புதன், 28 பிப்ரவரி, 2018

இந்தியாவே முதன்மை எலும்பு சந்தை

உடல் உறுப்புகளிலேயே அதிக விலை உடையது எலும்பு மஜ்ஜைதான் என்கிறார்கள். சர்வதேச மார்க்கெட்டில் வெறும் 10 கிராம் எலும்பு மஜ்ஜை 23,000 டாலர் வரை  விலைபோகுமாம்.  

மனித எலும்பு வாங்க இந்தியா வாங்க..

காஞ்சிபுரம் மாவட்ட பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த முதியோர் காப்பகத்தில் இறந்தவர்களின் உடல்களில் இருந்து எலும்புகள் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இரண்டாவது நாளாக 200 பேர் முதியோர் இல்லத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். 
இந்நிலையில் தொடர் சோதனையில் முதியோர் இல்லத்திற்குள் பாதாள பிணவறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்றோர் காப்பகத்தில் தினந்தோறும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகிக்கொண்டிருக்கிறது. 
ஆதவற்றோருக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி இங்கே தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சரியான உணவு மற்றும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதோடு அவர்களை வெளியில் விடவும் நிர்வாகம் மறுப்பது தெரிய வந்தது.
பாலேஸ்வரம்  முதியோர் காப்பகம் 


கடந்த 20ம் தேதி காப்பகத்திற்கு சொந்தமான வாகனத்தில் பிணத்துடன் மூதாட்டி ஒருவர் சென்ற போது கூச்சலிட்டதால் பொதுமக்கள் வாகனத்தை மறித்து மூதாட்டியை மீட்டதால் உண்மை விஷயங்கள் தெரிய வந்துள்ளது. 

மூதாட்டி அளித்த தகவலின் அடிப்படையில் முதியோர் இல்ல மர்மங்கள் அதிகாரிகளின் விசாரணையில் வெளிவரத் தொடங்கியுள்ளது.

முதியோர் இல்லம் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்த நிலையில் கோட்டாட்சியர் தலைமையில்  திடீர் சோதனை நடத்தப்பட்டது. 

காப்பகத்தின் உரிமையாளர் தாமஸிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அதிகாரிகள் விசாரணையின் போது காப்பகத்தில் தங்க விரும்பாத 86 பேர் வேறு முதியோர் காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் 2வது நாளாக இன்றும் அதிகாரிகளின் சோதனை தொடர்கிறது, இன்றும் சுமார் 200 முதியோர்கள் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆதரவற்றோர் காப்பகத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு விநோதமான முறை கடைபிடிக்கப்படுவதே காப்பகத்தை இழுத்து மூட காரணமாக அமைந்துள்ளது. 

சுகாதாரத்துறையின் அனுமதி இல்லாமல் லாக்கர் போன்ற வடிவமைப்பில் சிமென்ட் கல்லறைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளனர்.
லாக்கர் போன்ற வடிவமைப்பில் உள்ள பொந்துகளில் இறந்தவர்களின் உடல்களை போட்டு மூடி வைத்துவிடுகின்றனர். இறந்தவர்களின் உடல் சதை அழுகி குழியில் விழும் வகையில் அறை அமைக்கப்பட்டுள்ளது, மிஞ்சும் எலும்புப் கூடை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தெரிகிறது. 

எலும்புகளை விற்பது தொடர்பாக காப்பகத்தின் உரிமையாளர் தாமஸ் ஒப்புக்கொள்ள இன்னம் மறுப்பதால் 
பின் எதற்காக எலும்புகள் மட்டும் தனியாக சேரும்படி  பிணவறையை இப்படி வடிவமைத்தனர் என்று கேட்டதற்கு சரியான பதிலை காப்பகத்தினர் சொல்லவில்லை.
மேலும் ஒவ்வொரு மாதமும் இங்கு 20,30 பேர்கள்வரை முதியோர்கள் இறக்கிறார்கள்.அவர்கள் இறப்பு பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கோ,ஊராட்சிக்கோ தெரிவிப்பதே இல்லை.சான்றிதழ்கள் வாங்குவதும் இல்லை.இறந்தவர்களின் உறவினர்களுக்கும் தெரிவிப்பதில்லையாம்.


மனித எலும்புகளுக்கான உலக சந்தையில் 

இந்தியாவே முதன்மை கறுப்பு சந்தை. 
2007-ம் ஆண்டு அமெரிக்க மருத்துவ  மாத இதழில்  வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையின்  தமிழாக்கம்(சுருக்கம்)
உலக அளவிலான மனித எலும்புகளுக்கான தேவை.. பணம் காய்க்கும் மரமாக மனித எலும்புகளுக்கான சந்தையை உருவாக்கி உள்ளது. 
இது இன்று நேற்று உருவான சந்தையுமல்ல. 1500 களின் பிற்பகுதியில் இருந்து மருத்துவ வளர்ச்சியின் ஒவ்வொரு நகர்விலும், ஆராய்ச்சி + மருத்துவ கல்வியில் மனித எலும்புகளுக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. 

கடந்த 160 வருடங்களுக்கும் மேலாக , இந்தியாவில் மனித எலும்பு வியாபாரத்திற்கான பாதை என்பது... கடைக்கோடி இந்திய கிராமத்திலிருந்து ...உலகின் பல வேறு நாடுகளில் உள்ள புகழ் பெற்ற மருத்துவ கல்லூரிகளை சென்று அடைவது வரை நீடிக்கிறது. 


வெள்ளை வெளேரென்று சுத்தப்படுத்தப் படும் மனித எலும்புக்கூடு + அதை முழுமையாக இணைப்பது வரை, சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் மிகச் சரியாக வழங்குவதால், உலகளவில் ...மனித எலும்புக்கூடு சந்தையில் இந்தியா தான் முக்கிய ஏற்றுமதி நாடு. 

Chicago Tribune என்கிற அமெரிக்க செய்தித்தாள், 
1984-ம் வருடம் மட்டும் இந்தியாவிலிருந்து 60,000 மனித எலும்புக்கூடுகள் ஏற்றுமதியானதாக செய்தி வெளியிட்டது. 

இந்த எண்ணிக்கை , வளர்ந்த நாடுக்ளில் உள்ள ஒவ்வொரு மருத்துவ மாணவரும் புத்தகங்களோடு 300 டாலருக்கு ஒரு மனித எலும்புக்கூடையும் வாங்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கு போதுமானதாக இருந்தது ! 

அதே நேரம், 1985 மார்ச் மாதம், கல்கத்தாவில், 1500 குழந்தைகளின் எலும்புக் கூடுகளை ஏற்றுமதி செய்ததாக மனித எலும்பு வியாபாரி ஒருவர் காவல்துறையிடம் சிக்குகிறார். குழந்தைகளின் எலும்புக்கூடுகளுக்கு சந்தை மதிப்பு அதிகம் என்பதால், இக் குழந்தைகள் அனைவரும் கடத்தப் பட்டு கொல்லப் பட்டதாக இந்திய செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன. 
இதன் பின்னர், நடக்கும் அவலங்களை கவனித்து ,1985-ல் இந்திய அரசு , மனித எலும்பு ஏற்றுமதி சந்தைக்கு தடை விதித்து, அதை குற்றம் என அறிவித்தது. இதை அடுத்து , உலக எலும்புச் சந்தையே பெரும் சரிவை சந்தித்தது எனில், இந்திய மனித எலும்பு சந்தைக்கான உலக கிராக்கி புரிபடும். 

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் தடை சட்டத்தை நீக்குமாறு இந்திய அரசிடம் மன்றாடின. 
இந்தியா மறுத்துவிட்டது. மேலும், சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் மனித எலும்புகள் தரமான முறையில் தரப்படுத்தப் படாதவை என்பதாலும் இந்திய மனித எலும்புகளுக்கான சந்தை , அரசின் தடையை மீறி, மிகப் பெரும் கறுப்பு சந்தையாக உருவெடுத்திருக்கிறது. 

இந்தியாவில் இந்த கறுப்பு சந்தையின் மையப் புள்ளியாக இருப்பது மேற்கு வங்காள மாநிலம். 

2006-ம் வருடம், கல்கத்தாவிலிருந்து 80 மைல் தொலைவில், பாகிரதி நதிக் கரையில் இருக்கும் Purbasthali என்கிற ஊரில், மனித எலும்புகளை சுத்தப் படுத்தி சந்தையின் தேவைக்கு ஏற்ப தரப்படுத்தும் processing plant கண்டுபிடிக்கப் படுகிறது. 

குவியல் குவியலாக மலை போல் மனித எலும்புகள் ! 

அருகாமை ஊர்கள் வரை சுற்றிலும் குடலைப் பிரட்டும் மனித உடலின் அழுகல் வாடை வேறு! 
100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவந்திருக்கிறது இந்த எலும்பு விற்பனை ! 
அதன்தற்போதைய  உரிமையாளர் முக்தி பிஸ்வாஸ். 

இறந்த உடல்களை எரிக்கும் சுடுகாட்டிலிருந்தும், புதைக்கும் இடுகாட்டிலிருந்தும் பிணங்களை திருடிய குற்றத்திற்கு கைதான இவர், அரசியல் தொடர்பு உள்ளவர் என்பதால் மறுநாளே விடுவிக்கப்பட்டு விடுகிறார். 

அந்தந்த உடலின் எலும்புகளை வேறு வேறு உடல்களின் எலும்புகளோடு குழப்பாமல், தனித்தனியாக முழு எலும்புக் கூடுகளாக கொடுப்பதால் , மருத்துவர்களின் preferred choice இந்த பிஸ்வாஸ். இவரிடம் வாங்கி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாய்லாந்து, பிரேசில் என்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தவர்கள் Young Brothers என்கிற மருத்துவ உபகாரணங்களுக்கான விற்பனை நிறுவனம் . இந்திய அரசின் தடைக்கு பிறகும் 20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிவந்த இதன் உரிமையாளர் Vinesh Aron . இவரும், கைது செய்யப் பட்டு இரண்டே நாட்களில் விடுவிக்கப் பட்டுவிடுகிறார். 

வளர்ந்த நாடுகளின் மருத்துவ துறை : அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் , சேதப்படாத நன்கு தரப்படுத்தப் பட்ட ஒரு மனித எலும்புக்கூட்டின் விற்பனை விலை பல ஆயிரம் அமெரிக்கா டாலர்கள். அனைத்து மருத்துவ கல்லூரிகளும் மிகப் பெரிய அளவில் மனித எலும்புக்கூடுகள் தேவைப்படுகின்றன. 
செயற்கை முறையில் பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப் பட்ட எலும்புக் கூடுகள் ஒரே மாதிரியைக் கொண்டு தயாரிக்கப் படுபவை என்பதால், மருத்துவ மாணவர்கள் அதன் மூலமாக ஒவ்வொரு மனித உடலுக்குமான வித்தியாசத்தை அறிந்து கொள்ள முடிவதில்லை. 

உலக நாடுகளுடன் இணைக்கும் இந்த நீளமான மனித எலும்புக்கூடுகளுக்கான கருப்பு சந்தை வியாபாரத்தில்..இந்த சங்கிலியை இணைக்கும் முக்கிய கண்ணி... மருத்துவ உபகரணங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் ! 
வாங்கி விற்கும் வேலையை இவை தான் செய்கின்றன. 

உலகம் முழுவதும் மனித எலும்புக்கூடு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கனடா நாட்டை சேர்ந்த Osta International என்கிற நிறுவனம், இந்தியாவிலிருந்தே கருப்பு சந்தையில் எலும்புக்கூடுகளை வாங்குவதாக இதனை நடத்தும் Christian Ruediger கூறி இருக்கிறார். 
இந்நிறுவனத்தின் எலும்புக்கூடுகள், அமேசான் ஆன் லைன் விற்பனையிலும் கிடைக்கின்றன. 

ஆக, இந்தியாவில் உள்ள அனைத்து விதமான மனிதக் கடத்தல்களுக்கும் பின்னால்... மனித எலும்புக்கூடுகளுக்கான கருப்பு சந்தையும் செயல்படுகிறது. 

எந்த வித சேதமும் இல்லாத, தரமான மனித எலும்புக்கூடு பல ஆயிரம் டாலர் சந்தை மதிப்பு உடையது என்னும் இந்த இடத்தில் தான் ... Reusable concrete burial vault கவனிக்கத் தக்கதாக மாறுகிறது !
 
============================================================================================
ன்று,
பிப்ரவரி-28.
 • இந்திய தேசிய அறிவியல் தினம்
 • எகிப்தின் விடுதலையை யூ.கே., அங்கீகரித்தது(1922)
 • வொலஸ் கரோதேர்ஸ் என்பவரால் நைலான் கண்டுபிடிக்கப்பட்டது(1935)
 • இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் இறந்த தினம்(1963)
 • முதல் வளைகுடா போர் முடிவு பெற்றது(1991)

டாக்டர் ராஜேந்திர பிரசாத், பீஹார் மாநிலம், சிவான் எனும் இடத்தில், மகாவீர சாகி - - கமலேசுவரி தேவி தம்பதிக்கு மகனாக, 1884 டிச., 3ல் பிறந்தார். 
பொருளியலில் முதுகலை பட்டமும், சட்டத் துறையில், முனைவர் பட்டமும் பெற்றவர். 

'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் 
பங்கேற்றதால், 1942ல் கைது செய்யப்பட்டார். மூன்றாண்டு சிறைவாசத்திற்கு பின், 1945 ஜூன், 15ல் விடுதலையானார். 1946ல், இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ல் காங்கிரஸ் தலைவரானார்.

சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக, 1950ல் பதவியேற்றார். 
1952, 1957 ஆகிய காலத்தில், இருமுறை ஜனாதிபதியாக பதவியேற்ற, ஒரே ஜனாதிபதி, இவர் தான்.
அவருக்கு, நாட்டின் உயரிய விருதான, 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.
============================================================================================

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

மோடி ஆட்சியும் ,இன்றைய ஊழலும் !

காங்கிரசு ஊழல் கட்சி என்று செல்லுமிடமெல்லாம் ஊதி வருகின்ற பிரதமர் மோடி தனது  ஆட்சியில் இப்போது வரிசை கட்டி வருகிற ஊழல் புகார்களைப்பற்றி பாராளுமன்றமானாலும் சரி,மக்கள் மன்றமானாலும் சரி வாயைத்திறப்பதே இல்லை.

எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பி பாராளுமன்றத்தை முடக்கினாலும் கல்லுளி மங்கன் என்றால் எப்படி இருப்பான் என்பதற்கு எடுத்துக்காட்டாக உட்கார்ந்திருப்பார்.
காதில் மாட்டியதில் உறுப்பினர்கள் பேச்சைக்கேட்கிறாரா?அல்லது சம்ஸ்கிருத சுலோகங்களை கேட்கிறாரா என்பதையே கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தியவின் மனசாட்சியை சொல்லுகின்ற ஊடகங்களோ தங்கள் மனசாட்சியை பாஜக தரும் விளம்பரக்காசுக்கு விற்று விட்டதால் அதைப்பற்றி கேளிவியை எழுப்புவதே இல்லை.
ஆனால் இதுவரை நடந்த ஊழல்களை எல்லாம் பல லட்சம் கோடிகளைத்தொடும் மோடி ஆட்சி கால ஊழல்கள் கிண்டலடிக்கிறது.


மேலும் இதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த ஊழல்கள்,மோசடிகள் எல்லாம் மோடி ஆட்சிக்காலத்தில் அம்பானி,அதானி போன்ற மோடியின் நண்பர்கள் வட்டாரத்திலேயே நடப்பதுதான் அதிர்சியானது.

அமித்ஷா போன்ற பாஜக தலைவர்கள்,மற்றும் அம்பானி உறவினர்கள் ,அதானி உறவு முறைகள் என்ற வட்டத்திலிலேயே பல்லாயிரம் கோடிகள் வங்கி மோசடிகள்.அனைத்தும் மக்கள் பணம்.
5000க்கு குறைவாக இருந்தால் பணத்தை தாங்களாகவே எடுத்து பாமர இந்தியனை கொல்லும் அதே வங்கிகள்தான் பல விதிமுறைகளையும் மீறி எந்த வித பிணையும் இல்லாமல் பல்லாயிரம் கோடிகளை இந்த கும்பல்களுக்கு கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்கின்றன.

வங்கிகள் இப்படி கோடிகளில் அள்ளிக்கொடுக்க மத்திய அரசு ஆசி இல்லாமலும் ரிசர்வ் வங்கிக்கு தெரியாமலும் நடக்க வாய்ப்பே இல்லை என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரிந்த உண்மைதான்.
வங்கிகள் லட்சக்கணக்கில் கொடுக்கும் கடன்கள் விபரமே ரிசர்வ் வங்கிக்கு அறிக்கையாக போகையில் கோடிகள் அதுவும் ஆயிரம்கோடிகள் கடன் விபரம் தெரியாமல் போகுமா?

அதை மக்கள் நம்பவும் வேண்டுமா?

இல்லை.அது எங்கள் வேலை இல்லை என்றால் ரிசர்வ் வங்கி என்று வங்கிகளை கண்காணிக்கும் அமைப்பும் அதற்கு ஆளுநர் என்று ஒருவரும் எதற்கு??

ஒருவர் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க கூடாது.5000க்கு குறைவாக இருந்தால் அபராதம் எடு,ஏழைமாணவர்களின் கல்விக்கடனை அம்பானி மூலம் வன்முறை குமப்பால் மூலம் புடுங்கு என்பதை கண்காணிப்பதுதான் ரிசர்வ் வங்கி வேலையா?

இப்போது புதிதாக வெளிவந்துள்ளது  109 கோடிகள் ஊழல்.அதுவும் மோடி அரசு எந்த விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று  பிடிவாதமாக உள்ளதோ அந்த விவசாயிகள் பெயரிலே நடந்த ஊழல்.

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சிம்ப்ஃஹோலி சர்க்கரை ஆலைக்கு, விவசாயிகள் பெயரில் ரூ. 109 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டிருப்பதும், அதனை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்குப் பிரித்துத் தராததுடன், குறிப்பிட்ட காலத்திற்குள்வங்கியிலும் திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே சிம்ப்ஃஹோலி ஆலை மீது, ரூ. 97 கோடி அளவிற்கான மோசடிப் புகார் இருந்த நிலையில், மோடி ஆட்சிக்கு வந்தபின்புதிதாக இந்த ரூ. 109 கோடி கடனை வழங்கி இருந்ததும் அம்பலத்திற்கு வந்துள்ளது. 
தில்லி வைர வியாபாரி துவாரகா தாஸ், ரூ. 389 கோடி மோசடியில் ஈடுபட்ட, ஓரியண்டல் வங்கியிலேயே இந்த மோசடியும் நடந்துள்ளது.நாட்டின் பொதுத்துறை வங்கிகளில், ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி, ‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ்’ சாராய ஆலை முதலாளி விஜய் மல்லையா, அதனை திருப்பிச் செலுத்தாமல்,வெளிநாட்டுக்கு தப்பினார். 

அவர் தற்போது லண்டனில் இருக்கிறார்.மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவர சிபிஐ படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே, குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும்மற்றும் குடும்பத்துடன் சுவிட்சர்லாந்து தப்பினார்.


 நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 700 கோடியைச் சுருட்டிக் கொண்டு அவர் தப்பினார்.அடுத்த சில நாட்களிலேயே, நீரவ் மோடி வழியில் ‘ரோடோ மேக்’ பேனா கம்பெனி முதலாளி விக்ரம் கோத்தாரி, 6 வங்கிகளில் ரூ. 3 ஆயிரத்து 695 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத உண்மை வெளியானது. 

அவரும் வெளிநாடு தப்பிச் சென்றதாக முதலில் செய்தி வெளியானது. 
ஆனால், சிபிஐ-க்கு தகவல் அனுப்பி, அவராகவே கைதானார்.

இந்த பரபரப்பு ஓய்வதற்கு உள்ளேயே, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சிடம் மோசடிநடந்தது தெரிய வந்தது. நீரவ்மோடியைப் போல, மற்றொரு வைர நகை ஏற்றுமதி யாளரான- தில்லியைச் சேர்ந்த துவாரகா தாஸ் மற்றும் அவரது நண்பர்கள், ஓரியண்டல் வங்கியிடம் ரூ. 389 கோடியை திருப்பிச்செலுத்தாமல் மோசடி செய்த குற்றச்சாட்டு வெளியானது.

ஆனால், இரண்டே நாட்களில், அதே ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சில் ரூ. 110 கோடி அளவிற்கு நடந்த மற்றொரு கடன் மோசடியும் தெரியவந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த சிம்ப்ஃஹோலி சர்க்கரை ஆலை நிறுவனத்திற்கு, விவசாயிகள் பெயரில் ரூ. 109 கோடியே 8 லட்சம் கடன் வழங்கப்பட்ட தும், அதனை சர்க்கரை ஆலை நிறுவனம் திருப்பிச் செலுத்தாததும் கண்டறியப்பட்டு உள்ளது.சிம்ப்ஃஹோலி சர்க்கரை ஆலை நிறுவனம், நேரடியாக கடன் வாங்காமல், அவ்வளவுதொகையையும் விவசாயிகள் பெயரிலேயே பெற்றுள்ளது. 
பணத்தை திருப்பி செலுத்தாதது தொடர்பாக வங்கி அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில், தற்போது அந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதற்கு முன்பும், கடந்த 2011-ஆம் ஆண்டு, சிம்ப்ஃஹோலி சர்க்கரை ஆலைக்கு, ரூ. 148 கோடியே 60 லட்ச ரூபாய் கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் தனிநபர் கடன் மற்றும் குழுக்கடனாக 5 ஆயிரத்து 762 பேர்களின் பெயரில் இந்தக்கடன், 2012-ஆம் ஆண்டு ஜனவரி 25 மற்றும்மார்ச் 13 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த கடனை விவசாயிகளுக்கு பிரித்து வழங்காத சிம்ப்ஃஹோலி சர்க்கரைஆலை நிர்வாகம் தனது வரவு-செலவு களுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. அத்துடன் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்தவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு,ரூ. 148 கோடி கடன் தொகையில், ரூ. 97 கோடியே 85 லட்சம் அளவிற்கு சிம்ப்ஃஹோலி நிறுவனம் மோசடி செய்திருப்பதை வங்கி நிர்வாகம் கண்டறிந்தது. எனினும் ஓரியண்டல்வங்கி நிர்வாகம் கடனை வசூலிக்கத் தயாரில்லை. 


மாறாக அதனை வராக்கடன் பட்டியலில் சேர்த்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது.இந்நிலையில்தான், மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர், கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி புதிதாக சுமார் ரூ. 110 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊழலை ஒழிக்கப் போகிறோம், பணப் பரிவர்த்தனையை முறைப்படுத்தப் போகிறோம் என்றெல்லாம் கூறி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று, கடந்த நவம்பர் 9-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். 
அதற்கு அடுத்த 3-ஆவது வாரத்தில்தான், விவசாயிகள் பெயரில் மீண்டும் ரூ. 110 கோடி சிம்ப்ஃஹோலி சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு ஓரியண்டல் வங்கியால் வழங்கப்பட்டு உள்ளது. 

இந்த தொகையையும் விவசாயிகளுக்கு பிரித்துத் தராத சர்க்கரை ஆலை நிர்வாகம், தானே அமுக்கிக் கொண்டது. அத்துடன் இரண்டாவது முறை வாங்கிய கடனையும் குறிப்பிட்ட கெடுவுக்குள் ஆலை நிர்வாகம் கட்டவில்லை.

இதையடுத்தே, ஓரியண்டல் வங்கி கொடுத்த புகாரின்பேரில், தற்போது சர்க்கரை ஆலையின் இயக்குநர் குர்மித் சிங் மான், துணை நிர்வாக இயக்குநர் குர்பால் சிங், தலைமை நிர்வாக அதிகாரி ராவ், தலைமைநிதி அதிகாரி சஞ்சய் அபரியா உள்பட 13 பேர்மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
சிம்ப்ஃஹோலி ஆலையின் ரூ. 110 கோடி கடன் மோசடி பற்றி, கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதியே, வங்கி அதிகாரிகள் புகார் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

இருப்பினும் 3 மாதங்களுக்குப் பிறகே தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சர்க்கரை ஆலை நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் குர்பால் சிங், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வரான அம்ரீந்தர் சிங்கின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லையாவுக்கு முன்னதாக, லலித் மோடி மற்றும் தீபக் தல்வார், சஞ்சய் பண்டாரி ஆகியோரும் பணமோசடியில் ஈடுபட்டு,வெளிநாட்டுக்கு தப்பியிருந்தனர். 

பின்னர் மல்லையா, நீரவ் மோடி, விக்ரம் கோத்தாரி, துவாரகா தாஸ் என்று மீண்டும் துவங்கிய வங்கிக் கடன் மோசடி சிம்ப்ஃஹோலி சர்க்கரைஆலை நிறுவனம் வரை வந்துள்ளது.அனைவரும் மோடியின் நட்பு வட்டாரத்தில் உள்ள கார்ப்பரேட் முதலைகள் என்பதுதான் இதன் பரம ரகசியம்.இலுமினாட்டிகள் இவர்கள்தான்.
====================================================================================
ன்று,
பிப்ரவரி-27.

 • டொமினிக்கன் குடியரசின் தேசிய தினம்
 • நியூ பிரிட்டானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1700)
 • பிரிட்டன் தொழிற்கட்சி அமைக்கப்பட்டது(1900)
 • ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது(1940)
 • அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது(1951)

=====================================================================================

                                                     இறைவன் இருக்கின்றானா?
                                                                                                     மனிதன் கேட்கிறான்.

திங்கள், 26 பிப்ரவரி, 2018

விமானத்தை தரையிறக்கும் சக்தி?

இது வேடிக்கையான நிகழ்வாக தெரியலாம்.
ஆனால் ஆங்காங்ககே நம்மில் பலர் அனுபவிக்கும் ,அனுபவித்த நம்மை சுருங்க வைத்த நம்மால் தவிர்க்க இயலா நிகழ்வுதான்.
என்ன  கொஞ்சம் இடம் ,பொருள் மாறி பெரிய அளவில் கலவரமாகி விட்டதுதான் உலக செய்தியாகி விட்டது.

ஒருவாரம் முன்பு டிரான்சேவியா விமான நிறுவனத்தின் விமானம் ஒரு  அதிரடி தாக்குதலை எதிர்கொண்டது.
இதனால் அந்த விமானம் அவசரம்,அவசரமாக தரையிறங்கியது .துபையில் இருந்து நெதர்லாந்து சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணி ஒருவரின்  இந்த செயல் அல்லது தாக்குதல் முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ளதான்  வைத்தது.
ஆனால் அவரின் தாக்குதல் தொடரவே  நாற்றம் தாங்க முடியாமல் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. 

இப்படி விமானம் தரையிறங்க காரணம்  "Fart Attack'' (குசு தாக்குதல்) என்று ஆவணங்களில் பதிவானது. 
இந்த சம்பவம் முதலில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், வயிறு பற்றிய பிரச்சனைகளை கவலையுடன் அணுக செய்கிறது. 
இந்த தாக்குதலின் மய்யமான  அந்த பயணியின் அப்போது என்ன மனநிலை கொண்டிருந்திருப்பார்.
நிசசயம் ஒரு விமானத்தையே தரையிறங்க வைத்த தனது சக்தியைப் பற்றி பெருமையடைந்திருக்கமாட்டார்.?
அவர்  வேண்டுமென்றே அபான காற்றை வெளியேற்றியிருக்கமாட்டார்.
இதற்கு காரணம் என்ன? 
காற்று உடலில் இருந்து ஏன் வெளியேறுகிறது? 
இது நோயா? இதை கட்டுப்படுத்த முடியுமா? 
இப்படி பல கேள்விகளை இந்த நிகழ்வு நம்மிடம் உருவாக்கி விட்டது.அதற்கு விடை தேடும் அவசியம் கண்டிப்பாக உள்ளது.காரணம் இந்த அபான வாயு வெளியேற்றம் நம் அனைவருக்குமே உள்ளது.பொதுவான உடலியல்  நிகழ்வு.

ஒவ்வொரு மனிதனும் உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். ஆனால் அதன் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும்.
பொதுவாக ஒருவர் நாளொன்றுக்கு 5-15 முறை உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார்.
பொதுவாக உடலில் இருந்து காற்று பிரிவது என்பது, வேர்வை வெளியேறுவது போன்று நமது உடலின் இயல்பான செயல்பாடு, இதில் கவலைப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
நமது உடலில் உள்ள வாயுக்களின் அளவு மாறுபடும் தன்மை கொண்டது. வாயு அதிகமாகும்போது, அது வாய் வழியாக வெளியேறினால் 'ஏப்பம்' என்றும், மலக்குடல் வழியாக வெளியேறினால் 'குசு' என்றும் அழைக்கிறோம்.

நம் உடலில் இருந்து மலவாய் வழியாக பிரியும் வாயுவானது உண்மையில் குடலில் இருந்து வாயுவை பிரித்தெடுக்கும் இயல்பான உடல் இயக்க செயல்முறை. 
நாம் உண்ணும் உணவு செரிமாணம் ஆகும்போது, அதன் ஒரு பகுதியாக பிரியும் வாயு குடலில் இருந்து மலக்குடல் வழியாக வெளியேறுகிறது.
உலகில் எங்கும் நிறைந்திருக்கும் காற்று, நமது வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றை உள்ளடக்கிய நமது மொத்த செரிமான மண்டலத்திலும் இருக்கிறது.
அதன் வடிவம் மாறும்போது, கடந்து வரும் பொருட்களைப் பொறுத்து அது நாற்றமாகவும், மணமாகவும் உருமாறுகிறது.
உடலில் வாயு அதிகரிப்பதற்கான காரணங்கள் இவைதான்:
 • கரியமில வாயு கொண்ட பானங்களை பருகுவது மற்றும் உணவை மெல்வதன் மூலமாக நாள் முழுவதும் காற்று பலவழிகளில் உடலுக்குள் செல்வது.
 • சிறுகுடலில் தேவைக்கு அதிகமாக பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பது, இரண்டாம் வகை நீரிழிவு நோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் குளூட்டன் ஒவ்வாமை (Coeliac disease) என்ற நோய் பாதிப்பு.


 • கார்போஹைட்ரேட்டை முழுமையாக செரிமாணம் செய்யும் திறன் குறைந்துபோவதால் வாயு உருவாகிறது. சிறுகுடலில் உள்ள என்சைம்கள் எல்லா உணவுகளையும் செரிமாணம் செய்யவதில்லை. சரியாக செரிமானம் செய்யப்படாத உணவு, பெருங்குடல் அல்லது மலக்குடலை அடையும் போது, அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் அந்த உணவை ஹைட்ரஜன் மற்றும் கரியமில வாயுவாக மாற்றுகின்றன.
பெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகும் இந்த வாயுக்கள் எங்கே செல்லும்? வாயுக்களில் சிலவற்றை நமது உடலே உறிஞ்சிவிடும். ஆனால் பெருங்குடலின் மேல் பகுதி மற்றும் சுவற்றின் மீது அழுத்தம் அதிகமாகும்போது வயிற்று வலி ஏற்படும், சிலருக்கு மார்பிலும் வலி ஏற்படும்.
இந்த வாயுக்கள் உடலில் இருந்து வெளியேறினால்தான் வலி குறையும். 
 உடலில் அழுத்தம் கொடுக்கும் இவ்வாயுவை அடக்க முயற்சித்தால்?
பொதுவாக வயிற்றில் உருவாகும் வாயுவை கட்டுப்படுத்தக்கூடாது. 
ஆனால் கட்டுப்படுத்தினாலும் இழப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் சபை நாகரிகம் கருதி நீங்கள் அப்போது  கட்டுப்படுத்தினாலும், அடக்கப்பட்ட வாயுவை சிறிது நேரத்திற்கு பின் வெளியேற்றுவது அவசியம்.அது வெளியேறித்தான் தீரும்.


நாள் முழுவதும் வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை உட்கொண்டு, காற்றை உடலுக்குள் கிரகிக்கிறோம், அது மாலை நேரத்தில் வெளியேறும் வழியைத் தேடுகிறது.
பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய வாயுவின் அளவு அதிகரிக்கும்போது, குடல் தசைகள் விரிவடைகின்றன. 
அப்போது உடலினுள் ஒருவிதமான மாற்றம் ஏற்படுகிறது, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது.
நாம் மலம் கழித்து வயிறு சுத்தமான பிறகும் மலத்துளை வழியாக காற்று பிரிவதற்கு இதுவே காரணம்.
இதைத் தவிர, சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போதும், இருமல் வரும்போதும் உடலில் இருந்து வாயு பிரியும்.
ஆனால் உடலில் இருந்து காற்று பிரிவது இயல்பானதாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், அது அதிகரிக்கும்போது சிக்கலாகிறது.
வழக்கத்தைவிட அதிகமாக காற்று வெளியேறுவதாக ஒருவருக்கு தோன்றினால் அதைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும். சரி, மலக்குடலில் காற்று உருவாவதை குறைப்பது எப்படி?
மலக்குடலில் அதிக அளவு வாயு உருவாவதை தவிர்க்க வேண்டும் என்றால், உணவுப் பழக்கத்தை சரிசெய்ய வேண்டும்.
உங்கள் உடல் பால் பொருட்களை ஏற்றுக்கொள்ளாது என்றாலோ, பால் ஒவ்வாமை இருந்தாலோ, பால் பொருட்களை குறைத்து உண்ணும்படி மருத்துவர் ஆலோசனை கூறலாம். பால் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை கூடுதலாக உட்கொள்வதால், உடலில் செரிமான நடைமுறை இலகுவாகும்.
உடலில் உருவாகும் நாற்றத்தை குறைக்க விரும்பினால் கார்பனேற்றப்பட்ட உணவுகளையும், பானங்களையும் உண்பதையும் குறைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால், காற்றை மலக்குடல் அதிகமாக வெளியேற்றும் நிலை இருந்தால், திடீரென்று நார்ச்சத்து கொண்ட உணவின் அளவை அதிகரிக்க வேண்டாம், அது வாயு பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும்.


நாற்றமெடுக்கும் காற்றை வெளியேற்றுவதை தவிர்க்கும் வழிமுறைகள்.

 • சிறிது சிறிதாக உணவை சாப்பிடவும். ஒரே நேரத்தில் அதிக உணவை உண்ணவேண்டாம், நன்கு மென்று சாப்பிடவும்.
 • உடற்பயிற்சி செய்வது அவசியம். உடல் இயங்கினால்தான் உணவு சுலபமாக செரிமானமாகும். அவசரமாக சாப்பிடும்போது அதிக காற்று உடலுக்குள் செல்கிறது. எனவேதான் நடக்கும்போது சாப்பிடக்கூடாது, ஒரு இடத்தில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
 • சுயிங்கம் அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதிக சுயிங்கம் சாப்பிடுபவர்கள் உடலில் அதிக அளவு காற்று செல்கிறது. அதுவும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
 • அதிக வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பிரக்டோஸ் எனப்படும் பழச் சர்க்கரை, லாக்டோஸ் எனப்படும் இரட்டை சர்க்கரை, (காலக்டோஸ், குளுக்கோஸ்), இன்சுலின், நார்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில் இருக்கும் சிறப்பு கார்போஹைட்ரேட்டுகள் வாயு வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம். இவை அனைத்தும் குடலுக்குள் சென்று உணவு செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.


 • சோடா, பீர் மற்றும் பிற கார்பனேடட் பானங்களும் உடலில் வாயுவை அதிகரிக்கச் செய்கின்றன. அவற்றில் இருந்து எழும் காற்றுக்குமிழ்கள், உடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது. இவற்றில் சில செரிமான பகுதிகளை அடைந்து மலக்குடல் வழியாக வெளியேறுகின்றன. எனவே இதுபோன்ற பானங்களை தவிர்த்து, அதற்கு பதிலாக தண்ணீர், தேநீர், பழச்சாறு அல்லது வொயின் அருந்தலாம்.
 • நமது செரிமான உறுப்புகளில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சில ஹைட்ரஜன் வாயுவை இன்னும் திறம்பட நீக்குகின்றன. புரோபயாடிக் (probiotic) எனப்படும் நுண்ணுயிர் கலந்த சிறுவாழூண் உணவில் இதே போன்ற பாக்டீரியாக்கள் அதிகம் காணப்படுகின்றன.
 • புகை பிடிப்பவர்களுக்கும் வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும். அதேபோல, மலத்தை வெளியேற்றாமல் அது அதிக நேரம் மலக்குடலிலேயே தங்கி விடும்போதும் மலக்குடல் வெளியேற்றும் காற்றில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மலம் கழிக்காவிட்டால் துர்நாற்றம் வீசுவதும், அது நம்மையே முகம் சுளிக்க வைக்கும் நிலைமையும் ஏற்படுகிறது.

உடலில் வாயு ஏற்படுவதோ அல்லது அதை மலக்குடல் வெளியேற்றுவதோ பிரச்சனை இல்லை. அது வெளியாகும் போது மற்றவர்களை மூக்கை பொத்தவும்,சுவாசிக்க சிரமம் ஏற்படும்போதும் நாம் கவலை கொள்ள வேண்டும்.காரணம் குடல் பகுதியில் தொற்று,குடல் புண்கள் இருக்கலாம்.
அதற்காக கவலை கொள்ளவும் வேண்டாம். உணவு முறையையையும், வாழ்க்கை முறையையும் சற்று மாற்றினாலும், பொதுவான சில மருந்துகளே போதுமானது.
அடிக்கடியும்,அதிகமாகவும் அபான வாயு  வெளியேறுவது வேறு சில நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் .அதை கவனிக்க வேண்டியது அவசியம்.
உங்களுக்கு காற்று அதிகமாக வெளியேறும் போது, அதனுடன் கீழ்காணும் அறிகுறிகள் இருந்தால், கண்டிப்பாக  மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.
 • வலி
 • தலைசுற்றல்
 • வாந்தி
 • வயிற்றுப்போக்கு
மலக்குடலில் இருந்து காற்று வெளியேற்றுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது அது குறித்து கேலி கிண்டலுக்கு ஆளாகியிருந்தாலோ அதை ஆண்டவன் நம்மை இப்படி சோதிக்கிறானே என்று மனக்கவலையுடன் அலையாமல் அதை சரியான உணவு பழக்கம் மூலம் சரி செய்யலாம்.அது உங்கள் கையை மீறி பிறர் மூக்குக்கு அவர்கள் கை போகவைக்கிறது.அதனால் உங்களுக்கு அவமானம் வருகிறது என்றால் நீங்கள் நிச்சயம் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். 
இல்லையெனில் உங்கள் உடலில் இருந்து வெளியேறும்  காற்று உங்கள்  விமானத்தை தரையிறக்கவோ அல்லது பேருந்தில் இருந்து உங்களை இறக்கி விடவோ வைத்து விடும் அபாயம் உண்டாகலாம்.
=====================================================================================
ன்று,
பிப்ரவரி-26.

 • 2வது பிரெஞ்ச் குடியரசு அறிவிக்கப்பட்டது(1848)
 • பெய்ரூட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின(1984)
 • டிம் பெர்னேர்ஸ், லீ நெக்சஸ் ஆகியோர்  இணைய  உலாவியை அறிமுகப்படுத்தினர்(1991)
 • குவைத் விடுதலை தினம்(1991)
======================================================================================
பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடி, மேற்கிந்தியத் தீவுகளின் குட்டித் தீவான, செயின்ட் கிட்ஸ் தீவில் குடும்பத்துடன் பதுங்கிஇருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கடந்த மாத துவக்கத்தில், நிரவ் மோடி, அவரது மனைவி ஆமி, சகோதரர் நீஷால் மோடி, மாமா சோக்சி ஆகியோர் வெளிநாடு தப்பி சென்றனர். பல அமைப்புகளின் விசாரணை நடக்கும் நிலையில், அவர்களது பாஸ்போர்ட்டை, மத்திய அரசு, நேற்று முன்தினம் இரவு முடக்கிவைத்தது. இதற்கிடையே, மேற்கிந்தியத் தீவுகளின் குட்டித் தீவான செயின்ட் கிட்ஸில், நிரவ் மோடி உள்ளிட்டோர் பதுங்கிஇருப்பதாக தெரியவந்து உள்ளது.அந்தத் தீவில், ஒரு சொகுசு பங்களாவை, நிரவ் மோடி ஏற்கனவே வாங்கி வைத்துள்ளார். குற்ற வாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் பல நாடு களுடன் செய்யப்பட்டுள்ளது. ஆனால், செயின்ட் கிட்ஸ் நாட்டுடன் அது போன்ற ஒப்பந்தம் செய்யப் படவில்லை.
மேலும், அந்த நாட்டின் குடியுரிமையை நிரவ் பெற்றுள்ளார். அதனால், அவர் அங்கிருப்பது உறுதி செய்யப்பட்டாலும், அவரை நாடு கடத்துவது அவ்வளவு சுலபமில்லை என, வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், 15 வங்கிகளில் கடன் வங்கி, 6,800 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக, மற்றொரு வைர வியாபாரியான, 'வின்சம் டயமன்ட் குரூப்ஸ்' நிறுவனத்தின் உரிமை யாளர், ஜதின் மேத்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.அப்போது, அவரும், செயின்ட் கிட்ஸ் தீவில் அடைக்கலம் புகுந்தார். 


தற்போது அதே பாணியில் நிரவ் மோடியும் செயல்பட்டுள்ளார்.'கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' உரிமையாளர் விஜய் மல்லையாவுக்குப் பின், மிகப் பெரிய வங்கி கடன் மோசடியில் ஜதின் மேத்தா இரண்டாவது இடத்தில் இருந்தார். தற்போது இந்தப் பட்டியலில், நிரவ் மோடி முதலிடத்தில்உள்ளார்.
ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

ஐ.டி துறையின் ஒப்பந்த கூலிகள்?

லட்சங்களில் சம்பளம் என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஐ.டி துறையில் நிலவுகின்ற வேலைநிலைமை காண்டிராக்ட் தொழிலாளர்களின் வேலை நிலைமையை ஒத்திருக்கிறது. ஐ.டி துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் தமது பணியிடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் சிலவற்றைப் பாருங்கள்.
 1. அமர்த்து & துரத்து (hire & fire) என்கிற கொள்கைப்படி இஷ்டம் இருந்தால் கொடுக்கின்ற சம்பளத்துக்கு வேலை செய்; இல்லையென்றால் ஓடிப்போ என்று வேலையை விட்டு துரத்துதல்
 2. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு ஷிப்டுகள் அளவுக்கு வேலை செய்வது
 3. கூடுதல் நேரம் உழைப்பது என்கிற பழக்கத்தின் உச்சகட்டமாக வாரத்தின் ஏழுநாட்களும் உழைப்பதாக வளர்ந்து நிற்பது. வாராந்திர விடுமுறை என்பது கேள்விக்குறியாவது.
 4. 8 மணிநேர வேலைக்கு மேல் செய்யப்படுகின்ற வேலைக்கு மிகை நேரப்பணி (ஓவர்டைம்) அடிப்படையில் இரட்டிப்பு சம்பளம் தராமல் ஏய்க்கப்படுவது.
 5. ’எச்.ஆர்’ என்கிற பெயரில் வலம் வருகின்ற அடியாளுக்கு ஊழியர்கள் நடுங்குதல். பெண் ஊழியர்கள் மீது பாலியல் வக்கிரங்கள்
ஐ.டி துறையில் வேலை செய்வது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய இளைஞர்களின் கனவு வாழ்க்கையாக இருந்து வந்தது. டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா முதல் சமீபத்தில் வெரிசான் வரையில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை ஒரே இரவில் வேலையிலிருந்து துரத்திய பிறகு அந்த கனவு ஓரளவு மட்டுப்பட்டிருக்கிறது. இருந்தாலும், படித்து முடித்ததுமே 5 இலக்க சம்பளம், குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் வேலை, கையில் அழுக்குப்படாத கணினி வேலை என்ற கவர்ச்சி இன்னும் தொடர்கிறது.
ஓரிரு ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பிறகு “ஆன்-சைட்” என்ற பெயரில் அமெரிக்காவுக்கு போகும் வாய்ப்பு, சமூக கவுரவம் போன்றவை ஓரளவு மங்கி போயிருந்தாலும், புதிதாக அடிபடும் “கிளவுட் (மேகக் கணிமை)”, செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா போன்ற தொழில்நுட்பங்களை படித்து நாமும் அந்தக் கப்பலில் ஏறி விடலாம் என்ற கனவு மறைந்து விடவில்லை. ஆனால், எதார்த்தமோ வேறொன்றாக இருக்கிறது. ஐ.டி துறை வேலை என்பது நித்திய கண்டம்; பூரண ஆயுசு தான். கணினியில் வேலை என்றாலும் அது ஒருவகை காண்டிராக்ட் வேலை தான். காண்டிராக்ட் என்பதற்குப் பதிலாக அயல்பணி ( அவுட் சோர்சிங் ) என்று கவுரவமாக சொல்லிக்கொள்கின்றனர்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விட இந்தியாவில் குறைந்த கூலி என்பதால் இந்த நாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய சேவைகளை செய்வதற்கு இந்திய ஐ.டி நிறுவனங்களுக்கு அயல்பணி ஒப்பந்தங்கள் வழங்கி வந்தன. உதாரணமாக, இந்திய மென்பொருள் துறையின் தொடக்க காலங்களில் ஊழியர்களின் சம்பளம் ஒப்பிடக் கூடிய மட்டத்திலான அமெரிக்க ஊழியர்களின் சம்பளத்தில் 10%-20% ஆக மட்டுமே இருந்தது.
அடிப்படை ஆங்கில மொழித்திறன் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான படித்த இளைஞர் பட்டாளம் இந்தத் துறையின் தேவைக்கு ஏற்ற வகையில் பயிற்றுவித்து பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் வேலை நேரம் இந்திய வேலை நேரத்துக்கு நேர் எதிராக இருப்பதால் அந்நாட்டு நிறுவனங்களுக்கு இரவும் பகலும் பராமரிப்பு சேவை வழங்குவதற்கு ஏற்ப இந்திய நிறுவனங்களும் இரவுப்பணி செய்வதற்கு தோதாக சட்டங்களும் மாற்றப்பட்டன. வேலைமுறையும் மாற்றப்பட்டது.
2018-ம் ஆண்டு உலக அளவில் தலா $10 கோடிக்கு அதிகமான மதிப்புடைய 196 சேவை ஒப்பந்தங்கள் (மொத்த மதிப்பு சுமார் $510 கோடி) புதுப்பிக்கப்பட உள்ளன. இந்த 196 ஒப்பந்தங்களில் வெறும் 4 மட்டுமே இந்திய ஐ.டி நிறுவனங்கள் வசம் உள்ளன. டி.சி.எஸ் தவிர பிற இந்திய நிறுவனங்கள் $100 கோடி+ ஒப்பந்தங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதில்லை. பல ஒப்பந்தங்களில் இந்திய நிறுவனங்கள் இரண்டாம் நிலை பங்காளிகளாக உள்ளனர். அதாவது ஒப்பந்தத்தை வெல்லும் முதல்நிலை சேவை நிறுவனத்திடமிருந்து ஒரு பகுதி பணியை இரண்டாம் நிலை சேவை வழங்குனராக பெற்றுக் செயல்படுத்துகின்றனர்.
காண்டிராக்ட் தொழிலகங்கள் போலவே வாடிக்கையாளருக்குத் தேவையான சேவைகளை குறைந்த கூலியில் அமர்த்தப்பட்ட ஊழியர்கள் மூலமாக செய்து கொடுத்து கொள்ளை இலாபம் சம்பாதிப்பதுதான் இந்திய ஐ.டி துறை முதலாளிகளின் வணிக முறையாக இருந்து வருகிறது. எனவேதான் சமீபத்தில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்ட, அதிக சம்பளம் வாங்கும் இடைமட்ட ஊழியர்கள் டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா போன்ற நிறுவனங்களில் வேலையை விட்டு தூக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் இடத்தில் குறைந்த கூலி பெறும் புதிய ஊழியர்கள் அமர்த்தப்படுகின்றனர்.
இந்தத் துறையின் முன்னணி நிறுவனங்களான 1968-ல் தொடங்கப்பட்ட டி.சி.எஸ் (டாடா கன்சல்டிங் சர்வீசஸ்), 1976-ல் கணினி/கணினி பொருட்கள் (hardware) நிறுவனமாக தொடங்கப்பட்டு 1991-ல் தகவல் தொடர்பு சேவை வழங்க ஆரம்பித்த எச்.சி.எல், 1982-ல் தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ், அதே காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறைக்குள் காலடி எடுத்து வைத்த விப்ரோ டெக்னாலஜிஸ் ஆகியவையும் பிற நடுத்தர, சிறு நிறுவனங்களும் அமெரிக்கமயமாக்கப்பட்ட இந்தியர்களால் தொடங்கப்பட்டன அல்லது நிர்வகிக்கப்படுகின்றன.
உற்பத்தித்துறையில் காண்டிராக்ட் தொழிலாளர்களை முதன்மை வேலையளிப்பவரான வாடிக்கையாளர் நிறுவனமே உற்பத்தி இலக்கு போன்றவற்றை தீர்மானித்து வேலைவாங்குகிறது இதைப்போலவே இந்திய ஐ.டி நிறுவனங்களின் சேவை வழங்கலிலும், வாடிக்கையாளர் நிறுவனம்தான் தரம், செய்முறை ஆகியவற்றை வரையறுத்து, உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது. ஒரு தொழில்நிறுவனம் தொழிலாளியின் உழைப்புச்சக்தியை சுரண்டி இலாபத்தை அதிகரிப்பதைவிட , அயல்பணி அல்லது காண்டிராக்ட் நிறுவனம் உழைப்புச்கக்தியை சுரண்டி இலாபமீட்டுவதில் வேறுபாடு இருக்கிறது. தொழில் நிறுவனத்தின் இலாபத்தில் அதன் உற்பத்திப்பொருளின் விற்பனைக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு இருக்கும். ஆனால், தொழிலாளர்களது உழைப்புச் சக்தியையே சரக்காக விற்கின்ற காண்டிராக்ட் மற்றும் அயல்பணி நிறுவனங்களது இலாபத்தை உழைப்புச்சக்தி என்கிற சரக்கே தீர்மானிப்பதால், அந்த நிறுவனத்தின் இலாபம் அதிகரிப்பு என்றால், உழைப்புச் சக்தி மீதான சுரண்டல் அதிகரித்திருகிறது என்று பொருள்.
இதைப் பற்றி புரிந்து கொள்ள இந்திய ஐ.டி நிறுவனங்களில் மிகப் பெரியதான டி.சி.எஸ்-ஐ எடுத்துக் கொள்ளலாம். இந்நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 3.87 லட்சம். இந்நிறுவனம் 2016-17 ஆண்டில் மொத்தம் ரூ 1.17 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதில் 59.7% ஊழியர்களின் ஊதியத்துக்கு செலவிடுகிறது. நிறுவனத்தின் மொத்த லாபம் 27.4% ஆக உள்ளது.
2015-16 ஆண்டில் ஊழியர்களுக்கான செலவு 58.6% ஆகவும் லாபம் 28.25% ஆகவும் இருந்தது. முந்தைய ஆண்டை விட 2016-17ல் லாபவீதம் குறைந்ததற்குக் காரணம் அமெரிக்காவில் அதிக சம்பளம் கொடுத்து அந்நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தியதுதான் என்கிறது டி.சி.எஸ்-ன் நிதிநிலை அறிக்கை.

அதாவது ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தை குறைத்து உபரி மதிப்பை அதிகரிப்பதுதான் ஒரு இந்திய ஐ.டி நிறுவனத்தின் லாபவீதத்தை உயர்த்துவதற்கான வழியாக உள்ளது. அதனால்தான் உழைப்பு காண்டிராக்டர்கள் என்ற முறையில் உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளையும் ஐ.டி நிறுவனங்கள் கையாள்கின்றன. நிர்வாகங்களின் நிறுவனங்களின் முழு கவனமும் மனிதவளத்துறை என்று அவர்களால் அழைக்கப்படும் ஊழியர்களை மேலாண்மை செய்வதில்தான் உள்ளது.
வெளிப்படைத்தன்மை இல்லாத அறிவியலுக்கு எதிரான அப்ரைசல் ரேட்டிங், வரம்பற்ற வேலை நேரம், தனித்தனியான ஊதிய விகிதங்கள், வேலை அழுத்தம் என்று ஊழியர்களை உடல் ரீதியிலும், உளரீதியிலும் வதைக்கும் ஐ.டி நிறுவன நிர்வாகங்கள் ஊழியர்களை உபரி மதிப்பை கறப்பதற்கான எந்திரங்களாகவே பார்க்கின்றனர்.
அதாவது உழைப்பை சுரண்டி கொழுக்கும் காண்டிராக்டர்கள்தான் இந்திய ஐ.டி துறை முதலாளிகள்.
எனவே, ஐ.டி ஊழியர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பிற துறைகளிலும் வேகமாக புகுத்தப்பட்டு வரும் காண்டிராக்ட் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு இணையானவையே. 
                                                                                                                                                      – குமார்

==========================================================================================
அரசியல் பேய்கள்?

சில ஆண்டுகளாக பேய்ப் படங்கள் தமிழக திரையரங்குகளில் உலா வருகின்றன. 
மெசேஜ் பேய், ஆக்சன் பேய் என தற்போது காமடி பேய்கள் பார்வையாளர்களை அதிர,அழ வைத்து வருகின்றன. 
இந்த ட்ரண்ட் இப்போது எப்படி? 
என்பது வெள்ளிக்கிழமை படத்திற்காக திங்கடகிழமையிலிருந்து விரதம் இருக்கும் சமூக வலைத்தள விமர்சன சிங்கங்களுக்குத்தான் தெரியும்.


லல்லு பிரசாத் யாதவ் சிறையில் இருக்கும் நாட்களில் அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் சிங் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு மாளிகையிலிருந்து காலி செய்துவிட்டாராம். 
ஏன்? 
முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் மோடி இருவரும் ஒரு பேயை அனுப்பி மாளிகையை இடிக்க திட்டமிட்டிருந்தனராம். 
என்ன செய்வது? 
சமூகநீதி காத்த கட்சிகளின் வாரிசுகள் இப்படி காத்து-கருப்பிற்கு அஞ்சிச் சாகிறார்கள்.
பேயே பொறாமைப்படும் அளவுக்கு நிறைய ஒரிஜினல் பேய் பிசாசுகளை வைத்திருக்கும் பாஜக-விலும் இந்த பேயச்சம் படுத்தி எடுக்கிறது. ராஜஸ்தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பி சிங் அவர்கள் சமீபத்தில் ஒரு பேயுண்மையை வெளியிட்டிருக்கிறார். 
ராஜஸ்தான் சட்டமன்ற அலுவலகம் ஒரு இடுகாட்டின் மேல் கட்டப்பட்டிருப்பதால் மூத்த பாஜக உறுப்பினர்கள் அங்கே பேயுலா இருப்பதாக அஞ்சுகிறார்களாம். அதனாலேயே பாஜக-வின் ஒட்டு மொத்த 200 உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் சட்டசபையில் இருக்க மாட்டார்களாம்.
இந்த நம்பிக்கை அடிப்படையற்றது என்று கூறும் பி சிங், இதற்காக யாகம் நடத்த தேவையில்லை, ஒரு வேளை சிலர் முதலமைச்சருக்கு இப்படி ஓதியிருப்பார்கள் என்றும் விளக்கமளிக்கிறார். 
அவருக்கு அச்சம் இல்லையென்றாலும் சீனியர்கள் பயப்படுகிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

சரி பேயுலவும் சட்டமன்றத்தில் 200-பேர்களும் முழுக்க வராவிட்டால் பேயால் பிரச்சினை இல்லையா? 
இல்லை எத்தனை பேர்கள் குறைகின்றனரோ அத்தனை பேய்கள் அதை ஈடு செய்து அங்கே சாந்தி சமாதானம் நிலவுமோ தெரியவில்லை.
பேய் ஆண்டால் பிணம் தின்னும் சாத்திரம் என்பார்கள். பார்ப்பனிய முட்டாள்கள் ஆண்டால் பிணம் தின்னுவதோடு மூடநம்பிக்கையும் அரசின் அதிகாரமாகிவிடும் போல! 
சரி, சங்கிகளின் அன்றாட ஹொரர் தாக்குதல்களை தாக்குப் பிடிக்கும் இந்திய மக்களுக்கு இந்த நிஜப் பேய் குறித்த விழிப்புணர்வு எப்போது வரும்?
சட்டமன்றம் வருகிற பேய்கள் முன்னாள் சட்டமனற உறுப்பினர்கள் பேயாக இருக்குமோ?
அல்லது ச.ம.உறுப்பினர் பதவி ஆசையில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர்கள் ஆவியாக இருக்குமா?
=====================================================================================
ன்று,
பிப்ரவரி-25.
 • குவைத் தேசிய தினம்
 • சாமுவேல் கோல்ட்( அமெரிக்கா)சுழல் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை பெற்றார்(1836)
 • தாமஸ் டெவன்போர்ட், மின்சாரத்தில் இயங்கும் மோட்டருக்கான காப்புரிமத்தை பெற்றார்(1837)
 • மாதிரி அணு ஆயுதத்தை சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணையான ப்ருத்வி ஏவப்பட்டது(1988)
=====================================================================================
ஸ்ரீதேவி
தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) இவர்  கமல்ஹாசன் , ரஜினிகாந்த்  போன்ற பிரபல தமிழ் நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி நடிகர்களுடனும் நடித்தவர்.நடிகர் சிவாஜிகணேசனுடன் இணைந்தும் நடித்துள்ளார்.
துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட ஸ்ரீதேவி  தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார். 

கமல்ஹாசனை போலவே தமிழில் பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.எம்.ஜி.ஆருடன் நம்நாடு படத்த்தில் நடித்துள்ளார்.வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார்.
 இவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். 

தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்ற படத்தில் கமல்ஹாசனுடன் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார் . 

தமிழ்த்திரைப் படங்களில் புகழின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி. கமல்ஹாசனுடன் நடித்த மூன்றாம் பிறை இந்தியில் படமாக்கப்படும்போது அதிலும் நடித்தது இந்திதிரையுலகில் நுழைந்து அங்கேயே தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.பின் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

 தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
 தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ் விங்கிலிஸ், புலி போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த மாம் என்ற இந்தி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

  எனது ரசிகர்களுக்கு அரசியல் பாடம் யாரும் கற்றுத்தர தேவையில்லை!-  ரஜினி