குட்டையைக் குழப்பும் குருமூர்த்தி

ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தினமணி நாளேட்டில் (28.2.2018) ‘தொடரும் தேசபக்திக் குழப்பம்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி யுள்ளார். 
“அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ?” என்பார் பாவேந்தர் பாரதிதாசன். 

இந்தியாவின் மதச்சார்பற்ற, பன்முக தேசியம், கூட்டாட்சித்தன்மையை மறுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு முன்வைக்கும் ஒற்றைக் கலாச்சார தேசியத்தை வலியுறுத்துவதுதான் குருமூர்த்தி கட்டுரையின் நோக்கம். 
நாடு, தேசம், தேசபக்தி ஆகியவை தனித்தனி கருத்தாக்கங்கள் அல்ல. 

ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை என்ற பீடிகையோடு தனது குழப்பக் கச்சேரியை துவங்கும் குருமூர்த்தி, மதச்சார்பின்மை தொடர்பான குழப்பத்தைப் போக்கி இந்தியாவை உருவாக்கிய இந்து கலாச்சாரத்தைப் போற்ற வேண்டும் என்று மங்கலம் பாடியிருக்கிறார். 

அமெரிக்கா என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட தேசம், என்று கூறும் குருமூர்த்தி இஸ்ரேல் இயற்கையான தேசிய உணர்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசம் என்கிறார்.பிரிட்டன் குடியேற்றத்தின் காரணமாக உருவான நாடு அமெரிக்கா. 

ஆக்கிரமிப்புச் சுரண்டலை விரிவுபடுத்துவதற்காக உருவான நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இந்த குடியேற்றத்தின் விளைவாக அமெரிக்க மண்ணின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்கள் ரத்த வெள்ளத்தி்ல் மூழ்கடிக்கப் பட்டு அந்த இனம் ஒடுக்கப்பட்டதை குருமூர்த்தி போன்றவர்கள் ஒருபோதும் சொல்லமாட்டார்கள். 
இவர்களது விருப்பமெல்லாம் ஹிட்லரின் ஆரிய இனவெறி மற்றும் இஸ்ரேலின் இனவெறி போன்றவற்றின் மீதுதான். 
அமெரிக்க அறிஞர் சாமுவேல் ஹண்டிங்டன் தனது நாட்டை ஆங்கிலோ சாக்சன், புரொட்டஸ்டாண்ட் தேசம் என்று வர்ணிப்பதாக குருமூர்த்தி மேற்கோள் காட்டுகிறார். 

ஆங்கிலோ சாக்சன்கள் எனப்படுவோர், இங்கிலாந்து நாட்டை ஆக்கிரமித்த ஜெர்மானிய குழுக்கள் ஆவர் என்றும் இவர்கள் தான் இங்கிலாந்து நாட்டை அமைத்தனர் என்றும், இவர்கள் பேசிய மொழியே ஆங்கிலத்தின் மூலம் என்றும் வரலாறு பேசுகிறது. 
இவர்கள்தான் பின்பு அமெரிக்காவை அதன் பூர்வகுடி மக்களிடமிருந்து ஆக்கிரமித்தனர். ஹிட்லரின் வெள்ளை இனவெறி மற்றும் ஆரிய இனவெறியின் மூலக்கூறுகள் இதில் இருப்பதை புரிந்து கொள்ள முடியும். 

ஹிட்லர் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பு வைத்திருக்கும் பாசத்தின் வர்க்க மூலத்தையும் தெரிந்துகொள்ள முடியும். 
நிலவுடைமை மதிப்பீடுகளை பெரிதும் கைக்கொண்டிருந்த, கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவுக்கு எதிராக நவீன தொழில் வளர்ச்சியின் ஜனநாயக மதிப்பீடுகளோடு வெடித்து வெளியே வந்தது புரொட்டஸ்டாண்ட் கிறிஸ்தவ பிரிவு. 


சமூக மாற்றம் தான் புதிய புதிய மதங்களை மதங்களுக்குள்ளேயே உருவாக்குகிறது என்பதை குருமூர்த்தி போன்றவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தாலும் அதுதான் உண்மை. 

இந்தியாவில் நில உடமைச்சமூகத்தில் வேர்கொண்டிருந்த ஜாதிய அடிப்படையிலான வைதீக மதத்திற்கு எதிராக வளர்ந்து வந்த வணிக வர்க்கத்தின் குரலாக புத்த, சமண மதங்கள் வளர்ந்தன. வரையறுக்கப்பட்ட எல்லைகள் இல்லாத போதும் தேசிய உணர்வு நிலைபெற முடியும் என்பதற்கு இஸ்ரேல் சிறந்த உதாரணம் என்று புல்லரித்து போர்வையை எடுத்து போர்த்திக்கொள்கிறார் குருமூர்த்தி. 

பாலஸ்தீன மக்களின் தாயகத்தை ஆக்கிரமித்து யூத இனவெறி செயற்கையாக அடிப்படையில் ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட நாடுதான் இஸ்ரேல். 
பாலஸ்தீன மக்கள் இன்றளவும் தங்களது தாயகத்திற்காக போராடி வருகின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவரான கோல்வால்கர் இஸ்ரேலை வியந்து பாராட்டுகிறார்.

அதைத்தான் குருமூர்த்தி வழிமொழிகிறார்.இஸ்ரேலின் இனவெறிக் கொள்கை காரணமாகவே இந்தியா அந்த நாட்டுடன் ராஜிய உறவு கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருந்தது. 
ஜனதா கட்சி ஆட்சி காலத்தில் வாஜ்பாய் அயல்துறை அமைச்சராக இருந்தபோது இஸ்ரேலுடன் கள்ள உறவை துவக்கினார்.

 பின்னர் அவரே பிரதமராக வந்தபோது அந்த உறவு பகிரங்கமாக்கப்பட்டது. அண்மையில் மோடி அரசு இஸ்ரேலுடன் 13 ஆயிரம் கோடி அளவுக்கு ஆயுத தளவாட ஒப்பந்தம் செய்துள்ளது. 
இதுவரை இஸ்ரேல் செய்த ஆயுத தளவாட ஒப்பந்தத்திலேயே இதுதான் மிகப்பெரியது.மேற்காசிய பகுதியில் அமெரிக்காவின் வேட்டை நாயாக செயல்படுகிற இஸ்ரேலுக்கு இந்திய மக்களி்ன் வரிப்பணம் சுமார் 25 ஆயிரம்கோடியை கொட்டிக்கொடுத்து ‘நல்லுறவை’ வளர்க்கிறது மோடி அரசு. 

இந்திய தேசியம் காலம் கடந்தது. 
பழமையான வேதங்களிலேயே ராஷ்ட்டிரம் குறித்து பேசப்பட்டுள்ளது என்றும் பல்வேறு புராணங்கள் மூலம் பாரத வர்ஷம் என்னும் பண்டைய இந்தியாவை அறிய முடியும் என்றும், ஆன்மீகம்தான் பாரத வர்ஷத்தின் ஆன்மா என்றும், ஆன்மீக-ஆன்மா அரசியல் பேசுகிறார் குருமூர்த்தி. 
புராணப்புனைவுகள் வரலாறு ஆகாது. இன்று இந்துக்கள் என்று அழைக்கப்படும் மக்கள் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு அவ்வாறு அழைக்கப்பட்டதில்லை. 


அவர்கள் பல்வேறு அடையாளங்களுடன் பல்வேறு சமூகங்களாக வாழ்ந்தனர். 
அவர்கள் வாழ்ந்த இடங்கள், பேசிய மொழிகள், பின்பற்றிய சமய நெறிகள் ஆகிய வற்றின் அடையாளங்களுடன்தான் அழைக்கப்பட்ட னர். இதை நாம் சொன்னால் குருமூர்த்திக்கு கசக்கும். அவர்களால் ‘தெய்வத்தின் குரல்‘ என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகளின் குரல்வழி கேட்போம்.

“அவன் (ஆங்கிலேயன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மை பிரித்துக்கொண்டு தனி்த்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். 
சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை. 
வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல. சைவர்களில் தீவிரவாதிகளுக்கு விஷ்ணு சாமியே அல்ல. சிவன்தான் சாமி. 

விஷ்ணு சிவனுக்கு பக்தன் என்று கூறுகிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது. வெள்ளைக்காரன் நமக்கு இந்து என்று பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மை காப்பாற்றியது”. 
வேதங்கள், உபநிடதங்கள், கீதை, இதிகாசம், புராணம் எதிலும் இந்து என்ற சொல் இல்லவே இல்லை. 

பாரசீகர்கள், கிரேக்கர்கள் இந்த நாட்டை சிந்து நாடு என்று அழைத்தனர். பின்னர் அதுவே மருவி இந்து என்று ஆனது. இந்து என்ற புவியியல் தன்மையுள்ள பொதுச்சொல் சமய அடையாளமாக மாற்றப்பட்டது. ஆனால் இந்துத்துவா என்ற கருத்தாக்கம், வேதகாலத்தி லிருந்தே இருக்கிறது என்று கதையளக்கிறார் குருமூர்த்தி.
குருமூர்த்தி தனது குழப்ப வேலைக்கு விவேகானந்தர், அரவிந்தர் ஆகியோரை மட்டுமின்றி காந்தி, நேரு போன்றோரையும் துணைக்கு அழைக்கிறார். 


அதிலும், விவேகானந்தரை ஆர்எஸ்எஸ் தலைவர் அளவுக்கு கொண்டு போகிறார்.
சனாதன அதர்மத்தின் தவிர்க்க முடியாத பகுதியான தீ்ண்டாமைக் கொடுமையை விவேகானந்தர் வன்மையாகக் கண்டித்திருப்பதை குருமூர்த்தி போன்றவர்கள் ஒருபோதும் கூறமாட்டார்கள். சனாதனக் கொடுமைகளின் காரணமாகவே மக்கள் மதம் மாறினார்கள் என்று விவேகானந்தர் கூறியுள்ளதையும் கவனத்தில் கொள்ளமாட்டார்கள். 

விவேகானந்தர் அமெரிக்கா சென்றிருந்தபோது ரஷ்யாவில் ஜார் ஆட்சியை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த சோசலிச இயக்கத்தின் தலைவ ரான பக்குனினை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்பு தமது சீடரான கிறிஸ்டினாவிடம், ‘இன்னொரு சகாப்தத்தை தோற்றுவிக்கும் அடுத்த எழுச்சி ரஷ்யாவிலிருந்து வரும்’ என்று சரியாக கணித்துள்ளார். 

அதுமட்டுமல்ல, ‘உலகில் ஷத்திரியர்கள் ஆட்சியும், பிராமணர்கள் ஆட்சியும் நடந்து வந்த சகாப்தங்கள் முடிந்துவிட்டன. இப்போது உலகம் வைசியர்களின் ஆதிக்கத்தின் கீழ் மூன்றாவது சகாப்தத்தில் உள்ளது. அடுத்து வரும் நான்காவது சகாப்தம் சூத்திரர்களின் ஆட்சியின் கீழ்தான் இருக்கும்’ என்றும் விவேகானந்தர் பேசியுள்ளார். 
ஆனால் மீண்டும் பிராமணிய ஆட்சியை கொண்டுவரவே குருமூர்த்தி போன்றவர்கள் அத்தக்கூலிக்கு ஆள்பிடிக்கிறார்கள். 1895இல் இங்கிலாந்து சென்றபோது ரஷ்ய புரட்சியாளரான குரோபோட்கினையும் சந்தித்து விவேகானந்தர் பேசியுள்ளார். 

விவேகானந்தரின் சீடரான நிவேதிதாதேவி எழுதிய கடிதம் ஒன்றில், ‘விவேகானந்தர் தேசிய இனம் என்கிற வார்த்தையை என்றும் பயன்படுத்தியதில்லை. தேசத்தை உருவாக்கும் சகாப்தம் பற்றியும் அவர் பேசியதில்லை. மனிதனை உருவாக்குவதே தனது கடமை’ என்று குறிப்பிட்டுள்ளார். 

விவேகானந்தர் விரும்பிய புதிய இந்தியா, யாகம் என்ற பெயரில் இயற்கையை அழிக்கிற பண்டைய இந்தியா அல்ல. கால்பந்து விளையாடுகிற இளைஞர்களைக்கொண்ட நவீன இந்தியா எனவே, குருமூர்த்தி தனது திருத்தல் வேலைகளுக்கு விவேகானந்தரை இழுப்பது விவேகம் அல்ல. இந்திய மக்கள் ஒன்றுபட்டு நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தபோது இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் அதிலிருந்து ஒதுங்கி நின்று மக்களை பிளவுபடுத்தும் இந்துத்துவா கருத்தாக்கத்தை இயக்கத்தை உருவாக்குவதிலேயே குறியாக இருந்தனர். 


காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு சிலர் இந்த வேலையை பார்த்து வந்தனர். 
அவர்களால் உருவாக்கப்பட்ட தேசியம் பிற்போக்குதன்மை கொண்டது என்று நேரு மதிப்பிட்டிருக்கிறார். காந்தி தன்னை ஒரு சனாதன இந்து என்று கூறிக்கொண்டாலும், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை ஆகிய கருத்தாக்கங்களின் மீது அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தார். 

ஆர்எஸ்எஸ் முன்வைத்த இந்துத்துவத்துக்கு எதிராக காந்தியின் ஆன்மீகம் இருந்தது. விடுதலை பெறும் இந்தியா மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்றார் நேரு.
 பட்டேலின் கருத்து வேறாக இருந்தது. 
எனவே தான் காந்தியின் இயல்பான தேர்வாக நேரு இருந்தார்.

அந்த கோபத்தில் தான் இப்போதும் கூட மோடி நேருவை கரித்துக் கொட்டிக்கொண்டிருக்கிறார். இந்துத்துவா குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை குருமூர்த்தி குதூகலமாக மேற்கோள் காட்டுகிறார். அதே வழக்கின்மீதான மேல் முறையீட்டில் ‘தேர்தல் என்பது மதச்சார்பற்ற நடைமுறையாகும், அதில் சாதி, மதத்திற்கு இடமில்லை. 
இது தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். மனிதனுக்கும், இறைவனுக்கும் உள்ள உறவானது தனிப்பட்ட தேர்வாகும், இந்த நடவடிக்கையில் அரசு தலையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறியதோடு, சாதி மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றச்செயல் என்று தெளிவு படுத்தியுள்ளதை குருமூர்த்தி ஏற்கிறாரா இல்லையா?. 

ஆனால் குருமூர்த்தி இந்த கட்டுரையில் என்ன சொல்கிறார் தெரியுமா? 

மதச்சார்பின்மை பிரச்சாரம் காரணமாக நாட்டில் உண்மையான தன்மை மதிப்பிழந்து விட்டது என்று புலம்புகிறார். 
ஆனால் உச்சநீதிமன்றம் தேர்தல் என்பதே ஒரு மதச்சார்பற்ற நடவடிக்கை என்கிறது. 

பிரதமர் மோடியே உபியில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது இந்து, முஸ்லிம் என்று மக்களை பிளவுபடுத்தி பகைமைத் தீயை மூட்டி னார். இந்துக்களின் சுடுகாடு, இஸ்லாமியர்களின் இடுகாடு என்றெல்லாம் பேதம் பிரித்தார். 


உச்சநீதிமன்றத்தின் கருத்துப்படி இது குற்றச்செயல் என்பதை குருமூர்த்தி ஏற்பாரா? 
மதச்சார்பின்மை தொடர்பான குழப்பம்தான் தேசபக்தியின் மீதான குழப்பத்திற்கும் காரணம் என குருமூர்த்தி தணிக்கை கணக்கை நேர் செய்கிறார். 

மதச்சார்பின்மை என்கிற கயிற்றில் தான் இந்திய ஒற்றுமை, பன்முக பண்பாட்டு தேசியம் கட்டுப்பட்டுள்ளது. அதை அறுத்தெறிந்து எல்லோருக்குமான இந்தியாவை குறுகிய சாதிமத இனவெறிகொண்ட இந்துத்துவா ராஷ்ட்டிரமாக மாற்ற ஆர்எஸ்எஸ் துடிக்கிறது. 

அந்த சித்தாந்தத்திற்கு தான் குருமூர்த்தி பொழிப்புரை எழுதுகிறார். பரந்துபட்ட மக்களின் தேசபக்தியில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால் குட்டையைக் குழப்பி குழப்பத்தை ஏற்படுத்தி ஆர்எஸ்எஸ் விரும்புகிற சனாதன ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் அவர். 

இந்தியாவின் நெடிய வரலாற்றை அறிந்தவர்கள் இந்த ஆசை நிறைவேறாது என்பதை அறிவார்கள்.
                                                                                                                                     -மதுக்கூர் இராமலிங்கம்,
நன்றி:தீக்கதிர்.
=====================================================================================
ன்று,
மார்ச்-06.
  • உமர் கயாம், ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்(1079)
  • செர்பியன் ஆட்சி மீண்டும் அமைக்கப்பட்டது(1882)
  • கானா விடுதலை தினம்(1957)
  • ஈரானும் ஈராக்கும் எல்லை தொடர்பான உடன்பாட்டிற்கு வந்தன(1975)
======================================================================================






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?