்று நியமிக்கலாம். இவ்வாறு நியமிக்கப்படுபவர், உங்கள் பேஸ்புக் தளப்பக்கத்தினை நிர்வகிப்பார். 
உங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்கு உங்கள் மறைவு குறித்த தகவலைத் தெரிவிப்பார். 
இவ்வாறு நியமிக்கப்படுபவரை பின் நாளில், நீங்கள் மாற்றவும் செய்திடலாம். உங்கள் இணைய தளப் பக்கத்தினை நீக்கிவிடவும் வழி தரப்பட்டுள்ளது.

https://www.facebook.com/help/1568013990080948 என்ற முகவரியில் உள்ள பேஸ்புக் இணைய தளத்தினைப் பார்க்கவும்.
மேலே கூறப்பட்டவை மட்டுமின்றி, இன்னும் பல வசதிகள் வெளிப்படையாக இல்லாமல், பேஸ்புக் சமூக இணைய தளத்தில் உள்ளன. 

====================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?