பெருங்கற்காலம்
தமிழத்தில் பெருங்கற்காலம் என்பது கி.மு. 1,000 முதல் கி.பி. 200 வரை இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் ஈமக்குழிகளை பெரிய கற்களை கொண்டு அமைத்ததன் அடிப்படையில் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது. கற்திட்டை, கற்பதுக்கை, கல்வட்டம், நெடுங்கல் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலவளவு ஊராட்சியில் உள்ள மேலவளவு, ராசினாம்பட்டி, கைலம்பட்டி ஆகிய ஊர்களில் 50 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகின்றன. கைலம்பட்டி குதிரோடு பொட்டல் பகுதியில் காணப்படும் கற்பதுக்கை ஒன்றை பட்டசாமி என்றும் ராசினாம்பட்டி சோமகிரி கோட்டைபகுதியில் காணப்படும் நெடுங்கல் ஒன்றை முனியாண்டி என்று மக்கள் வழிபட்டு வருகின்றனர். இக்கோயில் அருகில் கல்வட்டம், கற்பதுக்கையின் பலகை கற்கள் காணப்படுகின்றன. தொல்லியல் அறிஞர் ஜெகதீசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் உள்ள பெருங்கற்காலச் சின்னங்களை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். மேலவளவு கிராமத்தில் சோமகிரிமலை குன்றுக்கும், முறிமலை குன்றுக்கும் இடையில் உள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது பறம்பு கண்மாய். அதன் கலுங்கு பகுதி அருகேயுள்ள ...