இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வியாழன், 14 டிசம்பர், 2017

உம் பணம் .... இனி எம் பணம்....!

பணமதிப்பிழப்பு, திட்டமிடா ஜிஎஸ்டி வரி  மூலம் இந்திய மக்களை  போட்டுத்தாக்கிய உலக பொருளாதார வல்லுநர் மோடி தனது புதிய குண்டாந்தடியை மக்கள் தலையில் போட தூக்கியுள்ளார்.

வங்கியில் சாமானிய மக்கள், நடுத்தர குடும்பத்தினர் போட்டுள்ள டெபாசிட் பணத்தை முழுவதுமாக உடனே திருப்பித்தர வேண்டிய அவசியம் வங்கிகளுக்கு இல்லை என்பது போன்ற சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.

 ஏற்கனவே வங்கி இருப்பு 1000க்கு குறைந்தால் அபராதம் என்ற கொள்ளை இருக்கையில் இது அதைவிட பகல் கொள்ளை அல்லது தீவட்டிக்கொள்ளையை மிஞ்சிய கொள்ளை.


வங்கிகளை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், வங்கிச் சீர்திருத்தங்கள் செய்யவும், “வங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு மசோதா 2017 ’’ என்ற மசோதாவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. 


இந்த மசோதாவில் சாமானிய மக்களின் சேமிப்புகளையும், டெபாசிட்களையும் முடக்கும் வகையில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால், வங்கிகளை இழப்பில் இருந்து காக்கும் வகையில் ‘தீர்மானம் கழகம்(ரெசலூஷன் கார்பரேஷன்) என்ற அமைப்பு உருவாக்கப்படும்.


இந்த தீர்மானம் கழகம் வங்கிகளை திவாலாகவிடாமல் காப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும். வாராக்கடன் வசூலில் வங்கிகளுக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. 


வாராக்கடன்வசூலிப்பில் வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துப் பார்த்தும் அதில் 20 சதவீதம் மட்டும் வெற்றி பெற்றுள்ளன. 
இந்நிலையில், அரசு வங்கிகளின் திவால் சூழலை உணர்ந்த மத்திய அரசு ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு தொகையாக வழங்குவதாக உறுதியளித்தது.

 வங்கிகள் எதிர்காலத்தில் திவாலாகா வகையில் காப்பதற்காக தீர்மானம் கழகம் உருவாக்கப்பட உள்ளது.

இந்த “வங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு மசோதா 2017 ’’ என்ற மசோதாவை மோடி தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வந்தது. ஆனால், தற்போது, இந்த மசோதா நாடாளுமன்றத்தின் தேர்வுக்குழுவின் முன் பரிசிலனைக்கு இருக்கும் நிலையில், வரும் 15ந்தேதி தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாவில் பிரிவு 52ன்படி, தீர்மானம் கழகத்துக்கு ஏராளமான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வங்கியின் அடிப்படை கடமையைக் கூட ரத்து செய்யும் அதிகாரம் இதற்கு இருக்கிறது.


அதாவது, நாம் வங்கியில் வைத்திருக்கும் டெபாசிட் தொகையை, நாம் கேட்கும் போது உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்பது இப்போது வங்கிகளின் கடமையாகும்.


இனி அப்படி இருக்காது. அந்த உத்தரவாதத்தை ரத்து செய்வதற்கு தீர்மானம் கழகத்துக்கு (Resolution Corporation) இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.


இந்த சட்டம் மூலம்  ஒரு லட்சத்துக்குமேல் வங்கியில் நீங்கள் வைத்திருந்தால் நீங்கள் ஒரு லட்சத்துக்குத்தான் வரவு செலவு வைக்க முடியும்.


அதற்கு மேல் உள்ள பணத்தை வங்கி நிர்வாகம் தனது செயல்பாடுகளுக்கு உபயோகிக்க முடியும்.வங்கி நினைத்தால்தான் அதை பாவம் என்று உங்களுக்கு வழங்கும்.

அதாவது அது உங்கள் பணமாக இராது.வங்கி பணமாக அது வங்கிக்கு தேவைப்படும் வரை கருதப்படும்.அதற்கு இந்த சட்டம்  வகை செய்கிறது.


 உதாரணமாக மகன்,மகளின் திருமணம், படிப்புச் செலவுக்காக ரூ.10 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்து இருப்போம். முதிர்காலம் முடிந்தபின், அந்த தொகையை திருப்பிக் கேட்டால், வங்கிகள் அதை முழுமையாக உடனடியாக கொடுக்க வேண்டியது கடமையாகும். 

ஆனால், தீர்மானம் கழகம் உத்தரவிட்டால், அந்த தொகையை வங்கிகள் முழுமையாக உடனடியாக வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

டெபாசிட் தொகையில், குறிப்பிட்ட பகுதியை வங்கி தனது மூலதனத்துக்கு எடுத்துக் கொள்ளும் அல்லது கூடுதலாக 10 ஆண்டுகளுக்கோ அல்லது 20 ஆண்டுகளுக்கு பாசிட்டாகமாற்றிக்கொள்ளும். 

அதற்கு  உங்கள்  அனுமதி, ஒப்புதல் தேவையே இல்லை. 
அதற்கு கூடுதல் வட்டி தரவும் வேண்டியதில்லை.

பாவப்பட்டால்  அப்போது நடப்பில் இருக்கும் பணவீக்கத்துக்கு ஏற்ப வட்டி தர தீர்மானம் கழகம் முடிவு எடுக்கும்.ஆனால் அதற்கு எந்த உறுதியும் கிடையா.


அதாவது நம்முடைய சேமிப்பின் பகுதியை நம்முடைய அனுமதி இல்லாமல் வங்கிகள் எடுத்துக் கொண்டு, முழுமையாக உடனடி தேவைக்கு தராமலும் மறுக்கலாம். 
இது சட்டமாக நிறைவேறிவிட்டால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது.


 மசோதாவை நிறைவேற்ற போதுமான கோரம் மக்களவை,மாநிலங்ககளவை இரண்டிலுமே பாஜகவுக்கு உள்ளது என்பதுதான் கோரமான உண்மை.


மகன், மகள் திருமணத்துக்காகவும், படிப்புச் செலவுக்காகவும், வீடு கட்டவும், நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் சேர்த்து வைத்த டெபாசிட் தொகையை முடக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.


மேலும், இந்த சட்டத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில்,மூத்த குடிமக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள், அவர்களின் டெபாசிட்களுக்குதான்அதிகமான ஆபத்து ஏற்படும்.

இம்மசோதா கொண்டுவர முக்கிய காரணம் வராக் கடன் தானாம் .

இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் வங்கிகள் தள்ளாடும் நிலைக்கு வரக்காரணம் 12 பெருசுகள் தானாம்.

அவர்கள் பெயர்களைக்கேட்டால் உங்களுக்கு இந்த அரசின் மீதும் ,வங்கிகள் மீதும்  வரலாம்.
அம்பாணிகள்,அதானி ,விஜய் மல்லையா போன்ற பண முதலைகள்தான்.

இவர்கள் உலக,இந்திய அளவில் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 100க்குள் இருப்பவர்கள்.
பணக்காரர்கள் பட்டியலில் இவர்கள் பெயரை வெளியிடுவார்கள் கடன்காரர்கள் பட்டியலை வெளியிட மறுக்கிறார்கள்.

இந்த பணமுதலைகள் நினைத்தால் ஒரு நாளில் கடனை தீர்க்கலாம்.
அல்லது வங்கிகள் இவர்கள் அடமான சொத்துக்களை விற்று கடனை தீர்க்கலாம்.

ஆனால் இதை செய்யாமல் தங்கள் எதிர்கால வாழ்வுக்கு,குழந்தைகள் கல்விக்கு,திருமணத்துக்கு நம்பிக்கையான இடம் என்று பணத்தை வங்கிகளில் போட்டு எதிர்கால கனவுகளில் இருக்கும் அப்பாவி மக்கள் பணத்தில் விளையாடுவது எந்த வகையில் சரியாகும்.

அரசின் இந்த கொடுமையான சட்டத்துக்கு  வங்கிகளும், வங்கி ஊழியர்களும் எதிர்த்து குரல் கொடுத்தாலும் உலக பொருளாதார நிபுணர்கள் மோடி,அருண் ஜேடலி அரசு கண்டு கொள்ளாமல் வரும் மக்களவை கூட்டத்தொடரில் வெளியே தெரியாமல் சட்டம் நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது.

இரு அவையிலும் நம்மக்கள் கொடுத்த பெரும்பான்மை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை செல்லாக்காசாக்கி விடும்.

மக்கள் கொடுத்தப் பெரும்பாண்மையை வைத்து மக்களுக்கே   ஆப்பு வைப்பதில் மோடியை யாரும் விஞ்சமுடியாது.

மக்களுக்காக அரசா ,அரசுக்காக மக்களா?என்றால் மோடி சொல்லும்  பதில் இந்திய மக்கள் அனைவருக்கும் தெரிந்ததுதானே?

=======================================================================================
ன்று,
டிசம்பர்-14.


  • இந்திய எரிபொருள் சேமிப்பு தினம்
  • ரைட் சகோதரர்கள், தமது வான்வெளிப் பயணத்தை முதல் முறையாக சோதித்தனர்(1903)
  • ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது(1939)
  • ஐநா.,வின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவு (1946)
 சோவியத் ஒன்றியம்
‘‘ஐரோப்பா கண்டத்தை ஒரு பெரும் பூதம் துரத்திக் கொண்டிருக்கிறது. அந்த பூதத்தின் பெயர் கம்யூனிசம்….’’
– சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு மாமேதை காரல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற தனது நூலை இந்த வரிகளுடன் தான் துவக்கினார். 
இன்றைக்கும் அது பொருந்துகிறது. கம்யூனிசம் என்ற பூதத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் எப்படி இருக்கும்? 
அது லெனின் என்ற மாமேதையைப் போல இருக்கும்; ஸ்டாலின் என்ற மாவீரனைப் போல இருக்கும்… என்று கூறலாம். ஆனால், கம்யூனிசம் என்ற பூதம் இந்த இரண்டு பெரும் தலைவர்களையும் விட பிரம்மாண்டமானது. அத்தகைய பிரம்மாண்டத்திற்கு உருவம் கொடுத்தால் எப்படி இருக்கும்? அது சோவியத் ஒன்றியத்தைப் போல இருக்கும்.

சோவியத் ஒன்றியம் என்றொரு நாடு இருந்தது. சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் என்பது அதன் முழுப்பெயர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு USSR என்ற எழுத்துக்கள் இந்த உலகம் முழுவதும் அனைத்துத்தரப்பு மக்களையும், அன்றாடம் உழைத்து வாழும் ஒவ்வொரு தொழிலாளியையும், ஒவ்வொரு விவசாயியையும், ஒவ்வொரு இளைஞனையும் மாணவனையும் சுண்டி இழுத்தது; கவ்விப் பிடித்தது என்று கூறினால் இப்போது விந்தையாக இருக்கும்.

மனித குலம் தனது வரலாற்றில் முதன் முதலாக பார்த்த பிரம்மாண்டம்; அதிசயம்; தொழிலாளி வர்க்கம் நினைத்தால் இந்த உலகின் கட்டமைப்பையே தலைகீழாகப் புரட்டிப் போடும்; புரட்சி நடத்தும் என்பதை உணர்த்திய மகத்தான வரலாறுதான் சோவியத் ஒன்றியம்.
USSR என்று பளிச்சிட்ட எழுத்துக்கள் கொண்ட நாடு – சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் என்ற நாடு – இன்று இல்லை. ஒரே ஒன்றியமாக இருந்த குடியரசுகள் 1992இல் ஏகாதிபத்திய சதிகாரர்களின் சூழ்ச்சியால் தனித்தனி குடியரசுகளாக பிரிந்தன. அதில் மிகப்பெரும் குடியரசு நாடு ரஷ்யா. ரஷ்ய கூட்டமைப்பு என்ற பெயரில் இன்று நாம் பார்க்கிற ரஷ்யா, கடந்த 25 ஆண்டுகளாக – முதலாளித்துவ நாடாக இருந்தாலும் ரஷ்ய மக்களின் வாழ்வில், உணர்வில் கலந்திருக்கிறது சோவியத் ஒன்றியம்.
சோவியத் ஒன்றியத்தைத்தான் சிதைத்துவிட்டோமே… அந்த ஒன்றியத்தில் இணைந்திருந்த உக்ரைன் போன்ற குடியரசு நாடுகளை படிப்படியாக ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக மாற்றிவிட்டோமே… எஞ்சியிருக்கும் ரஷ்யாவால் என்ன செய்துவிட முடியும்… அதுவும் கூட முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பின்பற்றுகிற நாடுதானே… என தப்புக்கணக்கு போட்டுவிட்டன ஏகாதிபத்தியமும் அதன் தலைமைப் பீடமான அமெரிக்காவும்.
கம்யூனிச பூதம் செத்து விட்டது என்று எக்காளமிட்டது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
அந்தோ பரிதாபம்… கம்யூனிச பூதம் ரஷ்யாவின் வடிவில், சீனாவின் வடிவில் இதோ துரத்திக் கொண்டிருக்கிறது.
கம்யூனிச பூதமான சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு, தனிக்காட்டு ராஜா போல தன்னைக் கருதிக் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் 1990களில் இராக்கை தாக்கியது; வளைகுடா பிரதேசத்தில் எண்ணெய் வெறிக் கொண்டு கொடிய போர்களை கட்டவிழ்த்து விட்டது; ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை உருவாக்கியது; தலிபான்களைக் கொண்டு வெறியாட்டம் நடத்தியது; உலகின் பல பகுதிகளிலும் அமெரிக்காவின் நாசகர உளவு ஸ்தாபனமான சிஐஏ, ஏராளமான பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கி ஆயுதமும் நிதியும் அள்ளி வழங்கியது; 2000த்தின் துவக்கத்தில் அதே தலிபான்களையும் பயங்கரவாதிகளையும் அழிப்பதாகக் கூறி ஆப்கானிஸ்தான் மீது தீராத யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டது.
லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது; மீண்டும் இராக்கை யுத்தக்களமாக்கியது; லட்சக்கணக்கான குழந்தைகள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள்; ஏகாதிபத்தியத்தின் முன் மண்டியிட மறுத்த மாவீரன் சதாம் உசேனைத் தூக்கிலிட்டது; இராக்கை கைப்பற்றிய கையோடு லிபியாவைச் சிதைத்தது; வெள்ளைப் பெட்ரோல் வளம் கொழிக்கும் அந்த நாட்டை ரத்த பூமியாக்கியது; அமெரிக்காவிற்கு அஞ்ச மறுத்த ஜனாதிபதி மும்மர் கடாபியை ஒரு தெரு நாயைப் போல சுட்டு சாக்கடையில் வீசி எறிந்தது; சிரியாவில்… தலிபான்களை விட கொடிய ஐஎஸ் பயங்கரவாதிகளை உருவாக்கி ஆயுதமும் பணமும் கொடுத்து சிரியாவின் மக்களைக் கொன்று குவித்தது.
இரண்டாம் உலக யுத்தத்தில் கொடியவன் ஹிட்லரின் படைகளுக்கு சோவியத் ஒன்றியத்தின் ஸ்டாலின்கிராடில் எப்படி சமாதி கட்டப்பட்டதோ அதேபோல அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடிய போர் வெறிக்கு சிரியாவில் சமாதி கட்டப் புறப்பட்டது ரஷ்யா. ரஷ்யாவின் ஆயுத வலிமை அமெரிக்காவிற்கு தெரியும். வேறுவழியில்லாமல், கடந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக போர்நிறுத்தம் என்றும் பேச்சுவார்த்தை என்றும் பேசத் துவங்கியது அமெரிக்கா. ஆப்கன், இராக், லிபியா ஆகிய நாடுகளைப் போல சிரியாவும் கேட்பாரின்றி அடிமையாக்கப்படும் அபாயத்தை தடுத்து நிறுத்தியது ரஷ்யா. கடந்த சில ஆண்டுகளாக கொடிய ஆயுதங்களை ஏந்தி, அப்பாவிகளை குரூரமாக படுகொலை செய்து வந்த ஐஎஸ் பயங்கரவாதிகளை சிரியாவில் துவம்சம் செய்தன ரஷ்யப் படைகள்.புதன், 13 டிசம்பர், 2017

தோல்வி பயத்தில் பாக் பீதி கிளப்பும் மோடி !

“குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடப் பார்க்கிறது. 
காங்கிரசின் அகமது பட்டேலை குஜராத்தின் முதல்வராக ஆக்க பாகிஸ்தான் சதியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மணிசங்கர் ஐயரின் வீட்டில் ஒரு சந்திப்பு நடந்துள்ளது. அந்த சந்திப்பில், பாகிஸ்தான் இராணுவத்தின் முன்னாள் தலைவர் கலந்து கொண்டிருக்கிறார். 
அந்த சந்திப்புக்குப் பின் தான் என்னை “கீழ்த்தரமானவன்” என மணிசங்கர் ஐயர் ஏசினார். 
என்னைக் கீழ்த்தரமானவன் என்று ஏசியதன் மூலம் என்னை மட்டுமல்ல, குஜராத் மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட சாதிகளையும் ஏழைகளையும் காங்கிரசு இழிவு படுத்தியுள்ளது” – கடந்த ஞாயிற்றுக் கிழமை, பத்தாம் தேதி குஜராத் மாநிலம் கலோல் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் இவ்வாறாகப் பேசியுள்ளார் மோடி.
இதற்கு சில நாட்கள் முன்பு தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, வாக்காளர்களைப் பார்த்து “உங்களுக்கு என்ன வேண்டும்? 
(ராமர்) கோவிலா, (பாபர்) மசூதியா? 
என்ன வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்” எனப் பேசியுள்ளார். 
அதற்கு ஒரு சில நாட்கள் முன் பேசிய அமித்ஷா, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டுமெனில் குஜராத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைய வேண்டும் எனப் பேசியுள்ளார்.
குஜராத் மாநில தேர்தல் கூட்டங்களுக்காக மத்திய அமைச்சரவை மொத்தத்தையும் பாரதிய ஜனதா களமிறக்கி விட்டுள்ளது. பாரதிய ஜனதா பேச்சாளர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கே நட்சத்திர அந்தஸ்து உள்ளது. 
எனவே, தனது பேச்சில் நவரசமும் சொட்ட வேண்டும் என்பதில் மோடி கவனமாக உள்ளார். ஆவேசம் பொங்கி வரும் போது சட்டென தாழ்ந்து கண்ணீர் மல்குகிறார் – தழுதழுக்கும் குரலில் பேசிக் கொண்டு அப்படியே நூல்பிடித்து மேலேறி ஆத்திரத்தில் வெடிக்கிறார். 
தனது உணர்ச்சிகளுக்கான கச்சாப் பொருளை எங்கிருந்து வேண்டுமானாலும் மோடியால் எடுத்தாள முடிகிறது.
இப்படித் தான் கடந்த 9 -ம் தேதி லூனாவாடாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, “விசயம் தெரியுமா மக்களே… காங்கிரசு எனது பிறப்பையே சந்தேகித்து விட்டது. 
சல்மான் நிஜாமி எனும் பொறுப்பான காங்கிரசு தலைவர் எனது தாய் தந்தை யார் எனக் கேட்டு விட்டார். (குரலில் தழுதழுப்பு, வழிவதற்கு கண்ணீர் கட்டி நிற்கிறது. 
அடுத்து சட்டென குரல் உயர்கிறது) நான் இந்த மண்ணின் மைந்தன். இந்த தேசத்தின் மைந்தன். லூனாவாடாவின் மைந்தன். 
இந்த நாட்டின் மக்களே எனது தாய் தந்தையர். காங்கிரசு என்னை ரொம்பக் கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறது மக்களே” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் இந்த பேச்சைத் தொடர்ந்து இணையத் தேடு பொறியான கூகிளில் சல்மான் நிஜாமி யார் என்கிற தேடுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 
சொல்லப் போனால் காங்கிரசு கட்சியே சல்மான் நிஜாமி யார் எனத் தேடிக் கொண்டிருந்தது. உண்மை என்னவெனில், காஷ்மீரைச் சேர்ந்த சல்மான் நிஜாமி கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் காங்கிரசில் சேர்ந்துள்ளார். 
கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத நபரான சல்மானின் கருத்தை காங்கிரசு கட்சியின் அதிகாரப் பூர்வ கருத்து போல மேடையில் பேசி அனுதாபம் தேட முயற்சி செய்துள்ளது பின்னர் அம்பலமானது.
அதே போல உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டுமா, மசூதியைக் கட்ட வேண்டுமா என்பதை குஜராத்தில் பாரதிய ஜனதாவுக்கு விழும் வாக்குகள் எப்படி தீர்மானிக்கும்…? என்கிற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 
இத்தனைக்கும் மத்தியிலும் சரி, அயோத்தி அமைந்திருக்கும் உத்திரபிரதேசத்திலும் சரி – அதிகாரத்தில் இருப்பது பாரதிய ஜனதா கட்சி தான்.
“பாகிஸ்தான் சதி” விவகாரத்தைப் பொறுத்தவரை, மோடி தனது பேச்சில் குறிப்பிட்டது போல் ஒரு கூட்டம் நடந்தது என்பது மட்டுமே உண்மை – மற்ற அனைத்தும் பச்சைப் பொய்கள். 
மணிசங்கர் ஐயர் வீட்டில் நடந்தது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் முந்தைய தூதரக அதிகாரிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் இந்திய பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானுடன் இராஜீய உறவுகளைப் பேண அதிகாரப்பூர்வமான தொடர்புகளைப் பராமரித்து வரும் அதே வேளையில் அதிகாரப்பூர்வமற்ற தொடர்புகளையும் இந்திய அரசு பயன்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கான இந்திய அரசின் கவுன்சில் ஜெனரலாக பணியாற்றிய மணிசங்கர் ஐயர் இது போன்ற சந்திப்புகளை நடத்துவது வழக்கமான ஒன்று தான்.
மணிசங்கர் ஐயரின் வீட்டில் நடந்த விவாதத்திலும் அதைத் தொடர்ந்து நடந்த விருந்திலும் கலந்து கொண்ட முன்னாள் இராணுவ தளபதி தீபக் கபூர், மேற்படி கூட்டத்தில் இந்திய – பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவது குறித்தே பேசப்பட்டதெனவும் மற்ற விசயங்களைப் பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 
மேலும், விருந்து நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியும் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.
ஒருவேளை மோடி குறிப்பிடுவதைப் போன்ற “சதி” உண்மை என்றால், அதைக் குறித்து சி.பி.ஐ, இண்டெலிஜன்ஸ் ப்யூரோ போன்ற அமைப்புகள் விசாரித்து “சதியில்” தொடர்புடையவர்களைக் கைது செய்திருக்க வேண்டும். 
அதை விடுத்து தேர்தல் பிரச்சார மேடையில் ஒப்பாரி வைப்பதில் இருந்து தெரிவது என்னவென்றால், ஒன்று – மோடி குறிப்பிடும் சதி பொய்; அல்லது, நாட்டிற்கு எதிரான சதிச்செயலுக்கு எதிரான நடவடிக்கையை முறியடிக்க பிரதமர் எனும் முறையில் மோடி தவறியிருக்கிறார்.

***

குஜராத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்கிற கணிப்புகளைக் கடந்து இந்துத்துவ கருவறையின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. 
பிரச்சாரத்தின் துவக்கத்தில் வாக்களிக்கப்பட்ட வளர்ச்சியும் குஜராத் மாடலின் பயன்களும் எங்கே எனக் கேள்வியெழுப்பியது காங்கிரசு.
பெரும் முதலாளிகளுக்கு பாரதிய ஜனதா சலுகைகளை வாரி வழங்குவதாக அக்கட்சி குற்றம் சாட்டியது – காங்கிரசின் சொந்த பொருளாதாரக் கொள்கையும் பாரதிய ஜனதாவின் கொள்கையும் வேறு வேறல்ல என்கிற எதார்த்தம் ஒருபுறமும், பாரதிய ஜனதாவைத் தாக்கும் போக்கில் முதலாளிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்கிற உண்மை இன்னொருபுறமும் கிடுக்கியாய் இறுக்கிய போது காங்கிரசின் சுருதி மெல்லக் குறைந்தது.
எனினும், கட்டுப்படுத்தப்பட்ட அளவில் பாரதிய ஜனதாவின் பொருளாதாரத் தோல்விகளை காங்கிரசு கட்சி தனது துவக்க கட்ட விவாதத்தில் முன்னிறுத்தவே செய்தது. 
பணமதிப்பழிப்பும், ஜி.எஸ்.டியும் குஜராத்தின் வணிக சமூகத்தை பாதாளத்தின் ஆழத்தில் அமிழ்த்திவிட்டிருப்பதையும், வேலை வாய்ப்பற்ற பட்டேல்களின் ஆத்திரத்தையும் உணர்ந்த பாரதிய ஜனதா மெல்ல மெல்ல விவாதத்தை மோடியின் ஆளுமையை மையப்படுத்தியும், இந்துத்துவ செயல்திட்டத்தை நோக்கியும் இழுத்துச் சென்றுள்ளது.
கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இந்துத்துவ போதை ஊசிக்கு குஜராத் “இந்து” வாக்காளர்களை அடிமைப்படுத்தியுள்ளது பாரதிய ஜனதா. 
எனினும், மாறியுள்ள பொருளாதாரச் சூழலில் பழைய அளவுகளில் “சரக்கை” ஏற்றினால் போதை ஏற மறுக்கிறது என்பதை தாமதமாக உணர்ந்துள்ள அக்கட்சி, தற்போது வீரிய ரக இந்துத்துவ போதைச் சரக்குகளை பிரச்சார மேடைகளில் அறிமுகம் செய்து வருகிறது.
ஓட்டரசியலின் வெற்றிகளுக்காக அரசியல் கட்சிகள் கேடுகெட்ட நிலைகளுக்கெல்லாம் தாழ்ந்து செல்லத் தயங்காது என்பதை கடந்த கால வரலாறுகளில் இருந்து நாம் அறிவோம்; 
எனினும், பா.ஜ.க-வின் அளவுக்கு தரம் தாழ்ந்து செல்லக் கூடிய கட்சி சமகால வரலாற்றில் வேறெதுவும் இல்லை என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியே சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.
பாரதிய ஜனதா அடைந்துள்ள பதற்றம் இவர்களைத் தோல்வி அறியாதவர்களாக ஊடகங்கள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பம் போலியானது என்பதை உணர்த்தியுள்ளது.
படிக்க:
  • At Mani Shankar Aiyar’s dinner: Former army chief, ex-diplomats
  • PM Modi claims Pak trying to influence Gujarat polls
  • Who is Salman Nizami, and Why Did PM Modi Rip Into Him
  • Salman Nizami Questioned My Parentage, Says PM Modi; Not Our Man, Replies Congress
  • நன்றி:வினவு.