இழப்பதற்கு ஒன்றுமில்லை!

 'திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜன் உத்தரவு பிறப்பிக்கவில்லை.1996-ல் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றவேண்டும் என நீதிமன்ற உத்தரவில் இல்லை' என உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மனு விசாரணைக்கு ஏற்றதா என்பது குறித்து மட்டும் வாதிட வேண்டும் மனுதாரருக்குநீதிபதிகள்அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை பெண்ணுக்கு ஆபாசப்பெயருடன் கேஷ் ஆன் டெலிவரியில் வந்த 'ஆயிரக்கணக்கான' பார்சல் .
இனி உங்கள் பிஎஃப் நிதியில் 75% வரை யுபிஐ , ATM மூலம் எடுக்கலாம்.. EPFO புதிய விதிகளை வெளியிட்ட ஒன்றிய அமைச்சர்.
ஜெயலலிதா வரி செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை எவ்வளவு? வரு​மான வரித்​துறை விளக்​க ஐகோர்ட் உத்தரவு.
உலக அளவில் ஊக்கமருந்து பரிசோதனையில் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக அளவில் தோல்வி.
திமுக இளைஞரணி மாநாட்டின் அடுத்த மண்டல மாநாடு ஜனவரி 24-ம் தேதி விருதுநகரில் நடைபெறும் என தகவல்.
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்கா அதிக வரி.குறைக்க பேச்சு நடத்தபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை நீடிப்பு.








மழைத் தகவல்!

தமிழகத்தில் இன்று  கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி முதல் டெல்டா மாவட்டங்கள் வரை, மேலும் சென்னை வரையிலும் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மழைப் பொழிவு இருக்கும். 

மேற்குத் திசைக் காற்றுடன் ஒரு சிறிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இருந்தால், மஞ்சோலை மீண்டும் அதிக மழைப் பொழிவைப் பெறும் என்பதால், அதன் மீது கவனம் தேவை.

கடலோர மாவட்டங்களில், குறிப்பாகச் சென்னையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்பாராதவிதமாகச் சில திடீர் மழைப் பொழிவுகள் ஏற்படலாம். 

இந்த மழைகள் பெரிய அளவில் இருக்காது, ஆனால் ரசிக்கக்கூடியதாக இருக்கும். இந்த இரண்டு நாட்களுக்கு இரவு வெப்பநிலை சற்று அதிகரிக்கக்கூடும். 

அதன் பிறகு மீண்டும் குளிர்ச்சியான நாட்கள் திரும்பும் எனத்தெரிவித்துள்ளார்.

அணுசக்தியும் தனியாரிடம்!
மோடி ஆட்சி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!


அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் சாந்தி மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் சாந்தி மசோதா, விரைவில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 


அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை தொடங்குவதற்கு ஏதுவாக, இந்தியாவை மாற்றுவதற்கான நிலையான அணுசக்தி பயன்பாடு மற்றும் முன்னேற்றம் (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India - SHANTI) மசோதாவை மத்திய அரசு நேற்று மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மசோதாவில் உள்ள சில பிரிவுகள் கவலை அளிப்பதாகவும், முழுமையான ஆய்வுக்காக நாடாளுமன்றக் குழுவிற்கு பரிந்துரைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தின. 

மசோதா மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி, “அணுசக்தி விபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பிலிருந்து அணுசக்தி உபகரணங்களை வழங்கும் சப்ளையர்களை நீக்கும் பிரிவைத் தவிர்ப்பது இந்தியாவிற்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்தார். 


1962 ஆம் ஆண்டு அணுசக்திச் சட்டம் மற்றும் 2010 ஆம் ஆண்டு அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்வதாக குறிப்பிட்டு மசோதாவில் உள்ள விதிகளுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தார். மிகவும் முக்கியமான மற்றும் கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டிய அணுசக்தி துறையை தனியார்வசம் ஒப்படைப்பது பாதுகாப்பானது அல்ல என்றும் பலர் எச்சரித்தனர்.


இது அரசாங்கமே குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை என்றும் அறிவுறுத்தினர்.


அணுசக்தி நிறுவனங்களுக்கான அதிகபட்ச பொறுப்புத் தொகைகள் ரூ.100 கோடியிலிருந்து அதிகபட்சம் ரூ.3,000 கோடி வரை என்பது சாத்தியமான பேரழிவு சேதத்திற்கு மிகவும் குறைவு

அணு சக்தி துறையில் பல செயல்பாடுகளுக்கு ஒற்றை கூட்டு உரிமத்திற்கு விண்ணப்பிக்க எந்தவொரு நிறுவனத்தையும் அல்லது நபரையும் அனுமதிப்பது பாதுகாப்பில் சமரம் செய்துகொள்வதற்கு சமம்.


விபத்து ஏதேனும் ஏற்பட்டால் இழப்பீட்டு விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கு மூன்று ஆண்டு கால அவகாசத்தை இந்த மசோதா வழங்குகிறது, சொத்து சேதத்திற்கு 10 ஆண்டுகள் மற்றும் தனிப்பட்ட காயத்திற்கு 20 ஆண்டுகள் என அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஆனால் கதிர்வீச்சு தொடர்பான தாக்கம் 20-30 ஆண்டுகள் வரை நீடிக்கக் கூடும்

சில அணுசக்தி நிலையங்கள் "முக்கியமற்றவை" என்று கருதப்பட்டால், உரிமம் அல்லது பொறுப்புத் தேவைகளிலிருந்து ஒன்றிய அரசை விலக்கு அளிக்க அனுமதிக்கிறது. இது சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கக் கூடும்


எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “ இந்தியாவின் அணுசக்தி பொறுப்புச் சட்டங்களின் கடுமையான விதிகள் தொழில்துறையினரிடையே பயத்தைஏற்படுத்தியது.


இதனால் அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும், அணுசக்தித் துறையை தனியார் பங்கேற்புக்குத் திறப்பதற்கும் அரசாங்கம் ஒரு புதிய விரிவான மசோதாவைக் கொண்டுவரத் தூண்டியது.


அரசாங்கம் ஆபரேட்டருடன் மட்டுமே கையாளும், சப்ளையரை கையாள்வது ஆபரேட்டரின் பொறுப்பாகும். பல அடுக்கு வழிமுறை மூலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்குவதை உறுதி செய்வதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.


புவிசார் அரசியலில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. நாம் ஒரு உலகளாவிய போட்டியாளராக இருக்க வேண்டுமென்றால், உலகளாவிய அளவுகோல்களையும் உலகளாவிய உத்திகளையும் நாம் பின்பற்ற வேண்டும். உலகம் சுத்தமான எரிசக்தியை நோக்கி நகர்கிறது.


2047 ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி திறனை நாமும் இலக்காகக் கொண்டுள்ளோம். இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், எரிசக்தி கலவையில் அணுசக்தியின் பங்கை 10 சதவீதமாக அதிகரிக்கவும் இந்த மசோதா அவசியம்” என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார்.


விவாதத்திற்குப் பிறகு மசோதா நாடாளுமன்ற குழுவிற்கு அனுப்பப்படாமல் , குரல் வாக்கெடுப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய, அவையில் இருந்த உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


தொடர்ந்து, விரைவிலேயே இந்த மசோதா மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அங்கும் நிறைவேற்றப்பட்டால், விரைவில் சட்டமாக்கப்பட்டு அடுத்த நிதியாண்டு முதலே இது நடைமுறைக்கும் கொண்டு வரப்படலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை