தேன்கூட்டில் கைவைத்த குரங்குகள்?

 மத்திய கிழக்கில் நிலவும் மோதல் 4வது வாரத்தில் நுழைந்துள்ளது.

இது மிக மோசமான பாதிப்புகளைச் சர்வதேச அளவில் ஏற்படுத்தும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகிறது. தேன்கூட்டில் கைவைத்த குரங்குகளாகிவிட்டது அமெரிக்கா,இஸ்ரேல் நிலை.

இதற்கிடையே மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஏழு அம்ச கோரிக்கையை ஈரான் முன்வைத்துள்ளது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.

இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி தாக்குதல் தொடங்கிய போது ஈரான் சுப்ரீம் லீடர் கமேனி கொல்லப்பட்டார்.


ஆனால், ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதால் போர் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. இந்த போரால் ஏற்படும் பாதிப்புகள் சர்வதேச அளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.


இதற்கிடையே அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வர விரிவான ஏழு அம்ச திட்டத்தை ஈரான் முன்வைத்துள்ளது.


மத்திய கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்த ஏழு விஷயங்களையும் கட்டாயம் செய்ய வேண்டும் என்றும் இதில் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ள முடியாது என்றும் ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.


பிராந்தியத்தில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த இதுவே ஒரே வழி எனவும் ஈரான் திட்டவட்டமாகக் கூறுகிறது.

மாறிவரும் போர்க்கள சூழ்நிலைகளையும், ஈரானின் தற்போதைய நிலையையும் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


வழக்கமான போர் நிறுத்த நிபந்தனைகளைத் தாண்டியும் ஈரான் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லியுள்ளது. அவை ராணுவ, அரசியல், பொருளாதார மாற்றங்களை நாடுகின்றன.


தற்காலிக போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்ள முடியாது. அமெரிக்கா இனி எப்போதும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்பதை உறுதியளிக்க வேண்டும்.!


மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களையும் மூட வேண்டும். இது அமெரிக்க ராணுவத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாக இருக்கும்!


அனைத்து பிராந்திய மோதல்களையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடிக்கும் சிக்கலுக்கு நிரந்தர முடிவு காண நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


ஹார்முஸ் ஜலசந்தியை யார் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் ஒரு தெளிவான விதிமுறை உருவாக்கப்பட வேண்டும். அது ஈரானின் கட்டுப்பாட்டில் விடப்பட வேண்டும்.

ஈரான் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்.

மின்சாரத்திற்காகவே அணுசக்தி திட்டத்தை மேற்கொள்கிறோம். இதற்கு முழு ஆதரவு தரப்பட வேண்டும். வழக்கமான சோதனைகளுக்கு ஈரான் உடன்படும்!

அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஈரானுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும்.


இந்த ஏழு பாயிண்டுகளையும் ஏற்றுக் கொண்டால் போரை முடிவுக்குக் கொண்டு வரச் சம்மதிப்பதாக ஈரான் கூறுகிறது.

இத்தனை காலம் மேற்பார்வைக்கு இணங்காமல் ஈரான் இருந்த நிலையில், இப்போது சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் (IAEA) மேற்பார்வைக்கு உட்பட சம்மதித்துள்ளது.


அதற்கு இணங்கி, தனது அணுசக்தி திட்டத்தின் அம்சங்களை மேற்கொள்ள ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது. இது போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.


அதேநேரம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இதை ஏற்றுக்கொள்ளுமா என்பதே இதன் கேள்வி..


ஆனால் வளைகுடாவில் இருக்கும் அனைத்து அமெரிக்கத் தளங்களையும் மூடுவது என்பதை அமெரிக்கா ஏற்க வாய்ப்பே இல்லை.. உலகெங்கும் அமெரிக்கா தனது ராணுவ தளத்தை நிறுவியுள்ளது.


இதுவே அமெரிக்காவுக்கு ஒருவித கண்ட்ரோலை தருகிறது.


அந்த தளங்களை மூட சொல்வதை அமெரிக்கா ஏற்க வாய்ப்பில்லை என்று வல்லுநர்கள் எண்ணுகிறார்கள்!

ஆண்களுக்கு இலவச பஸ் பயணம்.இலவச குளிர் பெட்டி(பிரிட்ஜ்)

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை


தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கிய இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், மொத்தம் 297 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.


தி.மு.க அரசு தனது தேர்தல் கால வாக்குறுதிகளைச் சரியாக நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.கவின் இந்த அறிக்கை மக்களின் நேரடித் தேவைகளை அறிந்து உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.


இதற்காக பிரத்யேகக் குழு அமைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளைச் சேகரித்த பின்னரே இந்த அறிவிப்புகள் இறுதி செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.


முன்னதாக மூன்று கட்டங்களாகப் பகுதி வாரியாக வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட அறிக்கையும் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.


இந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சமாக, தமிழகத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் விலையில்லா குளிர்சாதனப் பெட்டி  வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.


அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.


முதியோர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.


ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியாக, பெண்களின் முன்னேற்றத்திற்காக குலவிளக்கு திட்டத்தின் கீழ் மாதம் 2,000 ரூபாய் வழங்குதல் மற்றும் நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லாப் பயண வசதி போன்ற திட்டங்கள் கவனம் பெற்றுள்ளன.

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்பதும், அரிசி அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்பதும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.


மேலும், சிறுபான்மையின மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக வட்டியற்ற கடன் வசதிகள், மூன்றாம் பாலினத்தவருக்குச் சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய உயர்வு, மீனவர்களுக்கான நிவாரணத் தொகையை 12,000 ரூபாயாக அதிகரித்தல் எனப் பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய திட்டங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.


ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக 1,000 ரூபாய் வழங்குவது போன்ற வாக்குறுதிகளும் உள்ளது. .