தனியாரிடம் அரசாங்கம்.



தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசாங்கம் சில முக்கிய பேருந்து நிலையங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது என முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

மோடி ஆட்சியின் மகுடிக்கு ஆடுகின்றபாம்பாக உள்ள எடப்பாடி அரசாங்கம் தனியார்மயத்திலும் மோடி ஆட்சியை பின்பற்றுகிறது.
திருத்தணி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தர்மபுரி, நாமக்கல், மயிலாடுதுறை, திண்டிவனம் ஆகிய ஊர்களின் பேருந்து நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்க எடப்பாடி அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோக துறை சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
எனினும் இந்த விவரம்அடங்கிய ஆவணம் எந்த வலைதளத்திலும் இல்லாமல் மறைத்துள்ளனர்.

பேருந்து நிலையங்கள் தற்சமயம் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படுகின்றன. மேற்கண்ட ஏழு பேருந்து நிலையங்களும் நகராட்சி நிர்வாகத்தின் கீழ்உள்ளன. 
நகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத சூழலில் இத்தகைய கொள்கை முடிவுகள்எடுப்பது மக்கள் விரோதச் செயல். 
தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக எந்த விவாதங்களும் கருத்துக் கேட்பும் இல்லாமல் எடப்பாடி அரசாங்கம் தானடித்த மூப்பாக தனியாருக்கு ஆதரவாகச் செயல்படுவது பல்வேறு ஐயப்பாடுகளை உருவாக்குகிறது. 

கோவையில் தண்ணீர் விநியோகம் தனியாருக்குத் தந்த கையோடுஇந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவை இரண்டிலுமே ஒரே அமைச்சர் சம்பந்தப்பட்டிருப்பது தற்செயல்தானா எனும் கேள்வியும் எழுகிறது. 

தமிழக அரசாங்கம் உலக வங்கியின் வழிகாட்டுதல்படி “தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியகம்” (TNUDF) எனும் அமைப்பை உருவாக்கியுள்ளது. 

இதில் தமிழக அரசாங்கத்துடன் ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் எச்.டி.எஃப்.சி. வங்கிகளும் ஐ.எல்.எஃப்.எஸ். எனும் தனியார்நிதி நிறுவனமும் பங்குதாரர்களாக உள்ளன. 
இந்த அமைப்பின் மூலம் உலக வங்கி, ஜெர்மனியின் கே.எஃப். டபிள்யூ. (KFW) வங்கி மற்றும் ஜப்பான் நிதி நிறுவனங்களிடமிருந்து சுமார் ரூ.5300 கோடியை தமிழக அரசாங்கம் கடனாக பெற்றுள்ளது. இத்தகைய நிதி உதவி பெறும் பொழுது மக்கள் நலனை கருத்தில்கொண்டு வலுவான அரசியல் நிலைபாடு எடுக்காவிட்டால் இந்த அமைப்புகளின் மக்கள் விரோத முடிவுகளுக்கு மாநில அரசாங்கங்கள் உட்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடும்..

தமிழகம் குறித்து உலக வங்கி தனது வழிகாட்டுதல் அறிக்கையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
“குடிநீர் விநியோகம், சாக்கடைகள் கட்டுதல் மற்றும் பேருந்து நிலையங்கள் உருவாக்குதல் ஆகியவற்றில் உபயோகிப்பாளர்கள் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதை உத்தரவாதப்படுத்த வேண்டும். 
இவற்றை உருவாக்கும் செலவு மட்டுமல்ல; பராமரிக்கும் செலவையும் உபயோகிப்பாளர்களிடம் பெறுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.”
-உலக வங்கி 2015 அறிக்கை.

மோடி அரசாங்கத்தை எதிர்ப்பதற்கே வலுவில்லாத எடப்பாடி அரசாங்கம் உலக வங்கியை எப்படி எதிர்க்கும்? எனவே பேருந்து நிலையங்களையும் குடிநீர்வினியோகத்தையும் தமிழக அரசாங்கம் தனியாருக்குத் தாரை வார்க்கிறது.

பேருந்து நிலையங்களை தனியாருக்குத் தருவது தமிழகத்தில்தான் புதியது. 
நாட்டின் பல இடங்களில் அவ்வாறு தரப்பட்டுள்ளது என வாதிடப்படுகிறது.
 இது முழு உண்மை அல்ல. 

ஒரு சில இடங்களில்தான் தனியாரிடம் தரப்பட்டுள்ளது. 

அதுவும் பெரும்பாலும் பா.ஜ.க.ஆளும் மாநிலங்களில்தான் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான பேருந்து நிலையங்களை அரசு அமைப்புகள்தான் நிர்வாகம் செய்கின்றன. உதாரணத்திற்கு பெங்களூரு நகரில் மெஜஸ்டிக், சாந்தி நகர், சிவாஜிநகர் போன்ற மிகப் பெரிய பேருந்துநிலையங்களை மாநகர போக்குவரத்து கழகம்தான் நிர்வகித்து பராமரிக்கிறது. 

அதே போல ஹைதராபாத் நகரில் உள்ள மிகப்பெரிய மகாத்மா காந்தி பேருந்துநிலையத்தை தெலுங்கானா போக்குவரத்து கழகம்தான் பராமரிக்கிறது. 

இதே நிலைதான் கேரளா முழுதும் உள்ளது.புதிய பேருந்து நிலையங்களை உருவாக்க நிதி ஆதாரம் இல்லை எனும் ஒரு கருத்தையும் அரசாங்கம் கூறுகிறது. 
உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தாத காரணத்தால் தமிழகம் ரூ.3000 கோடி நிதியை இழந்துள்ளது.
இது யாருடைய தவறு? 
இந்த நிதி இருந்தால் பல பேருந்து நிலையங்களை உருவாக்க இயலுமே!
பாதிப்புகள் யாருக்கு?
பேருந்து நிலையங்கள் தனியாரிடம் தந்தால் என்ன ஆகும்? 
அங்குள்ள கடைகளை ஏலம் விடுவதன் மூலம் வருவாய் கிடைக்கிறது. 
தனியார் இந்த ஏலத் தொகையைஅதிகப்படுத்துவர். 
இதனால் ஏலம் எடுப்பவர்கள் அந்த அதிக தொகையை விற்பனை பொருட்களின் விலையில்ஏற்றுவர். 

பேருந்து நிலையத்திற்குள் வாகனங்கள் வந்து செல்வதற்கான நுழைவுக் கட்டணமும் செங்குத்தாக உயர்த்தப்படும். கழிப்பிட வசதிகள் மூலமும் வருவாய்வருகிறது. 
இந்தக் கட்டணமும் கடுமையாக உயர்த்தப்படும். மக்களின் கோரிக்கை காரணமாக பல பேருந்துநிலையங்களில் இலவச கழிப்பிடங்கள் உள்ளன. 
அவை இனி இல்லாமல் போகும் ஆபத்து உருவாகும். 

இந்தக் கட்டண உயர்வுகள் எல்லாம் மக்களின் தலையில் சுமத்தப்படும். ஒரு வேளை இரயில்வே நிலையத்தில் இருப்பது போல இனி பேருந்து நிலையத்திலும் பிளாட்பாரம் கட்டணம் புகுத்தப்பட்டாலும் அதிர்ச்சி அடைய வேண்டியது இல்லை.

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தை உருவாக்கரூ.38 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், தர்மபுரி ஆகியவை மாவட்ட தலைநகரங்கள். 
இங்கு இன்னும்கூடுதலாக செலவு மதிப்பீடு செய்யப்படும். 
மேலும் காஞ்சிபுரம், திருத்தணி, திருவண்ணாமலை ஆகியவை கோவில்கள் நிறைந்த நகரங்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று! 

இங்கு மக்கள் வந்து செல்வதும் அதிகமாக இருக்கும். இத்தகைய நகரங்களின் பேருந்துநிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பது என்பது இலாபக் கொள்ளைக்கு வழிவகுக்கும்.

தற்போதைய பேருந்து நிலையங்களில் குறைகள் இல்லாமல் இல்லை. 
மாநகராட்சி நிர்வாகம் ஊழலைஒழித்தால் இன்னும் சிறப்பாக பேருந்து நிலையங்களை பராமரிக்க முடியும். உதாரணத்திற்கு அனைத்து நகரங்களிலும் கழிப்பிடத்திற்கு 1 ரூபாய் வாங்க வேண்டும் என்பதுதான் முடிவு.

 ஆனால் பல நகரங்களில் ரூ.5 க்கு குறையாமல் வசூல் செய்யப்படுகிறது. 
மீதி பணம் ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளின் பைகளுக்கும் செல்கிறது. 
ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக எடப்பாடி அரசாங்கம் மக்கள் சேவையை ஒழிக்க முயல்கிறது.
நாட்டில் உள்ள 400 இரயில்வே நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மோடி அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. 
அந்த வழியில் எடப்பாடி அரசாங்கமும் பேருந்து நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கஎத்தனிக்கிறது. 

இது தனியார் மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டுக் கொள்ளைக்குதான் வழி வகுக்கும். மக்களுக்கு எவ்விதத்திலும் பயன்படாது. 
தமிழக மக்கள் அதனை அனுமதிக்கவும் கூடாது .
அரசையே தனியாரிடம் குத்தகைக்கு விட்டால் இவர்கள் எதற்கு அமைசசர்களாக ,முதல்வர்கள்,பிரதமர்களாக?
தங்களுக்கு நன்மை,சேவை  செய்வார்கள் என்று வாக்களித்து இவர்களைத்தேர்ந்தெடுப்பது மக்களுக்கு வெட்டி வேலைதானே ?
                                                                                                                                                                                    - அ.அன்வர் உசேன்
                                                                                                                                                                                                     தீக்கதிரில்.
===============================================================================================================================
கேரள மக்கள் நிவாரணத்துக்கு அரபு அமீரகம் வழங்கியுள்ள நிதி 700கோடிகள் .
மாநிலங்களில் வரிகளை வாங்கி 10000 கோடிகளை கங்கையிலும்,3000 கோடிகளை யமுனைக்கும் சுத்தம் செய்யவும் 3500கோடிக்கு சிலை அமைக்கும் மோடி அரசு லட்சக்கணக்கான மக்கள் பேரிடரில் தவிக்கையில் கொடுத்துள்ள நிதி வெறும் 500 கோடிகள்.


======================================================================================
ன்று,
ஆகஸ்ட்-22.

  • ரஷ்ய கொடி நாள்
  • சென்னை பட்டிணம்  உருவாக்கப்பட்ட தினம்(1639)
  • 12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்தன(1864)
  • தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் தங்கச் சுரங்கம்  கண்டுபிடிக்கப்பட்டது(1926)
  • நெப்டியூனின் முதல் கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது(1989)
=======================================================================================
 379வது பிறந்தநாள் வாழ்த்துகள் !
இந்தியாவிலேயே முதல் நகரசபை என்ற பெருமையை பெற்ற சென்னை இன்று தனது 379வது வயதை எட்டியுள்ளது.
1639 - சென்னை நகரத்தின் நிறுவன நாளாக இந்நாள் குறிப்பிடப்படுகிறது. விஜயநகரப் பேரரசின் கீழிருந்த இப்பகுதியில், தங்கள் வணிகத்துக்காக தொழிற்சாலை, கிடங்கு உள்ளிட்டவற்றுக்கான கட்டிடம் ஒன்றை அமைத்துக்கொள்ள, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி கொஞ்சம் நிலத்தைப் பெற்று, புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியது. 
அதற்கு முன்பே மெட்ராஸ்பட்டணம், சென்னப்பட்டணம் ஆகிய பெயர்களில் இரு கிராமங்கள் இப்பகுதியில் இருந்துள்ளன. இப்பகுதியில் விஜயநகரப் பேரரசின் ஆளுநராக இருந்த தமர்லா சென்னப்ப நாயக்குடு என்பரின் நினைவாகச் சென்னப்பட்டணம் என்ற பெயர் உருவானதாகக் கூறப்படுகிறது. 

அழகான என்ற பொருள்படும் சென்னு என்ற தெலுங்குச் சொல்லிலிருந்து சென்ன என்ற பெயர் வந்திருக்கலாம். 
ஆங்கிலேயர்களுக்கு முன்பே, 1500-களின் தொடக்கத்திலேயே மயிலாப்பூர் பகுதியில் ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகீசியர்கள்,
 1516 இலேயே லஸ் தேவாலயத்தையும், கி.பி.50-70 காலத்தில் இங்கு கிறித்தவ மதபோதனை செய்ததாக நம்பப்படுகிற புனித தாமஸ் என்பவரின் நினைவாக 1522 இல் சாவ் டோம் (தற்போது சாந்தோம்) தேவாலயத்தையும் கட்டினர். 
கடவுளின் தாய் என்று பொருள்படும் மாட்ரே-டி-டியூஸ் என்ற பெயரை போர்ச்சுகீசியர்கள் இப்பகுதிக்குச் சூட்டியதிலிருந்து மெட்ராஸ் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. 
ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெண்ணேஸ்வர மடம் என்ற இடத்தில் கிடைத்த, 1367 ஜூலை 21 தேதிய கல்வெட்டிலேயே, இப்பகுதியின் ஊர்ப்பெயர்களில் மாதரசன்பட்டணம் என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது. 
பழைய கற்காலத்திலேயே பல்லாவரத்திலும் பெருங்கற்காலத்தில் (கி.மு.1000) குன்றத்தூரிலும் மனிதர்கள் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 
சங்க காலத்தில் (கி.மு.300) குறிப்பிடப்பட்டுள்ள மயிலாப்பூரே திருவள்ளுவர் இருந்த இடமாகக் குறிப்பிடப்படுகிறது. காஞ்சிபுரத்தைத் தலைநக ரமாகக் கொண்டு பல்லவர்களாலும் பின்னர் சோழர்கள், பாண்டியர்களாலும் ஆளப்பட்ட இப்பகுதி, அதன்பின் விஜயநகரப் பேரரசின் கீழ் சென்றது. 
போர்ச்சுகீசியர்கள் காலத்திலேயே வளரத்தொடங்கிய இப்பகுதி, புனித ஜார்ஜ் கோட்டையின் வரவுக்குப்பின் விரைவாகவே வளர்ந்தது. 
1746 இல் இக்கோட்டையையும் சென்னையையும் ஆங்கிலேயர்களிடமிருந்து பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிவிட்டனர். 
1749 இல் மீண்டும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிற்கு வந்து, விடுதலைக்குப்பின் மெட்ராஸ் மாகாணத்தின் தலைநகரமாகியது.
தென் இந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை மாநகரம், ஆரம்ப காலத்தில் சிறு சிறு கிராமங்களாக பிரிந்து இருந்தது. சென்னை கடற்கரை பகுதியை ஒட்டியிருந்த இந்த கிராமங்கள் 'சென்னப் பட்டிணம்' என்று அழைக்கப்பட்டது.

1639 ஆம் ஆண்டு இங்கு வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்டுகளான பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், இந்தப் பகுதியை ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பு அமைக்க தேர்வு செய்து விலைக்கு வாங்கினார்கள். ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி இந்த நிகழ்வு நடந்ததால், அன்றைய தினமே சென்னையின் முதல் பிறந்த நாளாக கருதப்படுகிறது.
அதன்பின் ஓராண்டு கழித்து, இன்றைய தலைமை செயலகம் இயங்கி கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டையை மையப்படுத்தி ஆங்கிலேயர்களின் குடியிருப்புகளும் அமைக்கப்பட்டன. இதனால், ஆங்காங்கே பிரிந்து கிடந்த கிராமங்கள் ஒன்றிணைந்து நகரமாக உருவெடுக்க தொடங்கியது.

1688 ஆம் ஆண்டு சென்னை முதல் நகர சபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. அதனால், இந்தியாவிலேயே முதல் நகரசபை என்ற பெருமை சென்னைக்கு கிடைத்தது. 
ஆனால், ஆங்கிலேயர்கள் வசம் இருந்த புனித ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் 1746 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள். ஆனால், அடுத்த 3 ஆண்டுகளிலேயே அவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் சென்றது.
நகர சபையாக இருந்த சென்னை வளர்ச்சியடைய தொடங்கியதும், இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் ரயில் பாதைகள் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 
சென்னப் பட்டிணம் என்ற பெயர் அதன் பின்னர் மதராஸ் பட்டிணம், மதராஸ் மாகாணம் என்று பெயர் மாறியது.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, மதராஸ் மாகாணத்தின் தலைநகராக சென்னை விளங்கியது. 
1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மதராஸ் தமிழ்நாட்டின் தலைநகர் ஆனது. 
1996 ஆம் ஆண்டு மதராஸ், சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது.
ஆரம்ப காலத்தில் 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டிருந்த சென்னையில் இன்று ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். 
சாப்ட்வேர் நிறுவனங்கள், கார் உற்பத்தி தொழிற்சாலைகள், ரசாயன  நிறுவனங்கள் உள்ளிட்டவை சென்னையில் அதிகம் இருப்பதால், வேலைவாய்ப்புகளை நம்பி இங்கு அதிகம் பேர் தங்கியுள்ளனர். 
அவர்களை நம்பி வியாபாரிகளும் கடைகளை விரித்ததால் சென்னை மாநகரமாக மாறியது.

இப்படியாக வளர்ந்து பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கி வரும் வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை மாநகரம், தனது 379வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. 
வாழ்த்துகள்!
========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?