அம்பானி நாட்டை விட்டு ஓடி விடாமல் தடை விதியுங்கள்.


மல்லையா, நீரவ் மோடி வரிசையில் வெளிநாட்டுக்குத் தப்பலாம்!!
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும், பெருமுதலாளிகளில் ஒருவருமான அனில்அம்பானி, இந்தியாவை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ‘எரிக்சன்’ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

தங்களுக்குத் தரவேண்டிய 1600 கோடி ரூபாயை, அனில் அம்பானி இன்னும் தராதநிலையில், இப்பிரச்சனையில் அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடலாம் என்பதால், ‘எரிக்சன்’ நிறுவனம் இந்த தடை உத்தரவைக் கோரியுள்ளது.அனில் அம்பானி நடத்திவந்த ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்’ நிறுவனம் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்தது. 

சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடனும் ஏற்பட்டது. விஜயா வங்கியில் வாங்கிய அந்தக் கடனை இப்போதும் அம்பானி திருப்பிச் செலுத்தவில்லை.


இதனிடையே, ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்’ பயன்படுத்திய அலைக்கற்றை, மொபைல் கோபுரங்கள் உள்ளிட்டவற்றை விற்பதற்கு அனில் அம்பானி முடிவு செய்தநிலையில், அதனை ரூ. 25 ஆயிரம்கோடிக்கு, தனது ‘ஜியோ’ நிறுவனத்திற் காக வாங்கிக் கொள்வதற்கு அனில் அம்பானியின் அண்ணன் முகேஷ் அம்பானியேமுன்வந்தார். 

ஆனால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஏற்கெனவே பயன்படுத்திய அலைக்கற்றைக்கான கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 900 கோடியை, தொலைத்தொடர்பு அமைச்சகம் கேட்டதால், இது நடக்கவில்லை.

இதுதவிர, பிரபல ஸ்வீடிஷ் தொலைத் தொடர்பு சாதன உற்பத்தி நிறுவனமான எரிக்சனிடம், அனில் அம்பானி செய்து வந்த வர்த்தகத்தில், ரூ. 1600 கோடி பாக்கிவிழுந்தது. 
இவ்விஷயத்தில் எரிக்சன் நீதிமன்றம் சென்றபோது, செப்டம்பர் 30-க்குள்முதல் தவணையாக ரூ. 590 கோடியை வழங்குவதாக அனில் அம்பானி ஒப்புக் கொண்டார். 

நீதிமன்றமும் இதுதொடர்பாக அனில் அம்பானியை எச்சரித்திருந்தது. 

ஆனால், சொன்னபடி அனில் அம்பானி பாக்கியைத் தரவில்லை.இதையடுத்து எரிக்சன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளது. 

அதில், “நீதிமன்ற உத்தரவைரிலையன்ஸ் குழுமத்தினர் மதிக்காமல் நடந்து கொள்கின்றனர்; அதனால் நாங்கள்அந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம்; எனவே, ரிலையன்ஸ் குழும நிர்வாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.


இவருக்குத்தான் நிறுவனம் துவக்கிய 16 நாட்களில் ரபேல் விமான ஒப்பந்தத்தை மோடி அரசு கொடுத்து அழகு பார்த்ததுள்ளது.
மல்லையா,மோடிகள் போன்று அம்பானியும்  ஓடிவிடும் முன்னர் விழித்துக்கொள்ளுமா இந்திய அரசு.?
இந்த அம்பானிக்கு எதிரான செய்தியை நம் பொறுப்புமிக்க ஊடகங்கள் வெளியிடவில்லை என்பது மிகப்பெரிய கேவலம்.
மோடி அரசுக்கு ஆதரவு கொடுப்பது என்பது வேறு.ஒரேடியாக கொத்தடிமையாக ஜால்றா அடிப்பது வேறு தொழில் என்பதை ஊடகங்கள் உணர வேண்டும்.ஸ்டெர்லைட்,மீத்தேன் போன்றவற்றில் மக்கள் குறை பதிவு செய்யாமல் அதிகார,முதலாளிகள் வர்க்க தரப்பை மட்டுமே வெளிப்படுத்தும் ஊடகங்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

விவசாயிகள் மீது துல்லியத் தாக்குதல்!

மோடி அரசே விவசாயிகளுக்கு அளித்தவாக்குறுதி என்னாச்சு என்ற கேள்வியோடு தில்லியை நோக்கி பேரணி சென்ற விவசாயிகளின் மீது மத்திய அரசு காவல்துறையை ஏவி துல்லிய தாக்குதல் நடத்தியிருக்கிறது. 

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பாஜக விவசாயிகளை மீட்டெடுப்போம் என்ற பெயரில் 3 முக்கிய வாக்குறுதிகளை அளித்திருந்தது. 

அதில் விவசாய விளைபொருட்களுக்கு உற்பத்தி செலவை போல் ஒன்றரை மடங்கு விலை கொடுப்போம். விதை, பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி உள்ளிட்ட அனைத்து இடுபொருள்களையும் குறைந்த விலையில் அளிப்போம். 
விவசாயத்திற்கு நிதிமற்றும் பொதுச் செலவினங்கள் அதிகரிக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தது.

 ஆனால் மோடி பிரதமராக ஆட்சிப்பொறுப்பேற்று 4 வருடங்கள் முடிந்த நிலையிலும் இதுவரை விவசாயிகளுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 

விளைபொருட்களுக்கான விலை இரட்டிப்பாகும் என எதிர்பார்த்த நிலையில் விவசாயிகளின் தற்கொலையே இரட்டிப்பாகியிருக்கிறது. 

அதுமட்டுமா 2015 பிப்ரவரி 20ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு அளித்த வாக்குறுதி படி விளை பொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விளை என்னாச்சு என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

வாக்குறுதி எல்லாம் சும்மாதான், ஒன்றரை மடங்கு விலை என்பது சாத்தியமே இல்லை என சாதித்தது.
ஆனால் மறுபுறம், மோடி அரசு இந்தியாவின்ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்களின் கைகளுக்கு மடைமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. 
விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய விதை மற்றும் உரத்திற்கான மானியம் கூட அதனை உற்பத்தி செய்யும் கார்ப்பரேட்களுக்கு நேரடியாக செல்கிறது. 

விவசாயத்திற்கான தண்ணீரின் உரிமையும் கூட படிப்படியாக கார்ப்பரேட்களின் வசம் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் எங்கள் கோரிக்கை மீதும் செவிசாயுங்கள் என உத்தர்கண்ட் விவசாயிகள் ஹரித்துவாரில் இருந்து 10 நாட்கள் நடைபயணமாக தில்லிக்கு வந்தனர். 

ஆனால் அவர்களின் கோரிக்கைதான் என்ன என்று கேட்பதற்கு மாறாக, மோடி அரசு தில்லி எல்லையிலேயே வைத்து விவசாயிகள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை தொடுத்திருக்கிறது. 

ஒருபுறம் இந்தியாவின் முதுகெலும்பேகிராமப்புற விவசாயிகள்தான் என்று சொன்ன அகிம்சாவாதிக்கு அஞ்சலி செலுத்துவது போல்,போஸ் கொடுத்துக் கொண்டே,மறுபுறம் விவசாயிகள் மீது தடியடியை ஏவிவிட்டு குருதிவெள்ளம் பெருக்கெடுத்து ஓடச்செய்யும் கொடூரத்தை மத்திய பாஜக அரசு அரங்கேற்றியிருக்கிறது. 

டெல்லி போலீஸ் பாஜகவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் வருகிறது.

தடியடி நடத்திய பின்தான் பேச்சுவார்த்தை என்பதன் நோக்கம் என்ன?

அப்போதும் கூட விவசாய கடனை தள்ளுபடிசெய்வது குறித்து எந்த உத்தரவாதமும் மோடி அரசு அளிக்கவில்லை. 

ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வராக்கடன் ரூ. 3லட்சத்து 16 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது. 

ஆக மோடி அரசு கார்ப்பரேட்களுக்கான அரசே தவிர, விவசாயிகளுக்கான அரசு அல்ல என்பதை மீண்டும் தடியடி மூலம் நிரூபித்திருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

46 வது உச்ச நீதிமன்றத்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்
உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவடைந்தது. 
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இன்று பதவியேற்றார்.அவருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.   ரஞ்சன் கோகோய் உச்சநீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதி ஆவார்.
1954-ம் ஆண்டு பிறந்த ரஞ்சன் கோகோய் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். 
1978-ல் பார் கவுன்சிலில் இணைந்த கோகோய், குவாஹாட்டி ஐகோர்ட்டில் பணியாற்றி வந்தவர். கடந்த 2010 செப்டம்பரில் பஞ்சாப், ஹரியாணா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். 2011-ல் பஞ்சாப் – ஹரியானா கோர்ட் தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். 
பின்னர் 2012, ஏப்ரலில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முன்னாள் சிபிஐ அதிகாரி அளித்த வாக்குமூலத்தை விசாரித்த அமர்வில் இவர் இடம்பெற்றிருந்தார். 

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாகச் செயல்படுகிறார் என்று கடந்த ஜனவரி மாதம் போர்க்கொடி உயர்த்திய நீதிபதிகளில் ரஞ்சன் கோகோயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற ரஞ்சன் கோகாய் சொத்து மதிப்புக்களை அட்டர்னி ஜெனரல் வேணு கோபால் நேற்று வெளியிட்டார். 
ரஞ்சன் கோகாய் வீட்டில் எந்த தங்க நகையும் கிடையாது என்றும், அவரது மனைவிக்கு திருமணத்தின்போது பெற்றோர் அளித்த நகைகள் மட்டுமே உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோகாயின் மனைவியை விட, மிஸ்ராவின் மனைவியிடம் கூடுதலாக நகைகள் உள்ளன.
ரஞ்சன் கோகாய் மற்றும் தீபக் மிஸ்ராவிடம் சொந்த வாகனங்கள் ஏதும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக இருவரும் அரசு வாகனங்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
அதே சமயம் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற கோகாய்க்கு சொந்தமாக வீடோ, வங்கிக் கடனோ, சொத்துக்கள் அடமானமோ ஏதும் இல்லை. 
எல்ஐசி பாலிசி, வங்கிச் சேமிப்பு என ரூ.30 லட்சம் மட்டுமே உள்ளது.
=======================================================================================
ன்று,
அக்டோபர்-04.
  • உலக வன விலங்குகள் தினம்
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த தினம்(1884)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம்(1904)
  • மெக்சிகோ குடியரசானது (1824)
  • முதலாவது செயற்கை கோள் ஸ்புட்னிக் 1 பூமியை சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது(1957)
========================================================================================
தியாகி  "சுப்பிரமணிய சிவா"
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. 
மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோராவர்.

மற்ற இருவரைப் பற்றி இந்த வலைத்தளத்தில் வேறோர் இடத்தில் வரலாற்றைக் கொடுத்திருக்கிறோம். இப்போது ‘வீரமுரசு’ எனப் புகழப்படும் சுப்பிரமணிய சிவா பற்றி பார்ப்போம். வீரத்துறவி என்று தலைப்பில் கொடுத்துவிட்டு, இவர் ஓர் சுதந்திரப்போராட்ட வீரர் என்கிறீர்களே என ஐயப்பாடு எழலாம். 
ஆம்! இவர் அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே சுதந்திரத்துக்காகப் போராடினார், ஆகையால் இந்தத் தலைப்பு அவருக்கு மிகவும் பொருந்தும்.
இவர் பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு. 
இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள். இவருக்கு இரு சகோதரிகள் அவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள். ஒரு சகோதரரி வைத்தியநாதன் என்று பெயர்.
 இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார். தூத்துக்குடியில் போலீஸ் ஆபீசில் அட்டெண்டராக வேலை பார்த்தார். 
வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.அவர் நினைவாக அவ்வூரின் பேருந்து நிலையம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. 
இந்த தியாகிக்குச் செலுத்தும் அஞ்சலி அது. சிறு வயதில் வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். 1906இல் கர்சான் வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிளந்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. 
சுதேச உணர்வு மேலோங்கியது. 
எங்கும் ‘வந்தேமாதரம்’ எனும் சுதந்திர கோஷம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கினார். சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொண்டது.
 இவர்களின் சுதேச உணர்வைத் தன் ‘சுதேச கீதங்களால்’ பாரதியார் தூண்டிவிட்டார்.
சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார். அவர் பேச்சில் அனல் வீசியது. அந்த சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபின் சந்திர பால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார். 
தெற்கில் இம்மூவரின் மேடைப்பேச்சு, சென்னையில் பாலரின் சொற்பொழிவு இவை சேர்ந்து சுதந்திர நாதம் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. 1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் கை ஓங்கியது. 
அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் பாடுபட்டார். 
தொழிலாளர் பிரச்சினையிலும் இவர் கவனம் சென்றது. அந்தக் காலத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தித் தலைவர்கள் பேசிவந்தார்கள். சிவாவும் தன் பேச்சு துவங்கு முன்பாக ‘வந்தேமாதரம்’, ‘அல்லஹுஅக்பர்’, என்று முழக்கமிடுவாராம்.
தெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி. சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். 
அந்த வழக்கில் வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றதும், அப்பீலில் அது குறைக்கப்பட்டதும் நமக்குத் தெரியும். சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் முதலில் ஆறாண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்தத் துன்பம் சொல்லத் தரமன்று. சிறை இவருக்கு அளித்த சீதனம் பார்த்தவர் அஞ்சும் தொழுநோய். 
இதனை அவர் “கொடியதோர் வியாதி கொல்லுது என்னை” என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். 1912இல் இவர் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். 
சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன் ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஒரு மேஜை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட் ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார். 
அங்கு மக்கள் கூடும் ஒரு நல்ல இடத்தில் மேஜையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம். 
அப்போது அங்கு கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சார்ம் செய்வாராம். இப்படித் தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார்.
இரண்டாம் முறையாக இவர் இரண்டரை வருடங்கள் நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். 
இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். “ஞானபானு” எனும் பெயரில் இவர் ஓர் பத்திரிகை நடத்தினார். 
மகாகவி பாரதியும், வ.வெ.சு.ஐயரும் இந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள். அதன் பின்னர் ‘பிரபஞ்சமித்திரன்’ எனும் பெயரிலும் இவர் ஒரு பத்திரிகை நடத்தினார். 
இரண்டாம் முறை இரண்டரை ஆண்டுகள் சிறை சென்று விடுதலையானபின் தொழுநோயின் கடுமை அதிகமாக இருந்ததாலும் இவர் மிகவும் வருந்தினார். 
சேலம் மாவட்டத்தில் அப்போது இருந்த பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார். 

அதற்காக சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923இல் அடிக்கல்லும் நாட்டினார்.
மறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஒரு ஆண்டு சிறைவாசம். அதுகுறித்து இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். 
இவர்  காந்தியை  ஆதரிக்கவில்லை. வ.உ.சியைப்போலவே திலகர்,நேதாஜி ஆதரவாளர்.
ரஷ்யாவைப்போல மக்கள் புரட்சியே  இவரது எண்ணம். 
இவர் சிறையில் பெற்ற  தொழுநோயினால் பாதிக்கப்பட்டதால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது. 
எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடியினால் கால்நடைப் பயணம் இவற்றல் ஓய்ந்து போனார். 
இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியை  ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் வ.உ.சியைப்போலவே இவரும்  ஒதுக்கப்பட்டார். 
மனம் உடைந்த சிவா 23-7-1925இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார். 
வாழ்க தீரர் சுப்பிரமணிய சிவாவின் புகழ்!
=============================================================================================

"திருப்பூர் குமரன்"

“கொடிகாத்த குமரன்” என்று பள்ளிக்கூட பாடங்களில் எல்லாம் எழுதப்பெறும் திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. 
இவரது சொந்த ஊர் ஈரோட்டை அடுத்த சென்னிமலை. தறி நெய்யும் நெசவாளி குடும்பம் குமாரசாமியினுடையது. சென்னிமலை கைத்தறித் துணி உற்பத்திக்குப் பெயர் பெற்றது. இங்கு நாச்சிமுத்து முதலியார் கருப்பாயி அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் குமாரசாமி.
இவர் பிறந்தது 1904 , 3அக்டோபர் மாதம். 
தறியில் துணி நெய்துப் பிழைக்கும் மிகவும் ஏழ்மையான குடும்பம் குமாரசாமியினுடையது.
சென்னிமலையில் தனது ஆரம்பகால கல்வியை ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். மேலே படிக்க வசதி இன்மையால் பள்ளிப்பாளையத்தில் இருந்த தாய்மாமன் வீட்டுக்குச் சென்றார். அங்கும் இவரது குலத் தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டார். ஈரோடு சென்று அங்கு நூல் வாங்கிக் கொண்டு வந்து துணி நெய்து மீண்டும் ஈரோடு சென்று விற்று பிழைப்பு நடத்தினார். 
அப்போதெல்லாம் போக்கு வரத்துக்கு போதிய வசதிகளோ அல்லது பேருந்து வசதிகளோ இல்லாத நிலையில் இவர் மாட்டு வண்டிகளிலோ அல்லது சுமையைத் தலையில் சுமந்து கால் நடையாகவோ சென்று வந்தார். இப்படி ஓர் ஐந்து ஆண்டுகள் இவர் ஓட்டினார். இந்தத் தொழிலில் போதிய வருமானம் இல்லாமையாலும், அலைச்சல் ஒத்துக் கொள்ளாததாலும், இவர்கள் குடும்பம் திருப்பூருக்குக் குடி பெயர்ந்தது. 
அங்கு இவர் தனக்குப் பழக்கமான தறியடிக்கும் தொழிலைச் செய்யாமல், சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூர் ரங்கசாமிக் கவுண்டர் ஆகியோர் நடத்திய தரகு மண்டியில் கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தார். பஞ்சு எடைபோட்டு வாங்குவது கொடுப்பது என்பதில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்பவர்களைத்தான் முதலாளிகள் நியமிப்பார்கள், அப்படிப்பட்ட நேர்மையாளராக இருந்த குமாரசாமிக்கு அந்த வேலையை அவர்கள் அளித்திருந்தார்கள்.
பஞ்சு மண்டி வேலை முடிந்ததும், பொது வேலைகளிலும் ஈடுபட்டு நாட்டுச் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் குமாரசாமி. 
அப்போது திருப்பூரில் இயங்கி வந்த தேசபந்து வாலிபர் சங்கத்தில் இவர் உறுப்பினரானார். இவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர், எனவே பஜனைப் பாடல்கள், நாடகம் போடுதல், கூட்டம் போட்டுப் பேசுதல் என்று நடவடிக்கைகளில் ஈடுபடலானார். 
இவரது பத்தொன்பதாவது வயதில் இவருக்குத் திருமணம் நடந்தது. அப்போது பதினான்கே வயதான ராமாயி இவரது மனைவியானாள். ஆறாண்டு காலம் இவரது திருமண வாழ்வு இனிதே நடந்தும் மகப்பேறு இல்லை. காந்தி ஐந்து முறை திருப்பூருக்கு வந்திருக்கிறார். கதர் இயக்கம் இங்குதான் சிறப்பாக நடந்து வந்தது. 
குமாரசாமியும் கதர் இயக்கத்தில் கலந்து தலையில் கதர்க் குல்லாய், கதர் உடை என்று அந்த நாள் காங்கிர தொண்டர்களின் உண்மைத் தோற்றத்தில் விளங்கினார்.
1932இல் காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. காந்தி கைது செய்யப்பட்டிருந்தார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. 

சட்ட மறுப்பு இயக்கம் அதனைச் சார்ந்த மறியல் போன்றவைகள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின. பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அடக்குமுறை தலை விரித்தாடியது.
ஆங்கிலேய அரசு அடக்குமுறையை ஏவிவிடவும், அதனை எதிர்த்து மக்களின் போராட்டமும் மேலும் மேலும் வலுவடைந்தது. 
எல்லா இடங்களைப் போலவே திருப்பூரிலும் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது, காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பூட்டி சீலிடப்பட்டது.
இந்த தடைகளையெல்லாம் மீறி திருப்பூரில் 10-1-1932இல் ஓர் ஊர்வலம் நடத்த முடிவாகியது. தேசபந்து வாலிபர் சங்கத்தினர் முன்னிலையில் இருந்து ஏற்பாடுகளைச் செய்தனர்.
அந்த ஊர்வலத்துக்கு அவ்வூர் செல்வந்தரும் மிகப் பிரபலமாயிருந்தவருமான ஈஸ்வர கவுண்டர் தலைமை ஏற்பது என முடிவாகியது. 
ஊர்வலத்துக்கு முதல் நாள் மக்களிடம் செல்வாக்குள்ள பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தலைமை வகிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த ஈஸ்வர கவுண்டர் வரவில்லை. எனவே புகழ்பெற்ற தியாகி பி.எஸ்.சுந்தரம் என்பார் அவரைத் தேடி அவர் வீடு சென்றார், பின்னர் அவரது பஞ்சாலைக்குச் சென்றார். அங்கு அவர் இருப்பதைப் பார்த்தார். 
ஊர்வலத்துக்கு வர அவர் மறுத்து விட்டார்.
இந்தச் சூழ்நிலையில் தியாகி பி.எஸ்.சுந்தரம் அவர்களே ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். அவரது தலைமையில் குமாரசாமி, இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார், அப்புக்குட்டி எனும் மாணவன், நாராயணன் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்று கொண்டிருந்தது. வீரர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்துச் சென்றனர்.
சாலையில் கூடியிருந்த மக்கள் என்ன நடக்குமோ இந்த வீரர்களை போலீஸ் அரக்கர்கள் எப்படியெல்லாம் தாக்குவார்களோ என்று அஞ்சியபடி பார்த்துக் கொண்டிருந்தனர். 
ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து போலீஸ் நிலையத்தை நெருங்கியது.
அப்போது போலீஸ் நிலையத்திலிருந்து இரு உயர் அதிகாரிகள் உட்பட சுமார் முப்பது நாற்பது போலீஸ்காரர்கள் கைகளில் தடியுடன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது பாய்ந்தனர். ஊர்வலத்தில் வந்த தொண்டர்களைப் போல பல மடங்கு அதிகமான போலீசார் அந்த சிறு ஊர்வலத்தில் வந்தவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துப் புடைத்தனர். 
அவர்கள் கைகள் சோர்ந்து ஓயும் வரை அடித்தனர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன. தொண்டர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்து உயிர் பிரியும் நிலையிலும் பாரத மாதாக்கு ஜே என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.
 குமாரசாமியின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. 
ரத்தம் பீரிட்டு எழுந்து கொட்டியது. அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பு மட்டும் பிடித்த பிடி தளரவேயில்லை. வாய் ஜே கோஷம் போட்டபடி இருந்தது. குமாரசாமி எனும் அந்த வீரத்தியாகி உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் மட்டும் கீழே விழவேயில்லை.
நினைவு இழந்து தரையில் வீழ்ந்து கிடந்த குமாரசாமியைத் தன் பூட்ஸ் கால்களால் போலீசார் உதைத்தனர். சிலர் அவன் உடல் மீது ஏறி மிதித்தனர். 
அவன் கை கெட்டியாகப் பிடித்திருந்த கொடிக் கம்பை ஒரு போலீஸ்காரர் சிரமத்துடன் பிடித்து இழுத்து வீசி தரையில் எறிந்தார். குமாரசாமியும், ராமன் நாயரும் ரத்தமும் நிணமுமாக தரையோடு தரையாக வீழ்ந்து கிடந்தனர். 
மண்டையில் அடிபட்ட பி.எஸ்.சுந்தரத்துக்கு காட்சிகள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர காதில் எந்த ஒலியும் கேட்கவில்லை. 
போலீசார் அடித்த அடியில் அவரது கேட்கும் சக்தி முழுமையாகப் போய்விட்டது தெரிந்தது. அவரது உடலில் கை, கால்கள், இடுப்பு, விலா ஆகியவிடங்களில் மொத்தம் பதினான்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. 
இந்த நிகழ்ச்சியின் விளைவாக தியாகி பி.எஸ்.சுந்தரம் தன் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவராக, செவிடராக இருக்க நேர்ந்த கொடுமையும் நடந்தது.
அடிபட்டு வீழ்ந்த சிலரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். மற்றவர்களை அவர்களது உற்றார் உறவினர் எடுத்துச் சென்று விட்டனர். இவ்வளவு அடிபட்ட காந்தியத் தொண்டர்கள் போலீஸ் மீது கல் எறிந்து தாக்கியதாகவும், குழப்பம் விளைவித்ததாகவும், அதனால் போலீஸ் தடியடி நடத்தியதாகவும் வழக்கு பதிவாகியது. 
சுந்தரம், குமாரசாமி, ராமன் நாயர் ஆகியோர் உடல்களைத் தூக்கி சாமான்களை வீசுவது போல ஒரு வண்டியில் வீசினார்கள். மரண அடிபட்ட குமாரசாமிக்கு மண்டை உடைந்து ஏதோவொன்று மூளைக்குள் சென்று விட்டது. நினைவு இல்லை. ரத்தம் நிற்கும் வழியாக இல்லை. சிறிது நேரம் துடித்துக் கொண்டிருந்த குமாரசாமியின் உயிர் 11-1-1932 அன்று இரவு தன் மூச்சை நிறுத்திவிட்டுப் பிரிந்து சென்றது. 
அந்த வீரத் திருமகனின் உடல் ஒரு துணியால் கட்டப்பட்டு மூங்கிலால் தூக்கப்பட்ட ஒரு தூணியில் கிடத்தப்பட்டு தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடம் எது? போலீசார் செய்த ரகசிய சவ அடக்கத்தினால், அது எந்த இடம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது. 
ஒரு வீர தேசபக்த இளைஞனின் உடல், அவன் பிறந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டதே தவிர, அவன் விளைத்த வீரப் போரின் விவரத்தை யாராலும் மறைக்க முடியாது. முடியவும் இல்லை. 
வாழ்க திருப்பூர் குமரனின் புகழ்!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?