வெள்ளி, 7 அக்டோபர், 2022

ஒப்புதல் வாக்குமூலம்

 ஒன்றிய பா.ஜ.க. அரசு, இந்தியாவை ஒளிமயமானதாக உயர்த்திவிட்டதாக நித்தமும் சொல்லி வருகிறது. 

அதிலும் நிதி அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன் அவர்கள், நாட்டில் எந்தப் பிரச்சினையுமே இல்லை என்பதைப் போல பேசி வருகிறார். 

அதன் உண்மைத் தன்மைகளை விளக்கினாலே அவர்களுக்கு பா.ஜ.க.வினரால், 'தேசவிரோதி' பட்டம் எளிதில் தரப்படுகிறது.

ஆனால் ஒன்றிய அமைச்சரவையில் மிக முக்கியமான அமைச்சராக மட்டுமல்ல - பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். 

பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக 2009 முதல் 2013 வரை இருந்தவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர். அந்த அமைப்பில் இருந்தபடி வளர்ந்தவர். 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் இருக்கும் நாக்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் இவர். இன்றும் பா.ஜ.க.வின் கணிசமான தரப்பினரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.

அத்தகைய மாண்புமிகு அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள், இன்று நடக்கும் பா.ஜ.க. ஆட்சி குறித்து வழங்கி இருக்கிற ஒப்புதல் வாக்குமூலமானது, அந்த ஆட்சியின் போக்கை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

அதுவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்திய பாரத் விகாஷ் பரிஷத் விழாவில் பேசி இருக்கிறார். இதனைவிட ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு பாராட்டுப் பத்திரம் தேவையில்லை. 

இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வரவில்லை, நரேந்திர மோடி ஆட்சி அமைத்த 2014 ஆம் ஆண்டுதான் உண்மையான சுதந்திர தினம் என்று சொல்லி வருகிறார்கள் பா.ஜ.க.வினர்.

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவைப் பார்த்து பயப்படத் தொடங்கி விட்டதாகவும் பரப்பி வருகிறார்கள். 

வெளிநாட்டுக்குச் சென்று குடியுரிமை வாங்கி வாழ்ந்து வருபவர்கள், தங்களது குடியுரிமையை ரத்து செய்து விட்டு இந்தியாவுக்கு வரத் தொடங்கி விட்டதாக ஒரு 'வாட்ஸ் அப்' செய்தியைப் பரப்புகிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் பிரதமர் மோடி எதற்காகச் செல்கிறார் என்றால், ரகசியமான 'சிப்' ஒன்றை புதைத்து வைப்பதற்காகவாம். 

இப்படி எத்தனையோ கப்சாக்களின் மூலமாக காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. இவை அனைத்துக்கும் நெத்தியில் அடித்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நிதின் கட்கரி.

இதோ நிதின் கட்கரி காட்டும், பா.ஜ.க. வளர்த்த இந்தியா இதுதான்.

இந்தியா வளமான நாடாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் வறுமை,பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், ஜாதிவெறி, தீண்டாமை மற்றும் பண வீக்கத்தை எதிர்கொள்கிறார்கள்.

* இங்கே பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும்.

* நாட்டில் நகர்ப்புறங்கள்தான் வளர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் வசதிகள், மற்ற வாய்ப்புகள் இல்லாததால் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி வருகிறார்கள்.

* சமூக ஏற்றத்தாழ்வைப் போலவே பொருளாதார ஏற்றத் தாழ்வும் அதிகமாகி உள்ளது.

* நமது பொருளாதாரம் உலகில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரம் என நினைக்கிறோம். ஆனால் இங்கு ஏற்றத்தாழ்வுகள் அதிகம்.

* சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த சமூகப் பொறுப்பு மற்றும் சமூக உணர்வுடன் பல்வேறு துறைகளில் எவ்வாறு பணியாற்றுவது என்பதுதான், நம் முன் உள்ள மிகப்பெரிய சவால்; - என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி சொல்லி இருக்கிறார்.

இவரும் 'தேச விரோதி' ஆகிவிடுவாரா? தேசவிரோதியாக ஆக்கி விடுவீர்களா? சொன்னது எதையும் செய்யாத அரசு பா.ஜ.க. அதைவிட, இருந்ததைவிட நிலைமையைத் தரைமட்டத்துக்கு தாழ்த்தியது பா.ஜ.க.

'கருப்புப் பணத்தை மீட்டு வருவோம்' என்றார்கள்.

 மீட்கப்பட்டதா? இல்லை.

 'மீட்டு வந்த பணத்தை தலைக்கு 15 லட்சமாகத் தருவோம்' என்றார்கள். 15 ரூபாய்கூட தரப்படவில்லை . 'விவசாயிகள் இரண்டு மடங்கு லாபத்தைப் பெறுவார்கள்' என்றார்கள். 

அவர்களிடம் இருக்கும் நிலத்தைப் பறிக்கவும் மூன்று வேளாண் சட்டங்கள் போடப்பட்டதுதான் மிச்சம். “அவன் பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது" -என்று எழுதினார் கவிக்கோ அப்துல்ரகுமான். 

அதுதான் பா.ஜ.க. ஆட்சி அனைத்துத் தரப்பினருக்கும் தந்த பரிசாகும்.

'ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலைகள் தரப்படும்' என்றார்கள். வேலை இழந்தோர் எண்ணிக்கை அதிகமான ஆண்டுகளாக பா.ஜ.க. காலம் ஆகிப் போனது. 

ஆனால் எப்போதும் கனவுலகப் பேச்சுகளுக்கு பஞ்சம் இல்லை. 2022 பற்றி பேசுவது இல்லை. 2030 பாருங்கள், 2047 பாருங்கள் என்று எல்லாமே 'தொலை நோக்கு'ப் பார்வை தான்.

* காங்கிரஸ் தலைவர் படேலுக்கு 3 ஆயிரம் கோடியில் சிலை

* அதானி குழுமத்தின் அபாரமான வளர்ச்சி

* காஷ்மீரத்தைப் பிரித்து, தனி உரிமையை ரத்து செய்தது; இந்த மூன்றைத் தவிர எந்தச் சாதனையும் இல்லை.

தமிழ்நாட்டுடன் பொருத்திப் பார்ப்போமா ஒரு சாதனையை? 2017-ல் அடிக்கல் நாட்டிய பிலாஸ்பூர் 'எய்ம்ஸ்' மருத்துவமனையை பிரதமர் மோடி நேற்றைய தினம் திறந்து வைத்துள்ளார். 

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர், பிலாஸ்பூரில் ஆயிரத்து 1470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 'எய்ம்ஸ்' மருத்துவ மனையை அவர் திறந்து வைத்தார். நாட்டில் மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதற்கும், மருத்துவத்தை மேம்படுத்துவதற்கும் 'பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. 

இந்தத் திட்டத்தின் கீழ் இதனை அமைத் துள்ளார்கள்.

 மதுரை மாவட்டம் - தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார்.

இதன் கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் சுற்றுச்சுவரைத் தவிர்த்து வேறு எந்தப் பணிகளும் நடக்கவில்லை. இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் அவர்களால்? சொல்லுக்கும் செயலுக்கும் எவ்வளவு வேறுபாடு என்பதற்கு 'எய்ம்ஸ்' மருத்துவமனையே உதாரணம்! 

நமக்குத் தெரியும் இவை, நிதின் கட்கரி அறியமாட்டாரா? 

அதனால்தான் பொங்கி இருக்கிறார் பா.ஜ.க. அமைச்சர்!.

------------------------------------------------------------------------

பகத்சிங் 

பாரம்பரியம்.

இந்திய விடுதலை என்றதுமே வெள்ளைத் தொப்பிதான் ஞாபகத்துக்கு வரும். காங்கிரஸ், ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம், காந்தி என்றெல்லாம் இந்திய விடுதலைக்கான அடையாளங்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. 

ஆனால் இந்திய விடுதலைக்கென இன்னொரு பாரம்பரியம் இருக்கிறது. இன்னொரு தொப்பி இருக்கிறது. 

முறுக்கு மீசை இளைஞன் அணிந்த வட்டத் தொப்பி. இடதுசாரிய பாரம்பரியம்!

கேட்காத காதுகளுக்கு கேட்கட்டும் என ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் வெடிகுண்டை வீசிய பாரம்பரியம். கப்பற்படையில் ஆங்கிலேயக் கொடியை இறக்கி புரட்சிக்கான அறைகூவலை விடுத்த பாரம்பரியம். இந்திய விடுதலைக்குப் பிறகும் ‘பூரண சுதந்திரமே தேவை’ என அறிவித்தப் பாரம்பரியம்.

ஆறாம் கம்யூனிச அகிலத்துக்கு பகத் சிங் செல்லவிருந்த தருணம் பற்றி மிகக் குறைவாகவே பேசப்பட்டிருக்கிறது. ஜோசப் ஸ்டாலினே மாஸ்கோவுக்கு பகத் சிங் வர விரும்பியதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

ஆறாம் அகிலத்தில் பகத் சிங்கின் HRA கட்சி பற்றி பேசப்பட்டிருக்கிறது. 

மிகச் சரியாக “இந்தியாவின் காந்தியவாதம் முதலிய இயக்கங்கள் தொடக்கத்தில் தீவிரக் குட்டி முதலாளி வர்க்கத்தின் கருத்தியல் இயக்கங்களாக இருந்து பிறகு பெருமுதலாளிகளுக்கு சேவகம் செய்ததில் முதலாளித்துவ தேசியவாத சீர்திருத்த இயக்கமாக மாறிவிட்டது. 

அதற்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் பல குட்டி முதலாளிக் குழுக்களிலிருந்து HRA போன்ற போராளிக் குழு உருவாகியிருக்கிறது. அவை தொடர்ந்து நிலையாக புரட்சிகரப் பார்வையில் இயங்குகிறது,” என்கிற பார்வை முன் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்திய விடுதலை பற்றி இங்கிலாந்தின் ஆறாம் ஜார்ஜ் ஆலோசிக்கும்போது ‘நமக்கான இருப்பை இந்தியத் துணைக் கண்டத்தில் உறுதிப்படுத்திக் கொண்டு விடுதலை அளிக்க வேண்டும்’ எனப் பேசுகிறார்கள். 

இதைப் பற்றிய சிந்தனை எதற்கும் விடுதலைச் சூழலில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. காந்தியே கூட பிரிட்டிஷ்ஷின் ஆட்சிக்குட்பட்ட தன்னாட்சி உரிமை கொண்ட (Dominion Status) பகுதியாக இந்தியாவை அறிவிக்க வேண்டுமென்றுதான் போராடிக் கொண்டிருந்தார்.

 ஆனால் காங்கிரஸ்ஸையும் கூட பூரண சுதந்திரத்துக்கு போராடுமாறு உந்தித் தள்ளியது இடதுசாரிகள்தான். மவுலானா ஹஸ்ரத் மொகானிதான் பூரண சுதந்திரமே தேவை என்கிற கோஷத்தை முதலில் முன் வைத்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் இயங்கிய பகத் சிங்கின் இடதுசாரிய பாரம்பரியம் போலவே இன்னொரு பாரம்பரியமும் இருந்தது. 

பழைய சமூகத்தை மாற்ற விரும்பாமல், சாதிய வருணாசிரம அடுக்குமுறையைக் கட்டிக் காப்பாற்ற விரும்பிய ஆர்எஸ்எஸ் பார்ப்பனியப் பாரம்பரியம்!

தான் செத்தாலும் எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தது இடதுசாரிய பாரம்பரியம். தான் செத்தாலும் எல்லாரும் சாக வேண்டும் என நினைத்தது ஆர்எஸ்எஸ் பார்ப்பனிய பாரம்பரியம். 

ஒன்றுக்கும் உதவாத இந்த இரண்டாம் பாரம்பரியம் மொத்த விடுதலை காலத்திலும் ‘கண்மணி அன்போடே’ என பிரிட்டிஷாருக்கு கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தது.

சுதந்திரம் என்பது முழுச் சுதந்திரம் மட்டும்தான். 

முழுமைக்கும் இம்மி குறைந்தாலும் அது சுதந்திரம் இல்லை.

----------------------------------------------------------------------