புதன், 31 ஆகஸ்ட், 2022

ஆன்டி ஆக்சிடன்ட்.

 நம் தாத்தா, பாட்டி காலத்தில் ‘ஆன்டி-ஆக்ஸிடன்ட்’ என்ற வார்த்தையோ அதைப்பற்றிய புரிதல்களோ, அதைப்பற்றிய தேடல்களோ இல்லாத போதே ஆரோக்கியமாக வாழ்க்கை வாழ்ந்து ஆயுள்காலத்தை கூட்டினர். 

காரணம் அவர்கள் பயன்படுத்திய உணவு வகைகள், பின்பற்றிய மருத்துவ முறைகள் அனைத்திலும் இன்று நாம் தேடும் ‘ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்’ நிரம்பி இருந்தது என்பது தான் இன்றைய அறிவியல் புரிதல்.

டாக்டர் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள கிரீன் டீ குடிச்சா நல்லதுன்னு சொன்னாங்க, அதனால சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இருதய நோய்கள், ஏன் புற்றுநோய்கள் கூட வராமல் தடுக்கும் என சொன்னாங்க” என்று பச்சை தேநீரினை நாடும் நம்மவர்கள் பச்சை காய்கறிகளையும், பழங்களையும் மறந்தவர்கள் தான். 

இன்னும் சொல்லப்போனால் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவல் என்னவெனில் அறிவியலாளர்களே வியக்கும் வண்ணம் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை கொண்டது நம்ம ஊர் ‘நெல்லிக்கனி’ என்பது தான்.

அந்த வகையில் நெல்லிக்கனிக்கு அடுத்தாற்போல் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை கொண்டதும், அதிக மருத்துவ குணமுடையதும், இருதயத்தை காப்பதும், கிறிஸ்துவ காலத்திற்கு முன்பிருந்தே கிரேக்கர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட மற்றொரு பழம் தான் ‘திராட்சை’. 

‘கொடிமுந்திரி’ என்கிற பெயரால் அழைக்கப்படும் திராட்சை பல்வேறு நன்மை பயக்கும் பாலிபினோலிக் மூலக்கூறுகளை உடையது.

அதிலும் முக்கியமாக குறிப்பிடப்படுவது அதில் உள்ள ‘ரெஸ்வெரட்ரால்’ என்ற வேதிப்பொருள் தான்.

 வெளிநாடுகளில் அதிகமான விலைக்கு வலைவீசி தேடப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதிப்பொருள் இதுவே. ஏனெனில் இன்று உயிர்கொல்லி தொற்றா நோயாக கருதப்படும் நோய்களுள் ஒன்றான இருதய நோய்கள் வரவிடாமல் தடுக்கும் தன்மை இதற்க்குண்டு.  

திராட்சையில் உள்ள ரெஸ்வெரட்ரால் வேதிப்பொருள் ரத்த குழாய்களில் வீக்கம், த்ரோம்பஸ் எனும் ரத்தக்கட்டி உருவாக்கம், அதில் பிளேட்லெட் படிதல் ஆகியவற்றிற்கு எதிராக செயல்பட்டு இருதய அடைப்பு வராமல் தடுக்கும் தன்மையுடையது. 

மிக முக்கிய தொற்றாகவும் அசுர நோயாகவும் கருதப்படும் நீரிழிவு நோயில் இறப்புக்கான முக்கிய காரணம் இருதயக் கோளாறு தான். ரெஸ்வெரட்ரால் என்ற வேதிப்பொருள் உடைய இந்த திராட்சை அதைத் தடுக்கும் மாமருந்து என்றே சொல்லலாம்.

மேலும், திராட்சைக்கு வீக்கமுறுக்கி தன்மையும், ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையும், அல்சைமர் எனும் நோயினை வரவொட்டாமல் தடுக்கும் நரம்பு மண்டல பாதுகாக்கும் தன்மையும், அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடையதால் புற்றுநோய்களை தடுக்கும் தன்மையும், கல்லீரலை பாதுகாப்பதாகவும் உள்ளது.

திராட்சையில் ‘டார்டாரிக் அமிலம்’ உள்ளது என்பது பலருக்கும் தெரியும். இது உண்ணும் உணவின் சீரணத்தை தூண்டி மலத்தை இளக்கி மலச்சிக்கலை நீக்கும் தன்மையுடையது. 

மேலும், உடலுக்கு நன்மை பயக்கும் விட்டமின்களும், தாதுஉப்புகளும் உள்ளதால், உடலைத்தேற்றும் தன்மையுடையது. அவ்வப்போது உலர்ந்த திராட்சையை நீரில் ஊற வைத்து நீருடன் சேர்த்து திராட்சையை எடுத்துக்கொள்ள நல்ல பலன் தரும்.

ஆனால், இந்த திராட்சை இன்று விடம்மூடிய அமிர்தமாக, அதாவது விஷமாகிய பூச்சிக்கொல்லி மருந்துகளில் தோய்த்து எடுக்கப்பட்ட அமிர்தமாக உள்ளது.

 திராட்சையில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகள் நீங்க அதனை உப்புநீரில் கழிவு பயன்படுத்தல் நல்லது.

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த திராட்சையில், அதன் மேல்தோல் மற்றும் விதைகளில் தான் அதிக ரெஸ்வெரட்ரால் உள்ளது. 

ஆக, இனியாவது திராட்சையை தின்று விதைகளை வீணாக்காமல் அதனையும் உலர்த்தி பொடித்து பயன்படுத்த தொடங்கினால் இருதயத்தின் நலம் பாதுகாக்கப்படும். ஆயுள்காலம் கூடும்.

“டாக்டர் எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு, இனிப்பு சத்துள்ள திராட்சையை சாப்பிடலாமா?” என்று பலருக்கு தோன்றும் கேள்வி. ஆராய்ந்து பார்த்தால், திராட்சையின் கிளைசெமிக் குறியீடு எண் வெறும் 43 முதல் 53 தான்.

 இது நாம் சாப்பிடும் இட்லி, தோசையை விட மிகக்குறைவு. ஏனெனில் இட்லி, தோசையின் கிளைசெமிக் குறியீடு எண் 73 முதல் 80 வரை. ஆக, திராட்சை இட்லியை விட சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறந்த உணவுப்பொருள் தான். 

மேலும், மருத்துவ குணமிக்க பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதிப்பொருள்கள் அடங்கிய மகத்தான பழவகை. 

எனவே, நாள்தோறும் திராட்சை அடங்கிய பழக்கலவைகளை எடுத்துக்கொள்வதால், நிச்சயம் நலம் நம் வாசல் கதவை தட்டும் என்பது உறுதி.

                                                -. மரு.சோ.தில்லை வாணன்.

-------------------------------------------------------------------------------

சனி, 27 ஆகஸ்ட், 2022

அதன் பெயர் " பிச்சையா"?

 பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகைகள் அளித்து கடன்களை தள்ளுபடி செய்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. 

அந்த வகையில், பெரு நிறுவனங்களுக்கான கடன்கள் 5 லட்சம் கோடியை வங்கிகள் தள்ளுபடி செய்து இருப்பதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- 

'இதற்கு முன்பு வங்கிகள் கார்பரேட் கடன்களை தள்ளுபடி செய்ய அச்சப்படும். ஏனென்றால், ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும் இது தொடர்பாக கேள்விகள் எழுப்பும் என்பதால் வங்கிகள் அச்சப்படும்.

ஆனால், தற்போது ஐபிசி முறையில் எந்த நடவடிக்கைக்கும் ஆளாகத வகையில், வங்கிககள் தள்ளுபடி செய்கின்றன. கடன் வழங்குபவர்கள் குழுவுடன் ஒருங்கிணைந்து, மிகப்பெரிய தொகையை தள்ளுபடி கோரும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கின்றன. 

இந்த தீர்மான திட்டம் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டதும் கடன் பெற்ற கார்பரேட் நிறுவனங்கள் அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிடுக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையை வங்கிகள் 'ஹேர்கட்' என்று சொல்கின்றன. கடன் தொகையில் 69 சதவீதம் தான் இந்த 'ஹேர்கட்' இருக்க வேண்டும் என்று இந்திய திவால் மற்றும் வாராக்கடன் வாரியம் 517 கேஸ்களில் குறிப்பிட்டுள்ளது. 

517 கேஸ்களில் மொத்தம் ஹேர்கட் முறையில் உள்ள தொகையை கணக்கிட்டால் ரூ. 5 லட்சத்து 32 ஆயிரம் கோடி வருகிறது.

இதை பழையமுறையில் சொன்னால், வங்கிகள் 517 கேஸ்களில் 5 லட்சத்து 32 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது என்பதே இதன் அர்த்தமாகும். 

இதன் சரசாரி படி பார்த்தால் ஒவ்வொரு வழக்கில் ஆயிரம் கோடியாக உள்ளது. ஹேர்கட் முறையில் ஆயிரம் கோடி தொகை மதிப்பிட்டிருப்பதை இதற்கு முன்பாக கேள்வி பட்டு இருக்கிறோமா?'"

நாட்டில் 70℅ இருக்கும் ஏழைகளுக்கு இலவசதிட்டங்களே இருக்கக்கூடாது எனும் பாஜக பணமுதலைகளின் வங்கிக்கடன்களை பல லட்சம் கோடிகளை

வராக்கடன்,தள்ளுபடி,வரி குறைப்பு என்ற பெயரில் விட்டுக் கொடுப்பதற்கு பெயர் இலவசம் இல்லையா?

ஒரு வேளை  அதன் பெயர் " பிச்சையா"?

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

எது இலவசம்.

 கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிச்சலுகைக் காட்டுவது ஏன் என்று சொல்லி பா.ஜ.க. வழக்கு தாக்கல் செய்வது இல்லை. 

வங்கிகளில் வாங்கிய பல்லாயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்வதை எதிர்த்து பா.ஜ.க. வழக்கு தாக்கல் செய்வது இல்லை. 

ஆனால் ஏழைகளுக்கு, விளிம்பு நிலை மக்களுக்குச் செய்யும் உதவிகளுக்கு எதிராக பா.ஜ.க. நிர்வாகி ஒரு வழக்கைப் போட்டு இந்தியாவில் அதனை அதிமுக்கியமான பிரச்சினையாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார்.

டெல்லியைச் சேர்ந்த நிரஞ்சன் குமார் என்ற இளைஞர் சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி எழுதி இருக்கிறார். ‘’இலவச சைக்கிளில் வந்து, இலவச பஸ் பாஸில் பேருந்து பயணம் செய்து, இலவச மதிய உணவு சாப்பிட்டு படித்தவன் நான். இவையெல்லாம் எனக்கு இல்லாவிட்டால் படித்திருக்க சாத்தியம் குறைவு. 

அடுத்த வீட்டுக்கு டி.வி. பார்க்கப் போய் கூனிக்குறுகி நின்ன எனக்கு சின்ன செல்ப்கான்பிடன்ஸ் கொடுத்தது இலவச டி.வி.” என்று அவர் எழுதி இருக்கிறார். ‘இலவசமாக வழங்கப்பட்டும் எந்தப் பொருட்கள் உபயோகமாக உள்ளன?’ என்று ஒருவர் கேட்ட கேள்விக்குத்தான் நிரஞ்சன் குமார் என்ற இளைஞர் இப்படி பதில் சொல்லி இருக்கிறார். பலன்பெற்றவர்களிடம் கேட்டால் இதுபோன்ற நியாயமான உண்மையான பதில்களைச் சொல்வார்கள்.

கொளத்தூரில் இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்கி வைத்துப் பேசும் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் மிகச்சரியான விளக்கத்தைத் தந்துள்ளார்கள். அக்கல்லூரி மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டுக்கான கட்டணச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் அவர்கள், ‘’கட்டணமில்லை என்று சொல்வதன் மூலமாக இதனை யாரும் இலவசம் என்று கருதிவிடக் கூடாது. 

இது உதவியும் அல்ல. கல்வியானது அனைவர்க்கும் எளிய முறையில் கிடைத்து, அனைவரும் முன்னேறியாக வேண்டும் என்ற முற்போக்கு எண்ணத்துடன் - மாணவ சமுதாயத்தின் மீதான உண்மையான அக்கறையால் அரசு செய்யும் கடமையாக இதனைக் கருதுகிறோம்.

‘இலவசம் வேறு, நலத்திட்டங்கள் வேறு’ என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது தொடர்பாக நாட்டில் பெரிய விவாதமே நடந்து வருகிறது. கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது இலவசம் ஆகாது. அறிவு நலம் சார்ந்தது கல்வி. 

உடல் நலம் சார்ந்தது மருத்துவம். இரண்டிலும் போதுமான அளவுக்கு மக்களுக்கு நலத்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது. இல்லம் தேடிக் கல்வி, கல்லூரிக் கனவு, நான் முதல்வன், பள்ளிப் பிள்ளைகளுக்கு காலை சிற்றுண்டி, மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலத்திட்டங்களாக உருவாக்கி செயல் படுத்தப்பட்டு வருகிறது. இவை எல்லாம் இலவச திட்டங்கள் அல்ல, சமூக நலத் திட்டங்கள் ஆகும். 

ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு உதவிகள் செய்யும் போது மட்டும், ‘இலவசங்கள் கூடாது’ என்று சிலர் அறிவுரை சொல்வதற்கு வந்து விடுவார்கள். அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை” என்று சொல்லி இருக்கிறார்கள்.

இந்த உண்மையான அக்கறையின் வெளிப்பாடாக - இலவசத் திட்டங்கள் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகி தொடர்ந்த வழக்கில் மாநில அரசுகளையும் எதிர்மனு தாரர்களாக சேர்க்க கோரி தி.மு.க. சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இருக்கிறது.

தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவின் விரிவான விளக்கம் அமைந்துள்ளது.

தி.மு.க. ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஏழைகளின் வீடுகளுக்கு கலர் டி.வி., பெண்கள் மேம்பாட்டுக்கு இலவச பேருந்து பயண அட்டை என பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளதும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மக்கள் தொகை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் வேறுபட்டு நிற்பதாகவும், அவர்களின் தேவைகள் மாறுபட்டதாக உள்ளதால், ஒரே திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த இயலாது எனவும் மனுவில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பில், மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்த பொதுப்பட்டியல் அனுமதி அளித்துள்ளதாகவும், சமூக, பொருளாதார நலன், ஏற்றத் தாழ்வுகளைக் கருத்தில் கொண்டே இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழைகள் தங்களால் பூர்த்தி செய்ய முடியாத தேவைகளை இந்தத் திட்டங்கள் மூலம் அரசு வழங்கி வருவதாகவும், அவற்றை ஆடம்பரம் என்று கூற முடியாது எனவும் மனுவில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். 

இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள், ஏழைக் குடும்பத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், அதன் மூலம் குழந்தைகள் நல்ல கல்வி கற்க முடியும் எனவும், இப்படி பல வகைகளில் அதன் வீச்சு உள்ளதாகவும், குறிப்பிட்டுள்ள ஆர்.எஸ்.பாரதி, எனவே அதனை இலவசம் என்று பொருள்படும்படி சாதாரணமாக கூறிவிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல வரிச் சலுகைகளை அளிக்கிறது. செல்வாக்கு மிக்க தொழிலதிபர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

எந்த ஒரு திட்டத்தையும் இலவசம் என்கிற பெயரில் தடைசெய்துவிட இயலாது. அந்தத் திட்டங்களால் சமூகத்தில் கீழ்மட்டம் வரை ஏற்படும் பலன்களை கருத்தில் கொண்டுதான் நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும்” என்றும் தி.மு.க. மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுமிக மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும்.

நீதிமன்றத்தில் தனக்குச் சாதகமான ஒரு தீர்ப்பைப் பெறுவதன் மூலமாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் பா.ஜ.க.வின் அரசியல் தந்திரம் இதற்குள் அடங்கி இருக்கிறது.

அரிசியை விலையில்லாமல் கொடுத்ததால் பட்டினிச் சாவு இல்லை தமிழகத்தில். கட்டணமில்லா பேருந்து பயணத்தை பெண்களுக்கு அளித்துள்ளதால் அவர்களது சமூகப் பங்களிப்பு அதிகமாகி உள்ளது. இதன் பயன் இன்னும் சில ஆண்டுகளில் தெரியும்.

‘’திருவாரூரில் தேர் ஓடுவதற்காக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. தேர், நான்கைந்து நாட்கள் ஓடுகிறது. 

மற்ற முன்னூறு நாளும் மக்களுக்குத்தான் பயன்படுகிறது” என்று பேசினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அந்தவகையில் அனைத்துமே மக்களை மனதில் வைத்து தீட்டப்படும் திட்டங்களே!

- முரசொலி.

------------------------------------------------------------------------------

மாட்டி விட்ட கைரேகை புதன், 24 ஆகஸ்ட், 2022

இந்தியன்.

கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் கடந்த 1996-ம் ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்து அசர வைத்திருப்பார் கமல். 

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக கடந்த 2017-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

பின்னர் 2 ஆண்டுகள் கழித்து தான் இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இப்படத்தில் கமலுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க ஒப்பந்தமானது. 

கடந்த 2019-ம் ஆண்டு இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குஜராத்தில் நடத்தப்பட்டது. இதன்பின்னர் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர்.

கடந்த 2020-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின் போது கிரேன் கவிழ்ந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. 

இதையடுத்து இயக்குனர் ஷங்கருக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு கோர்ட் வரை சென்றதால் இப்படம் கிட்டத்தட்ட கைவிடப்படும் சூழலுக்கு சென்றது.

இந்நிலையில், இந்தியன் 2 படம் மீண்டும் உயிர்பெற்று உள்ளது. இதற்கு காரணம், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தான். அவர் தற்போது இப்படத்தில் தயாரிப்பாளராக இணைந்துள்ளார். 

லைகா நிறுவனத்துடன் சேர்ந்து உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அத்துடன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் கமல் இந்தியன் தாத்தா கெட் அப்பில் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது. 

அதுமட்டுமின்றி இன்று முதல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக இயக்குனர் ஷங்கர் அறிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள எழிலகத்தில் இன்று முதல் ஷூட்டிங் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

------------------------------------------------------------------எதிர்க்கட்சித் தலைவராக வளர்ந்த விஜயகாந்த், தமிழக அரசியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டது எப்படி?

அவர் நடிக்கத் தொடங்கி சில காலத்திலேயே, அவருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் விஜயகாந்த். தனது சொந்தப் பணத்தில் கல்வி உதவிக்கென்று 25 லட்சம் ரூபாய் ஒதுக்குவது, இலவச தையல் மிஷின் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் கொடுப்பது என்று பல நற்பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

அவர் அரசியலுக்கு வருவதற்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள், பாமக உறுப்பினர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் இடையிலான மோதல் என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

ஆரம்பத்தில் ஒவ்வோர் ஊராகச் சென்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கத் தொடங்கினார். 

பிறகு, 2005 செப்டம்பர் 14 அன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த்.

அவருடைய மாநாட்டில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டார்கள். கட்சியின் பெயர், நோக்கம், கொள்கைகளை அறிவித்தார். ஊழலை ஒழிப்பு, திராவிடக் கட்சிகளுக்கு மாற்று ஆகியவை அந்த கொள்கை அறிவிப்பில் முக்கியமாக இடம் பெற்றன.

தேமுதிக 2006 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி எதுவும் ஏற்படுத்திக் கொள்ளாமல், 232 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்து போட்டியிட்டவர்களில் யாரும் மக்களிடையே பெரியளவில் அறிமுகம் இல்லாதவர்கள்.

இருந்தும், அதில் 8.45 சதவீத வாக்குகளைப் பெற்று, இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும் பாமகவுக்கும் விஜயகாந்த் அதிர்ச்சியளித்தார். 

அப்போது திமுகவின் பிரம்மாண்ட வெற்றியைக் குலைத்ததும் அதிமுகவின் தோல்விக்கு காரணமானதும் தேமுதிக பெற்ற வாக்குகளே காரணமென்று சொல்லப்பட்டது. 

சுமார் 100 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக தேமுதிகவின் வாக்குகள் இருந்தன. விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் பாமகவை சேர்ந்த கோவிந்தசாமியை தோற்கடித்து முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக கணிசமான வாக்குகளைப் பெற்றது. 

இந்த நேரத்தில் பாலம் அமைப்பதற்காக விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி நெடுஞ்சாலைத் துறையால் கையகப்படுத்தி இடிக்கப்பட்டது. தன் அரசியல் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் திமுக இப்படி செய்வதாகக் கடுமையாக விமர்சித்தார் விஜயகாந்த்.

2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தனித்தே தேமுதிக போட்டியிட்டது. அதில் 10.45 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்துதான் தேதிமுகவின் வீழ்ச்சிக்கான வித்து போடப்பட்டது .

2011 தேர்தலின்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக மீது எதிர்ப்பலை பெரிதாக இருந்தது. அதுவரை தனித்தே போட்டியிட்டு வந்த விஜயகாந்த், சேலத்தில் நடந்த மக்கள் உரிமை மாநாட்டில் கூட்டணி சேர்வது குறித்துப் பேசினார். 

திமுகவின் ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தார்.

அதிமுகவுடனான கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 

அதில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், தேர்தல் முடிந்த சில மாதங்களில் அதிமுகவுக்கும் தேமுதிகவும் மோதல் ஏற்படவே, விஜயகாந்த்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்தது.

அந்தக் கூட்டணியில் சேர்ந்தபோதே அவருடைய தோல்விக்கான வித்து தொடங்கிவிட்டது. 

ஒரு கூட்டணி கட்சியாக இருந்து, அந்தக் கூட்டணியில் ஆளும் கட்சி கூட்டணியாகி எதிர்க்கட்சியாக வந்துவிட்டார். 

இவர்கள் இருவருக்கும் ஒத்துப்போகாத நிலை ஏற்பட்டதற்கு, தன்னால்தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்று விஜயகாந்த் நினைத்ததும் இவர் இல்லாமலேயே நாம் ஜெயித்திருக்க முடியும் என்று ஜெயலலிதா நினைத்ததும்தான் காரணம்.

இது அவர்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தியது. சட்டமன்ற நிகழ்வுகளிலேயே அது வெளிச்சமாகத் தெரிந்தது,.

விஜயகாந்த்

பட மூலாதாரம்

சட்டமன்றத்தில் இருகட்சி உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. 

ஜெயலலிதா முன்னிலையிலேயே 'ஏய்...' என்று அதிமுக உறுப்பினர்களை எச்சரித்தார். அவருடைய இந்தச் செயலுக்கு வெளியிலிருந்து மட்டுமின்றி, கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் கிளம்பின.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரசாரமாக ஏற்பட்டு கூட்டணி பிளவுபட்டது. அதற்குப் பிறகு எதிர்க்கட்சியாக வந்து அமர்ந்தார்கள்.அப்போது நான்தான் சபாநாயகராக இருந்தேன். 

பண்ருட்டி ராமச்சந்திரன் அதன்பிறகு தேமுதிகவில் இருந்து விலகிய பிறகு, 'அந்த நேரத்தில் நீங்கள் சமயோசிதமாக முடிவெடுத்து வெளியேற்றாமல் விட்டிருந்தால், பெரியளவுக்கு அடிதடியாகி ரத்தமெல்லாம் சிந்த வேண்டியிருந்திருக்கும். சபாநாயகருக்கு சமயோசித புத்தி அவசியம். 

அதன் அடிப்படையில் அன்று நீங்கள் எடுத்த முடிவு மிகச் சரி' என்று என்னிடம் கூறினார்.சட்டமன்றத்தில் அன்று, மோதல் உச்சகட்டத்திற்குப் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. 

அதனால் வேறு வழியின்றி ஒட்டுமொத்த தேமுதிகவினரையும் வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

அது யாரால் நடந்தது என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், அதிமுகவுடன் தொடர்ந்து இணக்கமான சூழலில் இருந்திருந்தால், தேமுதிக நிச்சயமாக இன்று மேலே வந்திருக்க முடியும். 

அதிமுகவுடன் கூட்டணி இருந்ததால்தான், அதற்குப் பிறகு அவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக வர முடிந்தது. இருப்பினும், எங்களோடு இருந்தபோது அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது என்பது ஒரு வரலாறு," என்று கூறினார்.

தேமுதிக கட்சியிலிருந்து 8 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவுக்குச் சென்றனர். அதற்குப் பிறகு, ஆளும் கட்சிக்கு எதிராகப் பெரிய நடவடிக்கைகளை தேமுதிக மேற்கொள்ளவில்லை.

"அதற்குப் பிறகு, ஓர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வளர்ப்பதற்கான வழிமுறையே அவருக்குத் தெரியவில்லை. அவரோடு இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆலோசனையையும் அவர் சரியாகக் கேட்கவில்லை,"

 "ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோர் திரைத்துறையில் வெற்றி பெற்றதற்குக் காரணம் அவர்களை இயக்கிய இயக்குநர்கள். 

இவர்களை வைத்து என்ன செய்ய வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், கட்சி தொடங்கும்போது தங்களை வைத்து என்ன செய்ய வேண்டுமென்று இவர்களுக்குத் தெரியவில்லை.

ஏனென்றால், ஒரு மன உறுதியில் கட்சியைத் தொடங்கிவிட்டாலும், மக்களின் தேவையை அவர்கள் உணரவில்லை. 

தங்களை முன்னிறுத்தக்கூடிய அரசிலையே செய்ததால், அது ஒரு கட்டத்தில் மக்களிடையே நேர்மறை தாக்கங்களைவிட அதிகமாக எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தியது.

விஜயகாந்த் & பிரேமலதா

பட மூலாதாரம்

அதை ஏற்படுத்தியது, இவர்களுடைய செயல்பாடுகள், புரிதல் இல்லாமை மற்றும் அரசியல் செய்யத் திறமையற்ற நிலையும்தான்.2016ஆம் ஆண்டில் தனித்து நின்றபோது, பல்லைக் கடிப்பது, தொண்டரை அடித்தது போன்ற விஜயகாந்த்தின் செயல்பாடுகள், 

இவரைக் கேலிக்குரியவராக மாற்றியது. அதுவும் இவரைப் பெரியளவில் பாதித்தது"

-----------------------------------------------

அதானி நிறுவனங்கள்

ஒரு எச்சரிக்கை.

பிட்ச் குழுமத்தின் பிரிவான கிரெடிட்சைஸ், அதானி குழுமம்: ஓவர்லீவரேஜ்டு (Overleveraged) என்ற தலைப்பில் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. 

அது அதானியின் விரிவான லட்சிய கடன்கள், எதிர்காலத்தில் பெரும் கடன் பிரச்சனைக்கு வழிவகுக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது. இதனால் அதானி குழும நிறுவனங்கள் எதிர்காலத்தில் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என எச்சரித்துள்ளது.

 இந்த எச்சரிக்கைக்கு பிறகு, கடந்த அமர்விலேயே அதானி குழும பங்குகள் பலத்த சரிவினைக் கண்டன. குறிப்பாக அதானி பவர் 5% சரிவினையும், அதனி வில்மர் 2.51% சரிவினையும், அதானி கிரீன் எனர்ஜி பங்கானது கிட்டதட்ட 7% வரையிலும், அதானி எண்டர்பிரைசஸ் பங்கும் 4% இழப்பினையும், அதானி போர்ட்ஸ் பங்கு விலையானது 2% சரிவிலும், அதானி டோட்டல் கேஸ் 1.5% சரிவிலும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது 3% சரிவினைக் கண்டும் இருந்தன.

இரண்டாவது நாளாக இன்றும் அதானி குழும பங்குகள் சில இன்றும் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.

அதானி பவர் 4.99% சரிவினையும், அதனி வில்மர் 2.37% சரிவினையும், அதானி கிரீன் எனர்ஜி பங்கானது கிட்டதட்ட 2.60% வரையிலும், அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலையானது 0.59% ஏற்றத்திலும், அதானி போர்ட்ஸ் பங்கு விலையானது 0.42% குறைந்தும், அதானி டோட்டல் கேஸ் 0.26% குறைந்தும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது 3.18% அதிகரித்தும் காணப்படுகின்றது.

கடந்த சில ஆண்டுகளாகவே அதானி குழுமம் தீவிர விரிவாக்கம் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இதனால் கடன் அழுத்தமும் அதிகரித்து வருகின்றது. 

பிதமர் மோடியின் நண்பர் என்பதால் வங்கிகள் பணத்தை கடன் என்ற பெயரில் அள்ளிக் கொடுக்கின்றது.

பின்னர் அதை தள்ளுபடியும் செய்கின்றன.

இதனால் கிடைக்கும்  மூலதனங்களை கொண்டு புதிய புதிய அல்லது தொடர்பில்லாத வணிகங்களில் இறங்கி வருகின்றது. 

இது மேற்கொண்டு அதானிக்கு அழுத்தத்தினை,சரிவை ஏற்படுத்தலாம் .

இன்றைய அதனை ஆதரவான அரசின் போக்கு ஊரில் வரும் காலங்களில் மாறலாம்.

இன்னொரு அனில் அம்பானியாக அதனை ஆகிடலாம்.

------------------------------------------------------------

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

"குஜராத் மாதிரி"

 பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 பேர் விடுதலை செய்யப்பட்ட பிறகு, இஸ்லாமிய குடும்பங்கள் ரந்திக்பூர் கிராமத்திலிருந்து தங்களது வீடுகளை விட்டு  தாகோத் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்றுள்ளனர்.

2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடைபெற்ற மதக் கலவரத்தில்  21 வயதான கர்ப்பிணி பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். 

அவரது குழந்தை மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்படுகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் கடந்த ஆக்ஸ்டு 15ம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த செய்தி வெளியாகிய சில நாட்களிலேயே 11 குற்றவாளிகள் வசித்து வரும் ரந்திக்பூர் கிராமத்திலிருந்து தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு இஸ்லாமியர்கள், நிவாரண முகாம்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். 

 
தாகோத் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களுக்கு தற்போது தங்களது உடமைகளுடன் வந்தடைந்த 24 வயதான சுல்தானா கூறுகையில் “ கடந்த வாரம் முதல் இஸ்லாமியர்கள் மத்தியில் ஒரு பயம் உருவாக தொடங்கியது. 

நேரடியாக மிரட்டல் வரவில்லை என்றாலும். 11 பேர் விடுதலையை தொடர்ந்து நடைபெற்ற கொண்டாட்டங்கள்.

பயத்தை உருவாக்கியுள்ளது. அங்கே இருப்பது பாதுகாப்பாக இருக்காது. அவர்கள் பரோலில் வெளியே வரும் போது இருந்த நிலை வேறு தற்போது அவர்கள் முற்றுலுமாக விடுதலை செய்யப்பட்டுள்ளபோது இருக்கும் நிலை வேறு” என்று கூறியுள்ளார்.

தாகோத் மாவட்டத்தின்  இஸ்லாமிய சமூகத்தினர் இந்த விவாகரம் தொடர்பாக தங்களது எதிர்ப்பை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.

 
11 பேர் விடுதலையை திரும்பப்பெற வேண்டும் என்றும் சட்டத்தின்மீது உள்ள நம்பிக்கையை மீட்டெக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முவைத்துள்ளனர். 

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அமைதிப்பேரணி நடத்த அனுமதி கேட்டுள்ளனர்.

சுல்தாவின் தாய் மற்றும் சுல்தானா தினக் கூலி வேலை செய்பவர்கள். 2002ம் ஆண்டு மத கலவரத்தின்போது ரந்திக்பூர் கிராமத்திலிருந்து தப்பிச் சென்றகாட்சிகள் பற்றி சுல்தாவின் தாய் கூறுகையில் “ அந்த கொடூரமான நாட்கள் என் நினைவில் இருக்கிறது. நாங்கள் அதிர்ஷடவசமாக தப்பிச் சென்றுவிட்டோம்.

 பில்கிஸ் பானுவைப்போல் போராட எங்களுக்கு மன உறுதியில்லை. கேஷர்புராவில் ஆளும் கட்சியினர் அவர்களுக்கு கொடுத்த பாதுகாப்பை பார்த்தபோது அதீத அச்சம் ஏற்பட்டது.
எனது மகளை இருக்கமாக அணைத்துக்கொண்டேன்” என்று அவர் கூறினார்.

பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் அவர்கள் வாழ்ந்து வந்த காலனி பகுதியிலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு இடத்திற்கு சென்றுள்ளனர்.
மேலும் அவரது கணவர் கூறுகையில் “பில்கிஸ் பானு இவ்வளவு நாட்கள் சேர்த்து வைத்த எல்லா துணிச்சலையும் ஒன்றுதிரட்டி  போராட உள்ளார். 

எங்களுக்கு துணையாக நிற்பவர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் மேல் முறையீடு செய்ய உதவி கேட்டிள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

ரந்திக்பூர் கிராமத்திலிருந்து 8 கிமீ தொலைவில் பாஜக எம் தவூத் ஜஸ்வாந்த்சிங் பாப்ஹோர் சுகாதார மையங்களை துவக்கி வைத்துள்ளார். ஆனால் மாவட்ட அதிகரிகள், ரந்திக்பூர் கிராமத்தில் எந்த நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளனர்.

பில்கிஸ் பானு வழக்கில் சாட்சிகளின் சார்பாக மனுக்கள் தாக்கல் செய்த அப்துல் ரசாக் கூறுகையில் “ நிவாரண முகாம்களில்தான் எங்களது எல்லா குழந்தைகளும் பிறந்துள்ளனர்.
74 வீடுகளுடன் இந்த காலனியில் 2004 ஆம் ஆண்டு குடியேறினோம். குற்றவாளிகளுக்கு தண்டை கிடைத்ததால், மீண்டும் எங்கள் சொந்த கிராமத்திற்கு செல்லலாம் என்று இங்கே இருப்பவர்கள் நினைத்தார்கள். ஆனால் தற்போது நிலை மாறிவிட்டது.
நாங்கள் யாரும் அங்கே செல்ல வரும்பவில்லை “ என்று அவர் கூறியுள்ளார்.

சமீரா பட்டேல் என்பவர் பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாலியான ராதேஷ்ஷியம் ஷா , மித்தேஷ் பட், மற்றும் ஷாவின் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

2017ம் ஆண்டு ராதேஷ்ஷியம் ஷா பரோலில் வெளியான போது நடைபெற்ற சண்டையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சமீரா பட்டேலும் அப்பகுதியிலிருந்து நிவாரண முகாமிற்கு வந்துவிட்டார்.

இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்று சமீரா பட்டேலின் வழக்கறிஞர் கூறுகிறார்.

இஸ்லாமியர்களின் குடும்பத்தினர் அக்கிராமத்தை விட்டு வெளியேறுவது தொடர்பாக அப்பகுதி காவல்துறையினர்
எதுவும் கண்டுகொள்ளவில்லை.

இந்த கற்பழிப்பாளர்களை " இவர்கள் பிராமணர்கள் மிகவும் நல்லவர்கள்.முனிதமானவர்கள்.இவர்களை குஜராத் அரசு விடுவித்தது மிகவும் சரி" என பா.ஜ.க,சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியுள்ளார்.

விடுதலையானவர்கள் காலில் விழுந்து இனிப்பு வழங்கினார்கள் சில பா.ஜ.க வினர்.

இதுதான் பா.ஜ.க,வினர் அடிக்கடி கூறும் குஜராத் மாதிரி..


----------------------------------------------------------------------------

சனி, 20 ஆகஸ்ட், 2022

வைகுண்டராஜனின் தில்லு முல்லு.

 வி.வி.மினரல் மற்றும் வி.வி. தொழில் குழுமம் என்பதன் விரிவாக்கம் வெற்றிவேல் மினரல்ஸ் மற்றும் வெற்றிவேல் தொழில் குழுமம் ஆகும். 

மேற்படி தொழில் குழுமம் வி.வி.மினரல் என்ற பெயரில் கூட்டாண்மை நிறுவனமாக தோற்றுவிக்கப்பட்டு அதன் பின்னர் பல்வேறு கூட்டாண்மை நிறுவனங்களை வி.வி.மினரல் மற்றும் வெற்றிவேல் மினரல் என்ற பொதுப்பெயரில் உருவாக்கப்பட்ட தொழில் நிறுவனமாகும். 

மேற்படி தொழில் நிறுவனத்தில் உயர்திரு. சு.ஜெகதீசன் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 நபர்களும், அவர்களோடு இணைந்து வைகுண்டராஜன் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 நபர்களும் சேர்ந்து 12 பங்குதாரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனமாகும். 

அதைப்போலவே தனியார் நிறுவனங்களும் (Private Limited Companies) இரண்டு குடும்ப உறுப்பினர்களை சரிசமமாக கொண்டு உருவாக்கப்பட்ட தொழில் நிறுவனங்களாகும்.

மேற்படி ஒவ்வொரு கூட்டாண்மை நிறுவனத்தில் லாபநஷ்டத்திலும், சொத்திலும், அதைப்போலவே ஒவ்வொரு தனியார் நிறுவனத்தின் லாபநஷ்ட சொத்திலும் இரண்டு குடும்பத்திற்கும் அதாவது உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் குடும்பத்திற்கும், வைகுண்டராஜன் குடும்பத்திற்கும் சரிசமமாக பாத்தியப்பட்டதாகும்.

வைகுண்டராஜன் உடன்பிறந்த இளைய சகோதரர் என்று கூட கருதாமல் இரண்டு குடும்பத்திற்கும் பொதுவாக பாத்தியப்பட்ட கூட்டாண்மை நிறுவனங்களின் நிதியையும், தனியார் நிறுவனங்களின் நிதியையும் மோசடி ஆவணங்கள் மற்றும் போலி ரசீதுகள் தயார் செய்து கூட்டாண்மை மற்றும் தனியார் நிறுவனங்களின் நிதியை சுரண்டி அதன் மூலம் தனது மகளான சுபசரண்யா பெயரில் டெல்லி, குஜராத், சென்னை ஆகிய இடங்களில் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை கிரையம் பெற்றுள்ளார். மேற்படி பொது நிதியை மோசடி செய்து திருட்டுத்தனமாக தனது மகள் சுபசரண்யாவின் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்தது தொடர்பான அதிர்ச்சி தகவல் கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானவரித் துறை சோதனையில் உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் குடும்பத்திற்கு தெரிய வந்தது.

 இது குறித்து வைகுண்டராஜனிடம் உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் குடும்பம் விளக்கம் கேட்டதற்கு உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் குடும்பத்திற்கு பதில் சொல்வதிலிருந்து தப்பிப்பதற்காக, உயர்திரு. சு.ஜெகதீசன் குடும்பத்துடன் தொடர்பை துண்டித்து விட்டு உயர்திரு. சு.ஜெகதீசன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூட்டாண்மை நிறுவனத்தின் அலுவல், சுரங்க குத்தகை உரிமை மற்றும் வங்கி நடவடிக்கைகளுக்காக கையெழுத்து செய்து வைகுண்டராஜனிடம் கொடுத்து வைத்திருந்த நிரப்பப்படாத ஆவணங்கள் மற்றும் வெற்று வெள்ளைத்தாள்கள் ஆகியவற்றை மோசடியாக பயன்படுத்தி ஒட்டுமொத்த கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் (Private Limited Companies) சொத்துக்களைப் பொறுத்து மேற்படி வைகுண்டராஜனும், உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களும் பாகப்பிரிவினை செய்து கொண்டது போல பதிவு செய்யப்படாத மோசடி பொய் ஆணங்களை தயார் செய்து ஒட்டுமொத்த சொத்துக்களில் பெரும்பான்மை சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்து வந்தார்.

இது சம்பந்தமாக உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்கள் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் மனு அனுப்பி அதில் உரிய நீதிமன்ற உத்தரவு பெற்று அதனடிப்படையில் மேற்படி காவல்துறையினர் மேற்படி வைகுண்டராஜன் மீதும், அவரது மகன் சுப்பிரமணியன் மீதும் மற்றும் சிலர் மீதும் குற்ற எண்.7/2022ன் கீழ் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் U/s. 408, 420, 465, 467, 468, 471, 477A & 120B ன்படி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க எப்படியாவது உயர்திரு. சு.ஜெகதீசன் தரப்பிற்கு தொந்தரவு அளித்து அவரது குடும்பத்தினரை நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்பதற்காக உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிறுவனங்களில் சுமார் 50 குண்டர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் அடிக்கடி அத்துமீறி உள்ளே நுழைந்து தகராறு செய்து வருகிறார்.

 இந்நிலையில் ஏரல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்டு வி.வி.மரைன் நிறுவனத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து தகராறு செய்தது சம்பந்தமாகவும், நிறுவனத்தில் இருந்த நிதியை தூக்கிச் சென்றது சம்பந்தமாகவும் ஏரல் காவல் நிலையத்தில் மேற்படி வைகுண்டராஜனின் குண்டர்கள் மீது குற்ற எண். 343/2020 மற்றும் 389/2020 ஆகிய குற்ற எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களிடம் பணியாற்றி வந்த மாரிக்கண்ணன் என்ற Msc Geologist பட்டதாரியை வழக்கறிஞர் ஒருவரின் வீட்டிற்கு கடத்திச் சென்று அங்கு வைத்து அவரை அடித்து துன்புறுத்தியது தொடர்பாக மேற்படி வைண்டராஜன் மீதும், அவரது சகாக்கள் மீதும் திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் குற்ற எண். 402/2021ன் கீழ் ஆள் கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் வழக்காக பதிவு செய்யப்பட்டது.

அதேபோல மேற்படி வைகுண்டராஜன் உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களிடம் பணியாற்றி வரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற நபரை அவரின் ஜாதியின் பெயரைச் சொல்லி அசிங்கமாக ஏசி, அடித்து கொலை செய்ய முயன்றது சம்பந்தமாக மேற்படி அதே பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் குற்ற எண். 256/2022 PCR தீண்டாமை வழக்காகவும், கொலை மிரட்டல் வழக்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி வைகுண்டராஜன் மாண்பமை உயர்நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதியின் உதவியாளர்களான இரு வழக்கறிஞர்கள் மேற்படி பிரச்சனைக்குரிய சொத்துக்களை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதிப்பீடு செய்து கொண்டிருக்கும்போது திரு. சத்தியபிரதா சாஹூ IAS அவர்களால் சீல் வைக்கப்பட்ட குடோனிலிருந்து சீல்களை உடைத்து தாதுமணலை வைகுண்டராஜன் மற்றும் அவரது மகன்களால் இயக்கப்பட்டு வரும் வி.வி.டைட்டானியம்  பிக்மண்ட் நிறுவனத்திற்கு திருடியது சம்பந்தமாக மேற்படி மினரல்கள் திருடப்பட்டு குடோன்கள் காலியாக இருந்த இடத்தில் சீல்கள் உடைக்கப்பட்டிருந்ததை உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் மகனான திரு.செந்தில்ராஜன் அவர்கள் உயர்நீதிமன்றம் நியமித்த Receiver அவர்களின் உதவியாளர்களிடம் சுட்டிக்காட்டி வீடியோ பதிவு செய்ய சொன்னபோது  மேற்படி வைகுண்டராஜனால் மேற்படி திரு. செந்தில்ராஜன், அவரது ஓட்டுநர், அவரது வீடியோகிராஃபர் ஆகியோர்களை அடித்து தாக்கி சுமார் 6,50,000 லட்சம் மதிப்புள்ள கேமராக்களை உடைத்து பறித்து சென்றது சம்பந்தமாக மேற்படி வைகுண்டராஜன் மீது உவரி காவல் நிலையத்தில் குற்ற எண். 08/2022 பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது மேற்படி வைகுண்டராஜன் மற்றும் அவரது மகன்களால் நடத்தப்பட்டு வரும் தூத்துக்குடி வி.வி.டைட்டானியம் பிக்மண்ட் நிறுவனத்திற்கு  சீல் வைக்கப்பட்ட குடோன்களிலிருந்து சீல்களை உடைத்து இலுமினைட் தாதுமணலை கடத்தி வரும்போது சிப்காட் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி காவல் நிலையத்தில் குற்ற எண். 332/2021ன் கீழ் திருட்டு வழக்கும், தாதுமணல் கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

அதேபோல தூத்துக்குடி முள்ளக்காடு பகுதி-2 கிராமத்தில் தமிழக அரசால் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராக்களின் இணைப்பை துண்டித்தது சம்பந்தமாக மேற்படி வைகுண்டராஜன் மீது தூத்துக்குடி, தெர்மல்நகர் காவல் நிலையத்தில் குற்ற எண்கள் 2/2022 மற்றும் 3/2022 ஆகிய குற்ற எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வைகுண்டராஜன் உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் குடும்பத்தினரை ஏமாற்றி ஒட்டுமொத்த நிறுவனங்களின் சொத்துக்களை பதிவு செய்யப்படாத மோசடி பொய் ஆவணம் தயாரித்து சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்தது சம்பந்தமாக மேற்படி வைகுண்டராஜன், அவரது மூத்த மகன் உட்பட சிலர் மீது திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவில் குற்ற எண். 7/2022ன் கீழ் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 408, 420, 465, 467, 468, 471, 477 A, 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

அதுமட்டுமல்லாது மேற்படி வைகுண்டராஜன் தற்சமயம் Special judge (PC Act) CBI-03 Court, Rouse Avenue District Courts, New Delhi vide CC.No.199/2019 in RC.No.9(A)/2016 நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தற்சமயம் உயர்நீதிமன்ற பிணையில் வெளியில் இருந்து வருகிறார்.

 மேற்படி பிணையை மீறி பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதால் CBI தரப்பில் வைகுண்டராஜனின் பிணையை ரத்து செய்ய வேண்டுமென மாண்பமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மட்டுமல்லாது மேற்படி வைகுண்டராஜன் பழைய ரேஷன் அரிசி கடத்தல்காரர் ஆவார். அவர் மீது 1988 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட Civil Supplies CID Police பிரிவில் குற்ற எண்கள் 74/1988 மற்றும் 75/1988 ஆகிய குற்ற எண்களில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120B, 420, 471 & 109 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்றைய முன்தினம் 19.08.2022ந் தேதி மேற்படி வைகுண்டராஜன் வல்லான்விளை என்ற ஊரில் இயங்கி வந்த சீல் வைக்கப்பட்ட குடோனிலிருந்து 3 கன்டெய்னர் லாரிகளில் மினரல்களை திருடி தூத்துக்குடி கொண்டு செல்லும் வழியில் நாங்குநேரி காவல் நிலைய சரகத்தில் மினரல்களும், லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி காவல் நிலையத்தில் மேற்படி வைகுண்டராஜன் மீது குற்ற எண். 217/2022ன் கீழ் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

*மேற்படி வைகுண்டராஜன் மீது தற்போது நிலுவையில் உள்ள வழக்குகள்:*


1. Palayamkottai, Tiruelveli City Police, Tirunelveli Dist.

Crime No. 402/2021 Date of FIR: 20-06-2021

Offence: U/s. IPC 143, 341, 294(b), 323, 365, 342, 506(1)


2. Sipcot Police Station

Thoothukudi Dist

Crime No. 332/2021

Date of FIR: 20-08-2021

Offence: U/s. IPC 448, 379, 420, r/w 21(4) of MMDR Act 1957


3. Uvari Police Station,

Tirunelveli Dist

Crime No.08/2022

Date of FIR: 13-01-2022

Offence: U/s. IPC 147, 341, 294(b), 323, 427


4. Thermal Nagar Police Station, Thoothukudi Dist

Crime No: 02/2022

datE of FIR: 13-01-2022 U/s. IPC 204


5. Thermal Nagar Police Station, Thoothukudi Dist

crime No: 03/2022

date of FIR: 13-01-2022

Offence: U/s. IPC 204


6. Palayamkottai Police Station, Tirunelveli City

crime No: 256/2022 Date of FIR:13.04.2022

Offence: U/s. 147, 148, 447, 294(b), 506(2), 427, 3(1)(r), 3(1)(s), 3(2)(va) of SC/ST Act


7. District Crime Branch (DCB) Tirunelveli District

Crime No: 7/2022

Date of FIR: 15.07.2022

Offence: U/s. 408, 420, 465, 467, 468, 471, 477A & 120 of IPC


8. Nanguneri Police Station

Crime No: 217/2022

Date of FIR: 18.08.2022 U/s. 4(3)(1A) & 21(1)

MMDR Act


*மேற்படி வைகுண்டராஜனின் குண்டர்கள் மீது தற்போது நிலுவையில் உள்ள வழக்குகள்:*


1. Eral Police Station, Tuticorin

Crime No:343/2020

date of FIR: 11.07.2020

Offence: U/s. IPC 120B, 143, 341, 379, 506(1)


2. Eral Police Station, Tuticorin

Crime No: 389/2020

Date of FIR: 28.07.2020

Offence: U/s. IPC 143, 294B, 447, 502(2), 120B, 4(B), 5 of the Explosive Substances Act 1908.


தற்சமயம் மேற்படி வைகுண்டராஜன் மேற்படி உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்கள் அளித்த புகாரில் திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவில் குற்ற எண். 7/2022 பதிவு செய்யப்பட்டுள்ளதால் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வருகிறார். 

உயர்திரு. சு.ஜெகதீசன் அவர்களின் குடும்பத்தில் யார் ஒருவரையாவது கொலை செய்ய வேண்டுமென்று திட்டம் தீட்டி வருவதாக பொதுவான தரப்பிலிருந்து செய்திகள் கசிந்து வருகிறது.

வைகுண்டராஜனின் " நியூஸ்7" ஏன் பா.ஜ.க,விற்கு அளவுக்கதிகமாக ஜால்ரா அடிக்கிறது என்று விளங்குகிறதா?

இதே போல் மற்றொரு ஜால்ராதான் "புதியதலைமுறை" பச்சமுத்து( பாரிவேந்தர்)M.P. என்ற திமுக போட்ட பிச்சையால் மக்களவை உறுப்பினரானவர்

பா.ஜக கையில் உள்ள அமுலாக்குதுறை,சிபிஐ தான் . பா.ஜ.க.வில்சேரவும்,தங்களைக் காப்பற்றிக்கொள்ள இது போன்ற குற்றவாளிகள்,சமூகவிரோதிகள் சேர காரணம்.---------------------------------------------------------------------------

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

பிராடு பிரதர்ஸ்.

 வேலூர், காட்பாடியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் சுந்தரம், 2015-ம் ஆண்டு முதலே பங்குச் சந்தையில் முதலீடு செய்துவந்தார். இவருடன் சகோதரர்கள் ஜனார்த்தனன், வேதநாராயணன் மற்றும் பெரியப்பா மகன் மோகன்பாபு ஆகியோரும் கைகோத்தனர்.

ஆனால், போதிய வருமானம் கிடைக்கவில்லை என்ற சூழலில், ‘உங்க பணத்தை எங்கிட்ட குடுங்க, நான் சூப்பர் லாபம் சம்பாதிச்சுத் தர்றேன்’ என்று அக்கம்பக்கத்து நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று பணத்தை வாங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதுபோல பாவ்லா காட்டி, அவர்களுடைய பணத்தை அவர்களுக்கே திருப்பித் தந்துகொண்டிருந்தார்கள் பிராடு பிரதர்ஸ்.

இந்த ஃபிராடு பிசினஸ் 2019-ம் ஆண்டுக்குப்பிறகு சூடுபிடிக்க ஆரம்பித்தது. ‘1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் தரப்படும்’ என்பதுதான் இவருடைய பிஸினஸின் அடிநாதம். 

ஒரே ஆண்டில் போட்ட பணம் டபுளாகிவிடும் என்பதால், பல்வேறு காரணங்களுக்காகச் சேர்த்து வைத்திருந்த பணம் மட்டுமல்லாது, கடனை வாங்கிக்கூட பணத்தைக் கொட்ட ஆரம்பித்தார்கள் மக்கள்.

பணம் எண்ணும் மெஷின்கள் வைத்தும்கூட எண்ண முடியாத அளவுக்கு பணம் கொட்டுவதைப் பார்த்து பிரமித்துப்போன ஃபிராடு பிரதர்ஸ், அடுத்தக் கட்டமாகத்தான் ‘மாஸ்டர் பிளான்’ ஒன்றைக் கையில் எடுத்தார்கள்.

ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின்மூலம் பல ஆயிரம் கோடிகளைச் சேர்த்தாலும், நிறுவனத்துக்கென பெரிய இமேஜ் எதுவும் இல்லை. நிறுவனத்துக்காக வேலை பார்க்கும் 300 லீடர்களுக்கும் (ஏஜென்ட்டுகள்), அவர்களின்கீழ் இருக்கும் குட்டி லீடர்களுக்கும் சமூகத்தில் ஓர் அங்கீகாரம் ஏற்படுத்தித் தருகிற மாதிரியான ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும். 

இதை மிகவும் ‘ஹைஃபை’ அமைப்பாக நடத்துவதன்மூலம் பலருடைய கவனத்தையும் ஈர்க்கவேண்டும். இதன் கிளைகளை வெளிநாடுகளில் ஆரம்பித்து, இங்கிருந்து பணத்தைக் கொண்டுபோக வேண்டும். ஒருகட்டத்தில் மொத்தப் பணத்துடன் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிடவேண்டும்’ என்பதுதான் அந்த முக்கிய திட்டம்.

இதைச் செயல்படுத்துவதற்காக ‘மார்க் (MARC) ஆப்பர்சூனிட்டி டெவலப்மென்ட் லிமிடெட்’ என்கிற நிறுவனத்தைப் புதிதாக உருவாக்கினார்கள். 

நம்மூரில் நிறைய கிளப்கள் இருப்பது மாதிரி, இதையும் ஒரு கிளப் என்கிற வகையிலேயே உருவாக்கினார்கள். `Connect to Convert’ என்பது இந்த க்ளப்பின் டேக் லைன். அதாவது, உங்களை வேறு பலருடன் இணைத்துக் கொள்வதன்மூலம் உங்கள் பிசினஸை வைத்துப் பணம் சம்பாதிப்பது. அப்படி என்ன பிசினஸ் என்கிறீர்களா?

 ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி, மக்களிடம் இருந்தும், சமூகத்தில் அந்தஸ்துள்ளன மனிதர்களிடம் இருந்தும் பணத்தை வசூகூட்டத்தினரும்.

இந்த `மார்க் கிளப்’பின் அறிமுகக் கூட்டம், 2021 நவம்பரில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து கோலகலமாக நடத்தப்பட்டது. 


கோட், சூட்டுடன் வரும் `சதுரங்கவேட்டை’ ஏமாற்றுக்காரர்களைப் போல, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் கோட், சூட் அணிந்திருந்தார்கள்.

 ‘நீங்கள் பெரும் பணக்காரராக ஆவதற்கென்றே அவதரித்தவர்கள். எங்களுடன் சேருங்கள். அதன்பிறகு, நீங்கள் வேறு லெவலில் இருப்பீர்கள்’ என்று ஜனார்த்தனனும், மோகன் பாபுவும் பேசப் பேச, சுவிசேஷக் கூட்டத்தில் உருண்டுபுரளும் கூட்டத்தைப் போல, ஒட்டுமொத்தக் கூட்டத்தினரும் `வசிய நிலைக்கு ஆளானார்கள்.

ஆரம்பமே அமர்க்களம் என்றான பின்பு, மார்க் நிறுவனத்தின் கிளைகளை தமிழகத்தில் 72 பகுதிகளுக்கு ஏலம் விட்டார்கள். 

ஐ.பி.எல் கிரிக்கெட் டீம் ஏலம் விடப்படுவது போல, ஒவ்வொரு நகரத்துக்கும் ஏலம் விடப்பட, ஏற்கெனவே அந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த செட்டப் ஆட்கள் பலரும் பல கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டார்கள். காஞ்சிபுரம் உள்பட பல முக்கியமான நகரங்களுக்கு ‘மின்மினி’ சரவணக்குமார் ஏலம் எடுத்தார். 


வேலூர் கிளையை மோகன் பாபுவே வைத்துக்கொண்டார். இப்படி பல நகரங்களுக்கு வெற்றிகரமாக விற்றதன் மூலம் ஃபிராடு பிரதர்ஸ்களுக்குக் கிடைத்தது சுமார் 400 கோடி ரூபாய். 

இந்தப் பணத்தை ஏஜென்ட்டுகள் பணமாகக் கட்டினார்களா அல்லது வங்கிப் பரிவர்த்தனை மூலமாக செலுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் கடந்த சில மாதங்களாகவே வெளியில் கசிந்தாலும், வருமான வரித் துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் எதுவும் இதையெல்லாம் விசாரித்ததா, இனிமேலாவது விசாரிக்குமா என்பதும் தெரியவில்லை.

மார்க் கிளப்பில் முதலில் உறுப்பினராக வேண்டும் எனில், ரூ.36,000 செலுத்த வேண்டும். இப்படிச் சேர்பவர்கள், அந்த ஊரில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் வாரம் ஒருமுறை நடக்கும் பிரேக் பாஸ்ட் மீட்டிங்கில் பங்கேற்கலாம். 

அதில் மூளைச் சலவை செய்யப்படும். பிறகென்ன... முதலீடுகள் கொட்ட ஆரம்பித்துவிடும். இந்தக் கூட்டங்களுக்கு மேலும் கவர்ச்சியைக் கூட்டுவதற்காக ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு பிரபலம் அதில் கலந்துகொண்டு பேசுவார்.

 `நீயா, நானா’ கோபிநாத், `பத்திரிகையாளர்’ ரங்கராஜ் பாண்டே, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளனர். தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், தற்போதைய அமைச்சர் சேகர்பாபு ஆகியோரும்கூட பங்கேற்றது உண்டு.

இது மட்டுமா... தமிழ்நாடு ப்ரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மதுரை அணியை ஸ்பான்ஸர் செய்யும் அளவுக்குப் பணத்தை அள்ளிவிட்டனர் பிராடு பிரதர்ஸ். 

அடுத்து, இளையராஜாவின் இசைக் கச்சேரி, பட்டிமன்றங்கள் என்று பலவாறாக ஸ்பான்ஸர் செய்து, மார்க் கிளப் என்கிற பிராண்ட்டை சாதாரண மனிதர்களிடமும் கொண்டுபோய்ச் சேர்த்தனர். 

திரைப்பட நடிகர் மாதவன் போட்டோவைப் போட்டு செய்தித்தாள்களில் பெரிதாக விளம்பரமும் செய்தார்கள். நம்பி நாராயணன் கதையைப் படமாக எடுத்தவர் பிராடு பிரதர்களை நம்பி மோசம் போனார்.

மார்க் நிறுவன கிளைகளை விற்றதன் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய்களை வைத்துதான் இதற்கெல்லாம் செலவு செய்துள்ளனர். 

கையோடு அதற்குப் பலனும் கிடைக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் பணம் போடத் தயங்கியவர்கள்கூட, மார்க் கிளப் கூட்டங்களில் கலந்துகொண்டபின் அசந்து போனார்கள். ‘அடேங்கப்பா, தயாநிதி மாறன், சேகர்பாபு, மாதவன், பெரிய பெரிய போலீஸ் ஆபீஸர்களை எல்லாம் அசால்ட்டாக அழைத்து வருகிறார்கள்! 

இவர்கள் பவர்ஃபுல்லான ஆள்களாகத்தான் இருக்கவேண்டும்’ என்று நம்பிக்கையை ஏகத்துக்கும் வளர்த்துக் கொண்டு, ரூ.50 லட்சம், ரூ.1 கோடி என்றெல்லாம் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். 

பெரும் பணக்காரர்களும் கூட்டத்துக்கு அழைத்துவரப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட, அவர்களும் கோடிக் கணக்கில் பணம் போட்டிருக்கிறார்கள்.

இதன் பிறகுதான், சதுரங்கத்தின் அடுத்த மூவை புத்திசாலித்தனமாக நகர்த்தத் தொடங்கினார்கள் பிராடு பிரதர்ஸ். அதுதான், வெளிநாடுகளில் மார்க் கிளப்பின் கிளைகளைத் தொடங்குவது. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் இந்தக் கிளைகள் திறக்கப்பட்டன. 

அந்த நாடுகளில் பிசினஸ் செய்வதாக சொல்லி, இங்கிருந்து பணத்தைக் கொண்டு போயிருக்கிறார்கள். தொழில் முதலீடு வருகிறது என்பதால், அந்த நாட்டு அரசாங்கங்கள் சிவப்புக் கம்பளத்தையே விரித்துள்ளன.

இப்படிப் பலமுறை வெளிநாட்டுக்குப் பணம் போய்க் கொண்டிருந்த நிலையில்தான், ஆருத்ரா நிறுவனத்தின் மோசடிக் கதைகள் சில மாதங்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்து, பரபரப்பை ஏற்படுத்தியது.

 அந்நிறுவனத்தின் மீது வழக்குப் பதியப்பட்ட சூழலில், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்துக்கு தலைவலி உருவாக ஆரம்பித்தது. அப்போது இந்த நிறுவனத்தை விசாரிக்கத் தொடங்கியது பொருளாதாரக் குற்றப்பிரிவு. விசாரணை நடத்தக்கூடாது என்று அந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி ஆனது. 

அதே சமயத்தில்தான். ஜூனியர் விகடன் மற்றும் நாணயம் விகடன் இதழ்களிலும் விகடனின் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல்களிலும் ஐ.எஃப்.எஸ் மோசடித் திருவிளையாடல் குறித்த செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, மொத்த பணத்தையும் ஹவாலா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, குடும்பசகிதம் எஸ்கேப் ஆகிவிட்டார்கள் ஃபிராடு பிரதர்ஸ்.

பெருந்தலைகள் எல்லாம் தப்பிவிட்ட நிலையில், காஞ்சிபுரம்- மின்மினி சரவணன், வேலூர்- குப்புராஜ், நெமிலி- ஜெகநாதன் ஆகிய முக்கிய ஏஜென்ட்டுகளை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தற்போது கைது செய்திருக்கிறார்கள்.

 இவர்களிடம் முறையான விசாரணை நடத்தினால் மட்டுமே ஐ.எஃப்.எஸ் மற்றும் மார்க் இரண்டு பெயர்களிலும் நடத்தப்பட்ட பல்லாயிரம் கோடி மோசடி குறித்த தகவல்கள் வெளியில் வரும். 

ஆனால், முறையான விசாரணை நடத்தப்படுமா என்பதுதான் சந்தேகமாகவே இருக்கிறது. 

காரணம், தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, ‘தலை’களெல்லாம் தப்பும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே பொருளாதாரக் குற்றப்பிரிவுதான் தற்போது வரை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன், விசாரணையில் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை .

---------------------------------------------------------------------------