புதன், 5 மே, 2021

முதல்வர் மு.க.ஸ்டாலின்

 தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் மு.க. ஸ்டாலின் ஒரு நீண்ட, கடினமான பயணத்தின் முடிவில் இந்தப் பொறுப்பை ஏற்கவிருக்கிறார். மிக நெருக்கடியான சூழலில் கட்சியை வழிநடத்திய பொறுமையும் துணை முதல்வராக இருந்த அனுபவமும் அவரது புதிய பதவியில் உதவக்கூடும்.

1960களின் பிற்பகுதியில் சென்னை கோபாலபுரத்தில் அப்பகுதி இளைஞர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை நடத்தியதில் துவங்கி, தி.மு.கவின் தலைவராகவும் முதலமைச்சராகவும் உயர்ந்திருக்கும் மு.க. ஸ்டாலினின் பயணம் மிக நீளமானது, கடினமானது என்பதை அவரது அரசியல் எதிரிகள்கூட ஒப்புக்கொள்வார்கள்.

மு.க.ஸ்டாலின் சென்னையின் மேயராகவும் தமிழ்நாட்டின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தபோது அவரது செயல்பாடுகள் பல மட்டங்களிலும் கவனிப்பையும் பாராட்டுதல்களையும் பெற்றன. இதன் தொடர்ச்சியாக, 2016ன் பிற்பகுதியில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உடல்நலம் குன்றிய பிறகு, கட்சியின் பொறுப்பை மு.க. ஸ்டாலின் கையில் எடுத்துக்கொண்டபோது, கட்சித் தொண்டர்களின் கவனம் மட்டுமல்லாமல் அரசியல் எதிரிகளின் பார்வையும் அவர் மீது தீவிரமாகக் குவிந்தது.

2018ல் மு.கருணாநிதி மறைந்த பிறகு, தி.மு.கவின் தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார். 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களை மனதில் கொண்டு கட்சியின் நடவடிக்கைகளைத் திட்டமிட ஆரம்பித்தார். அந்த பொதுத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 39 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களைக் கைப்பற்றியது.

மு க ஸ்டாலின், திமுக தலைவர்

பட மூலாதாரம்,

2016ல் கருணாநிதியின் உடல்நலம் குன்றியதிலிருந்து 2019ஆம் ஆண்டுத் தேர்தல்வரை கட்சியை வழிநடத்துவது, தேர்தல் கூட்டணிகளை அமைப்பது, பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வது என அவர் முன்னெடுத்த விஷயங்கள் அனைத்திலும் அவர் வெற்றி பெற்றிருந்தார். இருந்தபோதும், எதிர்க்கட்சிகள் அவரது வெற்றியைப் புறம்தள்ளின.

எதிர்க்கட்சித் தலைவர்களை எள்ளி நகையாடுவது, அவர்கள் எதையும் சாதிக்க இயலாதவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்குவது என அகில இந்திய அளவில் சில அரசியல் கட்சிகள் கடைப்பிடித்துவரும் போக்கின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் குறிவைக்கப்பட்டார். ஜெயலலிதா இல்லாத சூழலில் ஆட்சியைக் கைப்பற்ற இயலாதவர் என்றும் கருணாநிதி இருந்திருந்தால் அதைச் செய்திருப்பார் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

எழுதுவதற்கே தகாத வார்த்தைகளால் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டார். கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள் மட்டுமல்லாது, சில கட்சியின் தலைவர்களே, அவரை துண்டுச் சீட்டு இல்லாமல் பேச முடியாதவர் என்று கீழிறங்கி விமர்சித்தார்கள். அவர் தேர்தல்களில் பெற்ற பிரம்மாண்டமான வெற்றிகள் கணக்கில் கொள்ளப்படவில்லை.

"மு. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அவர் தொடர்ந்து பொறுப்புகளை ஏற்றும், அவற்றை செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார். எல்லோரும் அவரை கருணாநிதியுடன் ஒப்பிட முயல்கிறார்கள். அவர் சிறப்பாகப் பேசவில்லை என்கிறார்கள். ஆனால், நவீன தலைமை என்பது மேடையில் சிறப்பாக பேசுவது கிடையாது. எந்த அளவுக்கு பொறுப்புகளை ஏற்று, அதை நிறைவேற்றிக் காட்டுகிறார்களோ அதுதான் சிறந்த தலைமை.

இப்போது கட்சியை நடத்துவது என்பது, ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகத்தை நடத்துவதுபோலத்தான். அதை வெற்றிகரமாகச் செய்ய திறமை தேவை. அதுதான் மு.க.ஸ்டாலினின் பலம்.

மு க ஸ்டாலின், திமுக தலைவர்

பட மூலாதாரம்,

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் இப்போது சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்" என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆழி செந்தில்நாதன்.

மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை, அவர் தனது அரசியல் வாழ்வைத் துவங்கியதிலிருந்தே வாரிசு என்கிற சுமை அவருக்கு இருந்திருக்கிறது. ஆகவே அவர் தொடர்ந்து தன்னை நிரூபிக்க வேண்டியிருந்தது. அதற்காக, பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அதனை அவர் நிறைவேற்றிக் கொண்டே இருந்தார். பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது என்பது அவரது ஆளுமையின் ஓர் அடையாளமாகவே ஆகிவிட்டது என்கிறார் செந்தில்நாதன்.

மு.க.ஸ்டாலின் தி.மு.கவிற்குள் முக்கியமான தலைவராக உருவெடுக்க ஆரம்பித்த காலத்தில் அவர் முன்பாக இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று கட்சியைக் கட்டமைக்கும் வேலை. மற்றொன்று மக்களைச் சென்றடையும் பணி. மக்களை அணுகும் பணியில் மு.கருணாநிதியும் க. அன்பழகனும் ஏற்கெனவே இருந்தனர். ஆகவே அவர் கட்சியைக் கட்டமைப்பது என்ற கடினமான பணியைத் தேர்வுசெய்தார்.

தமிழ்நாட்டில் உள்ள வேறு சில வாரிசு அரசியல்வாதிகளோடு ஸ்டாலினை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் அவரது வெற்றியின் அளவு புரியும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன். "பெரும்பாலான வாரிசுகள் மக்களைச் சந்திக்காமல் மாநிலங்களவை உறுப்பினர்களாகவே தொடர்கிறார்கள். ஆனால், மு.க. ஸ்டாலின் 1984ல் முதன்முதலில் களத்தில் இறங்கும்போதே கே.ஏ. கிருஷ்ணசாமி என்ற பிரபல அரசியல்வாதியை எதிர்த்துத்தான் களமிறங்கினார். அவர் அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவர்" எனச் சுட்டிக்காட்டுகிறார் பன்னீர்செல்வன்.

மு க ஸ்டாலின், திமுக தலைவர்

பட மூலாதாரம்,

சென்னையின் மேயராக மு.க. ஸ்டாலின் வந்த பிறகு, அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் குறிப்பிட்டுச் சொல்வது, விஷயங்களை அவர் மிகவும் கவனம் கொடுத்துக் கேட்பார் என்பதைத்தான். ஒரு விஷயத்தைப் பற்றி முடிவெடுக்க சில சமயங்களில் நேரம் எடுத்துக்கொள்வார். ஆனால், அது தொடர்பான விஷயங்களைக் கேட்காமல் முடிவெடுக்க மாட்டார். "இந்தியா கடந்த சில ஆண்டுகளாக எதிர்கொண்டுவரும் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியின் தவறான அமலாக்கம், கோவிட் சிக்கல்கள் ஆகியவற்றுக்குப் பின்னால் இருப்பது கேட்பதற்கு மனமில்லாத நிலைதான் முக்கியக் காரணம். இந்தப் பின்னணியில் பார்க்கும்போது ஸ்டாலின் மிகச் சிறந்த நிர்வாகி" என்கிறார் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, நகராட்சி நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலராக இருந்தவருமான அஷோக் வர்தன் ஷெட்டி இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கிறார்.

"பல முதலமைச்சா்கள் கோப்புகளை பார்த்து, கையெழுத்திட தாமதம் செய்வார்கள். ஆனால், மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை கோப்புகளை மிக வேகமாக பார்த்து ஒப்புதல் அளிப்பார். மு.க. ஸ்டாலின் வந்தால், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் வருமோ என்று பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், 2006 முதல் 2011வரை குடும்ப உறுப்பினர்களை மு.க.ஸ்டாலின் தன் அலுவலகத்திலிருந்து விலக்கியே வைத்திருந்தார்" என்கிறார் அசோக் வர்தன் ஷெட்டி.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்கிறார் அசோக் வர்தன். ஒரு முறை மு.க.ஸ்டாலினின் துறையில் பணியாற்றிய அவருடைய நெருங்கிய உறவினரை, ஒரு தவறுக்காக இடைநீக்கம் செய்து கோப்பை மு.க.ஸ்டாலினிடம் அனுப்பினார் ஷெட்டி. மு.க. ஸ்டாலின் எந்தக் கேள்வியும் கேட்காமல், அந்தக் கோப்பில் கையெழுத்திட்டார் என்கிறார் அவர்.

மு க ஸ்டாலின், திமுக தலைவர்

பட மூலாதாரம்,

"மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை அவர் செய்த பணிகளுக்கான பெயர் அவருக்குக் கிடைக்கவில்லை. 2006-2011க்குள் தமிழ்நாட்டில் இருந்த 12,500 கிராமங்களிலும் நூலகம், கிராமப்புற விளையாட்டு மையம், சுடுகாடுகள் அமைக்கப்பட்டன. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை கிடையாது. அதை உள்ளாட்சித் துறை அமைச்சராக ஐந்தாண்டுகளில் செய்தார் ஸ்டாலின். ஆனால், அதற்கான பெருமை அவருக்குக் கிடைக்கவில்லை" என்கிறார் ஷெட்டி.

மற்றொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார் ஷெட்டி. 2006 - 11 காலகட்டத்தில் உலக வங்கியின் உதவியுடன் 717 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் `வாழ்ந்து காட்டுவோம்' என்ற பெயரில் 16 மாவட்டங்களில் சுமார் 2,500 கிராமங்களில் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன்களை வழங்கி சுயமேம்பாட்டிற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2010ல் இந்தத் திட்டத்தை ஆய்வுசெய்த உலக வங்கி, தாங்கள் உலகம் முழுவதும் செயல்படுத்திவரும் திட்டங்களில், சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவரும் திட்டம் இதுதான் என கடிதம் ஒன்றை அனுப்பியது. அந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வந்த உலக வங்கியின் தலைவர் நடாஷா ஹோவர்ட் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பாராட்டினார். இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒரு சிறிய செய்திக் குறிப்பாக இந்த நிகழ்வு சென்றுவிட்டது என்கிறார் அசோக் வர்தன் ஷெட்டி.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டமும் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டதுதான். தமிழ்நாட்டில் இருந்த 12,500 கிராமங்களில் ஒவ்வொரு வருடமும் 2,500 கிராமங்கள் தேர்வுசெய்து திட்டத்தைச் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டது. ஒவ்வொரு வருடமும் தங்கள் கிராமத்தை அந்த வருட பட்டியலில் சேர்க்க கட்சிக்காரர்கள் முயல்வார்கள். ஆனால், மிக ஏழ்மையான கிராமங்களில் இருந்து, வசதியான கிராமங்கள் என்ற வரிசையில் கிராமங்களைத் தேர்வுசெய்து திட்டத்தைச் செயல்படுத்துவதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தார்.

சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கும்போது, பொதுவாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் உள்ள பஞ்சாயத்துகள் சிறப்பாக செயல்பட்டாலும் அவற்றுக்கு விருதுகள் வழங்க மாட்டார்கள். அமைச்சர்கள் விருதுப் பட்டியலை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் பட்டியலில் இல்லை என்பதை உறுதிசெய்வார்கள். ஆனால், மு.க.ஸ்டாலின் சரியான பஞ்சாயத்துகள் விருதுகளைப் பெறுவதை உறுதிசெய்தார் என்கிறார் அசோக் வர்தன்.

அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார் அவர். மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, கோயம்புத்தூரில் மேட்டுப்பாளையத்திற்கு அருகில் இருந்த ஒரு பஞ்சாயத்து மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தது. அப்போது கட்சியின் மாவட்டச் செயலாளரின் எதிர்ப்பையும் மீறி, அந்தப் பஞ்சாயத்தைச் சென்று பார்வையிட்டார் மு.க. ஸ்டாலின். அந்த ஆண்டு விருது பெற்ற 15 பஞ்சாயத்துத் தலைவர்களின் பட்டியலில் அந்த பஞ்சாயத்துத் தலைவரின் பெயரும் இருந்தது. அவர் அமைச்சராக இருந்தபோது அ.தி.மு.கவைச் சேர்ந்த பல பஞ்சாயத்துத் தலைவர்கள் மாநில விருதுகளுக்கும் மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஸ்கார் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார் ஷெட்டி.

ஆனால், இதையெல்லாம் மீறி அவர் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டார். பல சமயங்களில் பேசும்போது வார்த்தைகள் தவறுவதை வைத்து கேலி செய்தார்கள். இருந்தபோதும், இதுபோன்ற முத்திரைகள் இந்திய அளவில் பலித்ததைப் போல தமிழ்நாட்டில் பலிக்கவில்லை.

ஸ்டாலினை தொடர்ந்து தாக்குவதற்கும் கேலி செய்வதற்கும் காரணம் அவருடை சித்தாந்த நிலைப்பாடுதான். மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், இந்தி எதிர்ப்பு ஆகியவற்றில் அவர் உறுதியாக இருக்கிறார். இந்த சித்தாந்தங்களுக்கு எதிராக ஏதாவது சொன்னால், மாட்டிக்கொள்வோம் என்பதற்காகத்தான் அவரைக் கேலி செய்கிறார்கள். இப்படி கேலி செய்பவர்கள், மத்திய - மாநில உறவு, மதச்சார்பின்மை ஆகியவை குறித்து என்ன நிலைபாடு எடுத்தார்கள் என்று பார்த்தால் அவர்கள் ஏன் மு.க.ஸ்டாலினை நோக்கி இந்த அவதூறுகளைச் சொல்கிறார்கள் என்பது புரியும் என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

மு க ஸ்டாலின், திமுக தலைவர்

பட மூலாதாரம்,

"அவரை தத்தி என்று சமூக வலைதளங்களில் குறிப்பிடுவது மு.க. ஸ்டாலின் மீதான அப்பட்டமான காழ்ப்புணர்வுதான். ஒருவர் தொடர்ச்சியாக தன் பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்தினாலும் அவரை கேலி செய்கிறார்கள் என்றால் அது காழ்ப்புணர்ச்சியல்லாமல் வேறு அல்ல. அவர் தனக்கு கொடுத்த பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறார். அவரை இவ்வாறு குறிப்பிடுவது முழுக்க முழுக்க சாதி சார்ந்த வன்மம்" என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவர் கூட்டணியை உருவாக்கியபோது கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுக்கிறார்கள் என விமர்சித்தார்கள். சட்டமன்றத் தேர்தலில் குறைவாகக் கொடுத்தபோது, மிகக் குறைவாகக் கொடுப்பதாக விமர்சிக்கிறார்கள். ஆனால், இரண்டு தேர்தல்களிலுமே வெற்றி கிடைத்திருக்கிறது. இருந்தபோதும் விமர்சிக்கிறார்கள் என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

"சிறப்பாக பேசும் தலைவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படியல்ல. அதிகாரிகள் அளிக்கும் ஆலோசனைகளைக் காதுகொடுத்துக் கேட்டு, அரசியல் ரீதியாக எது சரியாக வரும் என்று யோசித்து முடிவெடுப்பவர்களே சிறந்த தலைவர்கள். 

அதன்படி, காமராஜர்,கலைஞர், கோ.சி.மணி ஆகியோரின் வரிசையில் மு.க. ஸ்டாலினைச் சொல்லலாம்" என்கிறார் அசோக் வர்தன். 2026ல் மு.க. ஸ்டாலின் தன் பதவிக்காலத்தை முடிக்கும்போது இந்தியாவின் சிறந்த ஐந்து முதல்வர்களில் அவரும் ஒருவராக இருப்பார் என்கிறார் அசோக் வர்தன் ஷெட்டி.

நன்றி: பி.பி.சி.தமிழோசை.

-----------------------------------------------------------------------------------------செவ்வாய், 4 மே, 2021

ஊழலின் மறுபெயர்.

 கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதுயரம் பல முனைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன்இன்மையால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகளில் போதிய அளவிற்குப் படுக்கைகளும், மருந்துகளும் இல்லை. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் சாவுகளையும் மூடிமறைத்திடும் சூழ்ச்சிகள். கொரோனா தடுப்பூசிகளில் பற்றாக்குறை ஏற்படுத்தி, அரசாங்கமே கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்ட வழி வகுத்துக்கொடுத்திருப்பது. இவை எல்லாவற்றையும்விட மொத்தமாக மாபெரும் ஊழல் சாம்ராஜ்யத்துடன் மோடி அரசாங்கமே திகழ்வதாகும்.இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர் இப்போது மிகப்பெரிய அளவில் அழிவினை சந்தித்துக்கொண்டிருக்கிறது. 1943இல் வங்கத்தின் வறட்சி நிலைமையில் மக்கள் உயிரிழந்ததற்குப்பின்னர் (அப்போது சுமார் 30 லட்சம் பேர் பசி-பட்டினி, ஊட்டச்சத்தின்மையால் இறந்தார்கள்) மிகப்பெரிய அளவில் மோசமான பேரழிவு இப்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.  அப்போது ஏற்பட்ட அழிவிற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் அது கடைப்பிடித்த காலனியாதிக்கக் கொள்கைகளும் காரணமாகும். நாடு ‘பிரிவினை’யுற்ற சமயத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான மரணங்கள், பரஸ்பரம் மதவெறிக் கொலைகள் என்பதால் இதுபோன்ற அழிவுநிகழ்வுகளுடன் ஒப்பிடக்கூடாது.


தற்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்றில், குறைந்தபட்சம் பத்து லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். இறப்போர் எண்ணிக்கை மலைபோல் தொடர்கிறது. இந்த விவரம்கூட மிகவும் குறைவான மதிப்பீடேயாகும். அதிகாரப்பூர்வமாகவே இரண்டு லட்சம் பேர் இறந்திபெற்றிருக்கின்றன.

மோடியும் அரசுமே பொறுப்பு
இத்தகைய பேரழிவுக்கு நரேந்திர மோடியும் அவருடைய அரசாங்கமும்தான் பொறுப்பு என்று கூறுவதற்குபெரிய அளவில் வரலாற்றாராய்ச்சி எதுவும் தேவை இல்லை. மோடி அரசாங்கத்தின் குற்றப்பொறுப்பை எடுத்துக்காட்டுவதற்கு, இப்போது ஏப்ரல் 19 அன்றுமோடி அரசாங்கம் பிறப்பித்துள்ள புதிய தடுப்பூசிக்கொள்கையைக் காட்டிலும் வேறெதையும் கூறவேண்டியதில்லை.இப்போது மருத்துவமனைகளில் உள்ளேயும் வெளியேயும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நோயாளிகள் மூச்சுவிடுவதற்கு ஆக்சிஜன் இன்றி திண்டாடிக் கொண்டிருக்கும் பயங்கரமான காட்சிகள் இந்தியாவையும், உலகத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கின்றன.  வரவிருக்கும் காலங்களில், திரவ ஆக்சிஜன் அனுப்பி வைப்பது, மருத்துவமனைகளில் அவற்றின் சப்ளைகளை உறுதிசெய்வது, ஆக்சிஜன் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவது ஆகியவற்றிற்குக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

தடுப்பூசிக் கொள்கையின் பாகுபாடும் அநீதியும்
எனினும், உடனடியாக, நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்த வேண்டியது அவசர அவசியமாகும். ஆனால் அரசாங்கத்தின் தடுப்பூசித் திட்டமோ மிகவும் மோசமானதாகவும், பாகுபாட்டுடனும், அநீதியாகவும் வகுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு, இதுதொடர்பாக தன் பொறுப்பைக் கைவிட்டுவிட்டது. நாட்டின் குடிமக்களில் 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடையேயுள்ளவர்களுக்கு, தடுப்பூசிகள் கொள்முதல் செய்யும் பொறுப்பை, மாநில அரசுகளின் பக்கம் தள்ளிவிட்டது. அனைத்து மாநில அரசுகளுக்கும் தடுப்பூசிகள் வாங்குவதற்கான வள ஆதாரங்கள் கிடையாது. மத்திய அரசானது, தடுப்பூசி உற்பத்தியில் 50 சதவீதத்தை மாநில அரசாங்கங்களும், தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவித்திருப்பதன் மூலம், மிகவும் குறைவான அளவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளைப் பெறுவதில், மாநில அரசுகள் வாங்குவதில் தேவையற்ற போட்டிக்குவழிதிறந்து விட்டிருக்கிறது.முதலாவதாக, பிரதமரின் நேரடி ஒப்புதலின்கீழ், மக்களைக் கசக்கிப்பிழிந்து கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு, இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும், பயோடெக் நிறுவனமும் உரிமங்கள் பெற்றிருக்கின்றன.

மாநில அரசுகள் மீது பழிபோடவே...
இரண்டாவதாக, மத்திய அரசாங்கம் நாட்டில் 18 வயதுக்கு மேம்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதும், அவர்கள் தடுப்பூசிகள் போடுவதற்குத் தேவையான தடுப்பூசிகள் உற்பத்திசெய்ய முடியவில்லை என்பதும், அல்லது வெளிநாடுகளிலிருந்து போதுமான அளவிற்கு தடுப்பூசிகள் வாங்கி இருப்புவைக்காததும் நன்கு தெரிந்தும், மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று இழிவான முறையில் அறிவித்திருக்கிறது. இதற்காக மாநில அரசாங்கங்கள் அதிக விலைகொடுத்து தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய வேண்டும்என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மக்கள் போதுமான அளவிற்குத் தடுப்பூசிகள் போடாவிட்டால் அந்தப் பழியை மாநில அரசுகள் மீது சுமத்தும் விதத்தில் மடைமாற்றிவிட்டிருக்கிறது.

மூன்றாவதாக, தடுப்பூசி உற்பத்தி செய்திடும் தனியார்நிறுவனங்கள் இரண்டும்தான், எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு அனுப்பவேண்டும், எப்போது அனுப்ப வேண்டும்என்று தீர்மானித்திடும். மத்திய அரசின் ஒரே கட்டளையின்கீழ் மாநில அரசுகள் அனைத்தும் இவ்விரு கம்பெனிகளின் விண்ணப்பதாரர்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, மாநில அரசாங்கங்கள் தனியார் மருத்துவமனைகளுடனும், கார்ப்பரேட்டுகளுடனும் போட்டிபோட்டுக்கொண்டு தடுப்பூசிகளை வாங்கியாக வேண்டும்.

படுதோல்வியை மூடி மறைக்க...
அனைத்து மாநிலங்களிலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதே எந்த அளவிற்குத்தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்பதை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏப்ரல் தொடக்கத்தில் தடுப்பூசிகளைப் பெற்ற அளவிற்கு பின்னர் மாநில அரசுகளால் தடுப்பூசிகளைப் பெற முடியவில்லை என்றும், பாதி அளவிற்குத்தான் வந்திருக்கிறது என்றும்செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த எதார்த்தஉண்மையை மத்திய அரசாங்கமும், சுகாதார அமைச்சகமும் மறுப்பது தொடர்கிறது. தடுப்பூசிப் பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறது. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை வலுவானமுறையில் சமாளிப்பதில் படுதோல்வி அடைந்ததை மூடிமறைப்பதற்காக, மாநில அரசாங்கங்கள் மீது மத்திய சுகாதார அமைச்சர் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.  

இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட், கோவிஷீல்டின் விலையைமாநில அரசாங்கங்களுக்கு ஒரு தடுப்பூசி ஒரு தடவை(dose)க்கு 400 ரூபாய் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்றும் அறிவித்திருக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனம் மேலும் ஒருபடி சென்று மாநில அரசாங்கங்களுக்கு 600 ரூபாய் என்றும், தனியார்துறைக்கு 1200 ரூபாய் என்றும் நிர்ணயித்திருக்கிறது. இதனைப் பகல் கொள்ளை என்று கூறுவதைத்தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.மோடி அரசாங்கத்தின் அடுத்த நடவடிக்கையும் ஊகிக்கக்கூடியதேயாகும். அது தடுப்பூசி உற்பத்தி செய்திடும் நிறுவனங்களிடம் விலையைக் குறைத்திடுமாறு கேட்டுக் கொள்ளும். இதனை செவிமடுத்து, அவையும் பெயரளவில் சற்றே விலைகளைக் குறைத்திடலாம். இதற்கு மத்திய அரசு உரிமை கொண்டாடிடும். ஆனாலும் தடுப்பூசிக் கொள்கையில் உள்ள சமத்துவமின்மையும், பேராசையும் தொடர்ந்து நீடித்திடும்.

இலவச தடுப்பூசிபோட ...
எந்தவிதத்திலும் இதனை ஏற்க முடியாது. இந்தக் கொள்கையை அரசாங்கம் உடனடியாகக் கிழித்தெறிய வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை இலவசமாக்கும் விதத்தில் புதிய கொள்கையை அறிவித்திட வேண்டும்.மத்திய அரசாங்கம் தடுப்பூசிகளுக்காக பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஏற்கனவே ஒதுக்கி இருக்கிறது. பட்ஜெட்டைத் தாக்கல் செய்திடும்போது நிதியமைச்சர், தேவைப்பட்டால் மேலும் நிதி ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், இப்போது மத்திய அரசு 45 வயதுக்கும் மேல் உள்ளவர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்பதற்காக, அந்தத் தொகையில் வெறும் 10 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே செலவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக மாநில அரசாங்கங்களுக்கு அளிக்க
வேண்டிய பங்கினை அளிக்க மறுத்துக் கொண்டிருக்கிறது. மாநிலங்கள் மூலமாக இலவசத் தடுப்பூசித் திட்டத்தை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு மீதமுள்ள 25 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கினாலே போதுமானதாகும்.இவ்வாறு சுகாதார அவசரநிலை ஏற்பட்டிருக்கக்கூடிய நிலையில் அதனை மோடி-அமித்ஷா இரட்டையர் கையாண்ட விதம் குறித்து மக்கள் மத்தியில் மிகவும் விரிவான அளவில் கோபம் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கோபம்நியாயமானதேயாகும். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அனைத்து மக்களையும் காப்பாற்றும் விதத்தில் ஓர்ஒருங்கிணைந்த தடுப்பூசித் திட்டமே இப்போதைய பிரதானகடமையாகும்.

இதற்கு மத்திய அரசாங்கம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்: மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் மருந்து (விலைக் கட்டுப்பாடு) ஆணை ஆகியவற்றின்கீழ் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொண்டு, மத்திய அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகளின் விலைகளை நிர்ணயம் செய்திட வேண்டும். மத்திய அரசே, மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை ஒரு வெளிப்படையான சூத்திரத்தின் (formula) அடிப்படையில், அளித்திட வேண்டும். மாநிலஅரசாங்கங்கள் தடுப்பூசித் திட்டத்தை தங்கள் மாநிலங்களில் எவ்விதத்தில் அமல்படுத்திடலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்னுரிமைகள் அளித்திட வேண்டும்.தடுப்பூசி உற்பத்தியை முடுக்கிவிட, கட்டாய உரிமக்கொள்கை கொண்டுவரப்பட வேண்டும். பாரத் பயோடெக்நிறுவனம் உற்பத்தி செய்திடும் கோவாக்சின் (இதன் ஆராய்ச்சிக்காக அரசாங்கத்தின் பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது) பொதுத்துறையின் கீழ் உள்ள ஆறு மருந்துக் கம்பெனிகளுக்கும், மற்றும் தனியார்நிறுவனங்களுக்கும் அளித்திட வேண்டும். இவையன்றி இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி உற்பத்தி செய்ய முன்வந்துள்ள இந்தியக் கம்பெனிகள் அனைத்திற்கும் அனுமதி அளித்துஅவை விரைவாக உற்பத்தியைச் செய்திடக் கேட்டுக்கொள்ளப்பட வேண்டும்.  இம்முயற்சிகள் அனைத்துடனும், எங்கெங்கேசாத்தியமோ அங்கிருந்தெல்லாம் இறக்குமதிகளையும் உடனடியாகச் செய்திட வேண்டும்.

இப்போதுள்ள அழிவுகரமான நிலைமைக்குத் தீர்வுகாண வேண்டுமானால் குறைந்தபட்சம் மோடி அரசாங்கம் இவற்றின் அடிப்படையில், அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகள் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் ஒரு சமமான மற்றும் ஒருங்கிணைந்த விரிவான கொள்கையை அறிவித்திட வேண்டும்.

 ச.வீரமணி

------------------------------------------------------------------------------------------

மே-6 முதல்

புதிய கட்டுப் பாடுகள்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் மே 6ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 122 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். சென்னையில் ஒரே நாளில் 6,150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 1,23,258 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, தமிழகத்தில் ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் தமிழக அரசு நேற்று (மே 3) மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும், 50 சதவிகிதப் பணியாளர்களுடன் மட்டும் இயங்க அனுமதி.

பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதி.

3,000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள், இயங்க 26.4.2021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இந்த கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

மேற்கூறிய மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஆணையிட்டவாறு சனிக்கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6 மணி முதல் 12 வரை செயல்பட அனுமதி.

மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக்கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

உள் அரங்கங்கள் மற்றும் திறந்தவெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது. திரையரங்குகள் செயல்படாது.

ஏற்கனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.

ஏற்கனவே, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், சலூன் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

இந்தப் புதிய கட்டுப்பாடுகள் மே 6ஆம் தேதி காலை 4 மணி முதல் 20 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------

இல்லாத கொரோனா......,

பொல்லாத கொள்ளை.....

தென் சென்னையில் இருக்கும் பிரபலமான மருத்துவமனைகளில் அதுவும் ஒன்று. அங்கு 14 வயதுச் சிறுவனை அனுமதித்து சிகிச்சை பார்த்துள்ளனர். இதில் அதிர்ச்சி என்னவெனில், அந்தச் சிறுவனுக்கு கொரோனா தொற்றே இல்லை. ஆனால், இருப்பதாகச் சொல்லிச் சொல்லி தங்க வைத்து பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்துள்ளனர். ஒரு கட்டத்தில், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு செவிலியர், இந்தக் கொள்ளையைச் சகித்துக்கொள்ள முடியாமல், கொரோனாவே இல்லாமல் கோவிட் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த அந்த அப்பாவிச் சிறுவனிடம் உண்மையைச் சொல்லியிருக்கின்றார்.

அவர் சொன்னதைக் கேட்ட சிறுவன், தன்னுடைய பெற்றோரிடம் விஷயத்தைச் சொல்ல, அவர்களோ அப்படியெல்லாம் இருக்காது என்று வெகுளியாக அந்த மருத்துவமனையை நம்பிக்கொண்டே இருந்துள்ளார். இப்படியே வைத்து போலி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தவர்கள், கடைசியாக 14 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்துவிட்டார்கள். சென்னையின் மையப்பகுதியில் மருந்தகம் வைத்து நடத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் தம்பி மகனுக்கு நிகழ்ந்த அநியாயம்தான் இது. அவருடைய புலம்பலைக் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை.

நாடே கோவிட்-19 பரவலில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. பல தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்க, படுக்கை போதாமல் திண்டாடுகின்றனர். இந்நிலையில், தென் சென்னையின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் இப்படியோர் ஏமாற்று வேலை நடந்திருப்பது மருத்துவ உலகத்துக்கே பேரதிர்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால், இந்தக் கொள்ளை இவர்களோடு நின்றுவிடவில்லை.

கொரோனா பாசிட்டிவ் என்று ஒருவர் சிகிச்சைக்கு வந்தால் அவர்களிடம் லட்சக்கணக்கில் கொள்ளையடிப்பது மட்டுமன்றி, கொரோனா இருக்கிறதோ இல்லையோ ஒருவரை கொரோனா நோயாளியாக அனுமதித்தால், அவர்களுக்கும் அந்தக் கொள்ளையிலிருந்து தனி கமிஷன். இந்த கமிஷனுக்காக, கொரோனாவே இல்லாதவரையும் கூட பாசிட்டிவ் என்று கூறி அழைத்துவந்து அனுமதித்துவிட்டு, கமிஷன் வாங்கிச் செல்பவர்கள் பலர். பாவம், தனக்கு கொரோனா பாசிட்டிவ்தான் என்று நம்பி அச்சத்தோடும் வேதனையோடும் அங்கு சிகிச்சை எடுக்க வருபவர்களுக்கோ மன உளைச்சல், நிம்மதியின்மையோடு சேர்த்து பெருமளவு பணமும் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது.


ஒருவர் உண்மையாகவே கொரோனா பாசிட்டிவ் இருந்து அங்கு சென்றாலும்கூட, குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாயைச் சுருட்டாமல் அவர்கள் சிகிச்சையை முடித்து வெளியே அனுப்புவதில்லை. இப்படிச் சிக்கிக்கொண்ட ஒருவர் இரண்டரை லட்சம் ரூபாயைக் கட்டிய பிறகுதான் வெளியே செல்லவே அனுமதித்ததாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இப்படி, கொரோனாவை வைத்துச் செய்யப்படும் முதலீடுகளும் அதிலிருந்து அடிக்கப்படும் கொள்ளைகளும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அதுமட்டுமன்றி, கொரோனா பாசிட்டிவ்வோடும் மிக மோசமான உடல்நிலையோடு தீவிர சிகிச்சை தேவைப்பட வேண்டிய நிலையிலும் யாராவது அனுமதிக்கப்பட்டால், அவர்களை படுக்கை போதவில்லை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று ஏதாவது காரணத்தைக் காட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகின்றனர். இப்படிப்பட்ட சம்பவங்களைப் பற்றி சென்னையைச் சேர்ந்த ஓர் அரசு மருத்துவரே கவலை தெரிவித்துள்ளார்.

அவர், “தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் அனைத்தும், மோசமான உடல்நிலையோடு எந்த நோயாளியாவது தங்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சை கேட்டு வந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தயாராக இல்லை. ஆபத்தான நிலையிலிருக்கும் அந்த நோயாளிகளை அவர்கள் அரசு மருத்துவ மனைக்குத்தான் அனுப்பி வைக்கின்றனர். தனிநபர் ஒருவரின் உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கையாள தனியார் மருத்துவமனைகள் தயங்குகின்றன. ஆகையால், அரசு மருத்துவமனையையே எல்லோரும் தேடி வருகின்றனர். இதனால், இங்கும் கடுமையான இடப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. அரசு மருத்துவர்களும் செவிலியர்களும் மிகவும் சோர்வடைந்துள்ளனர். அவர்களும் நோய்த்தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்” என்று வேதனையோடு தெரிவித்தார்.

இவைபோக, தனியார் மருத்துவமனைகள் அரசாங்கம் கோவிட் சிகிச்சைக்காக நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாகவும் சிகிச்சை பெற்றவர்களில் பலர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.

தனியார் மருத்துவமனை

அதோடு ஒரே நேரத்தில் மூன்று, நான்கு பேர் ஒரு படுக்கையைக் கேட்கும்போது, அதில் யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே இடம் கொடுப்பதும் நடக்கிறது. இதைத் தவிர்க்க முதலில், அரசு கோவிட் சிகிச்சை மையங்களுக்கு ஆரம்பகட்டத்திலேயே சென்று அவர்களுடைய வழிகாட்டுதலைப் பெற்று அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியதுதான்” என்று கூறினார்.

தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவது பற்றியும் கொரோனாவே இல்லாமல் சிகிச்சை கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைப் பற்றியும் பேசிய செயற்பாட்டாளர் மருத்துவர் ரவீந்திரநாத், “மிகப்பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள், குறைந்த அறிகுறிகளோடு இருப்பவர்களை அதிகமாக அனுமதித்துக் கொள்கிறார்கள். இதனால், தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை.


இதைச் சரிசெய்ய, சிகிச்சைக்கு அனுமதிக்கும் அதிகாரத்தை அரசே கையில் எடுக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளுமே அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் கட்டணக் கொள்ளையைத் தடுக்க முடியும்.

அதோடு, ஒருவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்தாலும், அவர்களுக்கு கொரோனா இருக்க வாய்ப்புள்ளது. நுரையீரலில் கோளாறு இருந்தால் அதை நிச்சயம் கொரோனா பாசிட்டிவ்வாகக் கருதியே சிகிச்சையளிக்க வேண்டும். ஆகையால் அதை நாம் உறுதியாகச் சொல்லிவிட முடியாது” என்று கூறினார்.

தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலிப்பது, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனைக்குத் திருப்பிவிடுவது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று கொரோனா கண்காணிப்பில் இருக்கும் கூடுதல் இயக்குநர் மருத்துவர்.விஸ்வநாதனிடம் கேட்டபோது, “ஏற்கெனவே எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்து, அனைவருக்கும் அனுப்பியுள்ளது. அதை மீறும் மருத்துவமனைகள் மீது யாராவது புகார் தெரிவித்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம். சென்னையில் மட்டும் இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட புகார்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று கூறினார்.


வால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டியது அவசியம். அதேநேரம், அனைத்து மக்களுக்கும் தேவையான மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்கவேண்டும். அறிகுறிகள் இன்றி பாசிட்டிவ் வந்தால், அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க முடியும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால், வெறுமனே படுக்கைகளை நிரப்பி பணம் சம்பாதிப்பதும் ஆங்காங்கே நடப்பதை மறுப்பதற்கில்லை.

மருத்துவர் ரவீந்திரநாத் கூறியதுபோல் அரசே அவசரகால அடிப்படையில் அனைத்து மருத்துவமனைகளின் கொரோனா பிரிவையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, அரசின் மேற்பார்வையோடு செயல்பட வைக்கவேண்டும். இதுவே, அனைவருக்கும் முறையான சிகிச்சை நியாயமான கட்டணத்தில் கிடைக்க உதவும்.

--------------------------------------------------------------------------------

ஞாயிறு, 2 மே, 2021

ஸ்டாலின்தான் வந்துட்டார்.

 கட்சியின் தொண்டனாக துவங்கி இன்று தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள முக ஸ்டாலின் பயணித்த கதை இது!
திமுக முன்னாள் தலைவர் மற்றும் மறைந்த முதல்வருமான மு.கலைஞரின் முதல் மனைவி பத்மாவதி மு.க. முத்துவை பெற்றெடுத்த பின்னர் 1948ம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பின்னர் தயாளுவை செப்டம்பர் 15ம் தேதி கருணாநிதி திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதியினருக்கு மார்ச் 1,1953ம் ஆண்டு  பிறந்தவர் முக ஸ்டாலின். பெரியார் மற்றும் அண்ணாவின் நினைவாக அவருக்கு அய்யாதுரை என்று முதலில் பெயர்சூட்டினார் கலைஞர்.  வீட்டில் தனக்கென்று ஒரு தனிப்பட்ட அறையை வைத்துக் கொள்ளதா கலைஞரை காண வந்த அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலைஞரை தலைவர் என்று விளிக்க ஆரம்ப காலம் முதலே முக ஸ்டாலினும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞரின் மகளுமான கனிமொழியும் தலைவர் என்றே கருணாநிதியை அழைத்தனர்.

Tamil Nadu New Chief Minister History of MK Stalin
தந்தை மற்றும் மகனுடன் முக ஸ்டாலின்

1962ம் ஆண்டு கலைஞர் இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் போட்டியிட தஞ்சை தொகுதியை தேர்வு செய்தார். குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட போது முக ஸ்டாலினுக்கு வயது நான்கு. ஆனால் தஞ்சையில் போட்டியிட்ட பிறகு கலைஞர் போலவே தானும் பெரிய அரசியல்வாதி ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்சிக்குள் பயணப்பட்டார் ஸ்டாலின். கோபாலபுரத்தில், தன்னுடைய 13 வயதில் சக நண்பர்களை சேர்த்து  இளைஞர் திமுக என்று ஒரு சிறிய அமைப்பை உருவாக்கினார்.  விளையாட்டு பிள்ளையாக இருப்பதால் ஸ்டாலினை தட்டிக் கொடுத்தார் முக ஸ்டாலின். ஆனால் காலம் ஸ்டாலினை அரசியல் பக்கம் அதிவேகமாக ஈர்த்தது. 1971ம் ஆண்டு  முரசொலி அடியார் எழுதிய முரசே முழங்கு என்ற நாடகத்தை 40 இடங்களில் நடத்தி, மாபெரும் வெற்றிவிழா கலைஞர் தலைமையில், எம்.ஜி.ஆர். முன்னனிலையில் நடைபெற்றது. ஆனால் எம்.ஜி.ஆரோ, “ஸ்டாலின் பெரியப்பாவின் சொல் கேட்டு செயல்பட வேண்டும். நாடகத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு படிப்பில் அக்கறை காட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார். முக ஸ்டாலின் அரசியல் ஆர்வத்தை ஆரம்பத்தில் கலைஞர் விரும்பவில்லை என்பது அக்குடும்பம் அறிந்த உண்மை.

அரசியல் பிரவேசமும் மிசா கைதும்  

1967ம் ஆண்டு  பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 1973ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1976ம் ஆண்டு அவசரநிலை காலத்தில் கட்சி தடை செயப்படுமோ என்ற அச்சம் அனைத்து திமுக  தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும் இருந்தது. சர்வாதிகாரத்திற்கான துவக்க விழாவை இந்திரா காந்தி துவங்கி வைத்துள்ளார் என்று கைப்பட கருணாநிதி எழுதி எதிர்ப்பு தெரிவிக்க திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  ஜனவரி 31ம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. ஸ்டாலினை கைது செய்ய கோபாலபுரம் வீட்டிற்கு காவல்துறை வந்த போது, ஸ்டாலின் ஊரில் இல்லை. நாளை வந்து கைது செய்து கொள்ளவும் என்று கூறிய கருணாநிதி அவ்வாறே ஸ்டாலினை அடுத்த நாள் காவல்துறையிடம் ஒப்படைத்தார். மாறனும் கைது செய்யப்பட்டார். 1976ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி அன்று மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் முக ஸ்டாலின். மிசாவின் போது ஸ்டாலின் கைதானது குறித்து நெஞ்சுக்கு நீதி தவிர வேறெங்கும் ஆதாரங்கள் காணக்கிடைக்கவில்லை என்று இணையத்தில் சர்ச்சை எழ புகைப்படங்களை வெளியிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர் திமுகவினர்.

”அரசியலுக்கு நான் ஸ்டாலினை அழைத்துவரவில்லை.. இந்திரா காந்தி தான் அழைத்து வந்தார்” என்று கருணாநிதி கூறுவதுண்டு. மிசா கைதிற்கு பிறகு மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தார் முக ஸ்டாலின். 1980-இல் மதுரையில் நடந்த திமுக கூட்டத்தில் இளைஞரணி அமைப்பை திமுக தலைவர் கருணாநிதி துவக்கினார். இந்த இளைஞரணியின் ஆரம்ப காலத்தில் அமைப்பாளராக பணியாற்றினார் முக ஸ்டாலின். பிறகு  1984ம் ஆண்டு முதல் இளைஞரணி செயலாளராக செயல்பட ஆரம்பித்தார். அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று தோல்வியுற்றார். பிறகு 89ம் ஆண்டில் அதே தொகுதியில் நின்ற அவர் அதிமுகவின் தம்பிதுரையை எதிர்த்து போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதன் பிறகு 1991ம் ஆண்டு அதே தொகுதியில் நின்று தோல்வி அடைந்தார். 1996ம் ஆண்டு, 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். என்ன தான் குடும்ப அரசியல் என்ற விமர்சனங்களை முன்வைத்தாலும் மக்கள் விரும்பும் தலைவராக இல்லாமல் போனால் தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடியாது. அதற்கு அவர் பெற்ற இரண்டு தோல்விகளே உதாரணம்.

சென்னை மேயராக முக ஸ்டாலின்

1996ம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்  நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக முக ஸ்டாலின் திமுக சார்பில் போட்டியிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சென்னை மாநகராட்சி மேயராக  பதவி வகித்தார் அவர். இந்த காலத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்க உருவாக்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் சென்னை மாநகராட்சி மேயராக தேர்வானார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தை ஆளும் அதிமுக அரசு அப்போது கொண்டுவந்தது. எனவே தனது மேயர் பதவியை துறந்து, ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்தார். 2001ம் ஆண்டு தான், சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்தது என்று கூறி, அன்றைய ஜெயலலிதாஅரசு சென்னை மேயராக இருந்த முக ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை கைது செய்தது. 

ஆனாலும் அவர்கள் மீது குற்றம் தொடர்பாக எந்த குற்றசாட்டும்,ஆதாரமும் கிடைக்காத்தால்  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.நீதிமன்றம் ஜெயல்லிதா அரசை கண்டித்ததால் வெளியே விடுதலையாகி வந்தனர்.

உள்ளாட்சி துறை அமைச்சர்


2006ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முக ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த காலத்தில் அவருடைய நிர்வாகத்திறமை பலராலும் பாராட்டப்பட்டது. கடந்த 2009-ஆம் ஆண்டு, தமிழக வரலாற்றின் முதல் துணை முதல்வர் பதவியை ஏற்றார் முக ஸ்டாலின்.

 கட்சிக்குள் வளர்ச்சி

2003ம் ஆண்டு அக்கட்சியின் பொதுக்குழு அவரை துணைப் பொதுச்செயலாளராக அறிவித்தது. 2008ம் ஆண்டு திமுகவின் பொருளாளராக பதவி ஏற்றார். 2017ம் ஆண்டு முக ஸ்டாலின் முதல் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கலைஞர் கருணாநிதி மரணம் அடைய, 50 ஆண்டுகளுக்கு பிறகு அக்கட்சியின் தலைவராக முக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக ஆகஸ்ட் 28ம் தேதி அன்று அன்றைய திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவழங்கிவிட்டனர்.

விமர்சனங்களுக்கு அப்பால் வளர்ந்த  முக ஸ்டாலின்

2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, நமக்கு நாமே என்ற திட்டத்தோடு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற முக ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுதல், தெருவில் இருக்கும் கடைகளில் தேநீர் அருந்துதல், பள்ளி செல்லும் குழந்தைகளுடன் உரையாடுதல் என்று மக்களை நோக்கி சென்ற போது அவரை நோக்கி கடும் விமர்சனங்களும் கேலிப் பேச்சுகளும் உருவானது.

கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சியை கட்டி ஆளும் தன்மை முக ஸ்டாலினுக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் வலுபெற்ற வண்ணமே இருந்தது. தன்னுடைய தந்தை இறந்த பிறகு, இரங்கல் கூட்டத்தில் மதசார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளை அழைத்து, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தையை முன்னிறுத்தி திமுகவின் தலைவராக தன்னுடைய முதல் அடியை அவர் எடுத்து வைத்தார்.

தந்தைக்காக இறுதியாக முக ஸ்டாலின் எழுதிய இரங்கல் கடிதம்

மேடைப் பேச்சுகளில் அவ்வபோது ஏற்படும் பிழைகள், பேச்சுகளில் ஏற்படும் வார்த்தை தவறுகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவரின் ஆளுமை திறனுடன் ஒப்பிட்டு பேசும் போக்கும் அதிகமாக இருந்தது. இந்து இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இது குறித்து கேட்ட போது, “கருத்தில் பிழைகள் இருந்தால் அரசியல் ரீதியாக விமர்சனம் இருந்தால் முன்வைக்கலாம். பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இன்று போல் அன்று காட்சி ஊடகங்கள் அதிகம் இல்லை என்பதால் அன்று பெரிதாக தெரியவில்லை. ஆனாலும் தவறுகள் நடப்பது மனித இயல்புதானே” என்று பதில் கூறினார்.

குடும்ப அரசியல் குறித்தும், காங்கிரஸ் ஆட்சியின் போது திமுக எம்.பிக்களால் ஏற்பட்டதாக முன்வைக்கப்படும் ஊழல்கள் தொடர்பாகவும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவை அனைத்தையும் தாண்டி இன்று மக்கள் மத்தியில் நிலைத்து நின்றிருக்கிறார் முக ஸ்டாலின். கடந்த கால படிப்பினைகளை வைத்து மக்கள் நலனிலும், சமூக நலனிலும் சமரசம் இல்லாமல் மாநில சுயநிர்ணய அதிகாரத்திற்காக தொடர்ந்து முக ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு செயல்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. அந்த தீர்ப்பை அவர்கள் ஏப்ரல் 6ம் தேதி அன்றே வழங்கிவிட்டனர்.
----------------------------------------------------------------------------------