கணக்குகள் பலவிதம் !
🔹கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச்சடங்கு. குடும்பத்தினர், உறவினர்கள் திரண்டு கண்ணீர்மல்க அஞ்சலி.

கோவை சிறுமி கொலை குற்றவாளிக்கு வரும் 5ம் தேதி வரை நீதிமன்ற காவல். குற்றத்துக்கு துணைபோனவரை வரும் 27ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவு.
🔹திமுக ஆட்சியை மக்கள் மீண்டும் தேடி வருவார்கள் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கை. தேர்தல் முடிவு அரசியல் சுனாமி அல்ல, சினிமா சுனாமி எனவும் விமர்சனம்.
🔹காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாக திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம். காங்கிரஸ் கட்சியை இனி எப்போதும் சேர்க்க மாட்டோம் என உதயநிதி உறுதி.
🔹அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியது. விரைவில் அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.


அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது ரத்தத்தின் ரத்தங்கள் அனைவரது எண்ணமாகவும் இருக்கிறது.
ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 11 தோல்விகளை தொட்டுவிட்டது.
இதற்கு கட்சியில் இருந்து ஒவ்வொருவராக நீக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ள வேண்டும். பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்களை இணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த சூழலில் தான் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், திடீரென சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் தனி அணியாக செயல்படத் தொடங்கினர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவையும் மீறி முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசிற்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்தனர்.
இதன் விளைவாக சம்பந்தப்பட்ட 25 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் ஈபிஎஸ் தரப்பு மனு அளித்துள்ளது.
பதிலுக்கு ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் 22 பேர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி.வேலுமணி தரப்பினர் மனு அளித்தனர். இதனால் விஷயம் சீரியசாக மாறியது. சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையிலான அணியினர் இன்னும் கூடுதலாக எம்.எல்.ஏக்கள் தங்களை நோக்கி வருவார்கள் என்று எதிர்பார்த்தனர்.
தவெக அரசில் எப்படியும் அமைச்சரவையில் இடம்பெற்று விடலாம் எனவும் கணக்கு போட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் சி.வி.சண்முகம் வீட்டிற்கே சென்று அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து பேசியது பெரிதும் கவனம் பெற்றது.
விஜய்யே கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார். இனி அதிமுக உடையப் போகிறது என்று பேசத் தொடங்கினர்.
இந்த திரைமறைவு டீலிங்கை அதிமுகவில் புதிதாக சேர்ந்து லால்குடியில் நின்று முதல்முறை வெற்றி பெற்ற தமிழகத்தின் பணக்கார எம்.எல்.ஏ லீமா ரோஸ் நடத்தியதாக கூறப்பட்டது.
இவர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் என்பதால் விஷயம் சுமூகமாக முடிந்துவிடும் என்று அதிமுகவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கோஷ்டி கருதியது.ஆனால் தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சி.வி.சண்முகம் தரப்பினர் போட்டு வைத்த கனவு கலைந்தது.
அதேசமயம் கட்சிக்குள் கூடுதல் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகளின் ஆதரவு கிடைக்கும். அதை வைத்து கலகக்குரல் எழுப்பி பொதுச் செயலாளரை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று கணக்கு போட்டனர்.
ஆனால் அதிலும் பின்னடைவு ஏற்பட்டது. அமைச்சர் கனவில் இருந்த பலர் ஏமாற்றம் அடைந்ததால், சைலண்டாக எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவ காய் நகர்த்த ஆரம்பித்தனர்.
இந்நிலையில் சி.வி.சண்முகம் தரப்பில் தற்போது 17 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் ஆதரவு குறைந்து வருவதை நன்கு உணர்ந்து கொண்ட அதிருப்தி தரப்பினர், அடுத்து என்ன செய்வது என ஆலோசித்து வருகின்றனர். இதற்கிடையில் அதிருப்தியாளர்களின் மாவட்ட செயலாளர் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார்.
இதை மீண்டும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் கட்சி தலைமை கறார் காட்டுகிறது.
பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களின் பதவிகளை திரும்ப அளிக்க முடியாது. வேண்டுமெனில் சைலண்டாக கட்சியில் கைகோர்த்து கொள்ளலாம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது.
இதனால் அமைச்சரவை கனவு, கட்சி பதவி பறிபோன சோகத்தில் அதிருப்தி தரப்பினர் காட்சி அளிக்கின்றனர்.
சி.வி.சண்முகம் மட்டும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறாராம். அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் எப்படி ஓரங்கட்டப்பட்டாரோ, அதேபோல் எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டி விட வேண்டும். பொதுச் செயலாளர் நாற்காலியில் புதிதாக ஒருவரை கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார்.
இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. மறுபுறம் பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமியும் தயாராகவுள்ளார்.
அதில் என்னென்ன களேபரங்கள் நடக்கப் போகிறதோ என்ற பரபரப்பு தற்போதோ தொற்றிக் கொணாடது.
ரியல் வேறுண்ணா ?
“பெ ண்களுக்கும், சிறுமிகளுக்கும் கடந்த ஆட்சியில் போதுமான பாதுகாப்பில்ைல. அவர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டு வருவேன்.
தமிழகத்தின் எந்த ஒரு மூலையிலும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் எதுவும் நடக்காத வகையில் சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படும்,’’ என்பது தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார கூட்டங்களில், காதுகள் அனைத்திலும் வந்து மோதிய ஒரு உறுதிமொழி.

இதை நம்பி, அவரது கட்சிக்கு வாக்களித்தவர்களில் கணிசமானவர்கள் ெபண்கள். கடந்த 10ம் தேதி, தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் பெண்கள் பாதுகாப்பிற்காக சிறப்பு சிங்கப்படை அமைக்கப்படும் என்பது, அவர் கையெழுத்திட்ட முக்கிய மூன்று கோப்புகளில் ஒன்றாக இருந்தது.
இதற்காக சிலாகித்து முதல்வருக்கு பாராட்டு பத்திரம் வாசித்தன பெண்ணிய மேம்பாட்டு அமைப்புகள். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் நடந்த சம்பவங்கள், இது ஒரு வெற்று வாய்ஜால அரசு என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.
சென்னை மெரீனாவில் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமி பலாத்காரம், வந்தவாசியில் ஓடும் லாரியில் சிறுமி கூட்டு பலாத்காரம், கிருஷ்ணகிரியில் காவல்நிலைய பெண் ஊழியர் பலாத்காரம் என்று அடுத்தடுத்து நிகழ்ந்த அவலங்கள், இதற்கு சாட்சியமாக அமைந்தது.
இவை அனைத்திற்கும் உச்சமாக அரங்ேகறியுள்ளது கோவையில் நடந்த பத்து வயது பள்ளி மாணவிக்கு நடந்த பலாத்கார படுகொலை சம்பவம்.
சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த சிலரால் கடத்தி செல்லப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், அவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு அங்குள்ள குளக்கரையில் வீசப்பட்டு கிடந்தார்.
ஊடகங்களில் இந்த தகவல் வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
ஆனால் தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையோ, புகார் கொடுத்த பெற்றோரை சமாதானம் செய்யும் வேலையில் தான் முதலில் இறங்கியுள்ளது.
சிறுமியை கண்டுபிடித்து நெருங்கி விட்டோம். இன்னும் சில மணிநேரங்களில் மீட்டு விடுவோம் என்று பொய்யான உறுதியளித்தது.
ஆனால், சிறுமியின் உயிரற்ற உடலை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. இதனால் கொதித்தெழுந்த மக்கள், அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் எதிரொலியாக, சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மரணித்து போன ஏதுமறியாத அந்த சிறுமிக்காக, சிறிய வருத்தத்தை கூட உடனடியாக பதிவு செய்யவில்லை முதல்வர்.
தற்போது எதிர்கட்சிகளின் கடும் கண்டனத்தை எதிர்கொள்ள முடியாமல், கண் துடைப்புக்கு அறிக்கை ஒன்றை நேற்று மாலை வெளியிட்டுள்ளார்.
இவர் அரியணை ஏற வேண்டும் என்று ஆசைப்பட்ட கோடி மழலைகளில் ஒருவருக்கு தான், இந்த கொடூரம் நேர்ந்துள்ளது என்பதை, முதல்வர் சிறிதேனும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இனிமேலும் இது போன்ற கொடூர நிகழ்வுகள் தொடராத வண்ணம், முதல்வர் சாட்டையை சுழற்ற வேண்டும். வெறுமனே ரீல்ஸ் அரசாக இல்லாமல் ரியல் அரசாக உருவெடுக்க வேண்டும். மொத்தத்தில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பது இயற்கையின் நியதி.
ஆனால், ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் என்பது, மக்களுக்கு ஏற்றத்தை தரவேண்டும். மனம் வெறுத்து தூற்றுவதாக இருக்கக்கூடாது.
இதை விஜயும், புதிய த.வெ.க.அரசும் புரிந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.






