ஸ்கீம் விளையாட்டில் காவிரி?

காவிரியாற்று நீர்ப் பங்கீடு தொடர்பாகப் பிப்,16 அன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இதை இறுதித்தீர்ப்பு எனக் கடந்த கால வரலாற்று அடிப்படையில் நம்மால் சொல்ல இயலவில்லை.
காவிரி மேலாண்மை வாரியமும் (Cauvery Management Board) காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும் எனக் கடந்த ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்(குடிமை முறையீட்டு வ.எண் 2456 / 2007) முறையிட்டிருந்தது. [புதுவை, கேரள(கு.மு.வ.எண்2454 / 2007 ), கருநாடக (கு.மு.வ.எண் 2453 / 2007 ) மாநிலங்களும் முறையிட்டிருந்தன.] இப்போதைய தீர்ப்பில் இத்தகைய பெயர்கள் இடம் பெறவில்லை; திட்டம் (scheme) என்றுதான் குறிக்கப் பெற்றுள்ளது என்பது எப்பொழுதும் முரண்டு பிடிக்கும் கருநாடக அரசின் வாதம்.

இவ்வாதம் ஒரு வகையில் சரி என்பதுபோல் தோன்றும். ஆனால், எந்தப் பெயரில் காவிரி நீர்ப் பங்கீட்டிற்கான அமைப்பு இருந்தாலும் கருநாடகா ஏற்காது என்பதை உணர்ந்த உச்சநீதிமன்றம், எப்பெயராக இருந்தாலும் அந்த அமைப்பிற்குக் காவிரியாறு முற்றிலும் உரிமையானது; அதற்கே பங்கீடு, பகிர்வுத்திட்டம், செயல்படுத்தல் முதலான அதிகாரங்கள் உண்டு என்பதைக் குறித்துள்ளது.
மேலும், முந்தையத் தீர்ப்புகளில் குறிக்கப் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அல்லது காவிரி ஒழுங்காற்றுக் குழுவிற்கு எதிராக அக்குழுக்கள் தேவையில்லை அல்லது நீக்கப்படுகின்றன என்பன போன்ற எதுவும் தீர்ப்புரையில் தெரிவிக்கப்பட வில்லை. அப்படியானால் அவ்வாரியமும் குழுவும் செயல்பட வேண்டும் என்றுதான் கருத வேண்டும்.
நாம் இந்த இடத்தில் ‘scheme’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கான பொருள்களைக் காண்போம். இச் சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. அவற்றுள் திட்டம், வகைதுறை ஏற்பாடு, வகைமுறைப் பட்டி, கால விவரப்பட்டி, கால அட்டவணை, செயற்படுத்துவதற்கான திட்டம், திட்டமுறை. நடவை என்பன இங்கே பொருந்துவன. இவற்றுள் நடைமுறைச் செயற்பாட்டைக் குறிக்கும் ‘நடவை’ என்பது மிகப் பொருத்தமான சொல். எனினும் வழக்கத்தில் நாம் திட்டம் எனக் குறிப்பிட்டு வருவதால் அச்சொல்லையே இப்போதைக்குக் கையாளலாம். இங்கே குறிக்கப்படும் பொருள்களின் அடிப்படையில் திட்டமிட்டு வகுத்துத் தக்க ஏற்பாட்டுடன் செயல்பட்டாலே போதுமானது. சொல் விளையாட்டில் காலங்கடத்த வேண்டா. காவிரி நீர்ப்பங்கீட்டிற்கான முழு அதிகாரமுடைய வாரியம் அல்லது குழுவை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும், வேறு பெயரில் அமைத்துவிட்டு, ஒழுங்குமுறை ஆணையத்திற்குரிய அதிகாரம் இதற்கு இல்லை என மத்திய அரசு நழுவக்கூடாது என்பதற்காகத்தான் நாம் காவிரி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டுகிறோம்,
காவிரி நீர்ப்பங்கீட்டிற்காகத் திட்ட முறையை வகுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்றால் மத்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும்? 
திட்டமா? 
வாரியமா? 
என ஐயம் இருப்பின் முதலிலேயே அதனை உச்ச நீதிமன்றத்தில் கேட்டுத் தெளிவு பெற்றிருக்க வேண்டும். அல்லது தான் நினைப்பதற்கேற்ப ஒரு திட்டத்தை வகுத்து அதன்பின்னர் இது உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படிச் சரியானதுதானா எனத் தெளிவு பெற்றிருக்க வேண்டும், அவ்வாறில்லாமல், கால வாய்ப்பு முடியும் வரை காத்திருந்து அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
தமிழ்நாட்டுப் பா.ச.க.வினர் கருநாடகாவில் பா.ச.க. ஆட்சியிலிருந்தால் காவிரி நீர் நமக்குக் கிடைக்கும் என முதலில் ஏமாற்றினார்கள். இப்பொழுது தமிழ்நாட்டிலும் கருநாடகாவிலும் பா.ச.க. ஆட்சியிலிருந்தால் காவிரி நீர் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள். பேராசைக்கு அளவில்லைதான். ஆனால், இதற்கு முன்பு பா.ச.க. கருநாடகாவில் ஆட்சியிலிருந்த பொழுது அதுவும் தன் பங்கிற்கு நடுநிலையின்றித் தானே நடந்து கொண்டது. அல்லது இப்பொழுது மனம் மாறியுள்ளதாகக் கருதிப் பார்ப்போம். 
அப்படியாயின், இன்றைய கருநாடக எதிர்க்கட்சியாகிய பா.ச.க.வினர், காவிரிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாடு முதலான அண்டை மாநிலங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பியிருக்க வேண்டுமல்லவா? அவர்களும் சேர்ந்துதானே நமக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம் தமிழ் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு என்ன தீர்ப்பு கூறினாலும் பா.ச.க. எதிராக நடந்து கொள்ளும். இருப்பினும் தமிழ் நாட்டு நலனுக்காக எதுவுமே புரியாமல், நம் நலனில் கருத்து செலுத்துவது போல் நடிக்கின்றது. ஒரு வேளை தீர்ப்பு நமக்கு எதிராக இருந்து நாம் எதிர்ப்பு தெரிவித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கும். எதிராக முறையிடும் தமிழக அரசினை-எக்கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்த அரசை – உடனே கலைத்திடும். ஆனால், தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கருநாடக அரசு மீது எந்நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஒரு வேளை காங்.அரசு மத்தியில் இருந்தாலும் இதுதான் நிலைமை. எனவே, தமிழ்நாட்டு மக்கள், கட்சி சார்பின்றிக் காவிரிநீர்ப் பங்கீடு போதுமான அளவு நமக்குக் கிடைக்கப் பாடுபட வேண்டும்.
கருநாடக அரசு சொல்வதுபோல் திட்டம் ஒன்றை வகுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதாகவே கொள்வோம். அத்திட்டத்தைச் செயற்படுத்த பொறுப்பாளர்கள் தேவையல்லவா? அந்த பொறுப்பாளர்கள் முறையாகச் செயல்பட, ஓர் அமைப்பு தேவையல்வா? எந்தப் பெயரில் இருந்தாலும் அவ்வமைப்பு செயல்பட அதிகாரம் வேண்டுமல்லவா? அதைத்தான் உச்ச நீதிமன்றம் கூறுகிறது.
திட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது? “இத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரில், சொத்துகளைக் கையகப் படுத்துவதற்கும் உரிமையாக்குவதற்கும் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் வழக்கு தொடரவும் வழக்கில் உட்படுத்திக் கொள்ளவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.(…under the name specified in the said scheme, have capacity to acquire, hold and dispose of property, enter into contracts, sue and be sued and do all such acts as may be necessary for ..)” எனத் தெளிவாகக் குறித்துள்ளது,
மேலும், “நிலைக்குழு, குறித்த பணிக்கான குழு, அல்லது அதிகாரமளிக்கப் பெற்ற குழு (of any standing, ad hoc or other committees by the authority)” எனத் தீர்ப்பில் குறித்துள்ளதன் மூலம், செயற்பாட்டைத் திட்டமிடவும் செயற்படுத்தவும் குழு தேவை என்பதை வலியுறுத்துகிறது, இது போன்ற தொடரை வெவ்வேறு இடங்களில் தீர்ப்பு குறிக்கிறது.
காவிரி ஆற்று ஆணையம், காவிரித் தீர்ப்பாயம், காவிரி ஒழுங்குமுறை ஆணையம், காவிரி மேலாண்மை வாரியம் என முன்பு சொல்லப்பட்ட அல்லது அமைக்கப்பெற்ற எதனாலும் அவை சொல்லும் கருத்துகளை நடைமுறைப்படுத்த கருநாடக அரசு முன் வராததால் பயனற்றுப் போயின. எனவே, மேற்பார்வைக் குழு அல்லது ஒழுங்காற்றுக் குழு அல்லது எக்குழுவாயினும் – என்ன பெயரில் அக்குழு இயங்கினாலும் காவிரி அவ்வைமப்பிற்கே உரியது; எம்மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது எனச் சொல்லி முழு அதிகாரத்தையும் அக்குழுவிற்கு அளித்துள்ளது.
எனவே, தமிழக மக்களும் தமிழக அரசும் சொல்லும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு என்ன அதிகாரங்கள் இருக்க வேண்டுமோ அவ்வதிகாரங்கள் கொண்ட அமைப்பை உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்க மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.
விளக்கம் கேட்டுக் காலங்கடத்தப்படுவதற்கு இடம் தராமல் கேட்பு முதல் நாளன்றே உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பில் கூறியதைத் தெளிவுபடுத்தி காவிரிக்கு உரிமையுடைய குழுவை அமைக்க வலியுறுத்த வேண்டும். இல்லையேல் தானே ஒரு குழுவை அமைக்க வேண்டும். தமிழ்மக்கள் நலன் கருத்தில் கொள்ளப்படும் என ஆறுதலாகச் சொல்லியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், அதற்கேற்ப நடுவுநிலையான தீர்ப்பின் மூலம் காவிரிக் கரை மக்களும் வேளாண்குடி மக்களும் தமிழ்நாடும் நலம் பெறும் வகையில் நல்ல தீர்ப்பைக் கூற வேண்டும். இத்தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படாமல் காலங்கடத்தப்படுமாயின் கருநாடக மாநில அரசும் தேவையெனில் அதற்கு உடந்தையாக இருக்கும் மத்திய அரசும் கலைக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்ல வேண்டும்.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (திருவள்ளுவர், திருக்குறள்118)
எனத் தீர்ப்பு நடுவுநிலைமையுடன் வந்தால் மட்டும் போதாது. அத் தீர்ப்பு நடுநிலையுடன் செயற்படுத்தவும் உச்சநீதிமன்றம் ஆவன செய்ய வேண்டும்.
                                                                                                                      இலக்குவனார் திருவள்ளுவன்        =========================================================================
ன்று ,
ஏப்ரல்-15.

  • உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியானர்டோ டா வின்சி பிறந்த தினம்(1452)

  • சாமுவேல் ஜான்சன், தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்(1755)

  • அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்த தினம்(1865)

  • கலைஞரால் வடிவமைக்கப்பட்ட  வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது(1976)
==========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?